அமேசான் தளத்தில் என் நூல்கள்

இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களின் விபரம்


தமிழ்நாட்டில் வாழும் நடுத்தரவர்க்கத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கல்வி. இதன் மூலம் மட்டுமே தங்கள் குடும்பத்தின் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை. நிச்சயமாக தங்கள் பொருளாதார சூழலை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற ஆர்வம். இது தான் இவர்களை இன்றும் நம்பிக்கை இழக்காமல் இயங்க வைத்து கொண்டிருக்கின்றது.

இதற்காக ஒவ்வொருவரும் குழந்தைகள் மேல் வைக்கப்பட வேண்டிய அக்கறையைவிடப் பந்தயத்தில் கட்டப்படுகின்ற பணம் போல அவர்களின் கல்விக்குச் செலவிடத் தயாராக இருக்கின்றார்கள். தங்கள் தகுதிக்கு மீறி பணம் அதிகமாக வாங்கும் தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்திட வேண்டும் என்று ஆவலாய் பறக்கின்றார்கள்.

இது தான் கல்வி வியாபாரிகளின் மூலதனம். ஆசைகளைத் தூண்டுதல். குறுகிய காலத்திற்கும் நம்பவே முடியாத அளவுக்குக் கல்வி நிறுவனங்கள் தங்கள் பொருளாதார பலம் மூலம் தமிழகத்தின் முக்கியப் புள்ளியாக மாறி சக்திவாய்ந்த மனிதர்களாவும் மாறி விடுகின்றார்கள்.

காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் இன்றைய ஆச்சரியத்தைப் போல தற்போதைய சூழலில் பணம் இருந்தால் மட்டுமே தரமான கல்வியை பெற முடியும் என்ற நிலைக்கு வந்து சேர்ந்ததுள்ளது.

இதற்குக் காரணமான அரசியல்வாதிகள் நல்லவர்களாக தலைவர்களாகவே மறைந்தும் போய்விட்டனர்.

இதனால் உருவாகும் பாதிப்புகளும், விளைவுகளை பற்றியும் ஒரு நடுத்தரவர்க்கத்தின் பார்வையில் இருந்து என் மூன்று மகள்களின் வாழ்க்கைப் பார்வையில் இருந்து இந்த நூலை எழுதியுள்ளேன்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பணக்காரர்களுக்கு ஏழைகளுக்கும் உண்டான நினைத்துப் பார்க்க முடியாத ஏற்றத்தாழ்வுகளை அவரவர் கொண்டிருக்கும்ஆன்மீக நம்பிக்கைகள் மட்டுமே ஒவ்வொருவரையும் அமைதியாக வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. அத்துடன் கல்வி மூலம் உயர்ந்து விட முடியும் என்ற நம்பிக்கையும் உறுதுணையாக உள்ளது. ஆனால் இந்த இரண்டின் மேலும் நவீன மாற்றங்கள் மிகப் பெரிய தாக்குதலைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஒரு நடுத்தரவர்க்கத்தின் பிரதிநிதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் வாழ்க்கையில் நான் கற்ற கல்விச்சூழல், அப்போதைய குடும்ப, சமூக, பொருளாதார மாற்றங்கள் என்று தொடங்கி என் குழந்தைகளின் படிப்படியான மாற்றங்கள் வரைக்கும் அனுபவங்கள் மூலம் எழுதியுள்ளேன்.

வாசிக்கும் நீங்களும் இதில் ஒரு அங்கத்தினராக இருந்திருக்க வாய்ப்புண்டு. நான் வாழ்ந்த வாழ்க்கை உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும் முடியும்.

நாள்தோறும் கடமைகள் என்ற பெயரில் உழன்று கொண்டிருக்கும் உங்கள் மனம் நிச்சயம் இலகுவாக மாறி சொந்த ஊருக்குச் சென்று தங்கி வந்த திருப்தி ஏற்படும்.

குழந்தை, பெண், மகள் (கிண்டில் பதிப்பு)



ஈழத்தைப் பற்றி வரலாறு மற்றும் அரசியல் குறித்து பல ஆயிரம் புத்தகங்கள் வந்திருந்தாலும், அவற்றை நீங்கள் வாசித்து இருந்தாலும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களால் விரும்பப்படும் என்ற நம்பிக்கையுண்டு. காரணம் இதன் ஆதாரத் தகவல்கள் என்பது உண்மையோடு தொடர்புடையது. பாரபட்சமின்றி ஒவ்வொரு நிகழ்வுகளையும் இதில் எழுதியுள்ளேன்.

ஈழம் என்ற தீவு எப்படி உருவானது என்பதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த மாற்றங்கள், இனக்குழுக்கள் தொடங்கி நாகரிகம் பெற்று மன்னர்கள் ஆண்டது வரைக்கும் படிப்படியாக விவரித்துள்ளேன். இலங்கையின் சுதந்திரத்திற்கு முன் அதற்குப் பின் நடந்த வரலாற்று நிகழ்வுகளைச் சுவராசியமாகச் சொல்லியுள்ளேன்.

ஈழ வரலாறு பேசும் எந்தப் புத்தகங்களிலும் சொல்லப்படாத இந்திய அமைதிப்படை குறித்து இதில் எழுதியுள்ளேன். ஈழத்தில் இந்திய அமைதிப் படை நுழைந்தது முதல் வெளியேறியது வரைக்கும் நடந்த நிகழ்வுகளை இதில் விவரித்துள்ளேன்.

