Tuesday, March 18, 2014

பயணமும் படங்களும் - பசியும் ருசியும்

மாற்றம் ஒன்றே மாறாதது

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இதைப் போலவே உணவு, உடை, உறைவிடம் என்றும் நம் வாழ்க்கைக்குரிய பட்டியல்களை ஏழுக்குள் அடக்கியுள்ளனர். காலமாற்றத்தில் ஏழும் ஏழரையாக மாறிக் கொண்டே வருகின்றது. ஒவ்வொன்றுக்கும் உண்டான மரியாதையும் மாறிக் கொண்டே வருகின்றது. 

அன்பை மட்டுமே கொடுக்க வேண்டிய அம்மா இப்போது குடும்பத்தின் வருமானத்திறகும் உதவ வேண்டியவராக மாறியுள்ளார். அவரும் வாழ்க்கை என்ற எந்திரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். தற்போதைய தலைமுறையில் தான் அப்பா என்ற குடும்பத்தலைவருடன் குழந்தைகள் உரையாடும் கலை முற்றிலும் மாறியுள்ளது. மகன்/மகள் என்ற கோடு உடைந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் உரையாடலாம் நட்பு ரீதியாக சமமாக உட்காரந்து கொண்டு பகிர்ந்து கொள்ளலாம் என்கிற நிலைக்கு மாறியுள்ளது. 

குரு என்பவர்களுக்குக் கையில் காசிருப்பவர்கள் மட்டுமே "கவனிக்கப்பட வேண்டிய" வர்கள் என்ற பார்வையை உருவாக்கியுள்ளது. "சிறப்புத் தரிசனம்" என்ற பெயரில் தெய்வங்கள் கூட சராசரி மனிதர்களுக்கு அந்நியப்பட்டுப் பட்டுப் போய்விட்டது. 

இவற்றையெல்லாம் விட உயிர் வாழ முக்கியத் தேவையான உணவு என்பதன் தன்மையும் மாறிவிட்டதை அதிகம் யோசித்துள்ளேன். பசிக்காக மட்டுமே உணவு என்பது மாறி இன்று ருசியைப் பொறுத்தே உண்ணக்கூடிய உணவு என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளது. நானும் விதிவிலக்கல்ல.

இட்லி , தோசை வேண்டாத பொருளாகவும், புரோட்டா, சைனீஸ் உணவு தான் நான் ரொம்ப விரும்புவது என்று சொல்லும் நிலைக்கு படிப்படியாக மாறிக் கொண்டே இருக்கின்றது.  உடம்புக்கு எது தேவை? என்பதை விட எந்த இடத்தில் எப்படிப்பட்ட வகையான உணவு கிடைக்கும் என்ற தேடுதலின் வேட்க்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது.

கையேந்தி பவன்கள்

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையிலும் நம்ப முடியாத ஏராளமான மாற்றங்கள். குறிப்பாக இந்த உணவுத்துறையில் ஆச்சரியமான மாற்றங்கள். நான் பார்த்த வரையிலும் 15 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் அரும்பாக்கம், எம்,எம்,டி,ஏ காலணி, அமிஞ்சிக்கரை, அண்ணாநகர், தி,நகர் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் எங்குத் திரும்பினாலும் நடைபாதையோர கைவண்டிக் கடைகளில் சுடச்சுட இட்லியை ஆவி பறக்கத் தட்டில் எடுத்து வைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சென்னையில் இப்போது எந்தப் பக்கத்திலும் அது போன்ற கைவண்டிகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது. திருப்பூரில் வாழ்க்கையைத் தேடி வந்த தென் மாவட்ட மக்களுக்கு இதுவொரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. இப்போது சொற்ப எண்ணிக்கையில் தான் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளனர். 

மாறிப் போன மக்களின் மனோபாவம். 

வசதியாக அமர வேண்டும். அந்த இடம் கௌரவம் தருவதாக இருக்க வேண்டும். தட்டில் கொண்டு வந்து வைப்பது எந்தக் கருமாந்திரமாக இருந்தாலும் சுவையாக இருக்க வேண்டும். வாந்தி பேதி வந்தாலும் வீட்டில் போய்க் கழுவிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் நாள் தோறும் மக்களின் சுவையின் வேகம் உணவகத் தொழிலை அலங்காரத் தொழிலாக வளர்த்துக் கொண்டிருக்கின்றது. அலுவலகத்தில் "ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் என் பொண்டாட்டி, குழந்தைகளை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகலைன்னா அந்த வாரம் முழுக்க ரொம்ப பிரச்சனையாயிடும் சார்" என்று சொல்பவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். 

