Sunday, October 13, 2013

முகநூல் - மலமும் மனமும்

முகநூல் என்பது குப்பைகள் மட்டுமே சேருமிடமாக இருந்தாலும் அபூர்வமாக பலருக்கும் பயன்படக்கூடிய உருப்படியான விசயங்களை எவரோ சிலர் இடைவிடாது எழுதி வைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். ஒவ்வொருமுறையும் கழுவி சுத்தம் செய்து வைத்தாலும் இன்று வரையிலும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. 

மூகமூடி மனிதர்களும், கொடூரமான எண்ணம் கொண்டவர்களின் பொழுது போக்காக இன்றைய தமிழ் சமூக வலைதளங்கள் மாறிவிட்டது. ஆனாலும் பல நல்ல விசயங்களும் நமக்கு கற்றுத் தரக்கூடியதாக உள்ளது என்பதும் உண்மை.

ஒழுங்கான வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் இது போன்ற தளங்களில் பயணிப்பதில்லை என்றாலும் அவர்களுக்காக என் பார்வையில் பட்ட சில நிலைத் தகவல்களை இங்கே பதிவாக்கி வைக்க நினைக்கின்றேன்.

•••••••

எனது நண்பர் ஒருவர், முகநூலிலும் இருக்கிறார். ஆனால் கருத்துக்களை பதிவிடுவதோ, பின்னூட்டம், விருப்பம் இடுவதோ கிடையாது. மற்றவர் பதிவுகள் அனைத்தையும் படிப்பதோடு சரி. 

அதற்கு அவர் சொன்ன விளக்கம், யோசிக்க வைத்தது:

"உலகில் இரண்டாவது மனிதன் தோன்றிய பிறகு உருவான முதல் விசயம் - விவாதம்! அரசமரம், திண்ணை, டீ கடை... இப்போது சமூக இணைய தளங்கள்.

இதுபோன்ற விவாதங்களால் ஏதேனும் தீர்வு கிடைத்ததும் இல்லை, ஒருவரேனும் "எனது கருத்து தவறு. இப்போது திருத்திக்கொண்டேன்" என்று சொன்னதும் இல்லை. 

காரணம், கிட்டதட்ட எல்லோருமே, தான் மட்டுமே அறிவாளி, மற்ற அனைவரும் முட்டாள்கள் எனவும் நினைத்தே வாதத்தில் ஈடுபடுகிறார்கள். 

தவிர, விவாதத்தில் தனது கருத்து தோற்றால், தானே தோற்றது போல நினைக்கிறார்கள். ஆகவே தோற்கும் நிலையில் இருப்பவர்கள் விதண்டா வாதம் செய்யத் துவங்குகிறார்கள் அல்லது தனிப்பட்ட தாக்குதலை ஆரம்பிக்கிறார்கள்.

இது போன்ற விவாதங்களால் யாருக்கும் பயனில்லை.

அதற்கு பதிலாக விவாதத்தை அவரவருக்குள் நடத்தலாம். நீங்கள் எந்த கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களோ.. அதற்கு மாற்றுக் கருத்துக் கொண்ட புத்தகங்களைப் படியுங்கள், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், காணொளிகளைப் பாருங்கள்.. அவை குறித்த கேள்விகளை உங்களுக்குள் கேளுங்கள்.

இப்படி தனக்குத்தானே நடத்திக்கொள்ளும் விவாதம், நிச்சயம் தெளிவைத் தரும். தவிர, பல புதிய விசயங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால் நம்மில் பலர்... மாற்றுக் கருத்துக்களைச் சொல்லும் புத்தகங்களை மட்டுமல்ல... தங்களுக்கு உடன்பாடான கருத்துகொண்ட புத்தகங்களைக் கூட படிப்பதில்லை. இதை அவர்கள் முன்வைக்கும் வாதங்களே சொல்லிவிடுகிறது.

ஆகவே, உங்களுக்குள்ளேயே விவாதிக்கத்தொடங்குங்கள்!"

சோமு

•••••••••••••••••

இப்போது அதிகமாக விமர்சிக்கப்படுபவர் தமிழருவி மணியன். காரணம் பாஜகவுக்கு ஆதரவான அவரது நிலைப்பாடு. காந்தியவாதியான தமிழருவி மணியனா இப்படி பேசுவது என்று பலர் விமர்சிக்கிறார்கள். அவர் அப்படி பேசுவதில் பெரிய வியப்பில்லை. எந்த காந்தியவாதி இந்துத்வாவின் கொள்கைக்கு எதிராக மதசார்பற்ற ஜனநாயக கொள்கையை கொண்டிருக்க முடியும்? காந்தியே இந்துத்வாவிற்கு ஆதரவான கொள்கையை கொண்டிருந்த போது காந்தியம் மட்டும் எப்படி மதங்களுக்கெதிரான கூறுகளை கொண்டிருக்க முடியும்? 

