Tuesday, December 08, 2009

புலிப்பாதை

படித்த வாசகம் நினைவுக்கு வருகிறது.

கடவுள் வறுமை பாகிஸ்தான் அரசியல்.

இவை மூன்றும் முழுமையாக புரிந்து கொண்டால் முழுமை அடைந்ததற்குச் சமம்.  ஆனால் இத்துடன் இன்று பிரபாகரன் என்ற ஒரு வார்த்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.பழங்கதை என்று ஒவ்வொன்றும் புதைபொருளாய் உள்ளே இருப்பதால் தான் இங்கு எதுவும் எவருக்கும் முழுமையான புரிந்துணர்வை உருவாக்கவில்லை.  எல்லாமே பயமயம்.  இல்லாவிட்டால் "சட்டம் தனது கடமையைச் செய்து விடும்" என்ற பொடா தடா மயம்.

பிரபாகரன் என்ற வார்த்தையும் இதே போல் தான். ஒரு பக்கம் துதி.  மறுபக்கம் தூற்றல்.  இன்று வரையிலும் அட்டைப்பட தந்திரத்தில் தான் இந்த இலங்கை வாழ்வுரிமை பிரச்சனை தமிழ்நாட்டில் பார்க்கப்படுகின்றது.  எம்.ஜி.ஆர் என்பவர் ஓட்டுக்காக கடவுளாக கருதப்படுகிறாரோ அதற்கு இணையாக பிரபாகரன்.

நாம் முழுமையாக புரிந்து தான் ஆக வேண்டும்.

நல்லவர், கெட்டவர், இருக்கிறார், இல்லை, எதுவாக வேண்டுமானதாக இருந்து விட்டு போகட்டும்.  அங்கு என்ன தான் நடந்தது?  ஏன் நடந்தது?  அது தெரிந்தால் தான் அடுத்து என்ன நடக்கும்?  எது நடந்தால் நன்றாக இருக்கும்?

புரிந்து கொள்ள வேண்டுமானால் மொத்த சங்கதிகளையும் அறுவை சிகிச்சை செய்து தான் பார்க்க வேண்டும்.  அசிங்கம் என்பதோ, அவசரம் தேவையில்லை என்பதோ என்று கருதிக்கொண்டு அமைதி காத்தால் என்ன நடக்கும்?

நாளை இதே இந்த இலங்கை பிரச்சனை ராகுல் காந்தி கைக்கு வரும்.  அன்றும் தமிழ்நாட்டில் உள்ள வாரிசுகள் கையில் வந்து நிற்கும். கையாள அவர்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது.  குறைந்த பட்சம் அடிப்படை புரிந்துணர்வு இருந்தாலாவது உணர்ச்சிகள் வற்றிப்போய் உண்மையான உணர்வு இருந்தால் மேலோங்கி வரட்டும்.  இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஓட்டு அரசியலுக்கு இனிமேலும் இங்கு இந்த இலங்கை தேவைதானா?

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.  1970 ஆண்டு ஆயுதப்போராட்டங்கள்  இலங்கையில் தொடங்கிய போதும், தொடங்க காரணமாக இருந்தவர்களை அங்குள்ள அதிகார வர்க்கம் துரத்திய போதும் சரி, அடைக்கலம் புகுந்தது சென்னை, இராமேஸ்வரம், வேதாரண்யம் தொடங்கி மதுரை வரைக்கும்.  கிட்டத்தட்ட 37க்கும் மேற்பட்ட அத்தனை இயக்கங்களும் இங்கு வந்து தங்கி, அலுவலகம் அமைத்து, தேவையான சுவரொட்டி முதல் எரிபொருள் வரைக்கும் கடத்தி போய்க்கொண்டுருந்த போதெல்லாம் அன்றைய காவல் அதிகாரிகளின் பார்வையில் அவர்கள் போராளிகள் அல்ல.  கள்ளக்கடத்தல் பேர்வழிகள்.

காவல் துறைக்கு மட்டுமல்ல இன்று அதிகாரத்தில் இருக்கும் பல பேர்களுக்கும். என்ன வைத்து இருக்கிறார்கள் என்று துழாவும் போதும்?  தனக்கு என்ன லாபம்? என்று யோசித்தவர்கள் பல பேர்கள்.  தனக்குத் தேவையானது கிடைத்தால் அன்று அவர்களுக்கு வழி கிடைக்கும்.

எம்.ஜி.ஆர். பிரபாகரனை பார்க்க வேண்டும் என்று விரும்பிய போது கூட தொடக்கத்தில் பிரபாகரன் போய் பார்க்க வில்லை.  அப்போதைய காவல்துறை உயர்அதிகாரி மோகன்தாஸ் "எம்ஜிஆரை பகைத்துக்கொண்டு இங்கு உங்கள் நிழல் கூட இருக்க முடியாது" என்ற போது கூட ஆன்டன் பாலசிங்கம் தான் போய்ப் பார்த்தார்.

நம்பவே முடியாத அன்றைய 2 கோடி ரூபாய் கைக்கு வந்த போதும், அதற்குப் பிறகு நடந்த பிரபாகரன் - எம்ஜிஆர் சந்திப்பு என்பதும் மரியாதைக்காக, ஆன்டன் பாலசிங்கத்தின் கட்டாயம் கலந்த நன்றி சந்திப்பு.  அதற்குப் பிறகு தான் அவர்கள் இருவருக்கும் உண்டான பரஸ்பரம் புரிந்துணர்வும், வள்ளல் என்ற வார்த்தையை நிஜமாக்கிய மனிதர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் வீட்டில் பறிமாறிய சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் வழித்து சாப்பிட்ட (சமையல் பிரியர்) பிறகு தான் பிரபாகரன்,  எம்ஜிஆர் குறித்து முழுமையாக நம்பினார்.  அது தான் பிரபாகரன்.

நம்பும் வரைக்கும்?   நம்பாத போது?  கருணா வரைக்கும் அது தான் நடந்தது. ஆனால் கருணா முன்பே சிங்களர்களுடன் பழகி இருந்ததும், முன்னமே பரிட்சார்ந்த முயற்சியில் ஈடுபட்டு இருந்ததும் அவர் உயிரை காப்பாற்ற உதவியது.

உதவிய உயிர் தான் மொத்தத்தையும் உருக்குலைத்தது.  இது தான் பிரபாகரன் நம்பாத விதி என்பதும்.

அன்றைய கலைஞர் போராளிகளை, எம்ஜிஆர் சந்திக்க நினைத்த ஒரு நாள் முன்னதாக சந்திக்க உருவாக்கிய அரசியல் தந்திரம் தான் இன்று வரைக்கும் இழுத்து வந்துள்ளது.  ஆனால் பிரபாகரன் இருவரையும் வெறுத்ததும் இல்லை.  விரும்பியதும் இல்லை.  காரணம் அவர் தமிழ்நாட்டு அரசியலை மிகத் தெளிவாக புரிந்து வைத்துருந்தது தான் முக்கிய காரணம்.  ஆனால் அன்று கலைஞரை விட்டு விலகியே இருந்த பிரபாகரன் காலம் முழுக்க ஏன் விலகியே இருந்தார் என்பது தான் இன்று வரைக்கும் அத்தனை ஆச்சரியம் கலந்த கேள்வி?  அது தான் அவரது இறுதி போராட்டங்களையும் புரட்டிப்போட்டது.

பிரபாகரன் எம்ஜிஆரிடம் பணம் ஏதும் கேட்கவில்லை.  அன்று அடுத்த வேளை சோற்றுக்கு கூட பையில் பணம் இல்லாத நிலைமை.  ஒவ்வொரு நிமிடமும் ஆயுதம் தேடும் அறிவும், அடக்க முடியாத ஆத்திரமும் உள்ளே குமுறிக்கொண்டு இருந்தே தவிர, தமிழ்நாட்டு அரசியலை அவர் பொருட்படுத்தியதும் இல்லை. பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்று குறைந்த பட்ச அரசியல் தந்திரமும் இல்லை.
அன்று இரு துருவங்களுக்கு நடந்த உணர்வு ரீதியான சாக்கடை அரசியலில் சங்கமிக்க வேண்டிய சூழ்நிலை.  பிரபாகரன் இல்லாமல் மற்ற போராளிக்குழுக்கள் கலைஞர் வீட்டில் சென்று அவர் திரட்டிய நிதியை வாங்கிக்கொண்ட போது,  என்னை விட ஒரு நாள் முன்னால் போராளிகளை சந்தித்து விட்டாரா?  அப்படி என்றால் முக்கியமான பிரபாகரனை அழைத்து வாருங்கள்.  பிந்தியவர் எம்ஜிஆர்.  அன்றும் "முந்தியவர்" கலைஞர்.

டெல்லியில் ஆரம்பித்த கதையும் இதே போலத்தான்.  "அமெரிக்காவுக்கு அடிவருடியாக இருக்காதே" என்று சொல்லிப்பார்த்தார் .  ஜெயவர்த்னே நரிப்பார்வையை நயமாக காட்டினார்.  அன்னை இந்திரா போராளிகளை பயமாக வளர்த்துக்காட்டினார்.

மற்ற போராளிக்குழுக்களை வழிக்கு கொண்டு வர முடிந்த இந்திய உளவுத்துறையால் ஏன் பிரபாகரனை மட்டும் கடைசி வரைக்கும் வழிக்கு கொண்டு வர முடியவில்லை.  காரணம் அவர் எதையும் எதிர்பார்க்கும் சூழ்நிலையில் வாழ வில்லை.  அவர் கொள்கைகள் தவறாகவே இருந்தாலும்?

இன்றைய இந்திய இறையாண்மை அவதாரங்கள் பேசும் " மற்ற நாட்டில் நடக்கும் உள்நாட்டு விவகாரங்களை நாம் கண்டு கொள்ளக்கூடாது" என்று சொல்லி செட்டிநாட்டு சிமெண்ட் பூசுகிறார்களே?  அப்படி என்றால் அன்றே சங்கர் சிமெண்ட் பூசிக்கொண்டு ஓதுங்கி இருக்க வேண்டியது தானே?

பலம் வாய்ந்தவர் யாரோ அவரின் அனுமதி இல்லாமல் டெல்லி அசோகா ஹோட்டலுக்கு வலுக்கட்டயாமாக இராணுவ விமானத்தில் கொண்டு வரப்பட்டு, கவனியுங்கள் அழைத்து வரப்பட்டு அல்ல . உருவாக்கி இருந்த ஒப்பந்தத்தை "பாருப்பா இது தான் ஒப்பந்த காகிதம்" என்று காட்டிவிட்டி அப்படியே புடுங்கிக்கொண்டு போய் நடந்த ஒப்பந்தம் தான் அந்த மகத்தான ஒப்பந்தம்.

கொலைகாரர், சர்வாதிகாரி, உயிரை மதிக்காதவர்,துரோகம் என்று மனதில் நினைத்தாலே துடைத்து விடுபவர் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

தலித்தாக பிறந்து எழுதும் தலித் இலக்கியத்திற்கும் முற்பட்ட வகுப்பினர் உள்வாங்கிக்கொண்டு எழுதும் அந்த இனம் சார்ந்த இலக்கியத்திற்கும் உங்களால் பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருந்தால் இந்த இலங்கை பிரச்சனையும், பிரபாகரன் குணாதிசியங்களும் சில புரிந்துணர்வை உருவாக்கும்.

மிதிக்கும் ஊரில் மிதிபட்டவர்கள் வாங்கிய பாடத்தை பார்த்து உருவாக்கியது தான் பதுங்கு , தாக்கு,  கொன்று விடு,  துடைத்தும் எடுத்து விடு.

ஒரு வட்டச்செயலாளர் வாழ்க்கையின் வசதியை பார்த்துக்கொண்டுருக்கும் நீங்கள் வங்கிக்கணக்கு கூட இல்லாமல் வாழ்ந்த பிரபாகரன் வாழ்க்கையும் படித்து புரிந்து கொள்ளுங்கள்.  அவரை குறித்து எழுத்தப்பட்ட அத்தனை எதிர்மறை நியாயங்கள் கொண்ட எந்த புத்தகத்திலும் அயோக்கியன், பெண் பித்தன், பேராசைக்காரன் என்றோ எவரும் எழுதவில்லை.  அவருடைய சர்வாதிகாரத்தைத்தான் திரும்ப திரும்ப கண்டிக்கின்றார்கள். கண்டிப்பு வாத்தியர் தான்.  என்ன ஒன்று கண்டிப்பு வார்த்தைகளில் இல்லை.  இரண்டு முறை சொல்லி கேட்காவிட்டால் புதைத்து விட்டு அடுத்த வேலையை பார்த்து விடுவது.  அது தான் மொத்த பிரச்சனையின் பிள்ளையார் சுழியே?

இந்திய அரசியலில் முதல் வருடம் ரோட்டில் சில வருடங்களில் மாளிகை என்பது போலவும் சில நிகழ்வுகள் பிரபாகரன் வாழ்க்கையில்.  ஆனால் அது முற்றிலும் மற்றொரு வேறுபட்ட தளம்.

உமா மகேஸ்வரன் தொடங்கி, மாத்தையா தொடர்ந்து கருணா வரைக்கும் பல முகம் காட்டிய பிரபாகரன், உருவான அமைதி சமாதான உடன்படிக்கை நேரத்தில், அவரால் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்ட தமிழீழ கொள்கைகளும், ஆட்சியும், நீதி பரிபாலணமும், நிர்வாக சீர்சிருத்தமும், செஞ்சோலை பூங்காவனமும் போன்ற அத்தனை ஆச்சரியங்களை நீங்கள் உள்ளே போய் பார்த்து இருக்க வேண்டும். தொடரும் அதையும் உள்வாங்கித்தான் ஆகவேண்டும்.

அவரா இவர்? என்று உங்கள் மனம் குழம்பி குப்புறத்தள்ளிவிடும்.  ஆமாம் அது தான் பிரபாகரன்.

அவரது படுபாதகங்கள் வெளியே தெரிகின்றது.  ஜம்மு காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் ஜனநாயகம் என்ற போர்வையில் தினந்தோறும் செய்யப்பட்டுக்கொண்டுருக்கின்ற எத்தனை நிகழ்வுகள் பதிவாகிக்கொண்டு இருக்கிறது?  பலருடைய அழிவு என்பது இங்கு இன்றும் பலருக்கும் வாழ்வு.

சமாதானம் உருவாக்க சூழ்நிலை உருவான போது ஏன் புறந்தள்ளினார்? "சமாதானம் என்றால் சமாதானம்.  சண்டை என்றால் சண்டை" என்ற ஜெயவர்த்தனே கடைசி வரையிலும் சண்டையைத் தான் விரும்பினார்.

"உலகளாவிய தீவிரவாதம்" என்ற சந்திரிகா பார்த்த பார்வை இப்போது பார்த்துக்கொண்டுருக்கும் ஒற்றைக் கண் பார்வைதான்.
ரணில் விக்ரமசிங்கே உருவாக்கினார்.  உருக்குலைக்கவும் செய்தார்.  கருணாவையும் பிரித்து உண்டு இல்லை என்று ஆக்கினார்.
கெடுத்தால் அவர்கள் வளரத் தான் செய்வார்கள் என்று செய்தவர்கள அத்தனை பேர்களும் உணராமலா செய்தார்கள்?

மாற வேண்டும் என்று தோன்றிய போது மறக்க முடியாத பாடங்களை பெற்றவர்கள் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரமுடியுமா?

சரித்திரம் என்பது மொத்த நிகழ்வுகளுடன் பதிவு செய்ய வேண்டும்.  இறுதியில் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.  பிரபாகரன் யார்?

தீவிரவாதத்திற்கான ஆதரவு அல்ல.  தீராமல் இன்று வரையிலும் முடக்கு வாதமாக இருந்து தொலைக்கும் இந்த பிரச்சனைக்குள் என்ன தான் இருக்கிறது என்று உள்ளே நுழைய நுழைய அத்தனை ஆதங்கமாய் இருக்கிறது.  துரோகம். வஞ்சகம்.இரண்டு பக்கமும். அயர்ச்சியில் கண் மூடி இன்று வரையிலும் செத்துக்கொண்டுருப்பவர்களை யோசிக்கத் தோன்றுகிறது. இலங்கை என்பது ஒவ்வொரு அரசியல்வாதிகளை எந்த அளவிற்கு நாக்கு தடம் புரண்டு பேச வைக்கும் என்பதாகவும் ஆச்சரியமாய் இருக்கிறது?

 தமிழர்களை அழிக்க சிங்கள தலைவர்களுக்கு வாக்கு வங்கி கூடும்.  இது இலங்கை அரசியல்

இலங்கை தமிழர் ஆதரவு என்பது ரட்சகன், காவலர் என்பதற்கான கலங்கரை விளக்கம். பிரச்சனைக்கு உதவி செய்யவும் கூடாது.  ஆனால் தீர்ந்தும் போய்விடக்கூடாது. இது தமிழ்நாட்டு அரசியல்.

மொத்த பிரபாகரன் குறித்த வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் பத்தில் முன்று தவறுகள் தெரிந்தே வேண்டுமென்றே செய்துள்ளார்.  முல்லை மார்க்கெட் முஸ்லீம் மக்களை இடப்பெயர்ச்சி செய்தது முதல் இராஜிவ் காந்தி படுகொலை முதல்.

முதல் பிரச்சனைக்கு கூட பின்னால் சற்று வருத்தம் கலந்த தொனி வார்த்தைகள் வந்தது.  ஆனால் பின்னால் உள்ளது அவரை சற்று கூட உறுத்தச் செய்ய வில்லை. சரி, நம்முடைய குற்றத்திற்கான முதன்மை அறிக்கை என்னவாயிற்று.  இன்று போய் கனரக அணிவகுப்பு நிகழ்த்திக்காட்டிய வல்லரசு உறுதியாய் தெரிந்ததும் அன்று ஏன் போய் பிடித்து வரமுடியவில்லை.  முயன்றால் இந்தியாவில் முடியாததா என்ன?

அங்கும் அதிலும் அரசியல் இருக்கிறது.  ஏன் சோனியா காந்திக்கு முழுமையாக தெரியாமலா இருக்கும்?

நேரு தோட்டத் தொழிலாளர் என்ற தப்புக்கு உடந்தையாக இல்லை.  ஒதுங்கியும் விட்டார்.  இந்திரா தப்பு என்பதை தெளிவாக செய்தார். எம்ஜிஆர் எதிர்பார்ப்பு இல்லாமல் உணர்வு பூர்வமாக செய்தார்.  இதே எம்ஜிஆர் அவர்களின் நடுத் தெரு சண்டைகளைப் பார்த்து அந்த நிமிடமே மொத்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்து அடக்கியும் ஆண்டார். அது தான் உண்மையான தலைவன்.  அன்று சாகும் வரை இருந்து ஆயுதங்களை திரும்பப் பெற்று சென்றவர் தான் இந்த பிரபாகரன்.

முன்னூறு தவறுகள் பிரபாகரன் மேல் இருக்கிறது என்றால் மூவாயிரம் தவறுகள் இந்தியாவில் இருக்கிறது.  இத்தனை விளக்கமாக சொல்வதில் வருத்தம் இல்லை.

அவர்களின் வாழ்வுரிமையை விட முந்துவது நானா நீயா என்ற போட்டி தான் இங்கு இருந்தது. இன்றும் அதே தான் இருக்கிறது.  அதனால் தொடக்கம் முதல் மற்றவர்களை விட மிகத் தெளிவாக இருந்தார் பிரபாகரன்.  மற்றவர்களுக்கு பெண்,மண்,பொருள்,பதவி ஆசை இருந்தது.  இவருக்கு அதுவும் இல்லை.  அவரின் மூர்க்கத்தனத்தை சிங்களர்கள் வளர்த்தார்கள் முட்டாள்தனத்தை இநதியா உருவாக்கியது.  இரண்டும் கலந்த மனிதன் எப்படி இருப்பார்.  அது தான் ராஜிவ் காந்தி படுகொலை.

காரணம் ஆயுதம் ஒன்று தான் அத்தனைக்கும் இறுதி தீர்வு என்று நம்பியவர்.  நம்பியதை செயலில் காட்டி ஜெயித்தும் காட்டியவர்.  கடைசியில் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்று கேட்கிறீர்களா?  அதை ஆராய்வது தானே இதன் நோக்கம்.

பிரபாகரன் தேர்ந்தெடுத்த ஆயுதப் பாதையை தொடங்கியவர் இன்று மாவீரர் தினமாக கொண்டாடப்படும் சிவகுமரன் இறந்த தினம்.

ஆயுதப்போராட்டத்தின் பிதாமகன்.  பிரபாகரன் பழகாமலே பாதித்த அந்த சிவகுமரன் குறித்து.........

"யுத்த சத்தம் கேட்காத இந்த நேரத்தில் இப்போது நீங்கள் அமைதி மூலம் சொல்ல சொல்லவேண்டும்?"

"ஒவ்வொரு வெடிக்கும் வெடிகுண்டுக்கு பின்னாலும் ஓராயிரம் பிரச்சனைகள்.
சிந்தும் சிந்திய ஒவ்வொரு ரத்தத்துளியிலும் ஓராயிரம் காத்து கிடந்த தீர்க்கப்படாத தீர்வுகள்.  அதோ கை கூப்பி வருகிறார்கள்.  கவனமாய் இருங்கள்.  உங்கள் மொத்த ஒற்றுமையை இந்த சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் மிச்சமுள்ள எதிர்கால இலங்கை தமிழர் கூட்டம் என்பது புதைபொருள்"

3 comments:

புலவன் புலிகேசி said...

//காரணம் ஆயுதம் ஒன்று தான் அத்தனைக்கும் இறுதி தீர்வு என்று நம்பியவர். நம்பியதை செயலில் காட்டி ஜெயித்தும் காட்டியவர். கடைசியில் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்று கேட்கிறீர்களா? அதை ஆராய்வது தானே இதன் நோக்கம்.

பிரபாகரன் தேர்ந்தெடுத்த ஆயுதப் பாதையை தொடங்கியவர் இன்று மாவீரர் தினமாக கொண்டாடப்படும் சிவகுமரன் இறந்த தினம்.
//

வீர வணக்கம்...

J.P Josephine Baba said...

ஆகா எவ்வளவு விருவிருப்பாக் உண்மையை உண்மையாக சொல்ல இயல்கின்றது. வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஜி . பார்த்தசாரதி , ஜார்ஜ் பெர்னாண்டஸ் பற்றி சொல்லி இருக்கலாம். சரி அமெரிக்க அடிவருடிய இருக்க மாட்டாத ஜனநாயக தலைவர் அமிர்த லிங்கம் பற்றி ...................... சரி சொல்ல ஆரம்பித்தவர் ............................... சிறி சபா ரத்தினம் ................பத்மநாபா .......................

ராகுல் காந்தி கிட்ட தீர்வா, ஏன் இந்த கொலை வெறி ? ( ஹிம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் decide பண்ணி ஆச்சி அடுத்த ஆட்சியும் காங்கிரஸ் தான் என்று பிரதமர் வேட்பாளர் ராகுல் என்று.......... ஹிம்ம்ம்மம்மம்ம்ம்ம் வாழ்த்துகள் )