Saturday, September 17, 2022

மோடி அவர்களின் பிறந்த நாள் தகப்பன் பிறந்த நாள் Modi 72-Sep 17 2022

இன்று அதிகாலையில் தேதித் தாள் கிழிக்கும் போதே மோடியின் பிறந்த நாள் என்று மனதில் ஒரு புன்னகை வந்து மறைந்தது. 



உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் பிறந்த தேதி கூட என் நினைவில் இருப்பதில்லை. ஆனால் மோடி அவர்களின் பிறந்த நாள் தகப்பன் பிறந்த நாள் போல மனதில் ஆழப் பதிந்ததற்குக் காரணமுண்டு.

1.  நான் பயன்படுத்தும் பிஎஸ்என்எல் பிராண்ட்பேண்ட் இணைப்பில் பிரச்சனை ஏதேனும் வந்தால் அதிகாரியை அழைத்துச் சொல்வேன். முதலில் வீட்டுக்கு அருகே அலுவலகம் இருந்தது. பிறகு வேறொரு இடம் மாறி இப்போது ஆள் குறைப்பு முதல் அலுவலக காஸ்ட் கட்டிங் வரைக்கும் சேர்ந்து தலைமை அலுவலகத்திலிருந்து செயல்படுகின்றது. ஒவ்வொரு சமயமும் அவர்கள் உடனடியாகக் கவனிக்காத போது என் போராட்டம் தொடங்கும். கடைசியில் ஒருவர் வெட்டுப்படுவார். அலுவலகம் முழுக்க என் பெயர் பரவி விடும்.  இப்படித்தான் கடந்த பத்து வருடங்களாக எந்தப் பிரச்சனையுமின்றி நகர்ந்து வந்து கொண்டு இருந்தேன்.

 ஆறு மாதத்திற்கு முதன் பைபர் நெட் உள்ளே வந்தது.  நிறுவனம் பிஎஸ்என்எல்.  ஆனால் மற்ற அனைத்தும் தனியார்.  குழப்பங்கள் அதிகமாக இருந்தது. மூன்று மாதத்திற்குப் பின்பு ஏஈ மேடம் தொடங்கி உள்ளே இருந்த ஜுனியர் ஆபிஸர் வரைக்கும் என் வட்டத்திற்குள் வந்தனர்.  இதில் ஓர் ஆபிஸர் தொடக்கம் முதல் மிகப் பெரிய அவமரியாதையைத் தந்து கொண்டே இருந்தார். நான் பொருட்படுத்தவில்லை. காரணம் ஆட்கள் மிக மிகக் குறைவு என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு வந்து விடுவேன்.  ஆனால் சமீபத்தில் நடந்த பிரச்சனைகளைக் கண்டு வேறு சில விசயங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவரின் குணாதிசயம் நம்மை அவமானப்படுத்துவது போல இருப்பதுடன் நம்மை ஒரு புழு போலவே மதிக்கின்றார் என்பதாகவே எனக்குத் தோன்றியது.  இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அலுவலகம் சென்றேன். அவர் அலுவலகத்தில் இல்லை. அங்கிருந்து அவர் அலைபேசிக்கு அடித்த போது எடுக்கவில்லை.  பணியில் இருந்த அம்மணி எண்ணிலிருந்து அழைக்கச் சொன்னேன். ஒரே ரிங் ல் எடுத்தார். அவரிடம் என் எண்ணுக்கு அழைக்கச் சொல்லுங்கள் என்று சொன்ன போது மறுத்து அவர் அழைக்கவில்லை.  குமிழ் உடைந்தது. 

அவரின் மேல் அதிகாரியை அழைத்துக் கடந்த ஆறு மாதமாக நடக்கும் யுத்தத்தைப் பற்றிச் சொன்னேன். அவரும் நான் சொல்கிறேன் என்று நகர்ந்து விட்டார். மூன்று நாட்கள் காத்திருந்தேன். எந்தப் பக்கத்திலிருந்தும் பதில் வரவில்லை. என் குறை தீர்க்கப்படவில்லை.  பொதுமக்கள் குறைகள் சொல்ல மத்திய அரசு பப்ளிக் கிரிவன்ஸ் என்றொரு தளம் ( https://pgportal.gov.in/ ) வைத்துள்ளது. துறை வாரியாக அதில் உள்ள ஒவ்வொரு விசயம் சார்ந்து நாம் பதிந்து வைத்தால் போதும்.  ஆப்பு ஆழமாக சொருகிச் சுருள் கத்தியை உள்ளே நுழைத்து மேலும் கீழும் இழுத்து குடல் கும்பியை வெளியே எடுத்துப் போடுவார்கள்.  அப்படித்தான் நடந்தது.  

நேற்றைய முன் தினம் மொத்த அதிகார வர்க்கமும் என் வீட்டில். என் வருகைக்காக தவம் கிடந்தார்கள். வாபஸ் வாங்கா விட்டால் அதில் உள்ள பிரச்சனைகளைப் புரிய வைத்தார்கள்.  நான் ஏற்றுக் கொள்ளவில்லை.  அவர்கள் மொத்த குறைகளையும் நீக்கி விட்டு சில நாட்களில் மின் அஞ்சல் வாயிலாக தெரிவித்து இருந்தார்கள்.  அதில் ஓர் இணைப்பு வந்தது. பீட் பேக் என்ற இடத்தில் மேலும் நான்கு முறை கத்தியால் கிளறி வைத்தேன். அவன் இனி சாதாரண எந்த மனிதன் வந்து தகவல் கேட்டாலும் நின்று நிதானித்து பயத்தோடு பவ்யமாக பதில் அளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை கற்றுக் கொடுத்துள்ளேன்.  அங்கு பணிபுரிந்த அம்மணி சில நாட்கள் கழித்து நடந்த மாற்றங்களை விவரித்து ஆச்சரியப்பட்டார்.  காரணம் மோடி உருவாகியுள்ள வெளிப்படையான நிர்வாகம். 

2. மன்மோகன்சிங் பிரதமராக பதவியேற்ற முதல் நாள் முதல் மோடி பதவியேற்ற மே 26 2014 வரை மத்திய அரசில் என்ன நடந்தது என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.  காரணம் அப்போது வலைபதிவு தவிர வேறு எந்த சமூகவலைத்தளங்களிலும் நான் இல்லை. ஒரு செய்தியை வாசித்து அதனை எழுத வேண்டும் என்பதற்காகக் குறிப்பு எடுத்து தினமும் எழுதுவதைக் கடமையாக வைத்து இருந்தேன். கடைசிக் காலக் கட்ட காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அலங்கோலத்தையும், நரவேட்டை, உலகம் சிரித்த பல நிகழ்வுகள் எல்லாமே என் மனதில் கொந்தளிப்புகளை உருவாக்கியிருந்தது.  

கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வாங்கியது முதல் அதனை வீடு மாறிய போது முகவரி மாற்ற அலைந்த போது கிடைத்த பாடங்கள் வரைக்கும் எழுத ஏராளமாக உண்டு. எனக்கு அதனை விட உரிமையாளர் பெண்மணி பேசிய பேச்சு, நடத்திய விதம், அங்கு பணிபுரிகின்றவர்கள் நம்மைக் கையாண்ட விதம் என்று உயிருடன் நம்மை ரம்பம் வைத்து அறுப்பது போல இருந்தது.  குழந்தைகள் வளர்ந்து கொண்டு இருந்தார்கள். இந்தக் காரணத்திற்காகவே என் சுயமரியாதையைக் காற்றில் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்து வந்தேன்.  2014க்குப் பிறகு என் கேஸ் ஏஜென்சி பெண்மணி என்னைக் கையாளும் விதம் வேறு.  மூன்று முறை அதன் ஏஜென்சி ஒப்பந்தம் அதோகதி என்கிற அளவுக்குக் கொண்டு போய் நிறுத்தியுள்ளேன். டெலிவரி செய்கின்றவர்கள் காசு கொடுத்தாலும் வாங்கமாட்டார்கள். மேடம் வாங்கக்கூடாது என்று சொல்லியுள்ளார்கள்.  நான் மிரட்டவில்லை. ஒன்றுமே செய்யவில்லை.  அவர்களிடம் வைக்கும் முறைப்படியான கோரிக்கையை நிறைவேற்றாத போது அதனை சம்பந்தப்பட்டத் துறைக்கு அப்படியே மின் அஞ்சல் வாயிலாக அனுப்பி வைப்பேன்.  அந்தப் பெண்மணிக்கு சிசி மின் அஞ்சல் செல்லும். மோடி போலவே எல்லாமே வெளிப்படை.   இப்போது காலையில் புக்கிங் செய்தால் ஒரு மணி நேரத்தில் சிலிண்டர் வருகின்றது.  மானியம் என்ற பெயரில் முப்பத்தி ஆறு ரூபாய் வருகின்றது. ஆனாலும் நான் சுயமரியாதையோடு இருக்கின்றேன். அந்தப் பெண்மணி இப்போது மற்ற வாடிக்கையாளர்களை நடத்தும் விதம் முற்றிலும் மாறியுள்ளது. 

3. பெட்ரோல் பங்கில் உருவான பிரச்சனை குறித்து ஒரு முறை எழுதினேன்.  முதலாளிகள் பங்கில் இருப்பதில்லை.  சம்பந்தப்பட்ட நபரை அழைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்க முதலாளி என் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார்.  இப்போது பெட்ரோல் பங்க் முன்னால் ஸ்கேன் கோடு வழியே நீங்கள் புகார் அளிக்க வசதி செய்து உள்ளனர். 

4.  ஜிஎஸ்டி அலுவலகத்தில் நடந்த சம்பவம் என்று தொடங்கி எங்கங்கு அவமதிப்பு நடக்கின்றதோ அன்றே அப்போதே மின் அஞ்சல் வழியாக சம்பந்தப்பட்டத் துறைக்கு அனுப்பினால் போதும்.  அதிலும் குறிப்பாக கிரிவன்ஸ் தளத்தில் சென்று பதிந்து வைத்தால் போதும்.  இவை அனைத்தும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நான் அனுபவித்து வரும் நல்ல விசயங்கள்.

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் பல்வேறு இனம் மொழி பண்பாடு கலாச்சாரம் உள்ள பூமியில் தன் கடமையுணர்வு என்ற ஒற்றைச் சிந்தனையினால் மட்டுமே மோடி அவர்கள் இதனைச் சாதித்துள்ளார் என்றார் அண்ணாமலை போன்றவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக வந்தால் என் பேரன் பேத்திகள் வீட்டில் இருந்தபடி அரசாங்க சேவையைப் பெற முடியும் தானே?  இதற்காகவே தினமும் நான் உழைக்கின்றேன். 

பாஜக ஆட்சி தமிழகத்திற்குத் தேவை என்று விரும்புகின்றேன். நம்புகின்றேன்.

https://youtu.be/vl8V5IqVwPE

No comments: