திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா
கர்க் தர்மபுரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பதவியேற்று நான்கு மாதங்கள் கூட முடியவில்லை. இந்த குறுகிய காலத்திற்குள் பலரின்
கண்களிலும் விரலை விட்டு ஆட்டிவிட்டார்.
இதற்கு முன்பு இருந்த அருண், பாலகிருஷ்ணன், அஸ்ரா கர்க் இந்த மூவருக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு. தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த விதமும்,
உடற்பயிற்சிகளில் உள்ள ஆர்வமும் என பலருக்கும் முன் உதாரணமாக இருந்தார்கள். ஊருக்குள்
நடக்கும் அத்தனை கல்லூரி, பள்ளி கலந்துரையாடல்களிலும் பாரபட்சமின்றி கலந்து கொண்டு
ஊக்குவித்தார்கள். பார்ப்பதற்கு கல்லூரி செல்லும் மாணவர்களைப் போலத் தான் இருப்பார்கள்.
திருப்பூர் மாவட்டமாக மாறிய பின்பும் அதற்குண்டான அடிப்படை
கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால் போக்குவரத்து முதல் குற்றச்செயல்கள் வரைக்கும்
எதற்கும் பஞ்சமில்லை. ஆனால் எந்த நேர்மையான காவல்துறை அதிகாரியும் சமீப காலத்தில்
இங்கே தொடர்ந்து மூன்று வருடங்கள் இருக்க முடிவதில்லை. ஆனாலும் இங்கேயே பட்டறை
போட்டுக் கொண்டு பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகமாகவே இருக்கிறார்கள்.
அருண்
எஸ்.பியாக இருந்த போது இங்குள்ள ஒரு திமுக பிரபல்யத்தின கைத்தடிக்கு கும்மாங்குத்து
விழுந்தது. அந்த பிரபல்யத்தின் எதிரே முகத்தில் அறையும் விழுந்தது. 'இங்கேயே
எண்கவுண்டரில் போட்டுத் தள்ளிட்டு போயிக்கிட்டே இருப்பேன்' என்றதும் சிபாரிக்கு
வந்த பிரபல்யத்திற்கு சப்தநாடியும் அடங்கிவிட்டது. கலைஞர் ஆட்சியில் பிரபல்யமும்
முதல் மேயராகவே வலம் வந்தார். குறி வைத்தார்கள். முடித்தே விட்டார்கள். அடுத்து
வந்த பாலகிருஷ்ணன் கூட சிறப்பாகவே செயல்பட்டார். கடைசியாக அஸ்ரா கர்க்.
இவர் மதுரையிலிருந்து இங்கு மாற்றலாகி வருகின்றார் என்றதும்
பாதிப்பேர்களுக்கு தூக்கமே போய்விட்டது.
மணல் மாஃபியாக்களை முழுமையாக ஒழிக்க முடியா விட்டாலும் கூட திருப்பூர்
மாவட்டத்திற்குள் இருந்த அத்தனை மூகமுடிகளின் தூக்கத்தையும் கெடுத்தவர். காவல் துறை சார்ந்த கருங்காலிகளுக்கு ஆப்பு,
ரிவீட்டு என்று மாறி மாறி அடித்துக் கொண்டே இருந்தார். திருப்பூர் மாவட்ட
மக்களுக்கு காவல்துறை என்றால் ஒரு மரியாதையை உருவாக்கியது தான் இவர் செய்த முக்கிய
பணியாக இருந்தது. இதைவிட பிரச்சனைகளை கொண்ட தர்மபுரி மக்களுக்கு இவரின் சேவை
இன்னும் எத்தனை நாளுக்கோ?
ஆட்சிகள் மாறினால் என்ன?
மூகமூடிகள் தான் ஒவ்வொரு சமயத்திலும் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
..............................................................................................
வெற்றிகரமாக டாமின் நிறுவன ஊழல் பூதம் ஒவ்வொன்றாக வெளியே வந்து
கொண்டுருக்கிறது. முக்கிய மூன்று அதிகாரிகளை கைது செய்து பூஜையை
தொடங்கியுள்ளார்கள். மூவரும் முகமூடி போல் துண்டை வைத்து தங்கள் முகத்தை மறைத்துக்
கொண்டு வந்தாலும் ஊடகத்துறை அவர்களின் முகதரிசனத்தை பார்க்க வைத்து விட்டது. பி.ஆர்.பி போல சிக்காமல் வாழ்க்கையின்
எல்லைக்கே மத்திய அமைச்சர் அழகிரி மகன் துரைதயாநிதி ஓடிக் கொண்டுருக்கிறார் போலும்.
