'மராட்டிய மண்ணில்
நான் தேடிய தமிழர்கள்...!'
பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....
அனைவருக்கும் வணக்கம்.
Podcast (செய்தியோடை) வழியாக அண்ணாமலை அவர்களின் பேச்சைக் கேட்ட இதனை சொடுக்கவும்.
பாஜக தமிழக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் ஓரே நாடு இதழில் தொண்டர்களுக்கு தினமும் ஒரு கடிதம் எழுதி வருகின்றார். இது கடிதம் எண் 15.
வாசிக்க... யோசிக்க.. களப்பணியாற்ற
Podcast (செய்தியோடை) வழியாக முழுமையான கடிதத்தை ஒலி வடிவில் கேட்க இதனை சொடுக்கவும். பாஜக தொண்டர்கள் அனைவரும் இதனை கேட்க வேண்டும், கடிதத்தை வாசிக்க வேண்டும் என்பதே தலைவரின் விருப்பம்.
Listen to "'மராட்டிய மண்ணில் நான் தேடிய தமிழர்கள்...!'(BJP Anna Letter-15)" by ஜோதிஜி பேச்சு JothiG Pechu. https://anchor.fm/jothig/episodes/BJP-Anna-Letter-15-e181ke9
தமிழ்நாட்டில் நான் தேடிய தமிழர்களைச் சந்தித்தேன்,
மராட்டிய மண்ணில்…
மகத்தான இந்தியர்களை மத்தியப்பிரதேசத்தில் சந்தித்தேன்.
கடந்த இரண்டு நாட்களாக நான் மகாராஷ்டிர மாநிலத்திலும், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பயணங்களை மேற்கொண்டு இருந்தேன். பிற மாநிலங்களுக்குச் செல்லும் போதெல்லாம் நம்முடைய செயல்பாடுகளோடு அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஒப்பீடு செய்ய நான் தவறுவதில்லை.
விமான நிலைய வரவேற்பு முதல், அழைத்துச் செல்லும் வழி எங்கும் இருக்கும் விளம்பரம், பதாகைகள், சுவரொட்டிகள், விழா அரங்கம், மேடை அமைப்பு, நிர்வாகிகளின் செயல்பாடு, காலம் தவறாமை, என்று ஒவ்வொரு நிகழ்விலும் ஏதாவது ஒரு பாடம் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆகவே விழிகளையும் செவிகளையும் கூர்மையாக்கி கூடுமானவரைப் புதியனவற்றை எல்லாம் பற்றிக் கொள்வது என் வழக்கம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை நகரில் ”தாராவி” ஒரு சின்ன தமிழ்நாடாக அல்லது தமிழ்நாட்டின் சின்னமாக சுறுசுறுப்புடன் இருக்கிறது. மிகக் குறுகலான தெருக்கள் ஆனால் அகம் விசாலமான மனிதர்கள். மக்களெல்லாம் பறக்கும் விமானத்தின் வாலைப் பற்றியது போலப் பறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அத்தனை அவசரத்திலும் தமிழ் மொழிக்காக, தமிழ் மண்ணிற்காக, தமிழ் மக்களுக்காக, பல்வேறு பணிகளை மிகச் சிறப்பாக அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திராவிடம் பேசும் மண்ணில், மதச்சார்பற்றவர்களின், ஆலய மறுப்பாளர்களின் அறுபது ஆண்டுகால ஆட்சியில், மதத்தாலும் இனத்தாலும், சாதியாலும், மக்கள் திட்டமிட்டு பிரித்தாளப்படுகிறார்கள், ஆனால் மராட்டிய மண்ணில், தமிழர்கள் அத்தனை பேரும் தமிழர்களாக வாழ்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனைகளுக்கு மத்தியில் தமிழ்ச்சேனை நடத்தி, வெற்றிகளைக் குவிக்கும், கேப்டன் R.தமிழ்ச்செல்வன் MLA, அவர்கள் இரண்டாம் முறையாக நம் பாஜக சார்பில் சட்ட மன்ற உறுப்பினராகி இருக்கிறார். அவர் மிகச்சிறப்பாக ஒரு கொடி ஏற்று விழாவினை விரிவாக செம்பூரில் திட்டமிட்டிருந்தார்.
மராட்டிய சாம்ராட், வீர சிவாஜி விளைந்த மண்ணை வணங்கி, செம்பூரில் திரண்டு வந்த செந்தமிழர் படை நடுவே, அம்பேத்கர் நகர் வார்டு 149 இல் கட்சிக்கொடி ஏற்றி வைத்தேன். அயராத உழைப்பினால் அடையாளம் படைத்த அருமை தமிழ் உறவுகள் வாழும் தாராவியின் அன்பில் திளைத்து அவர்களுடன் உரையாடியது மன நிறைவு.
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் பெயரில் அமைந்து, நெடுங்காலமாக நடைபெறும் மேல் நிலைப்பள்ளி மற்றும் இளையார் கல்லூரிக்கு நேரில் சென்றேன் பெருந்தலைவர் சிலைக்குப் பெருமையுடன் மாலை சாற்றினேன்.
தமிழ் வழியில் படிக்க, தமிழ் வழியில் கல்வி கற்க, பல பள்ளிகள் மும்பையில் இயங்குகின்றன. மராட்டிய மாநிலத்தில் தமிழ் வழியில் கல்வி கற்க முடியும், தமிழ்நாட்டுப் பாடநூல் வழியில், மும்பையில் பயிலமுடியும் என்பது வியப்பான செய்தி.
மும்பை பாஜக தென்னிந்தியர் பிரிவின் தலைவர் திரு.முத்து கிருஷ்ணன், TN BJP SC அணி துணைத் தலைவர் திரு.ஷண்முகப்ரியன் உடன் இருக்க கடின உழைப்பால் காலூன்றி நிற்கும் கனக தமிழ் உறவுகளுடன் கலந்துரையாடி களங்கமில்லா அவர்கள் அன்பிலே கண்கள் பனித்தது. நெஞ்சம் இனித்தது.
தி சௌத் இந்தியன் எஜூகேஷன் சொசைட்டி மற்றும் மகாராஷ்டிரா தமிழர் நல கூட்டமைப்பு இணைந்து நடத்தும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர், மூத்த பாஜக தலைவர், திரு.ராம் நாயக் அவர்கள் எழுதிய "முன்னேறிடு முன்னேறிடு" என்ற தமிழ் நூல், அதாவது அவரே எழுதிய ”சரைவேதி! சரைவேதி!” என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா, முன்னாள் மராட்டிய முதல்வர் திரு.தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள் தலைமையில், மும்பை பா.ஜ.க. துணைத்தலைவர், கேப்டன் R.தமிழ்ச்செல்வன் MLA, அவர்கள் முன்னிலையில், சாணக்ய வார்த்தா, இதழ் ஆசிரியர் Dr.அமித்ஜெயின் ஆகியோருடன், மும்பையின் பிரம்மாண்டமான பழமையான தமிழர்கள் படைத்த ஸ்ரீ சண்முகானந்த அரங்கத்தில், சிறப்பு அழைப்பாளராக நானும் கலந்து கொண்ட போது சுகமான தமிழ்ச் சங்கமம், வேற்று மண்ணில் இருக்கும், உணர்வே வரவில்லை.
நம் தமிழ் மண்ணில் பிற இந்திய மொழிகளைத் தீவிரமாக எதிர்க்கும் மன நிலையை சில சுய நல சக்திகள் உருவாக்கிவிட்டன. ஆனால் மராட்டிய மண்ணில் நம் மொழிக்கு அவர்கள் தரும் மரியாதை கண்டு கொஞ்சம் கூசிப்போனேன். பிற இந்திய மொழிகளைப் போற்றுவதால் தங்கள் மொழி அழிந்துவிடும் என்று அவர்கள் அஞ்சவில்லை.
மராட்டிய மாநில பா.ஜ.கவின் தமிழர்களுக்கான பிரிவு வெற்றிகரமாக இயங்குகிறது. நான் கண்டு மகிழந்த செய்தி, அவர்கள் பெயரில் இருக்கும் பிரிவு, மனத்தில் இல்லை. மராட்டிய பாஜகவில் தென்னிந்தியப் பிரிவு எம்எல்ஏக்களை உருவாக்கும் பலம் மிக்கது. மும்பையில் தான் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். சப்கே-சாத், சப்கா-விகாஸ் இதற்கு நேர் பொருளாக விளங்குபவர்கள் மும்பை தமிழர்களே.
மும்பை தாதர் பாஜக அலுவலகத்தில் தென்னிந்தியப் பிரிவின் நிர்வாகிகள் கூட்டம் அமைப்பாளர் மும்பை தென்னிந்தியப் பிரிவின் அமைப்பாளர் முத்து கிருஷ்ணன் அழைப்பில் நானும், பாஜக மும்பை தலைவர் திரு லோதா அவர்கள் MLA, வடக்கு மும்பையின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஐ.கோபால் ஷெட்டி, சியோன் கோலிவாடா தொகுதியைத் தன் கோட்டையாக்கித் தொடர் வெற்றிகளைக் குவிக்கும் கேப்டன் R.தமிழ்ச்செல்வன், எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொள்ள, கூட்டம் களை கட்டியது. தாதர் பாஜக அலுவலகத்தில், தமிழ்த் தென்றல் வீசியது.
ஆக இந்த மும்பைப் பயணம் எனக்கு ஒரு மறக்க முடியாத படமாக மனத்தில் பதிந்தது, பாடமாக அறிவில் பொதிந்தது.
அங்கிருந்து அவசரமாக நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்து அடுத்த நாள் காலையில், நான் மத்தியப்பிரதேசம் போபால் சென்றேன்.
போபால் இந்தியாவின் மையப்புள்ளி, பழமையான பசுமையான நகரம், அங்கே நம் முன்னாள் மாநிலத்தலைவர், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு L.முருகன் அவர்களின் மாநிலங்களவைத் தேர்தல் நாள். போட்டியில் வேறு யாரும் இல்லாததால் போட்டியின்றி நம் அமைச்சர் தேர்வானபோது, மொத்த மத்தியப்பிரதேச பாஜகவினரும் திரண்டு வந்து வாழ்த்தினார்கள்.
பிற மாநிலத்தவருக்கு நம் ராஜ்யசபைப் பதவியை வழங்கி விட்டார்களே என்ற எண்ணம் எவருக்கும் இல்லை. பாஜகவின் உரிமை பாஜகவுக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆவலும் மகிழ்ச்சியும் மன நிறைவும் வெளிப்படையாக தெரிந்த போது, நானும் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டேன், இப்படி தமிழகத்தில் நடந்திருந்தால் ஊர் பேச்சும், ஊடக வீச்சும் எப்படி இருந்திருக்கும்.
அதுவும், முன்னர் பா.ஜ.க. தலைவர் திரு.திருநாவுக்கரசர் (தற்போது காங்கிரஸ்)அவர்களுக்கும், பிறகு மூத்த தலைவர் திரு.இல.கணேசன் அவர்களுக்கும், தற்போது மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு L.முருகன் அவர்களுக்கும் என்று கடந்த மூன்று முறையாக தொடர்ந்து தமிழர்களுக்கு மத்தியப் பிரதேசத்திலிருந்து போட்டியிட வாய்ப்புக்களை அம்மாநில பாஜகவினர் மகிழ்ச்சியுடன் வழங்குவதை எப்படிப் போற்றுவது! இதுதானே தேசத்தின் ஒருமைப்பாடு, இதுதானே வேற்றுமையில் ஒற்றுமை, இதுதானே உண்மையான ஜனநாயகம். இதுதானே ”ஒரேநாடு”க்கான வெற்றி.
அன்புச் சகோதரன்
உங்க "அண்ணா".
No comments:
Post a Comment