“நான் வருணாஸ்வருண தர்மத்தை ஆதரிக்கிறேன்; ஆனால் நான் சொல்லும் வருணாஸ்ரம தர்மம் வேறு! நான் இராமனை ஆதரிக்கிறேன்; ஆனால் நான் சொல்லும் இராமன் வேறு!” 

என்று காந்தி புதுப்புது விளக்கங்கள் கொடுத்தாலும் சுற்றி சுற்றி அவரின் கருத்து இந்துத்வாவிற்கு எதிராக இல்லாமல் அதற்குள்ளேயே உழன்றுகொண்டிருந்தது. அதனால் தான் இந்துத்வாவிற்கு எதிராக போராடிய டாக்டர் அம்பேத்கர், காந்திக்கு மிகப்பெரிய எதிரியாக தெரிந்தார்.

தீண்டாமைக்கெதிராக சமபந்தி விருந்தை பற்றி அம்பேத்கர் பேசிய போது அதற்கு காந்தி கொடுத்த பதில், ”உண்ணுவதில் சமமாக உட்கார்ந்து உண்ணவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மலம் கழிக்கும் போது சமமாக உட்கார ஆசைப்படுகிறார்களா?” என்று எகத்தாளமாக கேட்டவர் தான் மகாத்மா(?)

அப்படிப்பட்ட மகாத்மா (?) காந்தியிலிருந்து வந்தது தான் காந்தியம்; காந்தியம் விண்ணில் இருந்த குதித்த தத்துவம் அல்ல! 

தமிழருவி மணியன் உண்மையான காந்தியவாதி! அதனால் அப்படி பேசுகிறார். மற்ற காந்தியவாதிகளை போல கள்ள மௌனம் காக்காமல் வெளிப்படையாக பேசுகிறார். (But அவருடைய Approch எனக்கு பிடிச்சிருக்கு)

காங்கிரஸ் / காந்தியமும் பாஜகவும் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்றால் பிறகு ஏன் இருகட்சிகளுக்கும் போட்டி? 

அது அவர்களின் அரசியல் அதிகாரத்திற்கான போட்டி!

வேந்தன் இல.

தமிழருவி மணியன் பேச்சு   ஒன்று     இரண்டு

***************

“ஒரு நாட்டின் நூல்களை இயக்கும் அதிகாரத்தை மட்டும் எனக்குத் தாருங்கள்.. அந்த நாட்டின் சட்டங்களை யார் இயற்றினாலும் எனக்குக் கவலை இல்லை” என்று நம்பிக்கையோடு சொன்னார் பெர்னாட்ஷா.

நம் தமிழகத்தின் நூலகங்கள் இன்று இருக்கும் நிலையைப் பற்றி யார் அறிந்தாலும் வேதனைப்படுவார்கள். ஒரு சமுதாயத்தின் வரலாற்றுக் கடமை தனது வழிவழி வந்த பாரம்பரிய மகா அடையாளங்களைக் காப்பாற்றி அடுத்த சந்ததிக்கு ஒப்படைத்தல். தமிழ் தாத்தா உ.வே.சா._விலிருந்து எத்தனையோ அறிஞர்கள் தமிழ்_பாதுகாவலர்கள் தன் உயிரைக்கூட துச்சமென மதித்து சேர்த்த சங்க இலக்கியப் புதையல்கள் கொண்ட சரஸ்வதி_மஹால் நூலகம் ‘மெல்ல சாகிறது’ - 

இது நமது பாரம்பரியத்தின் மைல் கற்களை பாதுகாக்கும் உலகில் எங்குமே காண இயலாத உண்மையான உலக அதிசயங்களில் ஒன்று. இந்தமாதிரி ஒரு அம்சம் இந்நேரம் ஐரோப்பாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ.. ஏன் ஆப்பிரிக்காவிலோ இருந்திருந்தால் உலக அளவிலான சமூக பண்பாட்டு சுற்றுலா மையமாக உலக வரைபடத்தின் புகழேனியின் உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டிருக்கும். 

இங்கோ அதன் அன்றாட அலுவல்களுக்கு நிதி இல்லை; புழுதியேறும் மாடங்களையும் அழுக்கேறும் நம் முன்னோர் எழுத்துத் தவங்களையும் பாதுகாத்துப் பராமரிக்க அரசுக்கு அக்கரையும் இல்லை. அங்கே முதுகொடிய உழைக்கும் ஊழியர்களுக்கு அவர்களின் நலனிற்கு எந்த பாதுகாப்பு சட்டமும் இல்லாதது ஒருபுறம் இருக்கட்டும்.. 

அடுத்த மாதம் சம்பளம் வருமா என்பதே கேள்விக்குறியாகி விட்ட அவலத்தை என்ன சொல்ல?

சரஸ்வதி மஹால் அழிந்தால்... நம் வருங்கால சந்ததிக்கு ‘மூத்த குடி....தமிழ்க்குடி’ என சொல்லிக்கொடுக்கும் அதிகாரம் நமக்கு எப்படி இருக்கும்? 

ஏற்கெனவே தமிழைக் கைவிட்டுப் பொருள் சேர்க்கும் வெறியோடு ஒரு சந்ததியை நாம் அயல்மொழி ஆங்கிலத்திடம் முழுமையாய்ப் பறி கொடுத்தது போதாதா. தொலைக்காட்சியில் கோடீஸ்வர நிகழ்ச்சியை எல்லாம் விழுந்து விழுந்து ‘இணைந்து வழங்கும்’ வர்த்தக ஜாம்பவான்களுக்கு சரஸ்வதி மஹால் பற்றி எல்லாம் என்ன அக்கறை இருக்கப்போகிறது. 

பல வருடங்களாக லஞ்சத்தில் திளைத்து நல்ல புத்தகம் எதுவுமே வாங்காமல் புழுதியேறிய பழைய புத்தகக் கடையாக மாறிக் கொண்டிருக்கும் இதர நூலகங்கள்.. அங்கே இருக்கும் புத்தகங்களைக் காப்பாற்ற கடும் தவமாய்க் கடமையாற்றும் நூலகத்துறை அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட பரிசீலிக்க தயாராக இல்லாத வரட்டுத் தலைமை... 

சரி மெல்ல தமிழக ‘நூலகங்கள்’ இனி சாகும் என வேதனையோடு நினைக்கத் தோன்றுகிறது.

புத்தகம் பேசுது

தொடர்புடைய பதிவுகள்




14 comments:

Avargal Unmaigal said...

பேஸ்புக் பற்றி ஆரம்பத்தில் எழுதியவைகள் மிகச் சரியான உண்மைகள்.

நான் படிப்பதற்கேற்ற சின்ன பதிவுகள் இட்டு சிந்திக்க வைத்தற்கு நன்றி ஜோதிஜி. ஹீ.ஹீ

Yaathoramani.blogspot.com said...

உங்கள் நண்பரின் கூற்று
நூற்றுக்கு நூறு மிகச் சரி
நல்ல வழிகாட்டும் பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

முக நூலிலும் நல்ல நல்ல Group-கள் உள்ளன... குப்பைகள் அங்கு வெளியிடவே படாது...

பணம் ஒன்றே கண்ணுக்கு தெரிவதால், மற்ற நல்லவை மீது அக்கறை எவ்வாறு வரும்...?

அபயாஅருணா said...

பயனுள்ள பதிவு

சிவக்குமார் said...

20 பக்கமே இருந்தாலும் நல்ல நூல்களையெல்லாம் யாரும் படிப்பதில்லை. முகநூலில்தான் மகாபாரதமே படிக்கிறார்கள் பலர். எதையுமே நாம் ஆக்கத்துக்காகப் பயன்படுத்தவும் முடியும் இணையம் உட்பட. இதுவரை எதையுமே படிக்காதவர்கள் கொஞ்சமாவது படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் என்ன சோகமென்றால் தமிழ் மணம் தொடங்கி முகநூல் வரை நாறிப்போன தமிழ்த்திரைப்பட சிலாகிப்புகளும், திறனாய்வுகளும், திரைக்கலைஞர்கள் ஆதரவு எதிர்ப்புகளும் பயனில்லாமல் கொட்டிக் கிடக்கின்றன. இதையெல்லாம் செய்பவர்கள் பாமரர்கள் மட்டுமல்ல கனத்த நூல்களை வாசிக்கும் பெரிய கனவான்களும் கூடவே.