இவரின் முகமூடி
வாழ்க்கை இன்னும் எத்தனை நாளுக்கோ தெரியவில்லை?.
தங்கள் முகத்தினை துண்டுகளை வைத்து மறைத்து கொண்டு வந்த
அதிகாரிகள் இதற்கு முன்பு பலரும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு இதே போல ஊடகத்தில் வந்த
அதிகாரிகளை வந்திருந்ததை பார்த்திருப்பார்கள் தானே? அப்போது நாமும் இதைப் போல ஒரு நாள் மாட்டத்தான்
போகின்றோம் என்று நினைத்துருப்பார்களா? குறைந்தபட்சம் தங்கள் குடும்பம் சார்ந்த
அத்தனை உறவுகளின் மத்தியில் அவர்களுக்குண்டான மரியாதை எப்படியிருக்கும்? "திருடத்
தெரியனும். ஆனால் சிக்கிக் கொள்ளாமல்
இருக்க சிந்தனையை பயன்படுத்த வேண்டும்" என்று சமூகம் அறிவுரை வழங்குமோ?
இந்த
முகமூடி அதிகாரிகளைப் பார்த்து தற்போது வெளியே வராமல் ஊழலில் சம்பாரித்துக் கொண்டுருக்கும் மற்ற
துறைகளில் உள்ள அதிகாரிகளின் மனோநிலையில் மாற்றம் வருமா?
............................................................................................
வீட்டுக்குள் வரும் முகமூடி கொள்ளைக்காரர்கள் கூட ஓர் அளவுக்குத் தான்
கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் இன்றைய
நிலையில் நாட்டுக்குள் செய்து கொண்டுருக்கும் அரசியல்வியாதிகளின் கொள்ளைகள் ஆயிரம் கோடிகளை தாண்டினாலும் கூட எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. எது குறித்தும் அஞ்சுவதும் இல்லை. வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்றத்திற்கு வரும் போது எவரும் தன்
முகத்தை முகமூடி போட்டு மறைத்துக் கொள்வதும் இல்லை. கையாட்டிக் கொண்டு புன்சிரிப்போடு தான வருகிறார்கள்.
ஆட்சியில் இருப்பவர்கள் "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களோ "சட்டத்தின் துணையால் வெல்வோம்" என்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு சட்டமான்களும்
ஓய்வு பெற்று போனபின்பும் கூட சட்டம் என்பது இந்த முகமூடிகளுக்கு பின்னால் உள்ள
உண்மையான முகத்தை காட்ட முடியாமல் கடைசி வரைக்கும் தேங்காய் மூடியாகத்தான் இருக்கிறது.
கடைசியில் நோய்கள் தான் இவர்களின்
வாழ்க்கையை முடித்து வைக்கின்றது. அடுக்கி வைத்த கேஸ் கட்டுகள் ஆவண காப்பத்திற்குள் போய்விடுகின்றது.
...............................................................................................
தொழிலாளர், பணியாளர், முதலாளி மூவருக்குமே திருப்பூர்
வாழ்க்கை என்பது முகமூடி வாழ்க்கைதான். உண்மையான முகத்தை எந்த இடத்திலும் காட்ட
முடியாது. எப்போது எது
நடக்கும் என்பதே தெரியாது. பெருநகரங்களில் வாழ்பவர்கள் அனுபவிக்கும் இயல்பான
விசயம் தான் இது. எதனால் இந்த வீழ்ச்சி என்று யோசிப்பதற்குள் அடுத்தடுத்து பல
படிகள் நம்மைவிட்டு கடந்து போயிருக்கும்.
அது போன்ற ஒரு சமயத்தில் தான் இநத் வலைபதிவு உலகம் எனக்கு
அறிமுகமானது. மன அழுத்தத்திற்கு தேவைப்படும் மருந்து குடிக்கும் பழக்கம் இல்லாத
காரணத்தால் இந்த எழுத்துப் பழக்கம் உருவானது. நான் சிறுவயதில் கற்றுக் கொண்ட மிதிவண்டி
முதல் சிறிய ரக லாரி வரைக்கும் கற்றுக் கொளள ஒவ்வொரு சமயத்திலும் எவரோ ஒருவர் உதவி
இருக்கிறார். நான் இதுவரையிலும் கற்றுக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் அடுத்தவர்
பங்கும் அதிகமாக உண்டு. அடுத்தடுத்து வாழ்வில் உயர்ந்த போதும் கூட பலரும் உதவியாய்
இருந்து இருக்கிறார்கள்.
ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிப் பார்க்கலாம் என்று
தோன்றிய போது அப்போது முதன் முதலாக என் கண்ணில் பட்டது வேர்ட்ப்ரஸ் தளமே. மூன்று
வாரங்கள் போராடி ஒரு உருவத்திற்கு கொண்டு வந்தேன். மேற்கொண்டு நானே கற்றுக் கொண்டேன் என்கிற
விதத்தில் இந்த ஒரு செயல்பாடு மட்டுமே வாழ்வில் சாதித்ததாக உணர முடிகின்றது. வலைபதிவில் அடிப்படை செயல்பாடுகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு சமயத்தில் அறிமுகமானது. இந்த
ப்ளாக் என்ற தளம் கூட நாகா தான் உருவாக்கி கொடுத்தார்.
ப்ளாக் பக்கம் எழுத வந்த பிறகு வேர்ட்ப்ரஸ்
தளம் கவனிக்காத சவலைக்குழந்தை போல தேமே என்று கேட்பாரற்று கிடந்தது. அது அரிச்சுவடி கற்றுத்தந்த பள்ளிக்கூடம் அல்லவா? உள்ளூற வருத்தமாக இருந்தது. ஓர் அளவுக்கு மேல்
வேர்ட்ப்ரஸ் தொழில் நுட்பத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக நாம்
நினைக்கும் அளவுக்கு அதில் பல சிறப்பு அம்சங்களை கொண்டு வரமுடியவில்லை. எனக்கு
அறிமுகமான வகையில் கிரி, தமிழ்மணம் செல்வராஜ், வெயிலான் இந்த மூன்று பேர்களின் வேர்ட்ப்ரஸ்
தளங்களின் வடிவமைப்பு ஆச்சரியத்தை தந்துள்ளது. ஆனால் வெயிலான் பழைய அற்புத வடிவமைப்பு தற்போது மாற்றி விட்டார். என்ன காரணம் என்று தெரியவில்லை. இவர்களின் தளங்களைப் போல உருவாக்க
வேண்டும் என்று மனதில் நினைத்து வைத்திருந்தேன்.
கோடம்பாக்கத்தில் "பிலிம் நியூஸ்" ஆனந்தன் என்றால் அனைவருக்கும்
தெரியும். திரைப்படம் சம்மந்தப்பட்ட
அத்தனை விபரங்களையும் ஆவணமாக, கருத்துக்களாக விரல் நுனியில் வைத்திருப்பார். அவரைப் போல தமிழ் வலைபதிவுகளுக்கென்று ஒரு ஆனந்தன்
இருக்கிறார். இவரின் பெயர் ரமேஷ். ஆனால் வலைபதிவில் வெயிலான். இவரும்
திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கிறார். திருப்பூரில் சேர்தளம்என்ற அமைப்பை பொறுப்பாக நிர்வகித்து வருகின்றார்.
குறைவாக எழுதினாலும் வலைபதிவு உலகில் இவரை தெரியாதவர்கள் குறைவு.
ஒத்த வயதாக இருந்தாலும் வலைபதிவில் எனக்கு அண்ணன். இந்த வலைபதிவின் தொழில்
நுட்பங்களை நன்றாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். நான் வேர்ட்ப்ரஸ் தளத்தை இழக்க விரும்பவில்லை. நான்
தொடக்கப்பள்ளியில் படித்த பாடங்களைப் போல இந்த தளத்தில் தான் எழுதவே கற்றுக்
கொண்டேன்.
வெயிலானுக்கு தேவியர் இல்லத்தின் நன்றிகள்.
............................................................................................................................
எழுதத் தொடங்கிய போதும், தொடர்ந்து வந்த வருடங்களிலும் ஒரு
வகையில் நானும் முகமூடியாகத் தான் இருந்துள்ளேன்.
இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி வைத்துக் கொண்டுருக்கின்றேன்.
தொடக்கத்தில் எழுதும் போது மனதில் பட்டதை அப்படியே
எழுதியிருக்கின்றேன். அது எத்தனை பெரிதான
கட்டுரையாக இருந்தாலும் கவலைப்பட்டதில்லை. சுருக்க முயற்சிப்பதில்லை. எழுத்துப்
பிழைகளை கண்டுகொண்டதில்லை. விமர்சனமாக எவர் எது சொன்னாலும் கேட்டதே இல்லை. ஒரு
வாக்கியம் என்பதை பத்து வரிகளுக்குச் சென்று பிறகு முடித்து படிப்பவரை பயமுறுத்தி
இருக்கின்றேன். ஆனால் நான் செய்த தவறுகள் ஒவ்வொன்றும் எனக்கு பல விதங்களில் இன்று
உதவியாக இருக்கிறது. இன்று எனது எழுத்து நடையை ஒவ்வொரு விதமாக மாற்றி மாற்றி பல
விதங்களிலும் முயற்சித்து பார்த்துக் கொண்டுருக்கின்றேன்.
குறிப்பாக பத்திரிக்கை உலக வடிவம் என்பது வலைபதிவுகளுக்கு
சம்மந்தம் இல்லாதது. ஒவ்வொரு
பத்திரிக்கைகளுக்கு ஒவ்வொரு விதமான நடையழகு.
சில நமக்கு பிடிக்கும். பலவற்றை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனாலும் சுருக்கம் என்பது சுகமானது என்பதை
எழுத்துப் பயணம் உணர வைத்துள்ளது. துறை சார்ந்த விசயங்களை சுருக்கும் போது அதுவொரு சுருக்கு கயிறு போலத்தான் இருக்கிறது. எவரும் உணருவதே இல்லை.
சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நண்பர் கேட்ட தற்போதைய திருப்பூர் நிலைமை
குறித்து "டல்லடிக்கும் டாலர் நகரம்" என்ற தலைப்பில் எழுதிக் கொடுத்தேன். அடிப்படை கட்டுமானம், தெளிவான நடை, கூடவே
புள்ளிவிபரங்கள், அளவான கட்டுரை என்று விமர்சனம் செய்து இருந்தார். சாதித்த மகிழ்ச்சியில் அதே பாணியில் சமீப
நாலைந்து கட்டுரைகள் எழுத முடிந்தது. கற்றுக் கொள்வதில் உள்ள ஆர்வம் தான் நம்மை
அடுத்தபடிக்கு அழைத்துச் செல்கின்றது. வரும் ஆக்கபூர்வமான எந்த விமர்சங்களையும்
பார்த்து முகம் சுளிப்பதே இல்லை. கதவுகளை
தைரியமாக திறந்து வைக்க முடிந்தது.
இதுவரையிலும் எந்த குப்பை கூளமும் இல்லத்தை தாக்கவில்லை. முகமூடியாக
இருந்து கொண்டு எழுத்தில் மட்டும் கவனம் செலுத்தியதால் இன்று எழுத்துக்கலை சற்று
கைகூடி வந்துள்ளது. 400 பதிவுக்கு மிக அருகில் வந்துள்ளேன்.
..............................................................................................................
இந்த தளத்திலும் வேர்ட்ப்ரஸ் தளத்திற்கும் பேனர் வடிவமைத்து
கொடுத்த மற்றொரு முகமூடி மனிதர் மதுரை தமிழ்ன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். (உங்க பெயரைக் கூட தெரிந்து
கொள்ள முடியல நண்பா?)
இந்த தளத்தில் உள்ள பேனர் போல ஒன்றை வடிவமைத்து திடீர்
என்று ஒரு நாள் மின் அஞ்சல் வாயிலாக நான் கேட்காமலேயே அனுப்பி இருந்தார். சற்று மாறுதலாகி இப்போதைய வடிவமைப்பு உருவானது.
வேர்ட்ப்ரஸ் தளத்திற்கும் அவரே வடிவமைத்து
கொடுத்துள்ளார். அவர்கள் உண்மைகள் என்ற தளத்தில் எழுதிக் கொண்டுருக்கிறார். தனக்கு
முகமூடி போட்டுக் கொண்டுருந்தாலும் நம்ம மேல ரொம்ப பாசக்கார பயபுள்ளையாட்டம்
இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கு. எனக்கு தனிப்பட்ட முறையில் எனது எழுத்தின் மூலம் அறிமுகமாகும் பெரும்பாலன நண்பர்கள் அணைவரும் பக்காவான வாசிப்பு புலிகளாகவே இருக்கிறார்கள். வலைபதிவுகளுக்கு அப்பாற்பட்டு கரை கண்ட வேந்தர்களாகவே இருக்கிறார்கள். பலருடன் பேசி முடிக்கும் மனதில் பயம் வருகின்றது. அந்த பயமே ஒவ்வொரு முறையும் எழுதும் போது இந்த முறையாவது ஒழுங்காக எழுத வேண்டுமென்ற தூண்டு கோலாக இருக்கிறது.