Thursday, August 24, 2017

அதிகார போதை


பத்தாண்டுகளுக்கு முன் தமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளராகப் புகழ்பெற்றிருந்த அவரை அவர் வீட்டில் சென்றாண்டு சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. சம்பாரித்த காசில் பெரிய வீடு, அடிப்படை வசதிகளுக்குப் பெரிய பிரச்சனையில்லை. மொட்டை மாடியில் அவருக்கென்று ஒரு அறை. அதில் அவருக்கென்று ஒரு ஒலிப்பதிவுக்கூடத்தை அமைத்து இருந்தார். தினமும் அவர் ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார். 

அவருக்கு ஜாதக நம்பிக்கை அதிகம். மகன் நிச்சயம் திரைப்பட உலகில் பெரிய ஆளாக வருவார் என்ற நம்பிக்கையில் பல காரியங்கள் செய்து கொண்டிருக்கின்றார். பல மணி நேரம் அந்த வீட்டில் இருந்த போது நான் உணர்ந்தது ஒன்றே ஒன்று தான். அடிப்படை ஆதார வசதிகள் இருந்த போதும் புகழ் என்ற வெளிச்சம் இல்லாமல் அவர் மனதளவில் படும்பாடு சொல்லி மாளாது. ஏக்கம் கலந்த வார்த்தைகள். நிச்சயம் வாய்ப்பு மீண்டும் வரும் என்று நம்புகிறேன் என்றார். 



அரசியல்வாதிகள் நிலைமை இதைவிட மோசமாகத்தான் இருக்கும். முக்கியமான பதவிகளில் இருந்தது ஆள், அம்பு, சேனை, மாலை, மரியாதை, அதிகாரிகளின் கவனிப்பு, நினைத்தவற்றை நினைத்த நேரத்தில் சாதிக்கும் வாய்ப்புகள் போன்ற அனைத்தும் பதவி இல்லாத போது ஒவ்வொரு அரசியல்வாதிகளும் நடைப்பிணமாகத்தானே வாழ முடியும்? அரசியல்வாதிகள் பலரின் தற்போதைய வாழ்க்கையைச் செவிவழிச் செய்தியாகத் தினமும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றேன். மது, மாது போதையை விட அதிகாரப் போதை மிகப் பெரியது. 

சசிகலா முதல் முறையாகப் போயஸ் தோட்டத்தில் உள்ளே நாள் முதல் சிறைக்குச் சென்ற நாள் வரைக்கும் அவர் வாழ்ந்த வாழ்க்கை, அனுபவித்த சுகங்கள், அவரிடம் மண்டியிட்டவர்கள், அவர் சட்டங்களை வளைத்தவிதம் சாமானியன் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. இன்று அவர் சிறையில் இருந்து வெளியே செல்கின்றார். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் இருந்தார் என்ற செய்திகளையெல்லாம் வாசிக்கும் போது அவரின் மனவொட்டம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். பணத்தால் என்ன வசதிகள், வாய்ப்புகள் அவரால் பெறமுடிந்தாலும் எதையும் சாதித்தே பழக்கப்பட்ட அதிகாரபோதை இப்போது அவர் உடல், மன நிலையை எப்படிப் பாதிக்கும்? 

@@@

திருப்பூருக்குள் இருப்பவர்களின் பணப்போதையும் அதிகாரப் போதைக்குச் சமமாகவே உள்ளது. உள்ளன்போடு பேச, பழக முடியாது. இழந்து விடுவோம் என்ற பயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மனோரீதியான தாக்கத்தில் அத்தனை விதமான பைத்தியக்காரத்தனமான செயல்களிலும் ஈடுபடுகின்றார்கள். நமக்கு இவர்களின் செயல்கள் அனைத்தும் வினோதமாக இருக்கும். ஆனால் சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் நம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களைக் கோவில் கோவிலாகத் தினமும் சுற்ற வைத்துக் கொண்டேயிருக்கின்றது. இங்குள்ள ஒவ்வொரு முதலாளிகளும் ஒரு 23ம் புலிகேசி போலவே எனக்குத் தெரிகின்றார்கள். 

காரணம் வியாபாரம் என்பது தற்போதைக்குச் சர்வதேச சமூகமாக மாறியுள்ளது. போட்டிகள் அதிகம். ஆண்டான் அடிமை போல இருந்த தொழிலாள வர்க்கத்தின் எண்ணம் முழுமையாக மாறிவிட்டது. என்னுடைய உரிமை இது என்று அவர்களால் பட்டியலிடப்படும் விசயங்கள் அனைத்தும் பத்தாண்டுகளுக்கு முன் முதலாளிகளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதததாக இருந்தது. இன்று கொடுக்கப்படும் வசதிகள் பொறுத்தே தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திற்கு அமைகின்றார்கள். வியாபார நிர்வாகம் என்பதனை தனி மனித வெறுப்பு விருப்புகளில் அடிப்படையில் ஒவ்வொன்றையும் செய்தே பழக்கப்பட்டவர்கள் இன்றைய நிலையில் அதிகளவில் தடுமாறுகின்றார்கள். காரணம் அதிகாரத்தின் மூலம் சாதித்தே பழக்கப்பட்டவர்களால் நிர்வாகம் என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள். கடைசியில் நிறுவனத்தை நடத்த முடியாமல், இருப்பதை இழந்து வங்கிக்குப் பயந்து வாழ்க்கை வாழும் சூழ்நிலை அமைந்து விடுகின்றது, 

@@@


ஒவ்வொரு நிறுவனத்திலும் இருந்து பல்வேறு காரணங்களில் அடிப்படையில் மாறும் போது ஒன்றைக் கவனித்துள்ளேன். புதிய சூழ்நிலையை, புதுச் சவால்களை எவரும் விரும்புவதில்லை. ஆழ்மன பயங்கள் அவர்களை ஆட்டிப்படைக்கின்றது. அலறுகின்றார்கள். அதிகாரம் செலுத்தும் பதவியில் இருந்தவர்கள் நிமிட நேரத்தில் அவர்களின் வாழ்க்கைத் தடம் மாறும் போது நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள். கூனிக் குறுகி தன்னம்பிக்கை இழந்தவர்களாக மாறிவிடுகின்றார்கள். 

என்ன காரணம்? 

அதிகாரத்தின் ருசியும், புகழுக்கு அடிமையானவர்களும் உள்ளுற பார்த்துப் பழக்கம் இல்லாமல் எல்லாவற்றையும் வெளியே உள்ள சம்பவங்களுடன் தொடர்புப் படுத்தியே ஒவ்வொன்றையும் கட்டமைத்து விடுகின்றார்கள். கோபுரத்தில் இருந்து பார்த்துப் பழகியவர்களுக்கு ஒவ்வொன்றும் புள்ளிகளாகத்தான் தெரியும். கோபுரம் சரிந்து மொத்தமும் நிலைகுலைத்த பின்பு என்ன நடக்கும்? மரணம் எப்போது வரும்? என்று உடம்பு பாரமாக மாறும்.


11 comments:

எம்.ஞானசேகரன் said...

சசிகலா கும்பலின் அதிகார போதை குறித்து தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்

Amudhavan said...

சசிகலாவில் ஆரம்பித்து திருப்பூர் பணக்காரர்களுக்குத் தாவி விட்டீர்கள். தங்களுக்குக் கிடைத்த பணத்தையே காப்பாற்றிக்கொள்ள கோவில் கோவிலாக ஏறி இறங்கிவருகிறார்கள் என்னும்போது........

Unknown said...

பதவி மட்டுமல்ல ,புகழ் ,பணம் ,அதிகாரம் வரும் போதெல்லாம் பணிவு வந்தால் கூனிக் குறுகி வாழ வேண்டியிருக்காது என்று சொல்ல நினைத்தாலும் ,இவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தாலும் நானே எப்படி மாறுவேனோ :)

தனிமரம் said...

ஒவ்வொருவருக்கும் ஒரு போதை சுகம் துக்கமும் தருகின்றவை உலக நிஜதி! சசிகலா மனநிலையில்தான் பலரும்)))

Unknown said...

நேதாஜி அதிமுகவை விமர்சிக்கும் போது
கை டைப்படிக்க வராது ஏனென்றால் அவரது படைப்பு அப்படி : திமுகவை இதே
நேதாஜி எப்படி கரித்துக் கொட்டி மகிழ்ந்தார்
இப்ப மயிலறகு போல் தடவி கொடுங்க நேதாஜி ...கோயில் கோயிலாக போகிறார்கள் என்று
அதிமுகவினருக்கு வலிக்கும் இன்னும்
மென்மையாக ...விமர்சிக்கவும்

திண்டுக்கல் தனபாலன் said...

சிறந்த தண்டனை அவரவர் மனச்சாட்சி தரும்...

Thulasidharan V Thillaiakathu said...

அதிகார போதை!! இது மது, மாது போதையை விட இதன் ஆதிக்கம் அதிகம் தான் அதுவும் அந்தப் போதைக்குப் பழக்கப்பட்டு அடிமையானவர்கள் நிச்சயமாக அவர்களால் இறங்கி வர இயலாது. அதனால்தான் வன்மம் வேரூன்றுகிறது. இந்த அதிகார போதை தானே அன்றிலிருந்து இன்று வரை குடும்பம் முதல் உள்நாட்டுப் பூசல், வெளிநாட்டி விவகாரம், போர் வரை சென்று விடுகிறது! அதுவும் பணம் எனும் போதையும் சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான்! பெரும்பான்மையான பணக்காரர்களுக்கு இந்த அதிகார போதையும் தொற்றிக் கொண்டு விடுகிறதுதான்..அதீதமான ஈகோ எனும் ஒரு முகமறியா ஒன்றுதான் இவை அனைத்திற்கும் காரணம்! உங்களது முதல் பத்தியும், இரண்டாவது பத்தியும் ஒன்றுக்கொன்று கை கோர்த்து விளையாடும் ஒன்று!! இதன் இரண்டின் விளைவுதான் மூன்றாவது பத்தி!!!

அருமையான பதிவு!

கீதா



Thulasidharan V Thillaiakathu said...

நல்ல கருத்துகள்! இதுதானே இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது! மனித மனம் பொல்லாது! ஒரு வேளை அடித்தட்டு மனிதனுக்கும் இவை எல்லாம் வந்தால் அவனுக்கும் அதிகாரா ஆசை வந்துவிடுமோ தான் கடந்து வந்த பாதையை மறந்து!? ஒரு சிலரே இதிலிருந்துத் தப்பித்து வாழ்கிறார்கள்!

G.M Balasubramaniam said...

வாழ்க்கை சக்கரம் போன்றது மேலே போவதுகீழே வரும் கீழே இருப்பது மேலே போகும் அறிந்தவர் அதிகம்நினைப்பதில்லை

GANESAN said...

மதுவை விட பணம்தான் ஒருவனை மிக விரைவில் மாற்றி விடுகிறது என்று ஜெயகாந்தன் ஒரு கதையில் எழுதியிருப்பார் . உங்கள் கருத்தும் அதையேதான் வலியுறுத்துகின்றது . வாழ்த்துக்கள் ஜோதிஜி .

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.