Wednesday, March 11, 2020

TASMAC கடைகள் 24 மணி நேரமும் இங்கு இயங்கும்


தமிழகத்தில்  சுதந்திர காலத்திற்கு முன்பே மது விற்பனை நடந்துள்ளது. 1930ம் ஆண்டு  இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மகாத்மா காந்தி  அறிவித்தார். சாராயம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டங்களின் விளைவாக  அன்றைய காலக்கட்டத்தில் 9 ஆயிரம் சாராயக்கடைகளை ஏலம் எடுக்க ஆள் இல்லாத  நிலை உருவானது. இதனால் 6 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டது. 

காந்தி  தொடங்கி வைத்த மதுவிலக்கு போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது  குடிப்பவர்களை புறக்கணிக்கும் நிகழ்வுகளும் நடந்தது. அன்றைய கால கட்டத்தில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு  தரப்பினர் அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து முன்னாள் முதல்வர்  கருணாநிதி 1973ம் ஆண்டு ஜூலை 30ம்தேதி கள்ளுக்கடைகளும், 1974ம் ஆண்டு  செப்டம்பர் 1ம் தேதி சாராயக்கடைகளும் மூடப்படும் என்று அறிவித்தார்.  அதன்படி மதுவிலக்கு அவரது ஆட்சி காலத்திலேயே அமலுக்கு  வந்துவிட்டது.

பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபிறகும், மதுவிலக்கை  அமல் படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதை நடைமுறைப்படுத்துவதில்  பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. அவற்றை எதிர்கொள்ள பல்வேறு  சட்டத்திருத்தங்களை கொண்டு வந்தார். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. அதே நேரத்தில் கள்ளச்சாராயச்சாவுகள்  அதிகரித்தன. இந்த சூழலில் எம்ஜிஆர், 1981ம் ஆண்டு மே 1ம் தேதி மீண்டும்  கள்ளுக்கடைகள், சாராயக்கடைகளை திறக்க உத்தரவிட்டார். 

கள்ளுக்கடைகளும்,  சாராயக்கடைகளும் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது.  இந்நிலையில் 2003ம் ஆண்டு முதல்  டாஸ்மாக் வழியாக அரசே மதுவை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியது. அரசு மது  விற்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் டாஸ்மாக் மது விற்பனைக்காக  சென்னை,கோவை, மதுரை, திருச்சி, சேலம் என்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டது. 

இப்போது 33 வருவாய் மாவட்டங்களுக்கும் ஒரு மேலாளர் என நியமிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தற்போது 5,152 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. 41 டாஸ்மாக் சேமிப்பு கிடங்குகளும் உள்ளது. 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.





அயல்நாட்டு  மதுபானங்களை விற்பனை செய்யும் 165 எப்எல் வகை கடைகள் உள்ளன. 

சாதாரண  நாட்களில் 80 முதல் 90 கோடி வருவாயும், விழாக்காலங்களில் 120 முதல் 180 கோடி வருவாயும் டாஸ்மாக் மதுக்கடைகளால் கிடைக்கிறது. 

ஆண்டு வருமானம் 31 ஆயிரம் முதல் 32 ஆயிரம் கோடியாக உள்ளது. 

மாதந்தோறும் சராசரியாக 50  லட்சம் பெட்டி மது வகைகள், 20 லட்சம் பெட்டி பீர் வகைகளும்  விற்பனையாகின்றன. 

கடந்த  2003ல் ல் 3,639 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம், தற்போது (2019) 30 ஆயிரம் கோடியாக  உயர்ந்துள்ளது. 

கடந்த 17 ஆண்டுகளில் டாஸ்மாக் வருமானம் 10  மடங்கு  உயர்ந்துள்ளது. 

2003-04ம் ஆண்டு ₹3,639 கோடியாக இருந்த டாஸ்மாக்  வருமானம், 2010-11ம் ஆண்டில் 14,965 கோடியாக இருந்தது. 2015-16ம் ஆண்டில் 25,845 கோடி என படிப்படியாக உயர்ந்த டாஸ்மாக் வருமானம், தற்போது ₹30 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. 

கடந்த  17 ஆண்டுகளில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ள போதிலும், கடைகளின்  எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2003ம் ஆண்டில்  மொத்தம் 8,426 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில்,தற்போது 5,152 ஆக  உள்ளது.இவற்றில் 1872 கடைகள் பார் வசதியுடன் இயங்கி வருகின்றன என்பது  லேட்டஸ்ட் நிலவரம்.

தமிழகத்தை பொறுத்த வரை 10 வயதிலிருந்து 70 வயது  வரையிலான நபர்கள் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாக  தெரியவந்துள்ளது.

 மத்திய அரசின் சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல்  துறை கடந்த 2018ம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி,தமிழகத்தில் சுமார் 1.5 கோடி  பேர்,  மது பழக்கத்தில் இருப்பதாகவும்,அவர்களில் 37 லட்சம் பேருக்கு  மதுபோதை பழக்கத்திலிருந்து மீள்வதற்கான உதவி தேவைப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மது குடிப்பவர்களில், 17  ஆண்களுக்கு ஒரு பெண் வீதம் மது அருந்துவதாகவும் புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன.மதுவால் இன்று குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன.

கூலி  வேலைக்கு செல்பவர்கள் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் தொகையை  மதுவுக்காக செலவு செய்கின்றனர். இதனால் குடும்பம் நடத்த போதிய வருமானம்  இல்லாமல் இன்றும் பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. அவர்களின்  குழந்தைகளை கூட பள்ளிக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  குடியால் இளம் வயது விதவைகள் அதிகரித்து வருகின்றனர்.

இதற்காக சசிபெருமாள் போன்ற தியாகிகள் உயிரைக்  கொடுத்தும் பலனின்றி போனது.

பூரண மதுவிலக்கு என்பது உடனடி சாத்தியமில்லை, படிப்படியாக அது செயல்பாட்டுக்கு வரும் என்பது அரசின் விளக்கம். 

கடந்த  40 ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 வயதை கடந்தவர்களிடம் மட்டுமே மது குடிக்கும்  பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மது  குடிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது.

CAA குடியுரிமை போராட்டங்கள்

12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை ஐயா

KILLERGEE Devakottai said...

புள்ளி விபர கணக்குகள் நன்று.
ஒரு நாட்டில் 100 முட்டாள்கள் வாழ்ந்து பெரிய நாடு என்பதைவிட 5 அறிவாளிகள் வாழ்ந்து சிறிய நாடு என்று பெயர் எடுக்கட்டும்.

ஜெயிலில் இருக்கும் சசிகலாவை தியாகத்தலைவி என்கிறான். சாராயக்கடை ஓனரே இவர்தானே...?

G.M Balasubramaniam said...

மது அறுந்தும் வழக்கம் எல்லா மாநிலங்களிலும் உண்டு தமிழகத்தி ராங்க் கொடுக்கலாமே தெரிந்தால்

ஜோதிஜி said...

குடிகாரர்கள் அதிகம் உள்ள மாநிலம் கேரளா. ஆனால் அவர்கள் மது இருந்தும் விதம் வேறு. அரசு அதன் கொள்கைகளில் இருந்து பின்வாங்குவதும் இல்லை. இங்கு வேறுவிதமாக உள்ளது. மெல்லக் கொல்லும் நஞ்சு.

ஜோதிஜி said...

அந்த ஒனரை வளர்ந்த விட்டவரை மறந்து போனது நியாயமா?

ஜோதிஜி said...

கணக்கு வழக்கு இன்னும் பத்து வருடத்தில் எடுப்போம். எத்தனை பேர்கள் இயல்பான வாழ்க்கை தகுதி இருக்கிறது என்று பார்க்கலாம்.

KILLERGEE Devakottai said...

வளர்த்து விட்டது நடிகை ஜெயலலிதா, அதற்கு முன் கொண்டு வந்தது கருணாநிதி.
எல்லாம் அறுக்கப்பட வேண்டியவர்கள் ஜி

Rathnavel Natarajan said...

வேதனையுடன் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

திண்டுக்கல் தனபாலன் said...

மன நோய்... தானாக திருந்தினால் தான் உண்டு...

வெங்கட் நாகராஜ் said...

வேதனை.

Unknown said...

இந்த நிலைமை மற்ற மாநிலங்களில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நானும் அங்கெல்லாம் கண்கூடாக பார்கிறேன் . கேரளாவில் வரிசையில் நின்று வாங்குவார்கள் .அதுவும் இங்குபோல் அதி காலையில் பார்த்ததாக நினைவில்லை .

கிரி said...

டாஸ்மாக் தடை விதித்து இருந்ததால், குடிக்கு அடிமையாகி இருந்தவர்கள் கடையை உடைத்து வன்முறை செய்த காணொளியைப் பார்க்க நேர்ந்தது.

அரசு மக்களைக் குடிகாரர்களாக மாற்றிக்கொண்டு இருந்தது, தற்போது மாற்றி விட்டது.