எந்த உணவகங்களிலும் விலைப்பட்டியல் வைப்பதில்லை. காரணம் கேட்டால் மாதம் ஒரு முறை விலை மாற்ற வேண்டியதாக உள்ளது என்கிறார்கள்.  ஆனால் எளிய, ஆடம்பரம் தேவைப்படாத பல உணவகங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டதைப் போல குடலுக்கு கெடுதல் அளிக்காத உணவு வகைகளை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். நான் சென்ற பல இடங்களில் இது போன்ற உணவங்களையும் கண்டேன். 

சுற்றுலாத்துறை

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மட்டும் சிறப்பான அதிகாரிகளின் கையில் கொடுத்து விட்டு அரசாங்கம் தலையிடாமல் ஒதுங்கி நின்று ஒத்துழைப்புக் கொடுத்தால் மட்டும் போதும். வருடந்தோறும் பல கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும். காமதேனு பசுப் போலக் காட்சியளிக்கக்கூடிய இந்தச் சுற்றுலாத்துறை தற்போதைய அதிமுக ஆட்சியில் அவலத்தின் உச்சமாக உள்ளது. ஒவ்வொரு சுற்றுலாத்தலமும் ஒரு கழிப்பறை போலவே உள்ளது. மேலைநாட்டினர் வரலாற்றை பொக்கிஷமாக பார்க்கக் கூடியவர்கள். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்களோ வரலாற்றுப் பிழையாக அதிகாரத்தில் வந்தமர்ந்த காரணத்தால் தங்களை ஒரு வரலாற்று நாயகர்களாக சித்தரிப்பதில் தான் கவனமாக இருக்கின்றார்கள். கடைசியில் காலம் தயவு தாட்சண்யமின்றி குப்பை போல தூக்கி எறிந்தும் விடுகின்றது. திருந்தாத ஜென்மங்கள் வாழ்ந்தென்ன லாபம்?

அந்நியன் வருவானா?

சுற்றுலா பாதைகளில் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகம் என்ற பெயரில் வைத்திருப்பவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கலாம் என்று பலமுறை யோசிக்க வைத்த புண்ணியவான்களையும் கண்டேன். 

கருடபுராணத்தில் சொல்லப்படுகின்ற அத்தனை தண்டனைகளையும் கொடுத்து விட்டுக் கருடபுராணம் இரண்டாம் பாகம் தண்டனைகளைக் கொடுத்தாலும் போதாது. அந்த அளவுக்கு வயிற்றைக் கலக்கும் சேவையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். நள்ளிரவில் பட்டுக்கோட்டையில் ஒரு சிறிய கடையில் சாப்பிட்ட இடியப்பம் மற்றும் தும்மைப் பூ இட்லியை கூட்ட நெரிசலில் சாப்பிட்டு முடித்த போது கர்ண பரம்பரைப் போல கையில் இருப்பது அனைத்தையும் உணவக முதலாளிக்கு கொடுத்து விடலாம் என்ற வந்தது. அந்த அளவுக்கு வீட்டுப் பக்குவத்தில் சுவையின் உச்சத்தை கொடுத்து இருந்தார். பத்து பேர்கள் மட்டும் உட்கார்ந்து சாப்பிட வசதியாக இருந்த இடத்தில் சாப்பிட்ட ஒவ்வொருவரும்  சட்னி சாம்பாருடன் அதிக சிநேகம் கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆச்சரியப்படுத்திய இளைஞர்

எங்கள் பயணத்தில் ஒட்டுநகராக வந்தவர் என்றுமே மறக்க முடியாத நபராக என் மனதில் இடம் பிடித்தவர். நெருக்கடியான நிலையிலும் ஒரு மனிதர் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை உணர்த்திக் காட்டியவர். உச்சக்கட்ட நேர்மை என்பார்களே அதையும் தாண்டி தன் சொந்த வாழ்க்கையில் கூட ஓழுக்க விழுமியங்களைச் சிறப்பாகக் கடைபிடிக்கும் அவரின் மனோநிலையை, பழக்கவழக்கங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். 

சென்னையில் இருந்து வண்டியை எடுப்பதற்கு முன்பு அவரிடம் தனியாக அழைத்துச் சென்று இப்படித்தான் சொன்னேன். "உங்க வண்டிக்கு பெட்ரோல் போடுவதை விட என் வயிற்றுக்குச் சரியான நேரத்தில் சரியாகப் பெட்ரோல் போடுவது ரொம்ப முக்கியம். நீங்க நிறுத்தும் கடைகளின் உணவின் தரம் சரியில்லை என்றால் நீங்க தான் பொறுப்பு" என்றேன். அவர் சிரித்துக் கொண்டே "நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றார். 

ஆசான் எப்போதும் போலப் பையில் பழ வகைகளை வைத்திருந்தார். அவருக்கு உணவே அது மட்டுமே. எனக்கு ஒவ்வொரு இடங்களிலும் சாப்பிட்டு விட்டு அவர் வைத்திருப்பதையும் சாப்பிடுவது தான் முக்கிய வேலையாக இருந்தது.

செங்கல்பட்டைத் தொடுவதற்கு முன்பே உள்ளே பகவான் பாசுரம் பாடத் தொடங்கி விட்டார். நான் முணுமுணுக்கத் தொடங்க இன்னும் அரைமணி நேரம் தான் என்று சொல்லி செங்கல்பட்டுத் தாண்டி ஒரு கடையில் நிறுத்தினார். ரசித்த பொங்கலுடன் செறிக்காத பூரியும் சேர்ந்து பயணத்தைச் சுகமாக்கியது. பக்கவாட்டில் அந்த காலை நேரத்தில் தோசைக்கல்லில் ஆம்லேட் போட்டுக் கொண்டிருப்பதை "வேடிக்கை" மட்டுமே பார்த்து விட்டு வண்டியில் ஏறினேன்.

இராஜராஜனுடன் ஆசான்


சென்னை போக்குவரத்து நெரிசலைத் தாண்டி செங்கல்பட்டு அருகே ஆசுவாசப்படுத்திக் கொண்ட போது

வாகன ஓட்டுநருடன்


2014 ஆம் ஆண்டு நிச்சயம் இயக்குநராக மாறி இருப்பேன் என்று உறுதியளித்துள்ள மதனுடன்

துணை ஒளிப்பதிவாளாராக பணியாற்றிக் கொண்டிருக்கும்  குமாருடன்

ஆசானுக்கு அடுத்த கட்ட நிகழ்வை தெரியப்படுத்திய போது

முந்தைய பயண பதிவுகளின் தொகுப்பு

25 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

// சுற்றுலாத்துறை வருடந்தோறும் பல கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும்.// உண்மைதான்.
இதுவும் மக்களுக்காற்றும் சேவை என யாரும் நினைப்பதில்லை .

saidaiazeez.blogspot.in said...

தமிழக சுற்றுலாத்துறையை இன்னும் அதிகமாக வளர்க்கவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு.
அம்மா மெஸ் வந்ததற்கு பிறகு மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தள்ளுவண்டி வியாபாரிகளும் இட்லி தோசை சுட்டுத்தந்த ஏழை பாட்டிகளுமே!
அருமையான படங்களுக்கு சிறப்பான பாராட்டுகள்.
அந்த ஓட்டுனருக்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்களையும் கூறிவிடுங்கள், ஜோதிஜி

திண்டுக்கல் தனபாலன் said...

அந்நியன் எங்கே வருவது...? ஒவ்வொருத்தராக மாறினால் தான் உண்டு...

முடிவில் நீங்கள் தானா...? நீங்கள் தானா...? - சிரித்தது...? ஹிஹி...

அனைத்து படங்களும் சூப்பர்...!

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா போட வைதத அழகிய சுற்றுலாத்தொகுப்பு! அந்நியன் வருவானா? அருமையான கேள்வி! ஏனென்றால் இந்த தேசிய நெடுஞ்ச்சாலையில் உள்ள உணவகங்கள்பகற் கொள்ளையர்கள்! அரசுக்குத் தெரியாமலா இருக்கும்?

படங்கள் எல்லாமே அழகாக உள்ளன!

நல்லதொரு சுவையான பகிர்வு!!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிக ஆதங்கமான உணர்வுகளும் அதே சமயம் உரக்கவும் சொல்லும் ஒரு ஆளை தமிழகம் திரும்பி பார்க்கிறது

Amudhavan said...

சுற்றுலா போகிற எல்லாருக்குமே மிகவும் அவசியமான இரண்டு விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். உணவு மற்றும் ஓட்டுநர். இதில் முதலாவது கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் ஓட்டுநர் சிறப்பானவராக இருந்தார் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஓட்டல்கள் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் பொறுப்பேற்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. எளிமை மற்றும் சுத்தம் கூடவே சுவை- என்ற கான்செப்ட் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து வருவது மிகவும் கவலை அளிக்கும் விஷயமே.

