Friday, August 05, 2011

ஆசிரியர்கள் தரம் -- வளர்ச்சியா? வீழ்ச்சியா?


சமச்சீர் கல்வி, சமச்சீர் கல்வி என்ற வார்த்தைகள் இன்று கிராமம் முதல் டெல்லி உச்ச நீதி மன்றம் வரைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  ஆனால் இந்த சமச்சீர் கல்வி என்பதைப் பற்றி நாம் யோசிக்கத் தொடங்கிய இந்த பயணம் இதன் ஒவ்வொரு படியாக ஏறி வந்து கொண்டு இருக்கின்றோம். மேலும் இதற்குள் நுழைந்து பார்த்தால் இன்னும் பல விசயங்களை நாம் தோண்டிப் பார்க்க முடியும். அதற்கு முன்னால் வேறு சில விசயங்களைப் பார்த்து விடலாம்.

என்னை நானே உதாரண பொருளாக எடுத்துக் கொள்கின்றேன்.

கல்லூரிப் படிப்பு வரைக்கும் படித்துள்ளேன்.  ஏறக்குறைய 15 வருடங்கள்.  நான் என்ன படித்தேன்? எப்படி படித்தேன்? என்று இப்போது யோசித்துப் பார்க்கும் போது சற்று வருத்தமாக இருக்கிறது.  நான் வாழ்ந்த, வளர்ந்த சூழ்நிலை ஒரு காரணம் என்றாலும் பெரும்பாலும் என்னுடைய கொழுப்புத்தனம் ஒவ்வொரு சூழ்நிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நான் இழந்த வாய்ப்புகள் இப்போது என் கண் முன் தெரிகின்றது.  அனுபவம் பல விசயங்களை கற்றுத் தந்த பிறகே என்னை நானே உணர்ந்து கொண்டேன்.

எட்டாவது வரைக்கும் ஒரு பள்ளிக்கூடம்.  ஒன்பது முதல் பனிரெண்டு வகுப்பு வரைக்கும் மற்றொரு பள்ளிக்கூடம்.  இறுதியாக கல்லூரி என்று கடந்து வந்துள்ளேன்.  

முதல் பகுதியில் 8வது வகுப்பு இறுதி வரைக்கும் நான் பெற்ற ரேங்க என்பது வகுப்பில் இரண்டாம் இடம்.  சில சமயம் மூன்றாவது இடம்.  அப்படி என்றால் வகுப்பாசிரியர் பார்வையில் நான் கல்வி ரீதியில் சிறப்பான மாணவன் தானே? ஆனால் அது தவறு?  அது எப்போது எனக்குத் தெரிய வந்தது?

இந்த பள்ளியில் இருந்து அடுத்த பள்ளிக்கு மாறிய போது தான் என் சுய தகுதியும், என்னுடைய அறிவும் எனக்குத் தெரிய வந்தது. இந்த எட்டாவது வகுப்பு வரைக்கும் எனக்குச் சொல்லிக் கொடுத்த எந்த ஆசிரியர்களையும் நான் நினைத்துப் பார்க்கும் அளவிற்கு எந்த பெருமையும் இல்லை. என்னவோ சொல்லிக் கொடுத்தார்கள்.  நானும் படித்தேன் என்கிற இந்த அளவுக்குத்தான் இருந்துள்ளது. இந்த இடத்தில் எட்டாவது வரைக்கும் ஒவ்வொரு வகுப்பில் இருந்த ஆசிரியர்கள் பற்றியே தனித்தனியாக ஒரு பதிவு அளவுக்கு எழுதலாம். ஆனால் அவர்கள் பெற்ற அறிவு அந்த அளவுக்குத் தான் இருந்தது. . அதைத்தான் எனக்குத் தந்தார்கள். 

