Monday, September 16, 2013

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி?

இது எப்படி சாத்தியமானது ? ? ! !

தஞ்சை பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது ???? 

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.

அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம்.

இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும்.

பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

சுமார் 1.2 மீ  1.2 மீ சதுரத்தில் 0.6 மீ  0.6  0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம்.

கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ  24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது.

விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது.

தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது.

இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன.

சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன.

மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது.

இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது.

முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள், நேர்ச்சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன.

இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன.

விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. !!

000

மேலே கொடுத்துள்ள தகவல்கள் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. மற்ற சமூக தளங்களில் இது போன்ற தகவல்கள் பகிரப்படும்போது, லைக் என்ற பட்டனை தட்டுவதுடன் அவர்களது கடமை முடிந்து விடுகின்றது.  ஆனால் பதிவுகளில் பகிரப்படும்போது நிச்சயம் காலம் கடந்து பலருக்கும் பயன்படக் கூடியதாக இருக்கும் என்பதால் இதை பதிவாக்கி உள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

மாமன்னர் ராஜராஜனின் இன்றைய எதார்த்த நிலைமை (காணொளி)

தஞ்சாவூர் வரலாறு

தஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் - ரவிக்குமார்

ராயல் குடும்பம்

  

39 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...
உங்கள் பகிர்வின் மூலம் தஞ்சைப் பெரிய கோவில் பற்றி விவரமாக அறிய முடிந்தது...

நம்பள்கி said...

நல்ல பதிவு! பிரமிக்க வைக்கும் திட்டம். இது மாதிரி இடுகை எழுதும் போது, சில உண்மைகளையும் கூடவே பதிவு செய்யவேண்டும்.

விமானத்தின் நிழல் தரையில் விழாது என்று பொய்யுரையை நான் பாடங்களில் படித்துள்ளேன். விமானத்தின் நிலம் தரையில் விழும். நமது சரித்திர ஆசிரியர்கள் பொய்யாக நிறைய விஷயங்களை செர்ப்பதாலே மொத்த உண்மையகளின் நம்பகத் தன்மயையும் கூடவே அடிபட்டுப் போகிறது!

அப்படியும் பொய்களை விட மாட்டார்கள். விமானத்தின் முழு நிழல் விழாது என்றார்கள். விழுதே என்று கேட்டால், அதன் மேல் இருக்கும் கலசத்தின் நிழல் தான் விழாது என்றார்கள்; அதுவும் விழுதே என்றால் காலையில் தான் விழாது, அப்படியும் விழுதே என்றால் அப்புறம் மாலையில் விழாது, மதியம் விழாது....இப்படி..

அப்புறம் அவர்களிடம் நான் "இதற்கு பேசாமல் அமவாசை அன்று இரவில் நிழல் விழாது என்று சொல்ல வேண்டியது தானே!" என்றேன்.

நம்பள்கி said...

லிங்கம் மற்றும் நந்தியின் அழகே அழகு! அப்பா தஞ்சாவூரில் கொஞ்ச நாள் பணியில் இருந்தபோது...இந்த கோவிலை முழுவதும் அலசினேன்.

எப்படி புலவருக்கு பொய்யுரை தேவையில்லையோ, அதே மாதிரி சோழனுக்கு பொய்ப் புகழும் தேவையில்லை என்பதே என் கருத்து!

துளசி கோபால் said...

தகவல்களுக்கு நன்றி.

அருமையான பதிவு.

viyasan said...

அருமையான பதிவு, ஒவ்விரு முறை பார்க்கும் போதும கட்டிடக் கலையில் வெவ்வேறு விந்தைகளை இந்தக் கோயிலில் பார்க்கலாமாம் என்கிறார்கள். நிழல் தரையில் விழுகிறதோ என்னமோ, இந்தக் கோயில் தமிழர்களின் கட்டிடக் கலையின் நுட்பங்களை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது. சோழனுக்கு அவனது உண்மையான புகழை மற்றவர்கள் திரிக்காமல் நாங்கள், தமிழர்கள் பார்த்துக் கொண்டாலே போதும். "சோழனுக்கு பொய்ப்புகழ் தேவையில்லை" என்பது மறுக்க முடியாத பொன்மொழி.

எம்.ஞானசேகரன் said...

பிரமிப்பான தகவல்கள்! பகிர்விற்கு நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தமிழரின் கட்டடக் கலைக்கு பெருமை சேர்த்த பெரிய கோவிலைப் பற்றி மிக விரிவாக பல தகவல்கள் அறிந்து கொண்டேன். கோபுரத்தின் உயரத்தை தற்கால தொழில் நுட்ப உதவிகொண்டு துல்லியமாக அளக்கமுடியும். தொல்லியல் துறை செய்திருக்கும் என்று நினைக்கிறேன். இத்த துறையின் மூலம் வெளியிடப பட்ட ஆவணங்கள் ஏதேனும் உண்டா?

வவ்வால்ஜி வரும்போது இன்னும் புள்ளி விவரங்கள் தெரியவரும்

தருமி said...

கட்டிடம் என்றால் எப்போதும் என் நினைவுக்கு வருவது தஞ்சைப் பெருங்கோவிலே ....

Unknown said...

நல்ல பதிவு

நம்பள்கி said...

//தருமிSeptember 17, 2013 at 12:23 PM

கட்டிடம் என்றால் எப்போதும் என் நினைவுக்கு வருவது தஞ்சைப் பெருங்கோவிலே //

மதுரை மீனாட்சி கோவில்? அதை விட நாயக்கர் மஹால்! ஒவ்வொரு தூணும்..!

Unknown said...

நான் அறிந்ததை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.சோழ பேரரசின் கட்டிட கலை தொழில் நுட்பம் வேறு பல இடங்களில் நிருபிக்கபட்டு இருக்கிறது.அப்படி நன்கு நிரூபிக்க பட்ட வரைவு ( well prooved design)ஐ மையமாக வைத்து அளவுகள் பெரிது படுத்தப்பட்டது.தளங்கள் அதற்கு சரி விகித அளவிற்கு தீர்மானிக்க பட்டது . விமானம் வேறு எங்கோ செய்ய படவில்லை .அங்கே தான் உருவாக்கப்பட்டது.திட்டத்தின் நோக்கம் இந்த விமானத்தை உச்சியில் நிருவுவதே .கடகால்கள் சமதளத்தில் இருந்து அதிக விட்டம் உடைய (கோயில் நீள அகலத்தை விட ) குழிகள் வெட்டப்பட்டு நிர்மாணிக்கும் வேலைகள் தொடங்கப்பட்டது.யானைகள் பாறைகளை சட்டங்களை எளிதாக இழுத்து வர ஒவ்வாரு தளத்திற்கும் சமதளதிர்க்கும் சாய்வான வழித்தடங்கள்அமைக்கப்பட்டது.கொண்டுவரப்பட்ட பாறைகள் சட்டங்கல் வைத்து தளங்கள் அமைக்கப்பட்டது .தளங்கள் உயர வழித்தடத்தின் சாய்வு கோணம் குறைக்க பட்டு,நீளம் அதிகரிக்க பட்டது .வாய் அகன்ற பாத்திரத்தில் ஐஸ் கோன் ஐ கவிழ்த்து வாய்த்த அமைப்பு போன்று இருக்கும்.ஒவ்வாரு தளத்திற்கும் அதன் (corresponding) தரை பகுதிக்கும் மரபாலங்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது சாரங்கள் அமைக்கப்பட்டு மற்ற வேலைகள் மேற்கொள்ளபட்டது.இறுதியாக விமானத்தை எப்படி அவ்வளவு துல்லியமாக வைத்தார்கள் என்று தெரியவில்லை

நம்பள்கி said...

உலகத்தில்நம்பர் ஒன் கண்டுபிடிப்பு (invention?) சக்கரம்; சக்கரம் தான்!
கட்டிடக் கலையில் நம்பர் ஒன் கண்டுபிடிப்பு (invention?) Lintel. Lintel தான்!
இது பக்கா Statics...
இது Statistics அல்ல!
இதை கிரேக்கர்கள் கண்டுபிடித்தார்கள். நம் எல்லா கோவில்களும் Lintel கண்டுபிடிப்பிறகு அப்புறம் தான் வளர்ந்தது!

இதை நாம் ஒத்துக்கொள்வதால் நாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! அவர்கள் கண்டுபிடிப்பிற்கு கொடுக்கும் மரியாதை. ஆராய்ச்சி என்பதே மற்றொருவன் கண்டுபிடித்த விஷயத்தை மேல் படுத்துவது தான்.

அன்றும், இன்றும், என்றும் -- என் பார்வையில் ஒன் கண்டுபிடிப்பு (invention?) சக்கரம் தான்.

இது இல்லை என்றால்..இன்று நாம் இல்லை. பல்லக்கை நினைத்துப் பாருங்கள்! அது போதும்.

saidaiazeez.blogspot.in said...

புதுப்பொலிவோடு மூன்று தேவியர்களின் படங்களுடன் மிகவும் அறுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம். வாழ்த்துக்கள்.
இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

Anonymous said...

தமிழர்கள் மேற்கு நாடுகளோடும், கிழக்கு நாடுகளோடும் கொண்டிருந்த வியாபாரத் தொடர்புகளால் பல அறிவியல் வளர்ச்சிகளை இங்கு கொணர்ந்து தமது அறிவையும் இட்டே சங்க காலந்தொட்டே தமிழ் கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை கட்டி எழுப்பினார்கள். உதாரணமாக தஞ்சை கோயில்களுக்கு முன் உதாரணமாக பல்லவர்களின் கட்டட கலையையும் சோழர்கள் உள்வாங்கி கொண்டார்கள். அந்த வகையில் சோழர்கால கட்டட பாணி தமிழகத்துக்கு புதிய வடிவத்தையும் திராவிட கட்டட கலையின் பல தாக்கங்களையும் உண்டாக்கியது எனலாம். தஞ்சை பெரிய கோவிலை பல முறை ஒவ்வொரு கற்களாய் ரசித்திருப்பேன். அதன் பிரமாண்டமும் வனப்பும் பாராட்டத்தக்கது. ஆனால் ஏனோ அதன் நிழல் விழாது என கதைக் கட்டி விட்டுள்ளார்கள், நிழல் நிச்சயம் விழுகின்றது. தஞ்சை கோயிலின் மற்றொரு சிறப்பு தமிழ் சைவ மரபில் அக் கோயில் கட்டப்படாமல் கசுமீர சைவ மரபில் கட்டப்பட்டதுமாகும். தஞ்சை கோயிலை காணப் போவோர் கங்கை கொண்ட சோழ புரத்தின் கோயிலையும் காண வேண்டுகின்றேன்.

தஞ்சை கோயிலைப் போன்ற பாண்டியர்களால் - நாயக்கர்களால் உருவாக்கப்பட்ட மதுரை மீனாட்சி கோயில், பல்லவர்களால் உருவாக்கப்பட்ட மாமல்ல புரம் ரதக் கோயில்கள், கன்னட அரசர்கள் - விஜயநகர அரசால் உருவாக்கப்பட்ட பம்பி ( Hampi ) கோயில்கள் மிக மிக சிறப்பு வாய்ந்தவை. இவை அனைத்தும் திராவிட கட்டடக் கலைக்கு சிறந்த உதாரணமாக திகழகின்றது எனலாம்.

Amudhavan said...

நல்ல தகவல்களுடன் அருமையான, உபயோகமான பதிவு.விளக்கங்கள் தெளிவாக இருந்தாலும் படம் போட்டு விளக்கினால் இன்னமும் தெளிவாக இருக்கும். இங்கே திரு குணசேகரோ அல்லது நம்பள்கியோ விளக்கங்களுக்கான வடிவங்களுடன் கூடிய வரைபடங்களை வெளியிட முடிந்தால் சிறப்பாக இருக்கும்.

ஜோதிஜி said...

வாங்க அமுதவன்

இந்த தகவல்களை படித்து முடிந்ததும் இதுகுறித்து இணையத்தில் தேடிய போது பல அற்புதமான தகவல்கள் கிடைத்தது. குறிப்பிட்ட சில தளங்களை மட்டுமே கொடுத்துள்ளேன். நான் படித்த ஒரு ஆங்கில தளத்தில் இது குறித்து நீண்ட ஆராய்ச்சியை படிப்படியாக கொடுத்து இருந்தனர். நம்மவர்கள் இணைப்பு சொடுக்கி படிப்பதே குறைவு. அதிலும் ஆங்கிலத் தளங்கள் என்றால் காத தூரம் ஓட்டம் பிடிப்பார்கள். உங்கள் விமர்சனத்தை பார்த்த போது அந்த தள இணைப்பை சேமிக்காமல் விட்டு விட்டோமே என்று யோசிக்கத் தோன்றியது.

