Sunday, July 27, 2014

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்......

அமெரிக்காவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணையத் தளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்....."என்ற எனது தொடர் வெளிவரப்போகின்றது. 

ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையும் வெளிவரப்போகின்ற இந்தத் தொடருக்கு உங்கள் அனைவரின் ஆதரவைக் கோருகின்றேன். 

இந்தத் தொடர் எதைப் பற்றியது என்பதற்காக வலைதத்தமிழ் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் எழுதிய அறிமுகக் கட்டுரை இது. உங்கள் பார்வைக்கு. 

ணவு, உடை, உறைவிடம் என இந்த மூன்றையும் மனித வாழ்க்கையில் மிக முக்கியம் என்று சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆதி காலத்து மனித சமூகத்தில் இந்த மூன்றுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் மூன்றுமே அவரவர் அன்றாட வாழ்வில் இயல்பான அங்கமாகவே இருந்தது. காட்டில் கிடைத்த கிழங்கு வகைகளே உணவாக மாறியது. இலைகளே ஆடையாக இருந்தது.

மலைக்குகைகளே வசிக்கப் போதுமானதாக இருந்தது. காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறியது. இன்றைய சூழ்நிலையில் உணவு என்பது ருசியின் அடிப்படையிலும், ஆடைகள் நாகரிகத்தின் வெளிப்பாடாகவும், உறைவிடம் அந்தஸ்தின் அங்கமாகவும் மாறியுள்ளது. ஆனால் இந்த இடத்தில் நாம் யோசிக்கவேண்டிய ஒன்று உண்டு. இன்னமும் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏழைகள் பட்டினியுடன் தூங்கப் போவதும், சாலையோர குடிசைகளையே தங்கள் உறைவிடமாகக் கருதி வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.

ஆணோ, பெண்ணோ, ஏழையோ, பரமஏழையோ எவராயினும் உடைகள் இல்லாமல் வாழ முடிகின்றதா? மானத்தை மறைக்க என்கிற ரீதியில் ஒட்டுத்துணியாவது தங்கள் உடம்போடு ஒட்டிக் கொண்டு வாழ்பவர்களைத்தானே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மொத்தத்தில் மூன்று வேளை பசியோடு வாழ்ந்தாலும், வாழ்நாள் முழுக்கத் தங்களுக்கென்று தங்க இடமில்லாமல் வாழ்ந்த போதிலும் அத்தனை பேர்களுக்கும் உடைகள் என்பது அவசியமானதாகத்தானே இருக்கின்றது. அந்த உடைகளைப் பற்றித் தான் இந்தத் தொடரில் பேசப் போகின்றோம். 

நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம். 

உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆடைத் தொழிற்சாலைகளிலும் இன்றைய காலகட்டத்தில் பலதரப்பட்ட நவீன வளர்ச்சி வந்துள்ளது. மனித ஆற்றல் அதிக அளவு தேவைப்படாமல் எந்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் நமக்குப் பல வசதிகளைத் தந்துள்ளது. ஆனால் பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இன்றும் மூன்று வேளை ரொட்டிக்காக மட்டுமே பணிபுரிபவர் லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். மனித மாண்புகளை உடைத்து எந்திரமாக மாற்றப்பட்ட மனிதக்கூட்டம் தான் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.

தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலையின் சுவற்றில் காது வைத்துக் கேட்டால் நாம் விக்கித்துப் போய் நிற்கும் அளவிற்கு ஏராளமான சோகக்கதைகள் உண்டு. 

