இன்று ஆசிரியர் தினம். ஒரு வருடத்தில் வருகின்ற வெவ்வேறு தினங்கள் குறித்து நான் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை. அம்மா தினம். அப்பா தினம் என்று மேற்கத்திய கலாச்சாரம் உருவாக்கித் தந்ததை அப்படியே பற்றிக் கொண்டு பொய்யாய் அன்பு செலுத்துவது நம் பண்பாடு அல்ல. ஆனால் தொடக்கம் முதல் நேற்று வரை தேவியர் இல்லத்தில் என் ஆசிரியர்கள் குறித்து எழுதியது இல்லை என்பதால் இன்று இதனை எழுதி வைத்து விடலாம் என்று தோன்றியது.
வீட்டில் வருடம் தோறும் ஒரு குழந்தையை அம்மா கொடுத்துக் கொண்டே காரணத்தால் பள்ளியில் கொண்டு சேர்ப்பது என்பது பெரிய விசயம் அல்ல. எனக்கு மேலே நான்கு அக்காக்கள். இரண்டு அண்ணன்கள். எங்கள் வீட்டுக்கு அருகே சரஸ்வதி வித்தியா சாலை என்ற பள்ளிக்கூடம் இருந்தது. (1922 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது) எட்டாம் வகுப்பு வரை அங்கு இருந்தது.
என் அப்பா, இரண்டு சித்தப்பாக்கள் முதலில் அருகே இருந்த கண்டணூர் சிட்டாள் ஆச்சி பள்ளியில் படித்து அதன் பின்பு இதே பள்ளியில் படித்தனர். அதன் பிறகு என் மூத்த அண்ணன்கள் என்று மொத்தமான் இன்று அண்ணன் மகன்களுடன் சேர்த்தால் நான்கு தலைமுறை இதே பள்ளியில் படித்துள்ளோம்.
நான் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் பள்ளி என்பது எனக்குப் பிரச்சனையாக இல்லை. என் மூத்த அண்ணன்கள் படித்த சமயத்தில் வெவ்வேறு இடங்களில் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, மாற்றப்பட்டு கடைசியில் பியூசி முடித்து வேறு வகையில் தொடர்ந்தனர். நாங்கள் படித்த போது ப்ளஸ் டூ வந்து விட்டது. என் பள்ளி வாழ்க்கை என்பது எம்ஜிஆர் முதல் முறை இரண்டாவது முறை ஆட்சிக் காலமாக இருந்தது. நூலகத்திலும், தேநீர் கடை மற்றும் மளிகைக் கடைகளில் தினமும் நாலைந்து தினசரித் தாள்கள் படித்து விடுவேன்.
எனக்கு முன்னால் ஆறு பேர்கள் இதே பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்கள். அதாவது ஒவ்வொரு வகுப்பிலும் அக்கா அல்லது அண்ணன் என்று யாராவது ஒருவர் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தனர்.
என்னை முதல் முறையாக எந்த அக்கா பள்ளிக்கு அழைத்துச் சென்றார் என்பது இப்போது என் நினைவில் இல்லை. ஆனால் சீனிவாசன் சார் அப்பா உச்சிக்குடுமியோடு ஒரு மூலையில் அமர்ந்து இருந்தார். அவர் முன்னால் நெல் பரப்பி இருந்தது.
கொழந்த யாரு? என்று கேட்டார்.
அப்பா பெயரை யாரோ சொன்னார்கள். எழுத வைத்தார்.
அழச்சுண்டு போங்கோ என்றார்.
சுபம்.
பள்ளி வாழ்க்கை தொடங்கியது.
ஒன்றாகும் வகுப்புக்கு முனியம்மா டீச்சர். (காலமாகி விட்டார்) . என் கடைசி தம்பி வரைக்கும் இவர் தான் ஆசிரியர். அடிக்கவே மாட்டார். மிரட்ட மட்டுமே செய்வார்.
