Thursday, August 27, 2020

பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம்

கடந்த இரு வாரமாக எஸ்பிபி தொடர்பான செய்திகளை படித்து வருகிறேன். எம்.ஜி.ஆரிடம் நிருபர் ஒரு கேள்வி கேட்கிறார். 

"எத்தனை நாளைக்கு மக்கள் உங்களை நினைவு வைத்திருப்பார்கள்?" 

"என் கடைசி பிலிம் சுருள் இருக்கும் வரைக்கும் அவர்களுடன் நான் இருப்பேன்" என்றார். 

இன்று அலைபேசியில் அவர் படங்களைப் பாடல்களைப் பார்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அவர் இப்படி உலகம் மாறும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அது போலத்தான் எஸ்பிபி அவர்களும். அவருக்கு அஞ்சலியோ வாழ்த்துகளோ ஆறுதலோ தேவையில்லை.


பத்து தலைமுறைகள் அடைய வேண்டிய புகழைப் பெற்றவர். இருபது தலைமுறைகள் செய்ய வேண்டிய சாதனைகளைச் செய்தவர். தன் தாய் மொழி இல்லாத மற்றொரு மொழியில் உள்ள 11 கோடி தமிழர்களையும் தன் குரல் வசீகரத்தால் அரை நூற்றாண்டாக ஆட்சி செய்தவர். அவர் பாடிய முதல் பாடல் முதல் கடைசி பாடல் வரைக்கும் நாம் கேட்டு முடிக்க வேண்டுமென்றால் கூட இந்த ஜென்மம் நமக்குப் போதாது.

அவர் காலத்தின் செல்லப் பிள்ளை. 

காலத்தைக் கடந்தவர்களின் பட்டியலில் (திரையுலகில்)தமிழ்நாட்டில் சிலர் உண்டு. சிவாஜி, எம்ஜிஆர், கண்ணதாசன், எம்எஸ்வி, இளையராஜா, ஜானகி, சுசீலா, டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன் இன்னும் பலர் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் கல்வெட்டுகள். காற்று, மலை, புயல், பூகம்பம், எரிமலை, சுனாமி போன்ற எந்த இயற்கை சீற்றங்களாலும் பாதிக்க முடியாத அளவிற்கு அவர்கள் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டேயிருக்கும் தமிழர்களின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்றார்கள். பூஜை அறை முதல் படுக்கையறை வரையிலும் வாழ்கின்றார்கள். 

ஆனால் என் கவலை வேறொன்று.

சில மாதங்களுக்கு முன்பு தான் தான் ஆந்திராவில் வாழ்ந்த வீட்டைப் பாடசாலைக்குப் பயன்படுத்திக் கொள்ள காஞ்சி பீடத்திற்கு எழுதிக் கொடுத்தார். ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் உலகம் முழுக்க அலைந்து உழைத்துக் கொண்டேயிருந்தார். உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளவே இல்லை. 3டி சைசில் இருந்த அவரின் உடம்பை சென்ற வருடம் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. அவர் பருமனான தோற்றத்தை நாம் பார்க்கும் போது ஒரு குழந்தையைப் பார்ப்பது போல இருக்கும். அவர் வாழ்க்கை முழுக்க குழந்தை போலவே வாழ்ந்தவர். உள்ளொன்று புறமொன்று வைத்துப் பேசாமல் வாழ்ந்த முதிர்ந்த குழந்தை.

மாறிய அவரின் தோற்றத்தைப் பார்த்து அவர் உடம்பில் இருந்த நோய்களைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். ஆனால் உழைக்க வேண்டிய மகன் அப்பாவின் வாழ்க்கை முறைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருந்தவர் இப்போது உலகத்திற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். "என் பாட்டை காசு சம்பாதிக்க நீ பாடாதே" என்று கனடாவிற்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்த வாழும் ஞானி இப்போது ஆறுதல் சொல்கின்றார். மனோ என்ற நபரைக் கொண்டு வந்தார். குறுகிய காலத்தில் அதிக ரியாலிட்டி ஷோவுக்கு ஜட்ஜ் ஆக மாறி புதிய சாதனை படைத்துள்ளார்.


எஸ்பிபி புகழை எவராலும் இன்று வரைக்கும் உடைக்க முடியவில்லை. தமிழர்களுக்குத் தெரியாத அறியாத தமிழ் உச்சரிப்புகள் அனைத்தையும் கைவரப் பெற்ற தெலுங்கர் எஸ்பிபி தமிழ்நாட்டின் ஆன்மா. யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இல்லாமல் போனாலும் கூட ஆயிரமாயிரம் பொன் தான். என் பேரன் பேத்தி காலத்தில் கூட அவரை தெலுங்கர்கள் நினைப்பார்களா என்று தெரியாது. ஆனால் தமிழர்கள் ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். 

அவர் தமிழ்நாட்டில் உயிருடன் தான் இருப்பார். 

நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிப்பதிலும் இன்னார் என்று... ஹா... ஹா...

சிறுவயதிலிருந்தே சிலவற்றை சிந்தனை செய்வதில்லை... காரணம் அதைப் பற்றி தெரியாது எனலாம்... ஆசிரியர்களும், படித்த / பழகிய நண்பர்களும் காரணமாக இருக்கலாம்... வலைப்பூ வந்த பின்பு தான் தெரிய ஆரம்பித்தது... ம்...

கரந்தை ஜெயக்குமார் said...

இக்கொரோனா காலத்தில் கடந்த மாதம் ஒரு ரியாலிட்டி ஷோ வில் கலந்து கொண்டதால்தான் இந்தத் தொற்று என்று எழுதுகிறார்கள்.
அந்நிகழ்வினைத் தவிர்த்திருக்கலாம்.
எஸ்.பி.பி., காலத்தை வென்றவர்

Yaathoramani.blogspot.com said...

பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதும் ஒரு சாதனைதான்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சாதனையாளர்கள் போலவே..வாழ்த்துகள்...

ஜோதிஜி said...

ஆறாவது படித்துக் கொண்டிருந்த காலம் முதல் இலங்கை வானொலியில் இவர் பாடல்களைக் கேட்டு வருகிறேன். இப்போது உங்களுக்கு எழுதும் போது கூடப் பக்கவாட்டில் இவரின் குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் ஒருவரின் திறமைக்காகப் புகழுக்காக பிரபல்யத்துக்காக அவரை மதிப்பதில்லை. அவர் சமூகத்தில் எப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். பிரபல்ய நிலையை அடைந்தவுடன் ஒவ்வொருவர் வாழ்க்கையில் நாம் பார்க்கும் மாற்றங்கள் எத்தனை எத்தனை? ஆனால் இவருக்கு நேர் எதிராக மகன் ஆடித் தீர்த்து விட்டார். அந்த வருத்தம் தான் எனக்கு.

ஜோதிஜி said...

அப்பா உழைப்பில் மகன் வாழ நேர்த்தால் இப்படித்தான் சங்கடங்கள் நேரும்.

ஜோதிஜி said...

அப்படிப்பார்த்தால் எங்கள் சித்தரைப் பார்த்து தானே நாம் பொறாமைப்பட வேண்டும். படம் படமாக காட்டுகின்றாரே? எங்கிருந்து சித்தருக்கு இம்பூட்டு அறிவு வந்தது என்று தெரியலையே?

வெங்கட் நாகராஜ் said...

என்றைக்கும் அவர் புகழ் மறையப் போவதில்லை. விரைவில் அவர் குணம் பெற வேண்டும் என்பதே நம் அனைவருடைய ஆசையும்.