Tuesday, September 24, 2019

எம்.ஜி.ஆர் )( விஜயகாந்த்


வைகோ எம்.ஜி.ஆருக்கு விழா ஒன்று கடந்த வருடம் சிறப்பாக நடத்தினார். அவர் பேசும் போது நான் இந்த கூட்டத்தில் பேசுவதற்காக எம்.ஜி.ஆர். குறித்து எழுதப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து விட்டுத் தான் இங்கே வந்தேன் என்றார்.

புத்திசாலித்தனம், நிர்வாகத்திறமை, தொலை நோக்குப் பார்வை இவை மூன்று தான் ஒரு தலைவனுக்கு இலக்கணமாக இருக்க வேண்டியவை. இந்த மூன்றும் ஒருங்கே பெற்ற கலைஞர் இவரால் வளர்ந்ததும், இவராலே வீழ்ந்ததும் முரண்நகை.

எம்.ஜி.ஆர் குறித்து வரக்கூடிய தகவல் அனைத்தும் வாசிக்கும் போது இதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கும்? என்று யோசிப்பதுண்டு. ஆனால் ஒரு திரைப்பட பிரபல்யம் சொன்னதற்குப் பிறகு அவரின் அடிப்படைக் குணாதிசயத்தை ஓரளவிற்கு வாசிக்கும் செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

பசி என்ற வார்த்தை கடைசி வரைக்கும் அவர் மனதில் நீங்காமல் இருந்திருக்கும் போல. காரணம் பசி தான் அவர் குடும்பத்தைப் பயணப்பட வைத்துள்ளது. அல்லாட வைத்துள்ளது. அவஸ்தைப்பட வைத்துள்ளது. இதற்கு மேலாகப் பசியோடு தன் இலக்கை நோக்கி நகர உதவியும் உள்ளது.

சத்யராஜ் திருமண அழைப்பு கொடுக்கச் சென்ற போது எம்.ஜி.ஆர் (பேச முடியாத நிலையிலிருந்தார்) வழங்கிய நகைகளைப் பார்த்து மிரண்டு போய்விட்டார். என் சீதனம் என்று சைகையில் சொல்லியுள்ளார்.

அவருடன் தொடர்புடைய ஒருவர் கூட (அரசியல், கலைத்துறை, உடன் இருந்தவர்கள், உடன் பணியாற்றியவர்கள்) இன்று வரையிலும் அவரைப் பற்றி முரண்பாடான தகவல்களை ஏதாவது ஒரு இடத்தில் சொல்கின்றார்களா? என்பதனை கூர்ந்து கவனிப்பதுண்டு.

காரணம் கலைஞர் அரசியலில் நல்லவர்? கெட்டவர்? என்பதற்கு அப்பாற்பட்டு அவர் தனக்கு செய்த எந்த உதவியையும் பிரபல்யங்கள் எந்த இடத்திலும் சொன்னதே இல்லை. தன்னை ஒரே இரவில் வீட்டை காலி செய்ய வைத்து விட்டார் என்ற கோபம் கொண்ட தமிழருவி மணியன் வரைக்கும் பலரையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட முடியும். கலைஞரின் ராசி என்பது அவர் யாருக்கெல்லாம் உதவி செய்கின்றாரோ? அவர்கள் கட்டாயம் செய்வது செய்நன்றி மறப்பது தான்.

வளர்த்த கடா மார்பில் முட்டும் என்ற கொள்கை தான் அவரின் கடைசி வாழ்க்கை வரைக்கும் துரத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் அவரும் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இன்றைய சுபவீ கூட ஒரு காலத்தில் கலைஞரை உண்டு இல்லை என்று வெளுத்து வாங்கியவர் தான்.

