Wednesday, February 03, 2010

ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தொடக்க ரகஸ்யங்கள்

தமிழ்நாட்டில் இன்று விடுதலைப்புலிகளுக்கு, இலங்கையில் போராடிக்கொண்டுருந்த மற்ற போராளி குழுக்களுக்கு இருந்த ஆதரவு மொத்தமும் பறிபோனதற்கு முக்கிய காரணம் படுகொலை செய்யப்பட்ட அமரர் ராஜீவ் காந்தி என்று தான் பலரும் நினைத்துக்கொண்டுருக்கிறோம்.  ஆனால் ஏழு மாதங்களுக்கு முன்னால் இந்தியா மொத்தமாக இலங்கைக்குப் பின்னால் நின்றதற்கு வேறு பல காரணங்களும் உண்டு.
                                                சஞ்சய் , இந்திரா, ராஜீவ்
சொல்லப்போனால் ராஜீவ் மரணம் என்பது அதுவும் ஒரு காரணம்.  அதுவே முக்கிய காரணம் அல்ல.  பத்து காரணங்களில் அதுவும் ஒன்று.  பின்னால் வரும் அத்யாயங்களில் மெதுவாகப் பார்க்கலாம்.  இடையே வரப்போகும் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் உள்ள மர்மங்கள் குறித்து டி.ஆர். கார்த்திகேயனின் புலனாய்வுப் பக்கங்களை ஆற அமர பார்க்க வேண்டும்.  காரணம் விடுதலைப்புலிகளின் மொத்த ஆளுமையும், நம்முடைய அதிகார வர்க்கத்தின் அலட்சிய மனப்பான்மையும் அந்த கிளைத்தொடரின் மூலம் நமக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.

ஒவ்வொரு இந்தியனாகப் பிறந்தவனும் ராஜீவ் மரணம் என்பதை எந்த விதத்திலும் மேம்போக்காகவோ, நியாயப்படுத்தவோ முடியாது.  அது பிரபாகரன் தமிழர் என்பதாலோ, பட்ட வேதனைகளுக்கு உண்டான பழிவாங்கல் என்று எல்லாவிதங்களிலும் எடுத்துக்கொண்டாலும் இலங்கையில் கடைசி தமிழன் வாழும் வரைக்கும் இந்த அவப்பெயரும் இருந்து கொண்டேதான் இருக்கும்.  மன்னிக்கவே முடியாத குற்றம் தான்.  சந்தேகம் என்பதே இல்லை.

ஆனால் ஏன் ராஜிவ் காந்தி இத்தனை அவசரப்பட்டார்?  பின்னால் என்ன தான் நடந்தது?  ஜெயவர்த்னே பங்களிப்பு என்ன?  யாருக்கு பிரயோஜனம்?  என்று ஒன்றன்பின் ஒன்றாக அலைஅலையாய் ஆயிரம் கேள்விகள்.  அவரைக் கொல்லும் அளவிற்கு உண்டான நிகழ்வுகள் என்ன என்று பார்க்கப்போனால் தொடக்கம் முதல் அதில் உள்ளே நுழைய வேண்டும்.
முதலில் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் என்ன சொல்கிறது? என்பதை பார்ப்பதற்கு முன் அதன் நதி மூலம் ரிஷிமூலத்தை பார்த்துவிடலாம்.

இதற்கான குரு ஒரே ஒருவர்.  ஒருவகையில் பார்க்கப்போனால் இவர் தான் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட காரணமாக இருந்த அந்த ஒப்பந்தத்தை உருவாக்கியவர்.  அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று மற்றவர்களையும் விட தனிப்பட்ட அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட மொத்த ராஜதந்திர வேலைகளையும் முன் நின்று நடத்தியவர்.  கடைசி வரைக்கும் ராஜீவ் காந்தி மனம் மாறிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தவர்.  ஒரு வகையில் பார்க்கப்போனால் மனோவசிய பொம்மை போலத் தான் இந்த ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தியின் பங்களிப்பு.

ஜே.என்.தீட்சித்.

