Showing posts with label நியூசிலாந்து. Show all posts
Showing posts with label நியூசிலாந்து. Show all posts

Friday, September 17, 2010

நியூசிலாந்து -- துளசி கோபால் புத்தக விமர்சனம்.

இரண்டு பாகமாக இதுவரையிலும் நியூசிலாந்து குறித்து பொதுவான் விசயங் களைப் பார்த்தோம். இப்போது மொத்தமாக புத்தக விமர்சனமும் நியூசிலாந்து உருவான தலபுராணமும்..

நாம் பெருமைபடக்கூடிய மற்றும் பொறாமைடக்கூடிய நாடாக இருப்பதால் நீள் பதிவாக இருப்பதில் தப்பில்லை.

ஹேமா சமீபத்தில் சொன்ன ஒரு விடயம்.. " நாடுகள் மற்றும் அது சார்ந்த நடை முறை பழக்க வழக்கங்களைப் பற்றி படிப்பதில் தான் இப்போது ஆர்வம் அதிகமாக இருக்கிறது.  காரணம் சரித்திரம் பல விசயங்களை எனக்கு புரிய வைக்கிறது "  என்றார்.
இந்த நியூசிலாந்தின் தல புராணத்தைப் பற்றி படிக்கும் போது அவர் சொன்ன விசயங்கள் தான் நினைவில் வந்தது.  காரணம் இன்றைய நியூசிலாந்து சொர்க்கம் போல் இருக்கிறதே என்று அங்கலாய்ப்பவர்கள் இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் நம்ப முடியாத அளவிற்கு   நமக்குத்தந்துள்ள இத்தனை வரலாற்றுத் தகவல்களை படிக்கும் போது "இந்த சொர்க்கம் சும்மா வரவில்லை" என்று நினைக்கத் தோன்றுகிறது. 

நூலாசிரியருக்கு அமைந்த அதிர்ஷட வாய்ப்பான பார்த்த நூலகப் பணி என்பது
பலவிதங்களிலும் படிப்பவர்களுக்கு தவமில்லாமல் கிடைத்த வரம் போல உதவியாய் உள்ளது.

1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகமா கடல்பயணத்தின் மூலம் இந்தியாவைக் கண்டு கொண்ட பிறகு தான் தூர தேசங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்ற உந்து சக்தி உருவாக ஆரம்பித்தது.  ஒரே காரணம் வியாபாரம் மற்றும் அதிக லாப ஆசைகள் கொண்ட நேரிடையான கொள்முதல். 

16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்ததும் பக்கத்தில் ஈழத்திற்குள் சென்றதும் இதன் அடிப்படையில் தான் நடந்தது.  இந்த கதை தான் நியூசிலாந்திலும் நடந்துள்ளது.

1200 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து என்று இன்று அழைக்கப்படும் நாட்டிற்குள் உள்ளே வந்தவர்களின் பெயர் பாலினீஷீயன்கள்.   உள்ளே நுழைந்தவர்களின் வாழ்க்கைக் காலம் 30 முதல் 40வரைக்கும் இருந்தாலும் குழுவாக அங்கங்கே பிரிந்து வாழ்ந்து கொண்டு எளிதாக எங்கும் எளிதில் நகர்ந்துவிடக் கூடியதாய் உள்ள வகையில் அமைந்த வீடுகளை கட்டிக் கொண்டு வாழத் தொடங்குகிறார்கள். 

இதற்கு முன்னால் உள்ள புராணங்கள் புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதற்குப் பிறகு தான் நம்ம ஏழரை பகவான் ஆங்கிலே யர்கள் உள்ளே வருகிறார்கள். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு முன்பு வாழ்ந்த வர்களின் ஆயிரம் வருட வாழ்க்கையில் போட்டிகளும் பொறாமைகளுடன் வேறொன்றும் இருந்தது.  அது தான் சென்ற வாரங்களில் நியூசிலாந்தை புரட்டிப்போட்ட பூகம்பம் மற்றும் இதன் இலவச இணைப்பாக எரிமலைத் தாக்குதல்.
மூடநம்பிக்கைகள் என்பது இன்றைக்கு தான் உருவானதா?

இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல உலக நாகரிகம் வளர வளர பஞ்சபூதமான நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,வாயு போன்றவற்றை வணங்கிக் கொண்டுருந்த மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் நிறைய மாறுதல்கள் உருவாகத் தொடங்கியது. தொடக்கத்தில் உருவான எரிமலைக் குழம்பு மொத்தத்தையும் புரட்டிப் போட்டு விட உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த பழங்குடியினர் மிக எளிதாக ஒரு முடிவுக்கு வந்தனர்.

இதற்கு காரணம் நாம சூன்யக்காரின்னு சொல்லிக்கிட்டுருக்க ஹினோபாவ் (பாய், துணி முடைவதில் ரொம்ப கெட்டிகாரி) தான் காரணம்ன்னு ஏற்கனவே உள்ளே வைத்துக் கொண்டுருந்த பொறாமையால் எளிதாக ஒரு முடிவுக்கு வந்து ஊரை விட்டு துரத்தி விட்ட பிறகு தான் உள்ளே இருந்த பெண்களுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.  

காரணம் வேறொன்றுமில்லை.  நம்ம ஹினோபாவ் பார்க்கிறதுக்கு 60 கிலோ தாஜ்மஹால் ஐஸ்வர்யா போல் கண்களில் லென்ஸ் பொருத்தமலே சும்மா அம்சமா இருப்பாங்க.

உலகத்தில் நாகரிகம் தோன்றியதற்கு முக்கிய காரணம் பொறாமை.  மாற்றுக் கருத்து உண்டா? இந்த பொறாமை உருவாக்கியதே ஆசைகள். இந்த ஆசைகள் உருவாக உருவாக வளர்ந்த விஞ்ஞானத்தின் காரணமாக இன்று ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நீங்கள் இதை படித்துக் கொண்டு இருக்கீங்க.......

இப்படித்தான் இந்த நியூசிலாந்தின் தொடக்ககால தலபுராணத்தை வெகு சிரத்தையாக நுலாசிரியர் கோர்வையாக கொண்டு போய்க் கொண்டுருக்கிறார். தொடர்ந்து வரும் மாவோரியர்கள் வரைக்கும் பல ஆதாரபூர்வ தகவல்களுடன் தொண்டையில் நழுவிக் கொண்டு செல்லும் பால் பாயசம் போல செல்கிறது. . இந்த தொடக்க கால பொறாமையில் உருவான நியூலாந்து நாட்டின் வளர்ச்சி இன்று எங்கே வந்து நிற்கிறது தெரியுமா?  

