Sunday, February 21, 2010

விடாது துரத்திய கருப்பு முள்ளிவாய்க்கால் வரைக்கும்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.  வேறு வழியே இல்லை.  இந்தியா ஓப்பந்தம் மூலம் சொன்னாலும் ஜெயவர்த்னே வேறுவழியின்று ஒத்துக்கொண்டு இருந்த போதிலும் இந்த தேர்தல் நடத்தத்தான் வேண்டுமா? என்று இருவருமே நினைக்கும் அளவிற்கு தள்ளிப் பார்த்தார்கள்.  ஆனால் மொத்தமாக எல்லை மீறிப் போய்விடுமோ? என்ற அச்சத்தில் அறிவித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

இது வரையிலும் இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் புரிந்த வீரதீர சாகசங்கள், மற்ற போராளிக்குழுக்களை இந்தியா ஒன்றிணைத்து த்ரி ஸ்டார் என்று பெயரும் சூட்டி தங்களுக்கு கீழே வைத்துக் கொண்டு பல புனித சேவைகளை இவர்கள் மூலம் உருவாக்கிக்கொண்டுருந்ததையும் பார்த்தோம்.  ஆனால் இப்போது தேர்தல் காலம்.  மொத்தமாக இவர்களின் தராதரம் குறித்துப் பார்க்க வேண்டும்.  அப்போது தான் பிரபாகரன் குறித்து சில விசயங்கள் நமக்குப் புரியும்.
என்னதான் மொத்தமாக இலங்கை அரசாங்கத்துக்கு பிரபாகரன் என்ற ஆளுமை சிம்ம சொப்பனமாக இருந்தாலும் கூட யாழ்பாணத்தில் கிழக்கு பகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் EPRLF மற்றும் EROS போன்றவர்களும் தான்.  காரணம் மலையக மக்களின் ஆதரவும், முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள்.  இதற்கு பல காரணங்கள்.

யாழ்பாண மேலாதிக்கம், பிரபாகரன் குறித்து அச்சங்கள் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  இதற்கு மேலாகவும் மேல் சாதிக்காரர்கள் என்ற வகையில் வருபவர்களுக்கு பிரபாகரன் என்றாலே அலர்ஜி.  அந்த அளவிற்கு இவரும் புரிதலை உருவாக்கவில்லை.  உருவாக்கும் சூழ்நிலையில் காலமும் அவருக்கு அவகாசம் வழங்கவில்லை.  இதுவே தான் பின்னாளில் கருணாவை பொறுப்புக்கு கொண்டு வரும் வரைக்கும் நடந்தது.  கருணா ஆளுமையை குறை சொன்னாலும் நான் இனியும் நீடிக்க வேண்டுமென்றால் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மான், அரசியல் பொறுப்பாளர் நடேசன் இருவரையும் நீக்க வேண்டும் என்ற போது தான் அவரின் உள் மன ஆசையை பிரபாகரன் அன்று முழுமையாக புரிந்து கொண்டார். தாமதமான கருணாவைப்பற்றிய இந்த முதல் புரிதல் முதல் ஆச்சரியம்.

புலம் பெயர்ந்தவர்கள் என்பதையும் தாண்டி பரவலாக மற்ற நாடுகளிலும் வேறு வழியே இல்லாமல் பிரபாகரனுக்கு தொடக்கம் முதல் ஆதரவை வழங்கி வந்தவர்கள், மனதார விரும்பியவர்கள், ஆதர்ஷ்ணமாக கருதி வணங்கியவர்கள் என்று தொடர்ந்து கொண்டே வரும் கூட்டத்தில் இந்த கூட்ட மக்களையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும். அச்சம் என்பது பணிய வைக்குமே தவிர அன்பை உருவாக்குமா? என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் அதையும் உருவாக்கி கருணா இறுதியில் பிரியும் போது சொன்ன வாசகம் " ஒவ்வொரு மாதமும் பிரபாகரன் தலைமைக்கு 50 ஆயிரம் கோடி வருமானம் வந்து சேர்கிறது.  என்னுடைய பகுதிக்கு ஒரு கோடி தான் கொடுக்கிறார்கள்.  நான் எப்படி இதில் திருட முடியும்"  என்பதில் இருந்தே கடைசிகட்ட 5 ஆண்டுகளில் தந்தை செல்வாவிற்கு அதிகபட்சமாக இலங்கை தமிழ் மக்கள் கொடுத்த 16 சீட்டுக்கள் போல உச்சபட்ச நிர்வாக பரிபாலண நிர்வாகத்தை உள்ளே நடத்திக்கொண்டுருந்தார்.  சொல்லப்போனால் புலம் பெயர்ந்தவர்கள் விரைவில் தனித் தமிழ் ஈழத்தில் நாம் வாழ முடியும் என்ற நம்பிக்கை செடியாக மரமாக மாறிக்கொண்டுருந்தது.

விடுதலைப்புலிகள் அழித்த சீறி சபாரெத்தினத்தை, இவர்களே அழிக்காமல் இருந்து இருந்தாலும் அவருடைய TELO இயக்கமே அழித்து தான் இருக்கும்.  காரணம் டெலோ இயக்கம் என்பது பெயர் ஒன்றே தவிர சிறு சிறு குழுக்கள் போலத்தான் செயல்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக்கொண்டுருந்தனர்.  தன்னுடைய கட்டுப்பாடு என்பது இனி செல்லுபடியாகாது என்பதை உணர்ந்த சிறீ சபாரெத்தினம் அடங்காதவர்களை அழித்ததும், அழிக்க முற்பட்ட போது சபாரெத்தினத்திடம் இருந்து தப்பியவர்களே இவரை துரத்திக்கொண்டுருந்ததும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருந்தது.

யாழ் தளபதி கிட்டு முந்திக்கொண்டார்.  முடித்தவர்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரும் உருவாகிவிட்டது.  என்ன லாபம்?  மற்றவர்களிடம் " இனி இங்கு நாங்கள் தான் .  ஜாக்கிரதையாக இருங்கள் " என்ற பயத்தை உருவாக்க பயன்பட்டது.  இதன் தொடர்ச்சியாக ஈராஸ் பாலகுமார் கூட போதுண்டா சாமி என்று பிரபாகரன் பக்கம் சாய்ந்து விட்டார்.  அப்போதும் கூட ஈபிஆர்எல்எப் பத்பநாபா தெளிவாகத்தான் இருந்தார்.  ஜெயவர்த்னே அரசில் இருந்த அமிர்தலிங்கத்தை மக்கள் நலன் இல்லாதவர் என்று தங்களுடைய ஈழப் பேராளி என்ற பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டியவர்களே காலத்தின் கோலத்தில் அமைதிப்படை உள்ளே வந்ததும் பதவி ஆசையில் மொத்த கொள்கைகளும் மாற்றம் பெற்றது.    இதிலும் பிரிவு உருவாகி டக்ளஸ் தேவனாந்தா வேறொரு ஜீவனாக மாறியிருந்தார். இன்றைய கருணா போல் இவரும் தப்பி பிழைத்ததும் இன்று வரையிலும் உயிருடன் இருப்பது அடுத்த ஆச்சரியம்.

தன்னுடைய ஆதிக்கத்தை மட்டும் நிலைநாட்டுபவர் என்று பிரபாகரன் குறித்து சொன்ன இவர்களின் அத்தனை வார்த்தைகளும் இவர்களே ஒவ்வொருவரும் பிரிந்து தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட நடத்தப்பட்ட போராட்டங்களும், விழுந்த தலைகளும், ரத்தமும் இவர்களுக்குள்ளே எவரையும் திருப்திபடுத்தவில்லை.  திருந்தவும் தயாராய் இல்லை.  பிரபாகரன் இவர்களை ஒப்பிடும் போது பராவாயில்லை.  ஆமாம்.  நான் இப்படித்தான் என்று வெளிப்படையாக அறிவித்து தன் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியவர்.  இவர்கள் கத்திக்கொண்டு வெளியே வந்து கதறும் வாழ்க்கையை தாங்களும் வாழ்ந்து சார்ந்த மக்களையும் சாகடித்தவர்கள்.

இன்னமும் தெளிவாக புரிய வேண்டுமென்றால் EPRLF ஆட்சி அதிகாரம் என்று வந்ததும் தாங்கள் உருவாக்கிய அடியாள் பட்டாளமும், இந்திய அமைதிப்படை மூலம் உருவாக்கப்பட்ட " குடிமக்கள் படை" என்ற ஆள் தூக்கிகளும் எவருக்கும் இன்றும் நினைவில் இருக்கும்.  எவரைப் பார்த்து சர்வாதிகாரம் என்று சொன்னார்களோ இவர்களே அந்த சர்வாதிகாரத்தையும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போலத்தான் தங்கள் கைக்கு ஆட்சி அதிகாரம் என்று வந்ததும், சுத்தமான அரசியல்வாதியாக வாழ்ந்தார்கள்.  மக்கள் நலன் என்பது அந்தப்பக்கம் என்பதாகத் தான் செயல்பட்டார்கள்.  பிரபாகரன் மூலம் பத்பநாபா கொல்லப்பட முக்கிய காரணம் பின்னால் வரப்போகும் பிரேமதாசாவுடன் வெளியே தெரியாத ஒப்பந்தமே முக்கிய காரணம் ஆகும். பிரேமதாசா இலங்கையின் உள்ளேயிருந்த சங்கரி என்பவர் மூலம் பத்பநாபாவால் பிரபாகரனை அழிக்க என்று உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு முன்பே அதை உணர்ந்த பிரபாகரன் வேறு வழியே இல்லாமல் பத்மநாபாவையும் செலவு கணக்கில் கொண்டு போய் சேர்த்தார்.

அமைதிப்படை வெளியேறியதும், பொம்மை அரசில் இருந்த முதல் அமைச்சர் வரதராஜப்பொருமாளும், பத்பநாபாவும் சென்னையில் அடைக்கலம் ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் வீராதி வீரர்களாக உள்ளே வாழ்ந்தனர். விடுதலைப்புலிகள் ரவுண்டு கட்டி தங்கள் தாக்குதல்களை தொடுத்தனர்.  இவர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பித்து கிளம்பிச் சென்றவர்கள்  இருக்கும் இடத்தில் அமைதியாக கிள்ளாமல் இருந்தால் பரவாயில்லை.   ஆசை யாரை விட்டது?  சென்னையில் இருந்து கொண்டே பிரபாகரனை கிள்ளத் தொடங்கியதும் வேரோடு சாய்க்கப்பட்டனர். அதில் இருந்தும் தப்பியவர் வரதராஜப் பெருமாள். ராஜீவ் காந்தி மரணத்திற்கு முன்பே இவரை கண்டு பிடிக்க விடுதலைப்புலிகளின் முயற்சி இறுதி வரைக்கும் தோல்வியில் தான் முடிந்தது.  வட நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இவரை இந்திய உளவுப்படையினர் பொத்தி பொத்தி சமஞ்ச பெண் பிள்ளை மாதிரி வைத்திருந்தனர். ராஜஸ்தான், டெல்லி வரைக்கும் அலைந்த போது கூட விடுதலைப்புலிகளின் சார்பாளராக வந்தவர்கள் இவரின் நிழலைக்கூட கண்டு பிடிக்க முடியவில்லை. காரணம் அந்த அளவிற்கு உளவுத்துறையினர் தங்கள் மக்கள் சேவையை திறம்பட செய்து கொண்டுருந்தனர். இன்றுவரையிலும் அரசாங்க செலவில் வாழ்ந்து கொண்டு மகளை நடிகையாக்கி கலைச்சேவை புரியவைக்க ஆசைப்படுவர் தான் இந்த முன்னாள் மக்கள் சேவகர்.

சிதறிக்கிடந்த நெல்லிக்காய்கள் போல் இருந்த பிளாட் இயக்கமும் அமைதிப்படை உள்ளே வந்த போது முடிந்தவரைக்கும் போராடித்தான் பார்த்தார்கள்.  உமா மகேஸ்வரன் கூட இந்தியாவை பகைத்துக்கொண்டு " வங்கம் தந்த பாடம் "  என்ற இந்திய உளவுத்துறைக்கு எதிராக வெளியீடுகளை வெளியிட்ட போதும், இந்தியா தொடக்கத்தில் அமைதிப்படை உள்ளே வருவதற்கு முன்பு இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் என்று ரா உளவுத்துறை தான் என்ற உண்மையை போட்டு உடைத்து ஊடகத்தில் பேட்டியாக சொன்ன போதே அவரின் விதி தீர்மானமாய் முடிவு பாதைக்கு வந்து இருந்தது.  மொத்த ரகஸ்யங்களையும் வெளியிட்ட சில தினங்களில் தான் அவர் இயக்கத்தில் இருந்தவர்களால் கொல்லப்பட்டார்.  உடன் இருந்தவர்கள் கொன்றார்கள் என்று அந்த கோப்பு முடிவுக்கு வந்தது.  ஆனால் அதற்குப் பின்னாலும் திரைமறைவு ரகஸ்யங்கள் உண்டு என்பதை உணர்ந்தவர்கள் பல பேர்கள். அப்போதைய சூழ்நிலையில் உள்ளே பிரபாகரனை பகைத்துக்கொண்டால் சாவு என்பது போல் ரா உளவுத்துறையை முறைத்துக்கொண்டாலும் சாவு தான் என்பதை உணர்த்திக்காட்டிய சம்பவங்கள் இது. பிரபாகரன் எங்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கு தொந்தரவு கொடுத்தால் இது தான் முடிவு என்றவர்.  உளவுத்துறையினரே நீங்கள் ஆதரவு கொடுத்தால் இது தான் கதி என்பதைக் காட்டி கதிகலக்கியவர்கள்.  மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடி என்பது இது தான்.

யாழ்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக்கொன்ற முதல் சம்பவத்தின் போது அவரின் வயது 21.  அப்போது முதல் மற்றவர்களிடம் பயத்தை உருவாக்கி வைத்து தன்னுடைய திறமையால், கொண்டு வாழ்ந்த தன்னம்பிக்கையால், தன்னை மட்டும் நம்பி தன் ஆளுமையை வளர்த்துக் கொண்ட பிரபாகரன் அவரை அறியாமலே சில தவறுகளை கண்டும் காணாமல் தான் தன்னிடமே வைத்திருந்தார், தன்னை பிடிக்காதவர்கள் என்று  வாழ்ந்து கொண்டுருந்த இலங்கையின் கிழக்கு மகாண மக்கள் குறித்து அக்கறையோ, அதனை மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணமே இருந்ததா? என்று தெரியவில்லை.  இனிமேல் நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும் என்ற தன்னம்பிக்கை ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். இதைத்தவிர யாழ்பாணம் என்றால் மற்ற மகாண மக்களுக்கு ஒரு விலகல் எப்போதும் இருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.  தொடக்கம் முதலே சாதீயப் பார்வை, மேலாதிக்க எண்ணங்கள், மேல்தட்டு வாழ்க்கை என்று அவர்களின் வாழ்க்கை முறைகளும், அரசாங்க பதவிகளின் மூலம் பெற்ற பொறாமைப்பட்டுத் தான் தீர வேண்டிய வாழ்க்கை அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.  இதற்கெல்லாம் மீறி ஆச்சரியப்பட வேண்டிய சமாச்சாரம் இலங்கையின் ஒரு பகுதியான யாழ்பாண தீபகற்பத்திற்கும் இலங்கை வரைபடத்தில் கீழே லேசான புருவ நெற்றி போல் இருக்கும் காலி (இந்த இடத்தில் தான் முதன் முறையாக டச்சு படையினர் வந்து இறங்கினர்) என்ற இடம் வரைக்கும் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையும் நம்பவே முடியாத ஆச்சரியம் அதிசயம்.

யாழ்பாண மக்களின் வாழ்க்கை முறைகளும், வழிபாடு, கலாச்சாரம், உணவு முறைகள் அத்தனையும் மன்னார் மாவட்டத்தில் மிகுந்த வேறுபாடு.  இரண்டு வன்னியாக இருக்கும் வன்னிப்பகுதியில் அதைவிட இந்த இரண்டு வாழ்க்கை முறையும் மொத்த வேறுபாடுகள்.  தலைநகரம் கொழும்புவில் வாழ்பவர்கள் மொத்தத்திலும் வேறொரு தளத்தில் தான் வாழ்ந்தார்கள்.  கடற்கரையோர மொத்த இலங்கையில் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள், தமிழ் மொழி பேசிக்கொண்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தை நிணைவு படுத்தும் விதமாக இருக்கும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறையும், சற்று உருது, வேறு சில மொழிகள் என்று வாழும் முஸ்லீம்கள் என்று அவர்கள் ஒரு தனி அத்தியாயம்.
மொத்தத்தில் ஜாதியால், மதத்தால், இனத்தால், கலாச்சார பின்பற்றுதல் என்ற முறைகளால் முறைத்துக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரிந்து வாழ்ந்து கொண்டுருந்த ஒன்றுபடாத தமிழின மக்களை பிரபாகரனின் அச்சம் கலந்த ஆளுமை தான் ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியது. வேறு வழியில்லை என்பதாக ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியதாகவும் இருக்கலாம்.  இனி வேறு வழியில்லை என்பதாகவும் இருக்கலாம்..  காரணம் சுதந்திரம் முதல் இப்போது நாற்பது ஆண்டுகளாக ஆன போதும் கூட ஜாதியால் தீண்டத்தகாதவர்கள், வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்பவர்கள் எல்லோருமே விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பின்னாளில் ஜாதி இல்லாத தன்மையை மெதுமெதுவாக உருவாக்கியதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.  யாழ்பாணத்தில் சைவ வேளாளர் என்ற இனமே மேலாதிக்கம் நிறைந்தவர்கள்.  தமிழ்நாட்டைப் போல பிராமணத்தன்மை இலங்கையில் இல்லாத போதும் கூட நெருக்கமான அடுத்தவர்கள் நுழைய முடியாத அளவிற்கு இவர்களின் கட்டுக்கோப்பு மற்றவர்களை விலக்கி வைத்திருந்தது. இதற்கு அடுத்த பிரிவில் வரும் பிரபாகரன் குறித்து இந்த ஆதிக்க மக்கள் கடைசி வரைக்கும் தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளவும் தயாராய் இல்லை ஆதரவு கொடுக்கவும் முன்வரவில்லை.

நீ என்னை விரும்புகிறாய்? விரும்பவில்லை?  விடுதலைப்புலிகளின் கொள்கைகள் உனக்கு பிடிக்கவில்லை? பிடிக்கிறது? என்பது அல்ல இங்கு முக்கியம்.  உன்னுடைய தனிப்பட்ட கொள்கைகள் நோக்கங்கள் விருப்பங்கள் எதுவும் எனக்கு முக்கியமல்ல.  வீட்டில் ஆண் பிள்ளைகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?  ஒருவரை இயக்கத்திற்கு தந்து விடு?  என்ன வருமானம் வருகிறது?  வரியாக தீர்மானிக்கப்பட்டுள்ள தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்.  பணமா இல்லை நகையா இல்லை வேறு ஏதோ ஒரு வழியில் நீயும் இதில் பங்கெடுத்து தான் ஆக வேண்டும்.  நான் ஜாதி மதம் இனம் எதையும் பார்ப்பது இல்லை?  எனக்குத் தேவை தனி தமிழ் ஈழம்.  அதை நான் அடைய இந்த பாதை தான் சிறந்தது என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டேன்.  உன்னுடைய ஆலோசனை இருக்கட்டும்.  வலி பெற்றவனுக்கு வழி தெரியாமலா இருக்கும். நான் கேட்டதை முடிந்தால் கொடுத்து உதவியாய் இரு.  வெளிநாட்டில் இருக்கிறார்களா?  அவர்களிடம் சொல்.  இல்லாவிட்டால் எமது ஆட்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடும். எந்த வகையிலும் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆதரவு கொடுத்து தான் ஆக வேண்டும்.  ஏற்கனவே இருந்தவர்கள் அத்தனை பேர்களும் உருவாக்கிய உருக்குலைத்த பாதைகளை பேசி உட்கார்ந்து தீர்மானித்து ஒரே நேர்கோட்டில் இனி நான் கொண்டு வர வேண்டுமென்றால் அடுத்த நூற்றாண்டு ஆகி விடும்.  உனக்கு அது புரியாது?

சர்வாதிகாரம் தான்.  காரத்தை விரும்பித்தான் ஆக வேண்டும்.  சர் பொன்னம்பலம் அருணாச்சலம், சர் பொன்ம்பலம் இராமநாதன், தந்தை செல்வா பாதைபோல இது வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதை.

ஆனால் இவை அத்தனையும் இந்த இந்திய அமைதிப்படை உருவாக்கிய அலங்கோலங்கள் மக்களின் மனத்தை மாற்றியதும் உண்மை.  உருக்குலைத்த வாழ்க்கையை மீட்டு எடுக்க வேண்டும்.  பிரபாகரன் எதிர்பார்க்காத மொத்த மக்களின் ஆதரவும் ஒருங்கே பெற்றதும் இதன் தொடர்ச்சியே.

உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தேர்தலை அறிவிக்க எத்தனை காரணங்கள் இருந்ததோ அத்தனை ரகஸ்யங்களும் இருக்கத்தான் செய்தது.  இலங்கை தேர்தல்களில் இந்தியா தலையிடாது என்ற தீட்சித் ஊடகத்தில் கிளிப்பிள்ளைப் போல் ஒப்புவித்தாலும் அவரின் முழுமையான வேலையே பேரங்களும், ரா வை முடுக்கிவிடுவதும் தான். மொத்த புரிதலுடன்படி இவர்கள் விரும்பியபடியே யாழ்பாணத்தில் வடக்குப் பகுதியில் ஈபிஆர்எல்எப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  தேர்தலை புறக்கணிக்கச் சொன்ன விடுதலைப்புலிகளின் கோரிக்கையை மீறி ஒவ்வொன்றும் இந்திய உளவுத்துறையின் மேற்பார்வையில் நடந்தேறிக்கொண்டுருந்தது. ஆனால் மக்களும் ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டளித்தனர்.  காரணம் ஓட்டளித்த மக்கள் பகுதியில் இந்திய அமைதிப்படையின் தாக்கம் என்பது தெரியாத சூழ்நிலையில் வாழ்ந்த காரணமே இதற்கு முக்கியம். இந்தியா தொடக்கம் முதலே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற காரணம் என்பது ஏன் என்று இறுதியில் தான் புரிந்தது?  இப்படித்தான் நடக்கும் என்று ஏற்கனவே புரிந்து கொண்ட பிரபாகரன் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்ற வார்த்தைகள் ஆச்சரியமல்ல.

வடக்கே விடுதலைப்புலிகளுக்கு அஞ்சி தேர்தல் பணி செய்ய எவரும் முன்வரவில்லை.  இந்திய ராணுவ விமானங்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டது.  கொழும்புவில் இருந்து ஜெயவர்த்னே எதிர்ப்புகளை மீறி தேர்தல் அதிகாரிகளை தூக்கி வந்து, மனுத்தாக்கல் போன்ற சம்பிரதாயங்களை மாற்றி கிழக்குப் பகுதியிலும் ராணுவ " பாதுகாப்பில் "  தேர்தல் நடத்தப்பட்டது.  முழுக்க EPRLF ஆளுமையில் நடந்தேறியது.  64 இடங்களை " பெற்று "   அறுதிப்பெரும்பான்மை கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.  மக்கள் ஓட்டு அளிக்க வந்ததும், அராஜகங்களை மீறி தானாகவே வந்து வரிசையில் நின்றதும் ஒரு காரணமாக இருந்தாலும் இந்திய அமைதிப்படையின் தாக்கம் என்பது இந்தப்பகுதியில் முழுமையாக வந்து அடையவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. போட்டியிட வந்து முஸ்லிம் வேட்பாளர்கள் துரத்தியடிக்கப்பட்டதும், வாக்குச் சாவடிகளை EPRLF தங்களுடைய ஆளுமைக்குள் வைத்திருந்ததும், அவர்கள் எத்தனை தூரம் இந்த வாய்ப்புக்காக காத்து இருந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டால் தமிழன் என்பவனின் தனிக்குணத்தை தனியாக தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா?

இந்திய வெளிப்படையான அரசாங்க கணக்குப்படி ஆயிரம் கோடிகளுக்கு மேல் கொண்டு போய் இலங்கையின் உள்ளே அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லி கொட்டினார்கள்.  விரும்பியபடியே பொம்மை அரசாங்கத்தையும் நிறுவினார்கள்.  நிறுவிய அரசாங்கத்தையும் இந்தியா வெளியேறிய பிறகு ஜெயவர்த்னே கண்டு கொள்ளவில்லை. பின்னால் வந்த பிரேமதாசாவுக்கு இதை வைத்துக்கொண்டு எப்படி ஆட்டத்தை தொடங்கலாம் என்ற தனி கணக்கு. இந்தியா ஒப்பந்தபடி, பேசியபடி அதிகாரங்கள் வழங்கப்பட வில்லை.  அவர்களும் சரியான முறையில் நடந்து கொள்கிறாரா? என்பதை கவனிக்க இந்தியாவிற்கும் அதற்குப்பிறகு அக்கறையும் இல்லை.  பதவிக்கு வந்தவர்களும் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டும் அளவிற்கு அவர்களிடம் வலிவும் இல்லை.

அவமானத்துடன் வீரர்கள் திரும்பினார்கள்.  எதற்காக இறந்தோம் என்று ஏராளமான வீரர்களும், ஏனிந்த காயம் என்று ஆறாத ரணத்துடனும் இந்தியாவிற்கு திரும்பி வந்து இறங்கிய வீரர்களை வரவேற்க யாருமில்லை. படை விலகல் என்று படிப்படியாய் மாறி மொத்தமும் விலகி மூன்றாவது நாளில் இரண்டாவது முறையாக அனிதா பிரதாப் என்ற செய்தியாளருக்கு பிரபாகரன் நீண்ட பேட்டி அளித்தார். பேட்டி முடிந்ததுமே அன்றைய அவரது பிறந்த நாளான 26ந் தேதியில் எடுத்துக்கொண்ட ஓய்வில் ஒரு வேளை ராஜீவ் காந்தி " கணக்கு " குறித்து சிந்தித்து இருக்கலாம்?

தன்னுடைய தன்னம்பிக்கை தவிர வேறு எதையும் நம்ப மறுக்கின்ற பிரபாகரன் தொடக்கம் முதல் வைத்திருந்த கொள்கை தொடக்க தேதியான 8 முடிவு என்று வரக்கூடிய 8  வரக்கூடிய எந்த நாட்களிலும் தனக்கு சாதகமாக வரவில்லை என்பதை கருத்தில் கொண்டு அந்த நாட்களில் அவர் எதையும் செய்வதில்லை.  ஆனால் இந்த கணக்கு எங்கு கொண்டு வந்து நிறுத்தியது.  முள்ளிவாய்க்கால் மே 17 வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது.  ஒவ்வொரு வீரத்திற்கும் ஒவ்வொரு கணக்கும்.  நாம் நம்ப மறுக்கின்ற காலத்திற்கும் அது போட்டு வைத்திருப்பதும் தனி கணக்கு. சில சமயம் காலங்கள் தோற்று ஓதுங்கி விடும்.  அதற்கும் நம் முன்னால் உதாரணமாக காட்சியளித்தவர் யாசர் அரபாத், காட்சியளித்துக்கொண்டுருப்பவர் பிடல் காஸ்ட்ரோ, முறைகள் வேறு.  முயற்சிகளும் வெவ்வேறு.

ஜெயவர்த்னே கூட இனி போதும்டா சாமி என்கிற மனோநிலையில் ஓய்வெடுக்க தயாராய் இருக்க பிரேமதாசா உள்ளே நுழையும் தருணம் இது.

5 comments:

புலவன் புலிகேசி said...

//அவமானத்துடன் வீரர்கள் திரும்பினார்கள். எதற்காக இறந்தோம் என்று ஏராளமான வீரர்களும், ஏனிந்த காயம் என்று ஆறாத ரணத்துடனும் இந்தியாவிற்கு திரும்பி வந்து இறங்கிய வீரர்களை வரவேற்க யாருமில்//

இப்பவும் இல்லை நண்பா...

ஜோதிஜி said...

நன்றி புலவரே சங்கடமாக இருந்தாலும் (?)

Thenammai Lakshmanan said...

உயர் ஜாதிக்காரர்களை சரிவர சேர்த்துக்கொள்ளாததும் கிழக்கு மாகாணன மக்களின் ஆதரவைப் பெறாததும் பிரபாகரனின் தோல்விக்கு பெரிய காரணிகளாக உங்கள் இடுகை மூலம் உணர்ந்தேன் ஜோதிஜி

M.Thevesh said...

ஈழப்பிரச்சினையில் சகோதர சண்டையை ஆரம்பித்து
வைத்ததே இந்தியாதான்.பலகுளுக்களை உருவாக்கிப்
பயிர்ச்சி கொடுத்து ஒருவரோடு ஒருவர் மோதவிட்டது
இந்தியாவின் நயவஞ்சகத்திட்டம்தான்.எந்த ஒருஇன
மாவது அடக்கு முறையிலிருந்து சுதந்திரம் பெறவேண்
டுமானால் போராடும் இயக்கம் ஒன்று மட்டுமே இருக்
க வேண்டும். அந்த இயக்கம் கொள்கைப்பற்றும் மக்
கள் நலன் பேணுவதாகவும் சோரம் போகாத அமைப்
பாகவும் இருக்கவேண்டும். இத்தனை அம்சங்களும்
கொண்ட ஒரு இயக்கம் புலி இயக்கம் மட்டுமே.ஒரு
இனம் சுதந்திரம் அடையவேண்டும் என்றால் எட்டப்
பர்களும் காக்கைவன்னியர்களும் ஒழிக்கப்படவேண்டு
ம்.அது சுதந்திர வேள்வியில் கொடுக்கப்படும் ஆகுதி
கள் ஆகும்.சுதந்திர ஈழம் அமைந்ததன் பின்பு
ஜனநாஉஅகம் மலரலாம், மாற்றுக்கருத்துக்கு இடம்
தரலாம், பல அரசியல் கட்சிகள் ஏற்படலாம்.ஆனால்
பெரும்பான்மையால் அடிமைப்படுத்தப்பட்டு அடக்கி
ஆளும் போது ஒரு விடுதலை வேட்கை நிறைந்த
இயக்கத்தின் சர்வாதிகாரம் ரொம்ப ரோம்ப முக்கிய
மானது.சரத்திரத்திலேயே தமிழன் ஒற்றுமையாய்
அரசாளவில்லை.ஒவ்வொருவரும் நான்தான்
பரப்பிரமம் என்று சொல்லிக்கொண்டு காரியம் ஆற்றி
னால் எக்காரியமும் வெற்றிபெறமாட்டாது.இவை
எல்லாவற்றையும் படித்து தெளிவாகப்புரிந்து கொண்
டதாலேயே பிரபாகரன் தன் சர்வாதிகார ஆளுமை
யால் எல்லாத்தமிழரையும் சுதந்திர வேள்வியில்
ஓர் நேர் கோட்டில் கொண்டுவந்தார்.
எந்த ஒரு நாட்டிலும் பல இயக்கம் ஒன்று சேர்ந்து
சுதந்திரத்தைப் பெறவில்லை.இந்திய சுதந்திரப்போ
ராட்டத்தில் காந்தியின் காங்கிரஸ் இயக்கம் பலம்
வாய்ந்ததாக இருந்த்தாலேயே விடுதலையை அடைய முடிந்தது. கென்யா சுதந்திரம் அடைய ஜொ
மோ கென்யாட்டாவின் மாவ் மாவ் இயக்கம் தனி
ஆளுமையை எடுத்தபோது அது கைகூடியது.
ஈழவிடுதலைக்கு பிரபாகரனின் விடுதலைப்புலிகள்
இயக்கம் மட்டுமே லட்சியவெறுயுடனும் மக்கள் நல
னுடனும் எத்தியாகத்தையும் செய்யத்தயாராகவும்
செயற்பட்டவர்கள்.

ஜோதிஜி said...

நன்றி தேனம்மை. நீங்கள் சொன்ன விசயங்கள் பல காரணங்களில் இவைகளும் ஒன்று. மீதி நிறைய உள்ளது.

துவேஷ் உங்கள் பாதிப்பு புரிகிறது.