Saturday, October 19, 2019

இளையராஜா )( வைரமுத்து

அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்குவேன். பலசமயம் ஐந்து மணிக்கு நீண்ட தூர நடைப்பயிற்சியை முடிப்பேன். முக்கிய சாலையின் வழியே கடந்து வரும் போது அரசு மற்றும் தனியார் பேருந்து வாகனங்கள் கோவை மற்றும் ஊட்டி நோக்கிச் சென்று கொண்டிருக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொன்றாக என்னைக் கடந்து செல்லும். கடக்கும் போது தவறாமல் பேருந்தில் ஒலிக்கும் பாடல்கள் காற்றில் கலப்பதோடு என் காதை நிறைக்கும். நாற்பது வயது ஓட்டுநராக இருந்தால் கட்டாயம் இளையராஜாவின் என்பது தொண்ணூறு பாடல்களின் அணிவகுப்பு தொடர்ந்து காதில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

ஆளரவமற்ற, போக்குவரத்து நெரிசலற்ற தார்ச் சாலையில் தனித்து இருக்கும் போது ஒலித்த இளையராஜாவின் இசை எங்கங்கே அழைத்துச் செல்லும். ஒரு பாடலின் இசை, வரிகள், இடையே வரும் இசைக்கோர்வைகள், கோரஸ் காட்டும் வித்தியாசமான உணர்வு என்று நான்கு புறமும் நம்மை நடக்க வைக்காது. காற்றில் மிதக்க வைக்கும்.

பேசும் ஒவ்வொரு இடத்திலும் உளறிக் கொண்டேயிருக்கும் இளையராஜாவை வெறுத்துப் பல வருடங்கள் அவரின் பாடல்களைக் கேட்பதைத் தவிர்த்ததுண்டு. பாடல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் அவரின் சமீபத்திய உளறல் என்ன என்று மனம் இயல்பாக அந்த வார்த்தைகளை மறுபக்கம் தேடிக் கொண்டேயிருக்கும். வாழும் போதே தான் கடவுளாக மாற நினைப்பவன், நான் தான் கடவுள் என்று சொல்கிறவனை நன்றாகக் கவனித்துப் பாருங்கள்.

காரியவாதியாக இருப்பான். ஏதோவொன்றை மறைக்க, மறக்கப் பேசிக் கொண்டே இருப்பான். தன் மன நோயாளித்தனம் வெளியே தெரியாமல் இருக்க முயன்று கொண்டேயிருப்பான். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருக்கும் போது ஜக்கி போல அங்கீகாரமும் பெற்று விடுவார்கள் அல்லது நித்தி போலக் கோமாளியாக மாறிவிடுவார்கள். ஆனால் காசு விசயத்தில் கனகச்சிதமாக செயல்படுவார்கள்.

ஆனால் இளையராஜாவை என்ன தான் சிலாகித்துப் பேசினாலும் பள்ளிக்கூட சமயங்களில் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன் இசையும், பாடல் வரிகளும் இன்று வரையிலும் மனப்பாடமாக உள்ளது. இப்போது கூட மகள்களிடம் பாடி கலவரத்தை உருவாக்குவதுண்டு.

பல பாடல்கள் வார்த்தைகள் மாறாமல் இன்று வரையிலும் பாட முடிகின்றது. ஒரே காரணம் கவிஞர் கண்ணதாசன். தன்னை உருக்கி உருக்கி அவர் ஏற்றிய நெய் தீபம் இன்றும் அணையா விளக்காகச் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. எத்தனையோ பேர்கள் உள்ளே வந்து கொண்டேயிருக்கின்றார்கள். ஆனாலும் கண்ணதாசன் நமக்குத் தேவையாக இருந்து கொண்டேயிருக்கின்றார்.

இதைத்தான் கவிஞர் வைரமுத்து சுசீலா 65 விழாவில் பேசினார்.

கலைஞன் சூதுவாது நிறைந்தவன்.

அப்படிப்பட்டவனால் மட்டுமே நல்ல கலைஞனாகத் தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஆனால் கடைசி வரைக்கும் தன்னை தக்க வைத்துக் கொண்டும், குழந்தை மனம் போலவே வாழ்ந்தவர்கள் எம்.எஸ்.வி, கண்ணதாசன், சுசீலா மூவரும் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

சுசீலா மட்டும் இன்னமும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இந்த விழாவில் கிடைத்த கேப்பில் இளையராஜா உலகில் ஒரே கவிஞன் கண்ணதாசன் என்று ரத்தப்பலியை தொடங்கினார். வைரமுத்து சமானியப்பட்டவரா? கிடா வெட்டி ராஜ்கிரண் விருந்து படைத்து விட்டார்.

கூட்டத்திலிருந்தவர்கள் வைரமுத்து பேசும் போது கை தட்டிய வேகத்தைப் பார்க்கும் போது இளையராஜா கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு சக மனிதர்களைப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டாரோ என்று தோன்றுகின்றது.

13 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

கைதட்டல் பலமாக எழுந்த ஒருகாரணத்தாலேயே வைரமுத்து உயர்ந்தவராகவோ, கண்ணதாசனுக்குச் சரிசமமான கவிப்பேரரசாகவோ ஆகிவிடவில்லை! இளையராஜா பேசுவதைப் பிடிக்காதவர்கள் கூட அவருடைய இசையைப் புறக்கணித்ததில்லை என்ற நிலையில், இசையை விட அவர் பேச்சுத்தான் முன்னுக்கு வந்து நிற்கிறது அதனால் தவிர்க்கிறேன் என்று சொல்கிறவர் நீங்கள் ஒருவராகத் தான் இருக்க முடியும் போல!

ஜோதிஜி said...



பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், பிரபல்ய முகமாக உலகம் அறிந்த முகமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குச் சுதந்திரம் என்பதே இருக்காது. அவர்களின் ஒவ்வொரு அசைவும், பேச்சும் இங்கே பார்க்கப்படும். கண்காணிக்கப்படும். கவனிக்கப்படும்.
பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அளந்து தான் பேச வேண்டும். ஆன்மீகத்தை வளர்ப்பது, போற்றுவது, பெருமைப்படுத்துவது தவறில்லை. அதற்கு மேலாகச் சகமனிதன் மேல் வைத்திருக்கும் அன்பு மிக முக்கியமானது.
எல்லா மதமும், எல்லாக் கடவுள்களும் இதைத் தான் அறிவுறுத்துகின்றது.
இளையராஜா இசையைக் கேட்கும் எனக்குப் புத்துணர்ச்சி கிடைக்கின்றது என்பது உண்மை. அதே போல அவர் நடிக்கத் தெரியாமல் வாழ்க்கை முழுக்க நடித்துக் கொண்டேயிருப்பது அதிக எரிச்சலைத் தந்து கொண்டிருக்கின்றது.
என் உழைப்பு, என் திறமை, என் வருமானம், என் வசதிகள், என் விருப்பப்படி தான் வாழ்வேன் என்று வாழக்கூடியவர்களை, வாழ நினைப்பவர்களை நாம் கேட்க எதுவும் இல்லை. ஆனால் உலகத்திற்கு நீதி போதனை சொல்பவர்கள், அறம் குறித்து அரைமணி நேரம் பேசி வகுப்பு எடுப்பவர்களிடம் தான் நமக்குப் பிரச்சனை உருவாகின்றது. அப்படி என்றால் உன் வாழ்க்கையில் நீ சொல்லும் அறத்தை எப்படி கடைப்பிடிக்கின்றாய்? என்ற கேள்வியும் வருகின்றது.
வைரமுத்துவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரின் பலகீனங்கள் அனைத்தும் உலகத்திற்கே தெரியும். அவர் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை. அவர் விரும்பியபடி அவர் வாழ்க்கையை வாழ்கின்றார். நாம் கேட்பதற்கு என்ன உரிமை உள்ளது?
தமிழகம் முழுக்க அரசியல்வாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எத்தனை லட்ச தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அந்த சமூகத்தில் செல்வம், செல்வாக்கு ரீதியாக வளர்ந்தவர்கள் என்ன செய்துள்ளார்கள்? என்பதனை கூர்மையாக ஒவ்வொரு காலத்திலும் நான் கவனிப்பதுண்டு. மற்ற சமூகங்கள் குறித்து நான் கவலைப்பட்டதில்லை. காரணம் காலம் காலமாக நசுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு அடிப்படை வாழ்க்கை உரிமைகள் கூடப் பெற முடியாமல் இங்கே லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டு தானே இருக்கின்றார்கள். அரசியல் சட்டம், அரசியல் அமைப்பு, அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு போன்ற அனைத்தும் இவர்களுக்கு உதவுவது இருக்கட்டும். அந்த சமூகத்தில் பிறந்து சமூகத்தில் நல்ல நிலையில் வளர்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உதவுவது தான் முக்கியம் என்றே நான் கருதுகிறேன். காரணம் அவர்களுக்குத் தான் உண்மைகள் தெரியும். அவர்கள் வாழ்ந்த போது பெற்ற வலியின் வேதனை தெரியும். தன் சமூகத்தில் உள்ளவர்களை முழுமையாகக் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. தான் பிறந்த கிராமத்தில் தான் வாழ்ந்த ஊரில் உள்ளவர்களை அவர்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளைக் கவனித்தாலே போதுமானது. இதைத்தான் நான் எப்போதும் எதிர்பார்ப்பேன்.
துரதிருஷ்டவசமாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அனைவரும் சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தபின்பு நவீன பிராமணர்களாக மாறி விடுகின்றார்கள். மாறவே ஆசைப்படுகின்றார்கள். தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்ள விரும்புகின்றார்கள். இடம் பெயர்ந்து கண்காணாத இடத்தில் இருக்கவே விரும்புகின்றார்கள்.
ஆனால் இணையத்தில் செயல்படும் போது போராளி வேடம் போட்டுக் கொண்டு வெறும் வார்த்தைகளில் சிலம்பம் ஆட்டம் ஆடுகின்றார்கள். இளையராஜா போன்றவர்கள் தன்னை சாமியார் போலவே பாவித்துக் கொண்டு உளறல் மொழியை உன்னதமாக மொழி பெயர்த்து நமக்கு அளவில்லா ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருக்கின்றார்.
இதைப் பற்றித் தான் இதில் சுருக்கமாகச் சொல்லியுள்ளேன். எடப்பாடி என்ற பெயரை வாசிக்கும் போதே அவர் செயல்பாடுகள், அவர் சமீப கால செயல்பாடுகள் போன்றவை நம் மனதில் தோன்றுவது இயல்பு தானே?
உங்களுக்குக் கலைஞர் என்ற பெயரைக் கேட்கும் போது கோபம் கொப்பளிக்கும். எனக்கு அவர் செய்த நல்லதும் என் நினைவுக்கு வந்து போகும். இது போல ஒவ்வொருவருக்கும் இரண்டும் நம் மனதில் வந்தால் தான் நம் அனுபவங்கள் தான் விருப்பங்கள், ஆசைகள், ரசனையைத் தீர்மானிக்கின்றது என்று அர்த்தம்.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோதிஜி!