ஏனிந்த அவலம் என்பதனை நான் இருக்கும் சூழ்நிலையில், நான் பணிபுரிந்த திருப்பூர் நிறுவனங்கள் வாயிலாக உங்களுக்குச் சொல்லப்போகின்றேன். ஆடைகளை மட்டும் பேசப்போவதில்லை. ஆடைகளோடு பின்னிப்பிணைந்த நூலிழைகள் போல வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். நான் கடந்து வந்த பாதையை, பார்த்த, பழகிய, பாதித்த மனிதர்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

காதல், காமம்,ஏக்கம், இயலாமை, வன்மம், குரோதம்,பித்தலாட்டம் எனக் கலந்து கட்டி கதம்பம் போல் உள்ள இந்தக் கவுச்சி வாடையைத்தாண்டி கண்ணாடி ஷோரூம் வரைக்கும் பயணித்து வரும் இந்த ஆடைகளைப்பற்றிப் பேசப் போகின்றோம். 

எந்தத் தினத்தில் இருந்து இந்தத் தொடர் தொடங்கும் என்று கேட்கின்றீர்களா? வரும் ஆகஸ்ட் 1 முதல் வலைத்தமிழில் இணையத் தளத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும். உங்கள் ஆதரவை, விமர்சனத்தில் வாயிலாகத் தெரியப்படுத்தலாமே? என்னை உழைக்கத் தூண்டும் அல்லவா? உங்கள் ஆதரவினைக் கோரும். 

-ஜோதிஜி திருப்பூர். 

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் தொடரை படிக்க :

(ஒவ்வொரு வாரமும் இதே பக்கத்தில் தொடர்ந்து படிக்கலாம்)


சென்ற பதிவான ஐந்தாம் வருட நிறைவு நாளுக்காக நான் எழுதிய பதிவுக்கு விமர்சனத்தின் மூலம் ஊக்கமும், நிறை குறைகளைச் சுட்டிக் காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. எழுதுவதும் ஒரு பயிற்சியே. நான் எழுத்துலகில் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது என்பதை உணர்ந்தே வைத்துள்ளேன். 

நான் சார்ந்துள்ள ஏற்றுமதி தொழில் வாழ்க்கை கொஞ்சம் எழுத்து வாழ்க்கை கொஞ்சம் என்று மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பதால் என் எழுத்து நடையில், சொல்லவரக் கூடிய கருத்துக்களில் பல சமயம் குழப்பம் கும்மியடிக்கத் தான் செய்கின்றது. நிச்சயம் இந்தத் தவற்றைத் திருத்திக் கொள்ள முயற்சிக்கின்றேன். இதன் காரணமாக இந்தத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆய்த்த ஆடைத்துறையில் பல வருடங்கள் இருந்து விட்டுத் தற்போது வேறு துறைக்கு மாறிவிட்ட என் நெருங்கிய நண்பர் திருத்தி தர சம்மதம் தந்துள்ளார். இதன் மூலம் மேலும் மெருகூட்டும் என்றே நம்புகின்றேன். 

ஒவ்வொரு சமயத்திலும் விமர்சனத்தின் வாயிலாக நண்பர்கள் சுட்டிக் காட்டியுள்ள பல குறைகளை இந்தத் தொடர் மூலம் சரி செய்து சரியான முறையில் எழுத முடியும் என்றே நம்புகின்றேன். 

வலைத்தமிழ் நிர்வாகத்தில் உள்ள அனைத்து அங்கத்தினர்களுக்கும் நண்பர் பார்த்தசாரதிக்கும் என் அன்பு கலந்த நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

32 comments:

எம்.ஞானசேகரன் said...

தொடர் வெற்றிகரமாக வெளிவந்து இன்னொரு நூலாக மாற வாழ்த்துக்கள் ஜோதிஜி! ஆரம்பமே அசத்தல். முகநூலிலும், வலைத்தமிழிலும் படித்துவிட்டுத்தான் வந்தேன்.

தி.தமிழ் இளங்கோ said...

