Sunday, November 08, 2020

தரமான மூன்று விருந்துகள்.

செய்தி 1

முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிர்ந்து பேசாத நாகரிகமான அரசியல் தளத்தில் செயல்படக்கூடியவரைப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டென்சன் ஆக்கி விடப் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தென்னரசு அவர்கள் வெற்றி கொண்டான் பேசுவது போலப் பேசியதைப் பார்த்தேன். ஏற்கனவே பெருமாள் பிச்சையை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து வெசாயி தூக்க அது உள்நாட்டுக் குழப்பம் என்றும், மைனாரிட்டி சமூகத்தைக் கோபம் கொள்ளும் அளவிற்கு வாய்த் துடுக்காகப் பேசினார் என்று பத்திரிக்கைகளில் பொத்தாம்பொதுவாக செய்தி வந்தது. ஆனால் மேல்மட்ட நபர்களுக்குத் தான் உண்மை என்னவென்று தெரியும். அது (மணல் வியாபாரப் பங்கு பிரித்தலில் உண்டான குழப்பம்) பரம ரகசியம். 

இவரிடம் ஆவின் துறை சிக்கி சின்னாபின்னாபின்னாப்பட்டுக் கொண்டிருக்கிறது.  நான்கு சந்துக்கு ஒரு தனியார் பால் விற்பனை மையங்கள் 24 மணி நேரமும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆவின் விற்பனை மையங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது.  கடைசியாக வேலம்பாளையத்தில் கண்டு பிடித்தே விட்டேன். பண்டிகை தினங்களில் ஒரு கிலோ நெய் அதிகமாக விற்பனை ஆகும். ஆனால் அதிகமாகக் கடைகளில் இல்லை. 

அரை லிட்டர். 100 மில்லி போன்ற உதிரிப் பாகங்களை வைத்துக் கொண்டு தான் ஒப்பேற்றுகின்றார்கள். ஆவின் ஒரு கிலோ நெய் விலை ரூபாய் 515. ஆனால் அரை கிலோ 265 (இரண்டு வாங்கினால் ரூபாய் 530) நமக்கு ரூபாய் 15 நட்டம். ஆனால் ரிலையன்ஸ் கடைகளில் ஆவின் எப்போதும் தட்டுப்பாடு இல்லாமல் எல்லாவிதமான அளவுகளிலும் கிடைக்கின்றது. ஒரு கிலோ என்பதே ரூபாய் 469. இரண்டு கிலோ வாங்குபவர்களுக்கு ஏறக்குறைய நூறு ரூபாய் மிச்சம். தேர்தல் வரப் போகுது. மிச்சம் சொச்சம்ன்னு நீங்க பேசிட்டு போயிடுவீங்க. பிச்சை பெருமாள் வெளியே போய் பிச்சை எடுக்க முடியுமா? என்று காற்றில் வந்த அசரீரி கேட்டது.

செய்தி 2

தனித் தமிழ் ஆர்வலர்களை இப்பொழுதெல்லாம்  எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. பாவம் அது அவர்களின் விருப்பம் என்றே எடுத்துக் கொள்வதுண்டு. காலநிதி மாறன் 1995க்கு பிறகு தமிழகத்திற்கு புதிய தமிழை அறிமுகப் படுத்தினார். அனிருத் என்பவன் இசையமைப்பாளர் என்ற போர்வையில் தமிழை ஆழக் குழி தோண்டி புதைத்தே விட்டான்.  

தினமும் தினசரிகளில் வரும் விளம்பர வார்த்தைகள் ஊன்றி கவனிப்பதுண்டு. அது மொழியல்ல. விபச்சாரம். நிஜ வாழ்க்கையில் தமிழ் மொழி எப்படியுள்ளது என்பதனை இன்று அசைவச் சந்தையை விரைவில் கைப்பற்றப் போகும் இணைய வர்த்தகம் உணர்த்தியது.

ஹாட்ரிக் விருந்து

ஒரே ஷாட்டில் மூன்று ப்ரெஷ்ஷான சுவையான பொருட்கள்.  ஆண்டிபயாடிக் ப்ரீ.  தரமான கோழிக்கறி, ப்ரெஷ்ஷான இறால்கள் மற்றும் வெள்ளாட்டுக்கறி காம்போ இந்த நம்பமுடியாத விலையில்.  இன்றைக்கு மட்டும் உடனே ஆர்டர் செய்யுங்கள்.

பரிமேலழகர் உரை.

தரமான மூன்று விருந்துகள்.

கிருமிகள் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட தரமான கோழிக்கறியுடன் இறால்கள் மற்றும் வெள்ளாட்டுக்கறி. நம்ப முடியாத விலை. துள்ளத் துடிக்க உயிர்ப்புடன் உண்ணும் போது நீங்கள் உணரும் சுவையில் எங்கள் தரம் புரியும். இதனை அனுபவிக்க இன்றே எங்களை அழைக்கவும்.

--------------

ஏன் திட்டுகின்றாய்? புலம்புகின்றாய்? நிச்சயம் மாற்றம் வரும்? இவர்கள் கொட்டம் நீடிக்காது என்று நண்பர்கள் உரையாடலின் போது சொல்கின்றார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நம்பியூர் நாயகன் கொடுத்த பேட்டியின் சுருக்கமிது.

"ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பள்ளி திறக்கப்பட்ட பின்பு கொரானாவால் பாதிக்கப்பட்டு பிரச்சனை உருவாகியிருக்கிறது என்றால் அது அந்த மாநிலப் பிரச்சனை. தாய்க்கிழவி அரசு அதனைக் கணக்கில் கொள்ளாது. இங்குள்ள சூழல் வைத்தே நாங்களே முடிவு செய்வோம்" என்றார்.

இவர்கள் பள்ளிகளைத் திறக்க துடியடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்? 

என்ன காரணம்?

வருகின்ற திங்கள்கிழமை பள்ளிக்குப் பெற்றோர்கள் வர வேண்டும். கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க இருக்கின்றது என்று பள்ளிக்கூட நிர்வாகம் அழைப்பு அனுப்பி உள்ளனர். ஏற்கனவே 16ந் தேதி பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பு வந்த போது உருவான எதிர்ப்பின் காரணமாக இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது.

இப்போது ஓர் ட்விஸ்ட்.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் என்ன சொல்வார்கள்? இறுதியாக அரசு என்ன முடிவெடுத்து 11ந் தேதி வெளியிடுவார்கள் என்பதற்கு அப்பாற்பட்டு இப்போதே பள்ளிக்கூடங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுக்க சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக ஒவ்வொரு அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குழப்பம் வர வேண்டுமே?

முடிவே செய்யாமல் ஏன் சுத்தம் செய்வதில் இத்தனை அவசரம்?

"ஒரு மாதம் மட்டும் திறக்க அனுமதிங்க. மாணவர்களுக்கு கொரானா நிச்சயம் வந்து விடும். பாதிப்பு உருவாகும். கூச்சல் குழப்பம் வரும். ஒரு மாதத்திற்குள் தனியார்ப் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இதுவரையிலும் கட்டாமல் டபாய்த்துக் கொண்டிருக்கும் பணத்தை நாங்கள் வசூல் செய்து விடுவோம். தேர்தல் நிதி தருவதில் எங்களுக்குப் பிரச்சனையில்லை. அப்புறம் எப்போதும் போல கொரானா காரணத்தைக் காட்டி மீண்டும் மூடி விடலாம்". 

இரண்டாவது அலையில் மாணவர்களின் உயிர்........

மனிதர்களின் கதை 4 - அதிர்ஷடம் மனிதர்களை மாற்றும்

மனிதர்களின் கதை 3 - தொழில் என்பது முதலைகள் வாழுமிடம்

மனிதர்களின் கதை -2 நம்பிக்கைத் துரோகம் நடத்தும் பாடமிது

மனிதர்களின் கதை - 1 உயிரைப் பறித்த சொந்த வீட்டுக் கனவுகள்

6 comments:

நரசிம்மன் said...

இப்போது கூட அரசாங்க உத்தரவுகளை அரசாங்க ஊழியர்களை கூட கடைபிடிப்பதில்லை எந்த பேருந்திலாவது ஏறிய உடன் கைகளுக்கு கிருமி நாசினி தருகிறார்களா 50 சதவீத பயணிகளோடு ஓடுகிறதா அனைவரும் நெருக்கி அடித்துக்கொண்டு பயணம் செய்கின்றார்கள் யாருக்கும் கொரானா வரவில்லை என்பதை புள்ளி விவரத்தின் சாட்சி ஆகவே எந்த பாதிப்பும் வராது என்பது என்னுடைய கருத்து திருமணங்களில் கூடாத கூட்டமா திருவிழாக்களில் கூடிய கூட்டத்திற்கே கோரானா வரவில்லை ஒன்று வேண்டுமானால் செய்யலாம் அரசாங்க பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு அடிப்படை ஊதியம் மட்டும் கொடுத்து விட்டு மற்ற சலுகைகளை பறித்து விடலாம்

நரசிம்மன் said...

அதேபோல் ரயில் நிலைய ஊழியர்களுக்கு ரயில் ஓடினால் மட்டுமே ஓடும் ரயிலில் தகுந்த மாதிரி வருமானத்திற்கு ஏற்ப ஊதியங்களை நிர்ணயம் செய்யலாம்

திண்டுக்கல் தனபாலன் said...

வருங்காலம் சிரமமே...

ஜோதிஜி said...

பல பொதுத்துறை நிறுவனங்களில் அதிகப்படியான லாபம் வருகின்றது. பாரத் பெட்ரோலியம் என்எல்சி பல நிறுவனங்கள். லாபத்தை வேலை செய்பவர்களுக்கு பிரித்துக் கொடுக்கின்றார்களா?

ஜோதிஜி said...

இப்போது தான் பள்ளியில் விண்ணப்பம் எழுதி கொடுத்து விட்டு வந்தேன். பள்ளித் திறப்பை தள்ளிப் போடலாம் என்று என்னைப் போலவே பலரும் எழுதி உள்ளனர். சரியாக 16ந் தேதி பள்ளி திறக்கப்படும் அறிவிப்பு வரும். பார்த்துக் கொண்டேயிருங்க. காரணம் தனியார் பள்ளிகள் தான் எல்லா முடிவுகளையும் இங்கே எடுக்கின்றார்கள். காரணம் பணம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மாணவர்களின் உயிர் பணயம் வைக்கப்படுவது வேதனையைத் தருகிறது.