நான் பணிபுரியும் நிறுவனத்தில் எனது நேரிடையான கட்டுப்பாட்டில் 2000 பேர்களும், மறைமுகமாக 3000 பேர்களும் உள்ளனர். இது தவிர ஏனைய துறை சார்ந்து பல பிரிவுகள் உள்ளன. வாரத்தில் ஏதோ ஒரு நாளில் ஏதோவொரு விசயத்திற்காக ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ளனர்.
ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை அல்லது அலுவலகத்தின் உள்ளே நுழைந்தால் வெளியுலகம் மற்றும் குடும்பம் அனைத்தையும் மறந்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் இருப்போம்.
காரணம் அடுத்தடுத்து அலை அடித்துக் கொண்டேயிருக்கும்.
தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழ் எத்தனை விதமான தட்டுக்கள் இருக்க முடியுமோ அதன்படி எல்லாத்தட்டு மக்களும் இருப்பதால் தினந்தோறும் உருவாகும் பஞ்சாயத்துக்குப் பஞ்சமிருக்காது. சுவாரசியமான நிகழ்வுகள், ஆச்சரியமான, அவஸ்தையான அனுபவங்கள் தினந்தோறும் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது.
எழுத்தாளர்கள் சிலாகித்துப் பேசும் இலக்கிய வாசிப்பைத் தாண்டிய அனுபவமிது. ரத்தமும், சதையும், வியர்வையும் அழுக்கும் கலந்த உண்மையான வாழ்வியல் தத்துவங்களை இங்கிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஒரு ஆய்த்த ஆடை தொழிற்சாலை என்பதும், அது (ஏற்றுமதி) சார்ந்த நடவடிக்கைகள் என்பதும் ஒரு தினப்பொழுதில் நம்மை ஒரு நிமிடம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர விடாமல் கட்டுப்போட்டுவிடும் வல்லமை கொண்டது. அதிகமான கோடிகள் புழங்கும் இடம். நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். திருப்பூரில் வாரச்சம்பளம் என்பது மிகப் பெரிய சவால். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு தொழிலாளர்களும் தீபாவளி. ஆனால் முதலாளிகளைப் பொறுத்தவரையிலும் அன்று மாலை சம்பளப்பட்டுவாடா முடித்துப் பெருமூச்சு விட வேண்டிய தினம்.
ஒவ்வொரு சிறிய பொறியும் கொழுந்து விட்டு எரியக்கூடிய வாய்ப்புள்ளதால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு காதுகளை மட்டும் திறந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை.
ஒவ்வொரு பெரிய நிறுவனத்திலும் முதலாளிக்கு அடுத்து இரண்டு பெரிய தலைகள் உண்டு.
ஒன்று மொத்த நிர்வாகத்திற்கும் பொறுப்பான தலை (ADMINISTRATION - G.M.) அடுத்த மொத்த உற்பத்திக்கும் உண்டான தலை (PRODUCTION - G.M.). இரண்டுமே முக்கியமான பதவி என்றபோதிலும் உற்பத்திக்கு பொறுப்பான தலை தறுதலையாக அமையும் பட்சத்தில் முதலாளிக்கு பண ரீதியான பிரச்சனைகளை உருவாக்குவது மட்டுமல்ல. உள்ளே இருக்கும் மொத்த தொழிலாளர்களும் தினந்தோறும் நரகாசூரனிடம் சிக்கியவர்களாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது.
தொடக்கத்தில் நிர்வாக (ADMN.) பொறுப்பில் இருந்த போது மூச்சு விட நிறைய நேரம் கிடைத்தது. தினந்தோறும் கோப்புகளோடு உறவாடிக் கொண்டிருந்தேன். என் விருப்பம் சார்ந்த அத்தனை செயல்பாடுகளுக்கும் நேரம் கிடைத்தது. ஆனால் நாலைந்து மாதங்களுக்கு முன் உற்பத்தித் துறையில் இருந்தவரின் திறமையற்ற செயல்பாட்டின் காரணமாக நிறுவனம் படிப்படியாக மூத்திரச் சந்துக்குள் சிக்கியவனின் நிலைபோலத் தடுமாறத் தொடங்கியது.
நிர்வாகம் விழித்துக் கொண்டது. உற்பத்தி மற்றும் நிர்வாகம் இரண்டிலும் என் அனுபவத்தைப் பற்றி உணர்ந்த நிர்வாகம் என்னைக் கரைத்து உற்பத்தி என்ற கடலுக்குள் தள்ளிவிட நான் அப்போது அவர்களிடம் வைத்த ஒரே கோரிக்கை "என்னிடம் பொறுப்பு கொடுத்து விட்டால் வேறு எவரும் எதிலும் தலையிடக்கூடாது "என்பதே.
திருப்பூரில் உள்ள ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனத்திலும் நிர்வாகம் என்பதும், அதன் ஆதார கொள்கை என்பதும் "எப்போதும் ஒவ்வொரு விசயத்திலும் சந்தேகப்பட்டுக் கொண்டேயிரு" என்பதே. காரணம் எத்தனை கோடிகள் புழங்கிக் கொண்டேயிருந்தாலும் இன்று வரையிலும் இங்குள்ள நிர்வாகம் என்பது குடிசைத் தொழில் போலவே நடந்து கொண்டிருக்கின்றது. காரணம் தொழில் என்பதையும் குடும்பம் என்பதையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் இருக்கும் முதல் தலைமுறை பணக்காரர்கள் இவர்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் ஒவ்வொரு துறையிலும் கலந்தே இருப்பார்கள்.
இதுவொரு மிகப் பெரிய சவாலான அதைவிட அவஸ்த்தையான பிரச்சனைகளை அதிக அளவு உருவாக்கக்கூடிய ஒன்று. தெளிய வைத்து தெளிய வைத்து அடி விழுந்து கொண்டேயிருக்கும். நம் மேல் விழும் அடியை பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தப்பக்கம் திரும்பினாலும் குற்றம் என்கிற ரீதியில் நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் தினந்தோறும் முழி பிதுங்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.
முக்கிய முடிவுகள் எடுத்தே ஆக வேண்டும். எடுக்காமல் இருக்கவும் முடியாது.
நிர்வாகம் மற்றும் உற்பத்தி இரண்டு துறையிலும் காசு அதிகம் புழங்கினாலும் உற்பத்தித்துறையில் வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்குவதால் ஊழலுக்குப் பஞ்சமிருக்காது. இந்தப் பதவியில் பெரும்பாலான நிறுவனங்களின் அவர்களின் உறவு சார்ந்தவர்கள் மட்டுமே அமர்த்தப்படுவார்கள். ஆனால் கட்டங்கள் மாறி என்னைக் கட்டத்திற்குள் கொண்டு நிறுத்தி, பட்டி மாடு போல சமாதானப்படுத்தி அடைத்தார்கள். நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். நானும் மகிழ்ச்சியாகத்தான் ஏற்றுக் கொண்டேன். நமக்குத்தான் பஞ்சாயத்துக்கு நாட்டாமையாக இருப்பது பாயசம் சாப்பிடுவது போலத்தானே?
என் வேகத்தின் காரணமாக அவர்கள் இலக்கு நிர்ணயித்த மூன்று மாதத்தில் கிடைக்க வேண்டிய பலன்கள் ஒரே மாதத்தில் கிடைக்க என் தனிப்பட்ட அதிகாரத்தில் குறுக்கீடு செய்து கொண்டிருந்த நிர்வாகத்தின் உறவுக்கூட்டம் சார்ந்த அத்தனை பேர்களை "நீங்கள் அத்தனை பேர்களும் ஒதுங்கி நின்று கொள்ளுங்க. இனி அவர் பார்த்துக் கொள்வார்" என்று நிர்வாகம் கட்டளையிட காற்றுச் சுகமாக வீசத் தொடங்கியது.
என் சுவாசம் சீரானது.
சுதந்திரம் என்பது முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒரு கோரிக்கையாக வைத்த போது நிர்வாகம் மிரண்டு போனது. அதாவது நிர்வாகம், உற்பத்தி இரண்டுக்கும் நானே ராஜா போல இருந்தால் வேறு சில காரியங்களை என் வேகத்தின்படி விரைவாக முடிக்க வசதியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்த போது மொத்த நிர்வாகமும் மிரண்டு போனது. காரணம் நிர்வாகத்தின் முதல் தலையாக ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி இருக்க அவரின் பழைமையாகப் பஞ்சாங்க செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் எனக்குப் பல இடர்பாடுகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தது.
"உழைப்பவனுக்கு உண்மையான சலுகைகள் கிடைத்தே ஆக வேண்டும்" என்பது என் கோரிக்கை. யார் உழைப்பவர்? யார் உழைக்காதவர் என்பதை நிர்வாகம் பார்ப்பவர் முடிவு செய்ய முடியாது? நான் தான் அதையும் முடிவு செய்வேன் என்ற போது பெரிய சலசலப்பு உருவானது.
இது எங்கும் இல்லாத அதிசயம். என் பிடிவாதம் அவர்களுக்குப் பல பயத்தை உருவாகத் தொடங்கியது. செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு கிளம்பி விடுவேனோ என்று பயந்து போய்க் குறிப்பிட்ட சில வாரங்கள் காத்திருக்கச் சொன்னார்கள். சிலவற்றைச் சோதிக்க, பலவற்றை ஒப்பிட்டுப் பார்க்க நான் எதிர்பார்ப்பது சரியே என்பதை உணர்ந்து கொண்டு நிர்வாகம், உற்பத்தி இரண்டையும் என்னிடம் கொடுக்கச் சம்மதித்தது, மொத்த நிர்வாகத்தின் பாதியை என் கையில் கொடுத்து மற்றொரு பகுதியை வேறொரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்.
ஏறக்குறைய 5000 பேர்களுக்கு மேல் பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் ஐம்பது சதவிகித நிர்வாகத்தின் மொத்த பொறுப்புக்கும் நானே ராஜா. நானே மந்திரி. நான் எடுக்கும் இறுதி முடிவுகள் சார்ந்து தற்பொழுது நிர்வாகம் வளர்ச்சிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. காரணம் மிகப் பெரிய பிரிவுகள் அனைத்தும் என் கைவசம். இங்கிருந்து உற்பத்தி செய்து செல்ல வேண்டிய ஆடைகள் பொறுத்தே நிர்வாகத்தின் நிதி நெருக்கடிகள் குறையும் என்ற நிலையில் இருப்பதால் சவாலான வேலைகளை தற்பொழுது சந்தோஷமாக செய்து கொண்டிருக்கின்றேன்.
வருடந்தோறும் முக்கியமான அரசு அறிவிப்பின்படி விட வேண்டிய விடுமுறை தினங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்த நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களிடம் இருந்து என்னிடம் பொறுப்புகள் வந்து சேர்ந்த போது 2014 பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நான் செய்தே முதல் பணி சுற்றறிக்கையின் மூலம் அன்றைய தினம் சம்பளத்தோடு கூடிய விடுமுறை தினம். அன்று அனைவரும் ஊரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று ஒவ்வொரு தொழிலாளர்களிடத்தில் கையெழுத்து வாங்கச் சொன்னேன்.
அப்போது உள்ளே இருக்கும் தொழிலாளர்கள், அலுவலம் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் தேர்தல் குறித்த எண்ணங்கள், கட்சி குறித்த அபிமானங்கள், அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவற்றை ஒவ்வொருவரிடமும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பேசி தெரிந்து கொள்ளத் தொடங்கினேன்.
28 comments:
அருமை!! முயற்சிக்குக் கிடைத்த வெற்றி!!!
தாடி கூட சொல்லி இருக்கார்..
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
(தனி மடல் பார்க்கவும்)
சுற்றறிக்கையின் மூலம் அன்றைய தினம் சம்பளத்தோடு கூடிய விடுமுறை தினம். அன்று அனைவரும் ஊரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று ஒவ்வொரு தொழிலாளர்களிடத்தில் கையெழுத்து வாங்கச் சொன்னேன்.
அருமையான முயற்சி..பாராட்டுக்கள்...
ஒரு தலைவர் திருப்புரில் உருவாகிறார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
தங்களின் திறமையையும் உழைப்பையும், சாதனையையும் படிக்கும்போது வியப்புதான் மேலிடுகிறது. வாழ்த்துக்கள்.
எழுத்தாளர்கள் சிலாகித்துப் பேசும் இலக்கிய வாசிப்பைத் தாண்டிய அனுபவமிது. ரத்தமும், சதையும், வியர்வையும் அழுக்கும் கலந்த உண்மையான வாழ்வியல் தத்துவங்களை இங்கிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். = நிஜம் தான். அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.
தங்களைப் போன்று சிந்திப்பவர்கள் பலரும் முதலாளிகளுக்கும் அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். தங்கள் தொழிற்சாலையில் சங்கங்கள் இருப்பதைப் பற்றி ஏதும் கூறவில்லையே.
கோபாலன்
நன்றி டீச்சர். இந்த தொடர் முழுக்க எவருக்கும் மறுமொழி அளிக்கும் எண்ணமில்லை. காரணம் நிறைய விசயங்களை அப்படியே பட்டவர்த்தனமாக உடைத்து எழுதும் எண்ணம். அது பலருக்கும் கோவத்தை வரவழைக்கும். இன்னும் ஏழெட்டு பதிவுகள் வரும். நண்பர்கள் அளிக்கும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் கடைசியில் பதில் அளிப்பேன். அது வரை பொருத்தாள்வார் பூமி ஆள்வார்.
