Thursday, October 31, 2013

கழிவாகிப் போகின்றோமா?

குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும் வீட்டை கவனித்தால் மிகப் பெரிய அமைதி தெரியும்.  இது வெறுமனே அமைதி என்று மட்டும் சொல்லி விட முடியாது.  நாம் கதைகளில் படிக்கும் போர்க்களம் முடிந்து அங்கே நிலவும் அமைதியைப் போலத்தான் இருக்கின்றது.

இரைந்து கிடைக்கும் புத்தகங்களும், ஒழுங்கற்ற மேஜையில் ஓரத்தில் கிடக்கும் புத்தகங்களுமென எங்கெங்கு காணினும் ஏதோவொரு புத்தகங்கள். தொடக்கத்தில் அலுவலகத்தைப் போல ஒரு ஒழுங்கை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயற்சித்த போது முட்டி பெயர்ந்து முகம் முழுக்க காயம் பட்டது தான் மிச்சம்.

புத்தகங்களை சொத்து என்கிறார்கள்.  ஆனால் வீட்டுக்குள் புத்தகங்கள் மட்டுமே சொத்தாக இருக்கின்றது.

பள்ளி விட்டு வரும் பொழுதே சுமந்து வந்த பைகளை மூலையில் தூக்கி எறிந்து விட்டு அப்படியே உடைகளைக் கூட மாற்றாமல் தரையில் படுத்துக் கொண்டு இரண்டு காலையும் அருகே உள்ள நாற்காலியில் தூக்கி வைத்துக் கொண்டு முழு வேகத்தில் சுழலும் மின் விசிறிக் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்க்கும் போது கோபத்தில் கத்தியிருக்கின்றேன். 

சென்ற ஆண்டு, "அப்பா, கொஞ்ச நேரம்" என்றார்கள்.

ஆனால் இப்போது "ஏம்ப்பா டென்சன் ஆகுறீங்க.பாத்ரூம் ஓடியா போகப்போகுது? அது அங்கே தான் இருக்கும்" என்கிறார்கள்.

இது போன்ற சமயத்தில் அமைதியாய் இருந்தால் தான் நம் ஆரோக்கியத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இதனைத் தொடர்ந்து வரும் நேரிலைக்காட்சிகள் தான் திகில்படம் போல நகரத் தொடங்கும். ஒருவர் மேல் ஒருவர் படுக்க முயற்சிக்க அடுத்தவர் அலற அருகே உள்ள மேஜை நகர, வைத்திருக்கும் பாத்திரங்கள் உருள, உள்ளேயிருந்து வரும் மிரட்டல் சப்தம் என நடந்து கொண்டிருக்கும் ரணகளத்தை கிளுகிளுப்பாய் ரசிக்க கற்றுக் கொண்ட பிறகே என் பிபி குறையத் தொடங்கியது.

இது போன்ற சமயங்களில் தான் சமீப காலத்தில் அதிகம் பரவியுள்ள "ஒரு பிள்ளை கலாச்சாரத்தை" நினைத்துக் கொள்வதுண்டு. 

கிராமத்திலிருந்து நகர்ந்து வந்தவர்களும், நகரமயமாக்கலும், இடப்பெயர்வும் தனி மனிதர்களுக்கு பலவிதமான சுதந்திரங்களை வழங்கியுள்ளது. ஓரளவுக்கேனும் சாதி வித்தியாசத்தை மாற்றிக் கொண்டு வருகின்றது என்பதைப் போல அவரவர் விரும்பும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க வைத்துள்ளது. விரும்பிய உடைகள், விரும்பிய நேரத்தில் உணவு என உருவான காலமாற்றங்கள் கலாச்சாரம் என்ற வார்த்தையை காவு வாங்கி விட்டது.

அடுத்த வீட்டுக்கு தெரிந்து விடுமோ? என்ற பயம் மாறி விட்டது. சந்து முழுக்க பரவி விடுமோ என்ற அச்சம் போய்விட்டது. ஊர் முழுக்க காறித்துப்பி விடுவார்கள் என்ற எண்ணம் மாறி எண்ணிய அனைத்தையும் இயல்பான வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள முடிந்துள்ளது. இப்போது கூட்டுக்குடித்தனம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் ஒரு வீட்டுக்குள் இருந்தாலே அதுவே பெரிய சாதனையாக மாறியுள்ளது.

