Wednesday, September 15, 2021

கூட்டு முயற்சிகள் பெரும் வெற்றிகளைத் தரும்.

நான் இனி நாமாக மாறுவோம்

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக்  குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும்  வணக்கம்.

‌எப்படி இருக்கிறீர்கள்.?எனக்குத் தொடர் பயணம், நேற்று பகல் வரை திருச்சி, மாலை சென்னை, இப்ப மயிலாடுதுறைக்குக் கிளம்பும் முன், உங்களுடன் ஒரு சில  வார்த்தைகள் பாசத்துடன் பகிர வந்துள்ளேன்.

என் முதல் கடிதத்திலேயே சொல்லியிருந்தேன் " நான்" என்பது அகந்தையின் வெளிப்பாடு... இந்த நான் என்ற எண்ணம் நாம் ஆக மாறினால் அந்த மாற்றம் ஒரு மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கும்.

அரசியல்ல எப்பவுமே தனிநபர் வெற்றியை விட, ஒரு தனிநபர் சாதனையை விட, ஒரு குழுவின் வெற்றி... 

ஓர் அணியின் வெற்றி... ஒரு பிரிவின் வெற்றி... மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது புதிய தத்துவம் இல்ல. 

இதையேதான் தேசியத் தலைவர்கள் சப்கே சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ் என்ற தாரக மந்திரத்தை  முன்னிறுத்தி வைத்தார்கள்.

நான்கு சொற்றொடரும், ஹிந்தி மொழி புரிந்தவர்களுக்குத் தெரியும், மிகப் பெரிய மந்திர வார்த்தைகள்.

அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அப்படின்னு, முதல் இரண்டு சொற்றொடர்களுக்கு 

எல்லாருக்கும் ஒரு மேம்போக்கான அர்த்தம்  தெரியும். இது முதல் இரண்டு சொற்றொடர்களோடு முடிகிறதில்லை நான்குமே ஒன்றுக்கொன்று இணைந்த பிணைந்த வார்த்தைகள்...

தமிழில் சரியாக சொல்றதுன்னா அனைவரும் இணைவோம்... எதற்காக இணைவோம் அனைவரின் உயர்வுக்காக... எப்படிப்பட்ட உயர்வு அனைவரின் நம்பிக்கை பெற்ற...

எதனால் நம்பிக்கை?

அனைவரின் கூட்டு முயற்சியால்...

இதை தமிழில் சொல்லவேண்டுமென்றால்,

தலைகீழா எடுத்துக்கொள்ளவேண்டும்

"அனைவரும்  கூட்டு முயற்சியால், எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்று, அனைவரின் வளர்ச்சிக்காக மேன்மைக்காக, அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்படுவோம்"

இது அரசியல் கட்சி நடத்துவதற்கான சூத்திரம் இல்லைங்க. ஒவ்வொரு தனி மனுஷனும் கற்றுக் கொள்ளவேண்டிய வெற்றித் தந்திரம். குடும்பத்தில், தொழிலில், வணிகத்தில், என்று வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தச் சொற்றொடரை நீங்கள் பயன்படுத்தி பார்த்தீங்கன்னா அப்போது உங்களுக்குப் புரியும். நமது தலைவர்கள் எவ்வளவு எளிமையா ஒரு வெற்றி தந்திரத்தை நமக்குக் கொடுத்து இருக்காங்கன்னு.

அனைவரும் இணைவோம் என்ற ஒரு விஷயம் சாதாரண விஷயமா? 

ஒரு மண்டல்ல ஒரு பூத்துல, ஒரு மாவட்டத்தில், பிரச்சினையே இல்லாமல் எல்லாரும் இணைந்து செயல்பட முடியுமா?  எத்தனை சிக்கல்கள் வருது? முன்னாள் தலைவர்களையும் பொறுப்பாளர்களையும் நாம எத்தனை பேர் இணைத்து செயல்படுகிறோம்?  ஒவ்வொரு மாவட்டத்திலும் அணிகளும், பிரிவுகளும், மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்பட முடிகிறதா?

ஒரு காரியத்தில் நமது வெற்றி பெற வேண்டுமானால்  நமக்கு வழிகாட்டக்கூடிய அறிவுரை சொல்லக் கூடிய பெரியோர்களை எல்லாம் நமது பக்கத்தில் நண்பராக்கி வச்சுக்கணும். 

அப்படி இருந்தால் நமக்கு அடைய முடியாத வெற்றியே கிடையாது. எல்லாம் ஜெயந்தான். இத நான் சொல்லலைங்க. நமது திருவள்ளுவர் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார்.

“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.”

அதாவது முன்னாள் தலைவர் அந்நாள் தலைவர், மூத்த தலைவர் என்று பேதம் பாகுபாடின்றி அவர்களை ஆலோசகர்களாக நண்பர்களாக நம் அருகில் வைத்திருக்க வேண்டும். நம்மைப்போலவே மற்றவர்கள் சிந்தனைகளும், நமது சிந்தனை மாதிரியே இருக்கவேண்டுமென்று நினைக்கிறோம். சில எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கிறோம். எதிர்பார்ப்பு நடக்கலன்னா கவலைப்படுகிறோம். எதிர்பார்ப்பை வளரத்துகிறதுக்கு பதிலா நமது குழு, நமது குழு மேல்  நம்பிக்கை வளர்த்துக்கங்க.

தெளிந்து தேர்ந்த குழுவினருடன் நண்பர்களுடன், தாமும் நன்கு சிந்தித்து ஆராய்ந்து, சேர்ந்து, செய்ய வேண்டிய செயலைச் செய்தால் முடியாது என்ற செயலே ஏதுமில்லை. இதுவும் என் கருத்து இல்லைங்க.  வள்ளுவர் சொன்னது. 

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.”

கூட்டு முயற்சியின் வெற்றிக்கு ஓர் உதாரணம் சொல்லவா...

1959 ஆம் ஆண்டு மும்பையில், வயதில் மூத்த ஏழு பெண்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு, காலத்தைப் பயனுள்ளதாக போக்க என்ன செய்ய என்று யோசித்தார்கள். அந்த 7 பேரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு மொத்தம் 80ரூபாய் முதலீட்டில் அப்பளம் மற்றும் அப்பளப்பூ தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார்கள். அவர்களிடம் பெரிதாக பணம் இல்லை. தொழில் அனுபவம் இல்லை. கூட்டு முயற்சியில் நம்பிக்கை மட்டும் தான் இருந்தது. அந்த அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தின் தற்போதைய பெயர் "லிஜ்ஜட் பாப்பட்" சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி வர்த்தகம் மட்டும் செய்யும், ஃபார்ச்சூன் நிறுவனமாக பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் வயதான தாய்மார்களின் கூட்டு முயற்சியால் வெறும் 80 ரூபாயில் தொடங்கப்பட்டது.

வணிகம், வாழ்க்கை, அரசியல், இப்படி எந்தத் துறையாக இருந்தாலும், அதில் தன்னலம் இல்லாத பொதுநலம், தடுமாற்றம் இல்லாத நம்பிக்கை, குறைகள் இல்லாத கூட்டு முயற்சி  இருந்தால் வெற்றி நிச்சயம்.  அதிலும் நான் என்பது நாம் ஆக மாறும்போது தொடங்கப்படும். கூட்டு முயற்சிகள் பெரும் வெற்றிகளைத் தரும். 

அன்புடன்

உங்க அண்ணா...   

Annamalai Kuppusamy

#பாஜகதமிழகதலைவர்அண்ணாமலைஅவர்களின்கடிதம் 5

No comments: