Wednesday, May 22, 2013

டாலர் நகரம் எனது பார்வையில்…….கவிப்ரியன்


இது டாலர் நகரத்தைப் பற்றிய நூலா? ஜோதிஜி அவர்களின் வாழ்க்கை வரலாறா?....அல்லது இரண்டும் கலந்த கலவையா?

பிரித்தறிய முடியாத அளவிற்கு தன் வாழ்க்கை அனுபவங்களை திருப்பூர் நகர பின்னணியில், தனக்கே உரித்தான எழுத்து நடையில், அழகான பிண்னலாடையைப் போல பிண்ணியெடுத்திருக்கிறார் ஜோதிஜி!

பின்னலாடைக்குப் பின்னால் இருக்கும் கடும் உழைப்பைப் போலவே ‘டாலர் நகரத்தின்’ உருவாக்கத்தில் உள்ள உழைப்பையும் புரிந்து கொள்ளமுடிகிறது.
புத்தகத்தைத் திறந்தவுடன் தொடக்கத்திலே உள்ள வரிகளைப்போலவே ‘நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகம் இதுவரை எழுதப்படவில்லை எனில் அதை நீங்களே எழுதத் தொடங்குங்கள்’ என்ற அழுத்தமான வரிகள்தான் வரவேற்கிறது. 

வாசிப்பு பழக்கம் உள்ள அனைவருக்கும் இயல்பாகவே ஒரு கனவு மனதிற்குள் குடி வந்துவிடும். நாமும் எழுத்தாளனாவது என்கிற கனவுதான் அது. எழுத எண்ணம் வரும்போதெல்லாம், ‘எழுதுவது எப்படி?’ என்ற எனது கேள்விக்கு ‘சுஜாதா’ அவர்கள் ‘சொந்தக் கதையை எழுதாதீர்கள்’ என்று சொன்னதுதான் ஞாபகத்திற்கு வரும்.

நமக்கு நேர்ந்தவைகளையும், நமது வாழ்க்கை அனுபவங்களையும் எழுதாமல் வேறு எதைத்தான் எழுதுவது? எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை ஜோதிஜியிடம் இருந்துதான் கற்றுக் கொள்ளவேண்டும். சமூக பொறுப்புணர்வு என்பது அறவே இல்லாமற் போய்விட்ட இந்தக்காலத்தில், மிகப்பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு ஓய்வில்லாத உழைப்புக்கிடையிலும் வற்றாத ஆர்வம் காரணமாக சமூக அவலங்களை தணியாத தாகத்துடன் பதிவுலகில் மெகா பதிவுகளை எழுதிவரும் இவரை வியப்புடனே கவனித்து வருகிறேன். 

எப்படி முடிகிறது இவரால்?... என எனக்குள்ளே கேள்விகள் ஆயிரம்!

புத்தகத்தை வரவழைத்துவிட்டு நான் பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டபடியால் உடனடியாக புத்தகத்தைப் படிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் புத்தகம் கைக்கு கிடைத்த பின்பும் என்னால் படிக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அவசர கோலத்தில் படிக்கக்கூடாது. பொறுமையாக ரசித்துப் படிக்கவேண்டும். விமர்சனமும் எழுதி அனுப்பவேண்டும் என்ற ஆசையினால் ஆழ்ந்து படிக்க திட்டமிட்டேன். 

ஆனாலும் ஒரு இரயில் பயணம்தான் இதை முடிவுக்கு கொண்டு வந்தது.

எழுத்தாளர் ஆகவேண்டும், புத்தகம் போடவேண்டும் என்று  ஆசைப்பட்ட என்னைப் போன்றவர்களுக்கு வலைப்பதிவு உலகம்தான் வடிகாலாக அமைந்தது. என்னைப் போல பெயருக்கு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டு அதை சரியாக பயன்படுத்தாதவர்கள்தான் அதிகம். ஆனால் பதிவுலகில் அசைக்க முடியாத இடத்தையும், அருமையான நண்பர்களையும் பெற்று, டாலர் நகரத்தை நம் கைகளில் தவழ விட்ட ஜோதிஜிக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள். இனி புத்தகத்திற்கு வருவோம்….