ஆனால் எம்.ஜி.ஆரின் ராசி வேறுவிதமானது. பத்து ரூபாய் செய்தால் நூறு ரூபாய்க்கான புகழ் தேடி வரும். ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆர் குறித்து பேசும் போது அவர்கள் வணங்கும் தெய்வத்தைப் போலத்தான் அவர் பெயரை உச்சரிக்கும் போது சிலிர்த்துப் பேசுகின்றார்கள்.

எதற்கும் உணர்ச்சி வசப்படாத அந்த பிரபல்யம் என்னிடம் சொன்ன வார்த்தை

"அவரைப் பற்றி நீ புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீ ஒருமாதம் முழுக்க பட்டினியாகக் கிடப்பது தான் வாழ்க்கை என்று உனக்கு விதி எழுதியிருந்தால் அவரின் வாழ்க்கையைப் பற்றி உன்னால் புரிந்து கொள்ள முடியும்" என்றார். "அவரின் தொடக்க தமிழக வாழ்க்கை முழுக்க பசி பசி பசி என்ற இரண்டு வார்த்தை தான் துரத்திக் கொண்டேயிருந்தது" என்றார்.

இந்தப் படத்தைப் பார்த்து எழுதத் தோன்றியதற்கு மற்றொரு முக்கியக் காரணம் சில நாட்களுக்கு முன் திருப்பூர் அருகே நடந்த தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் நிலைமையைப் பார்த்து மனதில் சொல்ல முடியாத துயரம் என்னுள் உருவானது.

கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரும் தங்களின் கடைசி காலத்தில் வயோதிகம், உடல் நலக் கோளாறு காரணமாக இயற்கை வழங்கிய உபாதைகளைப் பெற்று அவஸ்தைகளுடன் தான வாழ்ந்து மறைந்தார்கள். ஆனால் அது மக்களிடையே அனுதாபத்தை உருவாக்கியது.

எம்.ஜி.ஆருக்கு அது ஓட்டுக்களாக மாறியது. கலைஞருக்கு அவர் வாரிசுகளுக்கு வாழ்க்கை கொடுக்கவும் வைத்தது. ஆனால் விஜயகாந்த்தின் தற்போதைய நிலைமையும், அந்தக் கட்சியின் கோட்பாடுகளும் விமர்சனங்களுக்கு உட்பட்டு எரிச்சலை உருவாக்கியுள்ளது.

இயக்குநர் செல்வ மணி அவர்கள் சொன்ன வார்த்தைகள் முக்கியமானது. விஜயகாந்த்தின் பிறந்த நாள் விழாவில் சொன்னார்.

"அவர் சினிமாகாரர். அவருக்கும் அரசியலுக்கும் தொடர்பே இல்லை. அவர் வாழ்க்கை கொடுக்காத ஆட்கள் தமிழ்த் திரைப்பட உலகில் விரல் விட்டு எண்ணி விடலாம். கீழேயிருந்து மேலே வரைக்கும் அவர் வாரிக் கொடுத்த காசும், வழங்கிய வாய்ப்புகளும் மற்றொரு எம்ஜிஆர் போலத்தான் இருந்தார். இப்போது கூட காலம் கெட்டுப் போய்விடவில்லை. அவரை எங்களிடம் கொடுத்து விடுங்கள். அவர் ஒரு படத்தில் நடித்தாலே போதும். மீண்டும் ஆரோக்கியத்துடன் மீண்டு எழுந்து விடுவார்" என்றார்.

நடிகர் சரத்குமார் ஒரு படி மேலே போய் "நான் வாழும் வாழ்க்கை விஜயகாந்த் கொடுத்தது" என்றார்.

பேசிய ஒவ்வொருவரும் இப்படித்தான் பேசினார்கள். விஜயகாந்த் உடன் ஒவ்வொரு சமயத்திலும் பணிபுரிந்த பலரும் சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன். சாப்பாடு என்ற விசயத்தில் வள்ளல் போலத்தான் வாழ்ந்துள்ளார். எம்.ஜி.ஆர் போல விஜயகாந்த் கஷ்டப்பட்டவர் அல்ல. இருந்தாலும் தான் உண்ணும் உணவு போல மற்றவர்களும் எப்போதும் உண்ண வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

ஆனால் பிரேமலதா, சுதீஷ் கூட்டணி என்பது 50 ஜெ சசி கூட்டணிக்குச் சமமானது.

எத்தனை நல்லது செய்து இருந்தாலும், சிலருக்கு மட்டும் தான் அனுபவிக்க வேண்டிய வயதில் அனைத்துவிதமான அவமானங்களையும் பெற வேண்டும் என்று விதியின் கரங்கள் சுட்டிக் காட்டும் போல.

****

Arul Mozhi

வீரப்பன் சொல்கிறார்...
*எம்.ஜி.ஆர்* *முதலமைச்சராக இருந்த பொது,* *ஒருநாள் நான் ராமாவரம்*
*தோட்டத்திற்கு* *போயிருந்தேன்*. *அப்போது*
*ஒரு பழைய நாடக நடிகர்* *அங்கு வந்திருந்தார்.*
*அவரிடம்,* *என்ன* *விஷயமாக வந்திருக்கிறீர்கள* ?' *என்று கேட்டேன்*
*அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே*
*பட்டினி..ஒன்றும் முடியவில்லை*. *நான்*
*சின்னவரோட நாடகத்தில* *நடிச்சிருக்கேன்*ஏதாவது* *உதவி* *கேட்கலாம்னு* *வந்திருக்கேன் என்றார்*
'*சரி உட்காருங்க* *எம்.ஜி.ஆர் வெளிய*
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்.
சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
" இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் " என்று சொல்லிவிட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.
அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
" இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன்.
"நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.
'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்.
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.
அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப
எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். சரி..என்றார்.
வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று
தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத் தான் அதிக சந்தோஷம்.
மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
கேட்டேன்..." கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க.அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு.
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க " என்று கேட்டேன்.
சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
" எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும் " என்றார்.
எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறு
கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.
*அதனால்* *தான்*அவர் இறந்தும்* *இன்னும்*
*வாழ்ந்து* *கொண்டிருக்கிறார்*

*********

வாசிக்க....... (Kindle)



20 comments:

வருண் said...


***எம்.ஜி.ஆர் குறித்து வரக்கூடிய தகவல் அனைத்தும் வாசிக்கும் போது இதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கும்? என்று யோசிப்பதுண்டு.***

சமீபத்தில் லதா (எம் ஜி ஆர் லதா) ஒரு யு ட்யூப் வீடியோவில் (உலகறிய) சொன்ன விசயம் இது.

எம்ஜிஆர் படுத்த படுக்கையாக இருக்கும்போது அவரைப் பார்க்கச் சென்றாறாம்.

"என்ன வேர்த்து இருக்கு? காரில் ஏ சி இல்லையா? ஏ சி கார் வாங்கித் தரவா? னு உபசரித்தாராம்.

எம் ஜி ஆர் அவருக்கு அம்புட்டு க்ளோஸ்னு சொல்ல வர்ரார்.

ஏழை லதா ஏ சி கார் இல்லாமல் கஷ்டப் படுகிறார்னு என்ன உருகல்!!

பசி பத்தி பேசும் நீங்க, ஏ சி கார் சொகுசு இல்லாமல் ஒரு சிலர் வாழ முடியாதுனு எம் ஜி ஆர் கண்ணீர் விட்டதையும் சொல்லி இருக்கலாம்.

இதையெல்லாம் அழகா ஃபில்ட்டர் பண்ணி ஒரு பக்கத்தை மட்டும் எழுது பதிவுலக அரசியல் வாதியாகிவிட்டீங்க, நீங்களும்!!! ஆச்சர்யம்தான். :)

KILLERGEE Devakottai said...

எம்ஜிஆர் நல்லவரோ, கெட்டவரோ அதேநேரம் அசோகன் சந்திரபாபு போன்றோர்கள் அழிந்து போனது யாரால் என்பதையும் நினைவு கூர்வது நல்லது.

இன்று தமிழகம் அல்லோலப்பட்டு நிற்பது எம்ஜிஆர் கொண்டு வந்த ஜெயலலிதாவால்தானே...?

நான் தி.மு.க.காரன் அல்ல!

ஜோதிஜி said...

நீங்க சொன்ன லதா பேட்டி சுட்டி இருந்தால் கொடுங்க. பார்த்து விட்டு என் கருத்தையும் எழுதுறேன்.

ஜோதிஜி said...

கடைசி வாசகம் படித்து சிரித்து விட்டேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

எம்ஜியாரிடம் ஒரு குணம்! நல்லதோ கெட்டதோ அவரவர் என்ன 'கலர்க் கண்ணாடி அணிந்து அல்லது அணியாமல் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு தன்னை கார்டியனாகவே நினைத்துக் கொண்டு, அவர்களைச் சீண்டுகிறவர்களுக்கு தண்டனை கொடுப்பது எம்ஜியாருடைய குணம். அதிமுகவில் சேர்ந்த புதிதில் ஜெயலலிதா மேதினக்கூட்டத்தில் பேச மதுரை வந்தார்.
பழக்கடை பாண்டி என்கிற சண்டியர் ஜெயலலிதா காலருகே அமர்ந்துவந்தவர் என்னமோ சில்மிஷம் பண்ணப்போக ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து, நையப்புடைத்து, சோறுபோட்டுக் கையில் பணமும் கொடுத்து அனுப்பினார் என்பது அந்தநாட்களில் மிகப் பிரபலமாக மதுரை அறிந்த செய்தி. அதேபோல சாவித்திரிக்காக சந்திரபாபுவைப் படுத்தினார் என்பதும்!

ஜெயலலிதா மீது வெறுப்பிருக்கலாம். ஆனால் எம்ஜியார் கூட நினைத்துப்பார்க்க முடியாத வலிமையுடன் அதிமுகவை வைத்திருந்தார் என்பதை ஏனோ பார்க்கத் தவறி விடுகிறோமே, கில்லர்ஜி!

நான் அதிமுக ஆதரவாளனோ அனுதாபியோ அல்ல. எம்ஜியார் ரசிகன் கூட இல்லை!

கிருஷ்ண மூர்த்தி S said...

https://youtu.be/5YefIA1K4wo ஜோதிஜி! சன்டிவிக்கு லதா கொடுத்த இந்தப் பேட்டியை விட யூட்யூப் தளத்தில் வந்திருக்கிற கமெண்டுகளைப் பார்த்தாலேயே பொதுவெளியில் எத்தனை ரகசியங்கள் அம்பலமாகிக் கிடந்தன என்பதையும் பார்க்க முடியும்!

ஸ்ரீராம். said...

விஜயகாந்த் இன்றைய நிலை பார்த்து எனக்கும் வருத்தம் வரும்.  எவ்வளவு கம்பீரமாக இருந்த மனிதர்...

ஸ்ரீராம். said...

சாவித்ரிக்காக சந்திரபாபுவைப் படுத்தினார் என்பது புதிய செய்தி கிருஷ் ஸார்...  சாவித்ரியை சந்திரபாபு அந்த அளவு தொந்தரவு செய்ததாய் நான் படித்ததில்லை. அதேபோல சந்திரபாபு எம் ஜி ஆரை எல்லோருக்கும் எதிரில் மிஸ்டர் ராமச்சந்தர் என்று அழைப்பார் என்பதும் வேறு காரணங்களும்தான் மாடி வீட்டு ஏழைக்குக் காரணம் என்று படித்த நினைவு.  சமீபத்தில் கூட மோகன் ஷர்மா எனும் நடிகர் எம் ஜி ஆர் விஷயத்தால் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தின் கதாநாயக அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டார் என்று யு டியூப் பார்த்தேன்!

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அதிக வருத்தம் எனக்கு.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கும்போதே பாவமாக இருக்கிறது....

வருண் said...

ஜோதிஜி, நான் சொன்ன பேட்டி இங்கே கொடுத்துள்ள தொடுப்புக்கு சம்மந்தமில்லாதது. சம்மந்தா சம்மந்தமில்லாதவர்கள் யாருக்காவது தொடுப்புக் கொடுத்தால் இப்படித்தான் ஆகும்.

நான் சொன்ன வீடியோவில் லதா என்ன சொன்னார்னா..

எம் ஜி ஆர்க்கு உடல் நம சரியில்லாமல் இருக்கும்போது அவரைப் போய் பார்த்தேன். அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை மரணப் படுக்கையில் இருக்காரு.. அந்த ஒரு சூழலிலும் என்னை பார்த்து கேட்கிறார்..

என்ன வேர்த்து இருக்கு? கார் ல ஏ சி இல்லையா?

பக்கத்தில் உள்ளவரிடம்.. ஏ சி இல்லாமல் இது இருக்காது தெரியுமில்ல?

ஏ சி கார் வாங்கித் தரவா?

இல்லை ஏ சி கார் எல்லாம் என்னிடம் இருக்கு. அதுலதான் வந்தேன் (லதா பதில் சொன்னாராம்)

லதா எப்படி முடித்தார்னா, சாக்கிடக்கும்போது என் மேல் அவருக்கு தனி அன்பு என்பதை வெளிப்படையாக ஒரு க்ரிடிட்டாக சொன்னார்.

இந்த யு ட்யூப் வீடடியோவை தூக்கிட்டானுகளா என்னனு தெரியலை.

தொடுப்பு முடிந்தால் தர்ரேன். அப்படி தர முடியாமல் போச்சுனா, என்னைத்தான் நீங்க நம்பனும்.

நம்பலைனாலும் பரவாயில்லை! :)

வருண் said...

https://www.youtube.com/watch?v=DlhLcH0kL78

ஜோதிஜி said...



நான் முழுமையாக உங்களை நம்புகிறேன். இதற்காக மட்டுமல்ல. உங்களின் தர்க்க ரீதியான அதில் தொனிக்கும் அறத்துடன் கூடிய கோப விவாதங்களை எப்போதும் நான் நம்புவேன். ஆனால் நீங்க தான் என்னை நம்ப மாட்டுகிறீர்கள்? ஏற்கனவே ரஜினி குறித்து எழுதிய போது ஒரு பக்கம் கிரி வந்து உழுதுட்டு போனார் அப்புறம் அதன் தொடர்ச்சியாக நீங்க வந்து விதையை போட்டுவிட்டு போனீர்கள். இது என்னடா வம்பா போச்சு. இந்த அளவுக்கு நமது பங்காளிகள் ஒரு தனி நபர் மேல விருப்பமாக இருப்பார்கள் போல. நாம் ஏன் அதைக் கெடுக்க வேண்டும் என்று அதன் பிறகு ரஜினி குறித்து எழுதுவதைக் குறைத்துக் கொண்டேன்.
இப்போது லதா குறித்துக் கேட்டதற்கு நம்பகத்தன்மைக்காக அல்ல. அந்தம்மா எப்படிப் பொய் சொல்லி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது என்பதனை பார்ப்பதற்காக மட்டுமே. அதற்கு இந்த விவாதத்தில் பல காணொலித் தொகுப்புகள் வந்து விழுந்து விட்டது.
நான் நீங்க சொல்வது போல ஒரு பக்கம் சார்பு உள்ளவன் அல்லன் வருண். சில விசயங்கள் ஆச்சரியமாக எனக்குத் தெரியும். கலைஞர் மற்றும் கமல்ஹாசனை ஒப்பிடும் போது திறமை இல்லாத எம்ஜிஆர் ரஜினிக்குக் கிடைத்த புகழ் என்பது தான் இயற்கை தனக்குள் வைத்துள்ள சூட்சுமம் என்று நினைத்துக் கொள்வதுண்டு.
ப. சி குறித்து அவர் குடும்பம் குறித்து அவர்களின் பொதுவாழ்க்கை நோக்கம், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை செயல்பாடுகள் அனைத்துக்கும் நான் கொடுக்கும் மதிப்பெண்கள் பூஜ்யம். எடப்பாடி சமீபத்தில் ப சி குறித்துச் சொன்ன ஒரு பிரபல்ய வாசகத்தை இங்கே இணைத்துக் கொள்ளவும்.
நீங்க சொன்னது உண்மை தான். கலைஞரை அவரின் திறமைகளுக்காக மட்டுமே எனக்குப் பிடிக்கும். எம்.ஜி.ஆரை பல விதங்களில் எனக்குப் பிடிக்கும்,
மற்றபடி எம்ஜிஆரின் பெண் பலவீனம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதனைப் பற்றி எவரும் பொருட்படுத்தியது இல்லை. ஆனால் சமூகம் கலைஞரின் சின்ன பலகீனங்களைக் கூட பூதக் கண்ணாடி வைத்துத் தான் பார்க்கின்றார்கள்.
இருவரும் வாங்கி வந்த வரம் அப்படி.

ஜோதிஜி said...

ராம் அதிர்ச்சியான உண்மை. நம்பித்தான் ஆக வேண்டும். ஜெ அம்மா சந்தியா அவர் தொடக்க காலத்தில் பலரின் கட்டுப்பாட்டில் இருந்தவர். சந்திரபாபு கட்டுப்பாட்டிலும் சிறிது காலம் இருந்தவர். எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைப்பவர்களில் சந்திரபாபு ம் உண்டு. எனக்கு ஜெ மகள் மாதிரி என்று சொன்னவர் சந்திரபாபு.

வருண் said...

***மற்றபடி எம்ஜிஆரின் பெண் பலவீனம் என்பது அனைவருக்கும் தெரிந்தது.***

நீங்க இங்கே சொல்லியிருக்கிற..அவருக்கு 10,000 கொடுத்தார், இவனுக்கு லட்சம் கொடுத்தார் என்பதும் உலகமறீந்த விசயம் தானே? அதை மட்டும் ஏன் திரும்பத் திரும்ப சொல்கிறோம்?

மனித இயல்பே அதுதான். தனக்குப் பிடித்தவர்கள் பாஸீட்டிவ் விசய்ங்கள் அனைத்தையும் சொல்லி சொல்லி மகிழவது. நெகட்டிவ் விசயங்கள, " உலகம் அறீந்த விசயம்" என்றூ சொல்லாமல்ப் போய் விடுவது. நீங்களூம் நானும் மனிதர்கள் தானே? :)

இங்லிஸ் பேஷன்ட் படம் பார்த்தீங்கனா.. அந்த படத்தில் வரும் ஹீரோ, முகம் உடல் எல்லாம் சிதைபட்டு சாகக் கிடக்கும்போதும், அவனுக்கு அழகான இளம் பெண்கள் மேலில் உள்ள காதல் மட்டும் போகாது. எனக்கு லதா இந்த சூழலைச் சொல்லும்போது அதுதான் ஞாபகம் வந்தது. பரிதாப மாக இருந்தது அவர் நிலைமை. எம் ஜி ஆர் மட்டுமல்ல பல ஆம்பளங்க, 50, 60, 70 80 வயதிலும் 18 அல்லது 20 வயது பெண்கள் மேல் வரும் அட்ராக்சனை தவிர்க்க முடியாமல் இப்படி நடந்து கொள்வார்கள். பார்க்கும் நமக்குத்தான் புரியும். அவர்களூக்கு அது தெரியாது. வைரமுத்து பத்திக்கூட நெறயா வந்தது. எம் ஜி ஆரும் ஒரு சாதாரண ஆம்பளதான். அவர் உதவி செய்யலைனு யாரும் சொல்லவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு இளம் நடிகையை காண்ராக்ட் போட்டு கண்ரோல் பண்ணீயதும் அவர்தான், (லதாவே அதை சொல்லுகிறார்). அவர் ப்ளஸ் பாயிண்டை மட்டும் சொல்லிகொண்டே போவது போர் அடிக்கிது.

