Tuesday, November 02, 2010

கிராமத்து தீபாவளி

பண்டிகைகள் ஒவ்வொன்றுக்கும் ஓராயிரம் அர்த்தங்கள்.  எந்த மதமாகயிருந்தாலும் கொண்டாடப்படும் விசேடங்கள் பல உறவுச் சங்கிலிகளை இணைத்து வைத்துக் கொண்டு இருந்தது.  ஆனால் இப்போது இது போன்ற நாட்கள் நுகர்வோர் கலாச்சாரத்தின் விளைவாக உருவாகும் விலைவாசிக்கு ஒரு காரணமாக இருக்கிறது. எப்போதும் மாவட்டத் தலைநகரங்களில் எந்த பண்டிகைகளுக்கும் உண்மையான முக்கியத்துவம் கிடைப்பதில்லை. தலையா? இல்லை கடல் அலையா? என்று சொல்லும் தி நகர் சாலைகள் முதல் சராசரி நகர்புறங்கள் வரைக்கும் மக்களுக்கு தேவையோ தேவையில்லையோ உற்சாகமாய் தங்கள் வேட்டையை தொடங்குவது போலவே மாறிவிடுகிறார்கள்.

தினந்தோறும் நெரிசலுடன் வாழும் நகர்புற மக்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பண்டிகை தினமென்பது மற்றொருமொரு விடுமுறை தினம். ஆனால் நான் வாழ்ந்த கிராமத்து பண்டிகை காலங்களை இப்போது நினைத்துப் பார்க்கும் போது இயல்பான மனித பழக்கவழக்கங்கள் காலமாற்றத்தில் மாறிப் போயிருக்கின்றது என்பதை உணரமுடிகின்றது.

விவசாய வேலைகளை அடிப்படையாகக் கொண்ட கிராமத்து வாழ்க்கையும், அந்த கிராம மக்களின் விளைச்சல் பொருட்களுக்கு ஆதார சந்தையாய் விளங்கும் அருகே உள்ள சிறிய நகர்ப்பகுதிகளுக்கும் இந்த பண்டிகைகள் மிக முக்கியமானது. கிராமத்து தமிழர்களின் வாழ்க்கையில் பொங்கல் பண்டிக்கைக்கு உள்ள முக்கியத்துவம் போல தீபாவளிக்கும் முக்கியத்துவம் உண்டு.  

சேமித்த பணத்தை செலவழிக்க வைத்தது.  உறவுகளை தேடிப்போக வைத்தது. உணர்வுகளை பறிமாற வாய்ப்புகளை உருவாக்கியது. வாக்குவாதம், விவாதம், முட்டல், மோதல் என்ற ஆயிரம் பிரச்சனைகள் உறவுகளுக்குள் இருந்தாலும் எல்லாநிலையிலும் விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய அவஸ்யத்தை மறைமுகமாக உணர்த்த வைப்பதில் இந்த பண்டிகைகள் முக்கிய காரணமாக இருந்தது. 

நான் வாழ்ந்த கிராமத்து பள்ளியில் விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லீம் நண்பர்கள் இருந்தார்கள்.  கிறிஸ்துவம் என்று பார்த்தால் பணிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஒற்றை இலக்கத்தில் இருந்தார்கள். கல்லூரிக்கு வந்த போது தான் இந்த மத மாச்சரியங்களின் வித்யாசங்களே தெரிய ஆரம்பித்தது. ஊருக்குள் இருந்த சின்ன‘ பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் என்று இரண்டு தொழுகைக்கான இடங்களும் சுற்றிலும் உள்ள இஸ்லாமிய மக்களும் இயல்பாக வாழ்ந்த காலம் 

இன்று அத்தனையும் மாறிவிட்டது. ஊருக்குள் இருந்த சில கிறிஸ்துவ குடும்பங்களும் பணி மாறுதல் காரணமாக வந்த அரசாங்க ஊழியர்களாக இருந்தனர்.  ஒவ்வொரு ஞாயிறு அன்று பக்கத்தில உள்ள காரைக்குடிக்கு தான் சென்று கொண்டுருந்தனர். மற்றபடி பழக்கவழக்கங்கள், பார்வைகளில் உள்ள வித்யாசங்கள் எதையும் நான் பார்த்தது இல்லை.

என்னுடைய பள்ளி நண்பர்கள் அணைவருக்கும் ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள அர்த்தங்கள் தெரியாமல் எப்போதும் போல கூடுதல் விடுமுறை தினம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தது. 


வீட்டில் பண்டிக்கைக்கு தேவைப்படும் பலகார வகைகளின் தயாரிப்புகள் மும்முரமாய் நடந்து கொண்டுருக்கும்.  ஒவ்வொரு தீபாவளிக்கு மூன்று நாளைக்கு முன்பே முக்கிய எண்ணெய் பலகாரங்கள் தவிர்த்து அத்தனையும் ஒவ்வொரு தூக்கு வாளியில் பத்திரப்படுத்தப்பட்டு இருக்கும். தொட அனுமதி கிடைக்காது.  "சாமிக்கு படைத்த பிறகே சாப்பிடவேண்டும்" என்ற வாக்கியத்தை கேட்டு விட்டு குறுக்கு வழி யோசித்து சமயம் பார்த்து காத்திருப்பது உண்டு. குறிப்பிட்ட அறையில் ஆட்கள் போகாத நேரம் பார்த்து டவுசர் பைக்குள் அடைத்துக் கொண்டு சிட்டாக பறந்து விடுவதுண்டு. யாரும் பார்க்காத இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்து தின்று முடிக்கும் போது எதையோ வென்ற திருப்தியாய் இருக்கும்.,

மொத்தமாக துவைக்க போட்டுருக்கும் துணிகளில் எண்ணெய் வாடை பார்த்து குதறிப்போட்ட எலிகளை வைத்தே நம் திருட்டுத் தனம் வெளியே வரும். தீபாவளி நாளில் காலை ஐந்து மணிக்கு அப்பா போட்ட சப்தத்தில் அலறியடித்துக் கொண்டு வரிசையாக நிற்க எண்ணெய் அபிஷேகம் நடந்து கோவணத்துடன் குளித்த வெந்நீர் குளியல் கண்களில் உள்ள பாதி தூக்கத்தை போக்கியிருக்கும். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை என்றாலும் சாமி படத்தின் முன் படையலுடன் வைக்கப்பட்ட புதிய பள்ளிச்சீருடைகளை அணிந்த பிறகு தான் அன்றைய தினத்தின் உற்சாகம் தொடங்கும். 

குடும்பத்தினரை பொறுத்தவரையில் காலையில் சாமி கும்பிட்டு காலைச் சாப்பாடு முடிந்தவுடன் பாதி தீபாவளி முடிந்து விடும். திருடித் தின்ற அத்தனை பலகாரங்களும் இலையில் இருந்தாலும் வெளியே ஒலித்துக் கொண்டுருக்கும் விடாத வெடிச்சத்தங்கள் இருப்பு கொள்ளாமல் தவிக்க வைக்கும்.  வாங்கி வைத்துள்ள வெடிக்கட்டு இரவு தான் பிரித்துக் கொடுப்பார்கள். புஸ்வாணம், கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், பாம்பு மாத்திரை என்று ஆபத்தில்லாத மொத்த வெடிகளும் அப்போது தான் பார்வைக்கு வரும். அன்றைய தினத்தின் பொழுது மாறி அடுத்த நாள் கறிச்சாப்பாடு முடிந்ததும் தீபாவளியும் காணாமல் போய்விடும்.  எப்போதும் போல பள்ளிச்சீருடை கழட்டப்பட்டு பத்திரப்படுத்தப்படும்.

நம்முடைய விருப்பங்கள் எதுகுறித்தும் தெரிந்து கொள்ளாமலேயே எத்தனையோ பண்டிகைகள் கடந்து போய்விட்டது. ஒவ்வொரு விசேடத்தின் போதும் வீட்டுக்கு வந்து போயக் கொண்டுருக்கும் ஒவ்வொருவருக்கும் படித்துக் கொண்டுருக்கும் கல்வியைப் பற்றி ஒப்பிக்க வேண்டிய சூழ்நிலை பலவற்றையும் உணர்த்திக் காட்டியது.  ஆனால் இன்று அப்பாவாய் வாழும் போது வருடத்திற்கு இரண்டு முறை இந்த தீபாவளி வரக்கூடாதா?  என்று கேட்ட குழந்தைகளின் கேள்விகள் தான் யோசிக்க வைத்துக் கொண்டுருக்கிறது. 


வீட்டில் குழந்தைகள் மூவருக்கும் மூன்று பாதைகள்.  .  ஒருவர் என்னைப் போல ஆடைகளில் பெரிதான ஆர்வம் இல்லாதவர்.  ஆனால் மற்ற இருவரும் ஆள் உயர கண்ணாடி முன்னால்  நின்று கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆர்வத்தை ஒளிந்து நின்று பார்க்கும் போது சிரிப்பாய் வருகின்றது.  அதிலும் கடைக்குட்டி எல்லாவிசயத்திலும் கரை தேர்ந்தவர்.  கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து தன்னுடைய விண்ணப்பத்தை எடுத்து வைக்கும் போதே அது உறுதிப்படுத்தப்பட்டதாகவே மாறிவிடும். இவரிடமிருந்து மீள முடியவில்லை அல்லது இயல்பாகவே ஏமாந்து விடுவது போல் நடித்து விடுகின்றேன்.


ஆடைகள் எடுக்க துணிக்கடைக்குள் நுழைந்து நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்த போது தனக்குத் தேவையான நாகரிக உடைகளை கொண்டு வந்து காட்டும் புத்திசாலித்தனத்தை என்ன சொல்வது?  மானத்திற்கான உடைகள் இன்று மனதுக்கு பிடித்து உடைகள் என்று மாறிவிட்டது. குழந்தைகளின் ஒவ்வொரு ஆசைகளுக்குப் பின்னாலும் ஒவ்வொரு ஊடக விளம்பரத்தின் தாக்கம் அதிகமாகவே இருப்பதை உணர முடிகின்றது.

இன்றைய தொலைக்காட்சி இல்லாத கிராமத்து மக்களின் வாழ்க்கையில் பேசிப் பழக நிறைய நேரம் இருந்தது.  ஆசைகாட்டும் ஊடக விளம்பர மோகம் இல்லை. எவருக்கும் தகுதிக்கு மீறிய ஆசைகள் இல்லாத காரணத்தால் தன்னுடைய வருமானத்தை உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையே இன்று மாறியுள்ளது. காலமாற்றமும், விஞ்ஞான வளர்ச்சிகளும் விசேடங்களை தந்துள்ளதைப் போலவே பல விபரீதங்களையும் தந்துள்ளது.

வருமானம் இல்லாத போதும் கூட வட்டிக்கு வாங்கி செலவழிக்கும் ஆசைகள் இல்லாமல் ஒவ்வொரு மனிதர்களும் இயல்பான பழக்கத்தில் தனது தகுதியை உணர்ந்து வாழ்ந்து கொண்டுருந்த சூழ்நிலையும் மாறிவிட்டது.

கடன் வாங்கியாவது தங்களது கௌரவத்தை நிலைநாட்டும் பண்டிகைகளின் முழுமையான அர்த்தமும் இன்று வேறு விதமாக தெரிகின்றது. 

எண்ணெய் பார்க்காத தலைகளும், காலை குளியல் மறந்து, உணவுகளை தவிர்த்து ஒவ்வொரு மனிதனும் எந்திரமாகவே மாறிப் போன உலகில் தற்போதைய பண்டிகைகள் என்பது நுகர்வோர் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக தெரிகின்றது. 


நமக்கு எது தேவையானது என்பதைவிட " மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் " என்பதாக ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் மாறியுள்ளது.  தற்போதைய பண்டிகைகள் பணம் இருப்பவர்களுக்கு ஓய்வு நாள்.  இல்லாதவர்களுக்கு ஆசைகளை வளர்க்கும் நாள்.

நண்பர்கள் அணைவருக்கும் தீப ஓளி திருநாள் வாழ்த்துகள்.

29 comments:

தமிழ் உதயம் said...

வாழ்க்கையில், பண்டிகையை கடப்பதும் ஒரு போராட்டம் தான்/
ஆனா அத நாம் சந்தோஷமாகவே ஏற்று கொள்ளலாம்.

துளசி கோபால் said...

//பணம் இருப்பவர்களுக்கு ஓய்வு நாள். இல்லாதவர்களுக்கு ஆசைகளை வளர்க்கும் நாள்.//

ரொம்பச் சரி..

ஊடகம் படுத்தும் பாடு.

. இதனால் குற்றங்கள் அதிகரிக்கும். பேராசைகள் இன்னும் ஓங்கி வளரும்.

அடுத்தவன் நம்மைக் குறைச்சு மதிப்பிட விட்டுறமுடியுமா? நான் பணக்காரன்னு காட்டிக்கிட்டே ஆகணும் என்ற நிர்பந்தம்.



ஏழைகளே வாழ முடியாத ஏழை இந்தியா. தீபா 'வலி'கள் வருசாவருசம் வந்து போகுது.

உங்களுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்து(க்)கள்.

பின்னோக்கி said...

ஜோதிஜி. பண்டிகைகள் கொண்டாடும் போது குறிப்பாக தீபாவளி கொண்டாடும் போது வெடிக்காத பட்டாசுகளைச் சேகரிக்க ஏழைச்சிறுவர்கள் வீதிகளில் வரும்போது மனம் வருந்தும்.

Chitra said...

நமக்கு எது தேவையானது என்பதைவிட " மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் " என்பதாக ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் மாறியுள்ளது. தற்போதைய பண்டிகைகள் பணம் இருப்பவர்களுக்கு ஓய்வு நாள். இல்லாதவர்களுக்கு ஆசைகளை வளர்க்கும் நாள்.


.......பகட்டுக்காக திருவிழாக்களை கொண்டாட வேண்டாம் என்பதை அருமையாக சொல்லி இருக்கீங்க.... சிறந்த கருத்தும் - பதிவும்!!!

Avargal Unmaigal said...

"பணம் இருப்பவர்களுக்கு எல்லா நாளும் திருவிழா நாள்தான்
பணம் இல்லாதவர்களுக்கு எல்லா நாளும் சாதாரண நாள்தான்"

உங்கள் பதிவு எனது பழைய நாள்களை ஞாபகபடுத்தின. நன்றி, உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பதினர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்

தாராபுரத்தான் said...

//நமக்கு எது தேவையானது என்பதைவிட " மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் " என்பதாக ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் மாறியுள்ளது. தற்போதைய பண்டிகைகள் பணம் இருப்பவர்களுக்கு ஓய்வு நாள்.
இல்லாதவர்களுக்கு ஆசைகளை வளர்க்கும்
நாள்.//

தாராபுரத்தான் said...

வைர வரிகள்..

மொக்கராசா said...

ஓட்டமும் நடையுமாக,சொந்தங்களின் வாழ்த்து,நண்பர்களின் ஊற்சாகம்,பக்கத்து வீட்டு காரர்களின் நட்பு என்று இருந்த 'தீபாவளி ' இன்று

T.V யின் சிறப்பு சினிமா நிகழ்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகிறார்கள். 5 இல்ல 6 மணி நேரம் T.V யின் முன்பு உட்கார்ந்து தீபாவளி தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள்.


btw, இந்த தீபாவளி க்கு , சிவாஜி படம், making of எந்திரன்,ரஜினி பேட்டி, ஒரு நடிகையின் தீபாவளி வாழ்த்து, ஒரு நடிகையின் தீபாவளி கொண்டாட்டம் அனைத்தையும் பார்த்து மகிழுங்கள் நண்பர்களே


இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்.

Ravichandran Somu said...

தீபாவளி நினைவலைகள் அருமை...

// "சாமிக்கு படைத்த பிறகே சாப்பிடவேண்டும்" என்ற வாக்கியத்தை கேட்டு விட்டு குறுக்கு வழி யோசித்து சமயம் பார்த்து காத்திருப்பது உண்டு. குறிப்பிட்ட அறையில் ஆட்கள் போகாத நேரம் பார்த்து டவுசர் பைக்குள் அடைத்துக் கொண்டு சிட்டாக பறந்து விடுவதுண்டு.//

இப்படி திருடி சாப்பிடுறதல கிடைக்கிற இன்பம் வேறெதில்?

//நமக்கு எது தேவையானது என்பதைவிட " மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் " என்பதாக ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் மாறியுள்ளது. தற்போதைய பண்டிகைகள் பணம் இருப்பவர்களுக்கு ஓய்வு நாள். இல்லாதவர்களுக்கு ஆசைகளை வளர்க்கும் நாள்.//

உண்மை!

தீபாவளி வாழ்த்துகள்!

karthikkumar said...

பணம் இருப்பவர்களுக்கு எல்லா நாளும் திருவிழா நாள்தான்
பணம் இல்லாதவர்களுக்கு எல்லா நாளும் சாதாரண நாள்தான்"////
உண்மை சார் தீபாவளி வாழ்த்துக்கள்

http://rajavani.blogspot.com/ said...

நமக்கு எது தேவையானது என்பதைவிட " மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் "

நச் ...அன்பின் ஜோதிஜி.

Bibiliobibuli said...

ஜோதிஜி,

முதலில் சுரேஷின் A9 Memories, ஈழத்தின் பழைய நினைவுகளுக்கு இணைப்பு கொடுத்ததிற்கு நன்றி. வருத்தத்திலும் ஓர் சிறிய சந்தோசம் மனதில் துளிர்க்கிறது.

நினைவுகளால் பின்னோக்கிச் சிறுபிராயத்திற்கு சென்று சிறுவனாய் மாறி, அதிலிருந்து மீண்டு பின்னர் ஓர் அப்பாவாக குழந்தைகளின் விருப்பங்களை சேட்டைகளை ரசித்து... இனிமை!!!! (நான் கூட நினைப்பதுண்டு ஒருமுறையாவது அந்த பள்ளிப்பிரயாத்துக்கு திரும்பச்சென்று ஈழத்தில் ஒருமுறையாவது வாழமாட்டேனா என்று)

கூடவே பண்டிகைகள் பற்றிய தற்கால நிலைமையையும் சொல்லி இருக்கிறீர்கள். அந்த குழந்தைதொழிலாளர்களின் படம் தான் மனதை ஏதோ செய்கிறது.

அது சரி எப்போ, எத்தனையாம் திகதி தீபாவளி, சொல்லவேயில்லை.!!!!

இளங்கோ said...

//தற்போதைய பண்டிகைகள் பணம் இருப்பவர்களுக்கு ஓய்வு நாள். இல்லாதவர்களுக்கு ஆசைகளை வளர்க்கும் நாள்.//
Its True.

Unknown said...

ஒரு காலத்தில் எங்கள் ஒட்டுமொத்த கிராமமும் பெரியம்மையால் பாதிக்கப்பட இறந்தவர்களை அடக்கம் செய்யகூட ஆளில்லாமல் போயிருக்கிறது . அப்போது தீபாவளி நேரம், கிராமம் மொத்தமும் இனி தீபாவளி கொண்டாடுவதில்லை என முடிவு செய்தனர். காலபோக்கில் எல்லாம் மாறினாலும் இன்றுவரைக்கும் எங்கள் வீட்டில் தீபாவளி கிடையாது ...

'பரிவை' சே.குமார் said...

//செலவழிக்கும் ஆசைகள் இல்லாமல் ஒவ்வொரு மனிதர்களும் இயல்பான பழக்கத்தில் தனது தகுதியை உணர்ந்து வாழ்ந்து கொண்டுருந்த சூழ்நிலையும் மாறிவிட்டது.//

உண்மைதான்... இன்றைய கால கட்டத்தில் எல்லாம் மாறியாச்சு...
நல்ல பகிர்வு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் natpukkum என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

எஸ் கே, குமார், இளங்கோ, கார்த்திக் குமார், தீபாவளி வாழ்த்துகள்.

செந்தில் பக்கத்து கிராமத்தில் செவ்வாய் என்ற ஒரு விசேடத்தை தவிர வேறு எந்த ஒரு பண்டிகைகளும் கொண்டாட மாட்டார்கள். உங்கள் வார்த்தைகளை படித்தவுடன் அது தான் நினைவுக்கு வந்தது.

உண்மைதான் ரவி. இப்போது கொண்டாடும் பண்டிகைகள் வெறுமையாகத்தான் இருக்கிறது. அவசரத்தில் ஊருக்குச் சென்று வரக்கூட சரியான நேரம் அமைய மாட்டேன் என்கிறது.

உண்மைதானே தவறு. உங்கள் தீபாவளி வாழ்த்துகள்.

மொக்கராசா, நீங்கள் எழுதியுள்ளதை எழுதினேன். நீளம் கருதி எடுத்துவிட்டேன். சிறப்பான பார்வை.. தீபாவளி வாழ்த்துகள் நண்பா.

ஜோதிஜி said...

ரதி, ஹேமா சொன்னபோது தான் புரிந்தது. ஆகா புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இந்த பண்டிகையை தெரிவிக்க வேண்டும் என்று. காரணம் எந்த தேதி என்று தெரியாமல் இயல்பான மறந்து போன ஒன்றாகி விட்டது. தேடும் குறி சொல்லில் இதன் காரணமாகவே நவம் 5 2010 என்று சேர்த்தேன்.

நன்றி தாராபுரத்தான் அய்யா. உங்கள் குடும்பத்துக்கு தேவியர் இல்லத்தின் தீபாவளி வாழ்த்துகள்.

தமிழ்உதயம் தெளிவான விமர்சனம். கடந்து வருவதில் தான் நம்முடைய வெற்றியும். தீபாவளி வாழ்த்துகள்.

அவர்கள் உண்மைகள்..... நன்றி. தீபாவளி வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

பின்னோக்கி, சிறு வயதில் இது போன்று வெளியே சென்று சேகரிகத்த வெடிப் பொருட்கள் இப்போது நினைவுக்கு வருகிறது. ஆனால் வாழ்க்கை முழுக்க இது போன்று சேகரித்து கொண்டாடும் வாழ்க்கை பெற்ற குழந்தைகளை நினைக்கும் போது தான் நீங்கள் வருந்துவது போல உறுத்தும்.

துளசி கோபால் உண்மையான வாழ்க்கையின் வசதிகள் என்பதை விட தங்களுடைய தகுதிக்கு என்று மக்கள் பரபரக்கும் வாழ்க்கையைப் பார்க்கும் போது தான் ஆச்சரியமாக இருக்குது. தலைவருக்கும் உங்களுக்கும் தேவியர் இல்லத்தின் தீபாவளி வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

சித்ரா நீங்கள் கொண்டாடும் உயிர் மீட்டல் நினைவு திருநாள் போலவே இந்துக்களில் உயிர் போய் உயிர் வரும் விழாக்களாக இந்த பண்டிகைகள் இப்போது மாறிக் கொண்டு வருகிறது. நன்றிங்க.

vasu balaji said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் ஜோதிஜி

ப.கந்தசாமி said...

கிராமத்து வாழ்க்கையை அப்படியே படம் பிடுத்து காட்டியுள்ளீர்கள். நன்றாக இருக்கிறது.

ஜோதிஜி said...

வானம்பாடிகள் கந்தசாமி உங்கள் குடும்பததினருக்கு தீபாவளி வாழ்த்துகள்.

எஸ்.கே said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Thomas Ruban said...

உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் சார்.

Thenammai Lakshmanan said...

அருமை ஜோதிஜி.. முப்பெரும் தேவியரையும் ஒருநாள் சந்திக்க வேண்டும்.. மூத்த குழந்தை பெரும்பாலும் அப்பாவின் பிரதிபலிப்புத்தான்..:))

ஹேமா said...

தீபஒளி நினைவுநாளை நினைவு படுத்திய உங்களுக்கு என் நன்றி ஜோதிஜி !

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி - அருமையான இடுகை - நல்லாவே எழுதி இருக்கீங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : சொர்க்கமே என்றாலும்...