Thursday, September 28, 2023

விலையேற்றம் யார் காரணம்?

 இன்று சந்தையில் நான் பார்த்த சில விசயங்கள், பேசிய பெண்கள் நேற்று மளிகை கடை சென்று வெந்து போய் வந்த நிலை மூலம் மனதில் தோன்றும் கேள்விகளைக் கீழே கொடுத்துள்ளேன்.


1.  உணவகங்களின் விற்கப்படும் ஒவ்வொரு உணவின் விலை நம்பவே முடியாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. ஒரு தரமான பில்டர் காபி 365 நாளைக்கு முன் ரூபாய் 12 ஒரு உளுந்து வடை 8 ரூபாய். மொத்தம் 20 ரூபாய்.  தற்போது அதுவே 19 + 14 = 33 என்று உயர்ந்துள்ளது. சுமாரான உணவகங்களில் அரை கப் மாவு உள்ள தோசை கூச்சப்படாமல் 90 ரூபாய் என்கிறார்.  

விரைவில் சட்னி தனி விலை சாம்பார் தனி விலை வந்து விடும் என்றே நினைக்கின்றேன்.

ஆனால் முக்கியமான விசேட தினங்கள் தவிர மற்ற அத்தனை நாட்களிலும் காய்கறிகளின் விலை அதல பாதாளத்தில் உள்ளது.  எப்படி இவர்களுக்கு கட்டுபிடியாகும் என்று யோசிக்கும் அளவுக்கு விலை உள்ளது?  வரத்து மிக மிக அதிகம்.  விற்பனை மிக மிக குறைவு.  நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.  மற்ற மாநிலங்களில் இருந்து தான் அதிகம் வருகின்றது.

வணிக சிலிண்டர் விலை கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை உயர்ந்தது. அதே அளவுக்கு விலையும் இறங்கியது. அதாவது சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெரிய பாதிப்புகளை உருவாக்கவில்லை. நான் கூர்மையாகக் கவனித்து வருகிறேன்.  தனி மனித பேராசையா? பண வீக்கமா?  மத்திய அரசின் நிதி நிர்வாக தோல்வியா? மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நமக்கு பரவாயில்லை என்பதா?

2.  இன்று அமெரிக்க டாலரின் விலை ஏறக்குறைய 83 ரூபாய்.  கடந்த ஒன்பது வருடங்களில் படிப்படியாக உயர்ந்தே வந்துள்ளது.  உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, தனி மனித வருமானம் உயர்வு, மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, தேவையில்லாதவைகள் இறக்குமதி குறைப்பு என்று பல மாறுதல்கள் கண்களுக்குத் தெரிந்தாலும் (அந்நியச் செலவாணி எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவு கையிருப்பு) ஏன் டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டேயிருக்கின்றது. உக்ரைன் ரஷ்யா போர் விளைவுகள் என்பதற்கு அப்பாற்பட்டு இது எங்கேயோ இழுத்துக் கொண்டு செல்கின்றது? தற்போது ஏற்றுமதி தொழில் என்பது இறக்குமதி மூலம் வரவழைக்கப்படும் பல்வேறு உப பொருட்கள் மூலம் நடைபெறும் சூழலில் உள்ளது.  ஒரு பக்கம் அடி.  மற்றொரு பக்கம் இடி.  இதில் வட இந்தியா லாபிக்கு ஹேப்பி அண்ணாச்சி. வட மாநிலங்களில் வளர்ந்துள்ள எந்தத் தொழிலும் இங்கே கடந்த 20 வருடங்களில் வளர்க்கப்பட இல்லை. இவர்கள் இங்கே ஆட்சியில் மாறி மாறி இருக்கும் வரையிலும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு வளர வரவும் வாய்ப்பு இல்லை.

உத்திரபிரதேசத்தில் அடுத்த வருடம் மிக மிகப் பெரிய ஆயத்த ஆடை பூங்கா திறப்பு விழா ஏற்பாடு நடந்து வருகின்றது.  வேலைகள் முக்கால் வாசி முடிந்து விட்டது. அடுத்த செப்டம்பரில் நிச்சயம் யோகி திறந்து விடுவார் என்றே நினைக்கின்றேன்.  உபியைச் சுற்றியுள்ள இந்தி பெல்ட் மாநிலங்களில் உள்ள (தற்போது திருப்பூரில் வேலை செய்து வருகின்றவர்கள்) அத்தனை தொழிலாளர்களுக்கு அங்கே சென்று வேலை செய்வது மிக எளிதாக இருக்கும்.  இங்கே பயிற்சி எடுத்தவர்கள் அனைவருக்கும் அங்கே எதிர்காலம் உள்ளது. திருப்பூர் தமிழர்களைத் சார்ந்து வேலை செய்ய வேண்டியதாக இருக்கும்.  அப்போது எப்படி இங்கே இந்தத் தொழில் சூழல் மாறும் என்பதனை கவனிக்க ஆவலாக உள்ளேன்.

