Saturday, May 18, 2013

என் ஜன்னலுக்கு வெளியேஇன்னமும் காமராஜர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.

இந்த முறை பழகிய ஒவ்வொருவரும் கேட்டார்கள். 

"இரண்டு பேர்கள் இருக்கின்றார்கள். இரண்டு மாதத்திற்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்த்து விடுங்கள்" என்று. 

அதாவது பள்ளி கோடை விடுமுறை முடிந்து விடுமுறையில் இருப்பவர்கள் இரண்டு மாதத்தில் ஏதோவொரு இடத்தில் வேலை செய்து வரக்கூடிய பணத்தை மேற்கொண்டு படிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஆனால் இங்கே பெரிய நிறுவனங்கள் இது போன்ற விசயங்களை ஊக்குவிப்பதில்லை. உள்ளே நுழையக்கூட முடியாது. நாம் எத்தகைய பதவியில் இருந்தாலும் அதற்கான வாய்ப்பை உருவாக்க முடியாது. இடையில் கிளம்பிப் போனவர்களின் மூலம் உருவாகும் பஞ்சாயத்துக்களை தீர்க்க அடுத்த இரண்டு மாதம் ஆகலாம். 

ஆனால் மிகச் சிறிய உள்நாட்டு தயாரிப்பில் கவனம் கொண்டு செயல்படும் நிறுவனங்களுக்கு இது போன்ற மாணவர்கள் தேவைப்படுவார்கள். சக்கையாக பிழிந்து இரண்டு மாதத்திற்குள் எலும்பாக மாற்றிவிடுவார்கள். 

பெட்ரோல் பங்கில் நிறைய பேர்கள் தென்பட்டார்கள். மாதம் 4000 சம்பளம்.  தங்கிக் கொள்ள இடமும் தினமும் மூன்று வேளை சாப்பாட்டுக்கு தினந்தோறும்  90 ரூபாயும் கொடுப்பதாக ஒரு பையன் சொன்னான்.  

பெரிய உணவகங்களில் நிறைய புதிய தலைகள் தென்பட்டது.  அங்கே மாதம் 6000 சம்பளமும் தங்கிக் கொள்ள இடமும் கொடுப்பதாகச் சொன்ன பையன் ஒவ்வொரு மேஜைக்கும் சென்று தண்ணீர் ஊற்றிக் கொண்டுருந்தான்.  

அவன் விரலில் உள்ள காயத்தைப் பார்த்து என்னப்பா? என்று கேட்டேன்.

"பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று சொன்னபோது என் அப்பா ஒரு கல்லை எடுத்து சுண்டு விரலில் தேய்த்த போது நகம் பிய்ந்து அப்படியே புண்ணாகி விட்டது" என்றான்.

"இப்ப இங்கே வேலைக்கு வந்துருக்கியே. கையில் பணம் புழங்க இனிமேல் பள்ளிக்கூடம் செல்ல மனம் வருமா?" என்றேன்.

"அண்ணே இது சும்மா என் செலவுக்கு.  அப்பா கடலை வித்த பணத்தில் +1 க்கு பணம் கட்ட தனியாக எடுத்து வைத்துள்ளார்" என்றான்.

கள்ளக்குறிச்சியின் அருகே  பக்கத்தில் உள்ள அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த தகப்பன் எனக்கு காமராஜராக தெரிந்தார்.

தினமலரில் டாலர் நகரம்.

டாலர் நகரம் விழா நடப்பதற்கு முன்பே ஆங்கிலப் பத்திரிக்கையான தி ஹிண்டு வில் ஆச்சரியப்படக்கூடிய வகையில் டாலர் நகரம் புத்தகத்தைப் பற்றி என்னிடம் பேட்டி கண்டு எழுதியிருந்தார்கள்.


வீட்டில் மூத்தவர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டினார்.  

தினமலரில் வந்தால் தான் நான் ஒத்துக் கொள்வேன் என்றார்.  

அவர் 90 நாளுக்குள் வந்தாக வேண்டும் என்று காலக்கெடு வேறு விதித்திருந்தார்.  எல்லோரும் செய்யக்கூடிய அத்தனை பத்திரிக்கைகளுக்கும் புத்தக மதிப்புரை என்ற பகுதிக்கு அனுப்பி வைத்திருந்தேன்.

சென்ற வாரம் தினமலரில் வந்தது.  ஊரில் இருக்கும் அவரை அழைத்து நான் தோற்று விட்டேன் என்று என்னிடம் வாங்கிச் சென்ற 500 ரூபாயை திரும்ப தந்தாக வேண்டும் என்ற போது பந்தயத்தில் தோற்ற நீங்க என்ன பெரிய எழுத்தாளர்? என்கிறார். 

மாலை மலரில் வந்த கட்டுரை.

தற்போதைய திருப்பூர் நிலவரம் குறித்து ஒரு கட்டுரை எழுதித்தாருங்கள் என்றார் நண்பர்.

அவருக்கு ஏற்கனவே இந்த தளத்தில் எழுதிய நம்பி கை வை என்ற கட்டுரையை கொடுத்து அதுவும் மாலை பத்திரிக்கையில் வந்த போதும் அதை சேமிக்க முடியாமல் போய்விட்டது.  

இந்த முறை மாலை மலர் தொழில் மலரின் வெளிவந்ததை கவனமாக கேட்டு வாங்கி வந்து விட்டேன்.  நண்பர் என் மேல் உள்ள அக்கறையின் காரணமாக என் அனுமதியின்று டாலர் நகரம் புகைப்பட தொகுப்பில் உள்ள என் படத்தையும் கட்டுரையோடு சேர்த்து கொடுத்து ஏற்றுமதி ஆலோசகர் என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளார்.

நண்பர் வேறு சில வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளார்.  நன்றி நண்பா.

இங்கே இப்போது இருக்கும் சூழ்நிலையில் யாருக்காவது ஆலோசனை சொல்லப் போனால் கழுத்தைப் பிடித்து வாசல் வரைக்கும் கொண்டு வந்து தள்ளி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். 

ஜெர்மனியில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய தேசங்களுக்கு இறக்குமதியாகும் ஆய்த்த ஆடைகளுக்கு பங்களாதேஷ் போல இனி வரி விதிப்பு இருக்காது. அதன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து விடும் என்றார்கள்.

பேச்சு மூச்சே காணோம்.

ஆச்சரியம் தந்த படங்கள்.

நீங்கள் பார்த்த பழைய படங்களை கடந்த இரண்டு வாரத்தில் பார்க்க எனக்கு வாய்ப்பு அமைந்தது.  பரதேசி, சுந்தரபாண்டியன், விஸ்வரூபம்,ஹரிதாஸ்

ஹரிதாஸ் படத்தில் வரும் ஆட்டிஸம் குறித்து பாலபாரதி எழுத்தை படித்தபின்பு தான் இப்படி ஒரு விசயம் இருக்கின்றது என்பதே எனக்குத் தெரிந்தது.

இரட்டையர் பிறந்த போதும், தொடர்ந்து வந்த மூன்று ஆண்டுகள் ஒருவரை காப்பாற்ற நாங்கள் பட்ட பாடுகள் என்று ஒவ்வொன்றும் அந்த படத்தைப் பார்த்த போது மனதில் வந்து போய்க் கொண்டேயிருந்தது. 

அசாதாரணமான மனிதர்கள் தங்களது அசாத்தியமான தன்னம்பிக்கையின் மூலம் தான் இங்கே பலவற்றையும் சாதிக்க முடிகின்றது. 

ஊரில் இருக்கும் அவரிடம் "என்னம்மா அப்பாக்கிட்ட பேசவே இல்லையே " என்றேன்.  "நாம் ரொம்ப பிசியா இருக்கேம்ப்பா..... நான் வீட்டுக்கு வந்ததும் உங்கிக்கிட்டே பேசுறேன்" என்கிறார்.
                                                                     +++++++
விஸ்வரூபம் பார்த்ததும் மீண்டும் ஒரு முறை நம்ம அகில உலக அசின் பேரவைத்தலைவர் எழுதிய விபரங்களை பார்க்கச் சென்றேன். 

உலக அரசியலை சொட்டுச் சொட்டாக வடித்து இருந்தார். 

படிக்க சுவராசியமாகவே இருந்தது.  எனக்கு கமல் என்றே அந்த பெயரே போதும் என்கிற அளவுக்கு அந்த படம் திருப்தியைத் தந்தது.

சுந்தரபாண்டியனில் தெற்கு மாவட்டங்களின் பழக்க வழக்கங்களை இன்னமும் பல இடங்களில் சொல்லியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது.  

பள்ளிக்கூடத்தில் அப்பாஸ் என்பவரை கிண்டலடிக்க அப்போது பிரபல்யமாக இருந்த நடிகை ரேவதியை கண்டபடி அவர் காதில் கேட்கும் வண்ணம் கிண்டலடிப்போம்.  அவர் அடிக்க ஓடி வருவார்.  அந்த அளவுக்கு ரேவதி மேல் அப்பாஸ் பைத்தியமாக இருந்தார்.  நீண்ட நாளைக்குப் பிறகு ரேவதி போல இந்த கும்கி மேனன் வருவார் என்று நினைக்கின்றேன்.

