Monday, December 14, 2009

புழு முதல் புலி வரை

தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை என்று பிரபாகரனின் தொடக்க கால போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுருந்த போதிலும் நினைத்த அளவிற்கு ஒத்த சிந்தனையுடையவர்களை திரட்ட முடியவில்லை. மேலும் இயக்கம் சார்ந்த சிந்தனையாளர்களுக்கு வேறு எந்த பழக்கமும் இருக்கக்கூடாது என்பதில் இறுதி வரையிலும் உறுதியாய் இருந்தார்.

இதற்கிடையே இயக்கத்திற்கு தேவையான பொருளாதார சிக்கல்கள்.  சோர்ந்து போன சிந்தனைகளுடன் தேடப்படும் குற்றவாளியாக (யாழ்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பா சுட்டுக்கொலை) இருந்த பிரபாகரன் அங்கிருந்து தப்பித்து வந்து, தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த போது அறிமுகமானவர் தனபாலசிங்கம் என்ற செட்டி. கொலை, கொள்ளையில் அதிகமாக ஈடுபட்டுக்கொண்டு, தன்னுடைய வசதிக்காக தமிழீழம் என்ற கொள்கையை உருவாக்கிக்கொண்டு ஒத்த இளைஞர்களை அப்போது திரட்டிக்கொண்டுருந்தவர்.

பிரபாகரனின் இலங்கையில் வாழ்ந்த தொடக்க நீண்ட கால தலைமறைவு வாழ்க்கையில் அறிமுகமானவர் பெயர் சிவக்குமார் என்ற ராகவன். பல்கலைகழக பட்டதாரி, தொடக்க கால பிரபாகரனின் போராட்டத்தில் மிக்க  நம்பிக்கைக்கு உரிய தளபதியாக விளங்கியவர்.  பின்னாளில் (1984) முரண்பட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டவர்.

விடுதலைப்புலிகளின் தொடக்க கால கட்டுப்பாடான புகைபிடித்தல் கூடாது என்ற கொள்கையில் சற்று விலக்கு பெற்று இருந்தவர்.  தொடக்கம் முதலே தேநீர், காபி குடித்தாலே அதில் போதை உள்ளது என்று பிரபாகரன் வெறும் பால் மட்டும் தேவைப்படும் சமயத்தில் அருந்துபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அளவெட்டி கூட்டுறவு சங்கத்தில் திருடிய மொத்த பணத்துடன், அனுராதபுரம் சிறையில் இருந்து தப்பித்து வந்து செட்டியுடன், இரத்தினகுமார் என்பவரும் ஒன்றாக கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த போது தான் செட்டியை பிரபாகரன் சந்திக்க அப்போது உருவானது தான் "தமிழ் புதிய புலிகள்"  அப்போதைய கால கட்டத்தில் செட்டியைப்பற்றி அனைவருமே நன்கு புரிந்து வைத்தனர்.  சொல்லப்போனால் பிரபாகரனை அப்போது எதிர்த்துக் கொண்டுருந்தவர்களும் செட்டியுடன் பிரபாகரன் சேர்வதை விரும்பவில்லை.  காரணம் உண்மையான நோக்கம் கொண்ட பிரபாகரன் கொள்கை மாறிவிடுமோ என்று அஞ்சினர்.

கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த அறையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்தை வைத்து "தமிழ் புதிய புலிகள்" என்ற புதுப் பெயர் இயக்கத்தை தொடங்கினார்கள்.   செட்டியைப் பற்றி முன்பே நன்றாக தெரிந்து இருந்த பிரபாகரனுக்கு இவரை வைத்து லட்சியத்தை அடைய முடியும் என்ற ஒரே நோக்கத்தில் ஒன்றாக செயல்பட ஒப்பந்தம் உருவானது. இலங்கைக்கு மொத்தமாக திரும்பி வரவும் 1975 ஆம் ஆண்டு காவல்துறையினரால் செட்டி கைது செய்யப்பட "தமிழ் புதிய புலிகள்" பிரபாகரன் கைவசமானது. அப்போது (1975) புத்தூர் வங்கி கொள்ளை மூலம் தேவையான பணம் திரட்டப்பட்டது. இதன் பிறகு தான் இயக்கத்தின் வேகம் வளர்ச்சி பிடித்து தொடர்ச்சியாக (1976) இயக்கத்திற்கென்ற கொள்கைகள், கோட்பாடுகள், நிர்வாக கட்டமைப்பு போன்ற கட்டுக்கோப்புகள் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இறுதியில் உருவானது தான் "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற அமைப்பு.

"தமிழ் புதிய புலி"களுக்கென்று உருவாக்கப்பட்ட கமிட்டி என்ற அமைப்பு, சேர்க்கப்பட்டுக்கொண்டுருக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி என்று மாற்றம் பெறத் தொடங்கும் போதே உள்ளே புகைச்சலும் பூசலும் வலுப்பெறத்தொடங்கியது.  முதலில் ஐந்து பேர்களாக இருந்த கமிட்டியின் எண்ணிக்கை பிறகு ஏழு பேர்கள் என்று மாற்றம் பெற்றாலும் பிரபாகரன் மொத்த ஆளுமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளே இருந்த மற்றவர்கள் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

எண்ணிக்கை அதிகமாக்கி மாற்றப்பட்ட கமிட்டியில் வந்து சேர்ந்தவர் தான் உமா மகேஸ்வரன். அப்போது உள்ளே இருந்த மற்றவர்கள் பற்குணம், கிருபாகரன், கணேஷ் மாஸ்டர், தங்கராசா மற்றும் ராகவன் போன்றோர்.  பிரபாகரின் தொடக்க கால பிடிவாத கொள்கையான " ஈழப் போராட்டத்தின் எதிர் சக்தியாக இருக்கும் எவரும் உயிருடன் இருக்கக்கூடாது.  இருந்தால் நம்முடைய உழைப்பு வீணாகிக் கொண்டே இருக்கும்" என்பதை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்தரப்பு வாதமாக வைத்துக்கொண்டு எதிர்க்க தொடங்கினர். ஆனால் எதிர்த்த அத்தனை பேர்களின் மொத்த காரணம் அதுவாக இருந்தாலும் முக்கிய காரணம் பிரபாகரன் ஆளுமையை பொறுத்துக்கொள்ள முடியாதது.

தொடக்கம் முதல் பிரபாகரன் தன்னுடைய சுய ஓழுக்கத்தின் எத்தனை அக்கறையாக இருந்தாரோ அதையே மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் போதும், போதிக்கும் போது எதிர்விளைவுகளை உருவாக ஆரம்பித்துவிட்டது.  காவல்துறையினரால் தேடப்பட்டுக்கொண்டுருக்கும் மைக்கேல் என்பவர் தொடக்க கால இயக்கத்தில் இருந்தவர்.  மட்டக்களப்பில் பிரபாகரன் ஒரு பேரூந்தை எறிக்க முற்பட்ட போது அருகில் இருந்தவர். அப்போது உண்டான தன்னுடைய எறிந்த காலுடன் பயிற்சி கொடுத்துக் கொண்டுருந்த காட்டுப்பகுதிக்கு பிரபாகரன் தளராமல் வந்ததும் இட்ட முதல் கட்டளை "மைக்கேல் சிறிது காலம் வெளியே செல்லக்கூடாது.  சம்பவ இடத்தில் உன்னை பார்த்த காரணத்தால் பிடிபட்டால் இயக்கத்தின் மொத்த நடவடிக்கையும் வெளியே தெரிந்து விடும்" என்றபோது கேட்காதவரை கமிட்டி என்ற பேரில் இருந்தவர்களின் "ஒப்புதலுடன்" சுட்டுக்கொல்லப்பட்டார்.  இயக்கத்திற்குள் நடந்த முதல் கொலை இது.

இதே போல் இயக்கத்தில் இருந்த பற்குணம் என்பவர் பிரபாகரன் வளர்ச்சியை பிடிக்காமல் தினந்தோறும் தேவையில்லாத சச்சரவுகளை உருவாக்கிக் கொண்டுருந்தார். பல்வேறு பொறுப்புக்கள் கொடுத்து அவரை பிரபாகரன் திருப்திபடுத்தினாலும் வரவு செலவு விசயங்களை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு, கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அக்கறையின்றி செயல்பட்டு அலட்சியப் போக்குடன்  இருந்தவரை பிரபாகரன் கண்டிக்க சச்சரவு அதிகமானது. தொடக்கம் முதல் "இயக்கத்தில் இருப்பவர் வெளியேறினால் வேறு இயக்கம் தொடங்கக்கூடாது" என்ற கண்டிப்பான விதிமுறையை பிரபாகரன் உருவாக்கி வைத்து இருப்பதை உணர்ந்தும் "நான் வேறு இயக்கம் உருவாக்கப் போகின்றேன்" என்பவரை காட்டுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.  இது இரண்டாவது இயக்க கொலை.

இயக்கத்தின் சட்டதிட்டங்கள், கொள்கை வகுப்பாளர்கள் என்று ஜனநாயக கமிட்டி என்ற போர்வையில் இருந்தாலும் பிரபாகரன் ஆதரவு எதிர்ப்பு என்ற இரண்டாக உருவாக, உண்டான சச்சரவில் மொத்த இயக்க வேலைகளும் தடுமாறிக் கொண்டு இருந்தது.  நாள்பட இரண்டாகவும் உடைந்து விட்டது.

உள்ளே இருந்த நாகாராஜா, ஐயர், சுந்தரம், மதிவாத்தி, குமாரசாமி,குணரட்ணம் போன்ற 15 பேர்கள் ஒருபக்கம். பிரபாகரன், ராகவன், பேபி சுப்ரமணியம் போன்ற 18 பேர்கள் ஒரு பக்கமுமாய் சிதைந்து பிரிந்தது.

முதல் குழுவினர் "புதிய பாதை" என்ற பெயரில் செயல்படத் தொடங்கினர்.  பிறகு, உமா மகேஸ்வரனும் அவர்களுடன் சேர்ந்து அங்கு தலைவராக செயல்படத் தொடங்கினார்.  அங்கும் உருவான தலைமைப் பதவிக்கு ஒயாத போராட்டம்.

ஆனால் இயக்க நடவடிக்கைகளுக்குப் பதிலாக, போட்டி பொறாமைகளுமாய் இருந்தவர்களுடன் இனியும் ஒன்றாக இருக்க முடியாது என்று ஆயுதங்களையும் முறைப்படி ஒப்படைத்து விட்டு பிரபாகரன் வெளியேறினார்.

அதன் பிறகு "டெலோ" (TELO) என்ற இயக்கத்தில் (குட்டிமணி) பிரபாகரன் இணைந்து கொண்டார். அதுவும் குட்டிமணி பிரபாகரனை இழக்க விரும்பாத காரணத்தால்.பிரபாகரன் இல்லாமல் தனியாக சென்று செயல்பட்டவர்களால் (செல்லக்கிளி) இயக்கத்தை நடத்த முடியாமல் தடுமாற்றம் அடைந்தது. அப்போதை சூழ்நிலையில் பிரபாகரனை மட்டும் நம்பி வந்தவர்களால் டெலோ இயக்கம் முன்னேறப் பெற்றது.

டெலோவில் பிரபாகரன் இருந்த போது நடத்ததப்பட்ட, வன்னிய சிங்கம் நகை அடகுக்கடை கொள்ளை, நீர்வேலி வங்கி போன்றவை. இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னாளில் குட்டிமணி தங்கதுரை போன்றவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். டெலோவில் (ஓபரோய் தேவன்) பிரபாகரன் குறித்த வேண்டுமென்றே உருவாக்கிய தரங்கெட்ட விமர்சனத்தை பொறுக்க முடியாமல் அவரை வெளியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனை தொடர்ந்து உள்ளே இருந்த சீறி சபாரெத்தினத்திற்கும் பிரபாகரனும் உருவான பிரச்சனையால் டெலோவில் இருந்து குட்டிமணி வேண்டுதலையும் புறக்கணித்து வெளியேறினார் பிரபாகரன்.

தான் உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற விருப்பமான பெயரை, முடங்கிக்கிடந்த இயக்கத்தை மீண்டும் இராகவன் போன்றவர்களை வைத்து உயீருட்டினார்.
முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் செயலாளர் என்ற முறையில் கையொப்பமிட்டு (1978 ஏப்ரல் 25) அப்போது வீரகேசரியில் வெளிவந்தது.  அந்த அறிக்கையின் மூலம் அதுவரையில் கொல்லப்பட்ட அரசாங்க,காவல்துறை அதிகாரிகள் 11 பேர்களும் "தமிழீழ விடுதலைப்புலிகள்" மூலமாக நடந்தது என்று உரக்கச் சொன்ன போது மொத்த அரசாங்கத்தின் பார்வையிலும் ஏன் மக்களின் பார்வையிலும் இந்த பொடியன் என்ற பார்வை போய் சற்று பயத்துடன் பவ்யமுமாய் மாறியது.

பிரபாகரன், தான் உருவாக்கி வைத்து இருந்த இயக்கத்தில் கடந்த நிகழ்வுகளை மறந்து, உருவாக்கி வைத்துருந்த கமிட்டியில் சிறப்பு சீர்திருத்தம் செய்து, தனக்கு இணையான பதவியை உமா மகேஸ்வரனுக்கு வழங்கியிருந்தார்.  இராணுவம் சம்மந்தப்பட்டது பிரபாகரன் வசம்.  வெளித்தொடர்புகள், மற்றும் இயக்கம் சார்ந்த வெளி வேலைகள் மொத்தமும் உமா மகேஸ்வரன் வசம்.

இதே காலகட்டத்தில் (1977) பிரபாகரன் தலைமையில் LTTE. தங்கதுரை தலைமையில் TELO. அருளர் தலைமையில் EROS. இது போக இயக்கத்தின் கொள்கைக்கு மாறாக பாலியல் (ஊர்மிளா) விவகாரங்களில் ஈடுபட்டுக்கொண்டுருந்த உமா மகேஸ்வரன் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரபாகரனிடம் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்டது PLOTE (People's Liberation Organisation of Tamil Eealam)

3 comments:

புலவன் புலிகேசி said...

//
பிரபாகரன், தான் உருவாக்கி வைத்து இருந்த இயக்கத்தில் கடந்த நிகழ்வுகளை மறந்து, உருவாக்கி வைத்துருந்த கமிட்டியில் சிறப்பு சீர்திருத்தம் செய்து, தனக்கு இணையான பதவியை உமா மகேஸ்வரனுக்கு வழங்கியிருந்தார். //

இந்த பெருமிதம் ய்யருக்கு வரும்

Anonymous said...

பிரபாகரன் என்பவர் ஒரு ஒப்பற்ற தலைவர். அவரை எவருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. நிச்சயமாய் தமிழர் வரலாற்றில் ஒரு உயர்ந்த இடம் எம் தங்கத் தலைவருக்கு உண்டு.

ஜனா

KARIKALAN NAGALINGAM said...

களையெடுத்தல் அற்புதமான பணி