ஜோதிஜி said...

தலைவரே இந்த பதிவு மற்றும் விமர்சனங்களை நிறைய பொண்ணுங்க படிக்கிறார்கிறார்கள். நீங்க என்னை உசுப்பேத்த உசுப்பேத்த நான் பாட்டுக்கு எதையாவது 18+ எழுதிடப் போறேன். அப்புறம் ஆறு மணி நேரம் அழைத்து வறுத்து எடுப்பார்கள். பர்வாயில்லையா?

வருண் said...

பேசுறத எல்லாம் நானே பேசிடுறேன். என்னைப்போல் அனானிமஸாக இருப்பதில் இதுபோல் வசதிகள் உண்டு. உண்மையை பச்சை பச்சையா பேசலாம். உங்களுக்கு அந்த ப்ரிவிலெஜ் கெடையாது. அதனால் நீங்க அடக்கியே வாசிங்க.:)

அமுதவன் சார்.. ஆளையே காணோம். பேசும்போது நான் நலம் விசாரித்தேன்னு சொல்லுங்க! நன்றி!

ஜோதிஜி said...

என்னை விட திரைப்பட உலகின் முழு அந்தரங்களை அதுவும் 30 வருட திரைப்பட உலகில் மனிதர்களைப் பற்றி முழுமையாக அறிந்தவர் அமுதவன். நேற்று கூட அரை மணி நேரம் அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தேன். நாலைந்து பேர்கள் இருக்கின்றார்கள். வாரம் தோறும் பேசிவிடுவதுண்டு. வீட்டில் இருப்பவர்கள் போன் சூடாகப்போகுது என்று சொல்லும் அளவுக்கு.

எம்ஜிஆர் குறித்து மட்டுமல்ல சமீபகாலமாக நகை அடகுக் கடை விளம்பரங்களில் அதிகம் வந்து கொண்டிருக்கும் (அவரின் முகத் தோற்றத்தை கவனிக்கவும்) ஜேஆர் விஜயா, கையைக் கட்டிக் கொண்டு பக்கா ஜென்டில்மேன் போல மேடைகளில் காட்சியளிக்கும் ஏவிம்எம் சரவணன் என்று இரண்டு தலைமுறைகளின் பாலியல் ரீதியான விருப்பங்கள், ஆசைகள், கடந்த வந்த பாதைகள் என்று ஆயிரம் கதைகள் உண்டு. ஆனால் இதுவே கடந்த 25 வருடமாக திருப்பூரிலும் உண்டு. ஆனால் இது சின்ன வட்டத்திற்குள் கேட்க ஆட்களின்றி சுவராசியமின்றி போய்விடுகின்றது. எம்ஜிஆர் குறித்து (45 50 வயது வரைக்கும் வயிற்றுப் பசிக்காக அலைந்தார்) அவர் 50 60 வயரைக்கும் உடம்பு பசிக்காக அலைந்த கதை முக்கியமான மக்களுக்கு தெரிந்த கதைதான். அமேசான் புத்தகத்தில் கொஞ்சம் இதையெல்லாம் அங்கங்கே பதிவும் செய்து விடுவதுண்டு.

Rathnavel Natarajan said...

எம்.ஜி.ஆர் )( விஜயகாந்த் 0 அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் பின்னூட்டங்களையும் படிக்க கேட்டுக்கொள்கிறேன். நன்றி திரு ஜோதிஜி