Wednesday, May 29, 2013

மசாலா தூவினால் தான் மரியாதையா?

அப்பா எப்போதும் தினமணி மட்டும் தான் வாங்குவார்.  

தொடக்கத்தில் எரிச்சலாக இருந்தாலும் மேல்நிலைப்பள்ளி வந்த சமயத்தில் அதில் தொடர்ச்சியாக வரும் சிறப்புக்கட்டுரைகளை கடையில் இருக்கும் அந்த மதிய நேரத்தில் வாசித்துக் கொண்டு இருப்பதுண்டு.

புரிந்ததோ இல்லையோ வாசிப்பு என்பதனை ஒரு கடமையாக வைத்திருந்த காலமது.

நூற்றுக் கணக்கான கட்டுரைகளை வாசித்துள்ளேன். 

இன்று கட்டுரைகள் சார்ந்த வாசிப்புக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றேன். ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட விசயத்தை வாசித்து முடிக்கும் போது "அட நமக்கு இத்தனை நாளும் இது குறித்து தெரியலையே" என்ற அங்கலாய்ப்பும் வந்து விட அடுத்த தேடல் தொடங்க காரணமாக அமைந்து விடுகின்றது.

எழுதி அனுபவமில்லாதவர்கள் எது குறித்து வேண்டுமானாலும் எழுதலாம்.  எதைப் பற்றி எழுத வருகின்றதோ அதிலிருந்தே எழுதத் தொடங்கலாம். ஆனால் படிப்படியான மாறுதல் தேவைப்படும் களத்தில் இந்த எழுத்துக்களம் முக்கியமானது. 

நாம் எப்படி ஒன்றைப் பார்க்கின்றோம். அதுவும் மற்றவர்களிடமிருந்து எப்படி அதனை வேறுபடுத்தி எழுத்தில் காட்ட முயற்சிக்கின்றோம் என்பதில் தான் முக்கியத்துவம் உள்ளது.

அந்த முக்கியத்துவம் தேவையில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை. எழுதும் சுகம் என்பதும் அது மற்றவர்களுக்கு எந்த விதத்தில் பிடிக்கும் என்பதும் எவராலும் அனுமானிக்க முடியாத ஒன்று.

நாம் ஒன்றை அனுபவித்து ரசித்து எழுதியிருப்போம். ஆனால் அது சீந்துவாரற்று கிடக்கும்.  சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மேம்போக்காக எழுத அது பலராலும் சிலாகித்து பேசப்பட்டு இருக்கும்.  காரணம் படிப்பவனின் வாழ்க்கை என்பது எழுதுபவனால் யூகிக்க முடியாத ஒன்று.  எழுத்தும் வாசிப்பும் சில சமயம் பொருந்தி போய்விடும். பல சமயம் அந்த வாய்ப்பில்லாமல் போய்விடும்.  கவலைப்படத் தேவையில்லை.

எழுதிக் கொண்டே இருக்கும் போது தான் அந்த சூட்சமத்தை உணர முடிகின்றது. 

வலைதளத்தில் எழுதுபவர்கள் தொடக்கத்தில் தங்களது அனுபவங்களை எழுதினால் போதும் என்று தான் நான் சந்தித்த நபர்களிடம் சொல்லியுள்ளேன்.  காரணம் அது தான் எளிதானது. படிப்படியாக வளர்த்துக் கொண்டு மற்ற விசயங்களைப் பற்றி எழுதலாம்.

நம்முடைய அனுபவங்கள் குறித்து எழுதும் போது நம்முடைய எழுத்து பலம் தெரிய வரும்.  கோர்வையாய் கோலம் போடும் தன்மை புரியும். வாசித்துக் கொண்டிருப்பவனை நகர விடாது இழுத்துச் செல்ல வேண்டிய சூட்சமத்தை உணர வைப்பதன் சூத்திரத்தை புரிந்து கொள்ள முடியும். வாசிப்பவனை நம் எழுத்திலிருந்து நகர விடாது "நான் உங்க கட்டுரையை ஓரே மூச்சில் படித்து முடித்தேன்" என்று சொல்ல வைக்க வேண்டிய  அவசியம் புரியத் தொடங்கும்.

ஆனால் சமூகம் சார்ந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதத் தொடங்கும் போது தான் நம்முடைய எழுத்துத் தகுதிகள் குறித்து நமக்கே புரிய வரும். நாம் எழுத்துக் கலையில் வளர்ந்துள்ளோமா? என்பதன் சவால் இங்கிருந்து தான் தொடங்குகின்றது.

