Wednesday, November 17, 2021

உயிருடன் நடமாடுவது முக்கியமா? வாழ்வது முக்கியமா?

ஒரு நாள் முழுமையாக முடியும் போது குறைந்த பட்சம் இணையத்தில் ஏதேனும் ஒரு பெரிய கட்டுரை வாசிக்க வேண்டும். 




ஒரு புத்தகத்தில் சில அத்தியாயங்கள் வாசிக்க வேண்டும், அரை மணி நேரத்திற்கு மேற்பட்ட பேச்சு கேட்க வேண்ம்  என்று என்னை நானே மேம்படுத்திக் கொள்ளாத போது அன்றைய தினமும் அடுத்த தினமும் எனக்குத் தனிப்பட்ட முறையில் உற்சாகம் அளிப்பதாகவே இருக்காது. இதை நான் பல முறை கவனித்துள்ளேன். 

இதற்கென கிண்டிலில் சில புத்தகங்கள் வைத்திருப்பேன்.  

நீங்கள் அலைபேசி பயன்படுத்துபவர் எனில் அதை மட்டுமே எல்லாவற்றுக்கும் பயன்படுத்துபவர் எனில் உங்கள் மனோபாவம் விரைவில் மாற வாய்ப்புண்டு. மனோபலம் விரைவில் குறையும். நான் இதனைப் பலவிதங்களில் யோசித்து ஆராய்ந்து அனுபவித்த பின்பே எழுதுகிறேன்.

தள்ளிக் கொண்டே , நகர்த்திக் கொண்டே, பட்டும் படாமல், படங்களை மட்டும், ரீல் மட்டும் ரசித்து என்று பலவிதமான வினோத குணாதிசயங்கள் உருவாகி கடைசியில் உங்களை உருக்குலைத்து உங்களின் தனிப்பட்ட திறமைகளை விரைவில் காவு கொடுக்க வேண்டும். பொறுமை இருக்காது. இறுதியில் மனித உறவுகளின் அருமை புரியாது.

எவர் எதை உங்களுக்கு அனுப்பினாலும் அதற்கு நேரம் ஒதுக்கி நிதானமாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். பதில் சொல்ல வேண்டும் என்றால் ஏதோவொரு வழியில் தெரியப்படுத்துங்கள். தவறாக இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள்.  

தேவையில்லாதவர்களை தடை செய்ய யோசிக்காதீர்கள். உங்கள் நேரம் உலகத்தில் மிக உயர்ந்தது என்பதனை நினைவில் வைத்திருங்கள்.

கோவையில் இப்போது மாணவி பாலியல் கொடுமையில் கைது செய்யப்பட்ட ஆசிரியரைப் போய் தனிப்பட்ட முறையில் கேட்டுப் பாருங்கள். அவன் உலகத்தில் வாசிப்பு என்பதே இருந்து இருக்காது. ஆனால் காலக் கொடுமையில் அவனும் ஆசிரியராக வர நம் சமூகம் அனுமதியளித்து உள்ளது என்பதனையும் கவனத்தில் வைத்திருங்கள்.   எனவே தான் சொல்கிறேன். தினமும் அரை மணி நேரமாவது எதையாவது உருப்படியாக அறிந்து கொள்ளப் புரிந்து கொள்ள கற்றுக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். உடனே இதனால் பணம் வருமா? என்று கேட்காதீர்கள். 

நீங்கள் வாழும் போதே பிணமாக நடமாடாமல் இருக்க உதவும் என்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பி வாசிக்கும் பேஸ்புக் நண்பர்களின் எழுத்துக்களை பேஸ்புக் அல்கரிதம் ஒவ்வொரு முறையும் முழுமையாக உங்கள் பக்கத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் பேஸ்புக் உள்ளே வந்தால் நீங்கள் விரும்பக்கூடிய குறிப்பிட்ட நபரில் ப்ரொபைல் சென்று படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக கடந்த சில தினங்களில் என்ன எழுதி உள்ளார்? என்று பார்த்து உணர்ந்து படிக்கும் பழக்கத்தை இனிமேலாவது வளர்த்துக் கொள்ளுங்கள்.

எழுதுவது என்பதும் தொடர்ந்து எழுதுவது என்பதும் அதுவும் உருப்படியான ஒழுங்கான விசயங்களை எழுதுவதென்பது எத்தனை கடினம் என்பது வாசிப்பவர்கள் உணர்ந்து இருக்க வேண்டும்.  நான் பொழுது போக்க மட்டும் தான் இங்கு வருகின்றேன். உன் அறிவுரை தேவையில்லை என்று சொல்பவர்கள் பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை.  

அவர்கள் விரைவில் காட்சிப் பொருளாக மாறத்  தங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என்று அர்த்தம்.

அன்புள்ளம் கொண்டோரே, வாட்ஸ்அப் செயலி என்பது உங்களைப் பொறுத்தவரையிலும் பொழுது போக்கு என்பதற்காகப் பயன்படுத்துவதாகவே எனக்குத் தெரிகின்றது.  எதை யாருக்கு எப்போது ஏன் அனுப்ப வேண்டும் என்பதனை ஒன்றுக்குப் பலமுறை யோசித்து அனுப்புங்கள்.  நீங்கள் காலையில் காலை வணக்கம் சொல்லாவிட்டால், ஷேர் செய்யுங்கள் என்ற தகவலை அனுப்பி இந்தச் சமூகத்தைக் காக்காமல் போய் விட்டால் ஒன்றும் குடி முழுகி விடாது.  அடுத்தவரின் அலைபேசியில் உள்ள இடத்தை நீங்கள் அனுப்புகின்ற செய்திகள் நிரம்பி அவரை செயல்பட முடியாத அளவுக்கு தவிக்க விடுகின்றீர்கள் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள். 

கூடிய சீக்கிரம் ஒவ்வொருவரும் அலைபேசியில் உள்ள குப்பைகளை அழிக்க ஒரு நபரை வேலைக்கு வைக்க வேண்டும் என்கிற அளவுக்கு மனிதர்களின் மனோபாவம் மோசமாக போய்க் கொண்டே இருக்கின்றது.

கு. அண்ணாமலை எனும் நான்/ ஜோதி கணேசன்

கு, அண்ணாமலை எனும் நான் / ஜோதி கணேசன் (பகுதி 2)

இறுதியாக 

நான் எப்போதும் தாங்கள் வாழும் காலத்தில் சிறப்பான சேவைகள் செய்து கொண்டு வருபவர்களைக் கவனித்து அவர்களை அரங்கத்திற்குத் தெரியப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளேன். அதிலும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போன்றே வாழும் மனிதர்களைக் கடவுளுக்குச் சமமாகவே பார்ப்பேன்.   இதில் முக்கியமானவர் நீச்சல் காரன் என்ற ராஜாராமன். Neechalkaran Raja

ராஜாராமன் இணையத் தமிழ் மொழிக்குச் செய்த சேவை என்பது ஏராளம். எடப்பாடி ஆட்சியில் பரிசும் அங்கீகாரமும் வாங்கினார். மத்திய அரசு வழங்கும் அளவிற்கு அதிகப்படியான சேவைகள் செய்து உள்ளார். செய்து கொண்டு இருக்கின்றார். கீழே கொடுத்துள்ள இணைப்புக்கு 60 க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களிலிருந்து திரட்டப்பட்டத் தலைப்புச் செய்திகள், அதன் சுருக்கம் உங்கள் விரல் அசைவில் வந்து நிற்கும். அதனைச் சொடுக்கினால் அந்த குறிப்பிட்ட செய்தியை முழுமையாக வாசிக்க முடியும்.

நிச்சயம் உருப்படியான செய்தியை முழுமையாக படித்த திருப்தி உருவாகும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வாணி, நாவி, ஆகியவை சிறப்பு என்றால் சுளகு முதன்மை எனலாம்...

எழுத்துகளால் கட்டமைக்கப்பட்ட கணக்கு நூலான திருக்குறள் கணக்கியல் ஆய்வில், சுளகு பற்றி அறிவதற்கு முன் Ms Excel பயன்பாடு தான்... இப்போது கணினியில் Google சொடுக்கினால், முதலில் சுளகு தான் திறக்கும்...! பலவற்றை எளிதாக கணக்கிட உதவுகிறது...

அவரிடம் இந்த திருக்குறள் கணக்கியலைப் பற்றி சொல்லி இருந்தேன்... இப்படி இருந்தால் கணக்கிடுவதற்கு எளிதாக இருக்கும் என்றேன்... அதற்காக செய்தாரோ தெரியவில்லை, கூடுதலாக சில பொத்தான்களை சேர்த்துள்ளார்... அதன் பயன் கணக்கிலடங்கா...!

தமிழ்க் கணினியன் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்...