இது குறித்து ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய போது அவர் ஒரு புதிய விபரத்தைச் சொன்னார். ஒரு எழுத்தாளர் இதைக் கதைக்களமாக சிறு கதையாக எழுதியதைச் சொன்னார். எழுத்தாளர் பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

அதாவது மன்னன் ராஜராஜசோழன் இந்த கோவில் கட்டி முடித்து இரவு உறங்கிக் கொண்டிருந்த ஈஸவரன் கனவில் வந்து கிழவி தயவில் சுகமாக இருக்கின்றேன் என்றாராம். மன்னருக்கு ஒரே குழப்பம். நாம் இத்தனை கஷ்டப்பட்டு கட்டிய ஆலயத்தில் ஈஸ்வரன் யாரோ ஒரு கிழவியின் பெயரைச் சொல்லிவிட்டுச் சென்று விட்டாரே என்று. பிறகு மற்ற அனைவரிடமும் விசாரித்த போது மேல் கூரை அமைக்கும் போது அதற்கு தேவைப்பட்ட கல் அருகே இருந்த ஊரில் ஒரு கிழவியின் வீட்டுக்கருகே தான் (நீளம் அகலம் எல்லாம் சரியாக பொருந்தி) இருந்ததாம். அந்த கிழவியிடம் இந்த கல் வேண்டும். கோவில் குறித்த விபரங்கள் சொன்னவுடன் இறைவனுக்கு என்றதும் அவரும் மகிழ்ச்சியாக கொடுத்தாரம்.

கீழே சிவலிங்கம் இருந்தாலும் மேலே வைத்த பொருத்தப்பட்ட கல் தானே முக்கியம். முழு வடிவமும் அதன் மூலம் தானே கிடைத்தது என்ற அர்த்தத்தில் கனவில் வந்த ஈஸ்வரன் சொன்னாராம். மன்னர் இந்த கிழவியை வரவழைத்து சகல மரியாதை செய்தாராம். இது கற்பனையோ அல்லது வேறு எதுவோ அந்த கதையில் அப்படி எழுதியிருந்தார் என்று என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொன்னார்.

இதைப் போலவே இந்த கோவிலின் உயரச் செல்ல செல்ல தேவைப்பட்ட கற்களை யானைகள் மூலம் கொண்டு செல்வதற்கு சாய்வாக மேடை போல மண் கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட பல விபரங்களை, இதற்காக தேவைப்படும் மண் என்பதற்காக தோண்டப்பட்ட ஊரைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

இந்த கோவிலுக்கு தேவைப்பட்ட கற்கள் அதிகமான அளவு தற்போது உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்பட்ட விபரங்கள் என அவர் சொன்ன அனைத்தையும் எழுதினால் இன்னோரு பெரிய பதிவாக எழுத வேண்டும்.

ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தந்த அனைவருக்கும் என் நன்றி.

ஜோதிஜி said...

புதிதாக வருபவர்கள் ஏன் தேவியர் இல்லம் என்ற ஆராய்ச்சியில் இனியும் இறங்கி விடக்கூடாது என்பதற்காக நீண்ட யோசனைக்குப் பிறகு மாட்டி வைத்துள்ளேன்.

Ranjani Narayanan said...

பிரமிக்க வைக்கும் பதிவு. எத்தனை எத்தனை தகவல்கள்! தஞ்சை பெரிய கோவிலைப் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பு, இந்தப் பதிவை படிக்கும் போதும் ஏற்பட்டது.

ஜோதிஜி said...

நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. இது குறித்து பல தளங்களைப் படித்த போது புரிந்து கொண்டேன்.

ஜோதிஜி said...

அவர்கள் கண்டுபிடித்த காலத்தை சொல்லாமல் போயிட்டீங்க?

ஜோதிஜி said...

ஆனாலும் அவரும் பொய்ப்புகழில் தான் கடைசி கால கட்டத்தில் விரும்பி வாழ்ந்துள்ளார் வியாசன்.

ஜோதிஜி said...

வாங்க ஞானசேகரன்.

ஜோதிஜி said...

ஒரு நாள் முழுக்க அங்கேயிருந்த போது தரையில் சூடு கொப்பளிக்க வேர்த்து விறுவிறுத்து முழுமையாக பார்த்து அனுபவிக்க முடியாமல் வந்தேன். மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும்.

ஜோதிஜி said...

மற்றொரு சமயத்தில் இது குறித்த அடுத்த ஆராய்ச்சியை தொடங்குவோம் முரளி.

ஜோதிஜி said...

வாங்க டீச்சர்.

ஜோதிஜி said...

நன்றி குமார்

ஜோதிஜி said...

உங்களுக்காக இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் பாடலை சமர்ப்பிக்கின்றேன்.

https://www.youtube.com/watch?v=YipbnUZjmuY

நம்பள்கி said...

அமுதவன்,
நிழல் விழவில்லை என்று அவர்கள் தான் நிரூபிக்கவேண்டும்! அவர்கள் பொய் சொல்லுவார்கள்; அதை பொய்யென்று நாங்கள் நிரூபிக்கவேண்டும்? இது என்ன நியாயம்?

