Friday, July 17, 2020

காமராஜர் படித்தா ஆட்சி செய்தார்?

ஏறக்குறைய 14 வகையான பொருட்கள் தமிழகக் கல்வித்துறையால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுகின்றது. சென்ற ஆண்டு கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 29 000 கோடி. பிரச்சனை அதுவல்ல.

சென்ற வருடம் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. தரம் குறித்துக் குறை சொல்ல விரும்பவில்லை. உத்தேச விலை 13 000 அளவுக்கு அதில் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் மூலம் அறிந்து கொண்டேன். ஏற்கனவே ஹில்லாரி கிளின்டன் சென்னையில் ஜெ உயிருடன் இருக்கும் போது சந்தித்த போது பேச்சோடு பேச்சாக அரசு வழங்கும் மடிக்கணினியில் விண்டோஸ் (மைக்ரோசாப்ட் மென்பொருள்) போட்டு விடுங்கள் என்று பில்கேட்ஸ் தூதராக வந்து கோரிக்கை வைக்க ஒரு வெள்ளைத்தாய் மனதைத் தமிழகத் தாய் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?


அந்த மென்பொருளைப் போட்டுத் தான் வழங்குகின்றார்கள். பிரச்சனையே அது தான். பில்கேட்ஸ் காற்றை நாராகத் திரிப்பவர். மணலை கயிறாக மாற்றுபவர். அத்தனை உட்டாலக்கடி வேலையையும் அதில் செய்து வைத்து நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்கிற ரீதியில் பலவற்றை செட்டிங் ல் மாற்றி வைத்ததைப் பார்த்து உள்ளே உள்ள பலவற்றை நீக்கி புதிதாக நண்பர் போட்டுக் கொடுத்தார். சிலவற்றை நீக்கியும் இருந்தார். அதன் பிறகே அறிமுகம் இல்லாதவர் அதனைக் கையாள்வது எளிதாக இருந்தது.

மின் அஞ்சல் முகவரி திறந்து, திக்ஷா ஆப் மூலமாகப் பாடம் படிப்பது முதல் அரசாங்கமே கொடுத்துள்ள பாடத்திட்டங்கள் அடங்கிய பிடிஎப் கோப்பு வரைக்கும் படிக்க வேண்டும். பயன்படுத்த வேண்டும். அரசு கொடுத்த மடிக்கணினி ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கக்கூடிய மாணவர்கள் பயன்படுத்துவார்கள்.

ஆனால் நான் அறிந்தவரைக்கும் மாணவிகள் (மாணவர்கள் குறித்துத் தெரியவில்லை) உரையாடலைக் கவனித்த வரைக்கும் அதனைப் படம் பார்க்கத் தான் கடந்த ஒரு வருடமாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். நான் கவனித்த வரைக்கும் பத்தில் எட்டு மாணவிகள் இப்படித்தான் செயல்பட்டு வந்திருப்பதை இப்போது தான் புரிந்து கொள்ள முடிந்து. ஒரு மின் அஞ்சல் உருவாக்கத் தெரியவில்லை. ஆக்கப் பூர்வமான தளங்கள் குறித்த அக்கறையில்லை. மொத்த இடத்தையும் தமிழ்த் திரைப்படங்களைக் கொண்டு நிரப்பி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

இப்போது வீட்டுக்கே வந்து பாடப்புத்தகங்கள் கொடுக்கப்படும் என்று நம் செங்க்ஸ் அறிவித்தார். ஆனால் பள்ளிக்கே வந்து ஒவ்வொரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பாடத்திட்டங்கள், பாடப் புத்தகங்களைப் பதிவேற்றிக் கொடுப்பார்கள் என்று ஆசிரியர்கள் அறிவிக்க மிகப் பெரிய ஜெர்க் உருவாக்கி ஒவ்வொன்றையும் இப்போது தான் தடவிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எந்த இடத்தில் இருக்கின்றது என்று ஒரு மாணவி கேட்டார். கூடவே அது எதற்குப் பயன்படுகின்றது என்று கேட்ட போது நான் ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாக ஒதுங்கி விட்டேன். காரணம் கொரானா சமயத்தில் வயிற்றை மட்டுமல்ல வாயையும் கட்டு என்று வீட்டில் இருக்கும் சபாநாயகர் சொல்லியிருக்கின்றார்.

*******

"கொரானா காரணத்தால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டது. தயவு கூர்ந்து அரசு உதவ வேண்டும். அதற்காகத் தமிழகத்தில் உள்ள ஆளுமைகள் மோடி அவர்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்" என்று அன்போடு தமிழகப் பத்திரிக்கை முதலாளிகள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தனியாக வீடியோவில் பேசியும் உள்ளேன்.

தினமலர் நாளிதழின் விலை ரூபாய் ஏழு
தமிழ் இந்து திசையின் விலை ரூபாய் ஏழு

தமிழ் இந்து திசை படிப்பவர்களுக்குரிய நாளிதழ். கட்டுரை வடிவம், இலக்கியப் பேட்டிகள் என்று அடுத்த நாள் வரைக்கும் வாசிக்க வைக்கும். ஆனால் தினமலர் உருட்டிப் புரட்டினால் முடித்து விடலாம். கொரானா சமயத்தில் மொத்த 16 பக்கங்கள் தான் வந்தது. அதாவது அவர்கள் எப்போதும் வெளியிடும் பக்கத்தில் பாதி. ஆனால் விலை மாறவில்லை. அதே ஏழு ரூபாய் தான். பாதிக்கும் மேற்பட்டவர்கள் நிறுத்தியே விட்டார்கள். செய்தித் தாளைப் போடும் தம்பி புலம்பித் தீர்த்துவிட்டார்.

இன்று ப்ளஸ் டூ பரீட்சை முடிவுகள் வெளி வந்துள்ளது. நம் செங்ஸ் அவர்கள் இதனைப் பற்றி எதுவும் சொல்லாமல் அர்த்த ராத்திரி கனவில் முருகன் வந்து ஆசீர்வாதம் செய்த காரணத்தால் திடீரென்று முன்னறிவிப்பின்றி இன்று அறிவித்து விட்டார். காரணம் எழுநூத்தி சொச்சம் மாணவர்கள் கொரானா காரணத்தால் பரிச்சை எழுதாமல் இருந்தார்கள். அவர்களும் எழுதிய பின்பு தான் முடிவுகள் வெளியாகும் என்று சொல்லியிருந்தார். ஆனால் இப்போது இன்று முடிவுகள் வந்து விட்டது.

காரணம் என்ன?

சிபிஎஸ்சி முடிவுகள் வந்து விட்டது.

தனியார் கல்லூரிகள், பள்ளிகள் கல்லாப்பெட்டியைத் திறந்த வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைப்பது சும்மா அரசின் கடமைகளில் முதன்மையாக இருப்பதால் இந்த திடீர் அறிவிப்பு. வருகின்ற ஜூலை 27 எழுதாத மாணவர்கள் எழுத முடியும் என்று அறிவித்துள்ளார்கள். இனி கல்லூரிகள் பள்ளிகள் (தனியார்) அரசினை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அத்துடன் செய்தித்தாள்களுக்கு இதன் காரணமாகத் தினமும் இனி பம்பர் லாட்டரி.

தினமலரில் திருப்பூர் செய்திகள் என்று நான்கு பக்கம் மட்டுமே வரும். முழுக்க முழுக்க திருப்பூர் சார்ந்த செய்திகள். ஒவ்வொரு மாவட்டத்திற்குத் தனித் தனியாக இப்படி வைத்துள்ளார்கள். இது இவர்களின் வெற்றிக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இன்று 12 பக்கங்கள் திருப்பூர் செய்தித் தாள் தனியாக வந்துள்ளது. அதில் 5 முழுப் பக்கம் சிபிஎஸ்சி தனியார் பள்ளிக்கூட விளம்பரங்கள். 6 அரைப் பக்கம் விளம்பரங்கள். இது தவிரச் சிறிய விளம்பரங்களும்.

இது அடுத்த ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து வரும். நடுத்தர வர்க்க மனநிலையில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும். அரசுப் பள்ளியில் படிப்பவர்கள் மெட்ரிக் ல் சேர்க்க முடியவில்லையே என்று வருந்துவதும், மெட்ரிக் ல் படிக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் நம்மால் சிபிஎஸ்சி யில் படிக்க வைக்க முடியவில்லையே என்று ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் உள்நாட்டுக் கலவரம் உருவாகும்.

அரசு பள்ளிக்கூடத்தில் "எந்த வகுப்பில் சேர விரும்புகின்றீர்கள்?" என்று ஒரு நோட்டு வைத்து "அதில் அலைபேசி எண், மாணவரின் பெயர் என்று எழுதி வைத்து விட்டுச் செல்லுங்கள். அரசு அறிவிப்பு வந்தவுடன் அழைக்கின்றோம்" என்கிறார்கள். அதனைப் பார்த்தேன். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பக்கம் கூட முழுமையடையவில்லை.

சிபிஎஸ்சி, மெட்ரிக், தனியார்ப் பள்ளி என்று எல்லாப் பக்கமும் சுற்றி விட்டு, கடன் வாங்க முடியாதவர்கள் கடைசியாகப் பள்ளி திறந்தவுடன் மொத்தமாக அலையலையாக வேண்டா வெறுப்பாகப் படையெடுத்து வருவார்கள். அப்போது பணிபுரியும் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு உயிரைக் கொடுத்துப் பாடுபட்டே ஆக வேண்டும். முதல் இரண்டு மாதங்கள் பாடங்களையும் நடத்த முடியாது. அலுவலக வேலைகள் கொன்று எடுக்கும்.

அடுத்த ஆறு மாதத்தில் கல்வித்துறை அதிகமான சங்கடங்களைச் சந்திக்கப் போகும் ஆண்டாகவே 2021 இருக்கப் போகின்றது. அந்தச் சமயத்தில் "சும்மா அரசு" இதுவரையிலும் வந்த பணத்தை வரப் போகும் தேர்தலுக்கு எப்படிக் கொண்டு சேர்ப்பது என்ற முக்கியமான ஆலோசனையில் இருக்கக்கூடும். எதிர்க்கட்சிகள் அவர்கள் பங்குக்குக் களத்தைச் சூடாக்கிக் கொண்டிருப்பார்கள். ஜனவரி முதல் எந்தத் துறையும் ஒழுங்காகச் செயல்படாது. தேர்தல் கமிஷன் செயல்படவும் விடாது.

அப்படியென்றால் மாணவ மாணவியரின் நிலைமை?

அட ச்சும்மாயிருங்க பாஸ். காமராஜர் படித்தா ஆட்சி செய்தார்?🤪

15 comments:

ராஜி said...

இலவசமாய் கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாது....

தேவைப்படுபவருக்கு, தேவைப்படுபவற்றை கொடுப்பதே சிறந்தது...

இலவசம்ன்னு இருந்தால் போதும் ஏன், எதுக்கு, நமக்கு பயன்படுமான்னுலாம் யோசிக்க மாட்டோம்.. வரிசையில் நிற்போம்...
இந்த நாடு நாசமாய் போக இதுவும் ஒரு காரணம்..

KILLERGEE Devakottai said...

தலைப்பைக் கொண்டு வந்து இறுதி வரிகளில் பொருத்தியதை இரசித்தேன் ஜி

திண்டுக்கல் தனபாலன் said...

சபாநாயகர் சொன்னபிறகு அமைதியே நல்லது...

கமிஷன் கொடுக்க தயாராகி விட்டால் அனைத்தும் செயல்படும்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கேள்வி....

ஜோதிஜி said...

தொழில் நுட்பம் அறியாத பெற்றோர்கள் இருந்தால் இது போன்று மாணவிகள் வழி தவறிய ஆடாக மாறுகின்றார்கள்.

ஜோதிஜி said...

நமக்கே நாம் ஆறுதல் சொல்லி சிரித்து விட்டு போக வேண்டியது. நீங்க கோபப்படுவதைப் போல நானும் தான் தொடக்கத்தில் இருந்தேன். மாறிவிட்டேன் அண்ணாச்சி.

ஜோதிஜி said...

மிதிவண்டி மடிக்கணினி இரண்டிலும் எத்தனை நேக்காக செய்துள்ளார்கள் என்பதனை நீங்க கவனித்தால் ஆச்சரியப்படுவீங்க.

ஜோதிஜி said...

நன்றி

ஸ்ரீராம். said...

கல்வித்துறை மட்டும்தான் சங்கடங்களை சந்திக்கப்போகும் துறையாக இருக்கப்போகிறதா?

தனியார் கல்லூரிகள், பள்ளிகள் கட்டணம் வாங்காமல் நாங்கள் எப்படி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்று முன்பே கேட்டிருந்தன...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கேட்கப்பட வேண்டிய கேள்வி.

ஜோதிஜி said...

தனியார் பள்ளி கல்லூரி மேல் எனக்கும் ஒரு காலத்தில் கனிவுப் பார்வை இருந்தது ராம். ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன தெரியுமா? 12 வகுப்பு சேர விண்ணப்ப பாரம் 5000 ரூபாய் புத்தகங்கள் மட்டும் வழங்குகின்றார்கள். ஆன்லைன் வகுப்பில் (பாடம் படிக்க)அதன் பிறகே சேர முடியும். புத்தகத்திற்கு உண்மை விலை 500 தான் வரும். வாங்குவது 20000 ரூபாய். இது திருப்பூரில்.

ஜோதிஜி said...

மகன் மகள் ஒரு பட்டப்படிப்பு முடித்தவுடன் (தனியார் நிறுவனங்களில் படிக்கப்பட்டு வைத்திருந்தால்) திருமணம் செய்ய அப்பாக்களிடம் பணம் நிச்சயம் இருக்காது. இதுவே தற்போதைய நிலைமை.

Rathnavel Natarajan said...

காமராஜர் படித்தா ஆட்சி செய்தார்? - சென்ற வருடம் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது - ஒரு மின் அஞ்சல் உருவாக்கத் தெரியவில்லை. ஆக்கப் பூர்வமான தளங்கள் குறித்த அக்கறையில்லை. மொத்த இடத்தையும் தமிழ்த் திரைப்படங்களைக் கொண்டு நிரப்பி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. - இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எந்த இடத்தில் இருக்கின்றது என்று ஒரு மாணவி கேட்டார். கூடவே அது எதற்குப் பயன்படுகின்றது என்று கேட்ட போது நான் ஒன்றும் சொல்லவில்லை. - நிஜம். அதங்கமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மைக்ரோசாஃப்ட் பிராடக்ட்டை பெரிய நிறுவனங்களும் அரசாங்கமும்தான் காசு கொடுத்து வாங்குகின்றன. 80 % பேர் பைரேட்டட்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் அதற்கே அவரால் மிகப்பெரிய பணக்காரராக ஆகி விட முடிந்தது.. அத்தனை பேரும் காசு கொடுத்து வாங்கினால்? பைரேட்டடை நாஸ்காம் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் அப்படி செய்வதில்லை. இணைய இணைப்பு இருந்தால் நம்முடையது ஜெனூயின் இல்லை என்பதை எளிதாக கண்டறிந்து விடும். எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்ற கணக்கும் அதனிடம் இருக்கும்.ஆனால் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மைக்ரோசாஃப்ட் மென் பொருட்கள் பயன்பாடு குறைந்து விடும்.ஒப்பன் சோர்ஸ் அதகரித்து விடும். பல்வேறு வசதிகளை கொடுத்து தன் வசப்படுத்தி இருக்கிறது.வோர்ட் எக்சல்லுக்கு இணை இல்லை. மறைமுகமாக அதற்கு அடிமையாக வைத்திருக்கிறது. குறைவான கட்டணத்தில் நிறைய ட்ரிப் அடித்து அதிகம் சம்பாதிக்க ஆட்டோக்காரர்கள் விரும்ப மாட்டார்கள். ஒரே கஸ்டமரிடம் அதிகம் கட்டணம் வாங்கி விட்டு மற்ற நேரத்தில் சும்மா இருக்கவே விரும்புவார்கள் மைக்ரோ சாஃப்டும் அப்படித்தான்.ஒரு விதத்தில் பார்த்தால் பணக்காரர்களிடம் வசூலித்து விடுகிறது. மற்றவர்களை கண்டுகொள்வதில்லை. இதன் மூலம் அதற்கு நல்ல பெயர் கிடைத்து விடுகிறது.
விண்டோஸ்10 ஒரிஜினல் 10000 ரூபாய்க்கும் மேல் விற்கிறது. நான் கமர்சியல் பயன்பாட்டிற்கு 2000 ரூபாய் அளவில் இருந்தால் எல்லோரும் ஒரிஜினல் வாங்குவார்கள். ஆனால் மைக்ரொசாஃப்ட் அதனை கண்டு கொளவதில்லை. பைரேட்டட் எதிர்பாரா சமயத்தில் நமக்கு தொல்லை கொடுக்கும். திடீரென கிராஷ் ஆகும் நாம் சேமித்துள்ளவை காணாமல் போகும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பெரும்பாலான நலத் திட்டங்கள் உண்மையாக மக்களின் நன்மைக்காக இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. ஆனாலும் கமிஷன் அடிச்சாலும் கொடுக்கறான் இல்ல என்று சந்தோஷப்படுகிறார்கள்.