பரதேசி படம் பார்த்தவுடன் ஒரு பயம் வந்து விட்டது. வசூல் தந்த படமா என்று யோசிக்க வைத்தது.

இலங்கையில் வேலை செய்ய அழைத்துச் சென்ற தோட்டத் தொழிலாளர்கள் பற்றி ஈழம் சம்மந்தமாக பல புத்தகங்களை படித்துக் கொண்டே வந்த போது ஆராய்ச்சி கட்டுரை பாணியில் எழுதப்பட்ட பல முனைவர் கட்டுரைகளை படிக்க வாய்ப்பு கிடைத்தது. 

மூன்றாண்டுகளுக்கு முன்னால் படித்த போதிலும் இன்று பாதி விபரங்கள் நினைவில் இல்லை.  படத்தை பார்த்த போது ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநர் தான் என் மனக்கண்ணில் வந்து போனார்கள்.  

பயந்தபடியே இணையத்தில் பரதேசியின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரங்கள் எந்த அளவுக்கு இருந்தது என்பதைப் பார்த்த போது திருப்திகரமாக இருந்தது.

எனக்கு எப்போதும் பிடித்த நடிகைகள் காந்திமதி மற்றும் வடிவுக்கரசி.  அதே போல தற்போது உள்ள நடிகர்களில்  பிரகாஷ்ராஜ் அவர்களை ரொம்பவே பிடிக்கும்.  

குறிப்பாக வாரிசு நடிகர்களை ரொம்பவே கவனித்துக் கொண்டு வருவதுண்டு. அந்த வகையில் சிவகுமார் மகன்கள் மட்டும் நம்பிக்கையை தந்து கொண்டு இருக்கின்றார்கள்.  வளர்ப்பும் முக்கிய காரணம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்.  

கருத்தம்மா படத்தில் நடித்த பெரியார்தாசன் (தற்போது இஸ்லாமிய பெயராக மாற்றிக் கொண்டு விட்டார்) அவர்களைப் பார்த்த போது அவரைப் பற்றி அன்று ஒன்றும் தெரியாமல் இவர் பிறவி நடிகராக இருப்பாரோ என்கிற அளவிற்கு ஒரு தாக்கத்தை உருவாக்கினார்.  அதே போல அதர்வாவை இயக்குநகர் பாலா வேலை வாங்கியுள்ளார். 

ஆனால் முரளி மகன் அதர்வா பேசிய பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை பார்த்த போது அந்த அளவுக்கு மேலே வருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.  

திறமையான இயக்குநர்கள் மூலம் தான் இங்கே பல நடிகர்களுக்கு நடிப்பே வருகின்றது.

தமிழ்நாட்டு மக்களின் அரசியல் விருப்பங்களைப் போல காலம் தோறும் மாறிக் கொண்டு வரும் ரசனைகளையையும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வித்தியாசமாக/வியப்பாகவே உள்ளது.  

பட்டாபட்டி

மரணத்தைப் பற்றி ரொம்பவே யோசிக்க வைத்து விட்டார்.  

இதைப்பற்றி ஒரு தனியான பதிவு எழுதியுள்ளேன்.  

தன்னைப்பற்றி தன் விபரங்களைப் பற்றி வெளியே தெரியாத அளவுக்கு வைத்திருந்த இவரின் புகைப்படத்தை நண்பர் பிரபாகர் தனது கூகுள் ப்ளஸ் ல் வெளியிட்டு இருந்தார். 

இன்று அவர் இறந்து ஏழு நாட்கள் முடிந்து விட்டது.  

இன்றைய தினம் அவருக்கு துக்கம் அனுதிஷ்டிக்கும் தினமாக பதிவுகள், முகநூல் போன்றவற்றில் எதுவும் எழுதாமல் நினைவு தினமாக கடைபிடிப்போம் என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.  

ஆனால் இந்த சமயத்தில் அவரின் இந்த புகைப்படத்தை போட்டு தேவியர் இல்லத்தின் அஞ்சலியை அவரின் ஆத்மாவுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

விமர்சனங்கள்.

இது வரை இந்த தளத்தில் நூல் விமர்சனம் என்கிற ரீதியில் 6 பதிவுகளுக்கு மேல் எழுதியுள்ளேன்.  முக்கியமானவர் - முனைவர் மு. இளங்கோவன்


வருகின்ற ஜுன் 3 அன்று எனது வலையுலக பயணத்தின் ஐந்தாம் ஆண்டு தொடங்குகின்றது.  