இவர் உருவாக்கியது " இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு"  என்ற நாடகம்.  வெகு கவனமாக காய்கள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தப்பட்டது.    ஈழத்தின் வடமராட்சிப் பகுதியிலும், முல்லைத் தீவிலும் இலங்கை இராணுவம் கொலை வெறியாட்டம் நடத்திக் கொண்டுருந்த போது ஜெயவர்த்னே அழைப்பின் பேரில் என்று சொல்லிக்கொண்டு சம்மந்தம் இல்லாமல் (ஜுலை 16) தீட்சித் ஜெயவர்த்னே கூட்டப்பட்ட (12 இலங்கை அமைச்சர்கள்) கூட்டத்தில் திட்டத்தை முன் வைத்தார்.  அப்போது மற்றவர்களுக்கு அந்த திட்டமானது ஜெவர்த்னேவால் உருவாக்கப்பட்டது என்பதும் பரப்பப்பட்டது.  ஆனால் உருவாக்கியதும், வழி நடத்தியதும், முன் மொழிந்ததும் இவரே.

ஒரு வகையில் அன்று ஜெயவர்த்னேவுக்கு கொடுக்கப்பட்ட மறைமுக நிர்ப்பந்தம். இலங்கையின் வடக்கு கிழக்கு மகாணங்களை இணைத்து தமிழர் பிரதேசமாக அங்கீகரிக்கும் புதிய திட்டம் உருவாகி இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டது.  ஈழ மக்களின் மொத்த வாழ்வுரிமையை சம்மந்தப்பட்டவர்களின் ஆலோசனை இல்லாமல் கொழும்பு மற்றும் டெல்லியில் குளிர்சாதனத்தில் உட்கார்ந்து கொண்டு தீர்மானிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

வலுக்கட்டாயமாக பிரபாகரனை இந்திய ராணுவ ஹெலிகப்டர் மூலமாக யாழ்பாணத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அசோகா ஹோட்டலில் ஏறக்குறைய சிறை வைக்கப்பட்டது போல் அவருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. முடிவு செய்யப்பட்டாகி விட்டது.  மற்றவர்கள் அத்தனை பேரும் ஒத்துக்கொண்டாகி விட்டது.  கையெழுத்து போட்டுத்தான் ஆக வேண்டும். அப்போதைய சூழ்நிலையில் மொத்தமாக எதிர்ப்பை காட்டினாலும் பிரபாகரனுக்கு வேறு வழியில்லை.  பிரபாகரன் வாழ்வில் தி நகரில் நடந்த சம்பவங்கள் மூலம் காவல்துறை சட்ட ஏற்பாட்டுக்குப் பிறகு மொத்தமாக மற்றவர்களிடம் பணிந்த சம்பவம் அவரின் மொத்த வாழ்விலும் இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமே?

எம்.ஜி.ஆர் கூட அன்று ஒரு வேடிக்கையாளராகத் தான் இருக்க முடிந்தது என்பது மற்றொரு ஆச்சரியம்.  அந்த அளவிற்கு அதிகார மட்டத்தில் தெளிவாக காய் நகர்த்தப்பட்டது.  ஜுலை 26 அதாவது சரியாக பத்து நாட்களில் ஒப்பந்த நகலை உறுதிபடுத்தும் வேலை.  ஆமாம் திணிக்கப்பட்டது என்பது தான் சரியான வார்த்தை.

இது ஜெயவர்த்னே உருவாக்கிய திட்டமல்ல.  அவரையும் மிரட்டி நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட ஒப்பந்தம்.

கையொப்பமிட்டு அடுத்த எட்டு நாட்களில் மொத்த ஆயுதப்போராளிகளின் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்து அவர்களை நிராயுதபாணியாக ஆக்குவது.

ஒப்பந்த இறுதி நகலில் ராஜீவ் காந்தி ஜெயவர்த்னே மட்டும் தான் கையெழுத்திடுவார்கள்.

ஈழப் போராளிகளில் எவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களோ உடனடியாக சிறையில் அடைப்பது.

அமைதிப்படை என்ற பெயரில் தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்திய இராணுவ வீரர்கள் இலங்கையில் ஒப்பந்தம் அமலாகும் வரைக்கும் மொத்த சட்ட ஒழுங்கை பாதுகாப்பது.

ஒப்பந்த ஷரத்துக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சிறிய நாடான இலங்கையின் மீது இந்தியா படையெடுக்கும் என்று ஜெயவர்த்னேவுக்கு அன்புடன் கூடிய மிரட்டல்.

இந்த முதல் கட்டம் டெல்லியில் இவ்வாறு தொடங்க, இதன் அடுத்த கட்டம் சென்னையில் நடந்தது.  EPRLF மற்றும் TELO. PLOT என்பவர்களை ஒரு கூட்டணியாகவும்,  ENTLF என்ற மற்றொரு கூட்டணிகளையும் தனித்தனியாக பிரித்து வைத்து இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக கையெழுத்து வாங்கப்பட்டது.  இந்த இரண்டு கூட்டணிகளையும் ஏற்கனவே ரா உளவு அமைப்பால் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஏற்கனவே மாற்றி வைத்து இருந்தனர்.

சென்னை சாந்தோமில் உள்ள ரா அலுவகத்தில் தலைமையதிகாரி நாராயணன் மூலம் நேரிடையான கண்காணிப்பில் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்டு தலையாட்டி பொம்மையாக மாற்றி வைத்து இருந்தனர். அப்போது இந்த கூட்டத்தில் நாராயணன் கூட உடன் இருந்தவர் அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதர் கேப்டன் குப்தா.  ஒப்பந்த பிரதிகளை எந்த போராளிக்குழுக்களுக்கும் வழங்கப்படவில்லை.

கையெழுத்து வாங்கியதும், வாய்வழியே சொன்னதும் மட்டும் தான்.   இது போக அமிர்தலிங்கம் தனியாக ஒப்பந்த நகலில் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு அமைதியாகிப் போனார்.  அப்போது கால்கள் ரணமாகி எழுந்து நடமாட முடியாத நிலைமையில் இருந்த EROS  பாலகுமாரன் குண்டுக்கட்டாக தூக்கிப் போகப்பட்டு, நிர்ப்பந்தம் செய்யப்பட தொடக்கத்தில் பிரபாகரன் போலவே முரண்டு பிடித்தவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவரும் கையெழுத்து போடவேண்டியதாகி விட்டது.  அடையாள அட்டையும், தினசரி பேட்டாவும் வழங்கப்பட்டு ஒவ்வொருவரும் கண்காணிப்பில் இருந்தனர்.

ஆதிக்கம் செலுத்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரபாகரனுக்கு மட்டும் இந்திய அரசாங்கத்தால் மாதம் 50 லட்சம் வழங்கப்படும் என்றொரு மறைமுக ஒப்பந்தம்.  காரணம் அப்போது நிர்வாக வசதிக்காக வரி வசூல் மூலம் விடுதலைப்புலிகள் ஆட்சி செலுத்திக்கொண்டுருந்தனர்.  ஒப்பந்தம் அமலானதும் இந்தத் தொகையும் ஒரு மாதம் மட்டுமே கைக்குப் போய்ச் சேர்ந்தது.  அப்புறம் பணால்.

தொடக்கத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து ஏதும் தெரியாமல் பிரபாகரன் சொன்ன வாசகம் இது.  " 30 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த இலங்கை பிரச்சனைகள் இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு காணப்பட்டு விடும்"

அதே பிரபாகரன் மொத்தமும் புரிந்த போது சொன்னது, " தமிழர்களின் உரிமையை புறக்கணிக்கும் எந்த ஒப்பந்தமும் வெறும் காகிதமாகத்தான் இருக்கும்.  இது தமிழர்களின் மேல் திணிக்கப்பட்ட ஒப்பந்தம்.  அளவற்ற துன்பங்களை அனுபவித்துக்கொண்டுருக்கும் மக்களை விட்டு விட்டு இந்திய அரசாங்கம் மொத்தமாக இலங்கையுடன் இணைந்து செயல்படுவது போல் தான் இருக்கிறது.

சில தவறான புரிதல்களை களைந்து செல்வதற்காக பிரதமருடன் பேச வரும்படி தந்திரமாக அழைத்து வரப்பட்டேன்.  அதன் பிறகு திருப்தியற்ற இந்த ஒப்பந்தத்தை இருவரும் சேர்ந்த நாடகம் போல் நடத்தி ஏமாற்றப்பட்டதை நினைத்து வருந்துகிறேன்.  விவாதம் என்பது இல்லாமல் தலையாட்ட வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொண்டு அவர்கள் நினைத்ததை சாதித்துக்கொண்டார்கள்"

அசோகா ஹோட்டலில் நடந்த உரையாடலில் பிரபாகரன் மிரட்டப்பட்டதும், உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த பிரபாகரன் நிலைமை கண்டு, வைகோ, நெடுமாறன் தலையிட்டதும் இதன் தொடர்ச்சியே.  வெளியே வந்து எத்தனை தான் புலம்பினாலும் "எவர் எதிர்த்தாலும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றியே தீருவோம்" என்று சூளுரைத்து இறுதியில் செயல்படுத்தியும் காட்டினர்.
தொடக்கத்தில் சிங்கள இராணுவ சிப்பாயிடம் பின் மண்டையில் ராஜீவ் காந்தி வாங்கிய அடி,   இறுதியில் ஸ்ரீபெரும்புதூரில் மொத்த உடம்பும் உருக்குலைந்து வழித்து அள்ளும் அளவிற்கு அவருக்கு கிடைத்த பரிசு தான் மொத்த உலகத்தையும் கதற வைத்துவிட்டது.

அடுத்த நூற்றாண்டுக்கு சென்றாலும் அழியாத கறையாகிப் போனது.  அன்று அதிகாரவர்க்கத்தினர் உருவாக்கிய அலங்கோலத்தில் சிதறிய புள்ளியாகி நம் மனதில் மட்டும் இன்றும் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.  ஆனால் சம்மந்தப்பட்ட மற்ற அத்தனை நல்ல மனிதர்களும் இன்றும் சகல சம்பத்துகளுடன் சுகமாய் வாழ்ந்தபடிதான் இருக்கின்றனர். இந்த நிமிடம் வரைக்கும் அந்த உத்தமர்கள் தங்களால் ஆன அத்தனை முன்னேற்பாடுகளை இந்த இலங்கை தமிழர் பிரச்சனையில் நுழைந்து தங்களுடைய பங்களிப்புகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர்??????

17 comments:

Anonymous said...

விடுதலை புலிகள் சிறிது அறிவுப் பூர்வமாக செயல்பட்டிருக்கலாம். ஏனென்றால், ஏய்தவன் இருக்க அம்பை நோவது போல் இராஜீவை படுகொலை செய்தது சரியில்லை இக்கட்டுரையின் மூலம் கண்டு கொண்ட கருத்து.

Anonymous said...

கொளத்தூர் மணி சொன்னதை மறுக்க முடியுமா. ராஜிவின் மரணம் படுகொலையல்ல _தண்டனை

ஜோதிஜி said...

பிரபாகரன் குறித்து இது வரை எத்தனையோ செய்திகள், கட்டுரைகள், திறனாய்வு, வெறுப்பு, விருப்பு என்று எல்லாவிதங்களிலும் வந்துள்ளது.

முழுமையான விபரங்கள் என்னவென்று தெரியாத போதும், ஓரளவிற்கு புரிந்து கொள்ளும் சூழ்நிலைகள் அமைந்த காலகட்டத்திலும், இன்று வரையிலும் அவருடைய உள் மன ஓட்டங்கள் எவ்வாறு இருந்து இருக்கும் என்பதை இந்த இடுகையின் சுருக்கம் காரணமாக தெரிவிக்க வாய்ப்பு இல்லாத போதும் உணர்ந்த ஒரே விசயம். அவர் நிச்சயமாக சர்வாதிகாரி அல்ல. காரணம் உலகில் உள்ள மொத்த சர்வாதிகாரம் கொண்டு ஆட்சி புரிந்த அத்தனை மனிதர்களிடத்திலும் இருந்து நிச்சயமாக வேறுபட்டு இருப்பதை எத்தனை பேர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்?

பத்து வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கும்? என்பதை முன்னமே தீர்க்கதரிசனமாய் புரிந்து கொள்ள உதவிய அவருடைய ஆள்மன எண்ணங்கள் ஏன் அமைதிகாலகட்டத்தில், தான் விரும்பிய அளவிற்கு தமிழீழம், அதன் சார்ந்த கட்டுமானங்கள் அமைக்கப்பட்ட பிறகும் கூட எதிர்காலத்தில் இது நிலைபெற வேண்டுமென்றால் சர்வதேச அரசியலின் பங்களிப்பு நிச்சயம் வேண்டும் என்பதை ஏன் உணராமல் இருந்தார் என்பது தான் இன்று வரைக்கும் தீராத ஆச்சரியமாய் இருக்கிறது?

