Thursday, June 15, 2023

தமிழக அரசியல் என்றால் என்ன?

நீங்கள் நினைப்பது போல வளர்ச்சி அரசியல், தேசிய அரசியல் நிலையாக இருந்தால் கிடைக்கும் உள்கட்டமைப்பு வளர்ச்சி, சர்வதேச அரசியல் மூலம் இந்தியா நிலையாக உள்ளதா? இல்லையா? என்பது போன்ற எவ்விதமான பேச்சுக்களும் இங்கே எடுபடாது. எவ்வளவு கீழ் இறங்கிச் சொன்னாலும் நம் மக்களுக்குப் புரியாது. காரணம் மூன்று தலைமுறைகளின் மனோவியல் தாக்கம் என்பது சிந்தனை வளர்ச்சி என்பது தனிப்பட்ட நபர்களின் தரங்கெட்ட அரசியல் சிந்தனைகளால் தாழ்ந்து உள்ளது என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

திமுக, அதிமுக, பாஜக, பாமக, விசிக மற்ற உள்ளூர் உதிரிகள்.



சந்தைப் பேட்டை வசூல் யார் பார்ப்பது. எடுப்பவர் மற்றவர்களுக்கு எப்படிப் பங்கிட்டுக் கொடுப்பது. எந்த ஊரிலும் வசூலிப்பது முழுமையாக அரசுக்குச் செல்வதில்லை.
நகராட்சி மாநகராட்சி கழிவறைகள் கட்டணம் வசூலிப்பது யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.
மதுக்கடைகள் கரூர் கேங் கைப்பற்றி இருந்தாலும் மிச்சம் சொச்சம் உதிரிகளைப் பக்குவமாக வசூலித்து எப்படிக் கையாள்வது.
எந்த இடங்களில் மாமூல் நிரந்தரமாக வசூலிக்கப்படமுடியும், அல்லது தேவைப்படும் போது கேட்டால் வாங்க முடியும் போன்றவற்றின் மூலம் பணம் பார்ப்பது.
கிரஷர் முதல் மணல் வரை பெரிய அளவில் வசூலிக்கப்படும் தொகையை எந்தந்த சதவிகிதத்தில் கீழே அல்லக்கை முதல் மேலே அதிகாரிகள் அமைச்சர்கள் வரைக்கும் எப்படிப் பங்கிட்டுக் கொள்வது. ஜெயலலிதா ஒருவர் மட்டுமே திமுக விற்கு பத்துப் பைசா கூடத் தன் ஆட்சிக்காலம் முழுமைக்கும் கொடுக்கவில்லை. கட்சிக்காரன் எவனையும் கொடுக்கவிடாமலும் வைத்துச் சாதித்துக் காட்டினார். ஆனால் எம்ஜிஆர், எடப்பாடி இருவரும் திமுக தயவில் தான் ஆட்சி நடத்தினர். விதிவிலக்கு சசிகலா. சாதி என்ற பெயரில் சில திமுக வினருக்கு ஒப்பந்தம் அளித்தார்.
கடைசியாகக் கட்சிக்கூட்டம் நடத்த யாரிடம் பணம் வாங்க முடியும்? அவருக்கு என்ன செய்து கொடுக்க வேண்டும் என்ற பாலபாடத்தை உணர்ந்து இருப்பது.
அதாவது கட்சியின் பெயர்கள் வெவ்வேறாக இருக்கும். மேலே பேட்டி முதல் கவர் ஸ்டோரி வரைக்கும் வேறு விதமாகவே கடைசி வரைக்கும் இருக்கும்.
ஆனால் ஒரு சட்டமன்றத் தொகுதி என்றார் அதில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியிலிருந்து செயல்படக்கூடியவர்கள் இதனை அடிப்படையில் தான் செயல்பட முடியும். இப்படித்தான் இங்கே அரசியல் நடக்கின்றது.
யாரும் யாருடனும் அடித்துக் கொள்ள மாட்டார்கள். அனுசரித்துத் தான் செல்வார்கள். ப்ளெக்ஸ் சுவரொட்டி ஒட்டுவது முதல் பெரிய கட் அவுட் வைப்பது வரைக்கு ஒருவர் மற்றொருவரிடம் கேட்டுக் கொள்கின்றார்கள்.
இதற்கு மேல் ஒவ்வொருவரும் தத்தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் தினமும் செலவு செய்து தன்னை ஒரு பிம்பமாகக் காட்டிக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றார்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் மாதம் சில லட்சமாவது செலவழிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றார்கள். அதிகாரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருப்பவர்கள் இன்றைய சூழலில் மாதம் ஒரு லட்சமாவது செலவழித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சொந்தப் பணத்தை செலவழித்து மூச்சு முட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
நீ நன்றாகப் பேசு? நீ நன்றாக எழுது? தினமும் இணையத்தில் கட்சி சார்ந்து செயல்படு? இதனைப் பார்த்து எந்த அரசியல் கட்சிகளும் உங்களைச் சீராட்டி பாராட்டி வரவேற்று உச்சி முகர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாது. பல அடுக்கு லாபி, உள் அடுக்கு சாதி, வெளி அடுக்கு பணம். எல்லாவற்றையும் வெல்லும் தகுதி உங்களுக்கு இருக்க வேண்டும். பணமென்பது அரசியல். அதிகாரத்தின் வழியே வட்டிக் கணக்குப் போட்டுக் கூடுதலாகச் சம்பாதிப்பது அதிகார அரசியல். நல்லவர்களுக்கு மூச்சு முட்டும். பழக்கமானவர்கள் டிஆர் பாலு போல ஜெகத் போல ஆசியாவின் சிறந்த தொழில் முனைவோர்களாக மாறுகின்றார்கள். கட்டம் ஒத்துழைக்க வேண்டும். இவர்கள் என்ன செய்தாலும் கண்டு காணாமல் இருக்க மத்திய பாஜக போல ஒரு கட்சி அமைய வேண்டும்.
கடைசியாக
நீ என்ன வேண்டுமானாலும் செய்? எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுது பேசு?
அவன் ஒரு ஓட்டுக்கு 5000 தருகிறேன் என்று சொல்கிறான். நீ எத்தனை ஆயிரம் தருவாய்? என்பதே எதார்த்தம்.
வாக்குப்பதிவு நடக்கும் நேரத்திற்கு முன்பு உள்ள 72 மணி நேரம் அதாவது கடைசி மூன்று நாட்கள் தான் அரசியல் கட்சிகளின் அக்னிப் பரிட்சை நாட்கள். அந்தச் சமயத்தில் என்ன முடிவு எப்படி மாறும்? என்று சொல்லவே முடியாது.
மற்றது அனைத்தும் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன்.

No comments: