Sunday, June 24, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2


பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள கிராமத்தில் அவர்கள் வசித்து வருகின்றார்கள். மகள் பத்தாம் வகுப்பில் 420 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். என்னிடம் அழைத்துச் சொன்னார்கள். "என்ன படிக்க வைக்கப் போகின்றீர்கள்?" என்று கேட்டேன். "அது தான் எங்களுக்கும் தெரியவில்லை" என்றார். நான் எந்த ஆலோசனையும் அப்போது சொல்லவில்லை. 

ஏதாவது தேவை எனில் அழைக்கவும் என்று சொல்லியிருந்தேன். அதன் பிறகு அழைக்கவே இல்லை. 

சில மாதங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது மகள் சரியாகச் சாப்பிடுவதில்லை. தூங்கியே பல நாட்கள் ஆகி விட்டது. உடம்பு எலும்பும் தோலுமாக இருக்கின்றார் என்றார். அவர்கள் வீட்டுக்குப் பின்புறம் அரசு மேல்நிலைப்பள்ளி உண்டு. 

ஆனால் அதில் அவர்கள் சேர்க்காமல் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளியில் மெட்ரிக் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பில் சேர்த்து இருந்தார்கள். காலையில் ஆறரை மணிக்குப் பள்ளி வாகனத்தில் சென்று இரவு எட்டு மணிக்கு வீடு வந்து சேர்வார். 

காலையில் சாப்பிடுவதில்லை. மதியம் சாப்பாடு பாதி அப்படியே திரும்பி வந்து விடும். இரவு அவசரம் அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் பரிட்சைக்குப் படிக்க உட்கார்ந்தால் தூங்க பத்து மணிக்கு மேல் ஆகி விடும். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து மீண்டும் தயாராக வேண்டும். பத்தாம் வகுப்பில் தினமும் பரிட்சை. பல நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும் உண்டு என்றார்கள். மெட்ரிக் பள்ளியில் படித்தாலும் அந்தக் குழந்தைக்கு நகர்ப்புறத்தில் படிக்கும் குழந்தையைப் போல வெளிச்சம் இல்லை என்பதனை விசேடத்தில் பேசும் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் அம்மா வேறுவிதமாக அலுத்துக் கொண்டார். 

இந்த வருடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் பார்த்து சொன்னேன். தயவு செய்து தனியார் பள்ளிக்கூடம் பக்கம் போக வேண்டாம். காரணம் உங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் என்ற பெயரில் கொள்ளைக்கூட்டம் போலச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆசிரியர்கள் எவரும் எனக்குத் தெரிந்து சிறப்பானவர்களாக இல்லை. நிர்வாகம் கொடுக்கும் 4000 சம்பளத்திற்குத் தகுந்த மாதிரி தான் ஆசிரியர்கள் இருப்பார்கள். மனமயக்கம் தேவையில்லை. 

வீட்டுக்குப் பின்னால் உள்ள பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்றேன். சரி என்று சொல்லிவிட்டு சென்றவர் அதன் பிறகு அழைக்கவில்லை. நானும் மறந்து விட்டேன். 

நேற்று அழைத்து இருந்தார். அவர் மகள் படித்த தனியார் பள்ளிக்கூடமே வீட்டுக்கு வந்து 400 மதிப்பெண்கள் பெற்று இருப்பதால் பாதிக் கல்விகட்டணம் கட்டினால் போதும் என்று மண்டையைக்கழுவி அங்கேயே அன்றே அவர்களாகவே சேர்த்து விட்டார்கள். மொத்தத் தொகை எவ்வளவு என்றேன். பதினோராம் வகுப்பிற்கு 60,000 கட்ட வேண்டுமாம். ஆனால் இவருக்கும் 30,000 போதும் என்றார்களாம். 

அடப்பாவிகளா? திருப்பூரில் உள்ள மொத்த தொகையைப் போல இரண்டு மடங்காக இருக்கின்றதே என்று நினைத்துக் கொண்டேன். 

இதையெல்லாம் விடக் கொடுமை நீட் பரிட்சைக்கு இவர்களிடம் கேட்காமல் பெயரைச் சேர்த்துள்ளார்கள். 30,000 என்று சொல்லி அனுப்பி உள்ளார்கள். இவர்கள் பதறி கதறிக் கொண்டு போய் அய்யா சாமி எங்கள் புள்ள டாக்டராகப் படிக்க ஆசையில்லை. அதை எடுத்துடுங்க என்று சொல்லியிருக்கின்றார்கள். 

டாக்டர் இல்லை என்றால் என்ன? பொது அறிவு வளர வேண்டாமா? என்று சொல்லி திகிலூட்டியிருக்கின்றார்கள். 

நீதியும் பழமொழியும். 

அப்போது  - கந்தையானாலும் கசக்கி கட்டு 

இப்போது -  கௌரவம் காக்க தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு கண்ணீர் விடு.

எனது பத்தாவது மின் நூல் (தரவிறக்கம் செய்ய)

50 வயதினிலே

15 comments:

Avargal Unmaigal said...

மக்களின் மனநிலை மாறவில்லையெனில் இப்படி ஏமாற்றும் அரசாங்களையும் கல்வி நிறுவனங்களையும் குறை சொல்லி பயனில்லை

திண்டுக்கல் தனபாலன் said...

கொள்ளையடிக்கும் கூட்டம்...

எம்.ஞானசேகரன் said...

அநியாயம், வழிகாட்ட யாருமில்லை யா?

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள அருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள பகிர்வு ஐயா
பெற்றோர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்

G.M Balasubramaniam said...

அது என்னவோ தெரியவில்லை அதிக கட்டணம் கட்டி ஏமாறுவதில் மக்களுக்கு திருப்தி அதில் ஒரு வரட்டுப் பெருமையும் கூட

UmayalGayathri said...

மக்கள் மன நிலை இப்போது இப்படித்தான் போய்ட்டு இருக்கு....

ஜோதிஜி said...

மாறிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் குழந்தைகளும் அவர்கள் எண்ணங்களும் முழுமையாக மாறிவிட்டது. 15 வயதிற்குள் அவர்கள் பேசும் பேச்சுக்கள், எதிர்பார்க்கும் நோக்கங்கள் அனைத்தும் நாம் 30 வயதில் யோசித்த விசயங்களாக இருக்கின்றது. இதுவும் இந்த இடத்தில் முக்கியமானது.

ஜோதிஜி said...

ஆனால் இதற்கு முக்கியமான காரணம் மக்களின் மனோபாவம் தான்.

ஜோதிஜி said...

இது போன்ற விசயங்களில் அரசாங்கம் போராடிக் கொண்டு தான் இருக்கின்றது. கௌரவம் என்ற வார்த்தை இங்கே முக்கியப் பங்கு வகிக்கின்றது. அது தான் பிரசச்னையின் தொடக்கம்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

உங்களைப் போன்றவர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு வாழ்த்துக்குரியது.

ஜோதிஜி said...

அழகான விமர்சனம்.

ஜோதிஜி said...

நலமா? நீங்க சொல்வது உண்மைதான்.

Thulasidharan V Thillaiakathu said...

ஏமாற்றுபவனைச் சொல்வதை விட ஏமாறுபவர்களைத்தான் சொல்ல வேண்டும் ஜோதிஜி நீங்கள் சொல்லியிருப்பது போல் மக்களின் மனோபாவம்தான் காரணம்

கீதா