தற்போது பாரபட்சமின்றி அகில உலகத்தையும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பகவான் 'கோவிட் 19' என்று நாமகரணம் சூட்டப்பட்ட பக்தர்களால் பயத்துடன் உச்சரிக்கப்படும் மந்திரமான 'கொரானா' குறித்துக் கடந்த சில நாட்களாக வாசித்து வரும் செய்திகளை எழுதவே சங்கடமாக உள்ளது. உண்மையை எழுதினால் அரசாங்கக் குற்றம் ஆகி "ஏம்பா பீதியைப் பரப்புகின்றாய்?" என்று சிரத்சேதம் செய்து விடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து வந்தேன். சிங்கப்பூரில் (சின்ன நாடு என்று கம்பைத் தூக்கிக் கொண்டு வரவேண்டாம்) மொத்த அரசு எந்திரங்களும் கொரானா பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். நான்கு பக்கமும் பாத்தி கட்டிவிட்டார்கள். வெளியே போவதைத் தவிர்த்து விடுங்கள் என்று கட்டளையிட்டுள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் இரண்டு முறை சுவாசச் சோதனை நடத்துகின்றார்கள்.
தனியார் நிறுவனங்களை 'நீங்கள் உங்களிடம் பணியாற்றுபவர்களுக்குச் செய்தே ஆக வேண்டும்' என்று கட்டளையிட்டுள்ளனர்.
இந்தியா இன்னமும் விழித்துக் கொள்ளாமல் இருக்கின்றதே? என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்த போது நம் நாட்டில் இருக்கும் 'வெயில்' என்ற பெரிய பகவான் நம்மைச் சாத்தானிடமிருந்து காப்பாற்றி விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
நேற்று மத்திய அரசு தூக்கத்திலிருந்து விழித்துள்ளது. கொட்டாவியை அடக்கிக் கொண்டு கூட்டம் போட்டுப் பேசியுள்ளனர். நம்பிக்கையளித்துள்ளனர். தமிழகத்தில் சுகாதாரத்துறைச் செயலாளரும், அமைச்சரும் இரவு பகல் பாராது "கண் துஞ்சாது பணி செய்து கொண்டிருப்பது" நாம் அனைவரும் அறிந்ததே.
ஒரு பக்கம் சீனா உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவில் மட்டுமல்ல? உலக நாடுகளில் உள் நாட்டு உற்பத்தி எந்த லட்சணத்தில் உள்ளது என்பதனை எடுத்துக் காட்டத் துவங்கியுள்ளது. இப்போது தான் இங்கே வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது. இன்னும் 60 நாட்கள் இப்படியே தொடர்ந்தால் சிஏஏ, என்பிஆர் எல்லாவற்றையும் மறந்து மளிகைக்கடை வாசலில், மருத்துமனைகளில், முகமூடி விற்கும் கடைகளில் மக்கள் பேரணியாக இருப்பார்களோ? என்று தோன்றுகின்றது.
தங்களைக் காப்பாற்றிக் கொண்டால் போது. மதம், உரிமை போன்றவற்றை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று மாறுமோ? என்று பயப்பட வேண்டியதாக உள்ளது.
இதை இப்போது எழுதக் காரணம் நம்மவர்களின் மனநிலை எப்படியுள்ளது? என்பதற்கு இந்த உதாரணத்தை வைத்தே புரிந்து கொள்ளுங்கள். இவர்களையெல்லாம் மாற்ற வாய்ப்புள்ளதா? என்பதனையும் உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.
பிப்ரவரி மாதம் 11 ந் தேதி Ministry of Shipping ல் இருந்து துறைமுக இயக்குநர் திரு அரவிந்த் சௌத்ரி அவர்களிடமிருந்து இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறைமுகத்திற்கு ஒரு சுற்றறிக்கை வருகின்றது. "அய்யா சாமிகளா? சீனா, கொரியா, ஜப்பான் போன்ற கொரானா பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கப்பலை அனுமதிக்காதீர்கள். தூரத்தில் நிறுத்திவிடுங்க. எவரையும் உள்ளே வர அனுமதிக்காதீர்கள்" என்று எழுதி அனுப்புகிறார்.
என்ன நடந்தது தெரியுமா?
ஜனவரி 15ந் தேதி சீனாவின் ஷியாமென் துறைமுகத்திற்குச் சென்ற கப்பல் 19ந் தேதி ஷாங்காய், 28 ந் தேதி தாய்ஹாங் துறைமுகத்திற்குச் சென்று வந்த கப்பலைக் கடந்த 13 ந் தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. கப்பல் வந்து சேர்ந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சுற்றறிக்கை வந்தது. வந்த "ரூயி" கப்பலைத் துறைமுகத்திற்குள் அதிகாரிகள் அனுமதித்து உள்ளனர். பரிசோதனை செய்தார்களா? என்பது பகவனுக்கோ வெளிச்சம். அவர்கள் சூட்டைத் தணிக்க எங்கேயாவது செல்ல வழிகாட்டினார்களா? என்பதும் புரியவில்லை.
நம் மக்கள் ஏற்கனவே பொது சுகாதாரத்தில் கில்லாடி கிங். இவர்கள் எந்த அளவுக்குப் புரிந்து செயல்படுவார்கள் என்பது நம் நாட்டில் பெரிய கேள்விக்குறி. நம் அரசு எந்திரங்களும் உலகப் புகழ் பெற்றது. எந்தப் பக்கமும் குறை சொல்ல முடியாது.
நல்லாச் சாப்பிடுங்கள். சுத்துறத குறைத்துக் கொள்ளவும். இதுவரையிலும் சண்டை போட்டவர்களிடம் இனியாவது சமாதானமாக போய்விடுங்கள். திருச்சியில் மூன்று பேர்கள் என்று அறிவித்துள்ளனர்.
இப்போது மெல்ல 28 பேர்கள் என்று அக்கறையுடன் மற்ற பஞ்சாயத்துக்களை விட்டு ஊடகம் ஊத ஆரம்பித்துள்ளது. நம்ம பயபுள்ளைங்க இது போன்ற விசயங்களில் கட்டாயம் பொதுச் சேவை செய்வாங்கன்னு நமக்குத் தெரியும் தானே?
எந்த அளவுக்கு சமூகசேவை இணைய மருத்துவர்கள் செய்கிறார்கள் தெரியுமா?
கோழி உண்ணாதீர்கள். அதன் மூலம் வருகின்றது என்று கொளுத்திப் போட்டு விட மொத்தமும் அந்தச் சந்தை படுத்தே விட்டது. கொரானா கொல்வதற்கு முன்பு இவர்கள் மொத்த உற்பத்தியையும் கொன்று முடித்து விடுவார்கள். அடுத்து எத்தனை மருத்துவர்கள் இணைய தளங்களில் ஆலோசனை சொல்லப் போறாங்களோ? கெத்து கெத்தென்று இருக்கு. வரக்கூடிய வாட்ஸ் அப் முழுக்க வைரஸ் ஆகவே உள்ளது.
வடிவேல் சொன்னது போலச் சீனா எவ்வளவு ட்ரிக்ஸ் ஆ எல்லாப் பக்கமும் கோர்த்து விட்டுள்ளது.
"அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் கண்டதையும் எழுதி பலரையும் காண்டாக்கிய என்னை மன்னிப்பீராக . ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்".
9 comments:
வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கலாமே! ஏசப்பாவுக்கு தோத்திரம் சொல்லிப் பயனில்லை! :-)))
1. கூட்டம் அதிகமாகக்கூடும் இடங்களைத் தவிர்க்கவும்.
2. மனதளவில் பயந்து சாக வேண்டாம். அப்படியே செத்துப் போய்விடப் போகின்றோம் என்ற எண்ணம் வந்தால் பிடித்த சாப்பாட்டை நன்றாக சாப்பிட்டு விட்டு சாகத் தயாராக இருக்கவும்.
3. எவரையும் தொட்டு உறவாட வேண்டாம்.
4. கைகளை சுத்தமாக வைத்திருக்கவும். எப்போதும்.
5. கர்த்தரை நோக்கி ஜெபம் செய்யவும்.
அதென்ன 100 வருடத்திற்கு ஒருமுறை, இது போல் நடக்கிறது என்பது தான் புரியவில்லை...
மக்களிடமும் விழிப்புணர்வு தேவை - வாட்ஸப் செய்திகளை பரப்புவதில் மட்டும் முடிவதில்லை வேலை. நேற்று ஒருவரைச் சந்தித்தேன் - நீண்ட நேரம் லெக்சர் அடித்துக் கொண்டிருந்தார் - அரசு அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்தது லெக்சர். அதன் பிறகு சாலை முழுவதும் துப்பிக் கொண்டே வந்தார்! இப்படிச் செய்வது தவறு என ஒருவர் சொல்ல, போங்கடா நீங்களும் ஒங்க அறிவுரையும்-னு வேற திட்டு!
இந்த ஆலோசனைகளைப் பதிவில் சேர்த்திருக்க வேண்டும்! அப்புறம் அந்த கர்த்தர் ஏசப்பாவெல்லாம் ஜெபகோபுரம் கட்டி காசுபார்ப்பவர்களுக்கு மட்டும் தான்! நோயைத் தீர்க்க எல்லாம் உதவமாட்டார்!
அப்படிக் கேளுங்க DD! அதானே? 2003 இல் இதே சீனாவில் இருந்து புறப்பட்ட SARS வைரஸ் எல்லாம் இந்தக் கணக்கில் சேர்ப்பது?
வெங்கட் நாகராஜ் சார்!
ஜனங்களுக்கு உபதேசம், பிரசாரம் இதெல்லாம் பிடிக்காது, கதைக்கும் உதவாது! அப்படி genre இல் வந்த கன்னிமாடம் , எட்டுத்திக்கும் பற, ஜிப்சி முதலான திரைக்காவியங்களை ஜனங்கள் சீந்தவே இல்லையாம்!
சரியான விழிப்புணர்வினை நம் மக்களிடம் ஏற்படுத்தியாக வேண்டும் ஐயா. அரசும் முழுமூச்சில் செயல்பட்டு இந்நோய் பரவாமல் தடுப்பார்கள் என நம்புவோம்
அருமை. நன்றி
Post a Comment