ஆனால் நாம் இழந்த கூட்டுக்குடித்தனங்கள் உருவாக்கிய அளவான சிந்தனை நீடித்த ஒற்றுமை என்பது மாறிப் போனாலும் தனி நபர்களின் சுதந்திரமும், விரும்பியவற்றை அனுபவிக்க கிடைத்த வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

நாகரிக சமூகமாக மாற்றியுள்ளது.இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான வீடுகளில் ஒரு பிள்ளை கலாச்சாரம் என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.   இதற்குப் பின்னால் சமூக, பொருளாதார, உடல் ரீதியான என்று பல காரணங்கள் இருந்தாலும்  ஒரு பிள்ளை மட்டும் வைத்திருப்பவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லி மாளாது.

குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் என்கிற ரீதியில் திடீர் பிரச்சனைகள் உருவாகும் போது வீட்டில் உருவாகும் பதட்டமும், அதனால் பெற்றோர்கள் அடையும் மன அழுத்தத்தை பல குடும்பங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

சில மாதங்களுக்கு முன் நள்ளிரவில் நண்பன் அழைத்த போது தூக்க கலக்கத்தில் கைபேசியை எடுத்த போது அவனின் அழுகுரல்தான் முதலில் கேட்டது. பள்ளித்தோழன் என்பதால் அவனின் குடும்ப விபரங்கள் அனைத்தும் தெரியும். மனைவியுடன் சண்டை போட்டு முடிவே இல்லாமல் போகும் போது அழைப்பான். ஆனால் இந்த முறை அவன் பையன் மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாக சொன்ன போது அவசரமாக ஓடினேன். 

அந்த பெரிய மருத்துவமனையின் வாசலில் இருவருமே நின்று கொண்டிருந்தார்கள். இருவர் கண்ணிலும் நிற்காமல் கண்ணீர வழிந்து கொண்டிருந்தது. இவர்களைப் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நர்ஸ்ஸைப் போய் பார்த்து பேசிய போது இவர்களின் முட்டாள் தனத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

மூன்று நாட்களாக மலம் கழிக்காமல் இருந்த பையனை இருவருமே கண்டு கொள்ளாமல் இருந்தன் விளைவு இப்போது இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஏற்கனவே பத்து வயது பையன் நோஞ்சானாக இருக்கின்றானே? ஒரு புள்ளையை வளர்க்குற லட்சணமா இது? என்று பலமுறை திட்டியுள்ளேன்.  "டேய் சின்ன வயசுல நாமும் இப்படித்தானே இருந்தோம்" என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கின்றான். ஆனால் இன்று தான் அதற்கான முழுமையான விடை எனக்கு கிடைத்தது.

இது பையனின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல.

நாம் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை முறையும் சேர்த்து அடங்கியுள்ளது. விஸ்தாரமான வீடுகள் மறைந்து தீப்பெட்டி வீட்டுக்குள் வாழ வேண்டிய சூழ்நிலையும், ஆதரவற்ற அண்டை வீடுகள் என் எல்லாமும் சேர்ந்து வீட்டுக்குள் முடங்க வைக்க உருவாகும் மனஅழுத்தத்தை போக்க இன்று உதவிக்கொண்டிருக்கும் ஒரே சமாச்சாரம் இந்த டிவி பெட்டிகள் தான்.

பேச முடியாத பொரணிகளை நெடுந்தொடர் கொண்டு வந்து விடுகின்றது. ஆட முடியாத ஆட்டங்களை திரைப்படங்கள் காண்பிக்க, பத்து முறை பார்த்த காட்சியென்றாலும் கண் இமைக்க மறந்து குடும்பமே பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுகின்றது.

நண்பன் இரவு வேலை முடித்து அதிகாலை வந்தாலும் அவன் பார்க்கும் காட்சிகள் தொடங்கி, அவன் மனைவி பார்க்க விரும்பும் சீரியல் என்று நாள் முழுக்க ஏதோவொரு காட்சிகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றது. பாவத்தின் சாட்சியாய் வீட்டில் குழந்தைகள் இருக்க குடும்பத்தின் அடிப்படை ஆரோக்கியம் அதோகதியாகிவிடுகின்றது. கவனிக்க ஆளில்லை. கவனித்து சொல்லவும் இருப்பவர்களுக்கு நேரமும் இல்லை.

இதற்கு மேலாக பள்ளிகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள் என்றொரு பெரிய கொடுமை ஒன்று உண்டு.  பாலர் பள்ளி படிக்கும் குழந்தைக்கு வயது அதிகபட்சம் நான்கு வயது கூட முடிந்து இருக்காது.  கைவலிக்க இரண்டு மணி நேரம் எழுத வைக்கும் கொடுமை தான் இப்போதுள்ள நவீன கல்வி. 

"மிஸ் வெளியே நிறுத்திடுவாங்க" என்ற பயம் பாதி. வெறுப்பு மீதி என்கிற ரீதியில் கழிவுகளை உடம்புக்குள் அடக்க, அதுவே பழக்கமாகி விட குறிப்பிட்ட நாட்களுக்குள் சமன்நிலை மாறிப் போய்விடுகின்றது.  காலையில் அவசரமாய் ஓட வேண்டும். மாலையில் வந்தது முதல் எழுத உட்கார வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட நேரமில்லை.  விளையாட விடுமுறை கிடைத்தாலும் வெளியே சென்று வர இடமும் இருப்பதில்லை. ஒரு நகர்புற நடுத்தரவர்க்கம் என்றால் இழப்பை பொருட்படுத்தாமல் இயல்பாக வாழ கற்று இருக்க வேண்டும்.

தினந்தோறும் வீட்டை விட்டு நகர்ந்தால் தான் அப்பாவுக்கு காசு.  அத்தனை பேர்களும் வீட்டை விட்டு கிளம்பினால் அம்மாவுக்கு நிம்மதி.

எங்கே கொஞ்ச முடியும்? எப்போது பேச முடியும்?

இருப்பதை வைத்து வாழ நினைப்பவர்களை இயலாமையின் வெளிப்பாடு என்கிறார்கள்.எல்லாவற்றையும் பெற்றவர்களின் வாழ்க்கையை  உழைப்பின் பலன் என்கிறார்கள். ஆனால் இருவருமே சுதந்திரத்தின் வெளிப்பாடாக தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கும் போது தான் இங்கே பலருக்கும் வாழ்க்கையே மாறிவிடுகின்றது.

முந்தைய பதிவு

போரும் அமைதியும்

மதிப்பெண்கள் என்றொரு கிரீடம்

தொடர்புடைய பதிவுகள்

சிக்கினாலும் நாம் சிங்கம் தானே?


28 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தனிமரம் சி'ரமம்' தான்...மிகப் பெரிய சி'ரமம்' தான்...

முடிவில் சொன்னதும் அற்புதம்...!

துளசி கோபால் said...

போன பதிவும் இந்தப் பதிவும் அபாரம்! நல்ல அவதானிப்பு வந்துவிட்டது. கண்ணை மட்டும் திறந்து வச்சுக்கிட்டால் போதும். நம்மைச் சுற்றிலும் நடப்பவைகள் நம்மை எழுத வைத்துவிடுகின்றன!

இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

Thoduvanam said...

இருப்பதை வைத்து வாழ நினைப்பவர்களை இயலாமையின் வெளிப்பாடு என்கிறார்கள்.எல்லாவற்றையும் பெற்றவர்களின் வாழ்க்கையை உழைப்பின் பலன் என்கிறார்கள். ஆனால் இருவருமே சுதந்திரத்தின் வெளிப்பாடாக தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கும் போது தான் இங்கே பலருக்கும் வாழ்க்கையே மாறிவிடுகின்றது.

உஷா அன்பரசு said...

ஒற்றை குழந்தை என்பது அவர்களுக்குள் தாங்கள்தான் முதன்மை படுத்தபடவேண்டும் பிடிவாத குணம் வந்து விடுகிறது . என் மகள்.. ஸ்கூலுக்கு கொண்டு போற லன்ச் ஒழுங்காகவே சாப்பிடறதில்ல... ஆரோக்கியமான உணவுகளை சொன்னாலும் எடுத்துக்கிறதில்ல..!

”தளிர் சுரேஷ்” said...

தனிக் குடுத்தன அவஸ்தைகளை அருமையாக அவதானித்து உள்ளீர்கள்! சிறப்பான பகிர்வு! கலாசார மாறுபாட்டால் ஏற்படும் அவதிகளும் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! நன்றி!

ஜீவன் சுப்பு said...

அட இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாமோ ன்னு தோன்றிய பதிவு ...

அன்றாட அவலங்களை அழகாக அலசியுள்ளீர்கள் . இது போன்ற சுருக் நறுக் பதிவுகளை எதிர்பார்க்கின்றேன் ண்ணா ...!

phantom363 said...

I think the issue here is how to manage a situation. The fault is not with the situation itself, whether it be a single child or multiple children. How many of us, who had several siblings, got any attention (if at all) from our fathers? Did we not grow up and prosper? In very nuclear families like the one you mentioned, the key to good health and happy living, is having close friends. Friends, unlike family, are by choice, and so these are folks whom you (should) like (as otherwise they will not be your friends). They need to be non threatening and non competitive, as far as you are concerned, and privy to your affairs, just so that you have a sounding board and another view of your family. Particularly when it comes to issues. In the case of confiding to friends, females are usually closer to their friends and more trusting. I think in the case that you mentioned, the female, probably does not confide in any one. Men are more reticent. As a rule. - Rajamani

Amudhavan said...

'மூன்று நாட்களாக மலம் கழிக்காமல் இருந்த பையனை.........'என்று தொடங்கும் பாராவின் மூன்றாவது வரியில் 'பெத்த புள்ளையை வளர்க்குற லட்சணமா' என்று எழுத நினைத்தீர்களா, அல்லது எழுதியிருக்கிற வார்த்தைதான் நீங்கள் எழுத நினைத்ததா? நல்ல கட்டுரைக்குள் எதற்காக இப்படியொரு வார்த்தை என்று தோன்றிற்று.

ஜோதிஜி said...

படித்தவுடன் தான் புரிந்தது. எழுத்துப்பிழை. மாற்றிவிட்டேன். மிக்க நன்றி. ஊர்ப்பழக்கத்தில் ஒற்றை புள்ளை என்பதை வட்டார வழக்கில் ஒத்த பிள்ளை என்று எழுத நினைத்த வார்த்தை அது. ஆழ்ந்து வாசிக்கும் உங்களின் அனுபவம் கலந்த ஆலோசனை எனக்கு மேலும் மேலும் எழுத உதவும் என்று நம்புகின்றேன். மீண்டும் நன்றி.

ஜோதிஜி said...

நன்றி திரு. ராஜாமணி

நீங்க சொல்வது புரிகின்றது. ஊரில் பத்து குழந்தைகள் உள்ள குடும்பங்களின் சூழ்நிலை, கடைபிடித்த கொள்கைகள், கொண்ட அக்கறை, வளர்த்தவிதம் ஒவ்வொன்றும் என் மனதில் வந்து போகின்றது. இப்போது உண்டான மற்றொரு முக்கிய பிரச்சனை உழைப்பில் அக்கறையின்றி அதை தட்டிக்கழிக்க காரணத்தை தேடுவது தான் எல்லா இடங்களிலும் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றது என்று கருதுகின்றேன். நான் சொல்லியிருப்பது சரியா?

ஜோதிஜி said...

உங்கள் விருப்பதை நிறைவேற்ற முயற்சிக்கின்றேன் சுப்பு.

ஜோதிஜி said...

நன்றி சுரேஷ்

ஜோதிஜி said...

இன்னமும் பல விசயங்கள் உண்டுங்க. ஒரு பிள்ளை அல்லது பையன் என்பதால் பலரும் பொறுத்துக் கொண்டு இருப்பதை குழந்தைகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்கின்றார்கள். சரிதானே?

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

உங்கள் பாராட்டு மகிழ்ச்சியைத் தந்தது. என் இனிய தீபாவளி வாழ்த்துகள் டீச்சர்.

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இன்று ஒரு பிள்ளை கலாசாரம் சிந்திக்க வேண்டிய விஷயம்தான் . இது எதிர்கால சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் . அதுவும் ஒற்றைப் பிள்ளை குடும்பங்களை பார்த்தால் பெரும்பாலும் ஆண் பிள்ளைதான். ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளவர்களை காண்பது அரிதாகவே உள்ளது.
எனக்கும் ஒரு பிள்ளைதான்.

Anonymous said...