நான் சமீபத்தில் வாசித்த தொடர் போன்ற  ஊரான் கட்டுரை இதற்கு நல்ல உதாரணம். மிக தெளிவாக கையாண்டு இருந்தார்.

"கரணம் தப்பினால் மரணம்"என்கிற நிலையே இங்கே தான் தொடங்குகின்றது.  அதுவும் களத்தில் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கின்ற விசயம் என்றால் சொல்லவே தேவையில்லை.  

உளறி வைக்க முடியாது. 

உண்டு இல்லையென்று படுத்தி எடுத்து விடுவார்கள். ஒரு வேளை நாம் தவறு செய்திருந்தாலும் அடுத்த முறை திருத்திக் கொள்ள வாய்ப்பாகவும் அமைந்து விடும்.  அதுவே நம்மை வளர்க்க ஒரு காரணியாகவும் அமைந்து விடுகின்றது. இப்படித்தான் நானும் வளர்ந்துள்ளேன்.  இன்று பத்திரிக்கையின் படிக்கும் ஒரு சிறிய துணுக்குச் செய்திகளை வைத்துக் கொண்டு தினசரி வாழ்க்கையில் பார்த்த மற்றொரு நிகழ்வோடு கோர்த்துச் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளேன்.

அப்பா வாங்கிய தினமணி கொடுத்த தாக்கம் எனக்கு அரிச்சுவடியாக இருந்துருக்குமோ என்று இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். அதன் நீட்சியே நான் இந்த தளத்தில் எழுதும் சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கு முக்கிய காரணமாகக்கூட இருக்கக்கூடும். 

ஆனால் இன்று குறிப்பிட்ட தனி இதழ்களைத் தவிர்த்து ஆழமான கட்டுரைகள் எந்த வெகுஜன பத்திரிக்கைகளிலும் வருவதில்லை.  ஒரு திரைப்படம் வந்தவுடன் மாங்கு மாங்கென்று அதற்கு விமர்சனம் எழுதும் நம் வலையுலக மக்கள் ஒரு அரசாங்கத்தின் புதிய திட்டத்தைப் பற்றி கண்டு கொள்வதில்லை. காரணம் கேட்டால் அது போன்று எழுதினால் எவரும் வந்து படிக்க மாட்டார்கள் என்ற மாயப் போதையில் தான் பலரும் இருக்கின்றார்கள். நிச்சயம் அப்படி வலையுலகம் இல்லை என்பது நான் கண்ட உண்மை. அற்புதமான வரவேற்பு கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

அப்படி வலையில் வந்தாலும் மசாலாக்கள் தூவப்பட்டு அல்லது கட் அண்ட் பேஸ்ட் என்கிற ரீதியில் தான் உள்ளது. 

அது படித்தவுடன் மறந்து போகும் அளவிற்குத்தான் உள்ளது. படிப்பவனுக்கு ஒரு சுகம் தேவை என்பதற்காக வெறுமனே மசாலா வாடையை வைத்து ஒப்பேற்றி விடவும் முடியாது.  அடுத்தமுறை பெயரை பார்க்கும் போது மனதிற்குள் புன்னகைத்து விடுவார்கள்.  

பல எழுத்தாளர்கள் முதல் வலையுலக மக்கள் வரைக்கும் காலப் போக்கில் காணாமல் போனது இந்த வகையில் தான். நம்முடைய கவனம் கருத்தில் இருப்பதைப் போல அதை படிப்பவனுக்கு கொண்டு சேர்ப்பதிலும் கவனம் வைத்திருக்க வேண்டும். என் அனுபவத்தில் விமர்சனம் எதுவும் கொடுக்காமல் ஆழ்ந்து படிப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கின்றார்கள்.  

இது போன்ற நூற்றுக்கணக்கான பேர்களை ஒவ்வொரு சமயத்திலும் நான்  சந்தித்துள்ளேன். ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

ஈழம் தொடர்பாக திருமாவேலன் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் முத்தானவை.  எவரையும் படிக்க வைக்கும் நடை அதே சமயத்தில் உண்மைகளை முடிந்தவரைக்கும் அருகே சென்றும் பார்க்கும் துணிச்சலும் உள்ளவர். என் எழுத்துப் பாதையில் இவரின் தாக்கமும் உண்டு. 