அவ்வப்போது சிறிய அளவில் முடிந்தவரைக்கும் என்னை மாற்றிக் கொண்டே வருவதன் தொடர்ச்சியாக இந்த முறையும் என் எழுத்து நடையில், எழுதும் விசயங்களில் சில உருப்படியான விசயங்களை இனி கடைபிடிக்க வேண்டும் என்று மனதில் வைத்துள்ளேன்.  காரணம் கடந்த இரண்டு வாரமாக ஒரு தளத்தை தொடர்ச்சியாக வாசிக்க நேரம் கிடைத்தது. .

இந்த சமயத்தில் முதல் முதலாக ஒரு தளத்தைப் பற்றி அவரின் எழுத்தைப் பற்றி விமர்சன பாணியில் எழுத வேண்டும் என்று தோன்றியுள்ளது.  

அந்த அளவுக்கு மனதில் ஒரு புயலை ஒருவர் கிளப்பி விட்டார்.  

அது குறித்து அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கை நெசவில் கீழ் கட்டையை அமுக்கும் அளவிற்கு வளர்ந்தாலே உடனே படிப்பிற்கு தடை... அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு... ஆனால் இன்று எங்கள் ஊரிலும் நிறைய காமராஜர்கள் உள்ளார்கள் என்பதும் பெருமை... ஏனென்றால் (எனக்கு தெரிந்த வரை) முன்பு கைத்தறி இருந்தது கிட்டத்தட்ட 15000 தறிகள்... இன்று அதில் பாதி கூட இல்லை... அதிலும் படித்துக் கொண்டும் பெற்றோர்களுக்கு கைத்தறியில் உதவி செய்தும் குழந்தைகள் பல பேர்...

தினமலரில் + மாலை மலரில் வந்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

நான்கு படங்களை பார்க்க வாய்ப்பு அளித்த துணைவியாருக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்... ஹிஹி... சுருக் நறுக் விமர்சனம்...

தொடர வாழ்த்துக்கள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பல செய்திகளை ஒரே பதிவில் சொல்லி விட்டீர்கள்.
தினமலர் மாலைமலர், ஹிந்து இவற்றின் கவனத்தையும் தங்கள் படைப்புகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...
நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்[ 1980-83 ],
கோடை விடுமுறையில் வேலை பார்த்திருக்கிறேன்.

சென்னை மயிலாப்பூர் கே.ராமநாதன்&கோ பாத்திரக்கடையின் முதலாளி திரு.கே.ராமநாதன் அவர்கள் அந்த வாய்ப்பை நல்கினார்.
முதலாளியும் சரி...சக தொழிலாளிகளும்...
என்னை செல்லப்பிள்ளை போலவே நடத்தினர்.

கடந்த காலத்துக்குள்...பறந்து செல்ல வைத்தது தங்கள் பதிவு.நன்றி.

arul said...

thanks for posting the picture of sir patta patti

வவ்வால் said...

ஜோதிஜி,

// ஒரு முறை நம்ம அகில உலக அசின் பேரவைத்தலைவர் எழுதிய விபரங்களை பார்க்கச் சென்றேன்.
//

ஹி...ஹி உங்க தாராள மனசால் பைசா செலவில்லாமல் உலகளாவிய பதவி கிடைத்துவிட்டது ,கண்கள் பனித்தது, இதயம் இனித்தது, வாழ்க நின் குலம்,கொற்றம்,நன்றி!

# மாலை மலர், தினமலர், தி இந்து ,அடுத்து டைம் மேகசீனா, கலக்குறிங்க ஜோதிஜி,வாழ்த்துக்கள்!(ஹி...ஹி உண்மைய சொல்லனும்னா லேசா காதுல புகை கூட வருது அவ்வ், நான் சொல்லிட்டேன் சொல்லாம எத்தினி பேரு புகை விட்டாங்களோ)

# நம்ம பழைய பதிவையெல்லாம் படிச்சு ,பின்னூட்டம் வேற போட்டிருக்கீங்க, இங்கே வேற சஸ்பென்சா என்னமோ சொல்லி டிரெயிலர் ஓட்டுறிங்க , ஆப்பு எதுவும் தயாராகுதா, எதுக்கும் சூதனமா இருந்துக்கனும் போல இருக்கே,என்னமோ நடக்குது மர்ம்மா இருக்குது அவ்வ்!

