Friday, October 21, 2022

செய் அல்லது செத்து மடி.

மன முதிர்ச்சியற்றவர்கள் கீழே நான் எழுதியுள்ள செய்திகளைப் படிக்காமல் கடந்து சென்று விடுங்கள். மனதிற்குள் என்னைத் திட்டிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் அவசியம் பின்பற்ற முடியுமா? என்று முயன்று பாருங்கள்.  



இந்த அறிவுரையைக் கூறித்தான் ஆக  வேண்டும் என்று தோன்றியதற்குக் காரணம் என்னால் தாங்க முடியவில்லை. தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அலைபேசியைச் சுத்தம் செய்ய சில மணி நேரம் ஆகின்றது.

1. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் வந்தபின்பு பலரும் ஏதோவொரு வழியில் யார் யாரையோ பிடித்து பதவி என்ற பொறுப்பைப் பெற்று உள்ளனர். வேறு சிலர்  குறிப்பிட்ட பதவியில் உள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பியதைக் கொடுத்து அல்லது ஏற்பாடு செய்து கொடுத்துப் பெற்று உள்ளனர். சிலர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திப் பொறுப்பு வாங்கியிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. உங்களுக்கு என் வாழ்த்துகள்.

2. அரசியலில் எதுவும் நல்லதில்லை. எதுவும் கெட்டதுமில்லை. அரசியல் மூலம் நூறு சதவிகிதம் மக்களுக்கு நல்லது செய்து விட முடியாது. நூறு சதவிகிதம் நல்லது மட்டுமே செய்தாலும் மக்கள் அவர்களை ஆதரிப்பார்கள் என்பதற்கு உலக அரசியல் வரலாற்றில் உத்தரவாதமும் இல்லை.

3. எதற்கு எப்போது யாருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை ராஜதானி முதல்வராக அமர்ந்த பதவியில் இன்று புலிகேசி போன்றவர்கள் அமர்வார்கள் என்று ராஜாஜி நினைத்து இருப்பாரா? இல்லை காமராஜர் இது போன்ற காட்சிகளைப் பார்க்க உயிரோடு இருந்தால் அவர் அதிர்ச்சியில் இறந்திருக்க மாட்டாரா?

3. நாளை மத்திய பாஜக திமுக வுடன் கூட்டணி என்று சொன்னால் மாநில பாஜக மறுக்க முடியாது. சேர்ந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். நான் அந்த சமயத்தில் வாயைப் பொத்திக் கொண்டு என் மனைவியைக் காதலிக்கத் தொடங்குவேன்.  கட்சிக்கு அறிவுரை சொல்ல மாட்டேன். கட்சிக்குத் தெரியும். இணையத்தில் என் சொந்தக் கதை சோகக் கதையை மீண்டும் எழுதத் தொடங்குவேன். அரசியல் பற்றி மூச். காரணம் நான் வளர்ந்த விதம் வேறு. நான் வளர்த்துக் கொண்ட கொள்கைகளும் வேறு. 

4. பதவிக்காக முதலீடு செய்து இந்த அரசியல் ஆட்டத்திற்குள் வந்தவர்கள் சும்மாயிருக்க முடியாது. அவர்கள் அரசியல் பாணி வேறு விதமாக இருக்கும்.  அப்படி நீங்கள் நினைத்தபடி அரசியலில் அடுத்தடுத்து உயர வர என் வாழ்த்துகள்.

5. 85,000 முதல் 90,000 வரை தமிழகத்தில் வாக்குச் சாவடி பூத் உள்ளது என்பது தற்போது பாஜக என்ற கட்சியில் புதிதாக பதவியைப் பெற்றவர்களுக்குத் தெரியுமா? கடந்த ஏழெட்டு மாதங்களில் பாஜக வில் அனைத்து அணிகளும், வழங்கப்பட்ட பொறுப்புகளும் மேலிருந்து கீழ் வரைக்கும் இதே 90,000 பேர்கள் என்கிற அளவுக்கு நெருங்கி உள்ளது என்பதாவது தெரியுமா?  

6. இன்று வரையிலும் தமிழகத்தின் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்று நான்கு திசைகளிலும் உள்ள தேர்தல் வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடிக்குழு உருவாக்கப் படவில்லை. எவருக்கும் இது போன்ற ஆக்கபூர்வமான வேலைகளில் அக்கறையுமில்லை.

7.  மாவட்டம் தோறும் பொய்க் கணக்கு. போலிக் கணக்கு. ஒரே காரணம் எப்போது பாஜக ஆட்சிக்கு வரும்? திமுக, அதிமுக போல டெண்டர் எடுத்து பாதிக்குப் பாதி கமிஷன் அடித்து கோடீஸ்வரன் ஆகலாம் என்ற பேராசை.  நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  அண்ணாமலை தமிழக அரசியலில் இருக்கும் வரை, அவரே நாளை முதல்வராக வரக் காலம் அனுமதித்தால் கூட நீங்கள் அரசின் பணத்தை ஆட்டையைப் போட, தவறான வழியில் பத்துக் காசு சம்பாதிக்க கண்ணீர் விட வேண்டியதாக இருக்கும்.  வாய்க்குள் குச்சியை விட்டு மூக்கு வழியாக எடுப்பார். இதை இப்போதே உங்கள் பக்கங்களில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

8. அரசியல் என்பது நீண்டதொரு பயணம்.  அதிகாரத்தை அடைவது மிக நீண்டதொரு பயணம். அதிகாரத்தை மோடி போல மீண்டும் மீண்டும் தக்க வைப்பதும் மேலும் புகழுடன் மக்கள் செல்வாக்குடன் ஆரோக்கியத்துடன் வாழ்வது என்பதும் உங்களுக்கு இறைவன் கொடுத்த வரமாக இருக்குமே தவிர உங்கள் திறமை உழைப்பு அல்ல என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.  இன்றைய உங்கள் அவசரம் என்பது பல சமயம் உங்கள் உயிரைக் கூடக் காவு வாங்கும்.  நிதானம்.  மிக மிக நிதானம் அவசியம். யாருக்கு எது வந்து சேர வேண்டுமோ அது வந்தே தீரும்.