இரண்டாம் வகுப்புக்கு சொக்கப்பன் வாத்தியார். (காலமாகி விட்டார்) புள்ளைப் பூச்சி போல அப்பாவியான மனிதர்.
மூன்றாம் வகுப்புக்கு ராமு வாத்தியார். (காலமாகி விட்டார்) விதம் விதமாக அடித்து வெளுத்து வாங்குவார். துள்ளினாலும் துவண்டாலும் கதறினாலும் விடவே மாட்டார். ஒவ்வொரு முறையும் சிறுநீர் வந்து விடும்.
நான்காம் வகுப்புக்கு சீனிவாசன் சார். (புகைப்படத்தில் இருப்பவர் இவரே. தற்போது என்பது வயதுக்கு மேலாகி விட்டது. ஓய்வு பெற்ற பின்பு வரும் பணம் இவரைக் காப்பாற்றுகின்றது. கூடவே ஜோதிடம் பார்க்கின்றார். நாலைந்து மாதத்திற்கு முன்பு பள்ளியில் நடந்த நிகழ்வில் சந்தித்தேன். அய்யங்கார் பிரிவைச் சேர்ந்தவர். ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார்)
ஐந்தாம் வகுப்புக்கு பழனியப்பன் சார். (காலமாகி விட்டார்) இவர் பாடம் நடத்தியாக எனக்கு நினைவில்லை. நான் படித்த காலத்தில் 15 பைசாவிற்குத் தபால் அட்டை ஒன்று இருந்தது. அதை இவர் சொல்லும் போது அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று வாங்கி வந்து கொடுக்க வேண்டும். வகுப்பறையில் அமர்ந்து கொண்டு இவர் யாருக்கோ எழுதித் தள்ளிக் கொண்டேயிருப்பார்.
ஐந்து வகுப்புகள் வரை என்ன படித்தேன்? என்ன கற்றுக் கொண்டேன்? என்ன நம் தனித் திறமை என்பது எதுவும் எனக்குத் தெரியாது. இன்று நினைவில் இல்லை. ஆனால் நாடகத்தில் நான் நடித்தேன். பேச்சுப் போட்டியில் கலந்துள்ளேன். திருக்குறள் ஒப்பித்து பரிசு வாங்கியுள்ளேன். அதாவது என் வாய் துடுக்குத்தனம் பார்த்து நடிக்க வைத்தார்கள். என் கதாபாத்திரம் தோசை. தோசை போல சொய்... சொய்... என்று சொல்லிக் கொண்டு பேச வேண்டும்..
நாடகத்தில் நடித்தது. அதற்குப் போட்ட ஒப்பனை. உடைகள். நாடகம் முடிந்து வீட்டுக்கு இருட்டுக்குள் யாரோ என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றது என்பது இன்றும் என் மனதில் நிழலாடுகின்றது.
ஆறாம் வகுப்பு சண்முகசுந்தரம் சார். (காலமாகிவிட்டார்) என் அக்கா, அண்ணன் என்று அனைவருக்கும் கையெழுத்து மணி மணியாக அழகாக இருக்கும். சண்முக சுந்தரம் சார் என் கையெழுத்தை மற்றவர்களிடம் காட்டி இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொன்னது என் நினைவில் உள்ளது.
ஏழாம் வகுப்பு இதில் தெய்வானை டீச்சர். திடீரென்று வந்த கண்ணம்மா டீச்சர் பாடம் நடத்தினார்கள். தெய்வானை டீச்சர் (காலமாகிவிட்டர்) கண்ணம்மா டீச்சர் குறித்த தகவல் இல்லை.
எட்டாம் வகுப்பு. வேலப்பா வாத்தியார் என்பவர் உள்ளே வந்தார். இவர் தலைமையாசிரியராகவும் இருந்தார். இவர் வருவதற்கு முன்பு மற்றொருவர் இருந்தார். மொத்தம் இரண்டு பிராமணர்கள். ஒரு பிராமண பெண்மனி. மற்ற அனைவரும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். சாதிய பாகுபாடு இல்லை. யாரையும் படிக்கக்கூடாது என்று ஒதுக்கவும் இல்லை.
