சென்ற வருடத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எப்படியும் சில பேர்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். மாறி மாறி வருவார்கள். நான் ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டில் இருப்பேன் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களின் முக்கியத் தொழில் சிடி விற்பது. பழைய, புதிய மற்றும் பல அந்தரங்க குறுந்தகடுகள்.
ஆனால் இவர்களைக் கடந்த ஏழெட்டு மாதங்களாகக் காணவில்லை. அவ்வப்போது இடை நாட்களில் கண்ணில் தென்படுவார்கள். இரண்டு நாட்கள் உள்ளே வைத்திருந்தார்கள் என்பார்கள். மறுபடியும் அவர்கள் எப்போதும் போலத் தொழிலைத் தொடங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அடக்கவில்லை பத்து முதல் பதினைந்து ரூபாய் வரும். நாற்பது முதல் ஐம்பது ரூபாய் வரைக்கும் விற்பார்கள். நான் சிடி யை வாங்கியதும் தயாரிப்பாளர் யார் பெயர் போட்டுள்ளது என்பதனை ஆவலுடன் கவனிப்பேன்.
இப்போது அருகே உள்ள பெரிய சிடி கடைகளில் தோன்றும் போது வாங்குவதுண்டு. இரண்டு நாளைக்கு முன் வெளியான படம் முதல் அனைத்துப் படங்களும் வைத்து இருப்பார்கள். திருப்பூரில் கமிஷனர் அலுவலகம் திறந்தது முதல் அவ்வப்போது திடீரென்று புதிய மறுமலர்ச்சி உருவாகும். திடீரென்று இது போன்ற கடைகள் மூடப்பட்டு இருக்கும். காரணம் கேட்டால் ஆபிசர் ரொம்ப ஸ்டீரிக்டு என்பார்கள். ஒரு வாரத்தில் பேச்சு வார்த்தை முடிந்து மீண்டும் மக்கள் பணி தொடங்கும்.
ஒவ்வொரு முறையும் சிடி கடையில் நுழைந்து மகள்கள் தேடிக் கொண்டிருக்கும் போது உள்ளே உள்ள ஆயிரக்கணக்கான குறுந்தகடுகளுக்குப் பின்னால் உள்ள உழைத்த உழைப்பாளர்கள், கற்பனைவாதிகள், முதலீடு போட்ட தயாரிப்பாளர் போன்றோர்களை மானசீகமாக நினைத்துக் கொள்வதுண்டு.
பல சிந்தனைகள் மனதில் வந்து மோதும்.
திரைத்துறையில் நான் அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டது உரிமங்கள் குறித்து. காப்பிரைட் என்கிறார்களே? அதைப்பற்றித் தான் அதிகம் பேர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பேன். ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நம் தமிழ்த் திரைப்பட உலகில் ஒவ்வொரு முறையும் புதிய தயாரிப்பாளர்கள் வந்து பலியாடாக மாறி வெட்டப்பட்டு ரத்தச் சகதியோடு வெளியே வீசப்பட்டு இருப்பார். மற்றொருவர் வருவார். அவரும் அதோகதி தான்.
தயாரிப்பாளர் கொண்டு வந்து கொட்டிய பணம் யார் யாரோ வீட்டில் எது எதுவாக மாறியிருக்கும். தயாரிப்பாளர் எங்கே இருப்பார்? என்பதனை எந்தப் பத்திரிக்கையும் ஆராய்ச்சி செய்வதில்லை. அடுத்தச் சினி பிட்ஸ் க்கு தாண்டியிருப்பார்கள்.
பல தயாரிப்பாளர்களின் கதை தெரியும். அவர்கள் அனுபவித்த வலியும் வேதனையும் தெரியும். அவர்கள் புறக்கணிப்பட்ட ஒவ்வொரு நிகழ்வும் புரிந்து அவர்கள் மேல் பரிதாப்படவே முடிந்தது. ஆனாலும் அரசியலை விடத் திரைப்பட உலகம் மிகப் பெரிய மாயச் சுழல். சிக்கினாலும் நாங்க சிங்கம்லே என்றபடி தினந்தோறும் உள்ளே போய்ச் சிக்கிக் கொள்பவர்கள் தான் அதிகம்.
கோடம்பாக்கத்தில் இன்றும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கேட்டுப் பாருங்கள். திருப்பூர் முதலாளிகள் என்றால் தனி மரியாதை. காரணம் ஒன்றுமே தெரியாமல் எல்லாமே தெரிந்தது போல உள்ளே சிக்கிக் கொள்ளும் புனித ஆத்மாக்கள். பத்து முதலாளிகளில் மூன்று பேர்களும் இன்று வரையிலும் கோடம்பாக்கம் மேல் ஒருவிதமான கவர்ச்சி இருந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்தவர்கள் அதிகம். இழக்கத் தயாராக இருப்பவர்களின் பட்டியலும் நீளம் தான்.
ஒவ்வொரு முறையும் இணையத் தளங்களில், பேருந்துகளில், அலைபேசியில் கேட்கும் பாடல்கள், அதற்குப் பின்னால் உள்ள உழைப்பு போன்றவற்றை யோசித்துப் பார்ப்பதுண்டு.
காரணம் நடன இயக்குநருக்குப் பெரிய அளவுக்கு மரியாதையில்லை. படம் முடிந்தவுடன் தான் அவருக்கான பணம் கொடுக்கப்படுகின்றது. அவரின் பல முறை நினைவூட்டலைப் பார்த்துள்ளேன். ஆனால் அவர்களின் உழைப்பு அசாதாரணமானது. மக்குச் சாம்பிராணியை வைத்துக் கொண்டு யாகம் வளர்க்க வேண்டிய பணி அவருடையதாக இருக்கும்.
நடனத்தை முறைப்படி கற்றுக் கொள்ளாமல் இருக்கும் ஒவ்வொரு கதாநாயகனுக்கும் பாடல் காட்சிகள் என்றாலே எரிச்சலாகத்தான் உள்ளது. நான் பார்த்த உண்மையிது.
ஒரு பாடல் அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டால் அதில் வர வேண்டிய ஒவ்வொரு பிரேமும் நடன இயக்குநரின் செயலாக்கத்தை நிரூபிக்க வேண்டியதாக இருக்கும். மைக்ரோ செகண்ட்டில் கடக்கும் பிரேமில் வைக்க வேண்டிய காட்சியைக் கஷ்டப்பட்டு எடுத்து இருப்பார். எடிட்டர் சர்வ சாதாரணமாக வெட்டித் தூக்கி எறிந்திருப்பார். கோவித்துக் கொள்ள முடியாது. சிங்கம் இருக்கும் கூண்டுக்குள் செய்தே ஆக வேண்டிய சாகச வித்தையது. நடன இயக்குநருடன் பேசிய போது அவர்களின் வாழ்க்கை எத்தனை வலி நிறைந்தது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது.
அவர்கள் நம் ரசனைக்குக் கொடுக்கும் உழைப்பு என்பது விலைமதிப்பற்றது.
ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமானது. இது தான் ரசனை என்பதனை எவராலும் வரையறை செய்து விட முடியாது. சிலருக்கும் பாடலை மட்டும் கேட்கப் பிடிக்கும். சிலருக்குக் காட்சிகளுடன் சேர்த்துப் பார்த்தால் தான் பிடிக்கும். சிலருக்கு அதில் நடன அசைவுகள் மட்டுமே பிடிக்கும். சிலருக்குப் பாடல் வரிகள், இசைக் கோர்வையின் ஜாலங்கள், ஒளிப்பதிவு என்று பல்வேறு பரிணாமம் அடங்கிய இந்தப் பாடல் காட்சியை எப்படி இயக்குநர் படமாக்குகின்றார் என்பதனை நேரிடையாகக் கண்ட போது வியப்பாக இருந்தது.
நான் அறிந்தவரையில் தமிழ் திரைப்பட உலகில் இயக்குநர் ஷங்கர் போல ஒவ்வொரு சின்னச் சின்ன விசயத்திலும் தன் ஆளுமையை, அக்கறையை வெளிப்படுத்துபவர்கள் மிக மிகக்குறைவு. கதாநாயகிக்குப் பின்னால் நடனமாடும் இருபது பேர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி அவர்கள் உடைகள் முதல் முகவெட்டு வரைக்கும் கவனம் செலுத்துபவர் இன்னும் நாலைந்து பேர்கள் இருக்கின்றார்கள்.
நான் சந்தித்த, கேள்விப்பட்ட இயக்குநர்கள் அனைவரும் பாடல் காட்சிகளை, சண்டைக்காட்சிகளை அவரவர் பொறுப்பில் கொடுத்து விட்டுக் கண்டு கொள்ளாமல் இருப்பவர்கள் தான் அதிகம். ஆனால் இயக்குநர்கள் தனக்குச் சேர வேண்டிய கட்டிங் விசயங்களை மட்டும் கறாராகப் பேசி கறந்து கொள்கின்றார்கள். ஒவ்வொரு துறைக்கும் ஒரு அளவீடு வைத்துள்ளார்கள். படம் முடியும் போது வாங்கிய சம்பளம், பெற்ற சம்பளம் என்ற வகையில் இரட்டை மாட்டு வண்டியில் புத்தியுள்ள இயக்குநர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்கின்றனர்.
விபரமான தயாரிப்பாளருக்குத் தெரியும். தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. சங்கம் பக்கம் இழுத்து விட்டால் உள்ளே முதலுக்கும் மோசமாகி விடும்.
இதனையெல்லாம் தாண்டித்தான் நம் ரசனைக்குத் தீனி கிடைக்கின்றது.
வசனம் சார்ந்த விசயங்களை ஒரு நாளைக்கு அதிக பட்சம் ஐந்து ஷாட் கள் எடுத்து விட்டால் போதும் என்கிற ரீதியில் செயல்படுபவர்கள் இயக்குநர் பாணியில் சொல்லப்போனால் விரைந்து படத்தை எடுத்து முடிக்கக்கூடியவர். கே.எஸ். ரவிக்குமார். இயக்குநர் ஹரி போன்றவர்கள் இன்னும் கொஞ்சம் வேகமானவர்கள். இவர்கள் பாடல் காட்சிகளை எப்படி எடுக்கின்றார்கள் என்பது குறித்து என்னால் யூகிக்க முடியவில்லை.
காரணம் நேற்று இந்தப் பாடல் காட்சியைப் பார்த்த போது ஒவ்வொரு முறையும் இந்தக் காட்சிகளைக் காணும் போது இசை, வரிகள், இடம், சொல்ல வந்த பொருள், இசைக்கோர்வையின் ஜாலங்கள், எடிட்டிங் செய்த விதம் என்று எல்லாநிலையிலும் திரும்பத் திரும்பப் பார்க்க வைத்தது. நாம் பார்க்கும் ஒவ்வொரு திரைப்படக் காட்சிகளும் ஏறக்குறைய முப்பது துறைகளைத் தாண்டி தான் நம் கண்ணில் வந்து களிப்பூட்டுகின்றது.
ஒவ்வொரு துறைகளும் ஒவ்வொரு விதங்களில் சிறப்பு. இதில் உள்ள துறைகளில் ஒன்று சிறப்புச் சப்தம் என்ற துறை என்னை மிகவும் கவர்ந்தது. தெரிந்த நண்பர் ஒருவர் அந்தத் துறையில் இருக்கின்றார். மிகவும் பிரபல்யமாக எப்போதும் பிசியாக இருக்கக்கூடியவர். ஒரு நாள் முழுக்க அவருடன் இருந்த போது தான் சில ஆச்சரியங்களைக் கண்டேன். கணினி வந்தவுடன் இந்தத் துறையின் வளர்ச்சி நம்ப முடியாது அளவிற்கு வளர்ந்துள்ளது. அந்தச் சிறப்புத் சப்தங்கள் இந்தப் பாடலில் சில இடங்களில் வருகின்றது. யார் செய்தார்கள் என்று தெரியவில்லை.
தமிழ்த் திரைப்படத்தில் பொறுக்கித்தனம் என்பதற்கும், மது மாது என்பதனை வைத்து மட்டும் எடுக்கும் படத்திற்கு நிஜ வாழ்க்கையிலும், திரைப்பட வாழ்க்கையிலும் அப்படியே பொருந்திப் போகக்கூடியவர்கள் மூன்று பேர்கள்.
இதில் நடித்துள்ள ஜெய், கங்கை அமரன் மகன் பிரேம்ஜி, டி.ஆர் மகன் சிலம்பரசன்.
ஆனால் ஜெய் இசை அமைப்பாளர் தேவா வுக்குச் சொந்தக்காரர். உருண்டு புரண்டு உள்ளே வந்து சில படங்களிலும் தன் திறமையைக் காட்டிய போது இப்போது அவர் காட்டும் திறமைகள் அனைத்தும் இரவு பொழுதுக்குள் அடங்கி விடுகின்றது.
ஒரு பாடல் காட்சியைக் கவனிக்கும் போது இது போன்ற அனைத்து விசயங்களையும் கடந்து ரசிப்பதும் ஒரு கலை. அந்தக் கலையை இந்தப் பாடல் காட்சி எனக்குத் தந்தது.
11 comments:
பாடல் ரொம்பவே இனிமையாக இருந்தது...
மேலும் சில குறிப்புகள் 7 - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.
கலையை வளர்க்க நடிகையுடன் கொடைக்கானலில் ரூம் போட்டு செக் புக்கையே அன்பளிப்பாக கொடுத்த முதலாளி என்கிற கதையை குறிப்பிடாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்
இப்போதுதான் படித்தேன். தொடர்கின்றேன்.
சிறப்பான குறிப்பு. திரைப்படங்களைப் பார்க்கும்போதும் தொழிலாளர் சார்ந்தே சிந்திக்கிறீர்கள். பாராட்டுகள்.
திரைப்படம் பற்றிய அறியாத பல தகவல்களை அள்ளிக் கொட்டியுள்ளீர்கள் ஐயா
நன்றி
(எழுத்துப் பிழை காரணமாக முந்தைய கருத்தினை நீக்கம் செய்துவிட்டேன் ஐயா)
திரைப்படங்களின் பின்னணி விஷயங்கள் என்பது ஒரு சிமிழுக்குள் அடைபடுகின்ற விஷயமல்ல; சுஜாதா இரு நாவல்களில் தொட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். சுந்தரி என்ற பத்திரிகையில் ஒரு தொடர்கதை ஆரம்பித்துவிட்டுப் பத்திரிகை நின்றுபோனதால் அந்தத் தொடரை நிறுத்திவிட்டார்.கரைந்த நிழல்கள் என்று அசோகமித்திரன் ஒரு நாவலில் பல செய்திகளைச் சொல்ல முனைந்திருப்பார். எத்தனை எழுதினாலும் எழுதித் தீராத பக்கங்கள் என்பவை இருந்துகொண்டே இருக்கும்.
சார்லி சாப்ளினின் வரலாற்றைப் படித்தபோது, அவர் கூறிய, நான் ரசித்தனவற்றில் ஒன்று : ஒவ்வொரு காட்சியமைப்பின்போதும் ஒவ்வொரு பிரேமிற்குள் அடங்கும் அனைத்தையும் நுணுக்கமாக அவர் பார்ப்பாராம்.... நடிகர் என்பதற்கு அப்பாற்பட்டு படத்தையும் இயக்கியவர் என்ற நிலையில் அவர் காட்டிய அந்த ஆர்வம் பல வெற்றிகளைக் குவிக்கக் காரணமானது எனலாம். அதுபோலவே திரைக்குப் பின் பணியாற்றும் கலைஞர்களின் பணி அரிதாகவே நினைவுகூறப்படுகிறது.
மிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...
"தயாரிப்பாளர் கொண்டு வந்து கொட்டிய பணம் யார் யாரோ வீட்டில் எது எதுவாக மாறியிருக்கும். தயாரிப்பாளர் எங்கே இருப்பார்? என்பதனை எந்தப் பத்திரிக்கையும் ஆராய்ச்சி செய்வதில்லை."
இது உண்மை தான். தாணு போன்ற வெகு சிலரே தயாரிப்பின் நுணுக்கம் அறிந்து அதை திறம்பட செயல்படுத்துகிறார்கள். மற்றவர்கள் பணம் இருக்கிறது என்று தயாரிப்பாளராகி, மகனை நடிக்க வைக்க தயாரிப்பாளராகி, சினிமா என்ற கவர்ச்சியில் தயாரிப்பாளராகி படமெடுப்பதால், அவர்களால் இதன் சூட்சுமம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள்.
எடுக்கப்பட்ட படம் வெளி வராமல் இருப்பதே நூற்றுக்கணக்கில் இருப்பதாக கூறுகிறார்கள்.
Post a Comment