ஒவ்வொரு முறையும் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் செல்லும் போது அங்கே உருவாகிக் கொண்டிருக்கும் கட்டிடங்களைப் பார்க்கும் போது அடி வயிறு கலங்கிப் போகின்றது. வருகிற ஆண்டு எந்த அளவுக்குக் கட்டணத்தை உயர்த்தப் போகின்றார்களோ ? மனதில் பயமும் வந்துவிடுகின்றது.
கடந்த எட்டாண்டுகளில் நம்ம முடியாத வளர்ச்சி. ஏற்றுமதி நிறுவனங்கள் நினைத்தே பார்க்க முடியாதது. பள்ளி முடியும் சமயங்களில் அவசரமாய் வாகனங்களில் வந்து சேரும் அப்பாக்களும், பெருத்த உடம்பை சுடிதாருக்குள் திணித்து, வேர்வையுடன் ஒப்பனை கலைந்து, மூச்சு வாங்கியபடி அலுப்போடு வந்து சேரும் அம்மாக்களையும் பார்க்கும் போது கவிதைகளாகத் தெரிகின்றார்கள்.
அங்கே நான் காத்திருக்கும் நேரத்தில் எதிரே வரும் ஃப்ரிகேஜி குழந்தைகளைப் பார்க்கும் பொழுது இவர்கள் பால்குடி மறந்திருப்பார்களா? என்று நினைக்கத் தோன்றுகின்றது. குட்டி தேவதைகள். குழந்தைகளுக்காகக் காத்திருக்கும் சில நிமிடங்களில் கூட அப்பாக்கள் ஹெட்போனில் பேசிக் கொண்டே குழந்தைகளை இழுத்துக் கொண்டு செல்கின்றார்கள்.
இந்த வருடம் பள்ளிக்கு இளமையான புதிய உடற்பயிற்சி ஆசிரியை ஒருவர் வந்திருப்பதைப் பார்த்து விட்டுக் குழந்தைகளிடம் அவர் பெயர் என்ன? என்று கேட்ட போது "நீங்க கேட்டதை அம்மாவிடம் சொல்கின்றோம்" என்றார்கள். பழகிய மிஸ்கள் எவரும் பள்ளியில் இல்லை. இந்த வருடத்தில் அறிமுகமானவர்களும் தூரத்தில் தெரிகின்றார்கள். பெற்றோர்கள் மாடிக்குச் செல்ல அனுமதியில்லை என்கிறார்கள். குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளைச் சுமந்து கொண்டு வந்த போது எங்கள் ஊரில் உள்ள ஆரிசி ஆலைகளில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் ஞாபகம் வந்து போனது.
மூவரில் ஒருவர் சொன்னார்.
"அப்பா அந்த மிஸ்ஸை போய் என்னன்னு கேட்டுட்டு வாங்கப்பா?" என்றார்?
"ஏனம்மா?" என்றேன்.
"பிடி கிளாஸ்லே விளையாட விடமாட்டுறாங்க. படிபடின்னு உயிரை எடுக்குறாங்க" என்றார்.
பலசமயம் இவர்களுக்காக அடியாள் வேடமும் போட வேண்டியுள்ளது.
******************
சென்ற ஆண்டுத் திருப்பூரே சவக்களையாக இருந்தது. ஊரெங்கும் "வீடு வாடகைக்கு விடப்படும்" அட்டைகள் தென்பட்டது. இப்போது "அடுத்த ஆறு மாதத்திற்கு வீடே கிடைக்காது" என்கிறார் நண்பர். சீனாவும், பங்களாதேஷ் ம் பல காரணங்களால் பின்னுக்குப் போய்விட வந்திறங்கிய புதிய ஒப்பந்தங்கள் ஒப்பனை போல ஊரை மிளிர வைத்துக் கொண்டிருக்கின்றது. சென்ற வருட மின் தடையில் பாதிக்கப்பட்ட பலரையும் காணமுடியவில்லை.
சிறிய நிறுவனங்கள் அழுத்தப்பட்ட காரணத்தினால் பலரும் தங்கள் நிறுவனங்களை வந்த விலைக்கு விற்று விட்டு வேலைக்குச் செல்பவர்களாக மாறியுள்ளனர். இந்த வருட மின் தடையும் அடுத்த வருடத்திற்கான "வேலையாட்களை" உற்பத்தி செய்து விடும் என்றே தோன்றுகின்றது. மனிதர்களையும், மனிதத்தையும் மதிக்காத பல பெரிய முதலாளிகள் ஆட்டத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கத் தொடங்கியுள்ளனர். வங்கியில் அடமானம் வைத்துள்ள சொத்துக்கள் ஏலம் விட எப்போது பத்திரிக்கையில் வருமென்று காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வங்கி அதிகாரிகள் முடிந்தவரைக்கும் மிரட்டிப் பார்த்து விட்டு அரசியல் "அழுத்தம்" அதிகமானதும் வேறு ஊருக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு செல்ல காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏமாற்றியே பிழைத்த அத்தனை பேர்களுக்கும் இன்று தொழிலாளர்கள் சவாலாக இருப்பதால் கையில் இருக்கும் சொத்து பெரிதா? காப்பாற்றிக் கொள்ள வேண்டிய மானம் பெரிதா? என்ற பட்டிமன்றத்திற்குப் பலரும் நடுவர்களைத் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
**********************
கலைஞர் உருவாக்கியது தானே? என்ற எண்ணமில்லாமல் வெற்றிகரமாகச் சென்ற மாதத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு காவல் துறை கமிஷனர் அலுவலகத்தை ஜெயலலிதா காணொளி காட்சியில் திறந்து வைக்க இப்போது முக்கியச் சாலைகளில் போக்குவரத்துக் காவலர்கள் அதிகமாகவே கண்களுக்குத் தெரிகின்றார்கள்.
பத்திரிக்கை நண்பரிடம் கேட்டேன். "இனி சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வந்து விடும் தானே?" என்றேன்.
"ஆமாம். சட்டப்படி பிரித்துக் கொடுக்க வேண்டும். அதை ஒழுங்காகக் கொடுக்கப்பட வேண்டும்" என்றார்.
முந்தைய ஆட்சியில் எல்லாத்துறையிலும் ஏழரை சதவிகிதம் என்றார்கள். மக்களும் ஏழரை ராசியில்லை என்று வீட்டுக்கு அனுப்ப இப்போது கட்டிங் அளவு உயர்ந்து பதினைந்து சதவிகிதம் என்கிறார்கள்.
கொடுமையான தண்ணீர் பஞ்சம் ஒவ்வொரு சந்து மக்களையும் தடுமாற வைக்க மக்களும் இங்கேயும் ஒரு இடைத் தேர்தல் வந்து விடாதா? என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
*************************
சாலையில் செல்லும் பொழுது பார்த்த புதிய கட்டிடங்களை விட உள்ளே செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகள் ரசிக்கும்படியாக உள்ளது. தரம் பின்னுக்குப் போய் அழகில் பொய்களைத் தேட மக்களும் பழகிவிட்டார்கள். "பிராண்ட் நேம்" பன்னாட்டு நிறுவனக் கடைகளும் இந்த வருடம் அதிகமாக வந்துள்ளது.
கசாப்புக்கடை திறப்பு விழா முதல் தலைமுடி அலங்கார கடைகள் திறப்பு விழா வரைக்கும் பாரபட்சமில்லாது அரசியல்வாதிகள் திறந்து வைத்து மக்கள் "சேவை" செய்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு நிலையிலும் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். "கட்டிங்" என்ற வார்த்தையை தேசிய முக்கியத்துவம் பெற்ற வார்த்தையாக விக்கிபீடியாவில் கொண்டு வந்து விடலாமா? என்று ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.
"எனது அரசு","என் ஆணை",போன்ற வார்த்தைகள் தெருவில் கிடந்தவர்களைக் கோபுரத்தில் வைத்துள்ளதால் திருப்பூர் சுகாதாரம் நாறிப்போய்த்தான் கிடக்கின்றது. பேக்கரி, பீட்சா, பர்கர் கடைகளில் கூட்டம் அதிகமானதால் நரம்புக்கு, மூளைக்கு, முட்டிக்கு, வயிற்றுக்கு உருவான நவீன ரக மருத்துவ மனைகளைப் போலச் சந்துக்கு நான்கு மருந்துக்கடைகளும் இந்த வருடம் அதிகமாகியுள்ளது.
2013 (மொத்தமாக) என் டைரிக்குறிப்புகள்
கணக்குப்புள்ள மமோ காரியவாதி நமோ
ஊரெல்லாம் மினுமினுப்பு 2013
சந்துக்குள் சிந்து பாடலாம்
இப்படியும் (சிலசமயம்) உங்களுக்கு நடக்கக்கூடும்
29 comments:
எல்லா பள்ளிகளும் இப்படித்தான்..
பள்ளிகளை நினைக்கும் போது புளியைக் கரைக்கத்தான் செய்கிறது அண்ணா...
இன்றையப் பள்ளிகள் இப்படித்தான்
எல்லா மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கும் கட்டணம் வரையறுக்கப் பட்டுள்ளது.தைரியம் இருப்பவர்கள் தட்டிக் கேட்கலாம்.ஆனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப் படுமோ என்று பயந்து கேள்வி கேட்க முன்வருவதில்லை. அது மட்டுமல்ல இவ்வளவு வசதி செய்து தருகிறார்கள் கட்டணம் அதிகமாக இருப்பது நியாயம்தான் என்று பெற்றோர்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். ஆனால் கட்டிடங்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் கூட டாய்லட் வசதிகள் மிகவும். மோசம். அதற்கு பயந்து கொண்டே பல பெண்பிள்ளைகள் பாத்ரூமே செல்வதில்லையாம். குழந்தைகளிடம் கேட்டுப் பார்த்ததால் உண்மை நிலை தெரிந்து விடும். பெற்றோர் படிப்பைப் பற்றி கேட்கிறார்களே தவிர இவற்றைப் பற்றி சிந்திப்பது இல்லை
////பெருத்த உடம்பை சுடிதாருக்குள் திணித்து, வேர்வையுடன் ஒப்பனை கலைந்து, மூச்சு வாங்கியபடி அலுப்போடு வந்து சேரும் அம்மாக்களையும்///
திருப்பூரில் பெண் இயக்கங்கள் இல்லையா என்ன?
///இந்த வருடம் பள்ளிக்கு இளமையான புதிய உடற்பயிற்சி ஆசிரியை ஒருவர் வந்திருப்பதைப் பார்த்து விட்டுக் குழந்தைகளிடம் அவர் பெயர் என்ன? என்று கேட்ட போது "நீங்க கேட்டதை அம்மாவிடம் சொல்கின்றோம்" என்றார்கள்///
பிள்ளைகள் காலத்துகேற்ப மாறாது போலிருக்கே ஹும்ம்ம்ம்ம் இப்படி இருந்தா நாம எப்படி இளமையான டீச்சர் பெய்ரை எப்படி தெரிந்து கொள்வது...
///இங்கேயும் ஒரு இடைத் தேர்தல் வந்து விடாதா? என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
போட்டுத்தள்ளிட வேண்டியதுதானே...
நான் படித்த படிப்பு, எனது சிறு வயது ஸ்கூல் யாபகம் கண் முன்னே வந்து சென்றது...... எல்லோரும் அதெல்லாம் அந்த காலம் என்று சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதுதான் ! நல்ல பதிவிற்கு நன்றி !
/////பெருத்த உடம்பை சுடிதாருக்குள் திணித்து, வேர்வையுடன் ஒப்பனை கலைந்து, மூச்சு வாங்கியபடி அலுப்போடு வந்து சேரும் அம்மாக்களையும்///
/// - திருப்பூரில் பஞ்சாலை தான பேமஸ்...? அரிசி ஆலையுமா? ஜாக்கிரதைங்க ம.தமிழன் பத்த வச்சிட்டார்... அப்பறம் எல்லாரும் மொத்தமா வந்துட போறாங்க....!
முரளி சார் சொன்ன மாதிரி பள்ளிக்கூடங்களில் நிறைய பேர் உபயோகிக்கிற கழிவிடங்களை அடிக்கடி தூய்மை செய்ய பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும்......
மிக்க நன்றி!
குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டு தங்கள் பொறுப்பையும் கழற்றிவைத்துவிடும் பெற்றோர்கள் தான் இங்கே அதிகம். பள்ளியின் நிலவும் சுகாதாரம் பற்றி யாருக்கு அக்கறை?
மனமே வசப்படு வாக்கியங்களைப் படித்து நாம் பாக்கியசாலிகள் என்று சந்தோஷப்படலாம்.
ஜி.. இப்பெல்லாம் இந்த வாரப்பத்திரிக்கையில் கிசு கிசு பாணியில் .. எழுத்றீங்க....
கனமான சப்ஜக்டை எடுத்து அதை அதன் நீள அகல பரிணமங்களுடன் ஆழமாக எழுதிய எழுத்துகளுக்கு புகழ்பெற்ற நீங்கள்.. இப்படி வாரமலர் நடுப்பக்க எழுத்தாளர் போல எழுதுவது..
வலை உலகிற்கு இழப்பு..
அது சரி.. யார் அந்த அடியாள்.. அது என்ன வாக்குமூலம் ?
ஒவ்வொரு குடும்பத்திலும் தகப்பன் தானே அடியாள். வருடம் முழுக்க கணமான விசயங்களையே எழுதிக கொண்டிருந்தால் என்ன ஆவது வினோத். கொடுத்துள்ள அனைத்துமே வாக்குமூலம்தானே?
நீங்க சொல்லியுதைத்தான் குழந்தைகளிடம் வாசித்துக் காட்டினேன். இவர்கள் பள்ளியில் சுகாதாரம் பரவாயில்லை.
தனக்கு பொருத்தமில்லாத ஆசைகளை ஆடைகளின் வாயிலாகவே அணிந்து இங்கே பலரும் தங்களை மற்றவர்களுக்கு காட்சிப் பொருளாக காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
நன்றி சுரேஷ்.
ஏன்? ஏனுங்க இந்த கொலவெறி?
வேறென்ன? அவரிடமே என்னை அறிமுகம் செய்து பெயரை தெரிந்து கொண்டேன்.
முதலில் பெற்றோர்கள் அவரவர் வீட்டில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக வைத்துள்ளனரா? அல்லது குழந்தைகளுக்கு கழிப்பறையின் சுத்தம் குறித்து சொல்லித் தருகின்றார்கள்? என்றா நினைக்கின்றீர்கள்.
தப்பித்து பிழைத்தவர்கள் வாழ தகுதியானவர்கள்.
காசே தான் கல்வி. வேறென்ன செய்வது குமார்?
மொத்தமாக குறை சொல்ல முடியாது.
'ஒரு அடியாளின் வாக்குமூலம்'............தலைப்பே அருமை.
கனமான என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும்.
இந்த தலைப்பில் ஒரு புத்தகம் வந்துள்ளது என்று நினைக்கின்றேன். நன்றிங்க.
இன்று தொழிலாளர்கள் சவாலாக இருப்பதால் கையில் இருக்கும் சொத்து பெரிதா? காப்பாற்றிக் கொள்ள வேண்டிய மானம் பெரிதா? என்ற பட்டிமன்றத்திற்குப் பலரும் நடுவர்களைத் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
Last June, when I was in Bangalore, I visited a large private school that has a few thousand students. Educating thousands of kids in a structured manner is a very tough task. I was impressed at the way they bring in the kids into the school.
I don't agree with the hyper competitive way of enforcing academic excellence over individual development. I also don't see that environment changing due to lack of parental support.
அருமையான பதிவு. நன்றி.
விலைவாசிகளும் கூடுகின்றன; அதனால் எல்லா துறைகளிலும் சதவீதங்களும் கூடுகின்றன போலும்.
பெருமூச்சு விடத்தான் முடியும். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.
நன்றி நாடோடிப் பையன். தற்பொழுது பெற்றோர்கள் மனதில் இருப்பது நான் பார்த்த வரைக்கும் இயல்பான கல்வித்திட்டம் என்றால் எங்கே தன் பையன் சமூகத்தில் போட்டி போட முடியாமல் பின் தங்கி விடுவானோ? என்று மறுகி சிபிஎஸ்சி மற்றும் அதற்கும் மேம்பட்ட கல்வித்திட்டத்தில் கொண்டு போய் தள்ளுகின்றார்கள். மெட்ரிக் பள்ளிகளில் கூட ஐசிஎஸ் சிலபஸ் தான் வைத்து உள்ளனர். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் 90 சதவிகித மெட்ரிக் பள்ளியில் 6 முதல் 12 வரைக்கும் சமச்சீர் கல்வியில் தான் மாணவர்கள் படிக்கின்றார்கள். சில பள்ளிகளில் 9 வரை பல்வேறு பலதரப்பட்ட பாடத்திட்டத்தில் படித்தாலும் 10 முதல் 12 வரைக்கும் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள இயல்பான பாடத்திட்டத்தில் மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண்கள் அதிகம் எடுக்க வைப்பதில் தான் தங்களின் முழுசக்தியையும் கல்வி நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
பழைய பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்க. நன்றி.
வருகைக்கு நன்றி அய்யா.
Fact!!!
Post a Comment