அவர்கள் சொன்னது பொய். நான் அப்ப படம் எடுக்கவில்லை. எப்ப வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சென்று பார்த்துக்கொள்ளலாம். நிழல் பேஷா தரையில் விழும்!

கடவுள் இருக்கிறார் என்று ஒன்று சொல்லி...அதை இல்லை என்று நாங்கள் நிரூபிக்க சொல்கிராமாதிரித்தான் இதுவும்.
____________
AmudhavanSeptember 17, 2013 at 9:16 PM
நல்ல தகவல்களுடன் அருமையான, உபயோகமான பதிவு.விளக்கங்கள் தெளிவாக இருந்தாலும் படம் போட்டு விளக்கினால் இன்னமும் தெளிவாக இருக்கும். இங்கே திரு குணசேகரோ அல்லது நம்பள்கியோ விளக்கங்களுக்கான வடிவங்களுடன் கூடிய வரைபடங்களை வெளியிட முடிந்தால் சிறப்பாக இருக்கும்.

விஜயன் said...

ஏதோ என்னால முடிஞ்சது...!!!
கோவிலின் பின்புறம் உள்ள சிற்பங்களில் ஒரு மயிலிறகு நுழையும் அளவுக்கு கல்லில் துளை போடப்பட்டிருக்கும். (சிறு வயதில் என் தந்தை செய்து காண்பித்தது...) கல்லில் அவ்வளவு நுண்ணிய துளை போடுவது நமது சிற்பக்கலைக்கு மேலும் ஒரு சிறப்பு...

விஜயன் said...

கோவில் கட்டப்பட்ட விதம் பற்றி பாலகுமாரனின் 'உடையார்' நாவல் படித்தால் வேறு விதமான புரிதல் தோன்றும்.

அந்த ஊர் 'சாரப்பள்ளம்' தானே..

Rathnavel Natarajan said...

தஞ்சாவூர் பெரிய கோவில் எப்படி கட்டப் பட்டது என்பதற்கான அருமையான பதிவு. நல்ல பதிவு தான் அருமையான பின்னூட்டங்களையும், மேற்கொண்டு விபரங்களையும், விவாதங்களையும் கொண்டு வரும்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் பதிவையும், பின்னூட்டங்களையும் படிக்க வேண்டுகிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

ஜோதிஜி said...

மிகச் சரியா சொல்லிட்டீங்க. நன்றி விஜயன்.

ஜோதிஜி said...

நன்றிங்க

Ranjani Narayanan said...

பாடலுக்கு நன்றி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

தஞ்சை கோவில் பற்றிய சிறப்புகளை அறிந்து கொண்டேன். கடந்த வாரம் தான் அங்கு சென்றிருந்தேன்...

Unknown said...

கோபுரத்தில் உள்ள மேல் பகுதிக்கு பண்டியல் என பெயர் அது ஒரே கல்லால் ஆனது ..அது யானையால் கட்டி இழுக்கப்பட்டது ...கல் திருப்பணி செயும் போது கல்களை எடுத்து செல்ல இப்பொழுது கிறேன் இருப்பது போல அக்காலத்தில் வசதிகள் இல்லமியால் ஒவ்வொரு கல் வைத்ததும் மண்ணால் மூடி அதன் மேல தளம் போல அமைத்து தான் ஒவ்வொரு வரியும் வைக்க பட்டு உள்ளது ( இது ஸ்தபதிகள்,சிப்பிகள் கையாளும் முறை ) இதை பல ஆராசியளர்கள் சொல்லவில்லை ..கல்கள் ஏற்ற சாய்வு மேடை அமைக்க பட்டது என்பது சரியாக கொண்டாலும் கோபுரம் மேல் கல் வைக்கும் வரை சுற்று புறம் முழுவதுமே மண்ணால் மூடியே இருந்திருக்க முடியும் இல்லாவிடில் சாத்தியம் இல்லை என்பது எம் கருத்து

கிரி said...

இதை நானும் படித்தேன். உண்மையாகவே பிரம்மிப்பாக இருக்கிறது. நம்ம ஊர்ல ஒரு விமான நிலையம் கட்டுறதுக்கு இல்லாத ஆர்ப்பாட்டம் செய்து மொக்கையாக கட்டி இருக்கிறார்கள். இங்கே வசதிகள் இல்லாத காலத்திலேயே இது போல கட்டி இருப்பதைப் பார்த்தால் இவர்கள் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

Nanjil Siva said...

பிரமிக்க வைக்கும் பதிவு.நன்றி!!!

ஜோதிஜி said...

நன்றி