Monday, September 02, 2019

உங்கள் வீட்டில் (மகன்/மகள்) வாசிக்கச் சொல்லவும்.

அரங்கில் குழுமியிருக்கும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மொக்கை எனும் தூய தமிழ்ச்சொல்லுக்கு கூர்மையற்ற எனும் பொருளைக் காட்டுகிறது தமிழகராதி. மொக்கு அல்லது மொன்னை எனும் சொல்லிலிருந்து மொக்கை எனும் தமிழ்ச் சொல் உருவாகியிருக்கலாம். வடிவேலு மொக்கச்சாமியாக அரிதாரம் ஏற்றதன் வழியாக இந்தச் சொல் தமிழர்களால் மீள்கண்டுபிடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று யூகிக்கிறேன்.

மொக்கை ஃபிகர், மொக்கை படம், மொக்கை ஜோக், மொக்கை சாப்பாடு என்று கல்லூரி மாணவர்கள் அன்றாடம் பலதடவை இந்தச் சொல்லை உபயோகிக்கிறார்கள். அவர்களின் உலகில் வாத்யார் மொக்கை, வகுப்புகள் மொக்கை, நூலகம் மொக்கை, புத்தகங்கள் மொக்கை, பேச்சாளன் மொக்கை, அரசியல் மொக்கை. காணும் யாவையும் மொக்கையென விளிக்கும் உங்களின் கூர்மைதான் என்ன என்பதை அறியும் பொருட்டே இந்த அரங்கில் பல வினாக்களை எழுப்பினேன்.

திராவிடம், இட ஒதுக்கீடு, ஹைட்ரோ கார்பன், கீழடி, போக்ஸோ, ஆர்ட்டிக்கிள் 370, தேசிய கல்விக்கொள்கை, ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், நீர் மேலாண்மை, ஆவாஸ் போஜனா, ஸ்மார்ட் சிட்டி திட்டம், பொருளாதார நெருக்கடி என இந்த அரங்கில் கேட்கப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் உங்களிடம் பதிலில்லை. தவறாக சொல்லும் பதிலைக் கூட கொண்டு கூட்டி ஒரு கோர்வையாக சொல்லத் தெரியவில்லை. தமிழ்சினிமாவைப் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் மாய்ந்து பாய்ந்து பதில் சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய எந்தவொரு சமகாலவிஷயத்திலும் உங்களுக்குப் பிடிமானம் ஏதுமில்லை.

ஐநூறு ரூபாய்க்கு வரைவோலை எடுத்து வா என வங்கிக்கு அனுப்பி வைத்தால், இங்குள்ள பலர் திரும்ப வராமலேயே போய்விட வாய்ப்புள்ளது. ஐந்து செல்லான்களை எழுதி கிழிக்காமல் நம்மால் பஸ் பாஸ் எடுக்க முடியவில்லை. ஆதார் அட்டையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்த வழியுண்டா என பூங்கா ஜோசியனிடம் விசாரிக்கிறோம். எங்கும் எதிலும் திகைப்பும் தெளிவின்மையும்.

உங்களுடைய சிகையலங்காரம் டிரெண்டியாக இருக்கிறது. உடைகள் டிரெண்டியாக இருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், ஈருளிகள் டிரெண்டியாக இருக்கின்றன. ஆனால், அறிவு விஷயத்தில் நீங்கள் டிரெண்டியாக இல்லை. AI, IoT, Block Chain, Big Data, Disruptive Management, Bit Coin, Augmented Reality and Virtual Reality என அன்றாடம் மாறிவரும் எந்தத்துறைசார்ந்த தொழில்நுட்ப மாற்றங்களைப் பற்றியும் உங்களுக்குப் பேச ஒருவரி கைவசம் இல்லை. படுமொக்கை, மொக்கை, சுமார், சூப்பர் என நான்கு தரப்பிரிவுகளாக உங்களைப் பிரித்தால் படுமொக்கை எனும் பிரிவின் கீழ்தான் வருவீர்களென நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய நேரடி பதில் கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு. ஒரு மொக்கைப் பீஸாகவே வாழ்ந்து முடிந்து போகாமல் இருப்பதற்கு. ‘ஒரு எழவும் தெரியாது… வந்துட்டான்யா முடியை சிலுப்பிக்கிட்டு…’ என அவமானப்பட்டு கூசி நிற்காமல் இருப்பதற்கு. கலை சுரணை, பண்பாட்டுச் சுரணை, அரசியல் சுரணை, சூழியல் சுரணை என எதுவுமே இல்லாமல் வெறும் வாட்ஸாப் பைத்தியங்களாக உலவாமால் இருப்பதற்கு, ஆயுளையே அவிர்பாகமாக கேட்கும் கார்ப்பரேட் நெருக்கடிகளுக்குள் எவனோ ஒருவன் சிபாரிசில் உள்நுழைந்து எங்கள் தாலியறுக்காமல் இருப்பதற்கு.

நண்பர்களே, தமிழ் மேடைகளில் தவறாமல் நிகழும் கீழ்மைகளுள் ஒன்று பேச்சாளர்கள் பார்வையாளர்களை, பேச வந்த ஊரை, கல்லூரியை வானளாவ புகழ்வது. அமர்ந்திருப்போர் விழிகளில் ஒளிர்விடும் பாரதம் தெரிவதாக அளந்து விடுவது. அற்ப கைதட்டுதலுக்காக அல்லது அடுத்தமுறை கூப்பிட வேண்டுமென்பதற்காக மிகையான புகழ்மொழிகளை முன்வைப்பது. இவ்வகை தொழில்முறை பேச்சாளர்கள் பணத்தையும் பெற்றுக்கொண்டு அறத்தையும் மீறுகிறார்கள். உங்கள் ஆன்மாவை நோக்கி எவ்வித தயக்கமும் இன்றி நான் கேட்கும் தர்மசங்கடம் மூட்டும் வினாக்களால் நீங்கள் சீண்டப்பட்டால் நான் மகிழ்வேன். அரங்கை விட்டு வெளியேறும்போது தாக்கப்பட்டால் புளகாங்கிதம் அடைவேன்.

வாசிக்கும் இளைஞன் வழிகாட்டும் தலைவன் என்பேன் நான். நீங்கள் இண்டலெக்சுவலி ஃபிட்டாக இருந்தால் வகுப்பிலும் வீட்டிலும் நாட்டிலும் மதிப்பிற்குரிய நபராவீர்கள். ஒரு சமகாலப்பிரச்சனையைப் பற்றி உங்களது கருத்துகளை சொல்லுங்கள் என வகுப்பில் ஆசிரியர் உங்களைப் பேச பணித்தால் அது எவ்வளவு பெரிய கவுரவம்? முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் உங்கள் தந்தை உங்களைக் கலந்தாலோசித்தால் எவ்வளவு பெரிய ஆனந்தம்? உங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே விஷய ஞானமுள்ளவர் என அறியப்பட்டால் எவ்வளவு பெரிய மரியாதை? உங்கள் அண்ணன் தங்கைக்கு மச்சானுக்கு முறைப்பையனுக்கு வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவெடுக்க சிந்தனைத் தெளிவுடன் வழிகாட்ட முடியும் என்பது எவ்வளவு பெரிய முக்கியத்துவம்? 

கையில் புத்தகத்தையோ நாளிதழையோ வைத்திருக்கும் ஒருவனை காவல்துறை ‘யோவ்..’ என விளிப்பதில்லை. வாசிக்கும் பழக்கம் உள்ளவன் எந்த சபையிலும் தன் தலையை தொங்கவிட்டு அமர்ந்திருக்க வேண்டியதில்லை. இரண்டாயிரம் பேர் கூடியுள்ள சபைமுன் நின்று ‘கூமுட்டைகளே’ என்று நான் உங்களைக் கூவி அழைக்கும் அதிகாரத்தையும் துணிச்சலையும் எனக்கு எது தந்திருக்கிறது என்று நீங்கள் யோசித்துப்பாருங்கள்.

ஒத்துக்கொள்கிறேன். உங்கள் கையில் வைத்திருக்கும் டிவைஸ் அளவிற்கு நாளிதழ்கள் சுவாரஸ்யமானவை அல்ல. உங்கள் டைம்லைனின் வண்ணமிகு இனிய ஆச்சரியங்கள், உடனுக்குடன் வந்து குவியும் உங்கள் அபிமானஸ்தர்களின் வாழ்க்கைத் தருணங்கள், வேடிக்கை மீம்ஸ்கள், ஆச்சர்யமூட்டும் வீடியோக்கள், சிரிப்பாணி மூட்டும் டிக்டாக்குகள் இவை எதற்கும் முன் நாளிதழ்கள் போட்டியிட்டு குதுகலப்படுத்த முடியவே முடியாது. தொழில்நுட்பத்தின் பகாசுர கரங்கள் உலகின் உச்ச இன்பங்களை உங்கள் கண் முன்னே கொட்டி ஆட்டுதி அமுதே என கொஞ்சுகிறது. தொழில்நுட்பத்துடன் போட்டியிட்டு வெல்லும் ஆற்றல் இந்த உலகில் எதற்கும் இல்லை. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் தவிர்த்து வாசிப்புக்குத் திரும்புங்கள் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. 

டைம்லைன் மூளைக்கு ஏற்றும் டோபோமைனுக்கு அடிமையாகதவர் என்று எவரும் இன்று புவியில் இருக்க முடியாது. ஆனால், நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விழைவது ஒன்றேதான் ‘உப்புமா, கிச்சடியை விட நிச்சயம் பீட்ஸா சுவையானதுதான். ஆனால் மூன்று வேளையும் பீட்ஸாவை மட்டுமே உண்டால் சீக்கிரத்தில் செத்துப் போய்விடுவோம். 

யங்கிஸ்தான் செல்லங்களாக நீங்கள் இருபத்துநாலு மணிநேரமும் இன்ஸ்டாவில் திளைப்பதும் ஜாயிண்ட் அடித்துவிட்டு சத்தமில்லாமல் இளித்துக்கொண்டிருப்பதும் ஒன்றேதான். வழி வேறாயினும் விளைவுகள் ஒன்றேதான். அச்சமூட்டுகிற வகையில் அறியாமை இருளுக்குள் இருப்பதற்குப் பதிலாக நாளொன்றுக்கு இருபது நிமிடங்கள் நாளிதழ்களை வாசிக்கலாம்.

இன்னும் தங்கள் ஆன்மாவை விற்றுவிடாத தரமான நாளிதழ்கள் என்ன செய்கின்றன? அவை நிர்வாக அமைப்புகளை, அதிகாரமையங்களை, நிறுவனங்களை, தொழிற்சாலைகளை, வங்கிகளை, கல்விக்கூடங்களை, ஆன்மிக அமைப்புகளை, சி.ஈ.ஓக்களை, சி.ஓ.ஓக்களை, இயற்கை வளங்களை இன்னும் ஏராளமானவற்றை கண்ணுக்குத் தெரியாத கண்களாக கண்காணிக்கிறது. அதன் வழியாக மக்களைப் பாதுகாக்கிறது. வெளியே தெரிந்தால் பத்திரிகைகள் குடைந்தெடுத்து விடுவார்கள். அவமானம், மானம் போய்விடும், தண்டனை பெறுவோம் என்கிற அச்ச உணர்வு இன்றும் எஞ்சியிருக்கிறது. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? யார் முடிவெடுக்கிறார்கள்? யார் பலனடைகிறார்கள் என்பதை மக்களுக்குச் சொல்கிறது. எச்சரிக்கிறது. ஜனநாயகம், நீதி, பொது ஒழுங்கு, நிர்வாகம் போன்றவற்றை மட்டுறுத்தும் விசைகளுள் ஒன்றாக இருக்கிறது.

லட்சோப லட்சம் மாணவர்கள் பத்திரிகைகளைப் புறக்கணிப்பதன் வழியாக ஒருவகையில் ஜனநாயகத்தின் குரல்வளையை மிதிக்கிறார்கள் என்பேன். தன்னைச் சுற்றி நிகழும் எந்தவொன்றைப் பற்றியும் ஒரு எழவும் தெரியாத கூமுட்டைகளாக இந்தச் சமூகத்தை மேலும் பாதுகாப்பற்ற வாழ லாயக்கற்ற ஒன்றாக மாற்றுகிறார்கள். தன்னுடைய உரிமைகளை, தனக்கான சலுகைகளை, வாய்ப்புகளைப் பற்றிய அறிவில்லாதவர்களாகவும், தன் மீது நிகழும் சுரண்டலைப் பற்றிய தெளிவில்லாதவர்களுமாக இருக்கிறார்கள். தன்னை ஒரு ஆளுமையாக முன் வைக்காமல் ஆயிரக்கணக்கான ஆடுகளடங்கிய மந்தையில் நாயின் ஊளைக்கும் நரியின் ஊளைக்கும் வித்தியாசம் தெரியாமல் அஞ்சி நடுங்குபவர்களாக உள்ளனர்.

உலகிலேயே மிக அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள நாடு இந்தியா. சராசரி இந்தியர்கள் ஒரு வாரத்திற்கு பத்து மணி, 42 நிமிடங்கள் வாசிக்கிறார்கள். எந்த வளர்ந்த நாடும் இந்தப் பட்டியலில் நம்மை மிஞ்சி இல்லை என்பது பெருமிதம்தான். ஆனால், பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தாண்டி எதையேனும் வாசிக்கிறார்களா என நிகழ்த்திய ஆய்வில் வெறும் 30% மாணவர்கள்தான் என்று தெரியவந்தது. கல்லூரி அளவில் என்று சோதித்துப்பார்த்தால் 1% கூட இல்லை. இரண்டாயிரம் பேர் அமர்ந்திருக்கும் அரங்கில் கடந்த ஆறு மாதத்தில் ஏதேனும் ஒரு நூலைப்படித்தவர்கள் என இரண்டே பேர்கள்தான். ஹாரிபாட்டர். ஜேகே ரெளலிங்கின் புகழ் ஓங்குவதாகுக.

சுகாதாரத்துறை அமைச்சர் அரசுத்திட்டங்களைப் பற்றி கேள்வி கேட்டால் பிரின்ஸிபால் முதல் செவிலியர் மாணவிகள் வரை ஒருவருக்கும் ஒன்றாகிலும் தெரியவில்லை. நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கித்தருகிறேன் என இணையத்தில் பொய் சொல்பவனிடம் ஆறுநூறு பெண்கள் நிர்வாண வீடியோக்களை அனுப்பி வைக்கிறார்கள். 

ஓங்கிய வாளுடன் ஓடும் பேருந்தில் தீப்பொறி பறக்க விட்டு காவல்நிலையத்தில் வழுக்கி விழுகிறார்கள். ஓரொரு இந்தியனும் பூஜிக்கவேண்டிய பாபாசாகேப் அம்பேத்கரின் சிலையை நடுசாலையில் காலால் நசுக்கி உடைக்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனை ஓவியங்களில் சிந்துஜா சீக்கிரம் வா என கிறுக்கி வைக்கிறார்கள். லட்சம் ஆண்டுகள் பழமை கொண்ட பிம்பேத்கா குகை ஓவியங்களை பைக் சாவியால் கீறிப்பார்க்கிறார்கள். ஆளரவமற்ற சமணப்பள்ளிகளில் சபையில் பேச முடியாதவற்றை செய்கிறார்கள். மலைமுகடுகளில் ஏறி நின்று மனம் பொங்க சூரியோதயம் பார்க்கும் ஆன்மிக தருணத்தில் கூச்சலிடுகிறார்கள். அருவிக்கரைகளை பீர் பாட்டில்களால் அலங்கரிக்கிறார்கள். எங்கெங்கு காணினும் சூரைமொக்கை இளைஞர் குழாம். ஓங்கரிக்க வைக்கும் ஈனத்தனங்கள்.

கொஞ்சமேனும் வாசிக்கிற வழக்கமுள்ள ஒரெயொருவன் இந்த அவையில் இருந்தால் கூட எழுந்து நின்று என்னோடு சமர் செய்வான். அடுத்த முறையேனும் அப்படி ஒருவனை சந்திக்க விழைகிறேன். நன்றி வணக்கம்.


20 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கட்டுரை. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கிரி said...

அருமையான கணிப்பு இன்றைய இளைஞர்களின் செயல்பாட்டையும் எண்ணவோட்டத்தையும் ...

வாசிப்பின் முக்கியத்துவத்தையும் அதே சமயம், இன்றைய இளவட்டங்களின் சமூக வலைதளங்களின் மேல் உள்ள விபரீத தாக்கத்தையும் விவரித்த விதம் அருமை ..

முதலில் இது போன்ற சமூக அவலங்களை தோலுரித்துக்காட்டும் கட்டுரைகளை படிக்க வேண்டும் இன்றைய நவநாகரீக இளைஞர் பட்டாளம்..

தான் பார்க்கும் இன்றைய உலகம் தான் நிரந்தரமானது என்று தவறான கற்பணை குதிரையை தட்டிவிடும் இன்றைய இளவட்டம் இது போன்ற கட்டுரையின் மூலம் நல் திசை திரும்பினால் அதுவே உங்களின் உண்மையான சமூக மாற்றத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி ...

தொடரட்டும் உங்களின் உணர்வுபூர்வமான எழுத்துப் பணி ..

கிரி

ஸ்ரீராம். said...

எல்லாம் சரியான வார்த்தைகள். ஆனால் இதை கவனத்தில் கொள்ள இன்றைய அறுபது சதவிகித இளைஞன் தயாராயிருக்க மாட்டான்.

G.M Balasubramaniam said...

சொல்ல விரும்புவதை சொல்ல தேர்ந்தெடுத்த வார்ததைகள் சரியில்லை பலனளிக்காது எதிர்மறைக்கருத்துகளின் அணி வகுப்பு

ஜோதிஜி said...

என் மகள்களுக்கு ஒவ்வொரு வாரமும் இணைய தளம் மற்றும் பத்திரிக்கைகளில் வந்த முக்கிய செய்திகளை அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்வேன். இதனையும் அவர்களிடம் கொடுத்த போது பதிவு செய்யத் தோன்றியது. நான் பலவிதமாக புரிய வைப்பதை விட இது போன்ற கட்டுரைகள், யூ டியுப் காட்சிகளை எடுத்து கொடுத்து விட்டு ஒதுங்கினாலே போதும். அவர்கள் உணர்ந்தே தீர வேண்டிய கட்டாயம் இயல்பாக ஒரு நாள் வந்தே தீரும்.

ஜோதிஜி said...

தொழில் நுட்ப வசதிகளை நாம் முதல் தலைமுறையாக அனுபவிக்கின்றோம். மேலை நாடுகளில் இரண்டாவது மூன்றாவது தலைமுறை என்கிற ரீதியில் வந்த காரணத்தால் இயல்பான புரிதல் அங்கே உருவாகி விட்டது. பதட்டம், பயம், அதீத ஆர்வம் போன்றவற்றைக் கடந்து அவர்கள் தங்கள் வளர்ச்சியின் மேல் அக்கறை செலுத்தத் துவங்கி விட்டார்கள். நம்மவர்கள் இன்னும் 25 வருடத்தில் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதற்குள் அழிவு இயல்பானதாக இருக்கும்.

ஜோதிஜி said...

அவர் சுருக்கமாகச் சொல்ல வருவது என்னவென்றால் உன்னைச் சுற்றியுள்ள விசயங்களைப் பற்றி அறிந்து கொள். ஆழமாக அறிந்து கொள். அது உன்னோடு தொடர்புடையது. உன் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடியது. மேலோட்டமாக கடந்து செல்லாதே. எல்லாமே பொழுது போக்கு அல்ல. அப்படி நினைத்தால் உன் வாழ்க்கையை நீயே அழித்துக் கொள்கிறாய் என்று அர்த்தம்.

ஜோதிஜி said...

நன்றி

ஸ்ரீராம். said...

சாத்தியம்.

அது ஒரு கனாக் காலம் said...

First my request you to pardon me for writing in English , hope you and other readers of thus blog will pardon me for not writting in tamil … excellent speech by Selventhran , read it in Jayamohan’s blog … you may not agree , this is what subramanya swamy said some time back, most of the TN youths are porukkis ( he could have said , few of the youths at that time , so lot of people trolled him for that including the TV etc.,) ….since then, few become most , But this state of affairs is entirely due to Cinema , earlier MGR used to have influence on the poor women folks ( remember the Jayakaanthan story ) ..slowly Rajini and Kamal started influencing the other sections of the society , in the beginning Rajini was a bad influence but later he started saying right messages and corrected his life style etc., but Kamal continue to be a bad influence ( marrying many, sleeping with many ( I have no proof ) , and now communist thoughts – but wear best of the cloths from west, expensive and comfortable car from west – I remember once , Thiyagarajan ( Prasanth’s father ) bought a Italian made car just because Kamal has it ) , and Now Dhanush, GV Prakash, even Jayam Ravi and so many others spoil the youth like no body can . Even girls are not spared in this onslaught , but if you notice it properly , the so called high class ( or Iyer people) uses the Smule and comes out with nice songs – of course many in the high class ( including Iyer ) spoiled beyond limit - internet is a tool , you tube is full of explanations/ experiences / best oratory about Geetha, Upanishad which was known only to very few people, the moment it was translated into English , spoken in English , lots and lots of gem is there – like the old saying , you can read thirukural with a vilakku or you can burn the kudisai. Ramayanam and Mahabharatham are not some boring story, it is infact interesting , and has lots and lots of messages – I remember Jayamohan’s quote of Logithadas, ( Malayalam film story writer ) – there are no stories outside Mahabharatham, every situation, every twist, every emotion, is told in the Mahabhratham.
In our younger days, We ( I include you also ) started off with Anil , muyal ,- kids magazine, then progressed to Gokulam , then Kalki, Kumudham , Ananthavikatan, thinamanikathir, etc ..it introduced lots of Authors , like Kalki, Chandilyan, Sujatha, pushpa thangadurai, ra.su.Nallapermal, suba, rajesh kumar, Balakumaran, sivashankari, vaasanthi, Lakshimi, samuthram, raj narayanan, kadugu, marina -baranitharan, and at times some unknown people ( but if you notice in all these MK has not played a role, he was not a famous writer ( but he is very famous in movies only ), may be kuraloviyam was there , it used to come in Dinamanikathir – but he influenced people through movies rather than in the written form.
Coming back – it needs a lot of efforts from parents to keep the kids on track ( you are doing a great job) and as a parents we should also make use of this gadgets in a positive way and show them what are the nice things available there … But TN is a gone case , unfortunately.

Rathnavel Natarajan said...

உங்கள் வீட்டில் (மகன்/மகள்) வாசிக்கச் சொல்லவும். - லட்சோப லட்சம் மாணவர்கள் பத்திரிகைகளைப் புறக்கணிப்பதன் வழியாக ஒருவகையில் ஜனநாயகத்தின் குரல்வளையை மிதிக்கிறார்கள் என்பேன். - நிஜம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு செல்வேந்திரன் - நன்றி திரு ஜோதிஜி

ஜோதிஜி said...

நன்றி பதிவைப் போல விளக்கமான விமர்சனம் செய்தமைக்கு. நான் சுருக்கமாகச் சொல்கிறேன். அப்பா அம்மா தான் முதல் ஆசிரியர், குரு, தெய்வம், வழிகாட்டி இன்னும் பல. நாம் நம் கடமையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பலன்கள் வந்தே தீரும் என்று நம்புகிறேன். நான் என் சோசியல் மீடியா செயல்பாடுகள் அனைத்தையும் என் மகள்கள் பார்க்கின்றார்கள்,படிக்கின்றார்கள். என்னுடன் உரையாடும் அனைவரையும் அவர்கள் அறிவார்கள். நான் வெளிப்படையாக அவர்களுடன் இருக்கிறேன். பேசுகிறேன். அவர்கள் வாழ்க்கையை அவர்களுக்கு உணர்த்துகிறேன். அதற்குப் பிறகு அவர்கள் சமூகத்தில் வென்று வர வேண்டியது அல்லது அப்போதைய சமூகத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் தனித்திறமை.

ஜோதிஜி said...

நன்றி

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு கட்டுரை அண்ணா...
பகிர்வுக்கு நன்றி.

வருண் said...

ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய நேரடி ***பதில் கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு. ஒரு மொக்கைப் பீஸாகவே வாழ்ந்து முடிந்து போகாமல் இருப்பதற்கு. ‘ஒரு எழவும் தெரியாது… வந்துட்டான்யா முடியை சிலுப்பிக்கிட்டு…’ என அவமானப்பட்டு கூசி நிற்காமல் இருப்பதற்கு.***


பொதுப்படையா வாசிக்கணும்னு சொல்லீட்டீங்க. சினிமா செய்திகள், அரசியல் நிலைப்பாடுகள், கதைகள், கட்டுரைகள், அறிவியல் புத்தகங்கள் னு சொல்லிக்கொண்டே போகலாம். இந்த "கூமுட்டை" பட்டத்திலிருந்து யாருமே தப்பிக்க முடியாது. வரலாறு படிக்காமல் அறிவியலில் மட்டுமே மூழ்கி மூழ்கி வாசிப்பவன், வரலாறு விசயத்தில் கூமுட்டைதான். என்னை எடுத்துக்கோங்க, ஜெயமோகன் கதை எதையுமே வாசிச்சதில்லை. ஜெயமோகன்னு ஒரு மஹா எழுத்தாளன் எழுத்தை அறியாத ஒரு கூமுட்டை னு சொல்லலாம். எல்லாருமே ஒரு வகையில் கூமுட்டைதான். நீ என்ன பண்ணிய அந்த நேரத்தில்னு கேளுங்க? நான் ஜெனடிக்ஸ் புத்தகம் எடுத்துப் படிக்கிறேன் னு நான் பதில் சொன்னால்? சுத்தி உள்ள மக்கள் யாருக்குமே ஒரு ஈர்ப்பு இல்லாத ஒரு டாப்பிக் ஜெனடிக்ஸ். இப்போ யார் கூமுட்டை? என்பது விவாதத்துக்குரியது. ஜெயமாகன் எதையோ உளறித்தள்ளுகிறான். அவன் கதையும் அவன் பொண்டாட்டிதாலியும்னு ஒரு ப்ரிஜடிஸ் எனிடம் இருக்கலாம். வாசிக்கணும்? வாசிக்க நேரம் இருக்கணும் முதலில். வாசிக்கும் டாப்பிக் நமக்கு இன்டெரெஸ்டிங்காக இருக்கணும் ரெண்டாவது. அரசியலா? ஜெயமோகன் கதையா? இல்லை ஜெனடிக்க்ஸா? எது உங்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து நீங்க எதில் கூமுட்டையாக இருக்கப் போறீங்கனு உங்க ரசபனைக் ஏற்ப நீங்க ச்சூஸ் பண்ணுறீங்க. யாரையுமெ தையும் வாசினு நாம் ஃபோர்ஸ் பண்ண முடியாது. வாசிப்பதில் சந்தோசம் இருப்பதைத்தான் வாசிப்பாங்க. அல்லது தேவைனு வரும்போது வாசிப்பார்கள்.

படிக்கும் குழந்ஹ்டிகளையே எடுத்துக்கோங்க. ஒரு டாப்பிக் அரைகுறையா பிளஸ் 2 புத்தகத்தில் சொல்லீட்டுப் போயிடுறான். அதை புரிந்துகொள்ள அந்த மாணவன் மணிக் கணக்காக பல புத்தகங்களை படிக்க எத்தனித்தால் அவன் அந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற இயலாது. எதைப் படிக்கணும்? எவ்வளவு படிக்கணும்? எதைப் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்று மாணவன் முடிவு செய்ய வேன்டியுள்ளது..வாசிக்கணும் என்பதில் பல லெவல்கள் உள்ளனனு சொல்ல வர்ரேன்.

ஜோதிஜி said...

நீங்க சொன்னது முற்றிலும் உண்மை வருண். ஏம்பா என் புத்தகத்தையே நான் இன்னும் படித்து முடிக்கவில்லை. நீங்க சொல்ற புத்தகத்தை விடுமுறையில் படிக்கிறேன் என்பார் என் மற்றொரு மகள்.

ஜோதிஜி said...

மகளுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைங்க.

ஜோதிஜி said...

வருண் தமிழ்மணம் வேலை நடந்து கொண்டு இருக்கின்றது. விரைவில் முடிந்ததும் சொல்கிறேன்.

வருண் said...

தமிழ்மணம் பற்றிய அப்டேட்க்கு நன்றி, ஜோதிஜி!

Nanjil Siva said...

நன்றி நண்பரே!