நம் நாட்டில் உள்ள பெரிய குறைபாடு இருக்களைப் பயன்பாடும், மலச் சுகாதார பழக்க வழக்கமின்மையுமே. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே மலங்கழித்தலையும், இருக்களையை சுகாதாரமாய் பயன்படுத்துவது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும்.. காலை, மாலையில் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இருக்களைக்கு போகவும், பின்னர் கை, கால்களை கழுவவும் அறிவுரைக்க வேண்டும். அத்தோடு மலத்தை இறுக்கும் உணவைத் தவிர்த்து நார் நிறைந்த உணவுகளையும் கொடுக்க வேண்டும், மாலை நேரங்களில் ஒரு மணி நேரமாவது ஓடாடி விளையாட விட வேண்டும். இறுதிக் கொடுமை இந்தியப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் பாத்ரூம் போக அனுமதிப்பதே இல்லை, அதனால் அடக்கி அடக்கி குடலில் மலம் அடைத்து விடுவதும் உண்டு, அது போக பல பள்ளிகளில் இருக்களைகளே கிடையாது, அப்படி இருந்தாலும் சுகாதாரமற்றே இருக்கும்! என்று தணியுமோ இக் கொடுமைகள்.. :(((

உஷா அன்பரசு said...

அதென்னமோ சரிதான்... எனக்கு ஒரே பெண்தான்...எல்லாவற்றிலும் அவள்தான் முதன்மை படுத்த வேண்டும். காலையில் எட்டு மணிக்கு ஸ்கூல் வாகனம் வரும்... மகளுக்கு முன்னாடி என் கணவர் கல்லூரி கிளம்புவார்... அவருக்கு முதலில் டிபன் தந்தால்... எனக்குதான் பர்ஸ்ட்டுன்னு இவளும், எனக்கு லேட்டாச்சு எனக்குதான் பர்ஸ்ட்டுன்னு அவரும் எங்கிட்ட ரகளை பண்ணுவாங்க. அப்புறம் கோபம் வந்து திட்டிட்டா இந்த சின்ன வயசுலயே ரோஷம் அதிகம் இரண்டு நாளா ஆனாலும் பேசாம எது கேட்டாலும் தலை மட்டும் அசைப்பா... ச்சே இருப்பது மூணு பேர் வீட்டில் ஒரு கலகலப்பு இல்லாமல் ஏன் இப்படி எல்லாம் என தோன்றும். பெரும்பாலும் அவர்களிடம் விட்டுகொடுத்துதான் போக வேண்டியிருக்கு..

உஷா அன்பரசு said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

எதிர்காலத்தில் பசங்களுக்கு திருமணம் செய்து வைக்க பெண்களுக்கு பெரிய அடிதடி போட்டி வருமோ?

ஜோதிஜி said...

மிக அழகான அற்புதமான விமர்சனம். இது குறித்து எழுத வேண்டும் என்று நினைத்த பல விசயங்களை எளிமையாக சொல்லீட்டீங்க.

ஜோதிஜி said...

குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க.

எம்.ஞானசேகரன் said...

இந்தப் பதிவு மிகவும் அருமை. என் பிள்ளைகளையும் வாசிக்கச்சொன்னேன். சின்ன பதிவு என்றாலும் 'நறுக்' என்ற செய்திகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

குழந்தைகள் படித்தார்களா? ஆகா இது தான் உண்மையான இந்த வருட தீபாவளி வாழ்த்துகள். உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய வாழ்த்துகள்.

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

நன்றிங்க.

கிரி said...

" பாலர் பள்ளி படிக்கும் குழந்தைக்கு வயது அதிகபட்சம் நான்கு வயது கூட முடிந்து இருக்காது. கைவலிக்க இரண்டு மணி நேரம் எழுத வைக்கும் கொடுமை தான் இப்போதுள்ள நவீன கல்வி. "

ஜோதிஜி இது முழுக்க முழுக்க உண்மை. எனக்கு உண்மையில் இதைப் பார்க்க கடுப்பாகிறது.. ஆனால் என்ன செய்வது.

இவன் UKG தான் படிக்கிறான்.. இவனுக்கு தினமும் வீட்டுப் பாடம். இந்த வயதில் இவ்வளவு கொடுத்து என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. பார்க்கவே பாவமாக இருக்கிறது.

விளையாடிக்கொண்டு இருக்க வேண்டிய வயதில்.. இதை கட்டிக்கொண்டு அழ வேண்டி இருக்கிறது. விடுமுறை விட்டால் குழந்தைகள் சந்தோசமாவதற்கு இவர்கள் தரும் டார்ச்சர்கள் தான் காரணம்.

தங்கள் பள்ளி முதலிடம் வர வேண்டும் என்ற போட்டியிலேயே அனைத்து பள்ளிகளும் இப்படி ஆகி விட்டன. இதில் சேர்க்கும் பெற்றோர்களும் இதற்கு பொறுப்பு தான் என்பதை மறுக்க முடியாது.