முதலில் கருணாநிதி பெயரைச் சொன்னால் கோபம் கொப்பளிக்கும் என்பதெல்லாம் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பழைய கதை. இப்போதெல்லாம் அந்தப் பெயரைக் கேட்டால் சிரிப்புத்தான் வரும் என்பதற்கு அவருடைய வாரிசுகளின் தற்போதைய அரசியல் மட்டும்தான் காரணம்.

வைரமுத்துவின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் எப்போதுமே விமரிசித்தது இல்லை. வைரமுத்து என்றில்லை வேறு எவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையுமே கூட நான் தொடுப்பு பேசியதில்லை.

இங்கே இளையராஜா மீது இவ்வளவு கோபம், அருவருப்பு வருவானேன்? அது மட்டும் தான் கேள்வி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பாடகராக பாவலர் வரதராஜன் இருந்த நாட்களில் இளம் ராசையாவாக இருந்தவரின் ஆரம்பகாலங்களைப் பற்றி சில தோழர்கள் சொன்ன தகவல்களில் இருந்து அவர் எட்டிப் பிடித்திருக்கிற உயரம் அவருடைய சொந்தத் திறமையால் உழைப்பால் மட்டுமே வந்தது என்பதால், அவர் பேச்சில் இருக்கும் குறைபாடுகளை வைத்து அவரை எடைபோட்டதில்லை. இசை என்று வந்துவிட்டால் ராஜா ராஜாதான் என்பது மட்டுமே நான் மறுபடியும் சொல்ல விரும்புவது!

ஜோதிஜி said...

