மகள்களின் கல்வித்திறனை, ஆளுமைத்திறனைச் சோதிக்கும் போது பல வித்தியாசமான ஆச்சரியங்களைக் கண்டதுண்டு. ஒருவர் கணக்குப் பாடங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார். 100 தான் எடுப்பார். புதிர்களை விடுவிடுப்பது பொழுது போக்கு போல அனாயசமாக கையாள்கின்றார். அறிவியல் பாடங்கள் பிடிக்காது. சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களைப் பெற்று வருவார்.
அவருடன் ஒட்டிப் பிறந்தவர் கல்வியென்றால் காத தூரம் ஓடுகின்றார். குடும்ப பொறுப்பு, மனிதாபிமானப் பண்புகளை முழுமையாகப் பெற்று அதன்படியே வாழ விரும்புகின்றார். குடும்ப குத்து விளக்கு ஒளிரக் கல்வி தேவையென்றாலும் "எவன்தான் மதிப்பெண்களைக் கண்டுபிடித்தானோ?" என்கிறார்.
மற்றொருவர் தூண்டுதல் மூலம் சுடரொளியாக பிரகாசிக்கின்றார். ஒரே சூழல். ஒரே கவனிப்பு என்றாலும் அறிவுத்திறன் வெவ்வேறு விதமாக உள்ளது.
இவர்கள் எதை விரும்புகின்றார்கள்? ஏன் விரும்புகின்றார்கள்? எதில் அதிகக் கவனம் செலுத்துகின்றார்கள்? இவர்கள் பழகும் தோழிகள் யார்? அவர்களிடம் இவர்களுக்குப் பிடித்தமானது என்ன? என்பது போன்ற பலவற்றைக் கவனித்த போது எதுவும் சீரியஸ் இல்லை. எதற்கும் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை என்பதாகவே எனக்குத் தெரிகின்றது.
ஒருவர் காந்தி, நேரு பற்றி 500 பக்கங்கள் உள்ள புத்தகத்தைச் சாதாரணமாக முடித்து விட்டு தமிழக அரசியல் குறித்து, சமூகம் குறித்து தற்காலப் புத்தகங்கள் குறித்து வாசிக்கத் தயாராக இருக்கின்றார். மற்ற இருவரும் புத்தகங்களைப் பொருட்படுத்தத் தயாராக இல்லை. சிறுவர் மலர், பட்டம் போன்றவற்றைக் கடந்து வர விரும்பவில்லை. ஒரே சூழல். ஒரே ஆதரவு.
மூவரும் தமிழ் தெளிவாக அழகாக நேர்த்தியாகப் பிழையில்லாமல் எழுதுகிறார்கள். இருவர் ஆங்கிலமும், ஹிந்தியும் அப்படியே. ஆனால் இதற்காக இவர்கள் முயல்வதே இல்லை. காற்றடிக்கும் திசையில் முகத்தைக் காட்டிக் கொண்டு ஆசுவாசம் அடைவதைப் போலவே எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்கின்றார்கள்.
இருவர் குறித்து நிறையக் கவலைப்பட்டுள்ளேன். பொதுச் சமூகத்தில் இவர்களுக்குப் பழகத் திறமையில்லையோ என்று நினைத்துள்ளேன். சமீபத்தில் ஒரு காவல்துறை அதிகாரியுடன் இவர்கள் பேச வாய்ப்பு அமைந்தது. நான் கவலைப்பட்டதை அடித்து நொறுக்கி அவருடன் பேசிய விதத்தைப் பார்த்து வியப்பாகப் பெருமையாக இருந்தது. நான் இவர்களைப் பற்றி நினைப்பது வேறு. இவர்களின் திறமைகள் என்பது வேறு என்பதனை அதன் மூலம் புரிந்து கொண்டேன்.
சமூக மரபுகளைப் புரிந்து கொண்டு தனக்கான இடத்தையும் நோக்கி நகரும் இக்காலத் தலைமுறைகள் குறித்து கொஞ்சமல்ல அதிகமான பெருமை உள்ளது.
வெவ்வேறு கற்றல் திறன், ஆளுமைத்திறன், அறிவுத்திறன் உள்ள மூவரையும் ஒரே சிந்தனையில் ஈர்த்தவர் ஆனந்தி.
சமீப காலத்தில் மிக விரைவாக வளர்ந்து கொண்டிருக்கும் ஆர்ஜே ஆனந்தி பேசும் மொழி குறித்து சுத்தத்தமிழ் தங்கங்கள் வருத்தப்படலாம். ஆனால் பட்டையைக் கிளப்புகிறார். கடைசி வரைக்கும் கேட்கத் தூண்டுகிறார். தெளிவாக, அழகாக, கவர்ச்சியுடன், கலகலப்புடன், 20 வயதில் உள்ளவர்கள் விரும்பும் வண்ணம் பேசும் திறமையை வளர்த்துள்ளார்.
தற்கால இளைய சமூகம் விரும்பும் மொழியில் அழகான விசயங்கள், புத்தக விமர்சனங்களைத் தந்து கொண்டு இருக்கின்றார்கள். வாழ்த்துகள் ஆனந்தி. RJ Ananthi
இந்த வார பதிவுகள் வாசிக்க
14 comments:
நீங்கள் கற்றுக் கொண்டே இருப்பீர்கள்...!
நான் கவலைப்பட்டதை அடித்து நொறுக்கி அவருடன் பேசிய விதத்தைப் பார்த்து வியப்பாகப் பெருமையாக இருந்தது. நான் இவர்களைப் பற்றி நினைப்பது வேறு. இவர்களின் திறமைகள் என்பது வேறு என்பதனை அதன் மூலம் புரிந்து
வாழ்த்துகள் ஐயா
நல்ல தகவல்கள். ஆர்ஜே-க்கள் பேசுவதைக் கேட்பதற்கு நிறையவே பொறுமை தேவையாக இருக்கிறது!
மகிழ்ச்சி. வாழ்த்துகள்
//காற்றடிக்கும் திசையில் முகத்தைக் காட்டிக் கொண்டு ஆசுவாசம் அடைவதைப் போலவே எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்கின்றார்கள்.//
எளிதான, அழகான, பொருத்தமான உவமை.
ஒரெ கையில் ஐந்து விரல்களும் ஒரே போலிருப்பதில்லையே வெட்ட வெட்ட துளீர் வ்டும் செடிபோல நீக்க நிக்க என் கருத்துரையும் கூட வரும்
அருமை - இந்த கால யூத்ஸ் , முக்கியமாக பெண் குழந்தைகள் அருமையாக வளர்கிறார்கள் , வீட்டு வேலை செய்வதில் மட்டும் சிறிய சுணக்கம் , சமயல் கலையை மறந்து விடுவார்களோ என கவலை , என்ன சொன்னாலும் , சாதாரண உணவே ஆதாரம் , எப்பொழுதும் அல்லது அடிக்கடி வெளியில் சாப்பிட முடியாது - இதில் சிறிய கவனம் தேவை. பேச்சு , உரையாடல் , படிப்பு , கதை, கட்டுரை போன்றவை அவசியமே - குழந்தைகளின் பக்தி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை , என்னை பொறுத்த வரை - இது மிக மிக அவசியம் , எப்பொழுதும் கை கொடுக்கும்.
வீட்டில் மகள்கள் சமைக்கவும் செய்கின்றார்கள். வீட்டுக்காரம்மா அனைவரும் இப்போது சமைக்காமல் தவிர்ப்பது என்பதில் தான் குறியாக இருக்கின்றார்கள். ஊரில் அக்கா தங்கைகள் மட்டும் இன்னமும் வீட்டுச் சமையல் என்பதனை ஆதரிக்கின்றார்கள். நகர்புறங்களுக்கு நகர்ந்து வந்தவர்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு உடம்பு கணத்து இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியம் இடம் கொடுப்பதில்லை. மூச்சு வாங்குகின்றது. என்ன செய்வது?
விரைவில் ஆயிரம் பதிவைத் தொடப் போகின்றேன். ஆயிரம் பதிவில் உங்கள் கருத்துரை தேவை.
உங்களைப் போன்ற சிலரால் மட்டுமே ரசித்து ருசித்து உள்வாங்க முடிகின்றது ராம். நன்றி.
நன்றி
மெய்ப்பொருள் காண்பதறிவு
அடுத்த ஐந்து வருடங்கள் இவர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது. அதனை வைத்தே நாம் வளர்த்தது சரியா? தவறா என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
எழுதுவதால் கற்றுக் கொள்வதால் நமக்கு கிடைப்பது நம் மன ஆரோக்கியம் மேம்படுகின்றது. மன உளைச்சல் தவிர்க்கப்படுகின்றது.
Post a Comment