ஒரு தரமான பொருள் என்றால் தரம் என்பதற்கு உதாரணமாக உள்ள அத்தனை தகுதிகளும் அந்த பொருளில் இயல்பாகவே இருக்கும். 15 வருடத்திற்கு முன் வாங்கிய பல பொருட்கள் இன்னமும் நான் அப்படியே பயன்படுத்திக் கொண்டு இருப்பதை யோசித்துப் பாருங்கள்.
அதே போல இந்திய அரசியல் வாதிகளில் இரண்டு பெயரை நான் திரும்பத் திரும்ப யோசித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.
1. நரேந்திர மோடி. 2. ஒரிஸ்ஸா முதல் பட்நாயக் அவர்கள்.
முதல் ஐம்பது வருடம் கல்வி மற்றும் அமெரிக்கா வாழ்க்கை. சொகுசு. தாய் மொழி கூட அறிந்து கொள்ளாத வேறொரு வாழ்க்கை. ஆனால் அரசியலுக்குள் வந்த பின்பு இந்த நிமிடம் வரைக்கும் மக்கள் பணி என்பதனை நவீனத் தொழில் நுட்பம் வழியே ஒரிசா முதல்வர் வழங்கி வருகின்றார். காடுகள் மற்றும் நக்சல் அதிகமாக இருக்கும் தன் மாநிலத்தில் அவர் ஆட்சி நிர்வாகம் செய்யும் அழகினை தேடிப் பிடித்துப் பாருங்கள்.
மேலும் இயற்கை சதி செய்யும் மாநிலமும் கூட.
காரணங்கள் சொல்லாதே. காரியம் என்னாச்சு என்கிற பாணி நிர்வாக நடைமுறை.
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றும் ஒரிய தொழிலாளர்கள் மேல் நிர்வாகம் எப்போது ஒரு பார்வை வைத்து இருக்கும். சம்பளப் பிரச்சனை அல்லது வேறு ஏதேனும் என்றால் முறைப்படி நிர்வாகத்திடம் தெரிவிப்பார்கள். அடுத்த நாள் நடக்கவில்லை என்றால் இவர்கள் முதல் நாள் யாரிடமோ சொல்வார்கள். அடுத்த நாள் அல்லது அடுத்த ஆறு மணி நேரத்தில் ஒரிய தலைமைச் செயலகத்திலிருந்து சென்னை கோட்டைக்குத் தகவல் வரும்.
அடுத்த நாள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தகவல் வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒரு படையே வந்து நிற்கும். அதாவது 48 மணி நேரத்திற்குள். நான் நேரிடையாகவே பார்த்தேன். முதலாளி முழி பிதுங்கிக் கையெடுத்துக் கும்பிட்டு ஜகா வாங்கிவிடுவார்.
நான் அதிகப்படியாக பூஸ்ட் செய்து எழுதவில்லை. நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வு இது. (இது போல வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு வாய்ப்புள்ளதா?)
2. மோடி முதல் ஐம்பது வருடத்தில் முதல் இருபது வருடத்தில் தன்னை உணர்ந்து கொள்வதில் அலைந்து திரிந்துள்ளார். யாருக்கும் திருப்தி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து பணம் காசுக்குப் பிச்சை எடுக்க வேண்டிய சூழலிலிருந்து (இவர் சுயசரிதம் நிகழ்வு குறிப்பிட்ட வயதுகளில் என்ன நடந்தது என்பதனை யாராலும் படிக்க முடியாத அளவுக்குக் களப்பிரர் காலம் போலவே உள்ளது) அதன் பிறகு ஆர்எஸ்எஸ் என்பதில் தொடங்கியது. அடுத்த முப்பது வருடம் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் கட்சியின் உள்ளே வெளியே என்று அனைத்தையும் பாகம் வரைந்து குறித்துத் தெரிந்து கொண்டார்.
முதல் இருபது வருடத் தாக்கத்தின் விளைவாக இவர் அடுத்த முப்பது வருடங்களில் (50 வயது வரை) அதிகமாக யாருடனும் பேசுவதே இல்லை. ஒரு பெண்மணி ரயில் பயணியாக (சங்கர்சிங் வகேலா மற்றும் மோடி) பயணித்த போது கவனித்ததைப் பின்னால் எழுதிய போது அதன் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. இயல்பாகவே இவர் காதுகளை மட்டுமே திறந்து வைத்துக் கொண்டு அடுத்தடுத்து நகர்ந்து வந்துள்ளார். எவ்வித சிக்கல்களிலும் குஜராத் முதல்வர் பதவியை அடையும் வரைக்கும் மாட்டிக் கொள்ளாமல் வந்ததே இவரின் மனோதிடத்திற்குப் பெரிய சான்று.
குஜராத் முதல்வர் காலகட்டத்தில் சோனியா குடும்பம் போட்ட ஆட்டத்தில் இவர் மனதில் நிச்சயம் வைராக்கியம் உருவாகியிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்றே யூகித்து இருந்தேன். கொஞ்சம் நஞ்சமல்ல. சோனியாவும், பாசி அய்யாவும் உரலுக்குள் போட்டுக் குத்தி எடுத்து விட்டார்கள். அமித்ஷா அவர்களைக் கொஞ்சம் கூடுதலாகவும் என்பதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். பாசி இன்று உயிருடன் இருப்பதே ஆச்சரியம் தான்.
மோடி எதிரிகளை உடனே பழிவாங்குவதில்லை.
படி ஒன்று படி இரண்டு படி மூன்று வரைக்கும் கொண்டு வருகின்றார். அதற்குள் அவர்களிடம் உள்ள அனைத்தையும் பிடுங்கி விடுகின்றார். வெளியே யாருக்கும் தெரிவதில்லை. பாதிக்கப்பட்டவன் கவுண்டமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே சென்று காலில் விழுந்து வணங்கி வெளியே வந்து உதார் விடுவது போல நடப்பதை வைத்து நாம் மோடியைத் திட்டுகின்றோம். ஆனால் உள்ளே நடந்த அல்கரிதம் என்பது வேறு.
உதாரணம் மேற்கு வங்க மம்தா. கப்சிப்.
ஏன் இதனை எழுதுகிறேன் என்றால் கடந்த ஒரு மாதத்தில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு மத்திய அமைச்சர்கள் அத்தனை பேர்களும் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வந்து கொண்டு இருக்கின்றார்கள்.
ஆய்வு செய்கின்றார்கள். அறிக்கை விடுக்கின்றார்கள்.
பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கின்றார்கள். தென் இந்தியா முழுக்க இது நடந்து வருகின்றது என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உடனே பாராளுமன்றத் தேர்தலுக்கு நாடகம் போடுகின்றார்கள் என்று எளிதாக உங்களுக்குச் சொல்லத் தோன்றும்.
இல்லை. இந்த இடத்தில் தான் மோடியின் முப்பது வருடத் தரமான அனுபவங்கள் கற்றுக் கொடுத்துள்ள அனுபவத் தாக்கத்தை இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் நூறு வருடங்கள் ஆர்எஸ்எஸ் இயக்கம் பிளவு படாமல் வந்து நிற்கின்றது என்பதற்கு ஒரே காரணம்
பதவி ஆசை உடன் வருபவர்கள் அங்கே நிலைக்க முடியாது.
வாய்ச் சவடால் செல்லுபடியாகாது.
உங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லை.
விளம்பரங்களுக்குத் தடா.
இயற்கையிலேயே பல பில்டர்கள் அங்கே உள்ளது.
கழிவுகள் கழிந்த பின்பு மீதம் இருப்பது தான் உண்மையான ஆர்எஸ்எஸ்.
இப்படித்தான் 98 வருடங்கள் கடந்து வந்துள்ளது.
இதில் கற்றுக் கொண்ட மோடி தான் உருவாக்கிய திட்டங்களைத் தன் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றார்.
கசகசவென்று பேசாதே. திட்டத்தைக் கொண்டு போய்ச் சேர். அது நின்னு பேசும்.
அப்படித்தான் ஹிந்தி பெல்ட் மோடிக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நாம் சிரிக்கலாம். இதெல்லாம் என்ன பெரிய திட்டம் என்று. அந்தந்த மாநிலங்களில் வாழும் சூழல் புரிந்தால் தான் உங்களுக்குத் தெரியும்.
திருப்பூரில் பணிபுரியும் ஓர் இளைஞர் சொன்னது. 100 கிலோ மாவு (சப்பாத்தி போட) அதற்குத் தேவைப்படும் வெங்காயம் பச்சை மிளகாய் இருந்தால் போதும். சில மாதங்களுக்கு நாங்கள் கோடீஸ்வரர் என்றார்.
புரிந்து கொள்ளுங்கள்.
வட மாநிலங்களில் மோடியைப் பெண்கள் அதிகமாக விரும்பக் காரணம் (பீகார் 51 சதவிகிதம் வாக்களித்து உள்ளனர்) நலத்திட்ட உதவிகள் இடைத் தரகர் இல்லாமல் அவர்களிடம் சென்று சேர்ந்துள்ளது.
தமிழகத்தில் கால்வாசி மறைத்து, கால்வாசி தின்று, கால்வாசி மாநில திட்டம் என்று பரப்பி மீதி உள்ள கால்வாசியைக் கணக்குக்கு என்று காட்டி ஏகப்பட்ட குளறுபடிகள் என்பதனை உணர்ந்த மத்திய அரசு முதலில் மாவட்ட ஆட்சியரைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கி உள்ளது.
இத்தனை திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது?
எத்தனை திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது?
வழங்காத காரணம்?
தாமதமான காரணம்?
எப்போது வழங்குவீர்கள்?
எத்தனை மாதங்கள் வேண்டும்?
மீண்டும் வருவேன்.
தணிக்கை செய்வோம்.
மாநில அரசு தலையிட முடியாத அளவுக்கு ஆப்பு சொருகும் போது என்னவாகும்?
ஒன்று திட்டங்கள் வேகம் எடுக்கும். மக்களிடம் சென்று சேரும். யாருடைய திட்டம் என்பதனை அண்ணாமலை ஊதுகுழல் இல்லாமல் முரசறிவிப்பார். மக்களுக்குப் புரியத் தொடங்கும்.
சட்டமன்றத் தேர்தல் மாற்றத்திற்கான விதையை இப்போது ஊன்றத் தொடங்கி உள்ளனர்.
தட்டி எழுப்பி விட்டால் போதும்.
மக்களை இனியும் இவர்கள் ஏமாற்ற முடியுமா?
No comments:
Post a Comment