இன்னொரு டாலர் நகரம்! ஆவலோடு எதிர்பார்க்கிறேன். எனது வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

வலைத் தமிழில் கருத்துரைகளை சட்டென பதிவு செய்வதில்தான் சிரமம் போல் தெரிகிறது.ஏனெனில் நான் மைக்ரோசாப்ட் வேர்டில் டைப் செய்து விட்டு அங்கிருந்து காப்பி & பேஸ்ட் முறையில் கருத்துரைகளையும் கட்டுரைகளையும் இண்டர்நெட்டில் எழுதுவது வழக்கம். வலைத்தமிழில் நீண்ட கருத்துரைகளை கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேமித்து பிற்பாடு வெளியிடுவது முடியாது போல் இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
வலைத் தமிழில் தொடர்கிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் எழுத்து இன்னும் உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும் என்பதற்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! நண்பரே!! தொடர்வோம்! வலைத் தமிழில் தொடர்கின்றோம். இந்த டீசரே அற்புதமாக உள்ளது!

//மொத்தத்தில் மூன்று வேளை பசியோடு வாழ்ந்தாலும், வாழ்நாள் முழுக்கத் தங்களுக்கென்று தங்க இடமில்லாமல் வாழ்ந்த போதிலும் அத்தனை பேர்களுக்கும் உடைகள் என்பது அவசியமானதாகத்தானே இருக்கின்றது// உண்மையே!

ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்று சொன்ன காலம் போய், அரை ஆடை உடுத்துபவன் தான் மனிதன் என்ற கலாச்சாரம் பெருகி வருகின்ற காலமாகி விட்டது! அந்த அரை ஆடை தயாரிப்பதிலும் பின்னில் பல அவலங்கள் உள்ளன என்பதும் நிதர்சனமான உண்மை! அதை உங்கள் எழுத்துக்களின் வாயிலாக அறிய ஆவல்!

த. சீனிவாசன் said...

வாழ்த்துகள். தொழிற்சாலைகளின் பல முகங்களை அறிய ஆவலாய் இருக்கிறோம்.

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.
வலைத்தமிழ் தனிப் பதிவா?

Ranjani Narayanan said...

இன்னும் இன்னும் உங்கள் அனுபவங்கள் உங்கள் எழுத்துக்களின் மூலம் எல்லோரையும் சென்றடைய வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்.

ஊரான் said...

வாழ்த்துகள்!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

சிவப்பு கம்பளம் காத்து இருக்கிறது ....வரவேற்க்க

palaradha.blogspot.com said...

வாழ் த் து க ள்

Avargal Unmaigal said...

பதிவராக இருந்து எழுத்தாளராக உயர்ந்த உங்களை பாராட்டுகிறேன்.அமெரிக்காவில் இருந்து அந்த இணையதளம் வந்தாலும் அதை பலர அறிந்திருக்கவில்லை உங்களின் எழுத்துக்களால் அந்த தளம் இன்னும் அதிகபேரை சென்று அடையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் ஜோதிஜி...

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நீங்கள் மிகப் பிரபல எழுத்தாளராக வந்து அமெரிக்காவில் உள்ள தமிழ் நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வீர்கள் அப்போது உங்கள் அருகில் நின்று போட்டோ எடுக்கும் வாய்ப்பை நிச்சயம் தருவீர்கள் என நம்புகிறேன்... அப்ப வந்து நீங்க யாரு என்று மட்டும் கேட்டுவீடாதீர்கள்

கிரி said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி :-)

உங்களின் இந்தத் தொடர் சிறப்பாக வரவும், விரைவில் இதை புத்தமாக வெளியிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

@அவர்கள் உண்மைகள் "ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நீங்கள் மிகப் பிரபல எழுத்தாளராக வந்து அமெரிக்காவில் உள்ள தமிழ் நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வீர்கள் அப்போது உங்கள் அருகில் நின்று போட்டோ எடுக்கும் வாய்ப்பை நிச்சயம் தருவீர்கள் என நம்புகிறேன்... அப்ப வந்து நீங்க யாரு என்று மட்டும் கேட்டுவீடாதீர்கள்"

:-) உங்கள் நம்பிக்கை வீண் போகாது.

மகிழ்நிறை said...

