Sunday, March 07, 2010

சிவராசன் தணு மற்றும் பலர்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு செயல்பட்ட குழுவிற்கு தலைமை தாங்கிய சிவராசனின் உண்மையான பெயர் பாக்கிய சந்திரன்.  யாழ்பாணத்தில் உடிப்பிடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆங்கிய வழிக்கல்வி பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியராக இருந்தவர்.  இவரின் சகோதரர் பெயர் ரவிச்சந்திரன்.  இவர் புலிகள் இயக்க மாணவர் பிரிவில் செயல்பட்டுக் கொண்டு இருந்தவர்.ரவிச்சந்திரனின் மற்றொரு பெயர் தில்லை அம்பலம் சுதந்திர ராஜா. 

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது அவர்களால் இந்த ராஜா பிடிபட்டு சிறைக்குச் சென்றவர். சிவராசன் இலங்கையின் மின்வாரியத்தில் மட்டக்களப்பில் பணிபுரிந்த அரசு ஊழியர்.  முதலில் தான் ஈடுபட்டுருந்த டெலோ இயக்கத்தில் இருந்து விலகி விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு வந்தவர்.  தொடக்கத்தில் இந்தியா போராளிக் குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய போது அதில் பயிற்சி எடுத்தவர்களில் இவரும் ஒருவர்.

இலங்கை ராணுவத்தினருடன் (1987) போரிட்ட போது தனது ஒரு கண்ணை இழந்து பின்னாளில் ஒற்றைக்கண் சிவராசன் என்றும் பாக்கியசந்திரனின் சுருக்கமான பாகி அண்ணா என்று இயக்கத்தில் அழைக்கப்பட்டவர். புலனாய்வு பக்கங்களில் சிவராசன் என்ற ரகுவரன் என்ற பெயரைப்பெற்றவர். தொடக்கத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ பயிற்சி பெற்று பின்னாளில் பொட்டு அம்மான் தலைமையில் இருந்த உளவுப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய அமைதிப்படை முழுமையாக படை விலகி இந்தியாவிற்கு திரும்பத் தொடங்கிய 1990 பிப்ரவரி மாதத்தில் சிவராசன் வழிகாட்டலின்படி சுதந்திர ராஜா குருவி பயணத்தின் மூலம் சென்னை வந்து கோடம்பாக்கத்தில் உள்ள தொழிற் நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். 

இந்தக் கல்லூரியும் இலங்கைத் தமிழரால் நடத்தப்பட்டுக்கொண்டுருந்தது. அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்தவர்கள் பத்பநாபா தலைமையில் இருந்த ஈபிஆர்எல்எப் அலுவலகம் இயங்கிக் கொண்டுருந்தது. சுதந்திர ராஜாவிற்கு கொடுக்கப்பட்ட வேலை என்பது EPRLF அலுவலகம் செல்வது, அவர்களுடன் பழகுவதும், அவர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் ஒரு நபராக மாறியிருப்பது மட்டுமே. கொடுக்கப்பட்ட உத்திரவின்படி மிகத் தெளிவாக நடந்து அங்கிருந்தவர்களின் நம்பிக்கையும் ராஜா பெற்று இருந்தார். 

ஜுன் மாத இறுதியில் EPRLF பத்மநாபா யாழ்பாண பாராளுமன்ற உறுப்பினர் யோக சங்கரியுடன் சேர்ந்து சென்னையில் கூட்டம் நடத்தப் போவதை ராஜா இலங்கையில் இருந்த சிவராசனிடம் தெரிவிக்க கடற்புலி குழுவினருடன் சென்னைக்கு வந்து, திட்டமிட்டமிட்டபடி உள்ளே வெடிகுண்டு, ஏ.கே.47 உடன் நுழைந்து 13 பேர்களை கொன்று அழித்தனர்.  அப்போது வீசி எறிந்த வெடிக்காத ஒரு குண்டும் சிதறிக்கிடந்த சிதறல் வெடிகுண்டுகளின் மிச்சமும் என்று அங்கு கிடைத்த வெடிகுண்டுகளின் உள் கட்டமைப்பும் ராஜீவ் காந்தி புலனாய்வுக்கு சிறப்பான முறையில் உதவியது.

அப்போது திமுக அரசாங்கம். படுகொலை சென்னையில் நடந்த போது கலைஞர் தில்லியில் இருந்தார்.  பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க அவர் மட்டுமே, இதையே காரணம் காட்டித்தான் கவர்னர் ஒப்புதல் இல்லாமலே அவருடைய ஆட்சியும் பிறகு கலைக்கப்பட்டது. இவர்களின் காரியம் முடிந்ததும் தப்பிச் செல்ல பயன்படுத்திய அம்பாசிடர் கார் பாதியில் மக்கர் செய்ய சாலையில் வந்த மாருதி ஆம்னியை மிரட்டி கைப்பற்றி மல்லிப்பட்டினம் சென்று ஒரு நாள் உண்டு உறங்கி ஓய்வெடுத்து மறுநாள் இலங்கைக்கு பயணப்பட்டனர். இடையில் மறித்த காவல்துறை அன்று அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  அன்றைய அரசாங்கத்தின் இலங்கை தமிழர் ஆதரவு என்ற கொள்கை அந்த அளவிற்கு இவர்களுக்கு பயன்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி இலங்கை சென்றவர்களுக்கு கிடைத்த பாராட்டைப் போலவே சிவராசன் மேல் அப்போது தான் பிரபாகரனின் முதல் நம்பிக்கை பார்வை உருவானது. இதன் தொடர்ச்சியாகத் தான் சிவராசனிடம் ராஜீவ் காந்தி பொறுப்பு பொட்டு அம்மான் மூலம் ஒப்படைக்கப்பட்டது. 1991 ஏப்ரல் 28 அன்று மதகல் என்ற இடத்தில் பொட்டு அம்மான் தலைமையில் குழு ஒன்று கூடியது. அப்போது பெண்புலிகளின் தலைவியான அகிலா மூலம் சுபா, தணுவை அழைத்து வந்து நடந்த  கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.  ஆனால் அன்றே அவர்கள் இந்தியாவிற்கு வந்து சேர முடியாத பயணத் திட்ட மாற்றத்தால் மொத்த குழுவினர்களும் ஏப்ரல் 30 அன்று கோடியக்கரை வந்து சேர்ந்தனர். இந்தியாவிற்கு வந்த சிவராசன் இந்த பொறுப்புக்கு சுதந்திர ராஜாவையே(இவருக்கு வேறு பெயர்களும் உண்டு) உதவியாளராக வைத்துக்கொண்டு மே 1 முதல் அடுத்த 20 நாட்கள் வேலைக்காக திட்டமிடத் தொடங்கினர். சிவராசன் பற்றிய மொத்த விசயங்களும் புலானய்வு குழுவினர் திரட்டியது உயிருடன் பிடிபட்ட இந்த ராஜா மூலமே.

விடுதலைப்புலிகளுக்கு தொடக்கம் முதல் எல்லாவகையிலும் உதவிக்கொண்டுருந்தவர் கோடியக்கரையில் இருக்கும் மிராசுதார் சண்முகம். கடற்கரையோரப் பகுதியில் ஒரு தனி கடத்தல் சாம்ராஜ்யத்தையே வைத்து ஆண்டு கொண்டுருந்தவர்.இவருடைய மாமனாரும் இதே தொழில் தான். விடுதலைப்புலிகளுக்கு தேவையான பெட்ரோல்,டீசல் எரிபொருட்கள் முதல் இயக்கத்திற்கு தேவைப்படும் அத்தனை பொருட்களையும் தன்னுடைய அளப்பரிய இலங்கைத்தமிழர் சேவை மற்றும் பணம் சார்ந்த ஆசையினால் பக்க பலமாக இருந்தவர். இவர் ஆளுமையில் இருக்கும் பகுதியில் மக்கள் உள்ளே செல்லவும் அஞ்சுவார்கள்.  காவல் துறையும் அந்த அளவிற்கு உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அவருடைய செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. விடுதலைப் புலிகளின் நீண்ட கால திட்டம் என்றால் அகதியாக இராமேஸ்வரம் வந்து தங்களை பதிவு செய்து கொண்டு உள்ளே இருந்து களப்பணி ஆற்றுவதும், வந்து போவது என்றால் கோடியக்கரை முதல் இராமேஸ்வரம் இடையில் உள்ள அத்தனை கடற்கரையோரப்பகுதிகளும் அவர்களின் ஆளுமையில் 1983 க்குப்பிறகு இருந்தது வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டு அல்லது மூன்று யமஹா என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் ஆப்டிக் படகு என்பதும் அதன் உந்து விசை என்பதும் ஏறக்குறைய ஓலியைப் போலத்தான். தண்ணீரை கிழித்துக்கொண்டு வரும் என்பதை விட கண் இமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைத்து விடும் உயர் தொழில் நுட்பம் உடையது. பொருத்தப்பட்ட என்ஜின்கள் தரும் வேகம் என்பது பறந்து வரும் துப்பாக்கி தோட்டா கூட தோற்று விடும். விடுதலைப்புலிகள் இந்தியாவிற்குள் எளிதாக வந்து போன காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினரின் எந்த தாக்குதல்களும் இந்திய மீனவர்கள் மேல் நடந்தப்பட்ட கோரச்சாவுகளும் கொடுமையான அனுபவங்களும் மிக மிக குறைவு.  காரணம் அந்த அளவிற்கு இலங்கை கடற்படையினர் தங்களை காத்துக்கொள்வதில் சிறப்பாய் கருத்துடன் இருந்தனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில் விற்பனையான யமஹா மோட்டர்கள் அத்தனையும் விடுதலைப்புலிகளால் தனித்தனியாக கழற்றி தங்களுக்கு தேவையான பாகங்களை மட்டும் எடுத்துக்கொள்வதும் திருச்சியின் சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகளிடம் அந்த மாவட்ட மொத்த விற்பனையாளர்கள் வியப்புடன் வந்து விசாரித்தது வரைக்கும் இதற்கு பின்னால் பல கதைகள் உண்டு. தொடக்க காலத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கொடைக்கானல் பகுதியை தங்களின் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்க வேண்டிய எண்ணம் என்பதைப் போல மற்ற அத்தனை மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளுக்காக பணிபுரிந்தவர்கள் பல பேர்கள் உண்டு. குறிப்பாக தொழில் நகரங்கள் அவர்களுக்கு பல விதங்களிலும் உதவியது.

கோடியக்கரை என்பது அவர்களுக்கு மற்றொரு யாழ்பாணம் அல்லது வன்னிப்பகுதி.அடுத்த மூன்று மாதங்கள் அல்லது குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் தேவைப்படும் அத்தனை பொருட்களும் கோடியக்கரை சதுப்பு நில பூமிக்கடியில் உள்ள பாதுகாப்பு பகுதியில் பாதுகாக்கப்படும். இலங்கையில் நடக்கும் சூழ்நிலை பொறுத்து ஒவ்வொன்று அதன் பயணத்தை தொடங்கும். உலக சந்தையில் ஆயுத தளவாடங்கள் கொள்முதல் செய்து பிரபாகரனுக்கு நம்பிக்கையாக இருந்த கேபி என்றழைக்கப்பட்ட நிழல் மனிதர் கூட கடைசி காலத்தில் பிரபாரகன் நம்பிக்கை இழந்து போய் வேறு நபருக்கு அந்த பொறுப்பை மாற்றியது கூட நடந்தது.  ஆனால் இந்த சண்முகம் புலனாயவு குழுவினர் வந்து சுற்றி வளைத்த போது, வேறு வழியே தெரியாமல் தன்னுடைய மாமனார் திட்டிய திட்டலை பொறுக்க முடியாமல், தேச துரோகம் செய்து விட்டாயே என்று பேசிய பேச்சில் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து ஓடும் போது அருகில் கிடைத்த கயிற்றை பயன்படுத்தி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சாவது வரைக்கும் விடுதலைப்புலிகளின் மொத்த நம்பிக்கையையும் பெற்று இருந்தார் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

முக்கிய காரியங்கள் மற்றும் கொள்முதல்களுக்காக முதன் முதலாக  கோடியக்கரைக்குத் தான் வருவார்கள். வருவதற்கு முன்பே அவர்கள் விரும்பியது தயாராய் இருக்கும். வருவதும் போவதும் தெரியாது. இதைப் போலத் தான் இயல்பாக அன்று கரைக்கு வந்து சேர்ந்தவர்கள் ராஜீவ் காந்தியின் திட்டத்திற்கு வந்தவர்கள் என்று சண்முகத்திற்கே தெரியாது.  காரணம் விடுதலைப்புலிகள் சார்பாக இவர்களுக்கு முன்பே சென்னையைத் தளமாக வைத்துக்கொண்டு உள்ளே பல்வேறு குழுக்கள் இயங்கிக்கொண்டுருந்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி.  அச்சகப் பணி,உளவு,அரசியல், முதல் அச்சத்தை தரும் வெடிகுண்டுகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை கோர்ப்பது , முழுமையாக வெடிகுண்டுகளாக கொண்டு போவது வரைக்கும்.

கோயமுத்தூரில் ஒரு சாதாரண லேத்தை வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றி நீண்ட நாட்களாக வைத்து இருந்ததும் பிறகு தான் கண்டு பிடிக்க முடிந்தது.  இயக்கத்தின் முக்கிய கொள்கை என்பதும் கடைசி வரையிலும் கடைபிடித்த லட்சியமும் என்பதும் எந்த முக்கிய காரியமும் நடந்து முடியும் வரைக்கும் அதன் மொத்தமும் தெரிந்தவர்கள் பிரபாகரன், பொட்டுஅம்மான் இறுதியாக பங்கெடுக்கும் நபர்கள்.  இதைத்தான் பலமென்று கடைசி வரைக்கும் பிரபாகரன் நம்பினார். இயக்க உளவுத்துறை என்றாலும் அவர்களிலும் பிரிவு உண்டு.  பிரிந்து செயல்படுபவர்கள் அவர்களின் பணி என்பது உத்தரவை நிறைவேற்றுவது மட்டுமே. ஏன் ? எதற்காக? என்பது இவர்களின் சாவின் வாசலில் நிற்கும் போது கூட தெரியுமா என்பது சந்தேகமே? அதற்கு மேல் பிரபாகரனை சந்தித்து இருப்பார்களா என்பதும் அதை விட ஆச்சரியம்.  முதல் கட்டம் என்பது பிரபாகரன் என்ற ஒரு நபர் மட்டுமே.  இரண்டாம் கட்டத்தில் அரசியல் குழு, உளவுக்குழு, திட்டமிடுதல்,செய்தி தொடர்பு பங்கேற்பாளர்கள் போன்ற பல பேர்கள். இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களிலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பிரபாகரனை சந்திக்க முடியும்.  இது வணங்கத்தக்க உருவமாக வைத்திருந்தார்களா இல்லை வகைதொகையில்லாமல் நிறைந்துள்ள எதிரிகளிடம் இருந்து தங்கள் தலைவரை காக்க உருவாக்கினார்களா என்பது நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்.  இந்த செயல்பாடு பல விதங்களிலும் பிரபாகரனை பாதுகாக்க உதவினாலும் பல தவறான புரிதல்களின் தொடக்கமும், சர்வதேச சமூகத்திடம் நெருங்க முடியாத அளவிற்கும் பிரபாகரனை ஒதுக்கி வைத்திருந்ததும் உண்மை. கடைசிகட்ட போரின் போது இந்தியாவில் உள்ள வட நாட்டு ஊடக மக்கள் அத்தனை பேர்களும் ராஜபக்ஷே ஊதுகுழல் போல் ஒருங்கே நின்றதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று.  அனிதா பிரதாப்பிற்கு கிடைத்த வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கமாகக்கூட இருந்துருக்கலாம். பரபரப்பை மட்டும் முதலீடாக வைத்து வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுக்க படபடப்புடன் வாழ்ந்தவரின் தர்க்க நியாயங்கள் புரியும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

சிவராசனுடன் பயணித்து வந்த குழுவினர் சண்முகத்தின் பிரத்யோக காட்டேஜ்ல் தங்கி ஓய்வெடுத்து விட்டு மறுநாள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.  ராஜிவ் காந்தி படுகொலைக்கு என்று விடுதலைப்புலிகளால் ஓதுக்கப்பட்ட நிதி என்பது வெறும் ஐந்து கிலோ தங்கக்கட்டி மட்டுமே.  அதை விற்றுத்தான் கிடைத்த பணமான 17.25 லட்சம் பெற்று தான் தங்களுடைய காரியங்களை தொடங்கினார்கள். இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பிரபாகரன் எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்பதை உணர்த்து வைத்திருந்த சிவராசன் தான் செலவு செய்யும் ஒவ்வொன்றுக்கும் தொடக்கம் முதல் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டு வந்தது.

தொடக்கம் முதல் ராஜிவ் காந்தி படுகொலையை செய்தது நாங்கள் அல்ல, தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கை தமிழர்கள் அல்ல ராஜிவ் காந்தி மரணம் என்பது வெறும் துன்பியல் சம்பவம் அதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை விடுதலைப்புலிகள் இயக்கம் பல்வேறு விதமாக தங்களின் ஆட்கள் மூலம் தெரியப்படுத்தினாலும் புலனாய்வு குழுவினர் திரட்டிய ஆதாரங்கள் அத்தனையுமே மேலைநாடுகள் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. பிரபாகரன் தான் வைத்திருந்த சுதேசியான தன்னம்பிக்கை சார்ந்த எண்ணங்களைப் போலவே இங்கும் புலனாய்வுக்குழுவினர் தங்கள் திறமைகளை மட்டுமே வைத்துக்கொண்டு களத்தில் இறங்கினர்.  அந்த தனிப்பிட்ட பங்கெடுத்த ஒவ்வொருவரின் திறமையே அத்துவான காட்டில் நடந்த கோரத்தின் மொத்த பின்ணனியை வெளி உலகத்திற்கு கொண்டு வர உதவியது.

உண்ணா நோன்பு இருந்து இறந்து போன தீலீபன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் யாழ்பாணத்தில் உடுப்பிடி என்று சிறிய ஊரில் நடந்த போது அதில் இரண்டாவது நபராக பேச அழைக்கப்பட்டவர் பாகி என்ற பாக்யசந்திரன் என்ற சிவராசன். அவர் அப்போது தோளில் தொங்கிய துப்பாக்கியுடன் பேசியது

" எனக்குப் பேச தெரியாது. பேசிப் பழக்கமில்லை.  நாம் பேசிப்பேசியே இதுவரை காலத்தை வீணடித்து விட்டோம்.  எனவே பேச்சில் நாம் நம்பிக்கை இழந்து விட்டோம்.  ஆகவேதான் ஆயுதங்களை கையில் ஏந்தி இருக்கிறோம். ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டுமே நாம் வளர முடியும்.  இந்தியாவை நாம் நம்பி இருந்தால் எப்போதே நம்மை அழித்து இருப்பார்கள். நம் கனவு நனவு ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை "

இந்த ஒலி ஒளி நாடா என்ற வலுவான ஆதாரம் கைக்கு கிடைக்கும் வரைக்கும் தொடக்கம் முதல் குழப்பான நிலையில் பயணித்த பயணமென்பது ஒவ்வொன்றும் கோர்த்து மாலையாக மாற்றம் பெற இறுதி வரைக்கும் பல வெற்றிகளையும் வெறியின் மூலத்தையும் காண உதவியது.

இதைப் போலவே மனித வெடிகுண்டாக செயல்பட்ட தணு என்பவரைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள உதவியது விடுதலைப் புலிகளின் " மண் மீட்பிற்கே உயிர் நீத்த மா வீரர்களின் குறிப்பேடு " என்ற புத்தகத்தின் மூலம் . ஒவ்வொரு வீரர்களின் இறப்பையும், அவர்களைப் பற்றிய குறிப்பும் மிகுந்த பொக்கிஷமாக ஆவணத்தில் ஏற்றும் விடுதலைப்புலிகள் இவரின் இறப்பை இலங்கை ராணுவத்தினருடன் போரிட்ட நாட்களில் உள்ள கணக்கில் கலைவாணி ராஜரத்தினம் என்கிற கேப்டன் அகினோ என்று வரவு வைத்திருந்தனர்.ஆனால் விடுதலைப் புலிகளால் தனிப்பட்ட முறையில் குறிப்புகள் ஏதும் கொடுக்காத போதும் கூட பயிற்சி முடிந்து சீருடையில் கொடி பிடித்து நடை பயின்று வரும் முதல் ஆளாக வந்தவர் இந்த தணு. 

இவர்களின் ராஜீவ் என்ற திட்டத்தின் முறைப்படியான திட்டமிடுதல் என்பது இறுதியில் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை மனதிற்குள் இருந்தாலும் அந்த திட்டமிடுதல் எந்த அளவிற்கு இருந்தது என்றால் ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு ஒத்திகை என்பதாக தன்னை ஒரு பத்திரிக்கையாளராக உருமாற்றிக்கொண்டுருந்த சிவராசன் விபி சிங் (1991 மே 7)கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்ததை பிறகு பார்த்து கண்டு பிடித்தனர். காரணம் சென்னையில் நடந்த அந்தக் கூட்டத்தை ஒரு பத்திரிக்கையாளர் முழு படமாக எடுத்து இருந்தார். அதைக் கண்டு பிடித்த போது தான் இதன் திட்டமிடுதலும் அதற்காக இவர்கள் உழைத்த உழைப்பும் புரிந்தது. 

முதலில் ராஜீவ் காந்தியின் மரணம் என்பது டெல்லியில் வைத்து நடத்தப்படுவதாகத் தான் திட்டமிட்டப்பட்டது. ஆனால் அங்கு மொழி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதில் உள்ள பிரச்சனை, வாகனம் ஓட்டுவதில் உள்ள சாலை போக்குவரத்து சிக்கல்கள் இருந்ததைப் பொருட்படுத்தினாலும் அங்கும் சென்று தொடக்கத்தில் அடிப்படை ஏற்பாடுகளை உருவாகி அங்கேயே ஒரு வயர்லெஸ் தொடர்பு உருவாக்கி அமைக்கும் வரைக்கும் உழைத்தனர்.  அப்போது தினமும் வெளிவந்து கொண்டுருக்கும் தினமணி செய்திகளை பார்த்து இதன் மூலமே ராஜிவ் காந்தியின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பிரச்சாரக்கூட்டத்தை மையமாக வைத்துக்கொண்டு காரியத்தில் இறங்கினர். இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சம்பவம் பொட்டு அம்மான் பொறுத்தவரையிலும் இந்த படுகொலையை தமிழ்நாட்டில் உள்ளவர்களை வைத்து நிறைவேற்றி விடலாம் என்பதும் ஆனால் பிரபாகரன் பார்வையில் வலி பெற்றவர்கள் உருவாக்கும் வலி என்பது தான் சரியாக இருக்கும் என்பதாக ஒரு பெண் மூலம் என்பதை மூலமாக்கினார்.

விடுதலைப்புலிகளிடம் உள்ள பல திறமைகளில் வயர்லெஸ் சாதன தொடர்பு என்பதும் அதில் அவர்கள் கையாண்ட யுத்தி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  யாழ்பாணத்தில் பொட்டு அம்மான் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு எண் 91.  சென்னையில் சிவராசன் கட்டுப்பாட்டில் தொடர்பு எண் 95.  இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் 1991 தொடக்கம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் மண்டையை பிச்சுக்கொள்ளும் அளவிற்கு சென்னையில் இருந்து வெளியே ஏதோ ஒரு சங்கேத பாஷை அடிப்படையாகக் கொண்டு செய்தி போய்க் கொண்டுருக்கிறது. ஏதோ ஒரு தொடர்பு உள்ளே இருக்கிறது.  ஆனால் இடை மறித்தும் கேட்க முடியவில்லை.  சந்தேக பாஷைகள் கோர்வையாகவும் இல்லை.  எங்கிருந்து போகின்றது என்பதை உணர முடியாமல் கோட்டை விட்டுக் கொண்டுருந்தனர். அந்த அளவிற்கு விடுதலைப்புலிகள் தொழில் நுட்ப அறிவை கரைத்துக் குடித்து கடத்திக் கொண்டுருந்தனர்.  மற்றொரு ஆச்சரியம் சிவராசன் தனியாக தொடர்பு கொண்டுருந்ததைப் போலவே மற்றொரு பணியில் இருந்த அடுத்த குழுவினருக்கும் வேறொரு அலைவரிசை. உத்தரவு ஒருவர். இயங்குபவர்கள் பலர்.  நோக்கம் ஒன்று.  பாதைகள் வெவ்வேறு.  பிரபாகரனுக்கு தனித் தொடர்பு எண் 14.  இது போக அவர் வைத்திருந்த நேரிடையான செயற்கைகோள் மூலம் பேசக்கூடிய கைபேசி பிறகு வந்தது.

இந்த வயர்லெஸ் தொடர்புகளைக்கூட ராஜீவ் மரணத்திற்குப் பிறகு கூட பாதி அளவிற்குத்தான் கண்டு கொள்ள முடிந்தது.  மற்றொரு ஆச்சரியம் இதையும் நடமாடும் வயர்லாஸ் கட்டுப்பாட்டு என்பதான அமைப்பில் வைத்திருந்தனர்.  இது போன்ற தொழில் நுட்பத்தில் ஒரு பிரச்சனை.  தொடர்பு கொள்ளும் போது அருகில் உள்ள வீடுகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டுருப்பவர்களுக்கு கர் புர் என்று காட்சி மாறி கத்தத் தொடங்கி விடும். சில சமயம் தெளிவற்ற குரல்கள் கேட்கலாம். ஆனால் முழுமையாக படமும் தெரியாது.  கடத்தும் வார்த்தைகளும் புரியாது. தொடர்பில் வரும் இடைவிடாத சப்தங்கள் சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கு இனம் கண்டு கொள்ள வைத்துவிடும்.  பொட்டு அம்மன் பல முறை இவர்களிடம் பகல் நேரத்தில் பயன்படுத்தினால் பொதுமக்கள் இனம் கண்டு கொள்வார்கள். கவனமாக இருங்கள் என்று கூறியிருந்த அறிவுரையையும் மீறி அவசரத்தில் இவர்கள் பயன்படுத்திய போது இவர்களை அறியாமலே புலனாய்வு வலையில் மாட்டத் தொடங்கினர். 

புலன் விசாரணை தீவிரப் பாதையில் வந்து கொண்டுருக்கும் போது ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டு தப்பித்து வந்தார்கள். கோயமுத்தூரில்  எல்லைப் பகுதியில் (துடியலூர்)  வீட்டில் இருந்த போது பகல் நேரத்தில் யாழ்பாணத்துடன் தொடர்பு கொண்ட போது ஏற்கனவே புலனாய்வு குழுவினர் சொல்லி வைத்திருந்தபடி மக்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்ய அங்கிருந்து கிளம்பும்படி ஆயிற்று. துரத்தல்கள் ஒரு பக்கம்.  தூக்கம் இழந்தாலும் இயக்கத்திற்கு தொல்லை வந்து விடக்கூடாது என்று லட்சிய வேட்கை மறுபக்கம்.

Saturday, March 06, 2010

ராஜீவ் படுகொலை புலனாய்வு பாதை

ராஜீவ்காந்தி படுகொலை என்பதை தனியாக ஒரு குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் அதிகார வட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  படுகொலை என்பதை விட கோரமான முறையில் நடந்தேறியது ஒரு புறம்,மகாத்மா, இந்திரா காந்தி போல நேரிடையான சாட்சிகள், சம்பவங்கள் ஏதும் தெரியாது. இதுவே மொத்த அதிகாரவர்க்கத்தினருக்குள் ஏராளமான கிலியை ஏற்படுத்தியிருந்து.  அப்போது சிபிஐ இயக்குநராக இருந்தவர் விஜய்கரண்.  இந்த வழக்கு சிபிஐ மூலமே புலன் விசாரனை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்தவுடன், பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதியாக தலைமை பொறுப்புக்கு அழைக்கப்பட்டவர் பெயர் டி.ஆர்.கார்த்திகேயன்.  இவரைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீ பெரும்புதூர் நினைவு தூண்
அமைதிப்படை இலங்கையில் இருந்த இறுதிகால கட்டத்தில் மேல் அதிகார வட்டத்தில் இருந்த டி.என்.சேஷன் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டவர்.   அந்த நிமிடம் வரைக்கும் டெல்லியைப் பொறுத்தவரையிலும், தமிழர் அல்லாதவர்கள் தான் இந்த இலங்கைப் பிரச்சனையை கையாண்டு கொண்டுருந்தனர்.  இந்திராகாந்தி காலத்தில் இருந்த பார்த்தசாரதிக்குப் பிறகு கார்த்திகேயன். இந்திய அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்குச் சென்றவர், உள்ளே நடக்கும் நிகழ்வுகளை அறிக்கையாக கேட்கப்பட்டது. அப்போதைய இந்திய அரசாங்கத்தின் அனுமதி இல்லாத காரணத்தால் இவரால் விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசக்கூடிய வாய்ப்பு அமையவில்லை.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உள்ளேயிருந்த முக்கிய அதிகார வர்க்கத்தினரிடம் மட்டும் பேசாமல் அடிப்படை வாழ்வாராத மக்களிடம் கலந்து அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஆலோசித்தவர்.   குறிப்பிட்ட இடங்களில் விடுதலைப்புலிகளுக்கு இந்திய ராணுவத்தினருக்கும், போர் நடந்து கொண்டுருக்கும் போது கூட தன்னுடைய உயிர் போய் விடும் என்ற ஆபத்து கட்டத்தையும் தாண்டி சகல இடங்களிலும் நுழைந்து வெளிவந்தவர்.

அன்று அவர் கொடுத்த அறிக்கையின் சராம்சம் " விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் உள்ளே நடந்து கொண்டுருக்கும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து விடமுடியாது".  அன்றைய டெல்லி அதிகாரவர்க்கத்தினரருக்குள் விடுதலைப்புலிகள் குறித்து அபிப்ராய பேதம் இருந்த போதிலும், மாற்றுக்கருத்து இருந்தவர்கள் கூட இவரின் கூற்றை குறை கூறுபவர் எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  அப்போது அணைவருக்கும் இது போன்ற அன்றைய சூழ்நிலைகள் தெரிந்தே தான் இருந்தது.  ஆனால் யார் பூணைக்கு மணியைக் கட்டுவது என்ற லாபியின் காரணமாகத் தான் இவரின் அறிக்கையும் அன்று காகிததாளாக மாறியது.  கார்த்திகேயனைப் பொறுத்தவரையில் எப்போதும் போல தன்னுடைய கடமையை சரிவர செய்த திருப்தி.  அத்துடன் அன்று அதில் இருந்து ஒதுங்கி விட்டார்.  தன்னிடம் இந்த புலனாய்வு பொறுப்பை ஒப்படைத்த போது அவர் மனதிற்குள் நிணைத்து இருந்த யோசனை இன்னும் வியப்புக்குரியது.  " இந்த படுகொலையில் விடுதலைப்புலிகள் சம்மந்தப்பட்டுருக்க கூடாது".   ஆனால் காலம் செய்த கோலம் அலங்கோலமாய் போய்விட்டது. ஒரு தமிழர் என்ற விதத்தில் விடுதலைப்புலிகளின் எந்த கொள்கைகளையும் தன்னுடைய தனிப்பார்வையால் விமர்சிக்காதவர். தான் பணிபுரிந்து கொண்டுருந்த கடமையை கண்ணும் கருத்துமாய் நேர்மையான முறையில் கொண்டு சென்றவர்.
                                            ஸ்ரீபெரும்புதூர் நினைவு பகுதி
கோயம்முத்தூரில் பிறந்தவர்.  விவசாயம் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்.  தன்னுடைய 35 வயதில் இந்திய காவல் துறை பணியில் சேர்ந்தவர்.  கர்நாடக மாநிலத்தில் பணியில் சேர்ந்து உச்சகட்டமாக முதல் அமைச்சராக இருந்த குண்டுராவ் நம்பிக்கையை பெற்று அவரின் கண் இமை போல் இருந்தவர்.  கடைசி வரையிலும் முறையற்ற வாழ்க்கை வாழாமல், மூட நம்பிக்கைகள் இல்லாத ஆன்மிகத்தையும் வளர்ந்து கொண்டுருக்கும் விஞ்ஞான அறிவையும் தன் இரு கண்களாக பாவித்தவர்.  இவரிடம் புலனாய்வு பொறுப்பை ஒப்படைக்கும் முன்பு இவருக்கு மேல் இருந்து அத்தனை அதிகாரிகளும் பயந்து ஓதுங்கிய காரணத்தினால் மட்டுமே இந்த பொறுப்பு இவரிடம் வந்து சேர்ந்தது.  வந்த சேர்ந்த பொறுப்பையும் பலரும் அச்ச வார்த்தைகளால் இவரின் நம்பிக்கையை ஆட்டம் காண வைக்க முயற்சித்த போதிலும் உறுதியாய் நின்றவர்.  இறுதியில் ஜெயித்தவர்.

தலைமைப்பண்புக்கு உரிய அத்தனை குணங்களும் பெற்றவர்.  இந்திய ஜனநாயகத்தில் உள்ள அரசியல் புழுக்களை உணர்ந்த காரணத்தினால் மட்டுமே, எந்த அளவிற்கு தன்னால் முடியுமோ? முடிந்தவரைக்கும் முயற்சித்து பார்த்தவர்.  இவர் இந்த புலனாய்வை முடிவுக்கு கொண்டு வந்த போது இவர் மேலும் விமர்சனங்கள் எழுந்தது.  தமிழ்நாட்டில் வைகோ, அவர் தம்பி ரவிச்சந்திரன், ராஜீவ் காந்தி இறந்த நாள் அன்று ஏற்பாடு செய்து இருந்த அன்றைய பொதுக்கூட்டத்தை ரத்து செய்த திமுக அதன் தொடர்பான தலைவர்கள் என்று நீண்ட பட்டியலில் உண்டு.  இது போல எழுந்த சந்தேகத்தின் போது விசாரிக்க வேண்டியவர்களை விசாரிக்காமல் விட்டதும், அதற்கு மேலும் அவர்களை விசாரிக்க அனுமதி அளிக்காமல் போனதும் என்று எப்போது போல தூற்றுவார்கள் இன்று வரையிலும் உண்டு.  அது குறித்து இறுதியில் பார்க்கலாம்.

இவருடைய புலனாய்வு குழுவினருக்கு மாற்று ஏற்பாடாக ராஜீவ் காந்திக்கு நியமித்து இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் என்ன குளறுபடிகள் நடந்து இருந்தது என்பதை கண்டதறிவதற்காக உருவாக்கப்பட்ட ஓய்வு வெற்ற நீதிபதி வர்மா கமிஷன் மற்றும் ஜெயின் கமிஷன் கண்டனங்கள் என்று தனியான பாதை ஒன்று உண்டு.  குறை நாடி குற்றமும் நாடி என்று எடுத்துப் பார்த்தால் இந்தியாவில் ஓட்டை உடைசல் சட்டங்களுக்கிடையே, பணம் பதவி அதிகாரம் பெற்றவர்களையும் தாண்டி, அவர்களின் தொடர்ச்சியான மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை மீறி எடுத்துக்கொண்டால் இவர் மூலம் கிடைத்த விடைகள் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல அது தனி மனிதர் மற்றும் ஒரு குழுவினரின் சாதனை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
                              கார்த்திகேயன் புலனாய்வு குழுவின் தலைமைப் பொறுப்பில் வந்து அமர்ந்த போது அப்போது பார்த்துக்கொண்டுருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் ஐ.ஜி பொறுப்பில் இருந்தவர். இந்த புதிய பொறுப்பில் வந்து அமர்ந்த போதும் கூட தான் ஏற்கனவே மத்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டபடி இந்த இரண்டு பொறுப்புகளையுமே சேர்த்து பார்த்துக்கொண்டு பயணித்தவர்.  இவர் சிபிஐயின் கிளை அலுவலகத்தை சென்னையில் உருவாக்கிய போது அதற்கு தேவையான அதிகாரிகளை CPRF. NSG.TAMIL NADU POLICE போன்ற பல்வேறு துறைகளில் இருந்து தகுதி நேர்மையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்.  இயங்கும் அலுவலகம் பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு சென்னை கீரின்வேஸ் சாலையில் எவரும் பயன்படுத்தாமல் இருந்த " மல்லிகை" இல்லத்தை சீரமைத்து தங்களுக்கு உரியதாக மாற்றினார்கள். அலுவலகம் உருவாக்கியது முதல் புலனாய்வு குழுவினருக்குத் தேவையான் அத்தனை உள் கட்டமைப்பு வசதிகளையும் மிகுந்த போராட்டத்தின் மூலமே சாதிக்க முடிந்தது.  மேற்கொண்டு உதவி கேட்டவர்கள் அத்தனை பேருமே பயந்து ஓதுங்கிக்கொள்ளும் " விடுதலைப்புலிகள்" குறித்த பயமே அன்று நிலவியது.  உச்சகட்டமாக இந்திய இராணுவத்தின அதிகார வர்க்கம் கூட " விடுதலைப்புலிகள் குறித்த எந்த விசயங்களையும் எங்களுடன் சம்மந்தப்படுத்தாதீர்கள் " என்கிற அளவிற்குத் தான் அவர்கள் பெற்று இருந்த கடந்த கால பாடங்கள் அவர்களை பேச வைத்தது.

ஸ்ரீ பெரும்புதூரில் இன்னிசை நிகழ்ச்சி நடத்திய சங்கர் கணேஷ் குழுவினர் மூலம் எடுக்கப்பட்ட படங்களைப்போலவே கவனமாக கைப்பற்ற ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் மட்டுமே அன்றைய சூழ்நிலையில் இவர்களுக்கு கிடைத்த ஆதாரங்கள்.  அந்த புகைப்படங்களும் புலனாய்வு குழுவினர் கைக்கு வந்து சேர்வதற்குள் ஹிண்டு பத்திரிக்கைக்குச் தடயவியல் துறையினர் மூலம் சென்று அதுவும் மறுநாள் பத்திரிக்கையிலும் வந்து விட தொடக்கமே குறுக்குப் பாதையில் வழக்கு போகத் தொடங்கியது. கொழும்பு சென்று தகவல்கள் திரட்டுதல், சம்பவம் நடந்த இடத்தில் நடந்த நிகழ்வுகளை விசாரித்தல், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தப்பிப்பிழைத்து இருந்தவர்களை அழைத்து வேறு ஏதாவது தடயம் கிடைக்குமா? என்ற அலசல் என்று எத்தனை முறை சுற்றி சுற்றி வந்தாலும் புகைப்படத்தில் பார்த்த சிவராசன் தணு நளினி குறித்து எதுவும் சேகரிக்க முடியவில்லை.

புகைப்படத்தில் சந்தன மாலையுடன் நின்று கொண்டுந்த தணு தான் வெடிகுண்டாக மாறியவர் என்பதை சிதைந்த வடிவில் திரட்டப்பட்ட உடைகளும், அதில் ஒட்டியிருந்த திசுக்களையும், இறந்து கிடந்த தணு உடம்பில் உள்ள திசுக்களையும் ஒப்பிட்டு (ஹைதராபாத் சென்டர் பார் செல்லுலர் அண்டு மாலிக்யூலர் பயாலாஜி) உறுதிப்படுத்திய போது தான் தணு என்பவர் தான் இதற்கு பயன்பட்ட சூத்திரதாரி என்பதை முதலில் புரிந்து கொண்டனர்.  அதன் தொடர்ச்சியாக படங்களில் தணுவுடன் இருந்த சிவராசன் அருகில் இருந்த நளினி.  இதற்கு பின்னால் உள்ள " வட்டம் " என்று அப்போது தான் புலனாய்வு பார்வை ஒரு வழி உருவானது. உருவாக்கம் பெற இவர்களின் கற்பனை மட்டுமே அப்போது முதலீடாக இருந்தது.  ஆனால் உண்மைகள் என்பது வெகு தொலைவில் இருந்தது?

மே 22ந் தேதி உள்ளே வந்த கார்த்திகேயன், வழக்கை பதிவு செய்த 24ந்தேதி இரண்டு நாட்களுக்குள் உலகம் முதல் உள்ளுர் வரை உள்ள ஊடகங்கள் பட்டாசு வெடித்து பரபரப்பை ஆரம்பித்து இருந்தது. எது உண்மை? எது பொய்? என்பதை இனம் பிரித்து நம்பிக்கையை உருவாக்குவதே பெரும்படாக இருந்தது. ஆனால் அப்போது இவர்கள் எதிர்பார்க்காத ஹரிபாபு அப்பா கொடுத்த சம்மந்தம் இல்லாத அறிக்கை " என் மகனுக்கும் விடுதலைப் புலிகளும் தொடர்பு இல்லை."  என்று செய்தி பத்திரிக்கைகளில் வர அப்போது தான் சந்தேகம் என்ற புள்ளி, இந்த கொலைக்குப் பின்னால் சார்ந்து இருந்த முக்கிய புள்ளிகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. தங்கள் கையில் இருந்த புகைப்படங்களை பத்திரிக்கைளில் வெளியிட்டு, இவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி வெளியே வர வந்த எத்தனையோ அழைப்புகளில் முக்கியமான துப்புக்கு உதவக்கூடிய அழைப்பும் வில்லிவாக்கத்தில் இருந்து வந்தது.

" எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்தவர் இந்த புகைப்படத்தில் உள்ள நளினி. அவர்களை பார்க்க வருபவர் இந்த ஒற்றைக்கண் மனிதர். நளினியுடன் தங்கியிருந்தவர்கள் மற்ற இரு பெண்கள்.  படுகொலை நடந்து முடிந்த அடுத்த இரண்டு மூன்று தினங்களும் இங்கே இருந்தார்கள்.  நளினி அடையாறில் பணிபுரிந்தவர். இவர்களைப் பார்க்க தாஸ் என்பவர் வருவார்.  மே 26ந் தேதிக்கு மேல் எவரும் வருவதில்லை"

பாதை புலப்பட்டது?

Thursday, March 04, 2010

விதி ராஜீவ் மதி பிரபாகரன்

புலன்களால் அறியப்படும் அத்தனை விசயங்களையும் நமக்கு விஞ்ஞானம் உணர்த்துகிறது.  விஞ்ஞானத்தை பொறுத்தவரையில் இறுதி முடிவு என்பதை தீர்மானமாய் உணர்த்திக் காட்டிவிடும். இல்லை என்றால் அதைக் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை.  அடுத்த ஆராய்ச்சிக்கு அவர்கள் நகர்ந்து விடுவார்கள். காரணம் கிடைக்கும் முடிவு முக்கியம்.  வெகுஜனம் ஏற்றுக்கொள்வது அதைவிட முக்கியம்.

வளர்ந்த வளரும் விஞ்ஞானத்தின் கதை என்பது இது மட்டும் தான். விஞ்ஞானத்தால் பெற்ற வளர்ச்சியினால் முகம் தெரியாமலே நீங்களும் நானும் உறவாட முடிகின்றது.  மெய்ஞானத்தின் பாதை என்பது முற்றிலும் வேறானது. முடிந்தவரைக்கும் அன்பை எண்ணங்களால் கடத்த முடியும். அன்பு சூழ் உலகம் என்பதை கடத்திக் கடத்தியவர்களின் வாழ்க்கையை நாம் உள்ளுற உணர்ந்தால் மட்டுமே முடியும். உணராமல் உளறல் மொழி கொண்டு உருக்குலைக்குவும் நம்மால் முடியும்.  பாதிப்பு என்பது பட்டால் தெரியும். பட்டு நகர்ந்து போனவர்கள் அத்தனை பேர்களும் தான் மட்டுமல்லாது நாளைய தலைமுறைகளையும் தறுதலையாக்குவதில் விற்பனராகத்தான் இருக்கின்றனர்.

மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடு என்பதே இங்கிருந்து தான் தொடங்குகிறது. புலன்களுக்கு அப்பாற்பட்ட விசயங்களில் கவனம் செலுத்தியவர்கள் அத்தனை பேர்களின் பூர்விகமும் இங்கிருந்து தான் தொடங்குகிறது.மேலை கலாச்சாரத்தின் தொடக்கமென்பது ஒன்று எண்ணங்களை இங்கிருந்து கடன் பெற்று இருப்பார்கள் அல்லது வந்து கற்றுப் போய் இருப்பார்கள். நம்மைப் பொறுத்தவரையிலும் இன்று வரைக்கும் கடல் தாண்டி திரும்ப உள்ளே வரும் போது தான் அதற்கு தனி மரியாதை. கருத்தை முன்னிறுத்து வரும் தத்துவமாக இருக்கட்டும் அல்லது கழுகை முன்னிறுத்தி வரும் மேல் நாட்டு படமாக இருக்கட்டும்.  

பாரத பூமி பழம்பெரும் பூமியுடன் ஆன்மிக பூமி என்பதும் இதனால் தான்.  உணர்ந்தவர்களை ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள்,யோகிகள், சித்தர்கள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர்.  அவர்களால் உலகிற்கு உணர்த்தப்பட்ட அத்தனை விசயங்களும் நவீன கால விஞ்ஞானத்திற்கு சம்மந்தம் இல்லாதது. மொத்த தத்துவமும் உன்னை நீ உணர் என்பதாகத்தான் இருக்கிறது. இடைச்செருகல் என்பது இன்று வாந்தி பேதியாகி வந்தவர்கள் போனவர்கள் என்று எல்லோருமே கடவுள் வேடம் போட்டுக்கொள்ளும் அளவிற்கு உருமாற்றம் தந்துள்ளது. உணர்ந்தவர்கள் உருவாக்கிவிட்டுச் சென்ற வானவியல் சாஸ்திரம் என்பது அடிப்படை மக்களின் மூலக்கூறு. அவர்கள் பணம் செலவழிக்காமல் மனம் என்ற பாதையில் சென்று கண்டறிந்தவர்கள்.  இந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனையும் மறுக்கப்பட்ட முடக்கப்பட்ட வெறும் மூட நம்பிக்கை என்பதாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.
உருவாக்கி வைத்த ஏடுகளாக, சுவடிகளாக புரியாத அர்த்தத்தில் பூடகமாய் இருந்தது.  இறுதியில் புதைபொருளாகவும் மாறிவிட்டது. இன்று பகுத்தறிவால் ஒத்துக்கொள்ள முடியாதது என்று வாத விதாண்டாவதத்தில் வந்து நிறுத்தியுள்ளது. இடையில் வந்த மூட நம்பிக்கைகளும் சேர்ந்து அதன் மிச்சமுள்ள மூச்சையும் நிறுத்திவிடும் சூழ்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

சொன்னவர்கள் உணர்த்தியதை உள் வாங்கியவர்கள் எண்ணிக்கையும் அதிகமில்லை. தொடக்கம் முதல் நாட்டுக்கும் பாதுகாப்பு இல்லை.  நாட்டை ஆண்டுவிட்டு போனவர்களுக்கும் அந்த எண்ணம் தோன்றவில்லை. உள்வாங்கியவர்களும் அதிலும் மிகக் குறைவு.   உள்வாங்கியவர்களில் அதை ஊருக்கு உரைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் மிஞ்சவில்லை. மிஞ்சியது அத்தனையும் அரைகுறையும் அவசரத்தில் இவற்றை பணம் காய்த்து தொங்கும் மரமாக மாற்ற நினைத்தவர்களுமே. அவர்கள் சொல்லிவிட்டுப் போன புலன்களை அடக்கியாள வேண்டும் என்பது இப்போத எந்த வடிவத்தில் வந்துள்ளது?  நவீன யோகா என்று பெயர் மாற்றத்துடன் சர்வதேச சாமியார்கள் என்ற காம அவதாரத்தில் வந்து முடிந்துள்ளது. நம்முடைய கலையை நம்மிடமே விற்று காசு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனாலேயே இன்றைக்கு மெய் ஞானம் என்ற வார்த்தை கேள்விக்குறியாக கேலிக்குறியாக மாறிவிட்டது.

நம்புவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் எப்போதுமே பிரச்சனைகள். ஆனால் எதையும் நம்பாதவர்களின் வாழ்க்கை என்பது இறுதி வரைக்கும் மற்றவர்களுக்கு பாடம்.நல்லதோ கெட்டதோ நம்பாதவர்களின் போராட்டங்கள் தான் இந்த உலக சரித்திரத்தையே மாற்றியுள்ளது.

" ராஜீவ் காந்தி படுகொலை " என்ற இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இன்று வரை நம்முடைய கண்களுக்கு புலனாகாத அரசியலைப் போல அறிவுக்கு எட்டாத பல விசயங்களும் கலந்து இருக்கிறது.

இந்தியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளின் பக்கத்தில் நடந்த மகாத்மா காந்தி, இந்திரா காந்தி படுகொலைகளுக்கு அடுத்து ராஜீவ் காந்தி கோர மரணம். சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை படித்து விட்டு அவரவருக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு போய்விடுகிறோம்.  மாணவர்களுக்கு விடுமுறை, பத்திரிக்கைகளுக்கு அதன் புலனாய்வு அறிக்கைகள், தலைவர்களுக்கு அதிகாரப் போட்டி. ஆனால்?

இந்தியாவில் நடந்த மூன்றிலும் ஏராளமான ஓற்றுமைகள்.  நடந்த நிகழ்ச்சிகளுமே ஏறக்குறைய ஒன்று.  பாதைகள் வேறு.  நோக்கம் வேறு.  முடிவு ஒன்று.

காந்தி சுடப்படுவதற்கு முன்பு, இவரை சுடப்போகிறார்கள் என்று உள் வட்டாரத்திற்குள் இருந்த அத்தனை பேர்களுக்கும் தெரியும்.  காந்திக்கே என்னுடைய இறுதி நேரம் நெருங்கி விட்டது என்பதை அவர் உள் மனம் உணர்த்தி விட்டது.  அவரே அவரது தினசரி குறிப்பில் கூட எழுதி வைத்து விட்டார். அப்போது இதை உணர்ந்தவர்களில் காப்பாற்றுபவர்கள் எவரும் தயாராய் இருக்கவில்லை என்பதை விட காந்தி எப்போது சாவார் என்பதைத்தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தார்கள்.  அவரை உண்மையிலேயே காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்தவர்களைக் கூட பிர்லா மாளிகையில் இருக்க " சூழ்நிலை " அனுமதிக்கவில்லை. முடிவுக்கு அவரும் காரணம்.  முயன்றவர்களின் நோக்கமும் காரணமாக இருந்தது.

இந்திரா காந்தி சுடப்படுவதற்கு முன்பு, உளவுத்துறை அறிக்கை தினந்தோறும் கதறியது. உள் வட்டாரத்தில் பாதுகாப்பு சமாச்சாரத்தில் சீக்கியர்கள் எவரும் வேண்டாம். ஒவ்வொரு நிகழ்வையும் உற்றுக் கவனியுங்கள் என்று. ஆனால் அன்று " நாங்கள் மேம்சாஹிப்பை கொல்லக் கூடியவர்களா?" என்று கண்ணீர் விட்டுக் கேட்டவர்களை நம்பி ஆர்.கே.தவாண் அனுமதித்த அனுமதி என்பது இறுதியில் இந்திரா காந்திக்கு காலனிடம் செல்ல கொடுத்த அனுமதி சீட்டாக மாற்றி விட்டது. 

தீர்மானிக்கப்பட்டவைகள் திசைகள் மட்டும் மாற்றம் பெற்றவையாக இருக்கிறது.  ஆனால் பயணம் இனிதே வந்து முடிவடைந்து விடுகிறது. இதுவொரு புலம்பல் என்று எடுத்துக்கொள்வதை விட இறப்பதற்கு முதல் நாள் முந்தைய வாரம் வீட்டில் வயதானவர்கள் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்மிடம் அப்போது அவர்கள் சொன்னதை இன்று நினைவில் கொண்டு வாருங்கள்.  " நாளை நான் இருக்க மாட்டேன் " என்று தைரியமாக சொல்லிவிட்டு அதே போல் தலைசாய்ந்தவர்களும் இருக்கிறார்களே?  எப்படி?

அதீத மனோரீதியான காரணங்கள், உள் மன வேகம் என்று எத்தனையோ நமக்கு சாதகமான விஞ்ஞான வார்த்தைகளைப் போல சமாதானப்படுத்திக்கொண்டாலும் தீர்மானிக்கப்பட்டவைகள் திசை திரும்பாமலே அதன் பயணத்தை தொடங்கி முடியும் நேரத்தில் முடிவாய் வந்து நிற்கிறது.

இந்த " சூழ்நிலை" தான் ராஜீவ் மரணத்திலும் இருக்கிறது.  கொல்வதற்கான காரணங்கள், கொல்ல வேண்டும் என்று நினைத்தவரின் நியாயங்கள் என்ற இரு பக்கத்தையும் விட ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்திற்கு இவரை கொண்டு வந்து சேர்த்தது முதல் ஆச்சரியம் என்றால், அவரும் இங்கு வந்து தான் நிற்பேன் என்று பிடிவாதமாய் வந்து நின்றதும் அடுத்த ஆச்சரியம்.

ராஜீவ் காந்தி இறந்த தினம் மே 21 1991 இரவு 10.20.  தேர்தல் பொதுக்கூட்டத்திற்காக டெல்லியில் இருந்து கிளம்பியது மே 20 .  பயணம் முடித்து விட்டு டெல்லிக்கு மீண்டும் வந்து சேர்வதற்காக குறிக்கப்பட்ட தினம் மே 22.  அவருடைய மொத்த வாழ்க்கையின் விதி என்ற புரியாத எழுத்துக்களால் 48 மணி நேரத்திற்குள் முடிக்கப்படவேண்டும் என்று எழுதப்பட்ட கோர்வையற்ற வெளியில் தெரியாத சூத்திரம் எப்போது தொடங்கியது தெரியுமா?

இதன் உள்கட்டமைப்பு ஏற்பாடு வருட தொடக்கத்தில் தொடங்கியிருந்தாலும் ஏப்ரல் 30 1991 நள்ளிரவில் கள்ளத்தோணி மூலமாக கோடியக்கரை கடற்கரை பகுதியில் உள்ளே வந்த இற்ங்கிய சிவராசன் என்பவர் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியது. அப்போது தான் விதியின் எழுத்தான பிரம்ம சூத்திரம் மனித சூத்திரமாக மாறி தீர்மானிக்கப்பட்டது. சூத்திரதாரிகள் எப்போது இந்த தீர்மானத்தை உருவாக்கினார்களோ ஆனால் அவர்களின் சார்பாளர்கள் உள்ளே வந்து இறங்கியது ராஜீவ் காந்தி இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பு. இதற்கு முன்பே சென்னையில் சிவராசன் வாழ்ந்து இருந்தாலும், ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட பத்பநாபாவை கொன்று அழித்த பணி இனிதே நிறைவுக்கு வந்திருந்த போதும், அதன் தொடர்பாக இலங்கை சென்று பாராட்டுரை வாங்கி  நம்பிக்கை நாயகனாக மாறி, ஓப்படைக்கப்பட்ட அடுத்த பணிக்கு உள்ளே வந்து இறங்கிய தினம் இது.  அன்றைய தினம் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் தான் சென்னைக்கு கிளம்பி வந்தனர்.  முறைப்படியான கூட்டணியினரின் உழைப்பென்பது உழைப்பாளர் தினத்தில் இருந்து தான் உழைப்பை தொடங்கினர்.

வந்து இறங்கிய சிவராசனுக்கு இறங்கும் வரைக்கும் எந்த தடங்கலும் இல்லை. வருகின்ற தோணி கரையைத் தொடும் முன்பு எப்போதும் போல கரையில் இருப்பவர்கள் கொடுக்கும் சங்கேத பாஷை தான் அவர்களின் மொத்த அனுமதிக்கான கடவுச்சீட்டு. அனுமதி இல்லையென்றால் அலையை ரசித்துக்கொண்டு நடு இரவென்றாலும் மிதந்து கொண்டே இருக்க வேண்டியது தான். கரையில் இருந்தவர்கள் சங்கேத பாஷைகளை தாமதமாக புரிந்து கொண்டவர்களால் உருவான தாமதம் ஒன்று மட்டும் தான் தோணி கரைக்கு வராமல் வந்தவர்களுடன் தூரத்தில் நின்று கொண்டுருந்தது.  ஆனால் சிவராசன் அதற்குள்ளே அங்கிருந்து நீந்தி கரைக்கு வந்து விட படகில் இருந்தவர்களும் கரை சேர்ந்தனர்.  பிரபாகரன் பார்வையில் பட்ட துடிப்பானவர்கள் என்றால் அவர்களின் திறமையின் துள்ளல் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். கடைசியில் கடமையிலும் கண்ணாய் இருந்து காரியத்திலும் ஜெயித்தனர்.

டெல்லியில் இருந்து தேர்தலுக்கு என்று காங்கிரஸ் கட்சியால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட " கிங் ஏர் " விமானத்தின் மூலம் முதலில் ஓரிஸ்ஸா, ஆந்திரா பிறகு தமிழ்நாடு கடைசியாக கர்நாடகா. இது தான் பயணத்திட்டம்.  ஆந்திராவில் விசாகபட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்னை வந்து சேர வர பயணத்திட்டம். கிளம்ப நினைத்த போது விமானத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளும் ரேடார் கருவி பழுதடைந்து விட்டது. முன்னாள் விமான ஓட்டியான ராஜீவ் முயன்றும் சரி செய்ய முடியவில்லை.  நாளை கிளம்பலாம் என்று விருந்தினர் மாளிகைக்கு திரும்ப அதற்குள் தயாராக இருந்த மற்றொரு கருவியை வைத்து விமானி சரி செய்து விட்டு அவரின் திரும்பி வர முடியாத இறுதி பயணத்தை அங்கிருந்து தான் தொடங்கினார். வந்து சேர நினைத்த போது உருவான தடங்கல்களை மீறி சரியான நேரத்தில் சரியான நபர்களிடம் கொண்டு வந்து சேர்த்த ஆச்சரியங்கள் நிறைய உண்டு.  ஆனால் அ்ததனையும் நாம் நம்பித்தான் ஆக வேண்டிய உண்மைகள்.  அன்று மவுனமாக சிரித்த விதியைப் போலவே வென்றவர்களும் சிரித்திருப்பார்கள்.

வாழப்பாடி இராமமூர்த்தி இங்கு நீங்கள் வரவேண்டாம் என்று இறுதி வரை போராடிப் பார்த்தவர்.  அவருக்கு இரண்டு காரணங்கள்.   வலுவான கூட்டணி.  இது போக இயல்பிலேயே போராட்டக்குணம் நிறைந்த அவரின் ஆளுமையை மீறி ராஜீவ் காந்திக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள். ஆனால் மூப்பனார் ராஜீவ் காந்தி வந்து தான் ஆக வேண்டும் என்று விரும்பினார் என்பதை ராஜீவ் காந்தியின் வருகைக்கு முக்கிய காரணம் வேறொன்றும் இருந்தது.

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரகதம் சந்திரகேசர் என்ற அம்மா வயதை ஒத்த பெண்மணிக்கு நன்றி கடன் காட்டும் விதமாக வந்து தன்னையே கடனாக கொடுத்து போய் மறைந்தார்.  மரகதம் சந்திரசேகர் இந்திரா குடும்பத்தில் உள் அறை வரைக்கும் சென்று உலாவிவிட்டு வருபவர்.  ராஜிவ் காந்தியால் ஆண்ட்டி என்று அழைப்படுபவர்.  அதற்கும் மேலே அவர் மேலே வைத்திருந்த பாசத்தின் காரணமாக ஆந்திராவில் இருந்து கிளம்பிய போது உருவான தடங்கல்களையும் மீறி கொண்டு வந்து சேர்த்தது. டெல்லியில் பயணத்திட்டத்தின் தொடக்கத்தில் ஸ்ரீ பெரும்புதூர் இருக்கிறாதா என்பதை மீண்டும் ஒரு முறை சோதித்து பார்த்துக் கொண்டு பயணப்பட்டவர் தான் ராஜீவ் காந்தி.  அவரை பொறுத்தவரையிலும் தான் காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு சேகரிக்க என்பதை விட தான் மரியாதை வைத்திருந்தவருக்காக வாக்கு சேகரிக்க ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டம்.  அவரின் வாழ்க்கையை பொறுத்தவரையில் முடிவு பெற வேண்டிய இறுதிக்கட்டம்.

பகுதி இரண்டு

பகுதி மூன்று

பகுதி நான்கு

பகுதி ஐந்து

பகுதி ஆறு

பகுதி ஏழு

பகுதி எட்டு

பகுதி ஒன்பது


பகுதி பத்து