இந்தப் படத்தைப் பார்க்கும் போதே உங்களுக்குப் புரிந்து இருக்கும். அண்ணாமலை மூன்றாவது வட்டத்திற்குள்ளும் நுழைந்துள்ளார்.
முதல் வட்டம்
கோடீஸ்வரர்கள் சார்ந்தது. ஓட்டுப் போட வரமாட்டார்கள். ஆட்சி, அதிகாரத்தை இவர்கள் தான் இயக்குவார்கள்.
இரண்டாவது வட்டம்.
நடுத்தர வர்க்கம். உயர் நடுத்தர வர்க்கம்,
அதிகார வர்க்கத்தின் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண கடைநிலை எழுத்தர் வரைக்கும் இதில் வருவார்கள். மொத்த அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த மாதச் சம்பளத்தைச் சார்ந்து அடிப்படை விசயங்களுக்குக் கவலைப்படத் தேவையில்லாத தேவைக்கு மேலே ஆசைப்படும் இவர்களின் ஓட்டு என்பது நித்ய கண்டம். பூர்ண ஆயுசு கதை தான். வாக்களிக்கும் நாளில் சுற்றுலா செல்லும் கோஷ்டியிது. மிகக் குறைவான சதவிகித ஓட்டுக்களை மட்டுமே இங்கே எதிர்பார்க்க முடியும். ஆனால் எந்த அரசு அமர்ந்தாலும் இவர்களின் சுயநல எதிர்பார்ப்பு வானம் அளவுக்கு இருக்கும்.
கடைசி வட்டம்
கீழ் நடுத்தர வர்க்கம், ஏழை, பரம ஏழை என்ற மூன்று பிரிவுகள் தான் கடந்த 75 வருடங்களை இந்திய ஜனநாயகத்தைக் காத்துக் கொண்டு வருகின்றார்கள்.
தனியார் நிறுவனங்களில் பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள், ஆசைகளை மனதிற்குள் வைத்து மட்டுமே சாகின்ற வரைக்கும் வாழ வேண்டும் என்ற விதிக்கப்பட்ட ஜென்மங்களும், சாதாரண நிலையில் இருபதாயிரம் சம்பளத்திற்குக் கீழ் வாங்கக்கூடிய அனைத்து மக்களும் கீழ் நடுத்தர வர்க்கம் என்பதற்குள் வருவார்கள். தினக்கூலி, வாரக்கூலி, ரேசன் பொருட்களை முக்கியம் என்று கருதுபவர்கள் போன்ற அத்தனை பேர்களும் இந்த வட்டத்திற்குள் வருவார்கள். மலைவாழ் பகுதிகளில் வாழக்கூடியவர்கள், அடிப்படை வசதிகள் இன்னமும் முறைப்படி சேராமல் இருக்கின்ற கிராமப்புறங்களில் வாழக்கூடியவர்கள் போன்றவர்கள் இதற்குள் தான் வருவார்கள். இடம் விட்டு இடம் பெயர்ந்து நாடாறு மாதம் காடாறு மாதம் என்று வாழக்கூடியவர்கள் கடைசி வரைக்கும் ஓட்டளிக்க வாய்ப்பு இல்லாமல் இந்நாட்டுக் குடிமக்களாக வாழ்பவர்களும் இந்த வட்டத்திற்குள் இருக்கின்றார்கள்.
இந்த கூட்டத்திற்குள் அரசியல் கட்சிகளின் வாக்குக்கு காசு என்ற கொள்கை செல்லுபடியாகின்றது. வாங்கிய காசுக்கும் அவர்கள் ஓட்டளித்து விடுகின்றார்கள். அறுபது முதல் அறுபத்தி ஐந்துக்கு மேல் ஓட்டுச் சதவிகிதம் என் வரவில்லை என்பது உங்களுக்கு இப்போது புரியக்கூடும்.
இப்போது தமிழகத்தில் புதிய வாக்காளர்கள் வரைவு வெளியீடு மூலம் தமிழகத் தேர்தல் ஆணையம் தகுதி பெற்ற தமிழக வாக்காளர்கள் என்று ஆறு கோடியே பதினெட்டு லட்சம் என்று சொல்லி உள்ளனர். மீதி பதினெட்டு வயதுக்குக் கீழ் வரக்கூடியவர்கள் மற்றும் வாக்காளராக பதிவு செய்யாதவர்கள் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் வாக்களித்த பின்பு பாருங்கள் இத்தனை கோடி வந்து ஓட்டளித்து உள்ளனரா என்று?
