Saturday, December 29, 2018

கவனிப்பது வேறு கவலைப்படுவது வேறு.

மகள்களில் தேர்வுத் தாளில் கையெழுத்துப் போட்டு விட்டு வரச் சென்ற போது மகள் ஒருவர் எடுத்த படம். 

எனக்கு அறிமுகம் ஆன ஆசிரியர்கள் மட்டுமல்ல? அறிமுகம் ஆகாத ஆசிரியர்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். இந்த முறை என்ன பிரச்சனையோ? என்று யோசிப்பார்கள். நான் சந்தித்த ஆசிரியர்களும், மகள்கள், ஏன் மனைவி கூட ஏன் பள்ளியில் யாரிடமும் நீங்கள் ஒன்றுமே பேசவில்லை? என்று திரும்பி வரும் போது அங்கலாய்த்துக் கொண்டே கேட்டார்கள். 

"இந்த உலகம் இனி கேள்விகளை கேட்க விரும்பாத மனிதர்களை விரும்புகின்றது. தொண்டர் என்றால் தலைவனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ரசிகன் என்றால் அவர் செய்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்ப வேண்டும்.  வாடிக்கையாளர் சேவை என்பது மறந்து போன வார்த்தை. வங்கி முதல் வாங்கும் பொருட்கள் வரைக்கும் அவரவருக்கான நியாயங்கள் அதற்கான எல்லாவிதமான உரிமைகளையும் அவர்களுக்கு வழங்குகின்றது. "

"ஒருவரின் தொடர்பு எல்லை என்பது அவர் தேவைகளுக்கு அடுத்தவர்கள் எந்த அளவுக்குப் பயன்படுகின்றார் என்பதனைப் பொறுத்தே அமைகின்றது. பயனில்லை என்றால் அவர் கலாவதியானவர் என்று அர்த்தம். மீண்டும் அவர் பலன் உள்ளவராக மாறும் போது தொடர்பு எல்லை புதுப்பிக்கப்படும். கொடுப்பவரும், வாங்குபவருக்கும் இடையே நடப்பது உறவு ரீதியான புரிதல் அல்ல. இது நவீன பண்டமாற்று முறை. இப்படித்தான் இப்போதைய உலகம் இயங்குகின்றது. அதையே விரும்புகின்றது. "

"நம் அனுபவங்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் அதனை நமக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தாலும் ஒரு கட்டத்தில் இதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நம்மை நெட்டித்தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். "

"இங்கு எந்தக்குறையையும் ஒருவர் மேல் மட்டுமே சுமத்த முடியாது. அந்தச் சங்கிலியில் அவர் ஒரு அங்கம். அவருக்கு மேலே பலரும் உள்ளனர். தொடர்புப் படுத்திப்பார்த்தால் நாம் கோபப்பட்டவரும் ஒரு விதத்தில் பாவப்பட்ட ஜீவன் தான். வணிக நோக்கங்கள் மட்டுமே கல்வித்துறையில் முன் நிற்கும் இந்தச் சூழலில் முடிந்தவரைக்கும், கிடைத்தவரைக்கும் எடுத்துக் கொண்டு உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்வது உங்களின் தனித்திறமை" என்றேன் மகள்களிடம். 

காரணம் இந்த வருடம் முழுக்க மகள்களுக்கு ஒரு வகையில் உதவியாய் இருந்தேன். அவர்களுக்கு எந்த நிலையிலும் மன அழுத்தம் தாக்கிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். முக்கியமாக என் பேச்சைக் குறைத்துக் கொண்டேன். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டேன். வித்தியாசம் தெரிந்தால் மனைவி மூலம் அதனைப் பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்தேன். பள்ளியில் 12 மணி நேரம். வீட்டில் 3 மணிநேரம் என்று அவர்களின் வாழ்க்கை முறை என்பது படிப்பு என்ற வட்டத்திற்குள் சுருக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அளவு கடந்த பாடத்திட்டம். அவசரமாக நடத்தும் ஆசிரியர்கள். முடித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. முயற்சிப்பதே உங்கள் கடமை என்று மாணவர்களின் நிலை

பலவிதங்களில் நான் கவனித்துக் கொண்டே வந்தேன். இந்தச் சமயத்தில் தலைமுறை இடைவெளியின் தாக்கத்தை முடிந்த அளவு குறைக்க என்னை மாற்றிக் கொண்டே வந்தேன். அவர்களுக்குப் பிடித்த அனிருத், ஹிப்பாப் தமிழா பாடல்களை அவர்களுடன் சேர்த்து ரசித்தேன். முக்கியப்படங்கள் வரும் போது திரையரங்கத்திற்கு அழைத்துச் சென்றேன். இடைவிடாத வாக்குவாதங்கள் தொடர்ந்து முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் மனம் சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தேன். யூ டியூப் ல் உள்ள சில தளங்களை அறிமுகம் செய்து வைத்தேன். 

இடைவெளி விட்டு முக்கியப் படங்களைச் சிடி மூலம் வாங்கிக் கொடுத்து பார்க்கச் சொன்னேன். வாட்ஸ் அப் பார்க்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க ஒரு மாதிரியாக அரசு தேர்வு என்ற பயத்தைப் போக்க முடிந்துள்ளது. பயத்தை உருவாக்கி, பயத்தை வளர்த்து, பயமுறுத்திக் கொண்டே இருக்கும் ஆசிரியர்களைப் பார்த்து நக்கலடிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். 

காரணம் படிக்க முடியாத மாணவர்கள் தங்கள் கைகளைக் கிழித்துக் கொள்ளும் நிலையெல்லாம் இந்த வருடம் கேட்க நேர்ந்தது. 

இந்த வருடத்தில் தமிழகக் கல்வித்துறையில் மிக முக்கியமான மாற்றம் நடந்ததுள்ளது. பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இனி வரும் காலங்களில் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட இனி துறை சார்ந்து எழுதப் போகும் நுழைவுத் தேர்வு தான் உங்கள் எதிர்காலத்தை நிச்சயமானதாக ஆக்கும் என்ற நிதர்சனம் இங்கே மொத்த அமைப்பையும் மாற்றியுள்ளது. பலவற்றைக் கண்கூடாகப் பார்த்தேன். 

அதன் தாக்கம் உருவாக்கிய மாற்றங்கள் எனக்குப் பல விதங்களில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஆசிரியர்கள் அதிகச் சிரத்தையெடுத்துத் தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். எல்லாவற்றையும் முழுமையாகப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது. 

தற்போதைய சூழலில் மகன் அல்லது மகள் வாழ்க்கையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும் உண்டான வாழ்க்கைக்கும் அதற்கு மேல் இரண்டு வருடம் படிக்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. வளர் இளம் பருவம் அல்லது பதின்ம வயது என்று சொல்லக்கூடிய டீன் ஏஜ் சமயத்தில் மனமும் உடலிலும் உருவாகும் மாற்றங்களைத் தாய் தந்தையர் உணர்ந்து கொண்டாலே பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். நான் எல்லாம் எப்படி இருந்தேன் தெரியுமா? என்று புலம்பத் தேவை இருக்காது. 

வயதாகும் போது நாம் மாற்றத்தை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் உருவாகும் பிரச்சனைகள் பலவற்றைப் பல இடங்களில் பார்த்தேன். எட்டாம் வகுப்பு மாணவி அவர் அம்மாவைப் போல நெடுந்தொடர் விமர்சியாக மாறியுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவனுக்குப் பீர் அடிப்பது சாதனையாகத் தெரிகின்றது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சக்கர வாகனமென்பது இயல்பானதாக மாறியுள்ளது. பள்ளி நிர்வாகம் தடை போட்டாலும் குடும்பக் கௌரவம் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த தகப்பனின் பேச்சைக் கேட்ட போது வியப்பாக இருந்தது.

ஒரு மாணவன் அல்லது மாணவி வைத்திருக்கும் அலைபேசி அத்தனை நியாயங்களையும் அடித்துத் தும்சம் செய்து விடுவதை இந்த ஆண்டு பார்த்தேன். வைத்திருக்கும் மாணவர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அருகில் உள்ள கூட்டாளிக்கூட்டமும் மொத்தமாகப் பாதிக்கப்படுகின்றது. 

காரணம் எப்படி? எதனை? எதன் பொருட்டுப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவதற்குள் அனைத்தும் இயல்பாகக் கிடைத்து விடுவதால் அதன் மதிப்பு பயன்படுத்துபவர்களுக்குத் தெரிவதில்லை என்பது தான் இந்த ஆண்டு பல சமாச்சாரங்கள் மூலம் கண்டறிந்த உண்மை. இதற்கிடையே தான் ஒவ்வொருவரும் கடந்து வர வேண்டியுள்ளது. 

இப்போதைய மாற்றங்கள் எதுவும் இயல்பானதாகத் தெரியவில்லை. எல்லாமே படிப்படியாகத் திட்டமிட்டு ஊடகங்கள் மூலம் திணிக்கப்படும் ஒன்றாகவே இருப்பதால் தரம் குறைந்த பொருட்கள் விலை அதிகமாகவும், தரமிக்கப் பொருட்கள் விலை மலிவானதாகவும் மாறியுள்ளது. 

வாழ்க்கை முறையும் அப்படித்தான் உள்ளது. 

தாய் தந்தையர் சரியாக இருந்தால் போதும். ஆசிரியர்கள் மேல் அதிகத் தவறு சொல்லத் தோன்றாது. எனக்குத் தோன்றவில்லை. குழந்தைகள் என்பவர்கள் தனியான ஆத்மா. எத்தனை கவலைகள் கவனிப்புகள் இருந்தாலும் உங்களின் கவனிப்பு செல்லாக்காசாகி விடும். அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

என்னைக் கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருந்த மனைவிக்கு இப்போதெல்லாம் ஒரே கேள்வி? 

ஏன் இப்படி ஓரேடியாக மாறிவிட்டார்?

20 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தாய் தந்தையர் சரியாக இருந்தால் போதும். ஆசிரியர்கள் மேல் அதிகத் தவறு சொல்லத் தோன்றாது.

உண்மை ஐயா

Jayakumar Chandrasekaran said...

ஏன் இப்படி ஓரேடியாக மாறிவிட்டார்?
ஒரே பதில் Demonetization and GST.
Jayakumar

G.M Balasubramaniam said...

என்னவெல்லாமோ எண்ணங்கள் யாராவது பேசிப் புரிந்து கொள்கிறார்களா வளரும் பிள்ளைகள் சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இருக்கிறார்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

// நவீன பண்டமாற்று முறை //

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பல நேரங்களில் என்னை கறிவேப்பிலையாக நினைத்துக் கொள்வதுண்டு... அதனால் மனதில் திருப்தி வந்து விடும்...

Thulasidharan V Thillaiakathu said...

வாடிக்கையாளர் சேவை என்பது மறந்து போன வார்த்தை. வங்கி முதல் வாங்கும் பொருட்கள் வரைக்கும் அவரவருக்கான நியாயங்கள் அதற்கான எல்லாவிதமான உரிமைகளையும் அவர்களுக்கு வழங்குகின்றது. "//

மிகவும் சரியான வரிகள்....இதற்கு அடுத்த வரியை நான் மிகவும் மிகவும் அப்படியே வழி மொழிகிறேன்...

//"ஒருவரின் தொடர்பு எல்லை என்பது அவர் தேவைகளுக்கு அடுத்தவர்கள் எந்த அளவுக்குப் பயன்படுகின்றார் என்பதனைப் பொறுத்தே அமைகின்றது. பயனில்லை என்றால் அவர் கலாவதியானவர் என்று அர்த்தம். மீண்டும் அவர் பலன் உள்ளவராக மாறும் போது தொடர்பு எல்லை புதுப்பிக்கப்படும். கொடுப்பவரும், வாங்குபவருக்கும் இடையே நடப்பது உறவு ரீதியான புரிதல் அல்ல. இது நவீன பண்டமாற்று முறை. இப்படித்தான் இப்போதைய உலகம் இயங்குகின்றது. அதையே விரும்புகின்றது. "//

அப்பட்டமான உண்மை இது...

//வணிக நோக்கங்கள் மட்டுமே கல்வித்துறையில் முன் நிற்கும் இந்தச் சூழலில் முடிந்தவரைக்கும், கிடைத்தவரைக்கும் எடுத்துக் கொண்டு உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்வது உங்களின் தனித்திறமை"//

100% சரி...நான் சந்திக்கும் குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும் குழந்தைகள் தங்கள் ஆசிரியர்கள் பற்றி புலம்பும் போது நான் அவர்களுக்குச் சொல்லுவதும் இதேதான்..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தாய் தந்தையர் சரியாக இருந்தால் போதும். ஆசிரியர்கள் மேல் அதிகத் தவறு சொல்லத் தோன்றாது. //

மிகவும் உண்மையான கருத்து...

கீதா

Avargal Unmaigal said...

///
ஒருவரின் தொடர்பு எல்லை என்பது அவர் தேவைகளுக்கு அடுத்தவர்கள் எந்த அளவுக்குப் பயன்படுகின்றார் என்பதனைப் பொறுத்தே அமைகின்றது. பயனில்லை என்றால் அவர் கலாவதியானவர் என்று அர்த்தம். //

உண்மையை நிர்வாணமாக்கி விட்ட வரிகள்

'பரிவை' சே.குமார் said...

தாய் தந்தையர் சரியாக இருந்தால் போதும்....

உண்மை அண்ணா...

அருமையான கட்டுரை.

Rathnavel Natarajan said...

இப்போதைய மாற்றங்கள் எதுவும் இயல்பானதாகத் தெரியவில்லை. எல்லாமே படிப்படியாகத் திட்டமிட்டு ஊடகங்கள் மூலம் திணிக்கப்படும் ஒன்றாகவே இருப்பதால் தரம் குறைந்த பொருட்கள் விலை அதிகமாகவும், தரமிக்கப் பொருட்கள் விலை மலிவானதாகவும் மாறியுள்ளது. - நிஜம். அருமையானபதிவு. நன்றி.

ஜோதிஜி said...

இன்றைய ஒவ்வொரு மாற்றத்திற்கும் மக்களின் ஆதரவு தான் என்னை அதிகம் யோசிக்க வைக்கின்றது. ஏற்றுக்கொள்ளாத எவரும் வாழத் தகுதியற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

ஜோதிஜி said...

வீட்டுக்குள் ஒரு வாழ்க்கை வெளியுலகம் வேறு விதமான வாழ்க்கை என்ற இரண்டு வெவ்வேறு விதமான சக்கரத்தில் ஒவ்வொரு குழந்தைகளும் சுழன்று கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது. 1990 க்கு முன்பு இந்த வாழ்க்கை வேறு விதமாக இருந்தது. இப்போது முற்றிலும் வேறு விதமாக இருப்பதால் இன்றைய பெற்றோர்கள் தான் முழுமையாக பொறுப்பு ஏற்க வேண்டியதாக உள்ளது.

ஜோதிஜி said...

2018 ஆம் ஆண்டு முழுக்க நடந்த பல சம்பவங்கள் இதையேதான் உணர்த்தியது. நம்மை இழக்காமல் இருப்பது தான் இன்றைய வாழ்வின் முக்கியமாக அம்சமாக எனக்குத் தெரிகின்றது.

ஜோதிஜி said...

கணவன் மனைவி இரண்டு பேர்களும் வேலைக்குச் செல்லும் இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் நான் பார்த்த பார்த்துக் கொண்டிருக்கும் சூழல் இதை எழுதத் தோன்றியது.

ஜோதிஜி said...

நான் பார்க்கும் ஆசிரியர்கள் அனைவரும் 1990 க்குப் பிறகு பிறந்தவர்களாகவே உள்ளனர். முப்பது வயது அருகே அவர்கள் வந்த போதும் கூட அவர்களால் வெளியுலக அனுபவம் எதையும் உள்வாங்காமல் அல்லது அது அவர்களின் வாழ்கையில் தேவையில்லாமல் வளர்ந்து ஆசிரியர்களாக மாறி உள்ளனர். சமூக அறிவு அதிகம் உள்ளவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்கும் வெறும் கல்வி அறிவு மட்டுமே பெற்று ஆசிரியர்களாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது. அது அவர்களின் நடத்தை, பாடம் போதிக்கும் விதம், குழந்தைகளை வழிநடத்தும் விதம் என்று எல்லா நிலையிலும் பிரதிபலிக்கின்றது.

ஜோதிஜி said...

உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், அதிக செல்வாக்கில் இருப்பவர்கள் அனைவரும் வாயை திறக்கவே கூடாது என்பது பொதுவிதியாக இங்கே உள்ளது. அதுவே குடும்பத்தில் காதைமட்டுமே திறந்து வைத்துக் கொண்டு வாயை மூடி வைத்துக் கொள்ளும் போது முக்கால் வாசி பிரச்சனைகள் எளிதாக நல்லவிதமாக முடிவுக்கு வருகின்றது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

ஜோதிஜி said...

வளரும் பிள்ளைகள், வளர்ந்த பிள்ளைகள் இவர்கள் இருவரின் உலகம் வெவ்வேறானது. இதில் தான் நம் உலகத்தை பொருத்திக் கொள்ள வேண்டும்.

ஜோதிஜி said...

தொழில் வாழ்க்கை சூழலில் முதலாளிகளுக்கு உருவான துன்பம் இது. காலம் கடந்து இது நல்ல பாதையில் கொண்டு சேர்க்கும் நம்புகிறேன். அதிகாரிகள் ஒத்துழைப்பார்களா? என்று தெரியவில்லை.

ஜோதிஜி said...

பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு பெற்றோர் கூட்டத்திலும் பெற்றோர்கள் ஆசிரியர்களிடத்தில் எதிர்பார்க்கும் ஒவ்வொரு விசயத்தையும் நான் கவனித்த போது நான் (மட்டும்) வேறொரு உலகத்தில் வாழ்வதாக எனக்குத் தோன்றும்.

அகலிக‌ன் said...

படிப்போ, பக்கத்து குழந்தையுடன் விளையாடோ/சண்டையோ எதையும் குழந்தைகள் உணர்ந்து செய்யவேண்டும் என்று சொல்வதும் சில உத்தரனங்களைச்சொல்லி அவர்களுக்கு உணர்த்துவதுமே நம் வேலை.அவை முதிச்சியடைய சமயம் வாய்க்கும்போதெல்லாம் நினைஊட்டினாலே போதுமானது. மற்றபடி ஒவ்வொரு ரோஜாவும் தனித்தனிதான்.

ஜோதிஜி said...

என்ன திடீர்ன்னு. ரொம்ப நாளைக்குப் பிறகு? நலமா?