நீங்கள் சொன்ன தண்டனை என்பது தடுமாற்றத்தின் திறவுகோல் போல் தொடக்கம் பெற்று விட்டதோ என்று எண்ணத் தோனறுகிறது?

மரிக்கொழுந்து வாசனை என்பதோடு வாசம் இல்லாத மலர்களையும் சேர்த்துக்கட்டுவது தானே மாலையாக மாற்றம் பெறுகிறது. உலக நியதி என்பதே இது தானே? மொத்தமும் நல்லதே வேண்டும் என்ற போது தான் தொடக்கத்தில் உருவான ஞானிகள் தேடி அலைந்த குகைகளும் காடுகளும் தானே அவர்களை காத்து மோட்சம் தந்தது?

அன்று அவரால் உருவாக்கப்பட்ட தமிழீழம் என்பது மொத்தத்திலும் மனிதர்கள் வாழ வேண்டிய பூமி என்றால் அதற்கான அத்தனை முன்னேற்பாடுகளையும், அரசியல் சதிகளை களைய வேண்டி முன் எடுத்துச் சென்றுருக்க வேண்டியதும் அவரது தலையாய கடமைதானே?

ஜோதிஜி said...

ஆழ்மன ஓட்டங்களை புரிந்தவர் எவராவது உண்டா?

தமிழ் உதயம் said...

தமிழீழம், அதன் சார்ந்த கட்டுமானங்கள் அமைக்கப்பட்ட பிறகும் கூட எதிர்காலத்தில் இது நிலைபெற வேண்டுமென்றால் சர்வதேச அரசியலின் பங்களிப்பு நிச்சயம் வேண்டும் என்பதை ஏன் உணராமல் இருந்தார் என்பது தான் இன்று வரைக்கும் தீராத ஆச்சரியமாய் இருக்கிறது????????????????????
//நார்வே நம்ப வைத்து ஏமாற்றியது,
//அமெரிக்கா சர்வதேச அளவில் தான் இழந்து வரும் ஆளுமையை தூக்கி நிறுத்த ஈழத்தை அங்கீகரித்து இருக்கலாம்.
// காவல்துறையை சேர்ந்த ஒருவர், சந்தேகத்தின் பேரில் ஒரு அப்பாவியை பத்து அடி அடித்தாலும், அது குற்றமாகாது. அப்பாவி திருப்பி ஒரு அடி அடித்தால் அது குற்றமாகி விடும். அது தான் சட்டத்திற்கு தெரிந்த நியாயம். "போலீஸ்காரனையே அடிச்சிட்டான் என்று " மட்டும் சொல்வார்கள். ஆனால் ஏன் அடித்தார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அது தான் ஈழப்பிரச்சனையிலும்..

ஜோதிஜி said...

தமிழ் உதயம்

இன்னும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள். வெறும் தொண்டாக மட்டும் வாழ்ந்து இருந்தால் வெறும் கருணாநிதி.

இலக்கியத்தில் மட்டும் சிறப்பாய் செயல்பட்டுருந்தால் முத்தமிழ் அறிஞர் அல்லது கலைஞர்.

அவரே அரசியல் தலைவராக பரிணமிக்கும் போது ஏச்சுக்களையும், வீச்சுக்களையும் சமாளித்து நீடித்துருந்தால் மட்டும் தான் தலைவர்.

தேசியத்தலைவர் என்றால் தொடக்கம் முதலே அவர் மேல் இல்லாத குற்றாச்சாட்டா? அவர் அத்தனை நயவஞ்சகங்களையும் தாண்டி தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டியது போலவே இந்த சர்வதேச சமூக அரசியல் சகதிகளையும் வென்று எடுத்துருக்க வேண்டும் அல்லவா? ஒரு வேளை எவரோ ஒரு நாட்டுடன் (எப்போதும் போல இந்தியா என்பது என் தாய் நாடு என்பதை மனதிற்குள் மட்டும் வைத்துக்கொண்டு) தமிழீழ பகுதியில் அவர்கள் வந்து அமர இடம் கொடுத்து இருப்பார் என்றால் இன்றைய மாறியிருக்கும் சூழ்நிலையை எவர் என்ன சொல்ல முடியும்?

அரசியல் சக்தி என்பது எப்போதுமே சகதி தான். இறங்கித்தான் ஆக வேண்டும் என்றால் மூழ்கி விடாமலும் கற்று வைத்து இருக்கத் தானே வேண்டும்?

பின்னோக்கி said...

ராஜீவ் கொலை மிகப் பெரிய மாற்றங்களை விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திவிட்டது.

ஜோதிஜி said...

இல்லை பின்னோக்கி. மாற்றங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை. உருவான மாற்றங்கள் சில தனிப்பட்டவர்களுக்கு லாப வகையிலான அரசியல் விளையாட்டுகள். அது ஒரு மேம்போக்கு. ஆனால் இன்று வரையிலும் எந்த புரிதல் இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு குழப்பதை உருவாக்க எதிர்ப்பாளர்களுக்கு அதுவே ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. அப்படி என்றால் இந்திரா காந்தியை சுட்ட சிங்?

M.Thevesh said...

உலகில் உள்ளசகல உயிர்களும் ஒன்றே என்றுதான் கீதை சொல்கிறது.அதேதான் பைபிள்,குரான் போன்ற
மற்றமறைகளும்கூறுகின்றன்.அப்படியிருக்கையில்
ஈழத்தில்இந்தியஅமைதிப்படையால்படுகொலைசெய்யப்
பட்டஉயிர்களிலும் பார்க்க ராஜீவ் காந்தியின் உயிர் மிகப்பெரியது அதிவிஷேசமானது என்று கருதி இன்னும் எத்தனை இலட்சம்உயிர்களைப்பலிகொள்ள
ப்போகிறார்கள் இந்திய காங்கிரஸ் கொலைவெறியர்கள்எனக்
கூறமுடியுமா.அரசியல் தலைவர்களின் உயிரும் பணக்காரரின் உயிர்களும்தான் உயர்ந்தது எனக்கரு
தும் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளிவராதவ
ரை இந்தியத்தமிழன் டெல்லியிடம் அடகு வைத்த
சுதந்திரம் ஆயிரம் வருடம் சென்றாலும் அவனுக்குக்
கிடைக்காது.

ஜோதிஜி said...

தொடக்கத்தில் இலங்கை சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு அங்கு மொத்த பொருளாதாரத்தை தங்கள் கைகளுக்குள் வைத்திருந்த தமிழர்களான பணக்காரர்களும், தங்களை பிறகு காத்துக்கொள்ள வாழ்ந்து கொண்டுருந்தவர்கள் சிங்கள ஆதிக்க சக்திகளிடமும், அரசியல் தலைவர்களிடம் அடைக்கலம் புகுந்து தமிழர்களை அதோ கதியாக்கிய கதைகளும் நீங்கள் தெரிந்தால் வணிகம் சார்ந்த விசயங்கள் மட்டும் கடந்த 100 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் ஒவ்வொரு நிகழ்கவுகளையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். அதில் ஒன்று தான் இந்தியாவின் மேலாதிக்கம் சார்ந்த சமீப கால செயல்பாடுகள். மலேசியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஆனந்தகிருஷ்ணன் போல எதிர்காலத்தில் எவரோ ஒரு தமிழர் இந்த இலங்கை தீவில் உன்னத நிலைமைக்கு அடையும் அந்த சமயத்தில் மனதிற்குள் மொத்த இலங்கை வாழ் தமிழர்களின் நலன் மட்டும் என்று இருக்கும் பட்சத்தில் மாறுதல்கள் உருவாகலாம்.

Thenammai Lakshmanan said...

//மரிக்கொழுந்து வாசனை என்பதோடு வாசம் இல்லாத மலர்களையும் சேர்த்துக்கட்டுவது தானே மாலையாக மாற்றம் பெறுகிறது. உலக நியதி என்பதே இது தானே? மொத்தமும் நல்லதே வேண்டும் என்ற போது தான் தொடக்கத்தில் உருவான ஞானிகள் தேடி அலைந்த குகைகளும் காடுகளும் தானே அவர்களை காத்து மோட்சம் தந்தது?//

உங்கள் இடுகையும் இந்த பின்னூட்டமும் அருமை ஜோதிஜி

senthil said...

சிறப்பான கட்டுரை. எல்லோரும் ( என்றால் எல்ல தமிழர்களும் எல்ல இந்தியர்களும் ) ஏற்று கொள்லும் வகையில் தந்துள்ளீர். நன்றி

ஈழ மக்களின் எந்தெந்த அடிப்படை உரிமைகள் மறுக்க படுகிறது. கல்லூரியில் , வேலை வாய்ப்பில், சராசரி வாழ்கையில் நேரிடும் துன்பங்கள் என்ன என்பதை இரத்தின சுருக்கமாக நீங்கள் கொடுத்தால் நான் நிறைய தமிழ் மற்றும் இந்திய அறிவுஜீவிகளிடம் நான் வாதிடும் ( புரிய வைபதற்காக) போது தேவை படுகிறது.

அது போல ஈழ வரலாறு ( சுருக்கமாக ) முக்கியமான நிகழ்வுகள் , வருடம் வாரியாக கொடுத்தல் பயன் உள்ளதாக இருக்கும். ஏன் எனில் நிறைய வரலாறு கிடைத்தாலும், மிக நீளமாக இருப்பதால் புரிந்து கொள்ள , புரிய வைப்பதற்கு இயலாமல் போய்விடுகிறது .

ஜோதிஜி said...

செந்தில் தொடக்கம் முதல் இதில் உள்ள தலைப்புகளை ஓய்வு இருக்கும் போது படித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்கள் மாறுபடும். நீங்கள் கேட்ட கடைசி கேள்விக்கு விரைவில் பதில் உண்டு.

Unknown said...

ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் உண்மைகள் பல ம்றைக்கப்பட்டு உள்ளன. ஆரம்ப கட்ட புலனாய்வில் ரஷ்ய , அமெரிக்க உளவு அமைப்புகளின் கை உள்ளது என செய்திகள் வந்தன. ஆனால் புலனாய்வு புலிகளுடன் நின்றுவிட்டது (நிறுத்தப்படது.) புலனாய்வில் ஈடுபட்ட அதிகாரி புலனாய்வில் இருந்த குறுக்கிடுகள் பற்றி தெரிவித்து இருக்கிறார். அவர் புலனாய்வு குறித்து புத்தகம் எழுதியுள்ளார்.


புலிகள் கொலை செய்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த பணியை கொடுத்தது யார் ?. கூட்டணி கட்சி தலைவர்கள் அந்த க்ட்டத்தில் என் பங்கேற்கவில்லை ? எல்லாம் விடை இல்லாத கேள்விகள்.

ஜோதிஜி said...

வினோத் நீங்கள் சொன்ன முரண்பாடுகள் என்று எத்தனை விதமாக யோசித்துப் பார்த்தாலும் டி ஆர் கார்த்திகேயன் பக்கங்களை வாசித்து வரும் போது உங்களால் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து விட முடியும்.

M.Thevesh said...

ஜோதிஜி! ஆர். கார்த்திகேயன் புலனாய்வை நேர்மையாகக் கொண்டுசெல்லாமல் முதலே திட்டம்
போட்டமுறையிலேயேஎடுத்துச்சென்றுள்ளார்.பலஉண்மைகள்அவரால் மறைக்கப்பட்டது என்பதுபின்னாளில்
பேட்டிகளில்பலர்கூறியுள்ளார்கள்.புலிகளைப்பழிவாங்கவேண்டும் என்ற திட்டத்துடன்தான் அவர்செயல்பட்டு
வந்துள்ளார். ஆகையால் அவர்குறிப்பிடுபவையை
எப்படி உண்மையென்று எடுத்துக்கொள்ளமுடியும்.

ஜோதிஜி said...

உண்மைகளை நாம் உணர்ந்து கொள்ள முடியாது. இறுதிவரைக்கும். இந்த நிமிடம் வரைக்கும் சம்மந்தப்பட்ட எதிர்மறை நேர்மறை நியாயங்கள் எதுவும் நம்மிடம் வந்து சேரவில்லை. என்று சேரும் என்றும் தெரியாது. முக்கிய குற்றவாளிகள், முதன்னைம குற்றவாளிகள் என்று உள்ள இந்த இரண்டு விசயங்களை அவர் மூலம் ஓரளவிற்கு புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அவர் சொல்ல முடியாத பல விசயங்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.