”தளிர் சுரேஷ்” said...

உணவகங்களின் தற்கால போக்கு குறித்த கவலை உண்மையான ஒன்று! சிறப்பான பகிர்வு! நன்றி!

Rathnavel Natarajan said...

திரு ஜோதிஜி அவர்களின் அற்புதமான சுற்றுலாப் பதிவு.
பயணமும் படங்களும் - பசியும் ருசியும்
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

எம்.ஞானசேகரன் said...

பயணத்தைத் திட்டமிட்டதைப்போல பதிவையும் திட்டமிட்டே எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆதங்கம், விருப்பு, வெறுப்புகளை அழகாக பதிவு செய்கிறீர்கள். உடன் உதவியவர்களையும் மறக்காமல் குறிப்பிடுகிறீர்கள்!

Pandiaraj Jebarathinam said...

இங்குள்ள ஆட்சியாளர்களோ வரலாற்றுப் பிழையாக அதிகாரத்தில் வந்தமர்ந்த காரணத்தால் தங்களை ஒரு வரலாற்று நாயகர்களாக சித்தரிப்பதில் தான் கவனமாக இருக்கின்றார்கள். கடைசியில் காலம் தயவு தாட்சண்யமின்றி குப்பை போல தூக்கி எறிந்தும் விடுகின்றது. திருந்தாத ஜென்மங்கள் வாழ்ந்தென்ன லாபம்?/////////

மிகச் சரியான சாடல் ...உணவின் உன்னதத்தை நாம் மறந்து ஓடிக்கொண்டிருக்கிறோம் ...

ezhil said...

ரொம்ப சரிங்க... சமீபத்தில் என் கணவர் ஒரு விழாவிற்கு திருக்கடையூர் சென்று வந்து அங்கு அவ்வளவு பணம் சுழல்கிறது...ஆனால் சுற்றுப்புறம் குறித்து யாருமே கவலைப்பட்டதாய் தெரியவில்லை...அதைத்தாண்டிச் சென்று சாப்பிடச் செல்லவே அருவருப்பாய் இருந்ததெனச் சொன்னார்....

கரந்தை ஜெயக்குமார் said...

ஓட்டுநரும் உணவும் ஒழுங்காக இருந்தால்தான் பயணம் இனிக்கும் என்பதை அழகுற சொல்லியுள்ளீர்கள் ஐயா. உண்மை, முற்றிலும் உண்மை.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் நண்பர்கள் இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் திரையில் மின்ன வாழ்த்துக்கள் ஐயா

ஜோதிஜி said...

நிச்சயம் உங்கள் வாழ்த்துக்களை அவர்கள் படித்துருப்பார்கள். உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி

ஜோதிஜி said...

அங்கே மட்டுமல்ல. பல கோவில்களின் இதே தான். அடுத்த பதிவு இதைப் பற்றித்தான்.

ஜோதிஜி said...

நன்றி பாண்டியன்

ஜோதிஜி said...

உங்களுக்காக ஒரு பதிவு எழுத வேண்டும். இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து அதையும் எழுதி முடிப்பேன்.

ஜோதிஜி said...

மிக்க நன்றிங்க

ஜோதிஜி said...

வருக சுரேஷ்

ஜோதிஜி said...

சில இடங்களில் பல மனிதர்கள் நம்பிக்கை அளித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் காலமும் சூழ்நிலையும் அவர்களையும் பல மாற வைத்துவிடுகின்றது. பணத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதை உணர மறுக்கும் சமூக போக்கில் இதுவும் அங்கமே.

ஜோதிஜி said...

நம்மில் உருவாகும் அல்லது உருவாகப் போகும் தங்கமான எண்ணங்கள் அனைத்தும் ஆதங்கமான சூழ்நிலைகள் மட்டுமே நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றது என்பதும் உண்மை தானே?

ஜோதிஜி said...

மிக்க நன்றி.

ஜோதிஜி said...

எனக்கே தெரியாமல் எடுத்த காரணமாக இருக்குமோ?

தி.தமிழ் இளங்கோ said...

நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு பேருந்துகள் நிற்கும் மோட்டல்களைப் பற்றி என்ன சொன்னாலும், என்ன எழுதினாலும் அவர்கள் மாறவே மாட்டார்கள்.

ஜோதிஜி said...

பணம் படுத்தும் பாடு