#//வருகின்ற ஜுன் 3 அன்று எனது வலையுலக பயணத்தின் ஐந்தாம் ஆண்டு தொடங்குகின்றது.
//

கொஞ்ச நாளைக்கு முன்ன தான் புத்தாண்டு போல நாளை எல்லாம் கடந்த "ஞானி"யாகிட்டேன்னு சொன்னீங்க ஆனால் பதிவு எழுதுன ஆண்டு கணக்கை எல்லாம் கச்சிதமா கணக்கு வச்சு இருக்கீங்களே ,"ஞானம்" இன்னும் முழுசா கைவரப்பெறலையோ :-))

ஜோதிஜி said...

உண்மையில் சொல்லப் போனால் 2009 ஜுன் மாதம் 3 ஆம் தேதி முதல் என் வாழ்க்கையை உண்மையாகவே அனுபவித்து வாழ்கின்றேன் என்று சொன்னால் எப்போதும் போல நக்கலடிப்பீங்க.

நீங்கள் சொன்ன ஞானம் என்பது உணர்தல் என்பதாக எடுத்துக் கொண்டால் எழுதத் தொடங்கிய பிறகே பலருக்கும் வாய்க்கப் பெறுகின்றது. ஆனால் எல்லோரும் எழுதுவார்களா? அந்த வாய்ப்பு கிடைக்குமா? என்று குண்டக்க மண்டக்க கேட்க கூடாது.

உங்கள் பதிவு மட்டுமல்ல. கடந்த போன பத்து நாளில் பலருடைய பதிவுகளையும் அவர்களின் தடங்களையும் ஆராய்ந்து பார்த்துக் கொண்டே வந்தேன். உங்களின் விவசாய கட்டுரைகள் என்னை ரொம்பவே கவர்ந்தது. ஏதோவொரு வகையில் நான் உங்களுக்கு சில இடங்களில் என் கட்டுரைகள் மூலம் விரும்பத் தக்கவனாக இருக்கின்றேன் என்பதாக உங்களின் பல கட்டுரைகளை படித்த போது என் மனதில் பட்டது.

இது ஒருவேளை என் அதீத உணர்வாகவும் இருக்கலாம்.

இல்லே வவ்வால் ஆனந்த விகடன் கூட புத்தகத்தை படித்து முடித்ததும் சென்ற மாதமே பாராட்டி நேரிடையாக அழைத்து பேசினார்கள். ஆனால் பத்திரிக்கை உலகத்தை தொடர்ந்து தொடர்பில் வைத்திருப்பது என் தொழில் வாழ்க்கையில் மிகப் பெரிய சவாலாகவே இருக்கு.

இதெல்லாம் நமக்கு கிலுகிலுப்பை சப்தம் போல எடுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது. வலைபதிவில் ஏற்றி வைப்பதற்கு முக்கிய காரணம் இன்னும் 5 ஆண்டுகள் கழித்து நாம் வைத்திருக்கும் எந்த துண்டு காகிதமும் எப்படி இருக்கும் என்றே யூகிக்க முடில. அது தான் முக்கிய காரணம்.

புகை நமக்கு எப்போது பகை.

என்னை விட உங்களுக்கு அந்த தகுதி நிறையவே இருக்கு. நீங்க தான் வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடிக்குறீங்களே.

ஜோதிஜி said...

நன்றி அருள். அவசியம் மரணம் பற்றி எழுதப் போகும் பதிவை படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க.

ஜோதிஜி said...

வவ்வால் நீங்க சொன்ன பட்டியலில் இவரும் ஒருவர். இவர் பதிவை அவசியம் படித்துப் பாருங்க. நிறைய பதிவுகள் சென்ற வாரத்தில் தான் படித்தேன். வலையுலகில் திரைப்படத்தை ஒரு அறிவு பூர்வமான தளத்தில் கொண்டு செல்லும் முக்கியமான நபர்.

நன்றி நண்பரே.

ஜோதிஜி said...

நன்றி முரளி.

ஜோதிஜி said...

நடுத்தரவர்க்கம், அதற்கும் கீழே இருப்பவர்களின் 70 சதவிகிதத்திற்கும் மேல் தங்கள் குழந்தைகளின் கல்வி விசயங்களில் இன்று அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்பதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளும் அதே தருணத்தில் அவர்கள் கல்லூரி முடித்து விட்டு வெளியே வரும் போது இந்த உலகம் தரும் அவஸ்த்தை வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பைப் பற்றி பதிவாக எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன் தனபாலன்.

நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

விடுமுறையில் வேலைக்கு செல்லும் மாணவர்களை முதலாளிகள் பிழிந்து எடுப்பது உண்மைதான்! சுருக்கமான விமர்சனங்கள் அருமை! தினமலர், மாலை மலரில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.