நானும் இந்த தளத்தில் முடிந்தவரைக்கும் பல சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி உள்ளேன்.  இது என் எழுத்துலக வளர்ச்சி என்பதாக எடுத்துக் கொள்வதுண்டு. மற்றவர்களின் பாராட்டுக்களை விட எழுத்துலகில் நமக்கே நம் எழுத்தின் மீது ஒரு மரியாதை வர வேண்டும். இன்று வரையிலும் என் பழைய பல கட்டுரைகளை படித்து விட்டு மின் அஞ்சல் வாயிலாக பாராட்டுச் சொல்பவர்கள் அநேகம் பேர்கள் உள்ளனர்.

தேவியர் இல்லத்திற்கு எப்போதும் போல வந்தவர்களுக்கு,அவ்வப்போது  வந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த இணைப்பு உதவக்கூடும் என்பதற்காக இந்த பதிவு. ஏதோவொரு வகையில் இந்த ஒவ்வொரு கட்டுரையும் எனக்கு சிறப்பான அங்கீகாரத்தை தந்துள்ளது.  

இந்த பதிவுகளுக்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் கிடைத்தது. விமர்சனப் பார்வையின் மூலம் நான் சென்று கொண்டிருக்கும் பாதை புரிபடத் தொடங்கியது. 

என் எழுத்துப் பயணத்தில் நான்காம் ஆண்டில் முடிவில் நிற்கும் நான் என்னுடைய எழுத்தின் வளர்ச்சியை அங்கீகரித்தவர்களுக்கு நன்றியை இங்கே எழுதி வைப்பது என் கடமையும் கூட.

மாற்றத்திற்கு ஆசைப்படு.....................

(இதில் உள்ள படங்கள் தினந்தோறும் நான் கூகுள் ப்ளஸ் ல் போடும் படங்களில் சில. நான் ரசித்த சிலவற்றை உங்கள் ரசனைக்காக)


















20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கே /// எழுதும் சுகம் என்பதும் அது மற்றவர்களுக்கு எந்த விதத்தில் பிடிக்கும் என்பதும் எவராலும் அனுமானிக்க முடியாத ஒன்று. ///

ப /// எழுத்துலகில் நமக்கே நம் எழுத்தின் மீது ஒரு மரியாதை வர வேண்டும். ///

கேள்விக்கேற்ற பதில்...

ஜோதிஜி said...

ஏற்கனவே தொப்பி தொப்பி என்று ஒருவர் இருந்தார். வெளியிட்ட சில நிமிடங்களில் டான் என்று ஆஜர் ஆவார். இப்ப நீங்க. ஏதாவது மென்பொருள் டிங் டாங் என்று சப்தம் செய்யும் வசதியை வைத்து இருக்கீங்களோ?

ஊரான் said...

"நம்முடைய கவனம் கருத்தில் இருப்பதைப் போல அதை படிப்பவனுக்கு கொண்டு சேர்ப்பதிலும் கவனம் வைத்திருக்க வேண்டும். என் அனுபவத்தில் விமர்சனம் எதுவும் கொடுக்காமல் ஆழ்ந்து படிப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கின்றார்கள்"

ஆம்! அதனால்தான் ஒரு முறைக்கு பல முறை சிந்திக்க வேண்டியுள்ளது. எழுதியதை மீண்டும் திருத்தி எழுத வேண்டி உள்ளது.

எழுதுவது எவ்வளவு கடினமானது என்பதை ஒரு தொடரை எழுதும் போதுதான் உணர முடிகிறது. முடிக்கலாம் என தோன்றும் போது வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்கள் நம் கண்முன்னே வந்து முடிக்காதே என்கிறார்கள். மீண்டும் முடிக்கலாம் என எண்ணும் போது புதிய மனிதர்கள் வருகிறார்கள். அவர்களும் முடிக்காதே என்கிறார்கள். அதனால்தான் நான் எழுதும் தற்போதைய தொடர் இன்னமும் நீள்கிறது.

ஜோதிஜி போன்றவர்கள் தரும் உற்சாகம் என்னைப் போன்றவர்களை பண்படுத்துகிறது.

"நான் உங்க கட்டுரையை ஓரே மூச்சில் படித்து முடித்தேன்" இந்த வரிகள் ஜோதிஜி அவர்களுக்கு மிகவும் பொருந்தும்.

பின்னூட்டங்கள் எழுதுவதற்குக்கூட ரொம்பவுமே யோசிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் நான் படிக்கின்ற எல்லா கட்டுரைகளுக்கும் பின்னூட்டம் எழுத முடிவதில்லை.

வாழ்த்துகள்!
நன்றியுடன்
ஊரான்

எம்.ஞானசேகரன் said...

//என் அனுபவத்தில் விமர்சனம் எதுவும் கொடுக்காமல் ஆழ்ந்து படிப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கின்றார்கள்.//

நான் 'ஆயிரத்தில் ஒருவன்'.

வவ்வால் said...

ஜோதிஜி,

//அப்பா வாங்கிய தினமணி கொடுத்த தாக்கம் எனக்கு அரிச்சுவடியாக இருந்துருக்குமோ என்று இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.//

அறியாத தகவல்,பதிவாக்கி அறிய வைத்தமைக்கு நன்றி :-))

# மசாலா தூவினால் தான் மரியாதையா? நல்ல கேள்வி ஆனால் கேட்க வேண்டிய ஆள் அடியேன், மசாலா இல்லை,படிக்க சுவாரசியம் இல்லை, ஒப்பிக்கிறாப்போல இருக்குனு என்னை கொலையா கொன்னப்போது இதான் நானும் நினைத்தேன் ,ஒரு கூடுதல் தகவல் நான் அப்போது தினமணி, தினத்தந்தி ஒப்பிட்டு ,நீங்க எதிர்ப்பார்க்கிறது தினத்தந்தி வகை அது எனக்கு சரிப்பாடாதுனு சொல்லலாம்னு நினைச்சு சொல்லாமல் விட்டுட்டேன் :-))

வாழ்த்துக்கள் , தொடர்ந்து கலக்குங்கள்!

தவறு said...

அன்பின் இந்த எழுத்துநடை உங்களுடைய பார்வை எல்லாம் இப்படிதான் எழுதவேண்டும் என்பதும் தங்களுடைய நியதி.... இத்தனை மசாலாக்கு மத்தியில் தாங்கள் உணவாக இருப்பதால் தான் தங்களுடைய வெற்றி. தொடருங்கள்.....

மசாலாக்களும் இருக்கும் உணவும் இருக்கும் உலகம் இது.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அற்புதமான பகிர்வு .உங்கள் எழுத்தின் அழுத்தம் பின்பற்றகூடியது என்பதை முதல் பதிவு வாசித்ட் போதே உணர்ந்து கொண்டேன் .தொடருங்கள் .தொடர்பு கொள்தலே வாழ்கை என்பது சுகமான அனுபவம் .

ஜோதிஜி said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி

ஜோதிஜி said...

வாங்க ராஜ். நன்றி

ஜோதிஜி said...

நான் அப்போது தினமணி, தினத்தந்தி ஒப்பிட்டு ,நீங்க எதிர்ப்பார்க்கிறது தினத்தந்தி வகை அது எனக்கு சரிப்பாடாதுனு சொல்லலாம்னு நினைச்சு சொல்லாமல் விட்டுட்டேன்

அறியாத தகவல்,பதிவாக்கி அறிய வைத்தமைக்கு நன்றி :-))

எப்பூடி?


ஜோதிஜி said...

நீங்க கோடியில் ஒருவர். உங்கள் விமர்சனம் படித்து நாலைந்து பேர்கள் மின் அஞ்சல் வழியாக டாலர் நகரம் வாங்கியுள்ளனர் என்றால் சும்மாவா? பின்னீட்டீங்க.

ஜோதிஜி said...

தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துகள்.

Rathnavel Natarajan said...

ஆனால் இன்று குறிப்பிட்ட தனி இதழ்களைத் தவிர்த்து ஆழமான கட்டுரைகள் எந்த வெகுஜன பத்திரிக்கைகளிலும் வருவதில்லை. ஒரு திரைப்படம் வந்தவுடன் மாங்கு மாங்கென்று அதற்கு விமர்சனம் எழுதும் நம் வலையுலக மக்கள் ஒரு அரசாங்கத்தின் புதிய திட்டத்தைப் பற்றி கண்டு கொள்வதில்லை

அருமையான பதிவு. நன்றி.

ஜீவன் சுப்பு said...

தினமணி - தமிழில் வரும் ஒரே "செய்தித்தாள்" இது மட்டுமே ...!சில வருடங்களுக்கு முன்னாடி பக்கத்து வீட்டு தாத்தா ஒரு முறை சொன்னார் , தினமணியை தவிர மற்ற பத்திரிகைகளில் செய்திகளைத்தேட வேண்டியிருக்கின்றது என்று .

முனியாண்டி விலாஸ்களை விரும்பும் அளவுக்கு , சரவண பவன்களை விரும்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

சமீபத்தில் வேலை நிமித்தமாக வயதில் மூத்த ஒருவருடன் பேச நேர்ந்தது ,அவர் எனது நலன் விரும்பியும் கூட . வேறு என்ன விசேஷம் என்றவரிடம் , வலைப்பதிவில் எழுதுவதையும் , அதன் அருமை பெருமைகளையும் அப்பாடக்கரா சொல்லி முடித்தபின் அமைதியாகக்கேட்டார் ..

நீங்கள் சவுக்கு தளம் வாசித்துருக்குறீர்களா , ராஜநாயகம் தெரியுமா , தேவியர் இல்லம் போயிருகிறீர்களா ...!வவ்வால் பின்னூட்டம்ல பின்றாருல ....! அவர்வாட்டுக்கு பேசிட்டே இருக்கார் . அசந்தே போய்விட்டேன் இத்தனைக்கும் வாரப்பத்திரிக்கைகள் கூட வாசிக்காதவர் . வலைப்பூவை தினமும் வாசிக்கின்றாரம் .

சாமான்யனிலிருந்து அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை வலைப்பூவை வாசித்துக்கொண்டிருக்கின்றார்கள் .என்ன மசாலாக்களுக்கு விளம்பரம் அதிகமாககிடைக்கின்றது அவ்வளவுதான் ...!

@ வவ்வால் ஜி ...!

//# மசாலா தூவினால் தான் மரியாதையா? நல்ல கேள்வி ஆனால் கேட்க வேண்டிய ஆள் அடியேன், மசாலா இல்லை,படிக்க சுவாரசியம் இல்லை, ஒப்பிக்கிறாப்போல இருக்குனு என்னை கொலையா கொன்னப்போது இதான் நானும் நினைத்தேன் ,ஒரு கூடுதல் தகவல் நான் அப்போது தினமணி, தினத்தந்தி ஒப்பிட்டு ,நீங்க எதிர்ப்பார்க்கிறது தினத்தந்தி வகை அது எனக்கு சரிப்பாடாதுனு சொல்லலாம்னு நினைச்சு சொல்லாமல் விட்டுட்டேன் :-))//

அண்ணேன் நீங்க போடுற பின்னூட்டமே பதிவு மாதிரிதான் இருக்கு . பதிவு... புத்தகம் மாதிரி இருக்கு .கணினியில தொடர்ந்து படிக்கும் போது சீக்கிரமே அயர்ச்சியாயிடுது . என்னதான் அசின் படம் போட்டு ஆரம்பிச்சாலும் போகப்போக பொங்குது கண்ணு , தல கீழா தொங்கி படிக்குற மாதிரியே ஒரு ஃபீலிங் ...அவ்வவ்வ்வ்வ் ...! போதாதுக்கு ரெம்பவே டீட்டெயிலா வேற எழுதுறீங்களா அதான் என்ன மாதிரி ஆளுகலாளெல்லாம் புரிஞ்சுக்க முடியல ...! பின்னூட்டம் சைஸ்ல பதிவு எழுதுனீங்கன்னா அடியேனுக்கு ரெம்ப சந்தோசமா இருக்கும் .

எப்டியோ , ஜால்ரா அடிக்கமா நீங்க அடிக்குற ஒவ்வொரு பின்னூட்டமும் அட்டகாசம் போங்க ...!

வவ்வால் said...

ஜீவன் சுப்பு,

தங்களின் மேல கருத்துக்கு மிக்க நன்றி!

சத்தம் போடாம நம்மளைப்படிக்கும் கூட்டம் தான் ரொம்ப அதிகம்,அதில நீங்களூம் ஒருத்தர்னு இப்போ தான் தெரியுது :-))

//அண்ணேன் நீங்க போடுற பின்னூட்டமே பதிவு மாதிரிதான் இருக்கு . பதிவு... புத்தகம் மாதிரி இருக்கு .கணினியில தொடர்ந்து படிக்கும் போது சீக்கிரமே அயர்ச்சியாயிடுது . என்னதான் அசின் படம் போட்டு ஆரம்பிச்சாலும் போகப்போக பொங்குது கண்ணு , தல கீழா தொங்கி படிக்குற மாதிரியே ஒரு ஃபீலிங் ...அவ்வவ்வ்வ்வ் ...! போதாதுக்கு ரெம்பவே டீட்டெயிலா வேற எழுதுறீங்களா அதான் என்ன மாதிரி ஆளுகலாளெல்லாம் புரிஞ்சுக்க முடியல ...! பின்னூட்டம் சைஸ்ல பதிவு எழுதுனீங்கன்னா அடியேனுக்கு ரெம்ப சந்தோசமா இருக்கும் .//

பாராட்டிக்கிட்டே காதை பிடிச்சு திருக உங்கக்கிட்டே தான் கத்துக்கணும் :-))

எழுத ஆரம்பிச்சாச்சு ஏன் விடனும்னு தெரிஞ்சது எல்லாம் கொட்டிடுறது தான் நம்ம வழக்கம்,இதுக்கே பல விடயங்கள் தேவை இல்லைனு நீக்கி சுருக்கி போடுறது தான் நம்ம பதிவு :-))

தொடரும்னு போட்டால் தொடர மாட்டேன் அதனால் தான் இப்பூடி,சளைக்காம தொடரா எழுத நாம என்ன ஜோதிஜி போல எழுத்து சித்தரா :-))

# //எப்டியோ , ஜால்ரா அடிக்கமா நீங்க அடிக்குற ஒவ்வொரு பின்னூட்டமும் அட்டகாசம் போங்க ...!//

நம்ம பதிவை விட பின்னூட்டத்திற்கு வாசகர்கள் அதிகமாயிட்டாங்களோ அவ்வ்!

நம்ம பின்னூட்டத்தினை சிலாகித்து பேசிய உங்களின் நலம் விரும்பிக்கும் அடியேனது நன்றி!

அடுத்த முறை பார்த்தால் எனது நன்றியை சேர்த்து விடவும்.

இப்படிலாம் நம்ம பின்னூட்டத்தினை புகழ்ந்தால் ,ஜோதிஜியை இன்னும் நல்லா கலாய்க்கலாம்னு ஒரு உற்சாகம் பிறக்குதே என்ன செய்வேன் அவ்வ் :-))

வவ்வால் said...

ஜோதிஜி,

ஹி..ஹி தப்பாச்சொல்லிட்டீரே, நான் போட்டது பின்னுட்டமல்லொ.

எனவெ அறியாத தகவல்,பின்னூட்டமாக்கி அறிய வைதமைக்கு நன்றி!

என சொல்ல வேண்டும்! விடமாட்டோம்ல :-))

ஜோதிஜி said...

ஏற்கனவே பாலகுமாரனை எழுத்துச் சித்தர்ன்னு யாரு சொன்னாங்கன்னு எனக்குத் தெரியல. மொத்தமாக அவரைத் தொடர்ந்த அத்தனை பேர்களும் அம்போன்னு விட்டுட்டு நகர்ந்து போயிட்டாங்க. தெரியும் தானே?

நாங்க ஜனநாயக ரீதியா கருத்து சுதந்திரத்தை அனுமதிக்க கற்று இருப்பதால் உங்கள மாதிரி பெரியவங்ககிட்டே கத்துக்கிட்டே இருக்குறோம் தானே.

நாங்க எத்தனை பேருக்கு உதவுறோம்ன்னு இப்பவாவது புரிஞ்சா செரி.

ஜோதிஜி said...

நீங்கள் சவுக்கு தளம் வாசித்துருக்குறீர்களா , ராஜநாயகம் தெரியுமா , தேவியர் இல்லம் போயிருகிறீர்களா ...!வவ்வால் பின்னூட்டம்ல பின்றாருல ....! அவர்வாட்டுக்கு பேசிட்டே இருக்கார் . அசந்தே போய்விட்டேன் இத்தனைக்கும் வாரப்பத்திரிக்கைகள் கூட வாசிக்காதவர் . வலைப்பூவை தினமும் வாசிக்கின்றாரம் .

நாளை ஐந்தாம் ஆண்டின் தொடக்கம். இந்த சமயத்தில் இப்படி ஒரு அங்கீகாரம். நன்றி தம்பி.

ஜோதிஜி said...

மிக்க நன்றி அய்யா.

ஜோதிஜி said...

நாங்க விட்டுக் கொடுத்தே வாழ பழகிக்கிட்டே வாழ்ந்தவாங்க.