நீங்க சுட்டிக்காட்டிய பிழைகளை திருத்தி விட்டேன். மிக்க நன்றி.
//காரணம் நிறைய விசயங்களை அப்படியே பட்டவர்த்தனமாக உடைத்து எழுதும் எண்ணம்.//
பதிவு சூப்பர். அடிச்சு ஆடுங்க.. நிறைய அனுபவங்களை சுவாசிக்க முடியும் எனக் கருதுகிறேன். தொடர்ச்சியாக வருகிறேன்.
தொழிற்சாலையில் நிர்வாகம், உற்பத்தி எனும் இரு பகுதிகள் இருக்கையில் அவற்றில் வெற்றியோடு உலா வரும் உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து வாசிக்க ஆயத்தமாயிருக்கிறேன்...
இறை நாட்டம்!
சார் எவ்வளவு மிக பெரிய பொறுப்பை மிக இலகுவாக தூக்கி சுமக்கிறீர்கள் என்பது நினைக்க அதிசயமாக இருக்கிறது .காரணம் நீங்கள் சொல்லும் ’அடுத்தடுத்து அலை ’சமாளிக்க உங்கள் மூளை வேறுவிதமாக தயார்படுத்தி கொண்டதன் விளைவாக இருக்கலாம் .ஆனால் இத்தனைக்கும் நடுவில் எழுத்தை அதன் நடையை பத்திரமாக சுமந்து வருவது இன்னும் பயமுறுத்துகிறது .ஆனால் இராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்ன மாதிரி நீங்கள் இன்னும் கடந்து போக வாழ்த்துக்கள் .நம்து ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதியின் மேஜிக் ஸ்பாட்டான பேக்கிங் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும் .காரணம் அங்கு இரவு பகலாக 100 % கார்டூன் ஆடிட்டராக வேலை பார்த்து ,அதன் விளைவாக தலையில் அத்தனை ஸ்கேனும் எடுக்கப்பட்டு தப்பி வந்த்தவன் நான் .
மிகப்பெரிய பொறுப்பை சவாலாக ஏற்று திறம்பட பணியாற்றியமைக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்! நன்றி!
நிர்வாகம், உற்பத்தி இரண்டனையும் ஒருவரிடமே ஒப்படைத்தது, நிர்வாகத்தார் உங்கள் மீது கொண்ட நம்பிக்கையையே காட்டுகிறது.
தொழிற்சாலை சூழ்நிலையின் பல பரிமாணங்களை அறிய முடிந்தது, தெளிவான சிந்தனை புதிய அணுகுமுறை, முறையான திட்டமிடல்,சலியாத உழைப்பு, நம்பிக்கையடனான செயல்பாடுகள் இவை சிறந்த நிர்வாகியின் பண்புகள். அத்தனையும் அமையப் பெற்றிருகிறீர்கள் . பாராட்டுக்கள்
பெங்களூரில் பொதுத்துறை நிறுவனங்கள் பிரபலமாக நடந்துகொண்டிருந்த நாட்களில் அத்தகைய பொதுத்துறை நிறுவனமொன்றில் பணியாற்றினேன். மொத்தம் 18000 பேர். ஒரு டிவிஷனில் குறைந்தது இரண்டாயிரம் பேர். அவ்வளவும் வெவ்வேறு வகையினர். இவர்களின் வாழ்க்கை நடைமுறைகள், சிந்தனைகள், செயல்பாடுகள் இவையனைத்தையும் கூடவே இருந்து கவனிக்கும் வாய்ப்பு- பணியாற்றிய அத்தனை வருடங்களிலும் கிடைத்தது.
இவர்கள் பேச்சுக்களின்போது நம்முடைய காதுகளை மட்டுமல்ல மனதையும் திறந்து வைத்துக்கொண்டால் இவர்கள் புழங்கும் உலகம் என்னவென்பது நமக்கும் அத்துபடி ஆகிவிடும். சமூகம் சார்ந்த, அரசியல் சார்ந்த என்னுடைய பல கருத்துக்கள் இந்த பல்வேறுபட்ட மக்களின் ரசனை அனுபவத்தையும் சிந்தனைகளையும் ஒட்டி ஏற்பட்டவையே.
உங்களுக்கும் வேறொரு வகையில் இதுபோன்று மக்களை உடனிருந்து பார்க்கும் பொறுப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அதிலும் மக்களை நேசிக்கத்தெரிந்த உங்களைப் போன்ற ஒருவர் அவர்களின் ரசனை அனுபவத்தில் பங்கேற்பது மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பணியிலும் ஈடுபடும் செயற்கரிய செயல்களைச் செய்துவருகிறீர்கள்.