வாலிப வயதில் பிழைப்பிற்காக அல்லது வேலைக்காக ஊரை விட்டு வெளியேறி திருப்பூர் நகர வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளைஞனின் கதையாக டாலர் நகரம் தன் பயணத்தைத் துவங்குகிறது. சூது வாது நிறைந்த நகர வாழ்க்கையின் நீர்த்துப்போன குணாதிசியங்களையும், பல்வேறுபட்ட மனிதர்களையும் படம் பிடித்துக்காட்டும் இவர் இதற்குப் பின்னால் சொல்லும் ஒரே விஷயம் ‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’.

எல்லா இளைஞர்களுமே கிராமத்து வாழ்க்கை அல்லது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மேல்படிபிற்காகவோ அல்லது வேலை தேடியோ நகர்ப்புறம் நோக்கி நகர்வது வாடிக்கைதான் என்றாலும் இந்த இனுபவங்களை எழுத்தில் கொண்டுவருவது சற்று சிரம்மான காரியம்தான். 

ஆனந்த விகடனில் ராஜூமுருகன் எழுதுவதைப்போல இது ஒரு அலாதி அனுவம். நினைக்க நினைக்க, நம் நினைவுகள் கடந்தகால நிகழ்வுகளில் மூழ்கி அதை மீட்டெடுத்து எழுத்தாக்குவது சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கிறது. நானும் கூட இப்படித்தான் நண்பனிடம் 100 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு சென்னைக்கு முதன்முதலில் பயணமானேன்.

போட்டி, பொறாமை, அதனால் உருவாகும் எதிரிகள், பெண்கள் சகவாசம், தலைக்கனம், பணம் பணம் கொடுக்கும் தைரியம், திமிர், பணத்திற்காக எதையும் செய்யும் துணிச்சல் என மனித வாழ்வில் மனித உணர்வுகளே இல்லாமல் போகும் சூழ்நிலையில் உழைப்பு அதுவும் கடினமான உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் (திருப்பூரில்) உயரலாம் என்ற இவரது ஒவ்வொரு அனுபவங்களை கோர்வையான சம்பவங்களில் நமக்குத் திரைப்படத்தைப் போல நமக்குக் காட்டுகிறார். 

நண்பர்களைக் குறிப்பிடுவதைப் போலவே எதிரிகளையும் குறிப்பிடுகிறார்.

உயைப்பற்றி உயர்வாய்ச் சொல்லி கூடவே அதிர்ஷடத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். 

ஏனென்றால் நமது நாடு உழைப்புக்கு மரியாதை கொடுக்காத நாடாகி பல வருடங்கள் ஆகிறது. பணம், செல்வாக்கு, அதிகாரம் என இவையே எல்லா இடங்களிலும் கோலோச்சி உழைப்பை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. செல்வாக்கு உள்ளவனின் சின்னவீடு நினைத்தால் கூட உண்மையாய் இருப்பவனை, உழைப்பவனை எட்டி உதைத்து வெளியேற்ற முடியும் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

பின்னலாடைத் தொழில் பற்றிய எல்லாவற்றையும் சொல்ல முயற்சித்திருக்கிறரார். 

ஆனால் என்னைப் போன்ற அந்த தொழில் பற்றி தெரியாத புதியவர்களுக்கு ஒரு முறை திருப்பூர் சென்று வந்தால்தான் அதன் முழு பரிமாணமும் விளங்கும் என நினைக்கிறேன். நிர்வாகத்திறன், நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் தன்மை, புதியன கற்றுக்கொள்ளல், வாய்ப்புகளை பற்றிக்கொள்ளல், எதிரிகளை சமாளித்தல், தவறான பாதைக்குத் திரும்பாமை என இவரின் எல்லா அனுபவங்களும் வரும் தலைமுறைக்கு பாடமாக இருக்கவேண்டிய விஷயங்கள்.

வெற்றி பெறும்வரை உழைப்பே கதியென்று இருப்பவர்கள் வெற்றி பெற்று உச்சாணிக்குப் போனபின் பின்னால் உழைத்துக் கொண்டிருப்பவர்களைத் திரும்பிப் பார்ப்பதேயில்லை. உதவுவதும் இல்லை.

 என் உழைப்பு, என் உழைப்பு என்கிற திமிர்த்தனமான கர்வமும், பணத்தின் மீதான அதீத வெறியும் அதிகமாகி கல்நெஞ்சக்காரர்களாய் மாறிப்போனவர்களையும் அடையாளம் காட்டியிருக்கலாம். 

இவர்களிடம் ஆலோசனைக்குப் போனால் வெற்று அறிவுறைகளும், சுய தம்பட்டமும்தான் பதிலாகக் கிடைக்கும்.

முதல் 5 அத்தியாயங்களில் திருப்பூரின் ஆரம்பகால அனுபவங்களையும், இவரின் படிப்படியான முன்னேற்றங்களையும் அசைபோட்ட இவர், அடுத்ததாக ‘ஆங்கிலப் பள்ளியும் அரைலூசுப் பெற்றொர்களும்’ என்ற ஆறாவது அத்தியாயத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டார். குறிப்பாய் இந்தப் பகுதியை என் மகள்கள் விரும்பிப் படித்தனர்.

உலகம் தெரியாத இளைஞனாய் இருக்கும்போது, இலட்சிய வேகங்கள் அதிகமிருக்கும். இப்படித்தான் தமிழ் மொழிப்பற்றினால் உள்ள வேகத்தால் எனது அண்ணியாரிடம் (அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதை கிண்டலடித்து) என் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்ப்பேன் என்று சபதம் எல்லாம் செய்தேன்.

இப்போது அந்த சம்பவத்தை அவர்கள் மறந்தே போயிருப்பார்கள். ஆனால் என் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் நாள் வந்தபோது நான் தடுமாறித்தான் போனேன்.

சமூக நிர்பந்த்தத்திற்கு நான் அடிபணிந்து போனேன். எனது சபதமெல்லாம் சரணாகதியாகி விட்டிருந்தது. நாளை என் பிள்ளைகள் வளர்ந்து ‘ஏனப்பா எங்களை அதுமாதிரி படிக்க வைக்கவில்லை’ என்று கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? என் லட்சியத்திற்கோ அல்லது என் இயலாமைக்கோ அவர்களை பலி கொடுப்பதா? 

இறுதியில் நானும் ஆங்கில வழிக்கல்வியில்தான் சேர்க்க வேண்டியதாகிவிட்டது.

டாலர் நகரம் எனது பார்வையில்…………. தொடரும்…

நன்றி திரு. கவிப்ரியன்


தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க



6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// "எப்படி முடிகிறது இவரால்...?" என எனக்குள்ளே கேள்விகள் ஆயிரம்...!

பதிவுலகில் அசைக்க முடியாத இடத்தையும், அருமையான நண்பர்களையும் பெற்று.... ///

திரு. கவிப்ரியன் அவர்களுக்கு தொடரவும் வாழ்த்துக்கள்... நன்றி...

எம்.ஞானசேகரன் said...

இந்த பதிவை தங்களது தளத்திலும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் : http://kavipriyanletters.blogspot.com/2013/05/blog-post_22.html

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள ஜோதிஜி அவர்களுக்கு, தங்கள் வலைத் தளத்தில், தொடர்புடைய பதிவுகள் என்ற பகுதியில், புத்த விமர்சனங்கள் என்ற தலைப்பில் உள்ள பிரிவில், தமிழ் இளங்கோ என்ற பெயரை “க்ளிக்” செய்தால், வெற்றிகொண்டான் விமர்சனம் வருகிறது. கவனிக்கவும்.

ஜோதிஜி said...

நன்றி. சரி செய்து விட்டேன்.

தி.தமிழ் இளங்கோ said...

நன்றி! மேலும் எனது பதிவை நானே மீண்டும் ஒருமுறை படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது!