கட்சியாக இருக்கும் போது செய்ய வேண்டிய அரசியல், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு செய்யும் அரசியல் என இந்த இரண்டையும் நீங்கள் புரிய முற்பட்டால் உங்களிடம் பதட்டம் இருக்காது.
தொழில் செய்பவர்களுக்கு லாபம் தான் முக்கியம். அரசியல்வாதிகளின் இறுதி இலக்கு அதிகாரம்.
இரண்டு இடங்களிலும் கொள்கை தேவை. ஆனால் நூறு சதவிகித அக்மார்க் சுத்தமான நயமான கொள்கை என்று நம்பாதீர்கள்.
ஆனால் அந்தக் கொள்கை நிகழ்காலத்தோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். பெருவாரியான மக்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். மக்கள் தவறுதலாக யோசிக்கின்றார்கள் என்றாலும் கூட அதிக நம்பிக்கை உள்ள மக்கள் விரும்பும் விசயங்களை எவரும் கை வைக்க விரும்ப மாட்டார்கள் என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும்.
தமிழக பாஜக கட்சிக்கு அண்ணாமலை அவர்கள் பதவிக்கு வந்ததும் ஏராளமான அறிவுரைகள், ஆலோசனைகள் இணையத்தில் வந்து கொண்டே இருக்கின்றது.
பெருவாரியான கருத்துக்கள் கட்சி இந்தப் பாதையில் தான் செல்ல வேண்டும் என்பதாகவே முடிகின்றது. அவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் எனக்கு வியப்பூட்டுவதாகவே உள்ளது. மக்களின் மனோநிலை, தற்போதைய மக்களின் மாறிய சிந்தனைகள் எதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவே இல்லை என்பதாகவே தெரிகின்றது.
தமிழ் நாட்டில் 1949 முதல் 71 வருடம் வயதுள்ள ஓர் ஆலமரம். 50 வருடங்கள் அதிகார உரம் போட்டு போஷாக்கு சத்து, பல வித சக்தியுடன் வளர்க்கப்பட்ட ஆலமரத்தின் ஆணி வேர் எதை உறிஞ்சி வளர்ந்தது என்றால் சிறு குழந்தைகள் பதில் சொல்லும். பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைச் சொல் மட்டுமே.
இதன் மூலம் காங்கிரஸ் என்ற மற்றொரு ஆலமரம் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. கூடவே தங்களை எவராலும் அசைக்கவே முடியாது என்று நம்பிக்கையில் இருந்த நிலச்சுவான்தார்கள், ஜமீன்தார்கள், பணம் படைத்தவர்கள் என்ற மூன்று பெரிய பல நூற்றாண்டுக் கால ஆலமரத்தை விழுங்கி இன்று திராவிட அரசியல் என்ற பெயரில் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. எது வேர்? எது விழுது? என்று உங்களால் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது.
பெரியார் திமுக வை வளர்க்கவில்லை. வளர்க்க விரும்பவில்லை. காரணம் இவர்களை அவர் தொடக்கம் முதலே நம்பவே இல்லை. இவர்களும் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை என்பதனையும் கவனத்தில் வைத்திருங்கள். ஆனால் அவர் தான் எங்கள் தலைவர் என்ற மேம்போக்கு பேச்சின் மூலம் அவர் பேசிய எதையும் பொருட்படுத்தாமல், அவர் எதிர்க்காமல் தந்திரமாக நகர்ந்து வந்து தங்களுக்குரிய இடத்தை அடைந்த பின்பு அவரையும் தங்கள் ஆட்டத்தில் ஒரு நபராக ஏற்றுக் கொண்டனர்.
அவரால் மறுக்க முடியாத அளவுக்கு அவர் விரும்பிய வண்ணம் செயல்பட்டு அவரையும் தங்கள் பங்குதாரராக மாற்றிக் கொண்ட கில்லாடிகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போது கூட இவர்கள் அவருக்கு முழுமையாக அங்கீகாரம் வழங்கவில்லை.
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தைச் சமாளிக்க வேறு வழியே தெரியாமல் பெரியார் நான்கு எழுத்தை கையில் எடுத்தனர். பெருங்காய டப்பாவில் பெருங்காயம் இல்லாத போதும் கூட அதன் வாசம் இருந்து கொண்டேயிருக்கும். அப்படித்தான் இன்று வரையிலும் பெரியார் என்ற வார்த்தையைத் தங்கள் வசதிகளுக்கேற்ப அங்கங்கே இவர்கள் தூவி, காட்டி சமூக நீதி சமையல் செய்து பரிமாறி வருகின்றனர்.
அரசியல் என்பது நான்கு திசைகளுடன் தொடர்புடையது அல்ல. அது நாற்பது திசைகள். நானூறு திசைகளுடன் தொடர்புடையது. எங்கு? எதனால்? எப்படி? ஏன்? மாறியது என்பது யாருக்குமே தெரியாது. காற்று அடிக்கும். சுவாசித்துக் கொள்ள முடியும். புழுக்கமாக இருக்கும். பொந்துக்குள் அமைதியாக இருக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு கட்சியின் அரசியல் பயணம் இருக்கும். இருந்தது. இருக்கின்றது. இனி வரும் காலங்களில் கூட இப்படித்தான் இருக்கும்.
தமிழகத்தில் கொள்கை என்று முழக்கமிட்டவர்கள் ஒரே கொள்கையின் பால் நகர்ந்து வந்து இருக்கின்றார்களா? என்று பாருங்கள். நிச்சயம் கிடையாது. அதிகாரம் அடையச் சிலவற்றை நீக்கி வைப்பார்கள். ஒதுக்கி வைப்பார்கள். மாற்றிக் கொள்வார்கள். மறுதலிப்பார்கள். மறுப்பார்கள். திடீரென்று ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள்.
இது அசிங்கமில்லையா? என்று உங்களுக்குத் தோன்றும். அரசியலில் தொழிலில் எதுவும் அசிங்கமில்லை என்பதனை நீங்கள் முதலில் உணர்ந்தால் மட்டுமே நீங்கள் அரசியல் குறித்து யோசிக்கவே தகுதி படைத்தவர் என்று அர்த்தம். எனக்கு டக் என்று கோபம் வந்து விடும். கட்சி செய்த வேலைகள் சரியில்லை. பேசிய கொள்கைகளுக்கும் இப்போது மாற்றிக் கொண்ட கொள்கைகளும் தொடர்பில்லை என்பது போன்று நீங்கள் பேசலாம். காற்றில் கலந்து பல கோடி தூசிகளில் நீங்களும் ஊசலாடும் ஒரு துகள் மட்டுமே. சமூகம் உங்களைத் திரும்பிக் கூடப் பார்க்காது. அதிகாரவர்க்கம் உங்களை அலட்சியமாகவே அணுகும்.
அதிகாரம் என்பது கோபுர வடிவம் போன்றது. மேலேறக் குறுகிய பாதை தான் இருக்கும். அறிமுகம் ஆகும் விசயங்கள் அனைத்தும் உங்களுக்குப் புதிதாக இருக்கும். இதில் பயணிக்க சிலருக்கு மட்டுமே காலம் அனுமதிக்கும்.
இலையுதிர் காலத்தில் சருகுகள் உதிர்வது போல உங்களிடம் உள்ள கொள்கைகளை உதிர்த்தால் மட்டுமே கோபுரத்தில் ஏற முடியும். உடன் இருப்பவர்கள் வர முடியாது. கொண்ட கொள்கைகளைச் சுமந்து கொண்டு மேலேற முடியாது. இறங்க மனமும் ஏற்றுக் கொள்ளாது. பிடிவாதமாக இருந்தால் நீங்கள் ஒதுங்க வேண்டியதாக இருக்கும்.
உங்களை மற்றவர்கள் அண்ணாந்து பார்க்கும் சூழல் வரும் போது நீங்கள் நம்பிய கொள்கைகள் அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டு மாறியிருக்கும். நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தெரிந்தால் களப் போராளியிலிருந்து அதிகாரத்தைக் கையாளத் தெரிந்த அரசியல் நிர்வாகத்தின் சூட்சமத்தை அறிந்தவராக மாறியிருப்பீர்கள். இல்லையெனில் உங்கள் அருகே இருப்பவர்கள் கூட மனதில் கழட்டி விட வேண்டிய முதல் நபராக நீங்கள் தான் இருப்பீர்கள்.
காலை எழுந்தது முதல் உங்கள் மனைவி, மகள், மகன், தகப்பன், தாய், உறவினர், நண்பர்கள் என்று பட்டியலிட்டு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை போல உங்கள் எண்ணம் நோக்கம் செயல்பாடுகள் அனைத்தும் எப்படியிருக்க வேண்டும் தெரியும்?
நேற்றைய முன் தினம் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் ட்விட்டரில் இறந்த ஸ்டான் சுவாமிக்கு ஏழெட்டு பெயர்களைப் போட்டு இவர்கள் அத்தனை பேர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஒருவர் மட்டும் செய்யவில்லை? யார் என்று சொல்ல மாட்டேன்? என்று எழுதி போட்டு இருந்ததை அதிகாலையில் முதல் செய்தியாகப் பார்த்தேன். நீங்கள் நம்ப மறுப்பீர்கள். அடுத்த 24 மணி நேரத்தில் இணையம் எங்கும் அதே செய்தி வெவ்வேறு விதமாக பரவி ஆக்கிரமித்து இறையாண்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதிமொழி எடுத்தவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் படத்தில் வந்து நிற்கின்றது.
எப்படி அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடிகின்றது? காரணம் உழைப்பு.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கோரத்தாண்டவம்
ஜெயலலிதாஅதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போது ஒருவர் கருணாநிதியிடம் சொல்கின்றார். "தலைவரே உங்கள் தகுதிக்கு இந்தப் பெண்மணியிடம் அரசியல் செய்ய வேண்டியுள்ளது என்பது எனக்கு வருத்தமாக உள்ளது" என்றார்.
வந்த பதில் என்ன தெரியுமா?
"அப்படி ராஜாஜி என்னை நினைத்து இருந்தால் இன்று நீ என்னிடம் வந்து பேசி இருப்பாயா"? என்றாராம்.
புரிகின்றதா? முதிர்ச்சி என்பது புத்தகங்கள் மூலம் படித்து கற்றுக் கொள்வதல்ல. அனுபவங்கள் மூலம் உணர்ந்து உள்வாங்கி அதுவாகவே மாறிவிடுவது.
இவர்கள் வந்து விடக்கூடாது? என்பதற்காகவே பல நூறு பேர்கள் கண் துஞ்சாது பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். காரணம் அவர்கள் ஆதரவுத் தளத்தில் செயல்படுகின்றார்கள் என்று நினைக்கக்கூடும். அது பாதி உண்மை. மீதி நான் விரும்பாத எவரும் இந்த அதிகாரத்தைக் கைப்பற்றி விடக்கூடாது என்ற அக்கறை அவர்களுக்கு நிஜமாகவே உள்ளது என்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.
நாம் எப்படிச் செயல்படுகின்றோம்?
இன்று நான் விரும்பும் கட்சிக்காக இந்தச் செய்தியைப் பலருக்கும் கொண்டு சேர்த்தேன். இந்தச் செய்தியை எந்த ஊடகமும் வெளியே கொண்டு வரவில்லை. நான் பொது தளத்தில் எழுதிப் பலரின் பார்வைக்குக் கொண்டு சென்றேன். என் சந்தில் இருப்பவர்களிடம் உரையாடும் போது, நடைபயிற்சியில் சந்தித்த புதிய நண்பர்களிடம் இன்று மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் பற்றிப் பேசினேன். எது உண்மை? எது பொய்? என்பதனை பொறுமையாகப் பேசி புரியவைத்தேன்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பலரும் கட்சிக்காக உழைக்கின்றார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பலருக்கும் அறிமுகம் செய்து வைப்பதைத் தினசரி கடமையாக செய்து வருகிறேன்.
இப்படி ஏதாவது ஓர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
இன்று மாற்று ஊடகம் ஏராளமாக உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் ஒரு பத்திரிக்கையாளர் என்பதனை நினைவில் வைத்திருங்கள். நான் பகிர்ந்து நான் பரப்பி என்ன ஆகப் போகின்றது? என்று நினைக்காதீர்கள்? 1008 கோடி மந்திரங்கள். 100008 மந்திரங்கள் என்று சொல்வதற்குக் காரணம் அந்த வார்த்தைகளில் நாம் விரும்பும் சக்தியை உருவேற்ற மட்டுமே என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும்.
பாறைகளைக்கூடச் சிறு உளி பிளக்க வாய்ப்புண்டு என்பதனை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.
பலனில் மீது பற்று வைக்காமல் கடமையைச் செய்தேன் என்ற நிலையை நீங்கள் அடைய வேண்டும். உங்களின் தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக ஒரு கட்சி இயங்காது. இயங்க முடியாது. சூழலுக்கு ஏற்ப அது மாற வேண்டும். மாற்றிக் கொள்ள வேண்டும். அது தான் அரசியல்.
உங்களுக்குப் புரியாவிட்டால் அமைதியாக வீட்டில் அமர்ந்து குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்ற முயலுங்கள்.
மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். வெற்று அரட்டைகளும், குப்பை ஆசைகளும் உங்களுக்குப் பெரிதாக தெரியும் விசயங்களும் ஓட்டுப் போடுகின்றவர்களுக்குத் தெரிய இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் நாம் காத்திருக்க வேண்டும்.
அலைபேசி பயன்படுத்தும் புதிய இளையர் கூட்டம் அரசியல் சக்தியைத் தீர்மானிக்கப் போகும் காலகட்டம் தான் இங்கே பெரிய பல மாறுதல்களை உருவாக்கப் போகின்றது என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
அவர்களுக்குப் பழைய வரலாறு என்பது குப்பை. தியாகம் என்பது வெற்று அரட்டை. அவர்களுக்கு எளிதான சுகமாக வாழ்க்கை வேண்டும். அதனை யார் தருகின்றார்களே அவர்கள் பின்னால் அணி வகுப்பார்கள்.
இப்படித்தான் இனி வரும் தமிழ்ப்பிள்கைள் இருப்பார்கள். இருக்கப்போகின்றார்கள்.
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. எந்தச் செயலும் மேலேறிக் கொண்டேயிருக்காது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஆதரித்தாலும், ஆதரிக்க மறுத்தாலும் இயற்கை சூட்சமத்தில் காலத்தை உங்களால் மாற்ற முடியாது. அது அதன் போக்கிலேயே அளவிட்டு நகர்ந்து கொண்டேயிருக்கும். முகங்கள் மாறும் என்பது இயற்கை விதி. மாற்றம் என்பது மட்டுமே மாறாத தத்துவம். எல்லாவற்றுக்கும் முடிவு ஒன்று உண்டு என்பதனை நம்புங்கள்.
நான் நம்புகிறேன்.
1 comment:
71 வருடம் சற்றே விழிப்புணர்வு எனலாம்... 2052 வருடத்திற்கு முன்பிலிருந்தே... காரணம் மனித எதிர்ப்பு அல்ல, அவர்களின் எண்ணங்கள்... தர்மம்/நீதி என உள்ளே நுழைந்து அறத்தை கூறு போட்டு தின்று கொண்டிருக்கிறது...
Post a Comment