மற்றும் ஒரு டாலர் நகரம்! ஐயமே இல்லை!! உண்மையை நெருங்கி பார்க்கும் ஆவலோடு உங்கள் தங்கை !

அப்பாதுரை said...

அமெரிக்காவிலந்து வருதா! விவரத்துக்கு நன்றி.

ஜோதிஜி said...

தொழிலாளர்கள் சார்ந்தவற்றை ஆராய்வுதும் அதன் இந்த தொழில் குறித்த பல்வேறு நிலைகள் குறித்து பேசுவதுமே இந்த தொடரின் நோக்கம். நன்றி மைதிலி

ஜோதிஜி said...

அவரின் ஆசை அது. எனக்கு அது போன்ற ஆசைகள் இந்த நிமிடம் வரைக்கும் இல்லை கிரி. காரணம் எழுத்து மூலம் உயர்ந்த இடத்திற்கு அடையும் எண்ணம் இல்லை. எழுத்து என்பது பதிவு என்பது என்னைப் பொறுத்தவரையிலும் என் எண்ணங்களை இறக்கி வைக்க ஒரு தளமது. சற்று மனரீதியாக ஆசுவாசம் கிடைக்கின்றது. அதுவே போதும். இதன் காரணமாகத்தான் பத்திரிக்கை ரீதியாக எழுதுவதைக்கூட அதிக அளவு ஆர்வம் காட்டாமல் உள்ளேன். நன்றி கிரி.

ஜோதிஜி said...

ரெண்டு பேரும் சேர்ந்து ரணகளமாக மாற்றிக் கொண்டு வர்றீங்கன்னு நினைக்றேன்.

ஜோதிஜி said...

தங்கள் வருகைக்குக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஜோதிஜி said...

எதிர்பார்புகளை அதிகம் மனதில் வளர்த்துக் கொண்டால் (அ) வைத்துக் கொண்டால் எப்போதும் சங்கடம் தான். இருந்தாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

ஆச்சரியமாக எனக்காக வந்து இருக்கீங்க. மிக்க நன்றி.

ஜோதிஜி said...

வலைத்தமிழ் இணையப் பத்திரிக்கை போல வந்து கொண்டிருக்கின்றது அப்பாதுரை. ஆசிர்வாதத்திற்கு நன்றி.

ஜோதிஜி said...

சரியான விமர்சனம். நன்றி சீனிவாசன்.

ஜோதிஜி said...

கவிப்பரியன் போல தொடக்கவுரை குறித்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி. வலைத்தமிழ் மிக அற்புதமான பணியை செய்து கொண்டு வருகின்றார்கள். அவசியம் படிங்க.

ஜோதிஜி said...

நன்றி ஆசிரியரே.

ஜோதிஜி said...

தொழில் நுட்ப குறைகளை அவர்களிடம் சொல்லி உள்ளேன். உங்கள் அக்கறைக்கு நன்றி.

ஜோதிஜி said...

உடல் அமைப்பின் உள்ளே வெளியே உள்ள விபரங்களைப் பற்றி பேசுவதைப் போல டாலர் நகரம் ஊர் மற்றும் தொழில்சார்ந்த விசயங்களைப் பற்றி பேசியது. இது உள்ளே உள்ள விசயங்களைப் பற்றி பேசப் போகின்றது.

ஜோதிஜி said...

முதல் விமர்சனத்திற்கு மிக்க நன்றி கவிப்ரியன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் செய்துள்ள அறிமுகமே மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. படிக்கத் தூண்டுகிறது தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள். ஏழை எளிய மக்களின் எண்ணங்களைப் பதிவு செய்யும் தங்கள் முயற்சியினால் சாமான்ய மக்களும் சோகங்களை ஏக்கங்களை, சந்தோஷங்களை அறிந்து கொள்ள முடியும் வாழ்த்துக்கள் . அந்த வலைப் பதிவில் தொடர்கிறேன்.