Sunday, December 27, 2009

பிரபாகரனுக்கு முன் (2)

" அமைதிக்கான கதவு திறந்து இருந்தது.  ஆனால் ஆயுதப் பாதை என்பது மொத்தத்தையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டது"   என்ற மொத்தமான குற்றச்சாட்டை இதில் கோர்த்துப் பார்க்கலாம்.

1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட வன்முறை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு காரணங்கள் கொண்டு மாற்றம் பெற்றதாக வந்து உள்ளதே தவிர ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் உள்ள "தமிழர் அழிப்பு" என்ற நோக்கம் மிகத் தெளிவாக இருந்து இருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பு 1915 என்று தொடங்கி அதுவே சுதந்திரம் பெற்ற பிறகு 1956, 1958,1961, 1974, 1979, 1981 என்று ஒவ்வொன்றும் மொத்த தமிழனத்தையும் நிர்மூலமாக்கி விட்டது.  எந்த அளவிற்கு?

தொடக்கத்தில் பூர்வகுடி தமிழர்கள், முஸ்லிம் மக்கள் என்று சேர்ந்து இருந்த தமிழன மக்கள் தொகையும்  தமிழர்களின் எண்ணிக்கை 35 லட்சம் பேர்கள். இந்திய அன்று இருந்த மொத்த சிங்களர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் சற்று அதிகமானது தான்.

ஆனால் ஒவ்வொரு கலவரத்தின் போது அழிக்கப்பட்ட தமிழர்களும், சூறையாடப்பட்ட சொத்துக்களும், வலுக்கட்டாயமாக சிங்கள குடியேற்றமும் என்று தொடர்ந்து தொடங்கி இன்று மொத்தமாக தமிழர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் மொத்த கலவரங்களிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது 15 முதல் 40 வயதுக்கும் இடையே உள்ள மக்கள் தான் அதிகம்.  தொடர வேண்டிய தலைமுறையே அழிந்து வழியில்லாமல் போய்விட்டது.

2005 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து வெளியிடப்பட்ட (தமிழர் மனித உரிமைகள் மையம்) அறிக்கையை சற்று பார்த்தால் இதன் மொத்த கோரமும் புரியும்.

கைது சித்ரவதை சம்பவங்கள் 1,12,246 பேர்கள்

கொலைச் சம்பவங்கள் 54,053 பேர்கள்

காணாமல் போனவர்கள் 25,266 பேர்கள்

பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 12,437 பேர்கள்

இடப் பெயர்வு 23,90,809 பேர்கள்

காயம் பட்டோர் 61,132 பேர்கள் ( ஆதாரம் எரிமலை மே 2005)

தொடக்ககால அமெரிக்கா, ஆஸ்திரேலியா போலவே பூர்வகுடிகளை அழித்து தங்களை நிலைநாட்டிக் கொண்டதைப் போல ஒவ்வொரு சிங்கள தலைவர்களும் தங்களுக்குள் ஆட்சி அதிகாரத்திற்கு அடித்துக்கொண்டார்களே தவிர "தமிழர் ஒழிப்பு" என்று இந்த ஒரு விசயத்தில் மொத்தத்திலும் ஒற்றுமையாக இருந்து தீர்க்கதரிசனமாய் செயல்பட்டு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் தெரிந்தே செய்த தவறு, ஒழிப்புக்காக மொத்த அரசாங்க பணத்தையும் கொண்டு போய் கொட்டி வளராத இலங்கையாக இன்று வரையிலும் மாற்றம் பெற வைத்தமையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

"சிங்களர்கள் மட்டும் வாழ வேண்டியவர்கள்.  இது சிங்கள நாடு.  இங்கு பௌத்தமே சமயம்.  சிங்களமே மொழி"  என்று கருத்தில் கொண்டு செயல்பட்டவர்கள் கடைசியில் இறக்குமதியாகும் ஆயுதங்கள் அனைத்தும் இன்றைய ராஜபக்ஷே தன்னுடைய சொந்த நிறுவனமாக லங்கா லாஜிஸ்டிக்ஸ் மூலமாகவே இறக்குமதி செய்யும் சூறையாடலும் நடந்து கொண்டு, தங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு தான் விரும்பிய சிங்கள இனத்தையும் இவர்கள் வாழ வைக்கவும் முடியவில்லை.

ஜெயவர்த்னே காலத்தில் இருந்த அமைச்சர் லலித் அதுலத் முதலி தொடக்கத்தில் கப்பல், போக்குவரத்துறையில் தான் இருந்தார்.  அவரை என்று பாதுகாப்பு துறைக்கு அமைச்சராக ஜெயவர்த்னே(1984) கொண்டு வந்தாரோ அன்று முதல் குருவுக்கு ஏற்ற சிஷ்யன் போல ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்தார்.

இவருடைய காலத்தில் இங்கிலாந்தில் இருந்து (Keny Meeny Service) என்ற தனியார் பாதுகாப்பு நிறுவன மக்கள் வரவழைக்கப்பட்டு இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டு புதிய பாதையை உருவாக்கினார்.  இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் உதவி என்பது தனியான பாதையில் பயணித்துக்கொண்டு இருந்த இராணுவத்திற்கு அதிக போஷாக்கு போல இருந்து கொலை வெறி தாண்டவங்கள் நடத்தினார்கள்.  அப்போது ஜெயவர்த்னே கொடுத்த பேட்டி (லண்டன் ரைம்ஸ்) இங்கு குறிப்பிடத்தக்கது.

"தமிழர்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தைத் தவிர மற்ற எதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லா நிலையில், இராணுவத் தீர்வொன்றை நோக்கியே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி செயல்பட்டு வருகிறார்"

இந்திரா காந்தி (1983) இந்தியாவின் ஆளுமைக்குள் இலங்கை இருக்க வேண்டிய அவஸ்ய அவசர காரணங்களை முன்னிட்டு இந்த பிரச்சனைகளை தலையிட்டு பிவி நரசிம்மராவ், ரொமேஷ் பண்டாரி, பார்த்தசாரதி, ப,சிதம்பரம் வரைக்கும் போராடிப் பார்த்த போது கூட அது இறுதியில் தோல்வியில் தான் முடிந்தது.  காரணம் ஏற்கனவே டட்லி (1965) செல்வா ஒப்பந்தம், பண்டார நாயகா செல்வா ஒப்பந்தம் போல், வெறும் காகித தீப்பந்தமானது.

பிரபாகரன் தன்னுடைய இராணுவ போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் (1984) இந்த காலகட்டத்தில் அது வரையிலும் இலங்கையில் சுதந்திரம் பெற்று  35 வருடங்களில் பாடுபட்ட அத்தனை தலைவர்களும் அஹிம்சை வழியில் நம்பிக்கை கொண்டு போராடியவர்கள்.  முடிந்த வரைக்கும் முட்டிப் பார்த்தவர்கள்.  ஆனால் இறுதியில் சிங்கள தந்திரத்தில் முட்டி பெயர்ந்து ஒதுங்கியவர்கள்.  ஓலமாய் மாற்றம் பெற்றுக் கொண்டு வந்த மொத்த தமிழர்களின் சராசரி வாழ்க்கையை அவர்களால் ஒரு அளவிற்கு மேல் காப்பாற்ற முடியவில்லை.  இதுவே தந்தை செல்வா " தனிநாடு என்று கேட்காமல் பெரிய தவறு செய்து விட்டேன்" என்று புலம்பும் அளவிற்கு.
இந்தியாவில் "காந்திய போராட்டம்" என்பது ஆங்கிலேயர்களை ஆச்சரியப்படுத்திய வழிமுறைகள்.  மொத்தமாக இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டுருந்தார்களே தவிர ஆங்கிலேயர்களின் கடவுள் என்று மதிக்கப்படும் மன்னர் கூட காந்தியை வரவழைத்து மரியாதை செய்த பழக்கம் உள்ள பண்பாடு நிறைந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

துவேச மனப்பான்மையை தங்களுடைய வியாபரத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, நீண்ட கால கொள்கைகளுக்கு புதைபொருளாக, மறைபொருளாக வைத்து செயல்பட்டார்களே தவிர சிங்களர்கள் போல் அப்பட்டமாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.  இந்த ஒரே காரணமும் மொத்த மக்களுக்கும் காந்தியின் மேல் நம்பிக்கை வைத்தது.  இதற்கு மாற்றுப்பாதையான நேதாஜி வழிமுறைகளும் ஒரு நெருக்கடியை கொடுத்துக்கொண்டே இருந்தது.

ஆனால் சிங்களர்களை வெறியேற்றுவதும், வெட்டித்தனமான வழியில் அவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கிக் கொடுப்பதும் என்று தொடங்கி அவர்களின் அறிவையும் வளர்க்க எவரும் துணியவில்லை.  துணிந்த JVP  போன்ற இயக்கங்களையும் சிங்கள ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவும் இல்லை.

வெறியை மட்டும் மூலதனமாக வைத்து மேலே வந்தவர்கள் ஒரு அளவிற்கு மேல் அதற்கு அடிமையாக போய்விட மிச்சமுள்ள பார்த்துக்கொண்டுருந்த தமிழ் இளையர் கூட்டம் "ஆயுதம் தான் இனி தீர்வு" என்ற எண்ணம் வந்ததில் ஆச்சரியம் இல்லை.

காரணம் அன்று அஹிம்சையில் வழியில் வந்தவர்கள் ஏறக்குறைய முட்டுச்சந்தின் இறுதியில் வந்து நின்று கொண்டுருந்ததும், வழி தேடிக்கொண்டுருந்தவர்களும், வலியுடன் வாழ்ந்து கொண்டுருந்தவர்களும், இந்த ஆயுதப்பாதையாவது வழி காட்டுமா? என்று ஏங்கிக்கொண்டு மொத்த தமிழ் மக்களும் குழம்பிப்போயிருந்த காலம் அது.

2 comments:

Anonymous said...

83க்க பிறகு கலவரம் கிடையாது. ஆயுதபோராட்டமே இனக்கலவரத்தை அடக்கிய ஒரே காரணம்

ஜோதிஜி said...

டட்லி சேனநாயகா முதல் ஜெயவர்த்னே முதல் வந்த நிகழ்வுகள், சூறையாடப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அத்தனையும் பிரபாகரன் வளர்ச்சிக்கும், ஆளுமைக்குப் பின்னாலும் ரணில் விக்ரமசிங்கே வரைக்கும் மீண்டு வரமுடியவில்லை என்பதும் உண்மை.