அதுக்கும் நாம பொறாமைபட்டுத்தான் ஆகனும்.  ஆமாம் உலகில் ஊழல் குறைந்த நாட்டின் தரவரிசையில் நியூசிலாந்து இருப்பது இரண்டாவது இடம்.  நியூக்ளியர் இல்லாத நாடு..  இன்னும் பலப்பல அதிர்ச்சிகள் இந்த நூல் முழுக்க இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் " சூரியன் மறையாத நாட்டை ஆண்டவர்கள் " என்று சரித்திரம் படிக்கிற அத்தனை பேர்களும் தெரிஞ்ச சமாச்சாரத்திற்கு முன்பு வேறொரு கதையும் உண்டு.  எல்லாமே வணிகம் சார்ந்த ஆசைகள். 

தொடக்கத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருந்த வணிகர்களை பீதியை கிளப்ப வைத்தவர்கள் டச்சு மக்கள். ஆங்கிலேயர்களெல்லாம் சும்மா டம்மி.  இவங்க தான் சும்மா கில்லி மாதிரி ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் புகுந்து சுனாமி மாதிரி வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. இந்தியாவில் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு வந்த டச்சு மக்கள் சந்தைக்கு வருவது போல கப்பலில் வருவாங்க. சாமான்களை வாங்குவாங்க. ஒன்னுக்கு பத்தா குறைத்தும் கொடுப்பாங்க. இதுக்கு மேலே மதம் மாற வைப்பாங்க.  உச்சகட்டமாய் பெரிசா தர்றேன்னு சொல்லி நடுக்கடல்ல கொண்டு போய் தூக்கி எறிஞ்சுட்டு போயிடுவாங்க. டச்சு மக்களை பார்த்தாலே தொடக்க கால இந்தியாவில் டச்சு பண்ணக்கூடாதுன்னு ஓட்டமா ஓடியிருக்காங்க.  அந்த ஐயாமாருங்க தான் நியூசிக்குள்ளேயும் தங்கள் புனித காலை எடுத்து வச்சுருக்காங்க.

1642 ஆம் ஆண்டு ஏற்கனவே வியாபாரம் செய்துக்கிட்டுருந்த டச்ச மக்கள் ஜாவா (இந்தோனேசியா) வில் இருந்து கிளம்பி ஆறுமாசம் பிரயாணம் செய்து  நியூசிலாந்தின் உள்ளே வந்தா நம்ம இந்தியா மாதிரி வாங்க ராசா, வாங்க தொரைமாருங்களான்னு எவரும் வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடாம வேறொரு காரியம் செய்தாங்க.

கும்மாங்குத்து கேள்விபட்டுருக்கீங்களா?

வந்து இறங்கிய மாவோரியர்கர்கள் குத்தின குத்துல துண்டக் காணோம் துணியை காணோம்ன்னு ஓட்டம் பிடிக்க ஆரம்பிச்சாங்க. கப்பலை ஒவ்வொரு இடமா நகர்த்தி, அப்படியே எவ்னாவது இளிச்சவாயன் சிக்குவானான்னு பார்த்து பயத்தோடு இறங்கிய இடம் தான் STATEN LAND.

டச்சு மக்கள் வைத்த பெயர் தான் பிறகு ஐரோப்பாவில் நோவா ஸீலான்டியா என்று மாறியது. . ஏற்கனவே கூட வந்த நாலு பேரையும் இழந்து கஷ்டப்பட்டு வந்து இறங்கி பெயர் சூட்டும் விழாக்கூட வைக்காமல் திரும்பி போயிட்டாங்க. 

இதுவே தான் ஆங்கிலேயர் இங்கு வருவது வரைக்கும் நடந்துக்கிட்டு இருந்து இருக்கு. ஒவ்வொரு நாட்டிலும் இருந்து நியூசிக்கு வருவாங்க.  மாவோரிகளின் எதிர்ப்பு தாங்க முடியமா பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடிடுவாங்க.  இந்த எதிர்ப்பு எந்த அளவுக்கு இருந்துச்சு தெரியுமா?  1772 ல் உள்ளே வந்த .பிரஞ்சுகாரர் (MARION DU FRESNE)  உடன் வந்த 15 மாலூமிகளை கொன்றதோடு மட்டுமல்லாமல் மசாலா எதுவும் சேர்க்காமல் மொத்த மக்களையும் அப்படியே சாப்பிட்ட பிறகு தான் மாவேரிகளுக்கு கோபம் அடங்கியது.

ஆனால் நம்ம ஆங்கிலேயே பகவான் எப்பவும் கொஞ்சம் வித்யாசமானவங்க தானே?

ஒரு நாட்டுக்குள் உள்ளே நுழைய அவர்களின் மதம் முதலில் உள்ளே வரும்.  அப்புறம் மக்களும் மதம் பிடிக்க வச்சுடுவாங்க. இதைப் போலத்தான் இங்கு உள்ள வந்த (1814) மிஷனரி சார்பாக வந்தவர் பெயர் சாமுவேல் மார்ஸ்டன். ஆனால் இந்தியா போல அவ்வளவு சீக்கிரம் இவங்க பப்பு மாவோரிகளிடம் வேகவில்லை.

கிட்டத்தட்ட 11 வருசம் மாறி மாறி ஒவ்வொரு பாதிரிமாருகளும் உள்ளே வந்து பாதிதான் கரைக்க முடிந்தது. எழுத படிக்க கற்றுக் கொடுத்தது எப்படி தெரியுமா?  நாங்க சொல்றத கேட்டா ஆளுக்கு ஒரு துப்பாக்கி இனாம்ன்னு கூவிக்கூட
பார்த்துருக்காங்கன்னா பாத்துக்கங்களேன்.

துப்பாக்கி கையில வாங்கினவுங்க என்ன செய்வாங்க?. ஒவ்வொரு குழுவும் அடுத்த குழுவோட மோத ஆரம்பித்த நிலமெல்லாம் ரத்தம் தான்.  நல்லவேளை ஆங்கிலேயர்கள் துப்பாக்கியை அறிமுகம் செய்யாமல் இருந்து இருந்தால் இவங்களும் மாவேரியர்களுக்கு மசாலா சோக்காத இறைச்சியா மாறிப் போயிருப்பாங்க.

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம்

பெரிதான வியாதிகள் இல்லாமல் வாழ்ந்த மாவோரியர்களின் வாழ்க்கையில் இந்த ஆங்கிலேயர்கள் உள்ளே வந்த போது இலவச இணைப்பாக வேறொரு விசயமும் உள்ளே வந்தது.?
அம்மை தொடங்கி சளி நோய்கள் கண்டகருமாந்திர நோய்கள் வரைக்கும் அத்தனையும் உள்ளே வந்து விட அதில் இறந்த மாவோரியர்கள் அநேகம்.

அப்புறமென்ன?  ஏற்கனவே வியாபாரத்தின் மூலம் வளங்களை கடத்த தொடங் கிய மாதிரி மாவேரிகளின் கட்டமைப்பு சிதைய ஆரம்பித்தது.  மெதுவா அவங்க மதமான கிறிஸ்துவம் பரவ ஆரம்பிக்க இப்ப பண்ட மாற்று முறை மாறி காசு பணமெல்லாம் புழங்க......................

ஆட்டம் பாட்டம் தான்.

மாவோரிகள் மேட் இன் ஆங்கிலேயர்களாக மாறிப்போன காலமிது. 

ஆங்கிலேயர்கள் உள்ளே இருந்தாலும் மாவோரியர்கள் குழுபோல் தான் உள்ளே தீவு முழுக்க பரவியிருந்தாங்க.  இப்படித்தான் 1833 ல் மாட்சிமை தாங்கிய மகாராணியின் ஆளுமைக்குள் உள்ள நாடுன்னு இந்த தொடக்க கால நியூசிலாந்தை மாற்ற வைக்க ஏற்பாடு நடந்தது. . 

இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னன்னா மாவோரிகளின் வாழ்க்கையில் உள்ள பழக்க வழக்கங்களும் இந்தியப் பழக்கவழக்களும் பல இடங்களில் ஓரே மாதிரித்தான் இருக்கு.  ஒரே ஒரு பெரிய வித்யாசம் மட்டும் உண்டு.  

நாம் எப்போதும் மத்தவங்களை வந்து முதுகு மேலேயும் உட்கார்ந்துக் கப்பான்னு சொல்லுவோம். ஆனால் மாவோரியர் அந்த விசயத்தில மட்டும் ரொம்பவே வித்யாசமா இருக்காங்க.  முதுகு மட்டுமல்ல உள்ளே வந்த மற்ற நாட்டு மக்களின் முட்டிக்காலையும் சேர்த்து சூப்பு வச்சு குடிச்சுருக்காங்க.

1975 ல் கடன் வாங்கி கல்யாணம் மாதிரி சுயதேவைகள் பூர்த்தி செய்ய கடன் வாங்கித் தான் நாட்டை மேலே கொண்டு வந்துருக்காங்க. தொடக்கத்தில் இது அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்தாலும் தம் கட்டி கொஞ்ச கொஞ்சமா மேலே வரத் தொடங்க நம் கண்களுக்குத் தெரிவது தான் நியூசிலாந்து நாட்டின் இன்றைய வளர்ச்சி. 

ஆனால் நம்ம தலைவர்கள் மக்கள் நலம் என்பதை தன் குடும்ப நலம் என்று நினைத்துக் கொண்டவர்கள்.  நியூசிலாந்து தலைவர்கள் பொது மக்கள் நலம் என்று பார்க்க இன்றைக்கு இந்தியாவின் கடவுச்சீட்டை காகித தாள் போல மற்ற நாடுங்க பார்க்கின்ற நிலைமை.

நியூசிலாந்தில் வெள்ளையர்கள் மட்டுமே குடியுரிமை பெற தகுதியுடைவர்கள் என்கிற நிலைமையை உடைத்த இந்தியர்கள் யார் தெரியுமா? நம்ம குஜராத் மக்கள்.

உள்ளே நுழைந்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் வைத்து தங்களை வளர்த்துக் கொண்டது முதல் காரமான சமோசா சாப்பிடுவது வரைக்கும் மக்கள் சும்மா ஜம்முன்னு தங்களை ஆழ அகல நிலைநிறுத்திக்கிட்டாங்க. 

இப்பக்கூட பாருங்க.  ஆஸ்திரேலியாவில் ஒரு குஜராத் மாணவன் அடி வாங்கி னான் என்றால் எப்படி பொங்குறாங்க?  ஆனால் நம்ம தமிழர்கள் எங்கேயாவது அடிவாங்கினா நம்மாளுங்க கடிதப் போக்குவரத்தை ஆரம்பிச்சுடுறாங்க?
என்ன செய்வது. நம்ம தமிழர்கள் போற இடத்தில் சொத்துக்களை சேர்க்கிறதும் இல்லை.  சொகமான வாழ்க்கையையும் எதிர்பார்க்கிறதும் இல்லை.                       

" இன்றைக்கு செத்தா நாளைக்கு பால்ன்னு " நடிகர் விவேக் சொன்ன தத்துவத்தை கெட்டியா பிடிச்சுக்கிட்டு வாழ்ந்து செத்தும் போயிடுறாங்க.

1987 பிஜீத் திவில் ராணுவப் புரட்சி நடக்க உள்ளேயிருந்த 51 சதவிகித இந்தியர் கள் கனடா இங்கிலாந்து ஆஸ்திரேலியா முதல் இந்த நியூசிலாந்து வரைக்கும் புலம் பெயர ஆரம்பித்தனர். யாரு வேண்டுமானாலும் உள்ளே வாங்க ஆனால் ஒரே ஒரு நிபந்தனை? .  உள்ளே வந்தா கையில் 250 000 டாலர் உங்க கையில வச்சுருக்கனும்ன்னு நியூசி அரசாங்கம் அறிவிப்பு செய்ய வேறு யாருக்கிட்ட காசு இருக்கும்., 

குஜராத் மக்கள் குஜாலா செட்டிலாக ஆரம்பிச்சாங்க.

1997 ஹாங்காங் சீனா கைக்கு போன போது அரை மில்லியன் டாலர் முதலீடு செய்யத் தயாராய் இருக்குறவுங்க இங்கே வரலான்னு சொல்ல சப்பைக்கு பயந்த மக்கள் தட்டு முட்டு சாமானோடு நியூஸிக்கு வர ஆரம்பிக்க இன்னும் கொஞ்சம் ஜனத்தொகை கூட ஆரம்பித்தது.

இதைப் போலவே கொரியா ஜப்பான் என்று தொடங்கி சப்பை மூக்கு சீனா வரைக்கும் உள்ளே நுழைந்து இன்றைக்கு உலக முக்கிய மொத்த தொழில் துறைகளையும் சப்பையாகவே நசுக்கி விட்டுட்டாங்க..


இந்த நாட்டுல வடக்கு தெற்குன்னு ரெண்டு தீவு உண்டு.  

ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எந்திரப் படகுகள் மூலமாத்தான் பயணம் செய்யனும்.. விளையாட்டுல சுற்றுலாவுல , இயற்கையை நேசிக்க அதிக ஆர்வம் செலுத்துற நியூஸி மக்கள் நியூசிலாந்து என்ற சொர்க்கத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

தனி மனிதனும் தன்னை உணர்ந்து அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதும் ஒரு காரணம்.  தேர்ந்தெடுத்து வரும் தலைவர்களும் மக்களை ஏமாற்றாமல் நாட்டை முன்னெடுத்துச் செல்வதும் மற்றொரு காரணம்.

 டபுள் என்ஜின் படகு என்றாலே காற்றை கிழித்துக் கொண்டு தானே செல்லும்.  அது தான் நியூசிலாந்து இந்தியாவை விட பல மடங்கு வருடங்கள் முன்னால் சென்று கொண்டுருக்கிறது.

இந்த நியூசிலாந்து நாட்டில் நீங்க படகு மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகும் போது உங்களோட இன்னோரு நண்பரும் கூடவே வருவாங்க. வேறு யாரு நாம் டால்பின் பங்களாளிங்க தான். 

தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு நம்ம சரோஜாதேவியம்மா கண்க்கா பாட்டுபடிக்கிட்டு பக்கத்தில் தொடர்ந்து வரும் டால்பீன் மீனகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு போனா எப்படியிருக்கும்-

நினைச்சுப்பாருங்க. 

புத்தகத்தை ஒரு முறை படிச்சு பாத்துட்டு பொட்டி சட்டிகளை கட்டிகிட்டு புள்ளகுட்டிகள கூட்டிக்கிட்டு பொஞ்சாதியோட செல்வோமா??

விமர்சனம் முதல் பகுதி

நூலாசிரியர் வலைதளம்

சந்தியா பதிப்பகம் வலைதளம்

சந்தியா பதிப்பக முகவரி

சந்தியா பதிப்பகம்
ப,எண் 57 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
தொலைபேசி 044 24 89 69 79
விலை 200 ரூபாய்.
பக்கங்கள் 352

Monday, September 13, 2010

அதிசியம் ஆனால் உண்மை -- நியூசிலாந்து

திருமதி துளசிகோபால் எழுதிய நியூசிலாந்து புத்தக விமர்சனம் இரண்டாவது பகுதி....

இன்று வரைக்கும் தீராத ஆச்சரியமுள்ள ஒரு தேசமென்றால் இந்தியாவைத் தவிர வேறு எதையும் உதாரணம் காட்ட முடியாது.  மனித வளமும் இயற்கை வளமும் தேசமெங்கும் நிறைந்து இருந்தாலும் மிகக் குறைவான சதவிகிதத்தில் இருக்கும் அரசியல் வியாதிகளிடம் சிக்கி சின்னா பின்னாபட்டுக்கொண்டுப்பது நம் நாட்டைத்தவிர வேறு எங்கும் உண்டா?  

ஆப்பிரிக்கா நாடுகளின் கோரங்கள் வெளியே எளிதாக தெரிகின்றது.  ஆனால்
இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்ற போர்வையில் எதுவும் அவ்வளவு சீக்கீரம் வெளியே தெரியாமல் விளம்பரங்களும் ஊடகங்களும் நம்மை மயக்கத்தில் வைத்துள்ளது. ஜனநாயகம் என்ற அமைப்பே மெதுவாக செல்லரித்துக் கொண்டுருப்பது அத்தனை சீக்கீரம் வெளியே தெரிவதில்லை. 

இப்போது வாங்கும் சக்தி அனைவரிடத்திலும் வந்து விட்டது என்ற நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.  இன்றும் தினமும் மொத்த ஜனத்தொகையில் 60  சதவிகித மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்க கஷ்டப்பட்டுக் கொண்டுருக்கும் அவல நிலையை நாம் அணைவருமே எளிதாக மறந்து  இந்தியா ஒளிர்கிறது வளர்கிறது என்று வியாதிகள் காட்டும் பம்மாத்து விளம்பரங்களைக் கண்டு வல்லரசு கனவு கண்டு கொண்டுருக்கிறோம்.

திருவாளர் சகிப்புத்தன்மை அதிகம் உள்ள மக்களைப் பெற்றது தான் இந்த இந்தியா.  அதனால் தான் இந்த நாடு இன்று வரைக்கும் இயல்பான பாதையில் போய்க் கொண்டுருக்கிறது. எந்த போராட்டங்களும் தேவையில்லை.  நம்ம .........................கழுவிக்கிட்டா போதும்ங்ற மாதிரி ஒவ்வொருவரும் நகர்ந்து போய்க் கிட்டே இருக்கோம். 

ஒவ்வொரு நாட்டிலும் கேள்விக்குறி, கேலிக்குறி மற்றும் ஆச்சரியக்குறிகள் என்று எத்தனையோ குறிகள் இருக்கும். வெகு அருகில் இருக்கும் மலேசியா சிங்கப்பூர் இன்றுவரைக்கும் நமக்கு ஆச்சரியக்குறிகள்.  

ஆனால் துளசி கோபால் எழுதியுள்ள நியூசிலாந்து என்ற நாட்டைப் பற்றி ஒவ்வொன்றாக படிக்கப் படிக்க நூறாயிரம் ஆச்சரியக்குறியாக இருக்கிறது.

ஆர்ப்பாட்டம் இல்லாத இவரின் பயணக்கட்டுரைகள் அதிகம் அடங்கிய இவரின் வலைப்பூவைப் போலவே இவரின் வெளித்தொடர்பின் வட்டமும் அதிகம்.  ஆனால் எதுவும் வெளியே தெரியாது.  எழுத்தாளர் சுஜாதா கூட இவரின் எழுத்து நடையை சிலாகித்துப் பேசியுள்ளார். 

ஆச்சரியமான நியூசிலாந்து பற்றி சில விசயங்களைப் பார்க்கலாம். ஓட்டுப் போடுவதும், அதன் மூலம் தேர்ந்தெடுப்பதும் தேர்தலுக்கு மட்டுமல்ல.  கடிகாரத்தின் முள்ளை நடக்கும் பருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ஒரு மணிநேரம் அதிகமாக மாற்றி வைத்துக் கொள்வது தொடங்கி பள்ளிக்கூட நடைமுறை மாற்றங்கள் வரைக்கும் அத்தனை இடங்களிலும் இந்த பொது கருத்துக் கணிப்பு மூலம் தான் செயல்படுகிறார்கள்.

தனிமனித உரிமைகள் எந்த அளவிற்கு மதிக்கின்றார்களோ அந்த அளவிற்கு சீதோஷ்ண பருவ மாற்றத்தால் கரையில் ஒதுங்கும் மீன்களை பாதுகாப்புது வரைக்கும் அநியாயத்திற்கு பல இன்ப அதிர்ச்சிகளை படிக்கும் போது நெஞ்சம் தாங்குமா? என்று பயமாயிருக்கு. 

அரசாங்கமும் சரி தனி மனிதர்களும் சரி அநியாயத்திற்கு நல்ல விதமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். முதல்வன் படத்தில் வந்த ஒரு நாள் முதல்வன் போல் இங்குள்ள பள்ளிக்கூடத்தில் மாணவர்களை ஒரு நாள் மேயராக இருக்கச்செய்வது அடுத்த ஆச்சரியம்.

 இவ்வளவு தூரம் போய்விட்டோம்.  நம்ம தமிழ் சாப்பாடு கிடைக்குமா? என்கிற அச்சம்படத் தேவையே இல்லை.  வட தென் இந்திய உணவு வகைகளை ஒரு கை பார்த்து விட்டு இரண்டு கைகளையும் தூக்கி சேவித்துவிட்டு வர எல்லா
கோவில்களும் இங்குண்டு. 


யோவ் உன் சாப்பாட்டு புராணத்தை நிப்பாடு?  போனா சுற்றிப் பார்க்க என்னப்பா இருக்கு? என்று நீங்க கேட்டால் போனால் திரும்பி வரமுடியாத அளவிற்கு எங்கெங்கு காணினும் இன்பமடாங்ற மாதிரி நியூசிலாந்து நாடு முழுக்க கண்களே பச்சையாக மாறிவிடுமோ என்கிற அளவிற்குத்தான் இந்த நாடே சுற்றுலா பிரியர்களுக்கு சொர்க்கமாயிருக்கு,

வேல் வாட்ச் என்கிற திமிங்கில கடல்வாழ் உயிர் பூங்கா இருக்கு.  ஸீல் காலனிங்ற இட்த்துக்கு போன காட்டுக்குள்ளே சென்று சிங்கங்களை ராவா பார்க்கிற அனுபவமும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஓமரு என்கிற பகுதியில் பெங்குவின் பறவைகளையும் பார்க்கலாம். 

அதுகளின் நடனங்களையும் பார்த்துவிட்டு நியூசிலாந்து மக்கள் அக்கறையாக பறவைகளுக்கு கடற்கரை ஓரமாக செய்து வைத்துள்ள கூடுகளைப் பார்க்கும் போது  உங்களுக்கு திரும்பி வர மனசு இருக்குமாங்றது சந்தேகம் தான். 

இதையெல்லாம் விட இந்த நாட்டின் நிர்வாக பரிபாலணத்திற்கு வேறொரு வகையில் சிறப்பு உண்டு. அந்த கூடுதல் சிறப்பு இங்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மூன்று முறை மேயராக இருந்தது.  அதைவிட அக்கிரமம் " நான் மூணு முறை இருந்துட்டேன். என்னை இனி தொந்தரவு செய்யாதீங்கன்னு " ஒதுங்க அவருக்கு அடுத்து வந்தவர் சீனர். வீல்சேர் தலைவர்களெல்லாம் அங்கு வர வாய்பே இருக்காது போலிருக்கு,

 யாராவது பக்கத்துல இருக்கிற ராஜபக்ஷேவை சீனாவுக்கு போயிட்டு வரும் போது அப்படியே நியூசிலாந்துக்கு போயிட்டு வரச்சொன்னா ஏதாவது
மாறித் தொலைப்பாரன்னு முயற்சி செஞ்சு பார்க்கலாம்.

நீங்க விஜய் ரசிகரா? அப்படின்னா கட்டாயம் இங்குள்ள "பஞ்சி ஜம்ப" என்ற மிக உயரத்தில் இருந்து கட்டிக் கொண்டு குதிக்கும் விளையாட்டுக்காவது ஒரு முறை போயிட்டு வரலாம்.  மூக்கு முழியோட உங்க வயிறும் இருக்க
வேண்டிய இடத்துக்குள்ளே இருந்துச்சுன்னா உங்களுக்கு ஒரு சான்றிதழ் வேறு கொடுப்பாங்க. ஊருக்கு கொண்டு வந்து காட்டி மற்றவங்க வயித்தெரிச்சலை சம்பாரிக்க வசதியாய் இருக்கும் தானே.  

நூலாசிரியர் துளசி கோபால் இருந்த கிரைஸ்ட் சர்ச் நகரம் என்பதை சொர்க்கம் என்று கூட சொல்ல முடியும்.  காரணம் அதற்கு மற்றொரு பெயர் தோட்ட
நகரம்.  நாம வீட்டுக்குள் பூஜை அறையை மட்டும் சுத்தமா வச்சுக்கிட்டு கக்கூஸ் சமாச்சாரத்தை கசுமாசலக் கணக்கா வச்சுருப்பதைப் போல உள்ள வேலையெல்லாம் அங்கு இல்லை. 

 பாபிலோனின் தொங்கும தோட்ட ரசனையைப் போல இந்த நகரில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் இந்த தோட்ட அலங்காரத்திற்காக நாயா பேயா உழைக்கிறாங்க.  இதில் எந்த தோட்டம் சிறப்பா இருங்குங்ற மாதிரியெல்லாம் போட்டி வேறு உண்டு. இந்த வீடுகளை சுற்றிகாட்ட சுற்றுலா மக்கள் வேறு
தனியாக சம்பாரித்துக் கொண்டுருக்கிறார்கள்.  நகராட்சி வசூலிக்கும் வரியில் பெரும்பாலான பணம் ஊரில் உள்ள தோட்ட பராமரிப்புக்கே போய்விடும் என்றால் நீங்க நம்புவீங்களா?  

பயபுள்ளைங்களை ஒரு நாளைக்கு திருப்பூர் பூங்காவுக்கு வரவழைத்து தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் போலிருக்கு.

வீட்டுக்கு வரும் இலவச செய்தி தாள்கள், நாள் முழுக்க பேரூந்தில் சுற்றினா லும் பத்து டாலர் அட்டையை வைத்துக் கொண்டு சுற்றிவரக்கூடிய அதிசயம், எந்த இடத்துக்குப் போனாலும் அங்கங்கே இருக்கும் இந்திய உணவகங்கள், என்று ஒவ்வொன்றையும் படிக்க படிக்க பயம் தான் மிஞ்சுகிறது. இது நாடா?  இல்லை ஷங்கர் படத்தில் வரக்கூடிய செட்டிங் சமாச்சாரமா என்று ஏக்கம்
வருவதை தவிர்க்க முடியவில்லை.  இந்த இடத்தில் ஒரு இடைச் செருகலை
பார்த்தே தான் ஆகவேண்டும். கவிஞர் வைரமுத்து தான் சென்ற நாட்டில் (லண்டன் அருகே என்று நினைவு) நடந்த நிகழ்வுகளை ஒரு கட்டுரையின் மூலம் வெகுஜன ஊடகத்தில் எழுதி இருந்தார், 

ஒரு கிராமத்தின் அருகே ஏரியின் அருகே ஓய்வாக உட்கார்ந்து இருந்த ஒரு பெரியவர் தூண்டில் மூலமாக பிடித்த மீன்களை மறுபடியும் ஆற்றிலே விட்டு மீண்டும் தூண்டிலை போட்டு அடுத்த மீனுக்காக காத்துக்கொண்டுருந்தாரம். வைரமுத்துவுக்கு ஆச்சரியம். அவர் அருகில் போய் விசயத்தை கேட்டதும் அவர் சொன்ன பதில் உச்சக்கட்ட ஆச்சரியம்.

"சிறிய மீன்களை பிடிக்கக்கூடாது என்பது சட்டமாம்.  அதற்காக பெரிய மீனுக்காக காத்துக் கொண்டுருக்கின்றேன்"  என்றாராம்.  ஒவ்வொரு வளர்ந்த நாடுகளின் தனி மனித அக்கறை என்பது நமக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.  இதைப் போலவே அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களும், மக்களுக்காக உருவாக்கப்படும் நலத்திட்டங்களும் அதைவிட மகத்தான ஆச்சரியம்.  ஹாங்காங்கில் இருந்து நண்பர் அழைத்து இருந்தார். வங்கியில் பணிபுரிகின்றார். " எவரும் வங்கிக்கு வருவதில்லை. வந்தாலும் குறைவு. எல்லாமே திட்டமிட்ட கணினி சார்ந்த நடைமுறைகள். அடுத்து சொன்ன உச்சக்கட்ட ஆச்சரியம் சாப்பாடு நேரத்தில் கைபேசியில் வங்கி ஊழியர்களுக்கு  எந்த அழைப்பும் வராது..............................................."  பேசிக் கொண்டே செல்லச் செல்ல இங்குள்ள செல்லரித்துப் போன செல்லாக்காசின் நிர்வாக லட்சணங்கள் உறுத்தலாய் தெரிந்தது.

இந்தியாவை இப்போது ஆண்டு கொண்டுருக்கிற மண்ணு போயி அடுத்த ஆளு வந்தாக்கூட இங்கே உருவாகுமாங்றத நீங்க தூங்கும் போது கனவில் கொண்டு வந்துக்கத் தான் வேண்டும். 

ஆனால் வளர்ந்த நாடுகளின் அரசியல் கொள்கைகள் என்பது கொள்ளைக் கூட்டத் தலைவன் படங்களில் சொல்லும் வசனம் போலத்தான் இருக்கு. வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளை பலவிதங்களில் தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களை முன் நிறுத்துதல். ஆனால் நியூசிலாந்து சிங்கப்பூர் போலவே எந்த வம்பு தும்புக்கும் போனதா தெரியவில்லை. நூலாசிரியர் தான் இது குறித்து தெரிவக்க வேண்டும். 

ஆனால் நம்நாட்டுத் தலைவர்கள் நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் என்று உச்சரித்த வில்லன் வசனத்திற்கு உதாரணமாய் வாழ்ந்து கொண்டுருக்க நியூசிலாந்து அரசியல் தலைவர்கள் மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டுருப்பதை இந்த புத்தகம் முழுக்க பல விசயங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

உலகத்திலே பெண்களுக்கு ஓட்டு உரிமை கொடுத்த முதல் நாடு நியூசிலாந்து
தான்.  ஆனால் இதற்காக போராடிய பெண்மணியை இன்று நியூலாந்தில் இருக்கும் கரன்சியில் புகைப்படமாக பார்க்கும் அளவிற்கு அரசாங்கம் சிறப்பான மரியாதை கொடுத்து இருந்தாலும் அந்தம்மா பட்ட பாடுகளைப் பார்த்தால் நம்ம காந்தி தாத்தா தான் ஞாபகத்திற்கு வருது.  ஆனால் இதை விட சென்ற வாரத்தில் ஒரு கொடுமை நடந்தது.  எதிர்க்கட்சி ஆளுங்கட்சி ரெண்டு தலைவர்களும் நடந்த பூகம்பத்திற்கு ஒன்றாக சேர்ந்து கொண்டு மக்களுக்கு உதவுற அதிசயத்தை இங்கே நீங்க காண முடியுமா?  முதலில் கோயமுத்தூர் மாநாட்டுக்கு பதில் காட்டியாச்ச. இப்ப திருச்சி மாநாட்டை வெற்றிகரமா முடிச்சாச்சு.  அடுத்து மதுர வேலையை பார்க்க வேண்டும் என்ற ஜனநாயக கவலையெல்லாம் அங்கு இல்லை.  தேர்தலின் போது வீட்டு உரிமையாளர்களின் அனுமதி பெற்று தொந்தரவு இல்லாமல் ப்ளக்ஸ் போர்டு வைத்து விட்டு அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து கழட்டி எடுத்துக் கொண்டு போகும் கண்ணியவான்கள் நிறைந்த பூமி தான் நியூசிலாந்து என்ற அதிசய நாடு. அதனால் தான் அங்குள்ள தலைவர்கள் பொண்டாட்டி புள்ள குட்டிகளோட கடைத்தெருவுக்கு வந்து சாமான்களை வாங்க பழகியிருக்காங்க. நாம தான் சாமான்ய நாதாரிகளை சரித்திர புருஷரா நம்பி ஏமாந்துகிட்டு இருக்கோம்.

இந்த இடத்தில் மற்றொரு இடைச் சொருகலை நுழைத்தே ஆகவேண்டும். நாட்டைப் பற்றி படிக்கும் நமக்கே ஒரு ஏக்கம் வரும் போது தன்னுடைய பெரும்பாலான வாழ்க்கைப் பகுதியை நியூசிலாந்தில் கழித்த நூலாசிரியர் எப்படி நிறைகுறைகளுடன் இருக்கும் இந்தியாவில் இங்கு இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது முதல் ஆச்சரியம். எழுதும் எழுத்துக்களில் கூட எந்த பந்தாவையும் காட்டாமல் இருக்கிறார் என்று அடுத்த மகத்தான அதிசயம்..  காரணம் அண்டா குண்டா அடகு வைத்து கொத்தனார் வேலைக்கு போய்விட்டு கடனைக் கூட அடைக்க முடியாமல் வந்து இங்கே இறங்குபவர்கள் பேசும் நடிகர் வடிவேல் டயலாக்கை கேட்கும் போது இவர் மட்டும் எப்படி ஊர் ஊராக உலகம் சுற்றும் வாலிபியாக இருந்து கொண்டுருக்கிறார்?. 


