Sunday, July 16, 2017

பாலியல் சுதந்திரம்



காட்சி 1 

வீட்டுக்கருகே தொழிலாளர் குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கே ஆறு குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். எவருடனும் எனக்குத் தொடர்பில்லை. ஆனால் வீட்டுக்குக் குழந்தைகளுக்கு இட்லி மாவு என்று தொடங்கிச் சின்னச் சின்னச் சமாச்சாரங்களுக்கு மனைவியிடம் வந்து கேட்டு ஏதாவது வாங்கிச் செல்வர். அன்றொரு நாள் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். பனிரெண்டாம் வகுப்புச் செல்லும் பெண்மணி போல இருந்தார். மனைவியிடம் ஏதோவொன்றை கேட்டு வாங்கிச் சென்றார். மனைவியிடம் யாரிந்த பெண்? என்று கேட்ட போது தான் மற்ற விபரங்கள் தெரிந்தது. கட்டிய கணவனையும் பெற்ற இரண்டு குழந்தைகளையும் (தஞ்சாவூர் மாவட்டம்) விட்டு விட்டுப் பள்ளிக்கூடம் முதல் காதலித்த நபரை நம்பி இங்கே வந்து விட்டார். அந்தப் பையனும் (பட்டுக் கோட்டை அருகே) கட்டிய மனைவியையும், வளர்ந்த குழந்தைகளையும் விட்டு விட்டு இங்கே இந்தப் பெண்ணுடன் வாழ்ந்து வருகின்றார். 

பையன் நடிகர் குண்டுக்கல்யாணம் போல இருக்கின்றார். பெண்ணோ சிறிய வயதில் நாம் பார்த்த நடிகை ரேவதி போல இருக்கின்றார். மனதால் இணைந்தார்கள் என்ற ஒரு வாக்கியத்திற்குள் இவர்கள் வாழ்க்கையை என்னால் யோசிக்க முடியவில்லை. காரணம் அந்தப் பையன் பெரும்பாலும் வீட்டில் இருப்பான். இந்தப் பெண் அருகே உள்ள நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்கின்றார். படு சோம்பேறியாக இருக்கும் அந்தப் பையனை இந்தப் பெண்ணால் விட்டுக் கொடுக்கவே முடியவில்லை என்பதனை அங்கே நடக்கும் பல சண்டைகளில் கவனித்துள்ளேன். 

காட்சி 2 

வீட்டுக்கருகே உள்ள சந்துகளில் ஒரு குறிப்பிட்ட சந்து முடியும் இடத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பெரிய வீடு ஒன்று உள்ளது. சுற்றிலும் பெரிய மதில் சுவர். பெரிய பெரிய மரங்கள். சோலைவனம் போல இருக்கும். அந்தப் பகுதியில் வீதி விளக்கு இல்லை. குறிப்பிட்ட தூரம் வரைக்கும் இருட்டாகவே இருக்கும். இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளே வரும் போது மட்டும் தான் அந்தப் பகுதியில் வெளிச்சம் கிடைக்கும். கடந்த சில மாதங்களாக இந்தக் குறிப்பிட்ட இடம் காதலர்கள் சந்திக்கும் இடமாக மாறிக் கொண்டு வருகின்றது. 

வாகனங்களில் வரும் வெளிச்சத்தைப் பொருட்படுத்தாமல் நின்று தன்னிலை மறந்து உறவாடிக் கொண்டிருக்கின்றார்கள். பள்ளி, வேலைக்குச் செல்லும் பெண்கள் பலரையும் அங்கே பார்க்கின்றேன். பல சமயம் நடந்து செல்லும் நேரத்தில் அவர்களின் செல்லச் சண்டைகளையும் கவனித்து வருகின்றேன். இதே போலத் திருப்பூரில் ஏழெட்டு இடங்களில் பார்த்துள்ளேன். தடைகளை உடைக்கும் வேகம் அவர்களிடம் இருப்பதைக் கவனித்துள்ளேன். 