நன்றி. தமிழகத்தில் பிறக்காமல் வேறு மாநிலங்களில் பிறந்து இருந்தால் இன்னமும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அதிகமாக கிடைத்து இருக்கும் என்று என்னை பட்டியலிடச் சொன்னால் அதில் சில பெயர்கள் வரும். 1. நடிகர் திலகம் 2. இசைஞானி. அந்த அளவுக்கு முறையான படிப்பறிவு இல்லாத போதும் கூட தன் உழைப்பு, அனுபவம், திறமையின் அடிப்படையில் தங்கள் துறையில் உச்சத்தைத் தொட்டவர்கள் என்பேன். நன்றாக கவனித்துப் பாருங்கள். நடிகர் திலகம் இறந்த பிறகு தமிழகம் அவரை கொண்டாடியதா? கர்நாடகா ராஜ்குமாருக்கு கிடைத்த மரியாதை கூட இவருக்கு கிடைக்கவில்லை. என்ன காரணம்? முக்கியக் காரணம் அவர் சமூகத்தோடு ஒன்றாமல் வாழ்ந்து முடித்து காலத்தோடு கரைந்து விட்டார். அதே பாணியில் இசைஞானியும் இருக்கின்றார் என்பதே என் ஆதங்கம். உங்களுக்கு இதை அடிக்கும் நேரத்தில் வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கிறது. என் கணினியில் இசைஞானியின் பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்னை நம்புங்கள். நாற்பது வயதுக்கு மேல் ஒவ்வொருவரும் முடிந்தவரை இயன்றவரை எந்த வழிகளில் முடிகின்றதோ? நாம் சமூகத்திற்கு திரும்பக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காதவர்களை சமூகம் கண்டு கொள்ளாது என்பதே சமூகம் தரும் பாடம். படிப்பினை.

ஸ்ரீராம். said...

இளையராஜா பேசுவதை பார்த்தால் சங்கடமாகத்தான்  இருக்கிறது. சகிக்க முடியவில்லை.  ஆனால் அதற்காக நான் அவர் இசையில் எழுந்த பாடல்களைக் கேட்காமல் இருப்பதில்லை.  இருக்கவும் முடியாது.

ஸ்ரீராம். said...

அதே போல வைரமுத்து பாடல் வரிகளில் நிறைய பாடல்களை, நிறைய வரிகளையும் ரசிக்காமல் இருக்க முடியாது.  காதல் ஓவியம், ஆனந்தக்கும்மி, உள்ளிட்ட நிறைய படங்களில் மறக்க  வரிகள் அமைத்திருக்கிறார்.  குறிப்பாக பூவில் வண்டு கூடும் பாடல் எல்லாம்...

GANESAN said...

நல்ல பதிவு. நன்றி.

ஜோதிஜி said...

நன்றாக கவனித்துப் பாருங்கள். மெட்டு போட்டுக் கொடுக்கின்றார்கள். கோடிட்ட இடங்களை நிரப்புக என்று இசை அமைப்பாளர் சொல்கின்றார். கவிஞர்களுக்கு இவ்வளவு தான் சுதந்திரம். வேறு வழியில்லை. ஆனால் இதற்குள் வைரமுத்து, முத்துக்குமார், யுகபாரதி, தாமரை, வாலி (எல்லாப் பாடல்களையும் சொல்ல முடியாது. பழைய பாடல்கள் தான் அற்புதம்) என்னவொரு அழகான இலக்கிய வார்த்தைகளை பொருத்தமாக கொடுத்து இருப்பார்கள். இப்போது விஜய் படங்களுக்கு விவேக் என்ற நாதாரி எழுதுகிறான். அவன் வரிகளைப் பாருங்கள். கொல வெறியாக வருகின்றது.

ஜோதிஜி said...

நன்றி ஆண்டவரே.

ஜோதிஜி said...

சகித்துக் கொண்டே அவர் பேசிய பேச்சுக்களை மறந்து விட்டு கேட்க வேண்டியதாக உள்ளதே?

G.M Balasubramaniam said...

aஆளை கவனிப்பதை விட அவரதுஇசையை ரசிக்கலாமே

ஜோதிஜி said...

சரிங்க

சேக்காளி said...

திரைப்பாடல் எழுதுவதில் முதன்மையானவர் என்ற அர்த்தத்தில் சொல்லுவார்.
அதாவது மெட்டை பாடி காட்டிய அடுத்த நொடியே அதற்கான வார்த்தைகளை சொல்லுவதில் முதன்மையானவர் என்று.