ஆனால் இந்த முதல் பகுதியில் தினந்தோறும் படிக்கும் பாடங்களை விட, மற்ற விசயங்களைத் தான் இங்கு அதிகம் கற்றுள்ளேன். திருக்குறள், வாய்ப்பாடு, பேச்சுப்போட்டி, நாடகப் போட்டி போன்ற பல விசயங்களுக்கு இந்த கால கட்டத்து ஆசிரியர்கள் எனக்கு உரமாக நல்ல உந்துதலாக இருந்து இருக்கிறார்கள். இதற்கு மேலாக ஒழுக்கமாக இருக்க, தினந்தோறும் பள்ளிக்கு வர வேண்டும் என்கிற ரீதியில் என் வாழ்க்கையின் வேராக இருந்து இருக்கிறார்கள். எந்த நிர்ப்பந்தமும் இல்லை. எது குறித்தும் அச்சப்பட வேண்டியதில்லை. மொத்தத்தில் சுதந்திர வாழ்க்கையை சுகத்தோடு அனுபவித்து வந்துள்ளேன்.  கல்வி என்பது ஒரு பாரமாக இல்லாமல் அது வாழ்க்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கையாக வாழ்ந்துள்ளேன். கல்வி என்பதோடு எங்கள் குடும்பத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்துள்ளேன்.

நிர்ப்பந்தம் இல்லாமல் வாழ்ந்த கல்வி வாழ்க்கையின் பலனை அடுத்த பகுதியில் வேறு விதமாக அனுபவித்துள்ளேன்.

அடுத்து சென்றது 6 முதல் 12வது வரைக்கும் இருந்த பள்ளிக்கூடம்.  ஆனால் நான் எட்டு வரைக்கும் படித்து முடிந்திருந்த காரணத்தால் இங்கு ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக முரட்டுத்தனம் நிரம்பிய கூட்டம். ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மாணவர்களின் எண்ணிக்கை காரணமாக செக்சன் வாரியாக பிரித்து இருந்தார்கள். பாதிக்கு பாதி அருகில் இருந்த கிராமங்களில் இருந்து வந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

படிப்பு, விளையாட்டு என்று ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு மாணவனும் சூரர்களாக இருந்தார்கள். எட்டு வரைக்கும் படித்த பள்ளிக்கூடத்தில் பல விதங்களிலும் நான் ஹீரோவாக இருந்த நான் இங்கு ஜீரோவாக மாறிப் போனேன்.  இத்தனைக்கும் இந்த பள்ளிக்கூடம் என் வீட்டிலிருந்து ஒரு சந்து தாண்டி தான் இருந்தது. நான் கண்டு கொள்ள வேண்டிய அவஸ்யமில்லாமல், இங்கு படித்த எவருடனும் தொடர்பு இல்லாமல் இருந்தது.

இந்த பள்ளிக்கூடத்திற்குள் உள்ளே நுழைந்த போது எல்லாமே வித்யாசமாக பயமாக இருந்தது.


நான் பெற்றுருந்த கல்வியறிவு என்று பார்த்தால் ஒன்பதாம் வகுப்பு சென்ற போது தான் என்னுடைய வண்டவாளம் எனக்குத் தெரியத் தொடங்கியது.  அதாவது ஒன்பதாம் வகுப்புக்குச் சென்ற போது தான் ஆங்கிலம் என்றொரு வஸ்துவை முதன் முதலாக கண்டு கொண்டேன்.  ஆங்கிலத்தில் இலக்கணம் என்று இருக்கிறது. அது தெரிந்தால் தான் ஆங்கிலம் பேச எழுத முடியும் என்பதே இங்கு தான் எனக்குப் புரிந்தது.  

காலம் கடந்து பெற்ற ஞானம். 

ஒன்பதாம் வகுப்ப ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி விட்டுச் செல்வார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்து இருக்கின்றேன். தமிழ் பாடத்தைத் தவிர வேறு எந்த பாடங்களும் மண்டையில் ஏறினபாடில்லை. அறிவியல் போன்ற பாடங்கள் எனக்கு அறியாத விசயங்களாக இருந்தது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் சாதாரண தேர்வுகள் முதல் கால், அரைப் பரிட்சை என்று நடக்கும் எந்த தேர்விலும் நான் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்கள் நூற்றுக்கு 20 என்கிற அளவு தான்.  ரேங்க் அட்டை கொடுக்கும் சமயத்தில் வகுப்பாசிரியர்கள்  திட்டுவார்கள்.  கேட்டுக் கொண்டு அல்லது குட்டு வாங்கிக் கொண்டு நகர்ந்து விடுவதுண்டு.  ஆனால் எங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் என்னைப் போலவே படித்துக் கொண்டு இருந்தாலும் மூத்த அக்கா கல்லூரியில் மிக உயர்நிலை இருந்த போதிலும் அவரின் பேச்சை அறிவுரைகளை நான் கேட்டதே இல்லை. 

பல விதங்களிலும் நட்டம் எனக்குத் தான்.

பத்தாம் வகுப்பில் மொத்த மதிப்பெண்கள் என்ற ரீதியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்த போதிலும் அப்போது வாங்கிய ஆங்கில மதிப்பெண்கள் நூற்றுக்கு 40 என்கிற அளவுக்குத்தான்.  ஆனால் நிச்சயம் என்னுடைய பரிட்சை தாளை திருத்திய புண்ணியவான் ஆசிரியர் தர்மபாஸ் போட்டு நகர்த்திவிட்டு இருக்கக்கூடும்.  பத்தாம் வகுப்பில் பெற்ற குறைவான மதிப்பெண்களின் காரணமாக மற்ற நண்பர்கள் பாலிடெக்னிக் சென்றார்கள். நான் எப்போதும் போல பதினொன்றுக்குள் நுழைந்தேன். இந்த காலகட்டத்தில் கொஞ்சம் சுதாரிப்புத்தனம் இருந்தது.  இந்த இரண்டு வருட காலகட்டத்தில் தான் உண்மையான படிப்பின் அஸ்திவாரமே லேசாக எனக்கு கிடைத்தது என்று சொல்லமுடியும்.  ஆனால் முழுமையாக அல்ல.  

அதற்கும் நானே தான் காரணம்.  

பிராக்டிக்கல் நோட்டு, படம் வரைய வேண்டிய விசயங்களை அக்காவிடம் கொடுத்து விடுவேன்.  ஒவ்வொரு ஆசிரியர்களையும் நன்றாக பழகி வைத்திருந்தேன். அவர்கள் சொல்லும் அவர்களின் தனிப்பட்ட வேலைகளை முடித்துக் கொடுத்து விடுவேன். ஆக நான்கு அறிவியல் பாடங்களுக்கும் வரவேண்டிய ப்ராக்டிகல் மதிப்பெண்கள் சுளையாக வந்து விடும். 

மீதி தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே.  

தொடக்கம் முதல் என் எழுத்து அழகாக இருக்கும். தமிழ்மொழி வகுப்பு எனக்கு பிடித்த காரணத்தால் நிச்சயம் அதிக மதிப்பெண்கள் வந்து விடும். மேலும் ஒன்பது முதல் 12 வரைக்கும் தமிழ் பாடத்திற்கு என்று வந்த ஆசிரியர்கள் இன்றைய இந்த எழுத்துக்கு உரமாக இருந்தவர்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழ் மொழியை ராகமாக, கதையாக, கட்டுரையாக அனுபவித்து நடத்தியவர்கள். கடைசியாக ஆங்கிலப் பாடம்.  எப்போதும் போல தத்தக்காபித்தக்கா என்று கோலம் போட்டு பாஸ் என்கிற நிலையில் பனிரென்டாம் வகுப்பும் தேறியாச்சு. இங்கேயும் தேர்ச்சி என்கிற நிலையே தவிர சிறப்பான மதிப்பெணக்ள் என்கிற நிலையில் அல்ல.  சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?.  

ஆனால் நான் கல்லூரிக்குள் நுழைந்த போது புத்தருக்கு கிடைத்த ஞானோதயம் எனக்கு கிடைத்தது.  கல்லூரியில் உள்ள சூழ்நிலை, சுதந்திரம், ஆசிரியர்கள், அங்கே இருந்த நூலகம் என்று இன்று வரைக்கும் எனக்குள் தீராத ஆச்சரியத்தை உருவாக்கிய கோவில் அது.  உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரிக்குள் ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள்.  ஒவ்வொரு வகுப்புறையின் விசாலம் மற்றும் மொத்த கல்லூரியின் பிரமாண்டம், மற்ற வசதிகளைப் பார்த்து ஆச்சரியப்படக்கூடும்.  மொத்த மூன்று வருடமும் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. பனிரென்டாம் வகுப்பில் எல்லா பிரிவுகளிலும் படித்த நண்பர்கள், இது போக அருகில் இருந்த கிராம பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் என்று ஏறக்குறைய 40 பேர்கள் முதல் வருடத்தில் கல்லூரியில் சேர்ந்தோம். 

இயல்பியல், வேதியியல் தொடங்கி கணக்கு வரைக்கும் எல்லாத்துறைகளிலும் நுழைந்தார்கள்.  நான் மட்டும் எளிதாக இருக்க தாவரவியல் துறையை தேர்ந்தெடுத்துக கொண்டேன்.  கல்லூரிக்குள் நுழைந்த முதல் ஆறு மாதங்களில் முதல் செமஸ்டர் தேர்வு வந்தது.  மொத்த 40 பேர்களில் நான் மட்டும் தான் எல்லா பாடங்களிலும் தேர்வு பெற்று இருந்தேன்.

ஒவ்வொரு துறையிலும் சேர்ந்தவர்கள், என்னை விட பலமடங்கு பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள் என்று அத்தனை பேர்களும் ஒரு பாடம் முதல் நாலைந்து பாடங்கள் வரைக்கு கோடு அடித்து இருந்தார்கள்.  காரணம் ஆங்கிலம் என்பது பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. 

என் வாழ்வில் கல்வி ரீதியாக பெற்ற முதல் பெருமை இதுவே தான்.  இதை கல்லூரி இறுதி வரைக்கும் தக்க வைத்திருந்தேன். கல்லூரி ஆசிரியர்கள் பல நிலைகளிலும் என்னுடன் நட்பு பாராட்டினார்கள்.

காரணம் நான் கல்லூரியில் நுழைந்த முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் மிகுந்த சிரத்தையெடுத்து படிக்கத் தொடங்கினேன். கல்லூரி ஆசிரியர்கள்  சொல்லிக் கொடுத்த விதம், அவர்கள் என்னுடன் பழகிய விதம் என்று என்னுடைய ஆர்வத்திற்கு எல்லா விதங்களிலும் நல்ல முறையில் தீனி போட்டார்கள்.  இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் லெக்சரர் பாடம் நடத்தும் போது என்னுடைய வகுப்பறையில் அப்படியே நோட்ஸ் போல் எழுதுவது மொத்த மாணவர்களில் நான் ஒருவன் மட்டுமே.  பாடம் நடத்தி விட்டு லெக்சரர் வெளியே சென்றதும் எனனுடைய நோட்டை வாங்க மற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.  நான் எவனோ ஒருவன் கையில் கொடுத்து விட்டு மற்றவர்களுடன் ஆட்டம் போட மற்ற துறைகளுக்கு சென்று விடுவேன்.

இதற்கு மேலாக கூண்டுக்குள் அடைத்து வைத்துக் கொண்டு மிரட்டி படிக்க வைக்காமல் இது சார்ந்த புத்தகங்கள் நமது நூலகத்தில் இருக்கிறது என்று கல்லூரியில் இருந்த லெக்சரர்கள் எனக்கு வழிகாட்டிய விதம்.  இதற்கு மேலாக ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று என் மனதில் ஏற்படுத்திக் கொண்ட வைராக்கியம்.  புரிகின்றதோ இல்லையோ பொட்ட மன்ப்பாடமாக உள்ளே ஏற்றிக் கொண்டு, அது மறந்து போனாலும் மீண்டும் மீண்டும் அர்த்தம் புரிந்து கொள்ள டிக்சனரியை வைத்துக் கொண்டு அலைந்து திரிந்தது என்று ஒவ்வொன்றாக இப்போது நினைவுக்கு வந்த போகின்றது.  எனது பள்ளிக்கூட காலகட்டங்களில் விளையாட்டு மைதானம் பக்கம் போனதே இல்லை.  ஆனால் கல்லூரி காலகட்டத்தில் தினந்தோறும் காலை மாலை என்று நான் படித்தது முழுக்க முழுக்க பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தான்.

பல மணி நேரம் தவமாய் தவம் இருந்து இருக்கின்றேன்.  ரயில் நிலைய நடை மேடைகளில் தொடர்ச்சியாக இருட்டு வரும் வரைக்கும் படித்துக் கொண்டே இருந்து இருக்கின்றேன்.  எவர் எவரோ வீட்டில் அறிவுரை சொன்ன போதும் கேட்காமல் அலைந்து திரிந்தவனுக்கு சுய ஆர்வம் வந்த போது அதன் வீர்யம் அதிக அளவுக்கு இருந்தது.

கல்லூரியில் நடனராஜ், வடிவேல் என்ற இரு லெக்சரர்களைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.  இருவரும் வெவ்வேறு துருவங்கள்.  இவர்கள் பாடம் நடத்தும் போது மொத்த வகுப்பறையே நிசப்தமாக இருக்கும்.  குறிப்பாக வடிவேல் கலர் கலர் சாக்பீஸ் ல் படம் வரைந்து பாகம் குறித்து அவர் நடத்தும் விதங்களை வைத்தே அந்த பாடங்களை வீட்டுக்கு வந்து படிக்காமலே நினைவில் இருப்பதை வைத்தே இன்டேனல் தேர்வில் இருபதுக்கு இருபது எடுத்துள்ளேன். 

அடுத்து எனது துறைக்கு ஆன்சிலரி பாடமாக இருந்த வேதியில் பாடம். 

இந்த துறைக்குத் தலைவராக இருந்தவர் பெயர் சீனிவாசன் என்றொரு ஆச்சரிய மனிதர்.  பனிரெண்டு வரைக்கும் எனக்கு வேதியில் பாடம் என்றாலே பேதி போய்விடும்.  கணக்கு என்பதற்கு பயந்து தான் சயின்ஸ் குரூப் எடுத்தேன்.  பனிரெண்டாம் வகுப்பில் நான் எடுத்திருந்த சயின்ஸ் குரூப்பில் இருந்த வேதியியல் பாட சமன்பாடுகள் என்னை சல்லடையாக துளைத்து எடுத்தது.  ஆனால் கல்லூரியில் சீனிவாசன் வேதியியல் பாடம் நடத்தும் போது இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்க மாட்டாரா? என்று ஆர்வமாக இருக்கும்.  இவர் நடத்தும் பாடங்கள் ஒருவருக்கு புரியவில்லை என்றால் அவனுக்கு மனக்கோளாறு என்று அர்த்தம். அந்த அளவுக்கு பொறுமையாக எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் அலுக்காமல் சொல்லி புரிய வைத்துக் கொண்டேயிருப்பார்.

ஆனால் இது போன்ற சுதந்திரங்கள் 12 வரைக்கும் எந்த ஆசிரியர்களிடத்திலும் நான் பார்த்தது இல்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே ஓப்பித்து விட்டு செல்பவர்களாகத்தான் இருந்து இருக்கிறார்கள்.  அவர்களின் தரம் அனைத்தும் நான் கல்லூரி வந்த போது தான் எனக்குப் புரிந்தது. 

தரமானவர்கள் திறமையானவர்கள் ஆசிரியர்களாக இல்லாத போது கல்வி மட்டும் சமச்சீராக இருந்து என்ன பலன்? ஆனால் இப்போது போல தொடக்கக் கல்வியில் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் அப்போது இல்லை. கட்டாயம் டியூசனுக்க வந்தே ஆக வேண்டும் என்று எந்த கட்டாயப் படுத்தியவர்களும் இல்லை.  ஆசிரியர்களாக இருக்க வேண்டியவர்கள் காமாந்த நபர்களாகவும் இருந்ததில்லை. .  


பனிரெண்டு வகுப்பு வரைக்கும் நான் பார்த்த ஆசிரியர்களிடத்தில் எத்தனையோ குறைபாடுகள் இருந்த போதிலும் எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் ஒழுக்கமான ஆசிரியர்களாக இருந்தார்கள். ஒரு வேளை அன்று அவர்களின் ஓழுக்க விருப்பங்கள், இது போன்று என் மேல் திணித்த பல நிர்ப்பந்தங்கள் இன்று வரைக்கும் எனக்கு பலவிதங்களிலும் உதவிக் கொண்டு இருக்கிறது. இன்றைய என் வாழ்க்கையை இயல்பான வாழ்க்கையாக வாழ் கற்றுக் கொடுத்து இருக்கிறது.  ஒவ்வொரு முறையும் போராட்டத்தில் இருந்து மீண்டும் மீண்டும் எழுந்து வந்து வாழக் கற்றுக் கொடுத்து இருக்குமோ என்ற நினைத்துக் கொள்வதுண்டு. 

ஆசிரியர்களின் முக்கிய தரமே மொத்த மாணவர்களுக்கும் முன்னூதாரணமாக இருப்பது தானே? இன்றைய காலகட்டத்தில் உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களை பட்டியலிட்டுப் பாருங்க.  இதைப் போலவே இப்போது உங்கள் குழந்தைகளின் பள்ளியில், உறவினர்களின் குடும்பத்தில்,  மற்ற தம்பி தங்கைகள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களைப் பற்றி நினைத்துப் பாருங்க. 

வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்று புரியக்கூடும்,

16 comments:

Rverie said...

ஆசிரியர்கள் தங்கள் அறிவு வளர்ப்பது அபூர்வம் தான்...
உங்கள் இளமையின் ஒரு சில பக்கங்களை பங்கிட்டதுக்கு நன்றி..

Thekkikattan|தெகா said...

முண்டாசு, சும்மா சொல்லக் கூடாது உருண்டு பொரண்டுதான்யா படிச்சிருக்கீரு! ஆசிரியர்கள் நிச்சயமாக தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிற பொறுப்புணர்ந்து கற்பித்தலில் புதிய புதிய அணுகுமுறைகளை, படைப்பாற்றலை புகுத்துவது அவசியம். உங்களுக்கு கசப்பான வேதியல் பாடமே இனிப்பாக்கிய ஆசிரியர்கள் போன்று நமக்கு இன்னும் நிறைய பேர் வேண்டும்.

தொடக்க/நடுநிலை பள்ளி ரேஞ்சுகளில் நல்ல ஆங்கில/கணக்கு/அறிவியல்/தாய்மொழி அடிப்படை கல்வி ஆழ விதைக்க அதனில் புலமை பெற்ற அறிவார்ந்த ஆசிரியர்கள் வேண்டும்... வேண்டும்... வேண்டும்.

Chitra said...

இன்றைய என் வாழ்க்கையை இயல்பான வாழ்க்கையாக வாழ் கற்றுக் கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு முறையும் போராட்டத்தில் இருந்து மீண்டும் மீண்டும் எழுந்து வந்து வாழக் கற்றுக் கொடுத்து இருக்குமோ என்ற நினைத்துக் கொள்வதுண்டு.


..... இதுதான் வாழ்க்கைக்கு தேவையான உண்மையான பாடங்களில் ஒன்று. இப்படி நல்ல பாடங்களை கற்று கொடுக்காதவரை, எல்லாமே ஏட்டு சுரைக்காய்தான்.

http://thavaru.blogspot.com/ said...

ஹா..ஹா..அன்பின் ஜோதிஜி ஆசிரியர்களோட தரமா..அதெல்லாம் விரல் விட்டு எண்ணிபுடலாங்க..
சிலரை தவிர பெரும்பாலும் சம்பளத்த வட்டிக்கு விட்டு
சம்பாதிக்கிறார்கள்..

Anonymous said...

//ஹா..ஹா..அன்பின் ஜோதிஜி ஆசிரியர்களோட தரமா..அதெல்லாம் விரல் விட்டு எண்ணிபுடலாங்க..
சிலரை தவிர பெரும்பாலும் சம்பளத்த வட்டிக்கு விட்டு
சம்பாதிக்கிறார்கள்..//

UNMAI...UNMAI...UNMAI...

சத்ரியன் said...

//சுய ஆர்வம் வந்த போது அதன் வீர்யம் அதிக அளவுக்கு இருந்தது.//

இது தான் ”ஞானம்” என்பது ஜோதிஜி.

bandhu said...

கிட்ட தட்ட எனக்கு நேர்ந்ததும் இதே போலத்தான்! எனக்கு மட்டும் தான் என்று இருந்தேன். அப்படி இல்லை. இது ஒரு சிஸ்டமிக் ப்ரோப்ளம் போல! கல்லூரி படிப்பு அமைக்கப்பெற்றிருந்தால் நன்றாக படித்திருக்கக்கூடிய எத்தனையோ பேர் பள்ளிப்படிப்புடன் நிறுத்தியிருப்பார்கள். கொடுமை!

shanmugavel said...

//தரமானவர்கள் திறமையானவர்கள் ஆசிரியர்களாக இல்லாத போது கல்வி மட்டும் சமச்சீராக இருந்து என்ன பலன்?//
முக்கியமான கேள்வி.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

தருமி said...

கல்லூரி ஆசிரியர்களுக்கு வேலை நேரம் குறைவு; மாணவர்கள் வளர்ந்தவர்கள்; மாணவர் எண்ணிக்கை மிகக் குறைச்சல்;generation gap அதிகம் இருக்காது; திறமையை மதிக்கும் குணம் கல்லூரி மாணவர்களிடம் அதிகம்; (அதற்கு எதிர்மறையாக, மட்டமான ஆசிரியர்கள் பாடும் கொஞ்சம் கஷ்டம்தான்).--இதெல்லாம் கல்லூரி ஆசிரியர்களுக்கான plus points.

இதெல்லாமே பள்ளி ஆசிரியர்களுக்கு மிகக் குறைவு; இதனால் கற்பிக்கும் திறமை மட்டுப் படுத்தப் படுகிறது. பள்ளி ஆசிரியர்களில் வெகு சிலரும், கல்லூரிகளில் பல ஆசிரியர்களும் நம் மனத்தைக் கவருவது இதற்கான காரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஆனால் இப்போது மத்திய அரசின் மூலம் செயலாக்கப்படும் "அனைவருக்கும் கல்வித் திட்டம்” (S.S.A.) பள்ளி ஆசிரியர்களை நன்கு வேலை வாங்குகிறது. ஆனால் ஆசிரியர் பள்ளிகள் மிகவும் தரமற்றவை என்பதும் என் கருத்து. இதனால் வெளிவரும் ஆசிரியர்களிடம் ‘முனைப்பு’ மிகக் குறைவு.

Indian said...

முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்.
தரமற்ற பாடத் திட்டமும், தரமில்லாத ஆசிரியர்களும் இரண்டு வெவ்வேறான பிரச்சினைகள். என்னுடைய பார்வையில் இரண்டுமே தீர்க்கப்பட வேண்டியவைதான். இதைக்காட்டி அதையும், அதைக்காட்டி இதற்கான தீர்வையும் தள்ளிப் போடவேண்டாமே. தீர்வுக்கான தொடக்கப்புள்ளி எங்கோ ஓரிடத்திலே அமையட்டும்.

In IT parlance, there are multiple issues at hand. Everything cannot be resolved on single day. Track all the issues in a risk tracker. Prioritize them based on impact and frequency of occurrence. Identify mitigation plan and contingency plan of all these issues. Identify action owner for implementing corrective and preventive actions. Have *periodic review* to add new risks, assess the corrective action and preventive actions taken so far on these identifed risks and close unwanted risks.

//ஆனால் ஆசிரியர் பள்ளிகள் மிகவும் தரமற்றவை என்பதும் என் கருத்து. இதனால் வெளிவரும் ஆசிரியர்களிடம் ‘முனைப்பு’ மிகக் குறைவு.//

இதனை உணர்ந்ததாலேயே விப்ரோ நிறுவனர் திரு. அஸீம் ப்ரேம்ஜி அவர்களின் *அஸீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம்* கல்வியியல் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜோதிஜி said...

Rverie said...

நன்றி. உண்மை தான். நான் படித்த பள்ளியில் தான் என் அண்ணன் குழந்தைகளும் படிக்கிறார்கள். பல ஆசிரியர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொன்னது போல் அவர்களின் அறிவு வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. குறிப்பாக வெளி சமூகம் குறித்து அவர்களுக்கு எந்த புரிந்துணர்வும் இல்லை என்கிற அளவுக்குத் தான் இருக்கிறது.

காட்டுப்பயபுள்ளக்கு நன்றி. வேறென்ன எழுத? இரண்டு பேரின் பயணமும் வந்த பாதையும் ஒன்று தானே.

நன்றி சித்ரா. ஆனால் இந்த ஏட்டுச்சுரைக்கும், மனப்பாட அறிவுக்கும் தானே இப்போது முக்கியமாக இருக்கிறது.

தவறு நீங்கள் சொல்வது ஏறக்குறைய உண்மை தான். பல ஆசிரியர்கள் பல சைடு தொழிலில் தீவிரமாக இருந்து கொண்டு ஆசிரியர் தொழிலை டைம்பாஸ் போலவே வைத்து இருக்கிறார்கள். மீதி டியுஷனுக்கு வந்து விடு என்கிறார்கள். திருப்பூரில் இது மிக அதிகம். கிராமப்புறங்களில் கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு.

ஜோதிஜி said...

வருக சத்ரியன். கண் கெட்ட பிறகு தான் சூர்ய நமஸ்காரம். இன்று வரைக்கும் இப்படித்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது.

பந்து

பலருக்கும் இப்படித்தான். என்னவொன்று வெளியில் எவரும் பகிர்ந்து கொள்வதில்லை.

வருக சண்முகவேல் மற்றும் ரத்னவேல் அய்யா.

வருக தருமி அய்யா. நீங்கள் சொல்வதும் முற்றிலும் உண்மை. ஆனால் 12 வரைக்கும் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களை நாம் சொன்னால் கேட்க வேண்டும். எதிர்த்து பேசக்கூடாது என்கிற நோக்கிலேயே பார்க்கிறார்கள். இது தான் பிரச்சனைகளின் ஆணி வேர். உங்களின் மிக நல்ல விமர்சனப் பார்வைக்கு என் வணக்கம்.

இந்தியன் நீங்கள் அஸிம் ப்ரேம்ஜி பல்கலைகழகத்தைப் பற்றி மேலும் விபரங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். எனக்கு இது புதிதான் தகவல். நன்றி.

Indian said...

//இந்தியன் நீங்கள் அஸிம் ப்ரேம்ஜி பல்கலைகழகத்தைப் பற்றி மேலும் விபரங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். எனக்கு இது புதிதான் தகவல். //

பார்க்க

http://www.azimpremjiuniversity.edu.in/mission-philosophy.html

Two key focus areas of the University are to:

* Prepare a large number of committed education and development professionals who can significantly contribute to meeting the needs of the country.

* Build new knowledge in the areas of education and development through establishing strong links between theory and practice.

Mission Statement:

Azim Premji University will create outstanding and effective programmes of learning, research and advocacy in education and allied fields. The University will, in the first ten years:

* Establish programmes in education that create teachers, researchers, and administrators of great competence, integrity and social commitment.

* Expand the frontiers of knowledge in education and development through research and serve as a national resource centre.

* Create knowledge resources for continuing education that will improve the quality of existing education systems in India.

* Contribute to change in policy and practice in the Indian education sector through advocacy and public communication.

Indian said...

அங்கே கண்ட இன்னொரு வலைத்தளம்.

http://www.teachersofindia.org/index.php?module=session

Indian said...

இன்னொன்றும் தோன்றியது. அரசு இன்றுள்ள பள்ளியாசிரியர்களின் போதாமையை உணர்ந்தால் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர்களை கொண்ட மென்டரிங் குழுக்களை ஏற்படுத்தி ஆசிரியர்களை வழிப்படுத்தலாம்.