காட்சி 3 

என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கு 21 வயதாகின்றது. அந்தப் பெண் குறித்துப் பலரும் பலவிதமாகப் பேசி கடைசியாக என் காதுக்கு வந்த போது கண்காணிக்க ஆரம்பித்தேன். சில வாரங்களில் தெரிந்தது. ஒரே சமயத்தில் பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பது, ஆட்களை மாற்றிக் கொண்டேயிருப்பது என்று புகுந்து விளையாடிக் கொண்டேயிருக்கின்றார். முதல் முறை சிரித்துக் கொண்டே எச்சரித்தேன். மற்றொரு முறை மிரட்டிப் பார்த்தேன். 

சில நாட்களுக்கு முன் கொஞ்சம் வேகமான என் தடித்த வார்த்தைகளைக் கொண்டு அவரை மாற்ற முடியுமா? என்று பார்த்தேன். அழுதார். மறுத்தார். அவர் சீனியர் பெண்ணிடம் இந்தப் பெண்ணை இனி கண்டித்துப் பலன் இல்லை. அவர்கள் குடும்பத்தில் சொல்லி திருமணம் செய்யச் சொல்லுங்கள் என்றேன். காரணம் அந்தப் பெண்ணின் ஒவ்வொரு அசைவிலும் எதிர்பார்ப்பிலும் அதற்கான உத்வேகம் மட்டுமே இருந்தது. கடந்த சில நாட்களாக நான் எதையும் அவர் விசயத்தில் கண்டு கொள்வதே இல்லை. அவர் சுதந்திரம். அவர் வாழ்க்கை என்று ஒதுங்கிவிட்டேன். இப்போது அவரின் நடவடிக்கைகள் வேகமாகி விட்டது. 

காட்சி 4 

தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு வடமாநில பையனை (ஒடிசா) எனக்குக் கீழே பணிபுரிபவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவன் டைலராகப் பணிபுரிகின்றார். இவன் முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் பிறகு சொல்கிறேன் என்றார். அடுத்த நாள் அவனைப் பற்றிச் சொன்ன தகவல் வித்தியாசமானது. விடுதியில் அவன் தங்கும் அறையில் இரவு எப்போதும் தங்குவதில்லை. மற்றொரு புறம் மூன்று பெண்கள் தங்கும் அறையில் தான் இரவில் தங்குகின்றான். 

அந்த மூன்று பெண்களும் இவன் அந்த அறைக்கு இரவு வராவிட்டால் (அவர்களும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) இரவு ஒரே ரணகளமாக மாறிவிடுமாம். விடுதிக்கு நிறுவனம் சார்பாக நியமித்திருக்கும் காப்பாளர் இது குறித்துப் பல முறை பல விதமான முயற்சிகள் எடுத்தும் ஒன்றும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றதும் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டது. 

ஒரு நாளில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிரச்சனைகளில் 75 சதவிகிதம் பாலியல் ரீதியான பிரச்சனைகள் தான் உள்ளது. இரவில் தொடங்கும் அந்தப் பிரச்சனைகள் கடைசியில் தொழிற்சாலை வரைக்கும் வந்து சேர்கின்றது. 

ஏன் இப்படி? என்று ஒவ்வொரு நிகழ்வையும் பலமுறை யோசித்த போது என்னால் கீழ்க்கண்டவாறு இனம் பிரிக்க முடிந்தது. 

1. பள்ளி, கல்லூரி, வயது,மொழி, மதம், மாநிலம் என்று எந்த எல்லைக்கும் கட்டுப்படாமல் திமிறி நிற்பது அவரவர் சார்ந்த தனிப்பட்ட உணர்ச்சிகள். 

2. 75 வயதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் அனுபவங்கள் 45 வயதில் உள்ளவர்களின் அனுபவங்களோடு ஒத்துப் போவதில்லை. இதுவே 20 வயது அனுபவத்தில் உள்ளவரோடு மேலே உள்ள இரண்டு நபர்களின் அனுபவங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருப்பதில்லை. தலைமுறை இடைவெளி என்பதனைத் தாண்டி இப்போது மற்றொரு பூதம் ஆட்டிப் படைக்கின்றது. தொழில் நுட்ப வளர்ச்சி. அதனால் உருவாகும் மாய மந்திரங்கள். 

3. தொலைக்காட்சியும், ஆன்ட்ராய்டு மொபைல் போனும் உருவாக்கிய விசயங்கள் 50 வருட நிகழ்வை ஐந்து வருட நிகழ்வாக மாற்றிவிட்டது. எல்லாக் கட்டுக்களும் உடைக்கப்பட்டுவிட்டது. கட்டாறு வெள்ளம் போல ஒவ்வொன்றும் அடித்துச் செல்லப்படுகின்றது. வருத்தம், கோபம், ஏக்கம் போன்ற எல்லாவிதமான உணர்ச்சிகளும் ஒரே விதமாக மாறி எல்லாமே எளிதில் கடந்து செல்லக்கூடியதாக உள்ளது. 

4. எல்லாமே அவசரம். அனுபவிப்பதில் தொடங்கிப் பிரிவது வரைக்கும். சாதகப் பாதக அம்சங்களை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. நடிகர் ரஜினி மகள் முதல் பக்கத்து வீட்டு எளியவர்களின் மகள் மகன் வரைக்கும். 

மொத்தத்தில் கற்ற கல்வி இங்கு எவருக்கும் எதையும் கற்றுத் தரவில்லை.

17 comments:

இராய செல்லப்பா said...

பெரும்பாலான பெற்றோர்களின் கவலையும் இதுவே! - இராய செல்லப்பா சென்னை

Yaathoramani.blogspot.com said...

தற்காலச் சூழலை மிக மிக
அருமையாக புரிய வைத்திருக்கிறீர்கள்
மனம் கவலையில் கனத்துப் போகிறது
வேறு என்ன செய்ய இயலும் ?

கரந்தை ஜெயக்குமார் said...

பெற்றோர்களின்இன்றைய பெரும் கவலையே இதுதானே ஐயா
இன்றைய இளைஞர்களிடத்து,பாலியல் பற்றிய புரிதலை நம் கல்விமுறையும், நம் வாழ்க்கை முறையும் உருவாக்கத் தவறிவிட்டது.
பெரும் விரிப்புணர்வினை ஏற்படுத்தியாக வேண்டிய காலகட்டத்தில் நாம்இருக்கிறோம்

G.M Balasubramaniam said...

அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என்று விட முடிவதில்லை. நம்வீட்டுக் குழந்தைகளும் இப்படியாகி விடுவார்களோ என்னும் பயமிருக்கிறதே

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்கள் பதிவில் . முழு முதற் காரணம் , தாயும் தந்தையும் தான் . அப்பறம் வாத்தியார் , டீச்சர் , குரு , ஆசான் எப்படி அழைத்தாலும் அவருடைய பங்களிப்பு ( அல்லது அவர் செய்ய மறந்த செயல்கள் ) . கொஞ்சம் பக்தியும் வேண்டும் , அவசியம் . பக்தி மூலம் பிரயாணம் செய்து பின் உண்மையை உணர்தல் என்பது வேறு , ஆனால் ஆரம்பத்திலேயே கடவுள் எதிர்ப்பு அல்லது பக்தியின்மை - கொஞ்சம் தகராறு தான் .


சினிமாவும் , விளம்பரமும் மனத்திற்குள் , மூளைக்குள் பூந்து விளையாடுகிறது , தொழில் நுட்ப்பம் அசுர வேகத்தில் வளர்கிறது

In a relation ship , there should not be a demand ( for sex) and deprivation ( of sex)

Unknown said...

மொத்தத்தில் கற்ற கல்வி இங்கு எவருக்கும் எதையும் கற்றுத் தரவில்லை. true

Thulasidharan V Thillaiakathu said...

இதற்கு முக்கியக் காரணம் என்று கை சுட்ட வேண்டுமென்றால் பெற்றோர். அதன் பின் நமது பள்ளிகள், சமூகம். இது எந்தவித தொழில்நுட்பம் பெருகியிருந்தாலும், அது சூழ்நிலையில்தானே, சமூகத்தில்தானே வருகிறது? அந்தச் சூழ்நிலை வீட்டிலும் தொடங்கலாம்...சமூகத்தை நேர்க் கொள்ளும் உன் அக்குழந்தைகள் பெற்றோரின் கையில்தானே இருக்கிறார்கள்? இருக்க வேண்டும்...இப்பிடியானவர்களின் மூலத்தை ஆராய்ந்தால் அதன் தொடக்கம் எங்கு என்பது அறியலாம் வீடாகத்தான் இருக்கும்...ஏனென்றால் இந்த ஆன்ட்ராயுடும் சினிமாவும், முட்டாள் பெட்டியும் கஞ்சி மட்டுமே காய்ச்சும் வீட்டின் நடுவிலும் உண்டு... ஓலை வேய்ந்த வீட்டிலும் அடுத்த வேளைக்குச் சோறு இல்லாத வீடுகளில் கூட டிஷ் எனும் கொம்புகள் முளைத்திருப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்தானே!! இளசுகளின் கையில் திரையுடன் கூடிய பேசிகள் இருப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்தானே...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சமூகத்தை நேர்க் கொள்ளும் உன் அக்குழந்தைகள் // முன் என்று வருவது தட்டச்சியதில் உன் என்று தவறுதலாக வந்துவிட்டது சகோ! மன்னிக்கவும்...

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சமூக அவலத்தை முன்வைத்துள்ள விதம் அருமையாக உள்ளது.

ஜோதிஜி said...

இது நம் பார்வையில் அவலம் என்று தெரிகின்றது. ஆனால் மாறிய உலகம். மாறிக் கொண்டேயிருக்கும் கலாச்சாரம் என்றே சொல்லத் தோன்றுகின்றது.

ஜோதிஜி said...

ஆசிரியர், பெற்றோர் இந்த இரண்டு பேர்களும் சரியாக அமைந்து விட்டால் ஐம்பது சதவிகிதம் குழந்தைகளுக்கு சரியான புரிதல் வரும் என்றே தோன்றுகின்றது. இதில் எழுதப்படாமல் விடப்பட்ட (நான் கண்ட காட்சிகள்) பல உண்டு. ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

முன்பு நம் உணர்ச்சிகளுக்கு வடிகால் இல்லை. மேலும் மேலும் உணர்ச்சிகள் தூண்டப்பட்டுக் கொண்டேயிருப்பதால் ஆண் பெண் இவர்களின் பாதையும் மாறிவிடுகின்றது. இயல்பாகவே தைரியம் அதிகமாகிவிடுகின்றது என்றே நான் நினைத்துக் கொள்வதுண்டு.

ஜோதிஜி said...

இது தான் முற்றிலும் உண்மை. நமக்கு உருவாகும் பல கவலைகளில் இது முதன்மையாக உள்ளது.

ஜோதிஜி said...

நம்மைவிட நம் தலைமுறைக்கு நிறைய விசயங்கள் தெரிகின்றது. ஆனால் தெரிய வேண்டிய விசயங்களை விட குருட்டு தைரியமும் அதிகளவில் உள்ளது.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நாம் தான் மாறிக் கொள்ளவேண்டும் என்றே வெளிப்புறங்களில் இருந்து அறிவுரை நம்மை நோக்கித் தாக்குகின்றது.