மூன்றாவது வட்டத்திற்குள் இதுவரையிலும் இங்குள்ள அரசியல் வாதிகள் செட்டிங் மூலம், நாடகபாணி தன்மையுடன் இதுவரையிலும் படம் காட்டிக் கொண்டு இருந்தார்கள். அதாவது வயக்காட்டுக்குள் ரெட் கார்பெட் போட்டு ஒரு கிறுக்கன் சென்றது போல. இப்போது அண்ணாமலை அதனை உடைத்துள்ளார். கொஞ்சம் மாற்றிக் கொண்டு வருகின்றார்.
நிஜமான மனிதர்கள். நிஜமான செயல்பாடுகள். ஏமாற்றாத வாக்குறுதிகள். இயல்பான பழக்க வழக்கம் மூலம் நானும் உங்களின் ஒருவன் தான். என்னை நீங்கள் தாராளமாக நம்புங்கள் என்று மறைமுகமாக உணர்த்தி வருகின்றார்.
ஆள் உயர மாலை கலாச்சாரத்தை வெறுக்கின்றார்.
ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கே பல கட்சிகள் பல பெயர்களின் இருக்கலாம். ஆனால் அனைவரும் பின்பற்றுவது விரும்புவது கருணாநிதி கலாச்சாரம் தான். இது தான் தமிழகம் எங்கும் ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது.
ஆள் உயர மாலையைத் தூக்க முடியாமல் மூன்று பேர்கள் மேடைக்குத் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள். அண்ணாமலை உடனே கொண்டு வந்தவர்களை நிறுத்தி அவர்கள் தலைக்குள் நுழைத்து மாலைக்கு வெளியே நின்று கொண்டு அவர்களுடன் சேர்ந்தே புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றார்.
ஆராத்தி கலாச்சாரத்தை நிறுத்த முடியவில்லை.
அண்ணாமலை அதனை வேறு விதமாக மாற்றுகின்றார். உள்ளூர் தலைவர்களுக்குப் பொட்டு வைக்கச் சொல்கின்றார்.
ஒரே ஒரு செயல்பாடு. இதன் விளைவு பல நூறு பேர்களின் மனதில் ஒரே சமயத்தில் உண்மையாகவே நிரந்தரமாக நுழைந்து விட முடியும்.
இதனை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சிஎன் அண்ணாதுரை தன் அரசியல் பயணத்தில் வெவ்வேறு விதமாக செய்தார். இதன் காரணமாகவே தொண்டர்கள் அவர் மேல் உயிராக இருந்தனர். அண்ணாமலை இப்போது அண்ணா கடந்து வந்த பயணத்தில் வந்து கொண்டு இருப்பதாகவே நான் உணர்கின்றேன்.
இந்தப் படத்தைப் பார்த்த பின்பு நான் அப்படித்தான் நம்புகின்றேன். இந்தக் குடும்பம் இனி வரும் காலங்களில் தாமரையைத் தவிர வேறு எவருக்கும் ஓட்டளிக்க மாட்டார்கள்.
இவர்களின் சொந்த பந்தங்கள் அனைத்தும் படிப்படியாக வட்டத்திற்குள் வருவார்கள். இப்படித்தான் எங்களுக்கு இனி காங்கிரஸ் வேண்டாம். திமுக தான் வேண்டும் என்று கூட்டம் சின்னத்தை மாற்றியது. அதே கூட்டம் எங்களுக்கு இனி இரட்டை இலை தான் வேண்டும் என்றது. பிறகு நம் சாதிக்காரன் என்பதனை வைத்து மட்டுமே சிலர் சிறிது காலம் சதுரங்கத்தை நடத்தினார்கள். பல்லாயிரம் கோடி சொத்துக்களை சேர்த்துக் கொண்டார்கள். அந்த வெறியில் தான் விஜயகாந்த் நம்ப முடியாத ஆச்சரியத்தை உருவாக்கினார். இப்போது அத்தனை பேர்களும் நேரிடையாக மறைமுகமாக ஒரே அணியில் நின்று தாமரை உள்ளே வரக்கூடாது. வளரவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.
தமிழக பாஜக என்பது அடுத்த பத்தாண்டு காலத் திட்டமான கோட்டையில் உள்ள அரியணையைக் கைப்பற்றும் திட்டத்தில் ஒவ்வொரு தூணும் அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குரியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அதன் வடிவமைப்பாளராகவும் கட்டிடப் பொறியாளராகவும் இருக்கும் தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
காலம் மாறும்.
காலம் மாற்றும்.
No comments:
Post a Comment