9, பாஜக வில் சிலரை மனதில் வைத்துக் கொண்டு அவன் இந்த அளவுக்குச் சம்பாதிக்கின்றார். இவன் அவர்களுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு லட்சம் லட்சமாக அள்ளி குவிக்கின்றான் என்று வருத்தப்படாதீர்கள்.  திமுக வில் கோசி மணி, வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர்களின் கடைசிக் காலம் எப்படி இருந்தது? சாவே வந்து விடு என்று அழுது புலம்பி தங்கள் ஆத்மா உடலிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அருவருப்பான வாழ்க்கை வாழ்ந்து முடித்தார்கள் என்பதனை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக ஆர்எம். வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளும் புறமும் ஆட்டம் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.  அதிகாரமே இல்லாமல் அடி ஆழத்தில் வந்து விழுந்து தனிமையுடன் மட்டும் இனி வாழ்வாயாக என்று வாழ்க்கை கொடுத்த தண்டனையைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

10. ஓர் அணி. அதில் பத்துப் பதவிகள். ஒவ்வொருவருக்கும் ஒரு சமூக வலைதள கணக்கு.  ஒவ்வொருவரும் காசு கொத்து ப்ளெக்ஸ் வடிவமைப்பு செய்து கொள்ளும் திறமை. திமுக, அதிமுக மாதிரி அவன் இவனைப் பாராட்டுவது. இவன் அவனைப் பாராட்டுவது. வாட்ஸ் குரூப் நிரம்பி வழிகிறது. நாற்றம் பொறுக்க முடியவில்லை.  இது போன்ற விசயங்களில் உங்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டு பலருக்கும் கொண்டு சேருங்கள் என்று அன்போடு ஆலோசனை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.  

11. திரைப்படத்துறை, அரசியல்துறை இரண்டுக்கும் அதிக அளவு விளம்பரம் தேவை.  ஆனால் வாட்ஸ் குரூப் ல் போட்டு யாருக்கு என்ன பிரயோஜனம்? கழிவறையில் பாடினால் உலகத்திற்குத் தெரியாது. மேடையில் ஏறி நின்று பாடாத வரைக்கும் உங்கள் திறமையைப் பற்றி உலகத்திற்குப் புரியாது.

12. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் எதுவாக இருந்தாலும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துங்கள்.  இல்லாமல் போனால் நீங்கள் அவசரமாக ஏதேனும் தகவல் கேட்டால் கூடக் கேட்க ஆளின்றி, சொல்ல விருப்பமின்றி நீங்கள் அனாதை போலவே மாறியிருப்பீர்கள்.

13. நீங்கள் என்ன பதவி வாங்கியிருந்தாலும் நீங்கள் வசிக்கும் சந்தில் உள்ள அத்தனை பேர்களும் உங்களை மதிக்கின்றார்கள்? அவர்களுக்கு நீங்கள் உதவி செய்து இருக்கின்றீர்களா? உங்களால் பாஜக என்ற கட்சியின் செல்வாக்கு ஓர் இன்ஞ் அளவுக்கு நகர்த்தி மேலே கொண்டு வந்து இருக்கிறீர்களா? அப்படி இல்லாதபட்சத்தில் வாழ்நாள் முழுக்க நீங்கள் வடிவமைப்பாளருக்குக் காசு கொடுத்து வாங்கி அதனை உங்கள் வாட்ஸ்அப் குரூப் க்குள் பகிர்ந்து நாலைந்து அல்லக்கைகளை வைத்து ஆகா ஓகோ என்று "பேரு பெத்த பேரு நீரு லேது" என்பதாக வாழ்ந்து முடித்து விட வேண்டியது தான்.

கட்சி சார்ந்து, இயக்கம் சார்ந்து, தனிப்பட்ட கொள்கை சார்ந்து எதிலும் திடத்துடன், திறத்துடன் செயல்பட வாழ்த்துகிறேன்.

14. இன்னும் இருபது மாதங்கள் தான் பாராளுமன்றத் தேர்தலுக்கு உள்ளது என்பது உங்கள் நினைவில் இருக்கட்டும்.  இதற்கு முன்னால் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களுக்கும் இப்போது தலைவர் பதவியில் இருப்பவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்பதனை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

மீண்டும் அண்ணாமலை உரையாடல்/அன்புடன் அண்ணாமலை/ பாஜக வை நம்பித்தான் திமுக உள்ளது/Interview Oct 19 2022

தார்க்குச்சியை ஆசன வாயில் வைத்து உள்ளே நுழைத்து இரண்டு ஆட்டு ஆட்டி குச்சியை மூக்கு வழியே வெளியே எடுத்து உங்களை வேலை வாங்கிய பின்பு தான் உங்கள் பகுதியை விட்டு நகர்வார் என்பதனை மனதில் வைத்திருங்கள்.

செய் அல்லது செத்து மடி.


No comments: