கடந்த ஜூலை 3 ஆம் தேதி என்ன செய்தேன் என்று இப்போது தான் பார்த்தேன். இரண்டாம் தேதி ஒரு பதிவு எழுதியுள்ளேன். ஐந்தாம் தேதி ஒரு பதிவு எழுதியுள்ளேன். மூன்றாம் தேதி என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்கே நினைவில் இல்லை.
ஆனால் ஜூலை 3 ஆம் தேதி என் எழுத்துப் பயணத்தில் 11வது ஆண்டு.
11 ஆண்டுகள் முடிந்து விட்டது. 12 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது.
திருப்பூர் குறித்து ஒழுங்காக எழுதி உலகம் முழுக்க சென்று சேர்ந்து விட்டது. டாலர் நகரம். பஞ்சு முதல் பனியன் வரை 5 முதலாளிகளின் கதை.
என் விருப்பத்திற்காக உலகம் முழுக்க வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்ட ஈழம் புத்தகமும் உலகம் முழுக்க சென்று சேர்ந்து விட்டது.
மற்ற புத்தகங்கள் வலைபதிவு எழுத்துக்கள் எல்லாமே போனஸ் தான். பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
மொத்தம் இதுவரையிலும் 30 புத்தகங்கள் வெளியிட்டு உள்ளேன். கிண்டில் மொழி என்ற நூலைத் தவிர அனைத்துப் புத்தகங்களையும் இலவசமாக பலமுறை கொடுத்து விட்டேன். 29 புத்தகங்கள் இலவசமாகவே சென்று சேர்ந்தது.
ஆனால் கடந்த 90 நாட்களாக நள்ளிரவு 12 முதல் அதிகாலை 7 மணி வரை தினமும் சலிப்பில்லாமல் தொடர்ந்து எழுதி தொகுத்த தமிழக அரசியல் வரலாறு நூலை நேற்று சுதந்திர தினத்தில் வெளியிட்டு குறிப்பிட்ட நண்பர்களின் பார்வைக்கு மட்டுமே அனுப்பினேன். இன்னமும் ஃபேஸ்புக், ட்விட்டர் எங்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அதில் திருத்த வேண்டியது, வாக்குவாதங்கள், சச்சரவு உருவாக வாய்ப்பிருந்தால் திருத்த வேண்டியிருக்கும் என்பதனை கருத்தில் கொண்டு கிண்டில் அக்கவுண்ட் மூலம் மட்டுமே வெளியிட்டேன். அரசியல் கட்சி சார்புடைய நண்பர்கள், சார்பு இல்லாத நண்பர்கள் என்று அனைவருடனும் நெருக்கமான நட்பு இருப்பதால் அனைவரும் நேற்றே வாசித்து என்னைக் குத்த ஆரம்பித்து விட்டனர். 24 மணி நேரத்திற்குள் பத்தாயிரம் இடத்திற்குள் வந்து நிற்கின்றது. எனக்கான அங்கீகாரமும் என் உழைப்புக்கான வெகுமதியும் இது தான்.
என் தளத்தை 50 வயது கடந்தவர்கள் தான் அதிகம் படிக்கின்றார்கள் என்பதனை நான் நன்கு புரிந்தே வைத்துள்ளேன். பாரபட்சமின்றி சரியான தகவல், உருப்படியான செய்திகளைத்தான் எழுதுவார் என்ற நம்பிக்கையில் இன்று வரையிலும் என்னைத் தொடர்ந்து வரும் ஏராளமான முகம் அறியாத நண்பர்களுக்கு என் நன்றி.
எனக்கான கடமை என் பொறுப்பு இது என்று நான் கருதிக் கொள்வது 30 வயதுக்குள் இருக்கும் இளையர்கள் சரியான பாதைக்குச் செல்ல வேண்டும். இணையம் உள்ளே வந்தவுடன் குப்பைகளைப் படித்து விட்டு அது தான் உண்மை என்று நாட்டுக்கு எதிராக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்து எழுதுகிறேன். என் எழுத்தின் மூலம் அடுத்தடுத்த நல்ல வாசிப்புகளை அவர்கள் தேடிப் போக வேண்டும். என் எழுத்தை வாசிப்பவர்கள் அவர்கள் வாரிசுகளுக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு வாசிப்பு ருசி அறிய வேண்டும் என்பதே என் ஆசை.
இன்று 100 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாறு நூலை அறிமுகம் செய்து வைக்கின்றேன். இது பத்திரிக்கைகளின் வந்த சம்பவங்களை வைத்து அடுக்கடுக்காக கோர்த்து தொகுத்து எழுதியுள்ளேன். இந்தப் புத்தகம் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அவர்களுக்குத் தமிழக அரசியல் களம் குறித்து நன்றாகவே அடிப்படை விசயங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். என் மகள் முழுமையாக படித்து முடித்து விட்டார். எளிமையாக புரியும் வண்ணம் உள்ளது என்றார். பலவற்றை அறிந்து கொண்டேன் என்றார்.
ஒரு மாத கிண்டில் அக்கவுண்ட் முதல் பலவிதமான ஆஃபர்கள் அமேசான் கொடுக்கின்றார்கள். இந்தப் புத்தகம் கடைசிவரைக்கும் கிண்டில் அக்கவுண்ட் மூலம் மட்டுமே வாசிக்க முடியும். காரணம் பிடிஎப் மக்கள் சூறைத் தேங்காய் போல மாற்றிவிடுவார்கள். எத்தனை நாளைக்கு இது உயிர் பிழைத்திருக்கும் என்றே தெரியவில்லை.
நேற்று வளைகுடா நாட்டிலிருந்து பேசிய நண்பர் "எத்தனையோ நூல்களைப் படித்துள்ளேன். படித்துக் கொண்டும் இருக்கிறேன். இது போன்ற பெரிய நூலை இப்போது தான் என் வாழ்நாளில் படிக்கத் தொடங்குகிறேன்" என்றார்.
புதிய தலைமுறையில் பணியாற்றும் நண்பர் "அண்ணா சரியான பெயரை சூட்டியிருக்கிறீர்கள். எவருக்கும் தோன்றாத எண்ணமிது" என்றார். "இரண்டு ஊர்கள் (இடங்கள்) தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. எப்படியண்ணா உங்களுக்கு இந்த ஐடியா தோன்றியது" என்றார்.
தந்தி டிவியில் பணியாற்றும் நண்பர் "டேய் ராட்சசா? நீ மனுசனே இல்லை. இது போன்ற புத்தகங்கள் உருவாக்க ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும். தூங்குவியா? தூங்க மாட்டீயா? செத்து தொலைக்கப் போற" என்று அன்போடு ஆசிர்வாதம் செய்தார்?
இரவில் ட்யூட் லைட் திடீரென்று எரிந்து கொண்டிருக்கும். மனைவி முழித்துப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் திரும்பி படுத்துக் கொள்வார். இரண்டு மாதங்களில் ஒரு நாள் கூட திட்டவே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் "உடம்புக்கு ஏதாவது ஆகப் போகின்றது. கொஞ்ச நேரமாவது தூங்குங்க" என்றார். அவருக்குத் தான் வாசித்து முடிப்பவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.
இந்தப் புத்தகத்தை என் ஞானத் தகப்பன் தெய்வத்திரு ஞாநி அவர்களுக்கும் என் மரியாதைக்குரிய நண்பர் திரு. ப. திருமா வேலன் அவர்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன். அவர்கள் தான் என் வழிகாட்டி. அரசியல் கட்டுரைகளை வாசிக்க அவர்களின் எழுத்தில் இருந்து தான் தொடங்கினேன். ஒருவரை இன்னமும் சந்திக்கவே இல்லை.
நம் உழைப்பு சிந்தனை சரியாக இருந்தால் நிச்சயம் உலகம் ஒரு நாள் நம்மை ஏற்றுக் கொள்ளும் என்பதனை உறுதியாக ஆழ்மனதிலிருந்து நம்புங்கள்.
14 comments:
தங்களின் கடின உழைப்பு போற்றுதலுக்கு உரியது ஐயா
தரவிறக்கம் செய்து அவசியம் வாசிப்பேன்
நன்றி ஐயா
நன்றி ஆசிரியரே.
"11 ஆண்டுகள் முடிந்து விட்டது. 12 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது"
வாழ்த்துகள் ஜோதிஜி.
Kindle லில் தற்போது ஏராளமான இலவச புத்தகங்கள் கிடைக்கிறது. இதுவரை 210 புத்தகங்கள் தரவிறக்கம் செய்து விட்டேன். ஒரு நூலகம் போல உருவாக்க வேண்டும் என்பது விருப்பம்.
விருப்பப்படும் புத்தகத்தை எப்போது வேண்டும் என்றாலும் படிக்க வேண்டும் என்று அமைக்க முயல்கிறேன்.
அனைத்தையும் கையடக்க சாதனத்தில் வைத்துக்கொள்ள முடிவது மிக வசதியாக உள்ளது.
கிடைக்கும் அனைத்து Kindle புத்தகங்களையும் சேமிக்க துவங்கியுள்ளேன். உங்கள் புத்தகங்களும் இணைந்துள்ளது.
இணையம் வந்த பிறகு கூட நாம் முக்கிய சம்பவங்கள் நிகழ்வுகள் பலவற்றை தவற விட்டு விடுகின்றோம் கிரி. அது வேறொரு இடத்தில் நம்மை தாக்கும். கேயாஸ் தியரி மாதிரி. இந்த புத்தகத்தில் காமராஜர் காலத்தில் நடந்த முதுகுளத்தூர் கலவரம், அண்ணா காலத்தில் நடந்த கீழ்வெண்மணி கலவரம், எம்ஜிஆர் காலத்தில் நடந்த மீனாட்சிபுரம் மதமாற்றம், கலைஞர் காலத்தில் நடந்த மாஞ்சோலை கலவரம், சென்னை சட்டக்கல்லூரி கலவரங்களை முழுமையாக அப்படியே உண்மையாக ஆவணப்படுத்தி உள்ளேன். மகன் மகள் இவர்கள் படிக்க வேண்டும்.
12-ஆம் ஆண்டில்! மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜோதிஜி.
அரசியல் நூல் - கொஞ்சம் பொறுமையாக வாசிக்க வேண்டிய நூல்! அமேசான் தளத்திலிருந்து ஏற்கனவே தரவிறக்கம் செய்த நூல்களை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.
வாழ்த்துகள் அண்ணா.
அரசியல் கட்டுரைகளில் அடித்து ஆடுகிறீர்கள்.
கடின உழைப்பு...
தொடரட்டும் உங்கள் புத்தகங்கள்...
வாழ்த்துகள் அண்ணே...
உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்...
உங்களின் அயராத உழைப்பினையும், துணிச்சலையும், எழுத்தின் வீரியத்தையும் கண்டு வியப்பவர்களில் நானும் ஒருவன். உங்களின் சாதனைப் பயணங்கள் தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.
நன்றி குமார்.
100 கோடிக்கு அதிபதியாகனும் தனபாலன்.
மகிழ்ச்சி அன்பு நன்றி அய்யா.
பிரமிப்பூட்டும் சாதனை சார். வாழ்த்துக்கள்.
பிரமிப்பூட்டும் சாதனை சார். வாழ்த்துக்கள்.
Post a Comment