Wednesday, September 22, 2021

'ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர்

 'ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர்

உள்ளாட்சித் தேர்தல்'

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... 

அனைவருக்கும் வணக்கம்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி முதல் தேர்தல் நடைபெற இருக்கிறது. நமக்கெல்லாம் தேர்தல் என்பது ஒரு தேர்வுக் களம் போல, முக்கியமானது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஒரு தேர்வுக்குத் தயாராவது போல நாமெல்லாம் தயாராக வேண்டும் மிகக் கவனத்துடன் அந்தத் தேர்வு எழுத வேண்டும் பிறகு முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதில் சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தல்கள் எல்லாம் பொதுத்தேர்வு போலவும் மற்ற உள்ளாட்சி ஊராட்சித் தேர்தல்கள் எல்லாம் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் போலவும் நினைக்கக் கூடாது. 

Listen to " 'ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர் (BJP Anna Letter - 10)" 

https://anchor.fm/jothig/episodes/BJP-Anna-Letter---10-e17mqng/a-a6iisod

தேர்தல் களம் எல்லாத் தேர்தல்களிலும் பொதுவானது. மக்களை நம் சின்னத்தில் வாக்களிக்க வைக்க வேண்டிய மாபெரும் கடமை அனைத்துத் தேர்தல்களிலும் நாம் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான கடமையாக இருக்கிறது. 

அதிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒவ்வொரு இல்லந்தோறும் நாம் சென்று மக்களை நேரில் சந்திக்கக் கூடிய வாய்ப்பினை வழங்கக்கூடிய தேர்தல். இந்த உள்ளாட்சித் தேர்தலில்தான் கட்சித் தலைவர்களும் ஊடக விளம்பரங்களும் செய்வதைவிட அந்த ஊரின் தலைவர் மிக அதிகமாக செயல்படக்கூடிய வாய்ப்பினை வழங்கும் தேர்தல்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களின் மொத்த வாக்காளர்கள் 76,59,720, இதில் செங்கல்பட்டில் 11,54,933 வாக்காளர்கள், விழுப்புரத்தில் 13,83,687 வாக்காளர்கள். மற்றும் 9,61,770 வாக்காளர்களைக் கொண்டுள்ளது கள்ளக்குறிச்சி.

மற்றபடி இதர ஆறு மாவட்டங்களிலும் தோராயமாக ஆறு, அல்லது ஏழு இலட்சம் வாக்காளர்களே உள்ளனர். ஆகவே தோராயமாக ஒரு மாவட்டத்திற்கு எட்டு இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

என் சகோதர, சகோதரிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது மாவட்டத் தலைவர்களும் மண்டல் தலைவர்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அணி, பிரிவு தலைவர்களும் ஒன்று கூடி பணிகளைத் திட்டமிட்டுப் பட்டியலிட வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தேவையான பணிக் குழுவை அமைக்க வேண்டும். அந்த மாவட்டங்களுக்கு உள்ள ஒவ்வொரு ”பூத்”தின் முழு வாக்காளர் பட்டியலும் மண்டல அலுவலகத்தில் தயாராக இருக்க வேண்டும். இப்போது ஊர் மக்களிடம், நம் கட்சியை எடுத்துச் செல்லவும், நல்லன சொல்லவும், பூத் பொறுப்பாளர்களும் வாக்காளர் பக்க பொறுப்பாளர்களும், மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டிய, இன்றியமையாத பணியைச் செய்யவேண்டிய காலம் இது.

வெகுவிரைவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் நேரில் வந்து உங்கள் அனைவரையும் சந்திக்க இருக்கிறேன். நான் உங்களையெல்லாம் வந்து சந்திக்கும்போது அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்குறியோடு இல்லாமல் நீங்கள் என்னென்ன செய்து முடித்து இருக்கிறீர்கள் என்ற பட்டியலைத் தயாராக வைத்திருங்கள். உங்கள் மாவட்டத்தில் உங்கள் பலத்தையும் செல்வாக்கையும் நிரூபிக்க இதை விட மிகச் சிறந்த களம் இருக்கவே முடியாது. 

பொதுவாக ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சியினர்தான் அதிகமான வெற்றியைக் குவிப்பார்கள் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்சி பலத்தினாலும் அதிகார பலத்தினாலும் பண பலத்தினாலும் தேர்தல் முடிவுகளைத் தன்பக்கம் சாதகமாக திருப்பிவிடும் வாய்ப்பு, ஆளும் கட்சிகளுக்கு இருப்பதை நான் மறுக்கவில்லை ஆனால் இதை நம்மால் முறியடிக்க முடியும் என்று நம்புங்கள். ஆளும் கட்சி தான் அதிக வெற்றிகளைக் குவிக்கும் என்ற நம்பிக்கையை அவநம்பிக்கை ஆக்குங்கள். 

இது உங்கள் மாவட்டம். இது உங்கள் பகுதி. ஒவ்வொரு வாக்காளரையும் உறவு சொல்லி அழைக்கும் வகையில் நீங்கள் எல்லோரும் உங்கள் தொடர்புகளை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். மத்திய அரசின் மக்கள் நலம் பயக்கும் திட்டங்களையெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். சரியான திட்டமிடலும், சரியான ஒருங்கிணைப்பும், சரியான செயல் வடிவமும், வெற்றியை உறுதி செய்யும். 

எந்த மாவட்டத்தில் களப்பணியில் இருக்கிறவர் தன்னை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் தன் குழுவை முன்னிலைப் படுத்துகிறாரோ அங்கே நம் வெற்றி உறுதி செய்யப்படும்.  உள்ளாட்சித் தேர்தல்  ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர்... ஒற்றை மனிதன் எத்தனை பலசாலியாக இருந்தாலும் தேர் நகராது. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு ஒன்றும் ஒன்றும் பதினொன்று. ஆகவே நாம் ஒன்று ஒன்றாக தனித்தனியே நில்லாமல் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றாக நின்றால் 1+1=11 என்று நம் மதிப்பு கூடும். 

அனைவரும் இணைவோம், அனைவரும் முயல்வோம், அனைவரும் நம்புவோம், அனைவரும் உயர்வோம்,

பாடுபட்டால் பலனுண்டு. 

அன்புச் சகோதரன்

உங்க "அண்ணா"