ஆனால் இங்கே என்ன இல்லைன்னு கேட்டீங்கன்னா ஒரு ஆச்சரிய சமாச்சாரம் உண்டு.

இந்த நாட்டில் எருமை மாடு,தேள்,கரப்பான் பூச்சி,பல்லி,கொசு, எறும்பு போன்ற நம் நெருங்கிய நண்பர்கள் .பல இடங்களில் கிடையாது. என்ன அக்கிரமம் இது.?  அப்புறம் எப்படி வெளிநாட்டில் இருந்து மருந்து வாங்க, மருந்தடிக்க என்று டெண்டர் விட்டு கொள்ளை அடிக்க முடியும்?

பொழைக்கத் தெரியாத நியூசிலாந்து அரசியல்வாதிகளைப் பார்த்தால் பொசு பொசுன்னு இங்குள்ள டாஸ்மார்க மருந்தை அவங்க மேலே அடிக்கலாம் போலிருக்கு.

இறுதியாக மொத்த நூலக விமர்சனம் அடுத்து............................

நூலாசிரியர் வலைதளம்

சந்தியா பதிப்பகத்தின் வலைதளம்.


விமர்சனத்தின் முதல் பகுதி

வெளியீட்டாளர்கள் 

சந்தியா பதிப்பகம்
ப,எண் 57 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
தொலைபேசி 044 24 89 69 79
விலை 200 ரூபாய்.
பக்கங்கள் 352

Sunday, August 29, 2010

துளசி கோபால் நியூசிலாந்து புத்தக விமர்சனம்

நடன இயக்குநர் பிருந்தா ஒரு வெகுஜன ஊடகத்தில் நியூசிலாந்து குறித்து பேட்டி கொடுத்து இருந்தார்.  படித்து முடித்து சிரித்துக் கொண்டு அடுத்த செய்திக்கு தாவி விட்டேன்.  அவர் சொன்னபடி பார்த்தால் இந்தியாவில் வாழ்வதற்கே லாயக்கில்லை என்பது போல் இருந்தது. 

அடுத்த விமானம் பிடித்து நியூசிலாந்து சென்று விட்டால் அங்கே ஓடிக் கொண்டு இருக்கும் பாலையும் தேனையும் அள்ளிக் கொண்டு வரலாம் போல் அளந்து விட்டுருந்தார். அதிகபட்சம் பத்து நாள் பயணத் திட்டத்தில் பாடல் காட்சிகள் எடுத்த பிறகு கிடைத்த இடைவெளியில் அங்கங்கே தயாரிப்பாளர் செலவில் சுற்றி ஒவ்வொரு மக்களும் இப்படித்தான் இன்று வரை திரைப்பட மக்கள் ஊதி தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். 

பயணித்த நாடுகள் சில என்ற போதிலும் இன்று வரையிலும் இந்த ஐரோப்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கண்டத்துக்குள் செல்ல ஏதோ ஒரு கண்டம் என்னை தடுத்துக் கொண்டே இருக்கிறது.  துளசி கோபால் எழுதியுள்ள நியூசிலாந்து என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது அங்கேயே கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தது போலவே ஒரு எண்ணத்தை உருவாக்கியது.

அரு. நாகப்பன், சோலெ, இதயம் பேசுகிறது மணியன், லேனா தமிழ்வாணன் போன்றவர்களின் பல பயணக் கட்டுரைத் தொடர்களை படித்து இருந்தாலும் இவரின் எழுத்துக்கள் ஒரு வித்யாச அனுபவத்தை தந்தென்னவோ உண்மை. போகிற போக்கில் ஒவ்வொருவரும் பார்த்த பார்வைக்கும், உள்ளேயே வாழ்ந்து அந்த நாட்டைப் பற்றி எழுதும் போது படிப்பவருக்கு நம்பகத்தன்மை யை மேலும் அதிகப்படுத்துகிறது.  அதைத்தான் துளசி கோபால் தான் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டைப பற்றி முழுமையாக புரிய வைத்து வெற்றி பெற்று உள்ளார். 

ஏற்றுமதி நிறுவனங்களின் முதலாளிகள் வெளிநாடுகள் செல்லும் போது ஒரு மாதத்திற்கு முன்பு அந்த நாடுகள் குறித்து தகவல்களை திரட்டி, அங்கிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும் வழித்தடங்கள் முதல் தங்குமிடம் வரைக்கும் வலையில் திரட்டிக் கொடுக்கும் வாய்ப்புக்கு பிறகு இப்போது தான் முழுமை யாக ஒரு நாட்டைப் பற்றி புரிந்து படிக்க முடிந்தது, வெறுமே இந்த புத்தக விமர்சனம் என்று ஒரே பார்வையாய் பார்ப்பதை விட சற்று விபரமாக பார்க்க லாம் 

மொத்தம் நான்கு பகுதிகளாக பிரித்துள்ளார். நியூசிலாந்து மண்ணின் மைந்தர்களைப் பற்றி, ஆங்கிலேயர்கள் படிப்படியாக நாட்டை ஆக்ரமித்தது என்ற இரண்டு பகுதிகளுக்குள் நீங்கள் பயணிக்கும் போது சற்று கடினமாக இருக்கலாம்.  ஆனால் நியூசிலாந்து நாட்டில் வாழ்பவர்களுக்கே இத்தனை விபரங்கள் தெரிந்து இருப்பார்களா? என்பது ஆச்சரியம்.  நம்மில் எத்தனை பேர்களுக்கு இந்தியாவின் முழுமையான சரித்திரம் தெரியும்?

இவருக்கென்று ஒரு நடை உள்ளது.  அதைத்தான் எழுத்தாளருக்கென்ற இருக்கும் நடையை உடைத்தெறிந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.  படிப்பவருக்கு புரிந்தால் சரி என்கிறார். அதைத்தான் இந்த புத்தகம் முழுக்க பாயச முந்திரிப்பருப்பு போல தூவிக்கொண்டே செல்கிறார்.

பார்த்த கேட்ட படித்த அத்தனையும் கலந்து அதன் மேல் நகைச்சுவைப் பொடியைத் தூவி நியூசிலாந்து என்ற சர்க்கரைப் பொங்கலைத் தந்துள்ளார். உண்மையிலேயே நியூசிலாந்து என்ற நாடு சர்க்கரை பொங்கல் தான். பொறாமையா இருக்கு.  யாருக்குத் தான் பிடிக்காது?

90 சதவிகிதம் அரசாங்க பள்ளிகள் மட்டுமே. மனப்பாடமா?  நோ, நோ,  சும்மா விளையாட்டு போல அப்படியே ஜாலியா..........நீங்கள் ஏழ்மை என்றால் உதவித்தொகை அரசாங்கமே கொடுத்து விடும்.  நம்ம மக்கள் அதிலும் மிச்சப் படுத்தி வந்து போகும் செலவிற்கு வைத்துக் கொள்ள முடியும் என்றால் தொகையின் அளவை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகின்றேன். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சரியம்.  மக்கள் தொகையே 40 லட்சம்.  ஆனால் வளர்ப்பு ஆடுகளின் எண்ணிக்கை 480 லட்சம்.  எப்பூடி?
சிங்கப்பூர் மாதிரியே புள்ள குட்டிய பெத்துக்கிங்கன்னு அரசாங்கம் கெஞ்சாத குறை தான். அதுவும் எப்படி?  வயித்துப்புள்ள காரின்னா அரசாங்கம் கொடுக்கற ராஜமரியாதை ரொம்பவே அதிகம்.  உச்சகட்டமாய் புள்ளைக்கு ஆய் போனா கழுவி துடைச்சு விடுற வரைக்கும் அநியாயத்திற்கு வயித்தெரிச்சல் வர வழைக்கிற அரசாங்க அமைப்பு.

ஆனால் புருஷன் பொண்டாட்டிங்றதெல்லாம் கெட்ட வார்த்தை.  எல்லாமே பார்ட்னர் தான். நம்ம ஊரு கவுன்சிலருக்கு கட்டிங் வசூலிக்கிறது ஒரு தலையாய கடமை போல அங்குள்ள நகர கவுன்சிலுக்கு மண்டையிடி சமாச்சாரங்றது குளிர்காலத்துல உஷ்ணத்துக்காக கட்டைகளை எரிக்கும் போது வர்ற புகையை போக்க நடவடிக்கை எடுப்பது தான். 

விமான போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்க இப்பொழுதெல்லாம் ஹீட்டர் அந்த பிரச்சனையை போக்கிவிட்டது.  அந்த கவுன்சிலர் நிச்சயம் கூட ரெண்டு பெக் போட்டு ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கக்கூடும்.

சிங்கப்பூர் மக்களின் ஆங்கில உச்சரிப்பு போல இங்கும் ஒரு வினோத ஆங்கிலம் புழங்குகிறது.   காரணம் பக்கத்தில் ஆஸ்திரேலியா. குளிர் காலத்துல உங்களுக்கு போற வாய்ப்பு இருந்தால் படங்களில் கதாநாயகன் பொறாமைபடுத்திய பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடிப் பார்க்க வாய்ப்புண்டு. என்னவொன்று அந்த குளிருக்கு தாக்குப்பிடிக்க வேண்டும்.  ச்சும்மா அதிகமில்லை.  மைனஸ் கீழே போய் நிற்கும்.  வெடவெடன்னு குளிரத்தாங்குவீங்களா இல்லை குளிர போக்க வைக்க பார்ட்டனர தேடுவீங்களா? 

மற்றொரு கொடுமை இந்த நாட்டில் உண்டு.  நம்மூரு காவல் நிலையத்திற்குள் உள்ளே நுழைந்தால் ஒரு வாசகம் உங்களை வரவேற்கும். " உங்கள் நண்பன் காவல் துறை" ,  உள்ளே போனா என்ன மரியாதை கிடைக்கும்ங்றது  உங்களுக்கேத் தெரியும்.  உண்மையிலே இங்குள்ள காவல் துறை அத்தனை பேர்களும் அரிச்சந்திர பரம்பரைபோலவே இருக்கிறார்கள். எழுதிய ஆசிரியர் தான் கண்டுபிடித்த மற்றொருவருடைய கடவுச்சீட்டை கொண்டு போய்ச் சேர்த்த ஒரு நகைச்சுவையை படித்தால் ஒன்று நீங்க நம்பமாட்டீங்க.  அல்லது பூகோள சொர்க்கம்ன்னு சொல்லத் தோன்றும்.

எந்த வாகனமும் பெரும்பாலும் ஹாரன் சப்தம் அடித்து காது சவ்வை கிழிப்ப தில்லை. சாலை விதிகளை மீறி நீங்கள் ஏதாவது டகால்டி வேலை செய்ய நினைத்தால் உங்கள் முகம் ஏதோ ஒரு புகைப்பட கருவியில் தெரிந்து உங்கள் கூலியை கொண்டு போய் கொட்ட வேண்டியது தான். சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்க எந்த வட்டம் சதுரமும் வந்து பரிந்து பேச முடியாது.   காரணம் அரசியல்வாதிகள் கூட கடைத் தெருவில் வந்து காய்கறி முதல் சாமான்கள் வாங்குவது வரை சர்வசாதரணம்.  உங்களுக்கு இந்திய சமையல் நன்றாகத் தெரியுமா?  அப்படியே விசாரித்து மெல்ல கிளம்பி விடுங்க.  அங்கே போய் கடைதிறக்க வாய்ப்பு இருந்தால் துட்ட அள்ளி குவித்து விடலாம்.  அந்த அளவிற்கு இந்திய உணவகங்கள் அட்டகாசமா பெருகிகிட்டுருக்கு.

ஆனால் குடும்பத்தோடு நீங்க வசிக்கனும்ன்னு நினைத்து போனா உங்க புள்ளையங்களை நீங்க மட்டுமல்ல சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் கூட அடிக்க முடியாது.  பயபுள்ளைங்க ஊரக்கூட்டி சட்டத்துக்கு முன்னால நிறுத்தி விடுவாங்க.  பசங்க ஆறடி இருக்க வாத்தியார் என்ன செய்து விட முடியும்?  எட்டி எட்டி பார்த்து விட்டு எட்டிப் போய்விட வேண்டியதுதான். 16. 17 வயதில் தொலைக்காட்சியிலும் பசங்க மத்தியிலும் சூடான விவாதம் என்ன தெரியுமா?  பாதுகாப்பான உடலுறவு.  நாம மாத்ருபூதம் பேசிய போது அவர் சொல்ல வந்ததை விட்டுட்டு வேறு ஏதும் சொல்வாரான்னு பார்த்த நாம் இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு.
இதெல்லாம் விட ஆச்சரியம் துளசிகோபால் குடியிருந்த பகுதியில் குடியேறிய முதல் தமிழ் குடும்பமே இவங்க தான்.

தொடர்ந்து பயணிப்போம்.....................

வெளியீட்டாளர்கள் 

சந்தியா பதிப்பகம்
ப,எண் 57 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
தொலைபேசி 044 24 89 69 79
விலை 200 ரூபாய்.
பக்கங்கள் 352

ஆசிரியர் வலைதள முகவரி