நான் படித்த பள்ளி அரசு உதவி பெறும் தனியார்ப் பள்ளி. எந்தக் கட்டணமும் இல்லை. நான் படித்த சமயத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு 400 முதல் 450 மாணவ மாணவியர்கள் படித்து இருப்பார்கள். ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படித்த சமயங்களில் பள்ளியில் ஆசிரியர்கள் இடையே குறிப்பாக தெய்வானை டீச்சர், வேலப்பா வாத்தியார் இடையே பல சமயம் பயங்கரமான சண்டை வந்து நாங்கள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே நாட்கள் இப்போது என் மனதில் வந்து போகின்றது.
தெய்வானை டீச்சருக்கு நான் தான் மளிகைச் சாமான்கள் வாங்கிக் கொடுத்தாக வேண்டும். முடியாது என்று தவிர்க்கவே முடியாது. மற்றவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் நான் தான் அவருக்கும் செல்லம். அவர் காதல் திருமணம் செய்தவர். ஸ்டீபன் என்ற வயதானவருடன் அவர் முதல் மனைவியுடன் சேர்ந்து தெய்வானை டீச்சர் வாழ்ந்தார். ஆனால் இவர் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் குடும்பம் ஏழெட்டு வீடுகள் தாண்டி இருந்தது. குடும்பம் தெய்வானை டீச்சரை கடைசி வரை சேர்த்துக் கொள்ளவே இல்லை. டீச்சருக்கு குழந்தையில்லை. கடைசி சமயத்தில் அவஸ்தைகளோடு இறந்தார் என்று கேள்விப்பட்டேன். நான் எட்டாம் வகுப்பு முடித்து வெளியே வந்த போது பள்ளி பெண்கள் பள்ளியாக மாறியது. தற்போது 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓரளவுக்குப் படித்தோம் என்பதாக இன்று தோன்றுகின்றது. வீட்டு வேலைகள், வயல் வேலைகள், கடை வேலைகள் என்பதோடு படிப்பு என்பது பக்கவாட்டில் இருந்தது. சுமையில்லாத சுகமான கல்வி என்பது மட்டும் நன்றாகப் புரிகின்றது.
தொழிற்கல்வி என்றொரு பாடம் இருந்தது. தையல் டீச்சர் (பிராமண பெண்மணி. பெயர் மறந்து விட்டது) கடைசி வரைக்கும் எதையும் கற்றுத் தரவே இல்லை. போய் பேசாமல் அமர்ந்து இருக்க வேண்டும். அந்த பீரியட் முடிந்தவுடன் அடுத்த கிளாஸ்க்கு செல்ல வேண்டும்.
கோதுமை மூலம் மதியம் சத்துணவு வழங்கப்பட்டது. எங்கள் வீடு 200 அடி தொலைவில் இருந்தது. உலகத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதமான அசைவ உணவு வகைகள் சாப்பிட்ட காலமிது. அப்போது எம்.ஜிஆர் ஆட்சிக்கு வந்த காலகட்டமிது. நடுத்தரவர்க்கம் என்பது யாருமில்லை. ஒன்று ஏழை. மற்றொன்று அடிப்படை வசதிகளைப் பெற்றவர்கள். அரசிச் சோறு என்பது சவாலாகவே இருந்தது. ஆனால் வயல், கடை, வசதிகள் இருந்த காரணத்தால் ஒரு நாளும் நாங்கள் வறுமையைப் பார்த்தது இல்லை. இன்று உரையாடும் நண்பர்கள் வாயிலாக அன்றைய துன்பங்களை என்னால் இப்போது உணர முடிகின்றது.
ஒன்பதாம் வகுப்பு அருகே இருந்த மற்றொரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்குச் சென்றேன். 12 ஆம் வகுப்பு வரை அங்கே படித்தேன்.
நெருக்கமான தொடர்பு அங்கே இல்லை. உருவாகவில்லை. கடல் போலக் காணாமல் போக வேண்டிய சூழல் தான். ஒன்பது பத்தாம் வகுப்பில் பள்ளியில் நடந்த ஒரு தேர்வில் கூட ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களில் தேர்ச்சி பெற்றதே இல்லை. ஆனால் பத்தாம் வகுப்பு ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றேன். 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஓரளவுக்குச் சுதந்திரம் கிடைத்தது.
எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரியாமல் வணிகவியல் பாடப்பிரிவில் அக்கா கொண்டு போய் சேர்த்து விட்டார். காரணம் கணக்கு என்றால் எனக்குப் பயம். ஆனால் டி.குமரேசன் சார் பத்து நாட்கள் கழித்து என்னைப் பார்த்து அறிவியல் குரூப் ல் ஆள் இல்லை. இங்கே வந்து விடு என்று அழைத்துச் சென்று விட்டார்.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் அய்யா இருவர் (சின்ன அய்யா அண்ணாமலை அவர்கள் பெரிய அய்யா மீனாட்சி சுந்தரம் என்ற கவிஞர் மீனவன்) பாடம் எடுத்தனர். மிக மிக அற்புதமான மனிதர்கள். வரலாறு பாடத்திற்கு சிகே என்ற ஆசிரியர் (பின்னாளில் தலைமை ஆசிரியராக இருந்து கடைசியில் நோய் வந்து இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன்) பாடத்தை அப்படியே பாரத்து ஒப்புவிப்பார். அதே போல வேதியியல் ஆசிரியர் பரமேஸ்வரனும் பார்த்து வாசிப்பார். பாடம் நடத்தத் தெரியாது.
விலங்கியல் ஆசிரியர் டி.குமரேசன். (காவல்துறை அதிகாரி போலக் கட்டை முறுக்கு மீசை. பள்ளிக்கு புல்லட்டில் தான் வருவார். கிறிஸ்துவர். அசை உணவுப் பிரியர். பந்தா பார்ட்டி. என்னை ரொம்ப பிடிக்கும்) ஆங்கில ஆசிரியர் கனி (குட்டையாக இருப்பார்) பல முறை என்னை வகுப்பறையிலிருந்து வெளியே அனுப்பி உள்ளார்.
1 முதல் 12 வரைக்கும் அன்றைய காலகட்டத்தில் நான் முழுமையாக உணர்ந்து உள்வாங்கி அறிவுடன் படித்ததாக நினைவில் எதுவும் முக்கியமாக இல்லை. நான் படிக்கத் தொடங்கியது, கற்றுக் கொண்டது எல்லாமே அழகப்பா கலைக்கல்லூரியில் தான்.
ஆனால் பள்ளி வாழ்க்கை என்பது சுமையில்லாமல் சுகமாக இருந்தது. நெருக்கடி இல்லை. இரண்டாவது ரேங்க் தான் எடுத்தேன். ஆசிரியர்கள் படிக்கக்கூடியவன் என்ற பெயரோடு இருந்தேன். மேல்நிலைப் பள்ளி முடித்த சமயத்தில் இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்டு இறந்தார்.
எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்த நண்பர்களில் மொத்தம் நான்கு பேர்கள் இன்று வரையிலும் மிக நல்ல நெருக்கமான தொடர்பில் இருக்கின்றார்கள். ஒன்பது முதல் பனிரெண்டு வரைக்கும் படித்த நண்பர்களில் ஒருவன் மட்டும் (திருப்பூரில்) தொடர்பில் உள்ளான்.
என்னைத் தவிர 90 சதவிகித நண்பர்கள் முழுமையாக வழுக்கைத்தலையோடு காட்சியளிப்பதோடு பேரன் பேத்திகள் எடுத்துள்ளார்கள்.
1 comment:
நினைவுகள் இனிமை... அருமை...
Post a Comment