நான் பணியாற்றிய நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறுவனத்தின் தலைவர்களாக எத்தனையோ பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் இரண்டு பேரை மட்டுமே அத்தனைத் தொழிலாளர்களும் இன்றைக்கும் தலைவர்களாக நினைத்து, மதித்து, போற்றிப் புகழ்ந்து அவர்களை மறந்துவிடாமல் இருக்கிறார்கள். ஒருவர் பெயர் கர்னலியஸ், இன்னொருவர் திரு சுவாமிநாதன்(இவரது மகள்தான் மாலதி ஐ.ஏ.எஸ்., தமிழக அரசுத்துறையில் உயர்அதிகாரியாய் இருந்தவர்)
உங்கள் பணிகளை நினைக்கும்போது எனக்கு இந்த இருவரின் பெயர்கள்தாம் நினைவுக்கு வருகின்றன. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நல்ல ஒரு பதிவு ஆரம்பம்! தங்களின் தலைமைப் பண்புகள் மிகவும் போற்றற்குரியதாக இருக்கின்றது! நண்பரே! அதுவும் போட்டி நிறைந்த வர்த்தகம்! ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பல விஷயங்கள்த் தெரிந்து கொள்ள முடிந்தது! வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி. குறுகிய காலத்தில் என் பதிவுக்கு தொடர் வாசகராக மாறிய உங்களுக்கு என் அன்பும் நன்றியும்.
மிகப் பெரிய நபர்களுடன் என்னை ஒப்பிட்டு இருக்கீங்க. திருப்பூரில் உள்ள நிர்வாகத்திறமையை, இங்கிருக்கும் முதலாளிகளின் குணாதிசியங்களை நீங்க நேரிடையாக பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இந்த ஊரில் உங்களால் இத்தனை வருடங்கள் வாழ முடிந்தது என்ற கேள்வியைத்தான் கேட்பீர்கள். நேரில் சந்திக்கும் போது இது குறித்து நிறைய பேசுவோம். உங்கள் அக்கறைக்கும் ஆழ்ந்த அன்புக்கும் என் வணக்கமும் வாழ்த்துகளும்.
புரிந்து கொண்டாலும் எங்களை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்று வாழும் முதலாளிகளும், எங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று வாழும் தொழிலாளர்களும் சேர்ந்த கூட்டணிக் கலவை தான் திருப்பூர். கற்றுக் கொடுப்பவர்கள் ஏராளமான நபர்கள் இருப்பதால் இன்று வரையிலும் கற்றுக் கொண்டே தான் இருக்கின்றேன். நன்றி முரளி.
நம்பிக்கை என்பது வேறு. பந்தயக்குதிரையை களம் இறக்குவது என்பது வேறு. நிர்வாகத்தில் பார்வையில் நான் வெற்றி பெறக்கூடிய பந்தயக்குதிரை. வேறென்ன சொல்ல முடியும்.
நன்றி சுரேஷ்
விரைவில் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்றொரு தொடரை வேறொரு தளத்தில் வாரந்தோறும் எழுதப் போகின்றேன். அப்போது உங்கள் ஆவல் நிறைவேறக்கூடும். நீங்களும், இங்கே வாழும் உங்களைப் போன்றவர்களும், என்னைப் போன்றவர்களும் அவர்கள் பட்ட பாடுகளை, படும் அவஸ்த்தைகளை இந்த தொடர் மூலம் தெரியவரும். நன்றி கிருஷ்ணமூர்த்தி.
நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.
மிக மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க. எங்கள் நிறுவனத்தில் மட்டுமல்ல எந்த நிறுவனங்களிலும் முன்பு போல சங்கங்கள் என்பதே இல்லை. ஆனால் சிலவற்றை உருவாக்கினேன். பகிர்ந்துள்ளேன். பார்க்கவும் படிக்கவும். நன்றி கோபாலன்.
சமகால சமூகத்தை பிரதிபலிக்கும் எழுத்தாளர்கள் மிக மிக குறைவு. காரணம் பயம். தனக்கு வரக்கூடிய ஆதாயம் வராமல் போய்விடுமோ என்ற அச்சம்.
உங்கள் அன்புக்கு நன்றி ஞானசேகரன்.
ரணகளத்திலும் உங்களுக்கு ஏனிந்த கிளுகிளுப்பு நண்பா?
முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றேன். முடிவுகள் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுண்டு.
ரிஷி முழுமையாக படித்தீர்களா?
Post a Comment