//விவாதங்களால் ஏதேனும் தீர்வு கிடைத்ததும் இல்லை, ஒருவரேனும் "எனது கருத்து தவறு. இப்போது திருத்திக்கொண்டேன்" என்று சொன்னதும் இல்லை// நானெல்லாம் அப்படியில்லையாக்கும். நிறைய தெரிந்து கொண்டிருக்கிறேன். கருத்துக்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஜோதிஜி said...

எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைகளில் ஏதாவது ஒன்றை இதுவரை வாசித்து இருக்கீங்களா நண்பா? ச்சும்மா தெரிந்து கொள்ள?

ஜோதிஜி said...

நன்றிங்க

ஜோதிஜி said...

உண்மை தான் தனபாலன். பல நல்ல குரூப் கள் உள்ளன. நான் அதிக ஆச்சரியப்பட்ட விசயம் இது.

ஜோதிஜி said...

நன்றிங்க

ஜோதிஜி said...

காந்தி சொன்ன ஒரு வாசகம்.

நான் அதிக வருத்தப்படுவது படித்த மனிதர்களின் கனத்த இதயம்.

ஒரு சிறிய துணுக்கு கூட என் கொள்கையை மாற்றியுள்ளது.

ஜோதிஜி said...

நாறிப்போன தமிழ்த்திரைப்பட சிலாகிப்புகளும், திறனாய்வுகளும், திரைக்கலைஞர்கள் ஆதரவு எதிர்ப்புகளும் பயனில்லாமல் கொட்டிக் கிடக்கின்றன.

குழந்தைகளுக்கு சில படங்கள் தேட முதல் எழுத்து அல்லது வாக்கியம் அடிக்கும் போதே தமிழ் திரைப்படங்கள் சார்ந்த மோசமான படங்கள் அது சார்ந்த குறி சொற்கள் தான் முன்னால் வந்து தெரிகின்றது.

கஷ்டமடா சாமி. பல சமயம் நொந்து போயுள்ளேன்.

Avargal Unmaigal said...

ஜெயமோகன் உள்பட இப்போது உள்ள எந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை படிப்பதில்லை அதற்கு நேரமும் இல்லை தலைவரே

Avargal Unmaigal said...

ஜோதிஜி உங்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் எழுத்தும் மிக சிறப்பாகவே இருக்கின்றன. அதில் எந்த மாற்றமும் இல்லை. நான் மட்டுமல்ல இந்த கால மக்கள் படிக்க விரும்புவது இப்படிதான் ஒரு விஷயத்தை மட்டும் நறுக்கென்று ஒரு பதிவில் அல்லது ஒரு கட்டுரையில் படிப்பதைதான் . பேஸ் புக் மற்றும் டிவிட்டரின் வெற்றிக்கு காரணம் அதில் சிறு விஷயங்களை கூறி விவாதிப்பதுதான்


உங்கள் பதிவுகளில் ஒவ்வொரு பாராவிலும் சிந்திக்க கூடிய பல கருத்துக்கள் உண்டு. நான் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதனால் இதனை மிக நிதானமாக படிக்க வேண்டும் என்று கருதி அப்புறம் வந்து படிப்போம் என்று செல்லுகிறேன். காரணம் நேரமின்மை.

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் பதிவுகள் மிகச் சிறந்த சுவையான விருந்து போன்றது.
ஆனால் இந்த உலகம் மிக அவசர உலகமாக இருப்பதால் இருந்து சுவைக்கமுடியவில்லை. ஆனால் விருந்தை ஆற அமற உட்கார்ந்து சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கம் மனதில் மிக அதிகமாகி கொண்டிருக்கிறது நண்பரே

இது எனது கருத்து ஆனால் ஆற அமர உடகார்ந்து சாப்பிட பலருக்கு நேரம் இருக்கலாம், அதனால் உங்கள் பணியை தொடருங்கள் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

Avargal Unmaigal said...

அம்மா என்று தேடினால் தமிழில் மட்டும் பல அசிங்கங்கள் வந்து கொட்டுகின்றன. இது போன்ற பலவற்றை கூறலாம். இது போன்ற சமயத்தில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே அசிங்கமாக இருக்கிறது.

சில சமயங்களில் நினைப்பது நம் குழந்தைகள் தமிழ் படிக்க தெரியாமல் இருப்பது நல்லதாகவே தோன்றுகிறது. காரணம் அவர்கள் கணணி உபயோகித்து நல்லவைகளை தேடினால் அசிங்கமாக வருவது தமிழில் மட்டும்