2009 போர் என்பது எங்கிருந்து தொடங்கப்பட்டது. அதற்குப் பின்னால் இருந்தவர்கள், பங்கெடுத்த நாடுகள், பெற்ற பலன்கள், தனி நபர்கள் பெற்ற லாபங்களைப் பட்டியலிட்டுள்ளேன்.


நூறு புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்களை இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

ஈழம் படிக்க மறந்த வரலாற்றுக் குறிப்புகள்


தமிழ்நாட்டில் திருப்பூர் என்பது முக்கியமான தொழில் நகரம். அந்நியச் செலாவணியை அதிக அளவு ஈட்டித்தரும் முக்கிய நகரம். படித்தவர்கள், படிக்காதவர்கள், முன் அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவருக்கும் ஏதோவொரு தொழில் வாய்ப்புகளைத் தரும் நகரம். 

திருப்பூருக்கு வந்தால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை ஊட்டிய இந்த நகரத்தில் நானும் 25 வருடங்களாக மேலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். 


கிராமத்து வாசியாக இருந்த நான் திருப்பூருக்குள் நுழைந்து ஊரின் படிப்படியான மாறுதல்களை உள்வாங்கியுள்ளேன். உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். திருப்பூரைப் பற்றியும், இங்குள்ள ஆயத்த ஆடை சார்ந்த தொழில் உலகத்தையும் பற்றி இந்தப்புத்தகத்தில் எழுதி உள்ளேன். 2013 - 14 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சிறந்த பத்துப் புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

டாலர் நகரம்

வாழ்க்கை எனும் பெரிய பரமபதம் விளையாட்டில், நற்குணங்கள் எனும் சிறிய ஏணிகளையும், மண்ணாசை-பெண்ணாசை-பொன்னாசை எனும் பெரிய பாம்புகளையும், வளர்த்துக் கொண்டு போகும் முதலாளிகள், வெல்வது எப்படி? பெரிய பலூனை உடைக்க ஒரு சிறு ஊசியும், ஒரு கப்பலை மூழ்கடிக்க ஒரு சிறு துளையும் போதும் என்பதை, தான் பணிபுரிந்த முதலாளிகளின் கதைகள் வழியே சொல்கிறார்.

அண்ணன் மேலாண்மை நூல்களாக எழுதினால், பாடப்புத்தகங்கள் ஆகவே வைக்கலாம்.

தொழில்முனைவோர் அனைவரும் ஜோதிஜி நூல்களை ஒரு முறை படித்து விடுவது பல்வேறு அபாயங்களிலிருந்து அவர்களைக் காத்திடும். தொடர்ந்து எழுதி சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முன்னேராக விளங்கி வர வேண்டுதல்களும், வாழ்த்துக்களும்.



வளர நினைக்கும் இளைஞர்களின் கையேடு

எப்பேர்ப்பட்ட மோசமான குணாதிசயங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தச்சூழ்நிலையிலும் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கும் 22 வருடக் கடின உழைப்புடன் கூடிய அனுபவம் கொண்ட ஜோதிஜி எழுதியிருக்கும் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடரை ஒரு அத்தியாயம் கூட விடாமல் கவனமாக வாசித்தேன்.

நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, நான் சந்திக்கும் மனிதர்கள், நான் சார்ந்திருக்கும் தொழில் என்பதனை இந்த தொடர் மூலம் என்னால் மீள் ஆய்வு செய்து கொள்ள முடிந்தது. இந்தத் தொடர் மூலம் தனிப்பட்ட முறையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். என் பார்வையில் சில விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

1. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் அனுபவத்தொடர் என்பதா?

2. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் மனிதவளம் தொடர்பான அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் ;தொடர் என்பதா?

3. மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அலசி ஆராயும் ஒரு சக மனிதரின் அனுபவக்குறிப்புகள் என்பதா?

4. 22 வருடங்களுக்கும் மேலாக இருந்துவரும் தொழிலில் தான் கண்ட மனிதர்களின் ஏற்ற இறக்கங்களைப் பதிவு செய்யும் தொடர் என்பதா?

5. ஆயத்த ஆடைத்தொழிலின் தலைநகரம் திருப்பூரைப் பிடித்துப் பார்த்த நாடித் தொடர் என்பதா?

6. தான் கடந்து வந்த 22வருடத் திருப்பூர் வாழ்க்கையின் வாழ்வியல் தொடர் என்பதா? அல்லது

7. திருப்பூர் தொழிலதிபர்களின் வாழ்ந்த வீழ்ந்த கதையைச் சொல்லும் தொடர் என்பதா?

8. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லி வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் வாழ்வியல் நன்னெறித் தொடர் என்பதா?

9. எல்லாம் கலந்து கட்டிய சரம் என்பதா?

என்று சத்தியமாக நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த அளவிற்கு வார்த்தைகளை வைத்து ஜோதிஜி விளையாடி இருக்கிறார்.

எழுதச்செல்லும் முன்பு எழுத வேண்டிய விசயத்தை மனதில் ஆழ்ந்து உள்வாங்கி அத்துடன் தனது கருத்துக்களையும் சரியான முறையில் எழுதியதால் இத்தொடர் ஒரு நாட்குறிப்பு போலவோ அல்லது ஒரு கட்டுரை போலவோ இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்துச்செல்லும் அளவிற்கு அவரது எழுத்து நடை அமைந்திருப்பது மிகச்சிறப்பு.



No comments: