Tuesday, January 24, 2017

குப்பைகள் வாழ்வளிக்கும்

அன்றாட வாழ்வில் நமக்குத் தேவையற்றது என்ற வகையில் பலவற்றைக் குப்பையில் கொண்டு போய் கொட்டுகிறோம். அதிலும் சூழலியல் ஆர்வலர்கள் மக்கும் பொருட்களைத் தனியாக, நெகிழி பொருட்களைத் தனியாகப் போடுங்கள் எனப் பல பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் அனைத்தையும் ஒன்றாகவே கொட்டுகிறோம். அத்தகைய குப்பைகளிலிருந்து நெகிழி பொருட்களை, உலோகச் சிதிலங்களை, பாட்டில்களை எனப் பொருட்களைப் பொறுக்கிச் சென்று காசாக்குகின்றனர். ஆகக் குப்பை கூடப் பலருக்கு வாழ்வளிக்கிறது. 

ஆனால் அனுபவ பாடங்களைத் தொகுப்பாகப் பழைய குப்பைகள் என நண்பர் ஜோதிஜி ஏன் வகைப்படுத்தினார் என்று புரியவில்லை. அந்தக் குப்பைகளைப் புரட்டிப் பார்க்கிறபோது பல ரத்தினங்கள், மதிப்புமிக்க ஆலோசனைகள், வாழ்வியல் கருத்துக்கள் ஏராளமாக இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். 

ஏறக்குறைய 7 ஆண்டுகளில் 700 பதிவுகளைக் கடந்து நிற்கின்றார் நண்பர். முன்னுரையிலும் முதல் அத்தியாயத்திலும் ஒரு மாய எண்ணைக் குறிப்பிடுகின்றார். 

அரசியல் அரங்கில் அனைவராலும் மறக்க முடியாத எண் அது. 1,70,000 + பார்வையாளர்களை மின்னூல் வாயிலாகத் தனது கருத்துக்கள் சென்றடைந்துள்ளது என்பதைப் பதிவு செய்துள்ளார். நிச்சயமாக இந்த எண் சாதனையின் உச்சம் என்பதில் ஐயமில்லை. 

யார் ஒருவர் தனது குடும்பத்தை, உறவுகளை நேசிக்கிறாரோ அவர் வாழ்வில் வரும் சங்கடங்கள், சோதனைகள் இதுவும் கடந்து போம் என்ற வகையில் பறந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை. 

3 பெண் குழந்தைகளுக்குத் தந்தை நண்பர் ஜோதிஜி, அந்தத் தேவியரோடு இல்லத்துணையையும் சேர்த்து தேவியர் இல்லம் எனத் தனது வலைத்தளத்திற்குப் பெயரிட்டுப் பதிவுகள் மேற்கொண்டு வருபவர். 

செட்டிநாட்டு நகரமாம் காரைக்குடிக்கு அருகிலிருந்து விரைவு நகரமாம் திருப்பூருக்குப் புலம் பெயர்ந்தது, 

அந்தச் சூழலோடு ஒட்டியும், ஒட்டாமலும் வந்து சென்ற தாய், தந்தை அவர்களின் அருமை பெருமைகள், 

படிக்கப் படிக்கத் தேடல் விரிவடைந்தது, 

தாய் தமிழ்ப் பள்ளி, புதுக்கோட்டை ஞானாலயா புத்தகச் சுரங்கம், 

வலைச்சர ஆசிரியராய் பணியாற்றிய வாரத்தில் அறிமுகப்படுத்திய தளங்கள், 

வலைச்சரம் வாயிலாக விரிவடைந்த நட்பெல்லை, 
வந்த வேகத்தில் காணாமல் போகும் வலைப்பதிவர்கள், 
ஒழுக்கம், நேர்மை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை, 
பள்ளி ஆசிரியர்கள், படித்த ஊர், வாழும் ஊரில் உள்ள நட்புகள் 

இப்படி ஏராளமான செய்திகளை நேர்த்தியாகத் தொடுத்த பூச்சரம் போல் சொல்லிக் கொண்டு போகிறார். மாமனாரைப் பாராட்ட ஒரு மனது வேண்டும். அந்த வகையிலும் நண்பர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கிறார். 

தந்தைக்கும் மகன்களுக்கும் இடையில் ஒரு சீனப் பெருஞ்சுவர் போல் ஒரு தடுப்பு இருப்பதாகவும், சற்று விலகியிருத்தல்தான் பெரும்பாலான இடங்களில் நிகழ்கிறது என்ற வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். அந்த இடத்தில் மட்டும்தான் நான் சற்று மாறுபடுகிறேன். தந்தை மகன் உறவில் பலர் மிக நெருக்கமாகவும், உள்ளுக்குள் நூறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் வெளியில் ஒருவரைப் பற்றி மற்றவர் உயர்வாகப் பேசுவதைத்தான் பெரும்பாலும் காண்கிறோம். 

ஜோதியும் தன் தந்தையைப் பற்றி எந்த வரியிலும் குறைத்து மதிப்பிடவில்லை, மாறாக இன்னும் சற்று நெருக்கமாக இருந்திருக்கலாமோ என்கிற ஏக்கமாகத்தான் அதை உணர முடிகிறது. 

நிச்சயமாக இந்தப் புத்தகத்தைப் பழைய குப்பைகள் என ஒதுக்கிவிட முடியாது. அவரவருக்குத் தேவையான பல செய்திகள், அனுபவங்கள் அதிலே பொதிந்து கிடக்கிறது. நண்பருக்கு விரையில் தனது தொழில் சார்ந்து அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும் என எண்ணுகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், நிச்சயமாக நம்மைப் போன்ற வாசகர்களுக்கு அருமையான ஒரு பயணச் சரிதம் மின்னூலாகக் கிடைக்கும். மேலும் மேலும் சிகரங்கள் தொட உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

தோழமையுடன் 
ஸம்பத் ஸ்ரீனிவாசன் 
மதுரை



7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

Nagendra Bharathi said...

அருமை

Unknown said...

சம்பத் ஜி யின் வார்த்தைகள் சத்திய வார்த்தைகள் !என் சார்பிலும் சிகரங்கள் தொட வாழ்த்துகள்:)

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

விமர்சனம் அருமை. வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

Free Ebook .com நண்பர் சீனிவாசன் அவர்கள் மின் அஞ்சல் கடிதம்

ஐயா,

உங்கள் நண்பர்கள் எழுதி உங்கள் வலைப்பதிவில் நீங்கள் வெளியிட்டு வரும் பழைய குப்பைகள் பற்றிய முன்னுரைகளே அட்டகாசமாக உள்ளன.

நல்ல வேளை. நான் எழுதவில்லை. இந்த அளவுக்கெல்லாம் என்னால் எழுத இயலாது.

முன்னுரைகள் நான் கவனிக்கத் தவறிய பல்வேறு விஷயங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அவற்றால் உந்தப்பட்டு மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளேன்.

உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.