ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு வரைக்கும் குடும்பத்தினர் திட்டும் அளவிற்கு வார இதழ்களுக்கு செலவளிக்கும் தொகை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் ஆசையுடன் விருப்பத்துடன் செலவளித்தேன். புதிய படம் பார்க்க ஆர்வமாகச் செல்பவர்கள் போலப் புதிதாக ஏதாவது ஒரு இதழ் வந்தால் வாங்கி ஆசிரியர் குழு முதல் மற்ற அனைத்தையும் ஆராய்ச்சி செய்வதுண்டு. ஒரே செலவு அதுவும் அதிக செலவு என்பது வார இதழ்களுக்காகவே இருந்தது.
வீட்டுக்கு வரும் தினசரிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும், வாரந்தோறும் வந்து கொண்டிருக்கும் சகலவிதமான வார இதழ்கள், தோன்றும் போது ஆங்கில தமிழ் தினசரி, இது தவிர மற்ற புத்தகங்கள் என்று வாங்கிக் கொண்டிருந்தேன். என் பொறுமை எல்லை மீறிக் கொண்டே வந்தது. எவரைத் திட்ட முடியும்?
ஒவ்வொரு முறையும் படித்து முடிக்கும் போது இந்த காகிதத்தை மலம் துடைக்கப் பயன்படுத்தக்கூடக் கூடாது என்பதாகத் தோன்றியது. காரணம் ஒரு சிறிய துணுக்கு செய்தியைக் கவர் ஸ்டோரியாக மாற்றுவது, அப்பட்டமாக மிரட்டல் ஜர்னலிசம், ஒரு எழுத்தாளர் தங்களுக்குப் பேட்டி அளிக்க மறுத்து விட்டார் என்பதற்காக அவர் சிக்கலில் மாட்டிய போது அடுத்தடுத்த இதழ்களில் அவரைப் பற்றிக் கவர் ஸ்டோரி வெளியிட்டும் செல்ப் எடுக்காத கேவலம், கல்வித்துறையில் உள்ள ஊழல்களைப் பற்றிப் பேச மறுத்து சூரப்பா எந்த ஊரிலிருந்து வந்தார்? என்ற ஆராய்ச்சிக் கட்டுரை என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் விபச்சாரத்னமாகவே மாறிய கொடுமையை உணர்ந்து மொத்தமாகவே நிறுத்தும் சூழல் உருவானது. கிட்டத்தட்ட மூச்சு அதன் பிறகே இயல்பாகச் சுவாசிக்க முடிந்தது.
தமிழ்த்திரைப்பட உலகம் அழிந்தால் அந்தத் துறையில் இருப்பவர்கள் வருத்தப்படுவதை விட பிரபல்யமான வார இதழ்கள் தான் வருத்தப்படும் அளவிற்கு சினிமா சினிமா என்று தொடக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் சினிமா ஜர்னலிசமாக மாறிய கொடுமையும் இப்போது உள்ளது.
இதில் கட்சி ஆதரவு, மத ஆதரவு என்ற கொள்கையின் அடிப்படையில் படிப்பவர்கள் மனிதர்களே அல்ல என்ற நோக்கத்திலும் தினசரியில் உள்ள ஆசிரியர்கள் அறம் என்றால் கிலோ என்ன விலை? என்கிற நிலைக்கும் வந்து சேர்ந்து குப்பைகளை வீட்டுக்குள் தினமும் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருக்கின்றார்கள்.
சில மாதங்களுக்கு வார இதழ்களில் ஆசிரியராக பணியாற்றுபவர்களின் மாறுதல்கள் நடந்தது. கொஞ்சமாவது இவர் ஏதாவது ஒரு கட்டுரை எழுதியிருப்பார்? அதற்காகவாவது வாங்கலாம் என்ற எண்ணமும் அதன் பிறகு தவிடுபொடியானது.
குழந்தைகள் எழுதும் நான் முதல்வரானால்? என்கிற இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் சூடுபிடிக்கத் தொடங்கியது. எழுத்துப் பிழைகள்? இது தமிழா? என்று நாம் யோசிக்க வேண்டிய கட்டுரைகள் என்று தமிழனைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கின்றது.
மொத்தத்தில் நான் எழுதுவது தமிழ். நீ வாசிப்பது உன் தலையெழுத்து? நான் கொடுப்பது தான் செய்தி? உனக்குப் புரிந்தால் என்ன? புரியாவிட்டால் என்ன? என்ற நோக்கத்தில் தான் ஒவ்வொரு நிர்வாகமும் என் கடன் பிணி செய்து கிடப்பதே என்று மாறத் தொடங்கியது.
ஆதாரம் தேவையில்லை. அவசரம் தான் முக்கியம் என்ற நோக்கத்தில் வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செய்திகளுக்கும் பின்னால் உள்ள உளவியல் தாக்குதல்களைத் தமிழர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பதனை விட இவர்களின் வியாபாரம் எப்படி உள்ளது? என்பதனை ஒவ்வொரு முறையும் எப்போதும் வாங்கும் பெட்டிக் கடைக்காரரிடம் தவறாமல் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு.
நாங்கள் முன்னிலை. நாங்கள் நம்பர் 1 என்ற கட்டியம் கூறி அலறும் வார இதழ்கள் பாதிக்குப் பாதி என்கிற நிலைக்கு வந்துள்ளது. 50 இதழ்கள் எப்போதும் விற்கும்? இப்போது 20 கூட போகமாட்டுது என்கிறார்கள். ஆனால் பெருமை பீத்தலுக்கு இங்கே குறைவில்லை.
அதாவது நாங்கள் திருந்த மாட்டோம். நீங்கள் திருந்தக்கூடாது தான் எங்கள் முதன்மையாக நோக்கம் என்பதாகத் தான் எனக்குத் தோன்றுகின்றது.
இது பராம்பரியமான இதழ், 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் சந்தையில் வெற்றிகரமாக இருக்கின்றோம் என்பது உண்மை தான்.
விபச்சாரம் என் தொழில்? அதில் என்ன தவறு உள்ளது? என்று யாராவது பொது வெளியில் உரக்கச் சொன்னால் உங்கள் பார்வை எப்படியிருக்கும்? அவர்களைப் பற்றி உங்கள் நினைப்பு எப்படியிருக்கும்?
வாசிக்க
கடைசி எழுத்து
வாசிக்க
கடைசி எழுத்து
16 comments:
அச்சு ஊடகம்... என்ன சொல்ல... சில வருடங்களுக்கு பின்னர் ஆவி, குமுதம் மற்றும் கல்கி இதழ்கள் மூன்று வாரங்களாக நூலகத்தில் இருந்து கிடைக்கிறது. எதற்காக இவற்றை படிக்க வேண்டும் எனத் தோன்றியது. முழுதும் சினிமா குப்பைகள் மற்றும் கேவல அரசியல்...
வார இதழ்கள் 30 பக்கத்தில் 20 பக்கங்கள் விளம்பரம் செய்கிறது இருப்பினும் மை விலை ஏற்றம், பெட்ரோல் விலை ஏற்றம் என்று சொல்லி விலையை கூட்டுவது தெரிந்தும் அர்த்தமற்ற செய்திகளை படிப்பதற்கு நாமேன் செலவு செய்ய வேண்டும் ?
வார இதழ்கள் பணம் கொடுத்து வாங்குவதை நான் நிறுத்தி 25 ஆண்டுகளாகி விட்டது.
அவர்களை நம்மால் எதிக்க இயலாது என்னுடையது மௌனப்புரட்சி தோல்வி அவர்களுக்கே...
ஹிந்து தமிழ் கூடவா உங்க லிஸ்டில்
இந்த நாளிதழ் தான் இப்போதை சூழலில் ஒரே ஆறுதல். அற்புதம்.
You can’t estimate the readership by printed medium only. Many people would have switched to online.
Rajan
சரியாகச் சொன்னீர்கள்.
நான் இப்போது எந்த செய்தித்தாளும், புத்தகங்களும் வாங்குவதில்லை. நானும் அப்படிதான் செலவழித்துக் கொண்டிருந்தேன்.
நீங்க சொல்வது உண்மை தான் ராஜன். ஆனால் இது குறித்து நான் தனிப்பட்ட முறையில் என்னை வைத்து என் தொடர்புகளை வைத்து பலவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு கவனித்துப் பார்த்த போது சில உண்மைகள் புரிந்தன. 1. புத்தக வடிவில் படிப்பவர்கள் (வெளிநாட்டில் வாழ்ந்தாலும்) 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதனை மட்டுமே விரும்புகின்றார்கள். நண்பர் ஒருவர் வாரந்தோறும் ஒவ்வொரு நாடாக சென்று கொண்டு இருக்கிறார். ஆனாலும் அவர் புத்தகம் வழியாக படிப்பதைத்தான் விரும்புகின்றார். கனமான புத்தகம் என்றாலும் தூக்கிக் கொண்டு செல்வதைத்தான் விரும்புகின்றார். கிண்டில் போதுமே என்ற போது அது எனக்கு பிடிக்கவில்லை என்கிறார். 2. நான் புத்தகங்களுக்கு கடந்த 30 ஆண்டுகளில் செலவழித்த தொகை மட்டுமே பல லட்சங்கள் தாண்டும். ஆனால் என் கையில் இப்போது 150 முதல் 200 புத்தகங்கள் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பலசூழ்நிலையில் இழந்து விட்டேன். பாதுகாப்பது கடினம். நம் விருப்பங்களை குடும்பத்தினருக்கு புரிய வைப்பது அதனை விட கடினம். நான் இப்போது கிண்டில் (மாதம் 166) திட்டத்தில் படிக்கின்றேன். சில வாரங்களில் ஐந்து புத்தகங்கள் கூட முடித்து விடுகின்றேன். எந்த மன உளைச்சலும் இல்லை. விசயங்களைத் தெரிந்து கொண்டால் போதும் என் மனநிலை தான் காரணம். அடுத்து அலைபேசி வாயிலாக படிப்பவர்கள் எதனையும் முழுமையாக படிப்பதில்லை. பெரிய கட்டுரைகள் முக்கியமான கட்டுரைகள் என்றாலும் அவர்களால் பொறுமையாக படிக்க முடிவதில்லை. தள்ளிக் கொண்டே போய்விடுகின்றார்கள். படங்கள் பார்க்கும் அளவிற்கு வார்த்தைகள் வாசிப்பதில் பெரிய ஈடுபாடு தோன்றுவதில்லை. கணினி வழியே படிப்பவர்கள் கொஞ்சம் பரவாயில்லை. ஓய்வு பெற்றவர்கள், விருப்பத்துடன் படிப்பவர்கள் கொஞ்சம் உண்டு. ஆனால் அச்சுப் பத்திரிக்கைகள் வாயிலாக படிப்பவர்கள் நிதானமாக ஒரு மணி நேரம் கூட படிக்கின்றார்கள். உள்வாங்குவது உரையாடுவதும் உண்டு. மகள்கள் மனைவியை நான் பலமுறை கவனித்ததுண்டு.
பத்திரிக்கை நிர்வாகம் இப்போது பதவியில் அமர்த்தி உள்ளவர்களை கவனித்துப் பாருங்கள். நாதாரித்தனத்தை நாசூக்காக செய்வது எப்படி? என்ற கலையை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களை மட்டுமே கூலிக்கு அமர்த்துகின்றார்கள்.
நான் வாழ்வதும் என் கொள்கையும் இதுவே. எவரையும் நாம் மாற்றத் தேவையில்லை. நாம் நம்மை மாற்றிக் கொண்டால் போதும். குறைந்தபட்சம் குடும்ப உறுப்பினர்களை மாற்ற வைத்தால் போதுமானது. உண்மைதான் நண்பரே.
சினிமா சினிமா சினிமா என்று தான் அடி முதல் நுனி வரை. வெறுத்துப் போய்விடுவதுண்டு.
அச்சு ஊடகம் 2019 - தமிழ்த்திரைப்பட உலகம் அழிந்தால் அந்தத் துறையில் இருப்பவர்கள் வருத்தப்படுவதை விட பிரபல்யமான வார இதழ்கள் தான் வருத்தப்படும் அளவிற்கு சினிமா சினிமா என்று தொடக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் சினிமா ஜர்னலிசமாக மாறிய கொடுமையும் இப்போது உள்ளது. - நிஜம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
மிகச்சரியாகச் சொன்னீங்க ஜோதிஜி.
வார இதழ்கள் குப்பைகள். முழுக்க முழுக்க திரைப்படம்பற்றிய செய்திகள்.
செய்தித்தாள்கள் முழுக்க முழுக்க அரசியல் சார்புக் கட்டுரைகள். இவர்கள் வாந்தியை நாம் ஏன் பணம் கொடுத்துப் படிக்க / பார்க்க வேண்டும்?!
விகடன் எவ்வளவு பாரம்பரியமான பத்திரிகை ஆனால், தற்போது அதன் நிலை?!
ஏற்கனவே, நான்கு இதழ்கள் மூடப்பட்டு விட்டன. விரைவில் விகடனும்.
எழுத்துப்பிழைகள் ரொம்ப ரொம்ப அநியாயம், ஆங்கிலக்கலப்பு அதைவிட அநியாயம்.
இப்படி தான் எழுதுவேன் படிக்க வேண்டியது உன் தலையெழுத்து என்பது போலவே எழுதுகிறார்கள். நீங்கள் கூறுவது மிகச் சரி.
தினமலர் எளிமையான "சாலை, அலுவலகம்" போன்ற வார்த்தைகளைக் கூடத் தமிழில் எழுதமாட்டேன் என்கிறார்கள்.
வயித்தெரிச்சலாக இருக்கிறது.
தினமணி, தமிழ் ஹிந்து மட்டுமே பிழை இல்லாமல், ஆங்கிலக்கலப்பு இல்லாமல் எழுதுகிறார்கள் ஆனால், இவர்களும் ஒரு சார்பு தான்.
இவர்களின் ஆங்கில கலப்பு இல்லாமல் எழுதுவதற்கு மட்டுமே நான் ஆதரவு மற்றபடி இவர்கள்மீதும் மதிப்பில்லை.
ஆக மொத்தத்தில் இவர்களுக்குச் செலவு செய்ய நான் தயாராக இல்லை.
இந்த வாரம் தான் Kindle வாங்கினேன்.. இனி இதன் மூலமாகவே படிக்கப் போகிறேன். எளிதாகவும் உள்ளது.
கிண்டில் வாங்கியதற்கு என் வாழ்த்துகள். மாதம் 166 ரூபாய் திட்டத்தில் சேர்ந்து விடுங்கள். முக்கியமான புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
கிண்டில் வாங்கியதற்கு என் வாழ்த்துகள். மாதம் 166 ரூபாய் திட்டத்தில் சேர்ந்து விடுங்கள். முக்கியமான புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
நன்றி
Post a Comment