3. இன்றோடு 454 ஆவது நாளாகப் பெட்ரோல் விலை உயராமல் உள்ளது?  ஒரு வருடத்தில் இதன் மூலம் மக்களுக்கு என்ன நல்லது நடந்துள்ளது? எந்தத் துறையிலும் விலைவாசி குறையவே இல்லையே? ஒரு எதிர்க்கட்சி கூட வாயைத் திறக்கவே இல்லையே?  சொல்லப்போனால் தமிழக அரசின் காட்டில் மழை. அள்ளிக் குவித்திருப்பார்கள். மத்திய அரசு கஜனாவிற்கு பல லட்சம் கோடி இழப்பு வந்து இருக்கும்.  ஆயில் நிறுவனம் பல்லைக் கடித்துக் கொண்டு எப்போது தேர்தல் முடியும்? என்று மொத்தமாக விலையேற்றக் காத்துக் கொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

4.  பாஜக அரசின் முதல் ஐந்தாண்டின் கடைசி ஆண்டில் நான் எழுதியுள்ளேன். மளிகை சாமான்கள் விலை ஆச்சரியமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  ஒரு மொத்த மளிகை வியாபாரி கதறுவதை அப்போது பதிவு செய்துள்ளேன்.  உத்தேசமாக அன்று 4500 ரூபாய் அளவுக்கு வாங்கப்பட்ட பொருட்களின் இன்றைய விலை 7700.  அதாவது அடுத்த ஐந்து வருடங்களில் அப்படியே டபுளாக ஏறியுள்ளது.  பருப்பு வகைகள் விலைகள் அனைத்தும் அநியாயம்.  முன்பு ரூபாய் 100 என்றால் தற்போது 200.  இது போல பல பொருட்களின் விலை அப்படியே டபுள். இதை விடக் கொடுமை ரீபைண்ட் ஆயில் பெயரில் உள்ள பல விதமான பிராண்ட் பெயர்களில் உள்ளவைகள் அனைத்தும் உச்சத்தின் உச்சத்திற்கே சென்று விட்டது. இவைகள் அனைத்தும் குப்பை. எவ்வித ஆரோக்கியத்தையும் மனிதர்களுக்குத் தரமுடியாத வஸ்து.  பாமாயில் தனிப்பட்ட மனிதர்களின் லாபத்திற்கு மட்டும் இறக்குமதி அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது. இன்றைய நிலையில் நல்ல தரமான கடலை எண்ணெய் ஒரு லிட்டர் 260 ரூபாய். (ஆறு மாதங்களில் இரண்டு முறை உயர்ந்துள்ளது) தரமான நல்லெண்ணெய் ஒரு லிட்டர் ரூபாய் 440 (ஆறு மாதங்களில் ஒரு முறை உயர்ந்துள்ளது) கலப்பட எண்ணெய் விலை மாறுபாடு உண்டு.  

தேங்காய் வியாபாரிகள் கதறுகின்றார்கள்.  ஆனால் தேங்காய் எண்ணெய் என்பது இங்கே மத்திய மாநில அரசாங்கங்கள் முன்னெடுக்க விரும்பவே இல்லை? ஏன்? டாலரை மிச்சப்படுத்தலாம் தானே? தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிரிட எவரும் தயாராகவே இல்லை.  மிக மிகக் குறைவு.  அரசுக்கு அக்கறை என்பதே இல்லை. பஞ்சு முதல் கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள் அனைத்தும் வட இந்தியா லாபி தான் தீர்மானிக்கின்றது. 

தமிழக வேளாண்மைத் துறை என்பது சம்பளம் என்ற பெயரில் வாங்கிக் கொண்டு யார் வம்பு தும்புக்கும் போகாமல் அப்படியே உண்டு கொளுத்து வாழ்வது.  இங்கு மானியம் என்ற பெயரில் சூறையாடப்படும் தொகை என்பது நீங்களும் நானும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கவே முடியாத பல லட்சம் கோடி.  இந்தத் துறை ஊழல்கள் பொதுவெளியில் எந்த காலத்திலும் வரவே வராது. வரம் வாங்கி வந்த மகான்கள்.

சென்ற வருடம் ட்ரோன் யாத்ரா என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானியம் மூலம் ட்ரோன் வழியாகப் பூச்சி மருந்து அடிக்க, விதைகள் தூவ என்று பல விதங்களில் மத்திய அரசு உதவியது.  வட மாநிலங்கள் பலன்பெறத் துவங்கி விட்டனர்.  தற்போது தமிழக அரசு தங்கள் திட்டம் என்று தூங்கி எழுந்து சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்து உள்ளனர்.   வேறு எவருக்கும் இப்படியெல்லாம் திட்டம் உள்ளதா? என்று தெரியவே இல்லை.

No comments: